Friday, December 1, 2023

கார்த்திகை ஞாபகங்கள் - மூர்த்தி



கார்த்திகை தீபத்திற்கு விளக்கு வைப்பது, போகி அன்று காப்பு கட்டுதல் வேலைகள் எல்லாம் அப்பாவுடையது. அப்பா வேலைக்கு சென்றிருந்தால் அம்மா பார்த்துக்கொள்வார். அவ்வப்போது அம்மாவின் கைக்கும் வரும். அப்பா/அம்மாவுடன் தோட்டத்தில் விளக்கு வைக்கச் செல்லும்போது திரியை திரித்து தருவது தான் பெரும்பாலும் எனக்கான வேலையாக இருக்கும். தோட்டத்தில் விளைந்த பஞ்சு தான் திரியாக பயன்படும். கார்த்திகை தீப சமயத்தில் பருத்திச் செடி அப்போது தான் பூ வைத்திருக்கும். வெடிப்புக்கு வந்திருக்காது என்பதால் முந்தைய வருடம் விளைந்த பருத்தி எப்படியும் சிறிதளவேனும் ஸ்டாக் இருக்கும். பருத்தியில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு திரி திரிக்க வேண்டும்.

வீட்டில் விளக்கு வைக்கும் போது அப்பா திரிகளை தயார் செய்து விளக்கில் போட்டு எண்ணெய் ஊற்றி தேவையான விளக்குகளை பற்ற வைத்திருப்பார். தங்கையும் நானும் ஒவ்வொரு விளக்காக எடுத்துச்சென்று தேவையான இடங்களில் வைப்போம். மின்சார வசதி இல்லாத கூரை வீட்டை மண் விளக்குகள் அலங்கரித்துக்கொண்டிருக்கும். 

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு, ஒருமுறை பெரியப்பா வீட்டின் திண்ணையில் அமர்ந்து பாட்டி விளக்குகளுக்கு திரி திரித்து விளக்குகளில் போட்டு எண்ணெய் ஊற்றி வைத்திருந்தார். பெரியம்மா விளக்குகளை எடுத்து வைத்து பற்ற வைத்தால் பற்றவே இல்லை. பல முயற்சிகளுக்கு பிறகு தான் அந்த உண்மை புரிந்தது. முன்னதாக பெரியம்மா பாட்டிக்கு டம்ளரில் டீ கொண்டு வந்து அருகில் வைத்துச் சென்றிருந்தார். பால் கலக்காத டீயை பாட்டி நல்லெண்ணெய் என நினைத்து விளக்குகளில் ஊற்றி வைத்து விட்டார்.
ஒவ்வொரு கார்த்திகை தீபம் அன்று நினைவுக்கு வரும் நிகழ்வு அது.

பெரும்பாலும் கார்த்திகை மாதத்தில் தான் எங்கள் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடக்கும். காலை ஆறுமணிக்கே வேலைக்கு சென்று விடுவார்கள். பள்ளி விடுமுறை என்றால் நாங்களும் சென்று விடுவோம். மாலை சற்று நேரத்திலயே வேலையை முடித்துவிட்டு வந்து தான் தீபத்தை கவனிப்போம். பொதுவாக கார்த்திகை தீபத்திற்கு அரசு விடுமுறை இல்லை. ஆனால் எங்கள் பள்ளிக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை உண்டு. 

எங்கள் பள்ளிக்கு அருகில் புகழ் பெற்ற கோவில் ஒன்று உள்ளது. கார்த்திகை தீபம் மற்றும் சிவன் ராத்திரி'க்கு புகழ் பெற்ற கோவில் அது. இது போன்ற விஷேச நாட்களில் அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கும். வெளியூரில் இருந்து வந்து இரண்டு, மூன்று நாட்கள் தங்கி செல்பவர்களும் உண்டு. பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். ஒருமுறை எங்கள் பள்ளி மாணவி ஒருவர் காலையில் பள்ளிக்கு வரும்போது பேருந்தி மோதி இறந்து விட்டார். இது போன்ற நிகழ்வு மீண்டு நடந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொரு கார்த்திகை தீபத்தன்றும் பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளித்து விடுவார்கள்.

