Monday, September 4, 2023

கல்யாணச் சீர் - யசோதா பழனிச்சாமி



 "அலோ யாரு? சக்கரகத்தி சந்திரனா பேசறது "?


"ஆமாங்க.."

" அட, நம்ம ஊரு தெக்கால வலவு, கண்ணப்ப கவுண்டரு ஊட்டு சின்ன கவுண்டுச்சி, இருக்குதுல்ல"…

" ஆமாங்க சாமி"

"அது அவங்க வூட்டுக் கிணத்துல வுழுந்து செத்துப் போயிடுச்சாம். அதுக்கு சீரு பண்ணாம சவத்தை எடுக்க கூடாதுனு எல்லோரும் சொல்லறாங்க. அதனால, நீ சீருக்கு வேணுங்கிற சாமானத்தெல்லாம் சரியா வங்கிட்டு சீக்கிரமே எலவூடு வந்து சேரு" என்று சொல்லிட்டு போனை வைத்தவரின் உடன் பங்காளி வகையில் தான் சாவு நடந்திருக்கிறது.

எழவு நடந்த வீட்டில் உறவுகள் எல்லோரும் கூடி, ஆளுக்கொரு பக்கமாக நின்று குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள். 'பணங்காசு எத்தனை கிடந்து என்ன பண்றது? கண்ணப்பனும், அவன் பொண்டாட்டியும் நிம்மதியா இல்லையே".

'ஆமா, நாப்பது வயசுக்கு மேலாச்சு, இன்னும் பொட்டப்புள்ளைக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க முடியாம வூட்டுலையே வச்சிருந்தா அவங்களால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?'.
இந்த காலத்தில பிஞ்சிலே பழுத்து வூட்டை வுட்டு ஓடற புள்ளைங்க, பசங்களுக்கு இருக்கிற துணிச்சல் இந்த ஜோதி புள்ளைக்கு இல்லையா, அல்லது இவ தலையெழுத்தே இப்படித்தானானு நினைச்சுட்டு போறதானே புரியல போங்க..'

இப்படியாக எழவுக்கு வந்தவர்களின் பேச்சு வலுத்துக் கொண்டிருந்தது. இதை விட அதிகமான சாடைமாடை பேச்சுகளை கேட்டு சலித்து இருந்தனர் கண்ணப்பன் தம்பதியினர். 

"ஏப்பா, கண்ணப்பா, இன்னுமா உம்புள்ளைக்கு ஒரு தேவை கூடல. புள்ளைய இப்படியே ஊட்டுல வச்சுட்டு இருக்கியே வயசாயிட்டே போவுதுல்ல, ஏதாவது சாதகம் கீது பாக்கறீங்களா? இல்லையா?

வயசுப் புள்ளைகள நாப்பது வயசாகியும் கல்யாணம் பண்ண முடியாம ஊட்டுல வச்சிருக்கிறதெல்லாம் எவ்வளவு மன வேதனைங்கிறது வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்குப் புரியாது. அந்த வேதனையை அனுபவிக்கும் போதுதான் அந்த துன்பத்தின் வலியும், அழுத்தமும் எவ்வளவு கொடூரமானது என்று புரியும். 

அவரும் வீட்டுக்கு, வரும் கல்யாணப் புரோக்கர்கள் எல்லோருக்கும் ஐநூறு, ஆயிரம், இரண்டாயிரம்னு கொடுக்கறார். 'இதோ பாருங்க மாப்பிள்ளைக சாதகம் நிறைய கைவசம் இருக்கு. மாப்பிள்ளை வீட்டுல பேசி இந்த சாதகத்தை முடிச்சுட்டு வந்தடறேன்'ங்க என பணத்தை வாங்கிட்டுப் போகிறவர்கள் திரும்ப வருவதேயில்லை. திருமண தகவல் மையங்களில் திரும்ப திரும்ப பணம் கட்டி பதிவை ரினீவல் செய்துட்டு தான் இருக்கிறார்.

இப்படி தான் ஒரு நாள் காலையில ஆறு மணி இருக்கும், கண்ணப்பன் முகம் கழுவி காபி குடிச்சிட்டுயிருந்தார். அந்த நேரத்தில் வந்த புரோக்கர் ஒருத்தர், "மாப்பிள்ளை வீட்டுல நம்ம பாப்பா சாதகம் பார்த்து நல்லாயிருக்குனு சொன்னாங்க. நீங்க எங்கூட வந்தீங்கன மாப்பிள்ளை வீட்டைப் பார்த்துட்டு, அப்படியே மாப்பிள்ளையும் பார்த்துட்டு அவங்க வீட்டுலயும் நேரில விசாரிச்சுட்டு வந்திடலாங்க" என விடாப்படியாக வற்புறுத்தினார். கண்ணப்பனும் யோசித்தார். 'சரி, ஒரு தடவை நேரில போயிட்டுதான் வரலாமே! இவனுக நிசத்த சொல்லறானுகளா? நம்மள நம்ப வச்சு பணத்தை கறக்கிறனுகளா'னு பார்க்க அவருடன் கிளம்பினார். வீட்டிலிருந்து ஆறு மணிக்கு காரில் கிளம்பியவர்கள் ஒரு பத்து,இருபது ஊர் தாண்டி நாப்பது கிலோமீட்டர் கடந்து காடு மேடெல்லாம் காருல போயிட்டேயிருந்தாங்க. "ஏப்பா எந்த ஊரு? இன்னுமா ஊரு வருது" என கண்ணப்பன் அலுத்துப் போயி கேட்டார். 'அதோ வந்திடுச்சு பாருங்க. கார நிறுத்துங்க, நிறுத்துங்க இங்கதான்'னு சொல்லி ஒரு ஊட்டு முக்குல நிக்க வச்சார். சுத்தியும், மா, சப்போட்டா, நெல்லி, தென்னை மரமா நின்னுட்டு இருந்தது பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக மனசுக்கு நிறைவா இருந்தது கண்ணப்பனுக்கு .இத்தனை தூரம் இட்டாரித் தடம் தாண்டி வந்த சலிப்பு விலகிடுச்சு. இந்த தோட்டத்தில் கிணறோ, போர்வெல்லோ இருக்கணும் இல்லைனா கடலைச் செடி இவ்வளவு தளதளன்னு இருக்குமா?.. மாப்பிள்ளை வீடு மெத்த வீடு, காடு, தோட்டம் இருக்குதுனு புரோக்கர் நிசத்த தான் சொல்லியிருக்கான். இந்த எடத்த எப்படியும் பேசி கல்யாணத்தை முடிச்சிடணும் என மனக்கோட்டை கட்டினார்.

இவர்கள் வீட்டு காம்பவுண்ட் கேட்டைத் தொட்டதும், அங்கே கட்டியிருந்த நாய் ஒன்று "லொள்.. லொள் ..லொள் என சத்தமிட்டு வீட்டுக்கு புதிய நபர் வந்திருப்பதை தன் எஜமானருக்கு உணர்த்தியது.

நாய் சத்தம் கேட்டதும் ஐம்பது வயசுக்காரர் ஒருவர் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். 

"யாருப்பா? நீங்க?"

"ஏனுங்க நான்தாங்க புரோக்கர் பொன்னுச்சாமிங்க" என்று புரோக்கர் அறிமுகப்படுத்திய போது, அவர் இருவரையும் ஏற இறங்க பார்த்தார். அவரது பார்வையே கண்ணப்பனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவரே "இங்கே பெரியசாமிங்கிறது நீங்கதானே"? என்று கேட்டார்.

அவர் முகத்தில் ஒரு சிரிப்பு. "அட நம்ம பெரியசாமி மவுனுக்கு ஜாதகம் விசாரிக்க வந்தீங்களா?. அவங்க வீடு அங்கே இருக்குது பாருங்க. பையன் நல்ல பாட்டாளிங்க என்ன சொத்து பத்து இல்லைங்க நம்ம தோட்டத்தில சாலை போட்டு, தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யறாங்க வெள்ளாமை எல்லாம் பரவாயில்லைங்க" என்றார்.

 "இல்லைங்க, உங்க வூட்டு பையன் சாதகம்னு சொன்னாங்களே" என்றார் கண்ணப்பன். 

"எங்க வூட்டுல, எங்களுக்கு ஒரு பையன் தாங்க. அதுக்கு போன மாசமே கல்யாணம் ஆகிப் போச்சுங்க. இப்படித் தாங்க கல்யாண முடிஞ்சு போன சாதகத்தை மறுக்காவும் கொடுக்கறாங்க" என வாயெல்லாம் பல்லாக சொன்னார்.

' பெரியசாமி பையனுக்கு வீடு, தோட்டமெல்லாம் சொந்தமாக கிடையாதுங்க' என்று அவர் முதலில் சொல்லும் போதே கண்ணப்பன் கட்டிய மனக்கோட்டை சுக்கு நூறாக உடைய ஆரம்பித்து விட்டது. அவருக்கு வந்த கோபத்தில் மூன்றாவது நெற்றிக் கண்ணைத் திறந்து புரோக்கரை பார்க்க, அந்த புரோக்கர் அவர் பக்கமே திரும்பி பாக்கம வேகமாக நடையை எட்டிப் போட்டு தூரமாக போயிட்டிருந்தார். அதுக்குப் பிறகு புரோக்கர்கள் வந்து மாப்பிள்ளை வீடு பார்க்க போலானு கூப்பிட்டாலே வீட்டுக் கதவைச் சாத்திட்டு உள்ளே போக ஆரம்பித்து விட்டார்.

அதோடவா போச்சு, சோசியர் எங்கே எந்த கோவிலில் பரிகாரம் செய்யணும் சொல்றாரோ அங்கெல்லாம் பல மைல் கடந்து குடும்பத்தோடு போயி,பரிகாரம் செஞ்சுட்டு வருவார்கள். கோவிலுக்குப் போயிட்டு வந்ததும் ஏதாவது ஒரு சாதகம் ஏதேச்சையாக வந்தால் கூட, கோவிலுக்குப்ீ போயி பரிகாரம் செஞ்சுட்டு வந்ததால் தான் இந்த சாதகமே வந்ததுனு நம்புவார். அப்படி வரும் சாதகத்தை ஆசையோடு எடுத்துட்டு போய், சோசியரிடம் கொடுத்து பார்ப்பார், இவர் பாக்கிற சோசியர் நல்லா இருக்குனு சொல்லுவார். சந்தோஷத்தோடு மாப்பிள்ளை வீட்டுக்கு கொடுத்தனுப்பி பார்க்கச் சொன்னா அவங்க சோசியர் வேண்டானு சொல்லிடுவார். மாப்பிள்ளை வீட்டுல பார்த்துட்டு சரினு சொன்னா, இவங்க சோசியர் வேண்டானு சொல்லுவார்.இது தான் அடிக்கடி நடந்துட்டு இருக்கும். ஏதோ ஒரு ஜாதகத்தை இரண்டு சோசியரும் ஜாதகம் சரியா இருக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லறப்ப, சொத்து பத்தாது ஒரு அடிப்படை சொத்து இருக்க வேண்டுமே என்பதில் யோசிக்க ஆரம்பித்து கல்யாணப் பேச்சு நின்னு போகும். இப்படியாக வயசு நாற்பதை தாண்டியும் இன்னும் மாப்பிள்ளை தேடுகிறார்கள். கொடுப்பதற்கு மனமில்லையோ அல்லது அந்தப் பொண்ணுக்கு கல்யாண யோகமேயில்லையோ தெரியல.

கண்ணப்பன் பொண்ணு ஜோதியும், நல்ல மாநிறம் சராசரியான உயரம். எடுப்பான மூக்கு. திரும்பி பார்க்கும் அழகு தான். ஆனால், இப்போது நாற்பதைக் கடந்திருப்பதால் முகத்தில் லேசாக சுருக்கம் விழ ஆரம்பித்து விட்டது.

அவள் வயதொத்த பொண்ணுகளுக்கெல்லாம், வயசுக்கு வரப் போற வயசில பொட்டப்புள்ளைக வளர்ந்து பெரிசா இருக்கறாங்க. அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் தலையை குனிந்து கொள்வாள் ஜோதி. நெருங்கிய உறவுகளில் அவள் வயதை விடக் குறைவான பெண்களுக்கு திருமணம் நடக்கும் போது எந்த விதமான சலனத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், உள்ளுக்குள் குமைந்து போவாள். தனக்கு திருமணமாகவில்லையே என மற்றவர்கள் அவளைப் பார்க்கும் பரிதாபப் பார்வை, அந்த பார்வை அவளுக்கு தரும் மனவேதனையை யாரிடமும் சொல்லி அழத் தைரியமற்றவளாய் தனிமையில் முடங்கினாள் ஜோதி.

படிக்க வச்சு தொலைஞ்சிருந்தாக் கூட ஏதாவது வேலைக்குப் போயிருப்பாள். அங்கே யாரையாவது பிடித்துப் போய் காதலில் விழுந்து எழுந்து வந்திருக்கலாம். அல்லது ஓடியாவது போயிருக்கலாம். அந்த கிரகத்துக்கும் கொடுத்து வைக்கவில்லை. காரணம் அவளுக்கும் படிப்புக்கும் நூறு கிலோ மீட்டர் தொலைவு. எவ்வளவோ எட்டிப் பிடிக்க முயன்றும் வருஷசந்தான் நீண்டு கொண்டே போனது அதே ஏழாம் வகுப்பிலேயே நின்றிருந்தாள்.

சரி படிப்புத் தான் வரல, தையல் கிளாஸ் போயி துணி தைக்கவாது பழகியிருக்கலாம். துணியை அளவு எடுத்து தெக்கச் சொல்லிக் கொடுக்கற கணக்கு கூட அவளுக்கு வரல. எந்த பொழைப்பும் வேண்டாம்டா சாமினு வீட்டுக்குள்ளே இருந்தவளுக்கு நான்கு சுவத்துக்குள்ளே இருக்கும் டி.விப் பெட்டி அத்தனை சினேகிதமாயிடுச்சு.

திரையில் வரும் கதநாயகர்களுடன் டூயட் பாடினாள். அஜித், விஜி, சூர்யா என நாயகர்களுடன் குடும்பம் நடத்தற அளவு வெட்கப்பட்டு நிற்பாள். இதனாலோ என்னவோ நிஜ ஹீரோ அவள் கண்ணில் படவேயில்லை. படத்துடன் நிறுத்தி இருந்தாக் கூட பரவாயில்லை. சீரியலில் விழுந்த போது,அவளுக்கான உலகமே வேறானது.காலையில் பத்து மணிக்கு டி.வி சுவிட்சை ஆன் செய்தால், நேரம் கடந்து செல்வது தெரியாமல் அவள் அம்மா, "ஜோதி வந்து மத்தியானச் சோறு தின்னு" என பல முறை கூப்பிட்டால் தான் வருவாள். டி.வியோடு அப்படி ஐக்கியமாகி இருந்தாள்.

அவள் அப்பா புரோக்கரை கூட்டி வந்து ஜாதகம் பார்ப்பதில் எல்லாம் அவளுக்கு இப்போது எந்தவித பிடிப்பும் ஏற்படவேயில்லை. ஒன்றிரண்டு மாப்பிள்ளை வந்து பார்த்துட்டு போனார்கள். ஆனால், அவள் மனசு மழுங்கி சுணங்கிக் கிடந்தது.

சரி இவளுக்கு கல்யாணமே பண்ண முடியாது என கண்ணப்பன் முடிவுக்கு வந்த போது அவ தங்கச்சிக்கு முப்பத்தைந்து வயசாயிருந்தது. என்ன நேரமோ, அவ யோகமோ அவளுக்கு உடனே கல்யாணம் கூடிப் போச்சு.

'மூத்தவள் இருக்க இளையவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு காலம் மாறிப் போச்சு. சொத்துக் கிடந்து மயிரையா புடுங்கறது புள்ளைக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ண முடியல, இதெல்லாம் என்ன பொழப்பு பொழச்சு என்ன புண்ணியம்' என காதுபடவே வரும் பேச்சுக்களுக்கு பயந்து பல நேரங்களில் அந்த வீட்டில் இருந்து யாருமே வெளியே வருவதில்லை.

தொலைக்காட்சியில் கணவன் மனைவி கொஞ்சுவதை பார்த்த போது வராத உணர்வு, அவளுடைய தங்கச்சி கல்யாணம் செஞ்சுக்கிட்டு வீட்டுக்குள் வந்து, அவள் புருஷனோட சிரித்து பேசுவதையும், கொஞ்சுவதையும் நேரில் பார்த்தும் ஜோதிக்கு மனசுக்குள் ஆசை துளிர் விட ஆரம்பித்தது.

அதன் பிறகு அவள் அப்பாவிடம், "ஏப்பா தங்கச்சிக்கு கல்யாணத்தை பண்ணி வச்சுட்ட, எனக்கு ஏப்பா நீ இன்னும் கல்யாணம் பண்ணி வைக்கலை?"னு கேட்டதும், கண்ணப்பனுக்கு சப்தநாடியும் உள்ளுக்குள் இப்பவே அடங்கிடக் கூடாதா, இதைக் கேட்டு நான் இன்னும் உசரோடே இருக்கணுமானு கதறி அழுவார்.

அதற்கு பிறகு, அவர்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், 'எனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு வந்தீங்களா'னு கேட்பதை வழக்கமாக்கி கொண்டவளை அவர்கள் வீட்டினரால் எதுவும் செய்ய இயலாது போனது. கல்யாணம் செய்யாம விட்டதால் மனசு பாதித்து பைத்தியம் பிடித்து போச்சு என உறவுகள் அவளை ஒதுக்கி வைத்தார்கள்.

அன்று அதிகாலையில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 'எனக்கு கல்யாணம் பண்ணி வை' எனக்கு மட்டும் மாப்பிள்ளை கிடைக்கலையா? ஊரில எல்லாரும் கல்யாணம் கட்டிகிட்டு புருஷனோடு போறாங்கனு.. கிணத்து மேட்டு மேல உட்கார்ந்துகிட்டு கத்தி, பேசிட்டு இருந்தவளின் சத்தம் வீட்டின் உள் அறை வரை கேட்டது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு வெளியே ஓடி வருவதற்குள் வேகமாக திரும்பியவள் தவறிப் போய் கிணற்றில் விழுந்தாள். கிணற்றுக்குள் இறங்குவதற்காக கட்டி வைத்திருக்கும் படிக்கல்லின் மீது தலை மோதி ஜோதியின் தலையில் பலத்த காயம். கிணற்றுத் தண்ணி சிவப்பாக மாறும் அளவு ரத்தம் கொட்டியது.