இப்போது நிறைய காட்சிகள் மாறிவிட்டன. அந்த கோவில் நீதிமன்ற வழக்கு காரணமாக சில ஆண்டுகள் பூட்டப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பு போல் பெரிதாக விஷேசங்கள் இல்லை. வெளியூரில் இருந்து மட்டும் ஓரளவிற்கு மக்கள் கார், ட்ராவல்ஸ் போன்ற வாகனங்களில் வந்து செல்கிறார்கள். சிலர் தங்கியிருந்தும் செல்கிறார்கள். 

இப்போதுவரை விளக்குகளை கடைகளில் வாங்குவதில்லை. சில சம்பிரதாயங்களுக்கு என ஒவ்வொரு ஊருக்கும் தனி தனியே ஆட்கள் இருப்பார்கள். அதில் மண்பாண்டம் செய்பவரும் ஒருவர். தீபத்திற்கு ஒருவாரம் முன்பு விளக்குகளை பையில் போட்டு சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 50 விளக்குகள் கொடுப்பார். அனைவருக்கும் தவறாமல் பெரிய விளக்கு ஒன்று கொடுப்பார். அந்த பெரிய விளக்கை வாங்கினால் தான் ஒரு திருப்தி இருக்கும்.  

விளக்கு போடுபவர் வந்த பின்பு தான் கார்த்திகை தீபம் வரப்போகிறது என்பது நினைவிற்கு வரும். பெரியவர்கள் தீபம் எப்போது என்று அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். விளக்குகளுக்கு பணம் எல்லாம் இல்லை. பணத்திற்கு பதிலாக நெல், அரிசி, கம்பு போன்றவை வழங்கப்படும். அவற்றை வாங்குவதற்காக தனி தனியே பை கொண்டு வைத்திருப்பார். விளக்குகள் இருக்கும் பையின் எடை குறைய குறைய அரிசி பையின் எடை கூடும்.

இப்போது மண்பாண்டம் செய்பவர்களின் வாரிசுகள் பைக்கில் விளக்கு கொண்டு வருகிறார்கள்‌. நெல், அரிசி போன்றவற்றிற்கு பதிலாக பணமாகவே வாங்கிக் கொள்கிறார்கள். 

எங்கள் பகுதியில் கார்த்திகை தீபத்தை கூம்பு என்று தான் சொல்வார்கள். கூம்பை ஒட்டி மழை பெய்யும் என்பது மக்களின் நம்பிக்கை. அதை வானிலை ஆராய்ச்சியாளர்கள் பருவமழை என்கிறார்கள்‌. கூம்பு முடிந்தால் மழை இருக்காது. அதுவரை சில நாட்கள் பெய்யும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. வானிலை ஆய்வறிக்கைகள் சில சமயங்களில் பொய்த்து விடுகின்றன. ஆனால் மக்களின் நம்பிக்கை பெரும்பாலும் பொய்ப்பதில்லை.

இன்னும் நிறைய காட்சிகள் மாறியுள்ளன. இருப்பினும் கார்த்திகை தீப நிகழ்வுகள் அவ்வப்போது வந்து மனதிற்குள் பிரகாசித்து செல்கின்றன.


4 comments:

  1. மூர்த்தி கூம்பு என்று தான் எங்கள் ஊரிலும் சொல்வோம் பல நினைவடுக்குகளை கொண்டு வந்தது. பருத்தி இப்போது எங்கள் பகுதியில் காணாமலே போயிடுச்சு.. வாழ்த்துக்கள் ப்பா

    ReplyDelete
  2. மிக அருமையான விவரிப்பு. .superb moorthy

    ReplyDelete
  3. எப்போதும் போல் அழகான வர்ணனையுடன் கூடிய கருத்துக்கள்.

    ReplyDelete
  4. சிறப்பு மூர்த்தி.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...