ரத்தம் வடிய அவளை தூக்கி வந்து கயிற்றுக் கட்டிலில் கொண்டு வந்து வைத்தார்கள். மண்டையைச் சுற்றி காயத்தில் வீட்டில் இருக்கும் அத்தனை மஞ்சளையும் வைத்து அழுத்திகட்டி தலையைச் சுற்றி கட்டுப் போட்டார்கள். ஆனால், அவள் மூச்சு நின்று போயிருந்தது. ஊருல யாராவது போலீஸுக்கு போயிடப் போறாங்க என்று அவளை எரிப்பதற்காக வேகமாக காரியங்களை செய்து கொண்டிருந்தார்கள். அத்தனை அவசரத்திலும் கல்யாணம் ஆகாத அவளுக்கு "கல்யாண சீர்" நடத்துவதற்கான சடங்குகளை செய்ய உறவுகள் கூடி இருந்தார்கள். அவர்கள் குல வழக்கப்படி அருமைக்காரர் வந்து இருந்தார். ஜோதியை, குளிப்பாட்ட முடியாத சூழலில் அவளுக்கு புதுப்புடவை சுற்றி, எட்டித் தழை மாலை போட்டார்கள். அந்த எட்டித்தழை கிடைக்காமல் எங்கோ அலைந்து திரிந்து பல மைல்கள் தள்ளிச் சென்று பறித்து வந்து மாலை கட்டி, மாலை போட்டு சீர் செய்து அவள் கைக்கு அருமைக்காரர் கங்கணம் கட்ட, அவள் அம்மாவும், அப்பாவும் 'உசரோடு இருந்து உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வைக்காத பாவி ஆனோமே எந்தங்கமே' என கதறி அழுதது கண்டு வானமும் தன் மழையை சாரலாக தூவ ஆரம்பித்தது.ஒரு நீளமான மூங்கில் குச்சியில் புடவையில் தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் போல் அவளை படுக்க வைத்து தூக்கிச் செல்ல மழையில் நனைந்து கொண்டே சென்றாள் ஜோதி. "உயிரோடு இருக்கும் போது நாங்க பண்ணி வைக்காத கல்யாணச் சீரை, அய்யோ செத்த பின்னாடி வாங்கிட்டு போறளே"னு அவள் அம்மா மீண்டும் குரலெடுத்து கத்த ஆரம்பிக்க, அவர்களை மனம் நோக பேசிய சுற்றமெல்லாம் கையறு நிலையில் இப்போது கரைந்து நின்றது‌.


என்னை பைத்தியம் என்கிறாய் - கே. ஜெயலலிதா

 


காரணங்களும் இல்லை.
காரியங்களும் இல்லை.
எதிர்ப்பும் இல்லை.
எதிர்பார்ப்பும் இல்லை..
என்றெல்லாம்
ஏதேதோ சொல்லிக் கொள்கிறேன்.
ஆனாலும் எந்நேரமும் ஒரு உரையாடல்
மனதிற்குள் உன்னுடனே
நடந்து கொண்டியிருக்கிறது.
வலியென்றால் வந்து
உன் கரம் பற்றி இறுக்கிக் கொள்கிறேன்.
விழி துளிர்க்கும் போதெல்லாம்
உன் மடி தேடிக் கொள்கிறேன்.
தேவையெனில் – உன்
கால் கட்டி இறைஞ்சுகிறேன்.
சில நேரம் கெஞ்சுகிறேன்.
சில நேரம் கொஞ்சுகிறேன்.
சில நேரம் பொங்குகிறேன்.
சில நேரம் உளறுகிறேன்.
முடியாத கட்டங்களில்
உன் நெஞ்சோடு இறுக்கி
உறங்க வைக்கவும் ஆணையிடுகிறேன்.
குறுக்கீடில்லாமல்
கொட்ட அனுமதிக்கும்
உன்னை நான் கடவுள் என்கிறேன்
நீயோ என்னை பைத்தியம் என்கிறாய்...!?


இது தான் காதல் என்பதா? ’ - விஜிரவி

 


ந்த உணவகத்தின் வாயிலில் மிகுந்த ஆவலோடு காத்திருந்தான் தீரஜ். அவனைத் தேடி மனிஷா வரப்போகிறாள் என்ற நினைப்பே தித்தித்தது. இன்று அவளுடன் செல்பி எடுத்து, தன் நண்பர்கள் குழுவிற்கு அனுப்ப வேண்டும். மதியம் அவளுடன் மகாராஜா மல்டிபிளக்ஸில் நூன் ஷோ பார்க்க ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்தாயிற்று.


‘’எஸ் தீரஜ், நானும் உன்னை நேசிக்கிறேன்’’ என்ற அவளுடைய வாட்ஸ்அப் மெசேஜ், நேற்றிரவு முழுக்க அவனை தூக்கம் தொலைக்க வைத்தது.
 
‘’டேய் நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இல்லடா அவ! நீ வாங்கித் தர்ற ஐ போனுக்கும், விதவிதமான கிப்டுக்கும் மயங்கற ஆளாத் தெரியல. நீயும் ஆறு மாசமா அவ பின்னாடி சுத்துற.... ஏதாவது கண்டுக்கிட்டாளா?  விட்டுத் தொலைடா’’ என திலக்கும் சச்சினும் சொன்னபோது கோபத்தில் வெடித்தான்.
 
‘’நிறுத்துங்கடா! பெரிய இவளா அவ? கொஞ்சம் அழகும், புத்திசாலித்தனமும் இருந்தா அவளுக்கு திமிர் வந்துடுமா? நான் யாரு, என் பேக்கிரவுண்ட் என்னன்னு அவளுக்கு தெரியாது இல்ல? அவ ஓ.கே சொல்ற வரைக்கும் விடமாட்டேன்’’  தீரஜ்ஜின் அடாவடியான குணம் தெரிந்து நண்பர்கள் அமைதியாயினர். 
 
கெமிக்கல் எஞ்சினியரிங்கின் இறுதியாண்டில் இருந்த போது தான் தீரஜ்ஜின் கவனத்தை ஈர்த்தாள் அவள். முதல் மூன்றாண்டுகள் மனிஷாவின் மேல் தீரஜ்ஜூக்கு பெரிதாக ஈர்ப்பில்லை. இவனிடம் மட்டுமல்ல, எந்தப் பையனிடமும் ஏன் பெண்களிடம் கூட அவள் சிரித்துப் பேசி அரட்டையடித்துப் பார்த்ததில்லை யாரும். அவள் கவனம் முழுக்க படிப்பு, படிப்பு. இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. வெட்டி விடப்பட்ட கிராப் தலையுடன் துளி மேக்கப்பின்றி அறிவுக்களை சொட்டும் முகத்துடன் கம்பீரமான அவள் தோற்றமே அசர வைத்தது. அவள் தந்தை குஜராத்தில் ஒரு பிசினஸ்மேன் என்றும், அவள் இங்கே தன் தம்பியுடன் பாட்டி வீட்டில் தங்கிப் படிக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது. 
 
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கல்லூரியில்  நடந்த கல்ச்சுரல்சின் போது மேடையேறி பொருள் புரியாத குஜராத்திப் பாடலொன்றை அவள் பாடியபோது தான் அசரடிக்கும் அவளது அழகில் ஈர்க்கப்பட்டான். ‘இத்தனை நாள் இவளை எப்படி கவனிக்காமல் விட்டோம்’ என்று ஆச்சர்யப்பட்டான்
 
அடுத்த நாளே  கூடைப்பந்து மைதானத்தில் அவளைச் சந்தித்து தான் அவளை விரும்புவதாகக் கூறியபோது ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு நகர்ந்தாள். பிறிதொரு நாள் மாலையில் கேண்டீனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவளை வழிமறித்து, மீண்டும் தன் காதலை சொன்னபோது ‘ஏய் ஜாக்கிரதை! லீவ் மை வே’ என கத்திக்கொண்டே கடந்து சென்றாள்.
 
அதன் பின் அவன் வாட்ஸ்அப்பில் ‘’மனிஷா, எனக்கு உன் மேல் இருப்பது வெறும் க்ரஷ் இல்லை. டீப் லவ். ப்ளீஸ், என்னைப் புரிஞ்சுக்கோ.’’ என தினமும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினான். நான்காவது நாள் வகுப்பில் மதிய உணவு இடைவேளையில் அவனிடம் வந்து, ‘’டேய் லூசு! இத்தோட நிறுத்திக்க. நாளைக்கு உன்கிட்ட இருந்து இது மாதிரி மெசேஜ் வந்தது, பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன். முதல்ல உன் அரியர்சைக் கிளியர் பண்ணி டிகிரி வாங்கற வழியைப் பாரு’’ என அவள் உறுமி விட்டுச் செல்ல, அவனது நண்பர்கள் கூட்டம் ஸ்தம்பித்தது.  
 
இடையில் என்ன நடந்ததோ, எது அவள் மனதை மாற்றியதோ தெரியவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்றிரவு அவளிடம் இருந்து வந்த வாட்ஸ்அப் செய்தி தானும் அவனை விரும்புவதாக அறிவிக்க, இறக்கையின்றி பறக்கத் தோன்றியது அவனுக்கு.
 
வாசலில் வந்து நின்ற ஆட்டோவில்  அவன் பார்வை பதிய, அதிலிருந்து இறங்கினாள் மனிஷா. அவள் கையைப் பிடித்தபடி கூடவே ஒரு பதிமூன்று வயதுச் சிறுவன். அப்படியே அவள் சாயலில்.
 
முகம் முழுக்க புன்சிரிப்புடன் அவனருகில் வந்து, ‘’ஹாய் தீரஜ், திஸ் இஸ் மை பிரதர் ரோஹித்.  பையாவுக்கு ஹலோ சொல்லு ரோஹித்’’ அவன் வாயை ஒருவாறு கோணிக் கொண்டே ‘ஹலோ’ என்றான்.
 
‘’இது என்ன தேவையில்லாத இடைஞ்சல்?’’ என்று மனதில் நினைத்தபடி அவர்களை தான் ரிசர்வ் செய்திருந்த டேபிளுக்கு அழைத்து சென்றான்.
நாற்காலியில் சக்கென  அமர்ந்தான் சிறுவன் ‘’தீதி, எனக்கு சிக்கன் பால்ஸ், நூடுல்ஸ், அப்புறம் ஐஸ்கிரீமும் வாங்கித் தரணும் தெரியுமா’’ பற்களை முழுசும்  காட்டியபடி சிரித்த ரோஹித்தை வெறுப்பாய் பார்த்தான் தீரஜ்.
 
‘ஷ்யூர் ரோ’  அவன் தலையை செல்லமாக கலைத்தபடி ‘’தீரஜ், இவனுக்கு என் கிட்ட ரொம்ப அட்டாச்மென்ட். அப்பா அம்மாவைக் கூட தேடமாட்டான்.  ஆனா என்னை விட்டுட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டான். நான் வெளியில எங்க கிளம்பினாலும் இவன் இல்லாமல் வரவே மாட்டேன்.’’ என்றாள் மனிஷா.
 
‘’ ஏன் ஒரு மாதிரி வித்தியாசமா பிஹேவ் பண்ணுறான்?’’ 
 
அவன் புறம் குனிந்து ரகசியக்குரலில் ‘’அவனுக்குக் கொஞ்சம் மெண்டல் டிஸ்ஆர்டர் ப்ராப்ளம் இருக்கு. ட்ரீட்மென்ட்ல தான் இருக்கான்.’’
 
ஆர்டர் செய்த உணவுகள் வர, முள்கரண்டியால் நூடுல்சை அள்ளியள்ளி வேகமாக சாப்பிட்டவனிடம், ‘மெதுவா பொறுமையா சாப்பிடு ரோ’ என்றாள். சிறுவன் தலையாட்டியபடி டேபிள் மீதிருந்த சாஸ் பாட்டிலை எடுத்த வேகத்தில் மூடி திறந்து, அருகிலிருந்த தீரஜின் வெள்ளை டி-ஷர்ட்டில் கொட்டி சிவப்பு நிறத்தில் கோலமிட்டது. எரிச்சலுடன் அவனை முறைத்தபடி டிஷ்யூ பேப்பரால் அதைத் துடைக்க முயல, சிவப்பு வண்ணம் மேலும் சட்டையில் பரவிற்று. பற்களை கடித்து கோபத்தை அடக்கினான்.
 
சிக்கன் பால் ஒன்றை எடுத்து வாயிலிட்ட ரோகித் சூடு தாங்காமல் துப்ப, அது மிகச்சரியாக தீரஜின் கன்னத்தில் பட்டுத்தெறித்து கீழே விழுந்தது.
 
‘’ஓ வெரி சாரி தீரஜ்! அவன் வேணும்னு செய்யல. தெரிஞ்சதே அவ்வளவுதான். ரோஹித், சூடா இருக்கில்ல, ஆறட்டும் வெயிட் பண்ணு’’ என அவள் சொல்லிக்கொண்டிருக்க, தீரஜ் எழுந்தான்.
 
வாஷ்பேஷின் கண்ணாடியில் பார்த்த போது, முகத்திலிருந்த மசாலாக்கறையும், சட்டையின் சாஸ் கோலமும்,  தன்னை ஒரு கோமாளியைப் போல  இருப்பதாக உணர்த்தியது. ‘’ப்ளடி! காஸ்ட்லி டீ ஷர்ட்டை பாழடிச்சிட்டானே’’ எரிச்சலுடன் குளிர்ந்த நீரால் முகம் கழுவி னான். கண்ணுக்கடியில் லேசாக தோலுரிந்து காந்தியது. ‘’ ராஸ்கல்’’ பல்லைக் கடித்து கோபத்தை அடக்க முயன்றான்.
 
முகத்தை கர்சீப்பால் ஒற்றியபடி இருக்கையில் அமர்ந்தவனை, ‘’ஆர் யூ ஆல்ரைட் டியர்?’’  என்ற மனிஷாவின் கேள்விக்கு மையமாக தலையசைத்தான். வயிறு பசித்தாலும், சாப்பிடும் மனநிலை விடைபெற்றுப் போயிருக்க, பேரரையழைத்து ஒரு மாதுளைஜூஸ் கொண்டுவரச் சொன்னான்.
 
தட்டில் பாதியும் டேபிள் மேல் பாதியும் இறைத்தபடி கிடந்த நூடுல்ஸ் துணுக்குகளும், ரோஹித் கோணலாக சிரித்தபடி ‘சவுக்கு சவுக்’கென சிக்கனைக் கடித்துத் தின்ற விதமும் முகம் சுளிக்க வைத்தது. எச்சில் வழியும் வாயுடன் ஒரு சிக்கன் பாலை எடுத்து அக்காவிற்கு ஊட்ட,  அவளும் அதை ரசித்து தின்ற அழகும் குமட்டியது. ‘உனக்கு’ என ரோஹித் தீரஜ்ஜிடம் ஒன்றை நீட்ட,  ‘ஓ, நோ’ என்றபடி அவசரமாக பின்னுக்கு நகர்ந்து கொண்டான்.
 
கசாட்டா ஐஸ்கிரீமை வேட்டையாடிக் கொண்டிருந்த ரோஹித், தீரஜ்ஜின் கையிலிருந்த ஜூஸ் டம்ளரை வெடுக்கெனப் பிடுங்க அதிர்ந்தான்.
 
‘’டேய் டேய்’’ என தீரஜ் பதற, அவனோ ‘களக்’ களக்’ என்ற ஓசையுடன்  குடிக்கலானான். வெறும் கிளாசை அவன் மேசை மேல் வைக்க, வாயிலிருந்து ஜூஸ் ஒழுகியது.
 
’’கூல் கூல்! நீ வேற ஜூஸ் வாங்கிக்கோ’’ என்ற மனிஷாவை எரிப்பது போல பார்த்தான்.
 
 ‘’ஓ.கே! அடுத்து தியேட்டர் தானே தீரஜ்? ரோஹித்துக்கு ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் போட்ரு’’
 
‘’ என்னது, இந்தப் பிசாசைக் கூட்டிக்கிட்டு சினிமாவா?’’ சட்டென்று எழுந்தான்.
 
‘’ அப்படிலாம் சொல்லாதே தீரஜ்! எனக்கு என் தம்பி மேல உயிரு. இவனை விட்டுட்டு நான் எங்கியும் வரதா இல்லை. இன்பேக்ட் வாழ்நாள் முழுக்க இவனை என் கூடத் தான் வெச்சுக்குவேன். உனக்கு சம்மதம் தானே? உன்னோட டீப் லவ்வை நான் இப்பதான் புரிஞ்சிக்கிட்டேன். ஹெள லவ்லி யூ ஆர்! என் தம்பியோட  குறும்புகளை எவ்வளவு பொறுமையா சகிச்சுக்கிட்டே. இவனாலயே என்கிட்ட ப்ரபோஸ் பண்ணவங்கள்லாம் சீக்கிரமே ப்ரேக்கப் சொல்லிட்டாங்க. நீ கிரேட்! ரோகித்,  பையாவுக்கு ஹாண்ட் ஷேக் கொடு’’ ஆர்வமாக நீண்ட ரோஹித்தின் கைகளை அருவருப்புடன் விலக்கினான்.
 
 ‘’ஹெல் வித் யுவர் ப்ரோ. இந்த பைத்தியத்தைக்  கட்டிக்கிட்டு நீயே அழு. எனக்கென்ன தலையெழுத்து? ஒரு மணிநேரம் கூட இவனை சகிச்சிக்க முடியலை.  இனிமே லவ்வு கிவ்வுனு என் பின்னாடி வந்துராத. தொலைச்சிடுவேன்’’ ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து விட்டு  அவசரமாக அங்கிருந்து வெளியேறினான். 
 
வாய்விட்டு சிரிக்கத் தொடங்கிய மனிஷாவுடன் ரோஹித்தும் சேர்ந்து கொண்டான். ‘வெல்டன் ரோ! சூப்பரா ஆக்ட் பண்ணின. அதே சமயம் சாரிடா! உனக்கு மெண்டல் டிஸ்ஆர்டர்னு சொல்ல வச்சுட்டானே அந்தப் படுபாவி’’
 
‘’ அப்படி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்ததால தானே தெறிச்சு ஓடுறான். இனி உன் பக்கம் திரும்பிக் கூட பாக்க மாட்டான்’’
 
 ‘’இவன் ஒரு முரட்டு,  முட்டாள் பீஸ்! போன வருஷம் ஒரு ஜுனியர் பொண்ணு இவன் லவ்வை ஏத்துக்கலை. இவன் அவளோட ஃபோட்டோவை அசிங்கமா மார்ஃபிங் பண்ணி எங்க கிளாஸ் வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டு விட்டான். அந்தப் பொண்ணு அதுக்கப்புறம் காலேஜுக்கே வர்றதில்லை. ஆனா இவனோட அப்பா ஊர்ல பெரும்புள்ளி. அதோட காலேஜ் சேர்மனுக்கு நெருங்கின சொந்தம்ங்கிறதுனால இவன் மேல எந்த ஆக்சனும் எடுக்கலை.
 
‘’இவனுக்கு காதல்ங்கிறது ஒரு டைம் பாஸ். சும்மா தன் பிரெண்ட்ஸ்கிட்ட கெத்துக் காமிக்கணும்னு ஆறு மாசத்துக்கு ஒரு பொண்ணை மாத்துவான். என்னையும் அவன் லவ் டார்ச்சர் பண்ணினப்ப, அவன் பேரெண்ட்ஸ் கிட்ட சொல்லலாமான்னு முதல்ல யோசிச்சேன். ஆனா அவங்க பேச்சையும் அவன் கேக்க மாட்டான்.  நான் நோ சொன்னா, இவன் என்னையும் அசிங்கப்படுத்துவான். இல்லைனா மூஞ்சில ஆசிட் ஊத்துவான். அதான் செமையா ப்ளான் பண்ணி, அவனை இங்க வரவழைச்சேன். ஆனா ஒரே நாள்ல இப்படித் தெறிச்சு ஓடுவான்னு நினைக்கவேயில்லை. இவன மாதிரி ஆளுகளை இப்படித் தான் புத்திசாலித்தனமா டீல் பண்ணனும்.’’ என்றபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மனிஷா.

நன்றி - ஸ்ரீ மைத்தி

     


  ம் அனைவருமே நமது உடல் மற்றும் மன  நலம் பேணிட பல வழிமுறைகளை மேற்கொள்கிறோம். உடல் நலம் மன நலத்தை காக்கின்றதா இல்லை மனநலம் உடல் நலத்தை மேம்படுத்துகிறதா என்பதற்கான பதில் சற்றே சவாலானதே. காற்று வந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற சந்தேகமே இன்னும் தீர்ந்தபாடில்லையே.

    இதில் மனநலத்தை மேம்படுத்திட பல நுட்பங்களை கையாள்கிறோம். மனதின் கட்டுப்பாட்டில் நாம் பிடி படுவதை விட, மனதினை நாம் நம் பிடியில் பிடித்து வைக்கும் போது எண்ணியதை கைப் பற்றிட முடிகிறது.

     அவ்வாறான நுட்பங்களில் ஒன்று தினமும் positive affirmations  நான் நன்றாக இருக்கிறேன்நான் நினைத்தது நிறைவேறுகிறது என் பணியை நான் சிறந்த முறையில் செய்து முடிக்கிறேன்  என பாசிட்டிவான வாக்கியங்களை சொல்ல சொல்ல நமக்கு நேர்மறையான விஷயங்கள் நடக்கும் என்ற psychological factors ஐ பலரும் கடைப்பிடிக்கிறோம்.

    இதேபோல் உங்கள் வாழ்வில் நல்லவற்றை எண்ணிப்பாருங்கள், அவ்வாறான  நல்லவைகள் பல்கிப் பெருகும் என்பதுவே Count your blessings   என்பதின் சாராம்சம்நல்லனவற்றை எண்ணிப் பார்ப்பது நமது  சுய புலம்பல்களை தவிர்க்கும்.  என்னிடம் இது இல்லையேஎனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?நான் மட்டும் ஏன் இவ்வாறு கஷ்டப்பட வேண்டும்நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே போன்ற சொற்றொடர்கள் இன்றைய அன்றாட வாழ்வில் பலருடைய ரீங்காரமாக இருக்கின்றது.  இதை தவிர்க்க  நாம் நேர்மறை வாக்கியங்களுடன் அவற்றை திரும்பத் திரும்ப எண்ணி நன்றி உணர்வினை வெளிப்படுத்திக் கொண்டே இருத்தல் பயனளிக்கின்றது.

        இவ்வரிசையில் Sense of Gratitude என்பது புதுவரவு. நன்றியுணர்வு.இந்த நன்றியுணர்வு நிலையில் எதிர்மறை சிந்தனைகள் மட்டுப்படுத்தப்பட்டு, நாம் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டிய விஷயங்கள் மேல் அக்கறை செலுத்த ஆரம்பிக்கின்றோம்.இன்று காலை நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு நன்றி.  எனக்கு கிடைத்த சத்தான உணவிற்கு நன்றி.  இன்று நான் பத்திரமாக அலுவலகம் வந்தடைந்ததற்கு நன்றி.  இவையே கிடைத்ததற்கு நம் நன்றியுணர்வினை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் மாதிரி வாக்கியங்கள்.

     இந்த இடத்தில் சற்றே மாறுபட்டு சிந்திப்போமா?  நான் என்று சொல்லும் போது ஒட்டாத உதடுகளை நாம் என்று சொல்லி இணைப்போமா?நன்றியுணர்வினை நான் என்பதை முன்னிலைப்படுத்தி மட்டுமே செய்யாமல், இந்த வட்டத்திற்குள் நம்முடன் சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ளும் போது, வாழ்வில் நமக்கான நேர்மறையான எண்ணங்கள்,  நல்ல விஷயங்கள் யாவுமே மேலும் பெருகுவதை காண முடிகின்றது.       

       நன்றியை நமக்கு நாமே உரைப்பதோடு அல்லாமல், அந்த நன்றி உணர்வினை நமது அன்றாட வாழ்வில் உடன் பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் வாய்விட்டு பகிர்ந்து அளிக்கும் போது, மேலும்  நல்லுணர்வுகள் மேலோங்குவதை காண முடிகிறது.அந்தப் பரவசத்தை நாம் உணர்ந்தால் மட்டுமே அது தரும் சுகத்தை அனுபவிக்க முடியும்.  எடுத்துக்காட்டாக நாம் வேலை செய்யும் அலுவலகங்களில் நமக்கு முன்னர் வந்து கதவை திறந்து வைப்பவர் அலுவலகத்தின் உதவியாளர். அது அவரது வேலை தான். அதற்காகத்தான் அவருக்கு சம்பளமும் தரப்படுகிறது. ஆனால் நாம் அவருக்கு நன்றி சொல்லி நகரும்போது அவருக்கு அது அன்றைய நாளின் உத்வேகமாக அமைவதோடு, தான் ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வினையும் தருகிறது.  இதைத் தொடர்ந்து செய்யும்போது நம் மீதான மதிப்பும் அவர்களது மனதில் உயர்கிறது  என்பது குறிப்பிடத்தக்கது.

      இதே போல் தான் வீட்டிற்கு காய்கறி, பழ வகைகளை வியாபாரம் செய்ய வருபவர்களிடமும்,வாங்கும் பொருளுக்கு தகுந்த பணத்தைக் கொடுத்துவிட்டு கூடவே நன்றியையும் உரைக்கும் போது, அடுத்த முறை அக்கறையுடன் நமக்கானதைப் பார்த்து வாங்கி வந்ததாக  அவர்கள் உரைப்பதைக் கேட்க முடியும். எத்தனை முறை நாம் பயணம் செய்யும் பேருந்து ஓட்டுனரிடம் நன்றி சொல்கிறோம்? ஒருமுறை சொல்லித்தான் பார்ப்போமே. அவர் தனது புன்னகையின் மூலம் நம்மை மனதால் வாழ்த்தி, நமக்கான நேர்மறை எண்ணங்களைத்  தருகிறார் என்பதை அனுபவிப்போமா?

        ஒருமுறை ரயிலில் பயணித்த போது புகை வண்டியை இயக்கியவரைப் பார்த்து நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்று எனது மனது விரும்ப, தேடிச் சென்று நன்றி உரைத்த போது, அவர் கண்களில் நீர் தழும்ப மிகவும் நெகிழ்ச்சியாக உணர்வதாகவும், தேடி வந்து நன்றியுரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எனவும் வாழ்த்தியது இன்றளவும் மனதில் பசுமையாய் இருக்கிறது.

     வயதில் மூத்தோர் - இளையோர், அதிகாரத்தில் மூத்தவர் இளையவர், படிப்பறிவு உடையவர் - இல்லாதவர்,  என எந்தப் பாகுபாடும் இன்றி இயங்கக்கூடிய ஒரு தளம் இந்த  நன்றி உணர்வினை வெளிப்படுத்தி , நாம் பிறருடன் இணைந்து பயணிக்கும் தளம் மட்டுமே.

    நாம் அனைவரும் இத்தளத்தில் பயணித்து நமக்கான மனநலத்தினை மேம்படுத்திக் கொள்வோமா?நன்றியுணர்வு கொடுக்க கொடுக்க ஊறும் கேணி. நமக்கான நல்லுணர்வை கொடுத்துக் கொண்டே இருக்கும் அமுதசுரபி.

         நன்றியுணர்வினைப் பற்றி பகிர்ந்தளித்த என் எண்ணங்களை ஆவலுடன் படித்த நல் உள்ளங்களுக்கு எனது நன்றிகள்.


வங்காளக் கரையோரம் - மூர்த்தி


 உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை எவ்வளவு தொலைவு இருக்கும் என நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? கடற்கரையை முழுவதும் கடந்தது உண்டா? அல்லது கடந்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் தோன்றியதுண்டா?

எனக்கு ஒவ்வொரு முறை மெரினா செல்லும்போதெல்லாம் இடது புறம் என்ன இருக்கும்? வலதுபுறம் எவ்வளவு தொலைவு செல்லும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஒரு ஓரமாக எட்டி பார்க்கும். ஆனால் கால சூழல் அதற்கு ஒத்து வராமல் போகும்.

கடந்த ஜூலை மாதத்தில் உள்ளத்தனைய உடல் குழுமம் நடத்திய 21 நாட்கள் உடற்பயிற்சி சவாலில் இணைந்திருந்தேன். கூடவே பக்கத்து வீட்டு தம்பி சதீஷையும் கோர்த்து விட்டிருந்தேன். 21 நாட்கள் சவாலின் 15 மற்றும் 16'வது நாட்களின் எங்களுடைய காலைப்பொழுது சென்னையில் உதயமானது. ஜூலை 22 அன்று காலை 4.30 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கி லோக்கல் ட்ரெயின் மூலமாக சேப்பாக்கத்தை அடைந்தோம். அங்கிருந்து நடை ஆரம்பமானது.

அரை மணி நேர நடைக்கு பிறகு மெரினா கடற்கரையின் இடது புறத்தை அடைந்தோம். கூவம் நதி கடலில் சேரும் பகுதியில் பாறைகள் அடுக்கப்பட்ட இடத்தில் ஸ்ட்ராவா செயலியை ஆன் செய்து உடற்பயிற்சி சவாலின் 15'வது நாளை ஆரம்பித்தோம். ஆரம்பித்த இடத்திலிருந்து சிறிது தொலைவு வரை நண்டுகள் நடமாடும் பகுதியாக இருந்தது. நடமாடும் பகுதி என்பதை விட நண்டுகள் வசிப்பிட பகுதி எனலாம். சிறிய நண்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுக்கும் மறுக்காக ஓடிக்கொண்டிருந்தன. நண்டுகளின் பிள்ளைகள் சற்று வளர்ந்ததும் தனி குடித்தனம் சென்று விடுகின்றன போல. சிறு நண்டுகள் சிறு வலைகளிலும் பெரிய நண்டுகள் பெரிய வலைகளிலும் இருந்தன. சிறு நண்டுகள் வலையிலிருந்து சற்று தள்ளி நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தன. மனிதர்களை பார்த்தால் குடுகுடுவென வலைக்குள் வந்து புகுந்துகொண்டன. வலைக்குள் இருந்துகொண்டு தலையை மட்டும் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய நண்டுகள் நம்மை பார்த்ததும் உள்ளே சென்று ஒளிந்துகொண்டன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது நண்டுகள் பற்றி தேடி தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படுகிறது.

அப்படியே மக்கள் நடமாடும் பகுதிக்கு வந்தோம். சிறிதளவு கூட்டம் இருந்தது. ட்ராக்டர் ஒன்று மணலை சுத்தம் செய்துகொண்டிருந்தது. செப்பல்களை கையில் எடுத்துக்கொண்டு நடந்தாலும் மணலில் நடக்க சிரமமாக இருந்ததால் கடல் அலைகள் வந்து போகும் பகுதியில் நடந்தோம். மணல் இறுகி இருந்ததால் இயல்பாக நடக்க முடிந்தது. கபடி விளையாடும் இளைஞர்கள், ஸ்டன்ட் செய்யும் சிறுவர்கள் என கேண்டிட் போட்டோகிராஃபி எடுப்பதற்குரிய காட்சிகள் நிறைய இருந்தன. லைட் ஹவுஸ் பகுதியை தாண்டி சென்ற போது ஸ்கிரிப்ட் பேப்பர்களோடு இயக்குனர், உதவி இயக்குனர்களும், ட்ரைபேட், கேமிராவுடன் கேமரா மேனும் லொக்கேஷன் தேடிக் கொண்டிருந்தனர். திரும்பி வரும்போது சிறுவயது பையன்களை ஒவ்வொருவராக சிலம்பம் சுற்ற வைத்து டெலி லென்ஸ் வைத்து மிரர்லஸ் கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். விசாரித்ததில் பள்ளி விளம்பரம் என்றனர்.

லைட் ஹவுஸ் கடந்த பிறகு மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் வந்தது. ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கரைக்கு வரும் படகுகளை ட்ரேக்டர் வண்டியில் கட்டி இழுத்துக்கொண்டிருந்தனர். இந்த பகுதிக்கு பின்புறமாக சாலை ஓரங்களில் வரிசையாக மீன்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிர்ப்புறம் இருந்த பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வண்ண ஓவியங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.

அடுத்ததாக சிறிது தூரத்திற்கு மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ஆனால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இதற்கு அடுத்து ஒன்றிரண்டு படகுகள் நின்றுகொண்டிருந்தன. கிட்டத்தட்ட கடற்கரையின் எல்லையை நெருங்கியிருந்தோம். அருகிலேயே குடியிருப்பு பகுதி இருந்தது. அங்கு வசிக்கும் மக்களுக்கு கடற்கரை தான் இரவில் உறங்குவதற்கான இடம். சிலர் அப்போது தான் எழுந்து பாய்,போர்வை போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றனர். இன்னும் சிலர் குப்புற திரும்பி படுத்துக்கொண்டு இருந்தனர். இரண்டு துப்புறவு பணியாளர்கள் குப்பைகளை கூட்டிக்கொண்டு இருந்தனர். அந்த குடியிருப்பு பகுதியை கடக்கும்போது கடற்கரையும் முடிவுக்கு வருகிறது. இந்த இடத்தில் அடையாறு ஆறு வங்க கடலில் வந்து சங்கமிங்கும் கழிமுகம் பகுதி. அடையாற்றில் போதிய நீர் வரத்து இல்லாததால் கடலின் மிக அருகில் தன்னை சிறியதாக சுருக்கிக் கொண்டு முடிவடைகிறது அடையாறு.

மெரினாவின் எல்லை எதுவென சரியாக தெரியவில்லை. மெரினாவின் மொத்த நீளம் 13 கி.மீ, உலாவும் சாலை 6 கி.மீ என விக்கிபீடியா சொல்கிறது. கூவம் ஆறு கடலில் சேரும் இடத்தில் துவங்கி அடையாறு கழிமுகம் வரை பயணம் செய்த தூரம் 6 கி.மீ. இது தான் விக்கி குறிப்பிட்ட உலாவும் இடம் என நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் வங்க கடலின் எல்லைகளில் இன்னும் அதிகம் பயணம் செய்து பார்க்க வேண்டும். எப்படியோ ஒரு ஆர்வத்தில் 6 கி.மீ நடந்து வந்துவிட்டோம். திரும்பி வரும்போது இதோ வந்தாச்சு என கூறிக்கொண்டே ஒருவழியாக திருக்வல்லிக்கேணி ரயில் நிலையத்தை அடைந்தோம். இன்று பெரிதும் எதிர்பார்த்திருந்த இன்னொரு விசயம், சூரிய உதயம்.இதற்கு முன்பு கன்னியாகுமரி சென்ற போது சூரிய உதயம் காண காத்துக்கொண்டிருந்த போது மேக மூட்டம் காரணமாக காண முடியவில்லை. இன்றும் அதே தான் தான் நடந்தது. 15 கி.மீ நடத்தும் சூரிய தரிசனம் கிடைக்கவில்லை.

வியக்க வைக்கும் மெரினாவில் கவலைப்பட வைக்கும் இன்னொன்றும் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடம் தவிர மற்ற பகுதிகளை அங்குள்ளவர்கள் கடற்கரையை கழிப்பிட பகுதியாக மாற்றி வைத்துள்ளனர். கரையின் மேல் பகுதியில் மட்டுமல்லாது அலைகள் வந்து போகும் இடத்திலும் காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்தார்கள். அலைகள் அவற்றை சுத்தும் செய்துகொண்டிருந்தன. கடற்கரையின் வடக்கு பகுதி முதல் தென் பகுதி வரை இதே நிலை தான். எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இந்த கழிப்பிட வசதிக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டும் என்பதை அங்காங்கே தென்படும் காட்சிகள் அறிவுறுத்திக்கொண்டே உள்ளன.

Friday, September 1, 2023

கட்டப்பட்ட கைகள் - ராதா மனோகரன்

 




ஒரு 3 ஆண்டுகளுக்கு முன்னால் ஆசிரியர் என்ற சொல்லுக்கு, அந்தப் பதவிக்கு, அந்த மனிதருக்கு அவ்வளவு மரியாதை இருக்கும். ஊருக்குள் வாத்தியார் என்றால் தனி அந்தஸ்து. பெரும்பாலும் சைக்கிளில் தான் வருவார்கள். அவர்களை எங்கு பார்த்தாலும் வலது கை விரிந்துகொண்டு நெற்றியின் ஓரத்துக்கு சென்று விடும். உதடுகள் "குட் மானிங் சார் /டீச்சர் என்று ராகம் பாடும். இன்றைக்கும்  சில ஆசிரியர்களை நினைக்கும் பொழுது நன்றி உணர்வு தானாக வரும்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ராமசாமி வாத்தியார் என்பவர் எனது ஆங்கில ஆசிரியர்.வெள்ளை சட்டை, மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டி, கையில் ஒரு 3 அடி நீளக்குச்சி இவரது தோற்றம் கோபம் ,மகிழ்ச்சி எதையும் பிரித்துப் பார்க்க முடியாத உணர்ச்சி.அவர் நடையிலும்,பாடம் எடுக்கும் பாங்கிலும், மாணவர்களை அணுகும் பாணியிலும் ஒரு நேர்த்தி இருக்கும் முகத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும். இவர் மீது மாணவர்கள் அனைவருக்கும் மரியாதை கலந்த பயம் இருக்கும்.

இவரின் அணுகுமுறை love and law ....

வகுப்பில் ஒரு மாணவன் தூங்கிக் கொண்டிருந்தால் அட்டெண்டரை அழைத்து சொந்த காசில் டீ வாங்கி வரச் சொல்லி, மெதுவாக அவன்  அருகில் சென்று மென்மையாக எழுப்பி" தம்பி போய் முகம் கழுவி விட்டு இந்த டீயை வெளியில் அமர்ந்து குடித்து விட்டு  வகுப்புக்கு வா " என்பார்.ஒரு நாளும் திட்ட மாட்டார். அதிலுள்ள சூட்சமமே ஒரு முறை டீ குடித்தவன் அடுத்த முறை மிக மிக கவனமுடன் அவரது வகுப்பில் இருப்பான் என்பதே.  அதே ஆசிரியர் வீட்டுப் பாடம் செய்ய வில்லை என்றால் உள்ளங்கையைத் திருப்பி நடு விரலை வளைத்து மணிக்கட்டில் முட்ட வைப்பார்.  பார்ப்பவர்கள் விரல் ஒடிந்து கையோடு வந்துவிடும் என நினைக்கும் அளவுக்கு அந்த மாணவன் அஷ்ட கோணலாக நெளிவதும் கெஞ்சுவதும்  என குரங்காட்டம் நடத்திக் கொண்டிருப்பான். அதை சர்வ சாதாரணமாக நடத்துவார். அவரை விட்டு நகர்ந்து வந்து கையை உதறி உதறி விரல் இன்னும் தொடுத்துக் கொண்டுதான் இருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். (அதன் பின்னர் நாம் எவ்வளவு முயற்சித்தாலும் அந்த விரல் நுனி மணிக்கட்டைத் தொடாது)  அன்றிலிருந்து முதல் வீட்டுப் பாடமாக ஆங்கில புத்தகம் பையிலிருந்து தெரித்துக் கொண்டு வெளியே  வரும்.

அந்தக் கையில் இருக்கும் தடி ஒழுக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப் படும். ஒழுக்கம் தவறினால்  மண்டியிட்டு கைகள் இரண்டையும் பின்னால் முறுக்கி தடியால் உள்ளங்கால்களில் வெளுத்து வாங்குவார்.

கனிவும் கண்டிப்பும் நிறைந்த ஆசிரியர்.

அவர் அடிப்பார் என்று பயந்து தன்னை சரிப்படுத்திக் கொண்ட மாணவர்கள் உண்டே தவிர அடித்தார் என்று வெறுத்தவர்கள் எனக்குத் தெரிந்து எவருமில்லை. அதை இரண்டு தருணங்களில் உணர்ந்தேன். ஒருமுறை அவர் நாய்க்கடி பட்டு மிகவும் சிரமப்பட்டு விடுப்பில் இருந்த பொழுது மதிய உணவு இடைவேளையில் (மாணவர்கள்) கூட்டம் கூட்டமாக அவரது வீட்டிற்கு ஓடிச் சென்று பார்த்து வருவோம்.

அவர் இறந்த செய்தியைக் கேட்டு திரண்ட மாணவர்களும் சிந்திய கண்ணீரும் சொல்லும் அவர் மாணவர்கள் மத்தியில் பிடித்த இடத்தை.

ஒரு முறை கூட கண்டிக்கப் பட்டவனின் பெற்றோர் பள்ளியில் வந்து கேள்வி கேட்ட ஞாபகம் எனக்கு இல்லை. கண்டிக்கப்பட்டவன் வீட்டில் சென்று சொல்ல மாட்டான் சொன்னால் அங்கும் கண்ணமோ காதோ பழுத்துவிடும். பள்ளிகளில் ஆசிரியர்களிடம் கூறப்பட்டதே கண் காதுகளை விட்டு விட்டு  அடி வெளுத்தெடுங்கள் என்பது தானே. ஒழுக்கமும், கட்டுப்பாடும் கற்றுத் தரப்பட்டது பள்ளிகளில் தானே...பாடம் கற்றுத்தரும் ஆசிரியருக்கு கண்டிக்கும் உரிமை ஏன் இல்லை?. அடித்துதான் திருத்த வேண்டும் என்று சொல்லவில்லை. கல்வி – கற்றல் அடித்துத் திணிக்கப் பட முடியாதது. அது மாணவனின் கற்றல் திறன், திறமை, ஆர்வம், கற்றல் சூழல் போன்ற பல காரணிகளை சார்ந்தது. அதை அணுகும் முறை அடித்தல் அல்ல. அனால் ஒழுக்கம் முழுக்க முழுக்க சிறு வயது முதல் உருவாக்கப் படுவதே. சிறு சிறு தவறுகள் செய்யும் பொழுது ஏன் கண்டிக்கக் கூடாது? . தவறுகள் எல்லை மீறும் போது ஏன் அடிக்கக் கூடாது? நான் தவறு செய்தாலும் கண்டிப்பதற்கு சட்டமும் என் பெற்றோரும் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பதை மாணவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். ஆசிரியரை மாணவனும் பெற்றோரும் மதித்து அவரைப் பார்த்து மாணவர்கள்பயந்த நிலை தலை கீழாக மாறி உள்ளது.    

என்று  ஆசிரியரின்  கையும்  வாயும்  கட்டப்பட்டதோ அன்றே ஒழுக்கம் என்ற முரட்டுக்காளை மூக் கனாங்கயிறை அவிழ்த்துக் கொண்டது. குட்டி யானைக்கு மதம் பிடித்துக் கொண்டது. ட்டம் ஒரு புறம் .....பெற்றோரின் உறுமல் மறுபுறம்...... சிறிய சிறிய தவறுகளைக் கூட கண்டிக்கும் சுதந்திரமும் தைரியமும்  தெய்வத்திற்கு முன்னால் வைக்கப் பட்ட குருவிற்கே இல்லை என்றால் அடுத்து வரும்  தெய்வம் வாயடைத்துதானே போகவேண்டும்....

ஆசிரியர்களின் கைகள் கட்டப் பட்டது மட்டுமே மாணவர்களின் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு காரணமா?


அடுத்த இதழில் தொடரும்.........


மனமே.... நலமா! - சுகன்யா

 




இன்றைய கால சூழலில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பரவலாகச் சொல்வது 'I feel depressed' (நான் மனச்சோர்வாக உணர்கிறேன்) என்பது கொரோனா காலத்திற்குப் பின் இதனைச் சொல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவே உணர முடிகின்றது. இதற்கான காரணம் என்னவாக இருப்பினும், எப்படி கையாள்வது, என்ன செய்ய வேண்டும் குறிப்பாக என்ன செய்தல் கூடாது எனும் புரிதல் முக்கியத் தேவையாக உள்ளது.

 
முதலில் இங்கு நடப்பவை என்ன என்பதை புரிந்து கொள்ள மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் துறை வல்லுனர்களும் என்ன சொல்கின்றனர் என்பதை பார்ப்போம். WHO எனப்படும் உலக சுகாதார அமைப்பு சமீப காலத்தில் மனச்சோர்வு எனும் நோய் உலக அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கின்றது. குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அனைத்து வயதினரும் இந்நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
பொது மக்களுக்கு இந்நோய் பற்றிய புரிதல் ஏற்படுவதில் பெரும் சிக்கல் தொடர்ந்து நிலவி வருகின்றது. அதற்கான காரணங்களில் ஒன்று எந்தக் கட்டத்தில் நாம் மருத்துவரை அணுக வேண்டும் என்ற புரிதலில் நிலவும் குழப்பமும் முக்கிய பங்கு வகிக்கின்றது. முன்பெல்லாம் ஒரு செயலைச் செய்யும் முன் ஒரு சவாலை சந்திக்க நேர்கையில் 'I feel tensed' (நான் படபடப்பாக உணர்கிறேன்) என்று சொல்வோம். இன்று இந்த வார்த்தையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக குறைத்துள்ளதோ என்று தோன்றுகிறது.
 
அதற்குக் காரணம் தற்போதைய காலத்தில் படபடப்பை உணர்பவர்களில் எண்ணிக்கை குறைத்துள்ளது என்பதல்ல. மாறாக நாம் வேறு உணர்வு நிலைகளுக்கு உண்டான சொற்களை மாற்றி பயன்படுத்த துவங்கியுள்ளோம். இதனை உணர்ந்து யாரும் செய்வதில்லை. நம்மைச்  சுற்றி உள்ளோர் பயன்படுத்தும் சொற்கள் நம்மையுமறியாமல் நம் அகராதியில் சேர்ந்து விடுகிறது. நாமும் 'I feel stressed' எனச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றோம். சிறிய அளவிலான படபடப்பு என்பது ஒரு செயலை சிறந்த முறையில் செய்து முடிக்க நமக்கு பெரும்பாலான நேரத்தில் உதவக் கூடியதே.
 
படபடப்பின் வீரியம் கூடுகையில் அது பதற்றமாக(anxiety) உருமாறுகிறது. பதறிய காரியம் சிதறும் என்பது இந்த நிலையில் ஏற்படக்கூடியது. மனதின் நிதானத்தில் சிறு தடுமாற்றம் ஏற்படும். உதாரணத்திற்கு தேர்வு காலத்தில் நன்றாக படித்திருந்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை சரியாகத் தெரிந்திருந்தும் அந்த கேள்விக்கு விடை முழுவதுமாக எழுதியிருக்க மாட்டோம் அல்லது விடை எழுதாமலே கோட்டை விட்டிருப்போம். இவை சிறிய அளவு பாதிப்பு என்றாலும் பதற்றத்தைக் குறைக்க / கையாள சில யுக்திகளை பயன்படுத்துவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். உதாரணமாக பரிட்சை அறைக்கு சில நிமிடங்கள் முன்பே செல்லுதல், தயாரிக்கும் முறையில் சில யுக்திகள் பின்பற்றுதல் போன்றவை.
 
இந்த பதற்றம் தன்னால் கையாள முடியாத நிலையை எட்டும் போது தான் பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. யுக்திகளையும் யோசனைகளையும் வழங்க ஒரு பயிற்றுனர் போதுமாக இருக்கும்அடடே இதை இப்படி கூட கையாண்டுவிடலாமா இது தெரியாமல் போச்சே என்ற மனநிலை ஏற்படுமளவு இருந்தால் சரியான வழிகாட்டுதல் மட்டுமே போதுமானதாக இருக்கும்.
 
இந்த நிலையில் வரக்கூடியதே நேரத்தை நிர்வகித்தல் மற்றும் முடிவு எடுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற பல. ஆனால் அடுத்த கட்டமாக நடுக்கம் ஏற்படுதல், மூச்சு விடுவதில் சிக்கல், தூக்கமின்மை, தொடர் பய உணர்வு, உணவின் அளவில் மாற்றம், செரிமானக் கோளாறு போன்ற இயல்பு வாழ்வை பாதிக்கும் எந்த தொந்தரவு ஏற்பட்டாலும் மருத்துவரை நாடுதல் அவசியம். இவை anxiety disorder எனும் மனப் பதட்ட நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். அவசியம் ஏற்படின் மாத்திரைகளோ அல்லது மனநல ஆலோசனையோ தகுந்த வல்லுனரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நம்மை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்.
 
பதட்டம் என்பதற்கும் பதட்ட நோய்என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. எளிதாக புரிந்துகொள்ள வேண்டுமெனில் எது ஒன்று உங்கள் இயல்பு வாழ்வை, அன்றாட செயல்பாடுகளை பாதிக்கிறதோ அப்பொழுது தகுந்த ஆலோசகரை அணுக வேண்டும்.
 
இயல்பான பதட்டம் அதிகரிக்கையில் போதிய திறன் நம்மிடையே இல்லாத பட்சத்தில் அது அழுத்தமாக உருவாகிறது. இதையே stress மனஅழுத்தம் என்கிறோம். தொடர்ந்து ஒருவர் இவ்வாறான அழுத்தத்தில் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
 
ஒருகட்டத்தில் மனஅழுத்தம்  என்பது உடல் சார்ந்த உபாதைகளாக மாற்றம் பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், அடிக்கடி கோபம் வருதல், தூக்கம், உணவு, பசி, செரிமானம், ரத்தத்தின் கூறுகளில் மாற்றம் தொடங்கி இருதய பாதிப்புவரை பல நோய்களுக்கு மூலக்காரணியாக இந்த மனஅழுத்தம் அமைந்து விடுகிறது.
 
சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, நிர்வகிக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி (stress management) போன்றவை வருமுன் காப்போம் என நமக்கு உதவி வருகிறது. இதில் வேடிக்கை என்னவெனில் இவை பற்றிய போதிய புரிதல் இன்றி சிறு குழந்தைகள் கூட 'I feel stressed' என சொல்வதை கேட்க முடிகிறது. பெரியவர்கள் சரியான உணர்வு நிலையை புரிந்து சரியான வார்த்தைகளை பயன்படுத்துவது வளரும் தலைமுறைக்கு புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும். அதே சமயம் அவர்கள் உலகினுள் சென்று அவர்களது மொழியை நாமும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுள்ளது.
 
இக்குழப்பங்களுக்கு இடையே இன்னொரு குழப்பம் மனக்குழப்பம் என்றால் என்ன? ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் conflict. எனக்கு ஒன்று வேண்டும் அதேசமயம் எனக்கான நியாயமான காரணமும் உண்டு அதை வேண்டாம் என்று சொல்ல. இவை மனப்போராட்டத்தை ஏற்படுத்துகிறது. இவற்றில் பல வகைகளும் உண்டு.
 
இப்போராட்டத்தின் விளைவாக நாம் முன் கூறிய எந்த படிநிலைக்கும் செல்லலாம். மனஅழுத்தம் ஏற்படலாம், பதட்டம், படபடப்பு என இம்மனப் போராட்டம் நம்மை இழுத்துச் செல்லும். இப்படி நிலைகளின் அதீத நிலையாக மனப்போராட்டமும் குழப்பமும் அதிகமாகும்போது ஏற்படுவதே மனச்சோர்வு (Depression).
 
மனச்சோர்வு என்பது நான் சோர்வாக (tired) உணர்கிறேன் என்பதல்ல. ஒருவரது மனம் மிகவும் பலகீனமடைந்து, தான் செய்ய வேண்டிய செயல்களை செய்ய முடியாமல், சில சமயங்களில் சிந்திக்கவும் முடியாமல் முட்டுச்சந்தில் முட்டி நிற்பது போன்ற நிர்கதியான நிலை. மனம் கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் நிற்பது.
 
வைட்டமின்-டி போன்ற சத்துக்குறைபாடு தொடங்கி உடலின் சில சுரப்பிகளின் அளவு, மூளையில் ஏற்படும் மாற்றம் என இதற்கான காரணிகள் பற்பல. இவைதான் என பொதுப்படுத்தி கூறிவிட முடியாது. உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மனநல மருத்துவர் ஆய்ந்து சொல்ல, அதற்கான மருத்துவத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
உடல் சார்ந்த காரணங்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தபின் மனநல ஆலோசகர் ஆலோசனைப்படி தெரபி எடுத்துக் கொள்ளலாம். இவை எதுவும் கடக்க முடியாதது அல்ல. ஆனால் இவற்றைப் புரிந்து கொள்ளாமல் காலமும் சூழலும் அனைத்தையும் மாற்றும் என்று காத்திருத்தல் நம்மை அடுத்த நிலைக்கு நகர விடாமல் தடுக்கும் என்பதையும் தாண்டி தற்கொலை எண்ணம் தொடங்கி பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.
 
மனச்சோர்வின் அளவு மற்றும் காரணத்தைப் பொறுத்து மாத்திரைகள் மட்டுமே ஒருவரை மீட்டெடுக்கலாம் அல்லது தொடர்ந்து ஏதேனும் பயிற்சி தேவைப்படலாம். எனவே ஒருவருக்கான வைத்திய முறையோ அல்லது மீள எடுத்துக் கொண்ட காலமோ பிறருக்கும் பொருந்தும் எனப் பொதுப்படுத்தி ஒரு மாத சிகிச்சை தேவை, மூன்று வாரங்கள் போதும் என்று எந்த வரையறைக்குள்ளும் வைத்து விடமுடியாது. பொதுவாக மருந்து ஒருவருக்கு சரியாக வேலை செய்யும் ஆனால் இன்னொருவருக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதுபோல, சகஜ நிலைக்கு திரும்புவதற்கான காலம் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.  
 
இக்காலகட்டத்தில் மனச்சோர்வு எனும் பிடியில் சிக்கியுள்ளவரை பாதுகாத்தலும்  தேவையான அரவணைப்பை வழங்கும் பொறுப்பும் அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கு உண்டு. Primary care giver என்று சொல்லப்படும் அந்நபரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சுற்றத்தினர் குறைந்தது அவர் தனக்கு முக்கியமான நபர் என்று நினைக்கும் நபர் அவருக்கு ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருத்தல் அவசியம். இவர் நம்மை புரிந்து கொண்டார் எனும் உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த சுற்றம் நான் வாழ்வதற்கு தகுந்த இடம் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தும். புரிந்து கொள்ளுதல் என்பது வேறு ஏற்றுக் கொள்ளுதல் என்பது வேறு. நாம் செய்யும் செயல்களை நமது சுபாவத்தை இயல்பை நம்மை நாமாக எந்த விதிகளுக்கும்  உட்படுத்தாமல் இவர் இதற்காக இப்படி செய்கிறார் நடந்து கொள்கிறார் என நமது இடத்திலிருந்து ஒருவர் சிந்திப்பது என்பது புரிந்து கொள்ளுதல். அதனை அவ்விதமே சரி என தனது கோட்பாடுகளுக்கும் பொருத்தி சரி தவறு என்ற ஆய்வுக்குள் உட்படுத்தினாலும் கருத்து வேறுபாடுகள் இன்றி ஒத்துக்கொள்ளுதல் ஏற்பது.
 
மனச்சோர்வில் இருப்பவரின் நிலையை சூழலை செயல்பாடுகளை எதிர்வினைகளை ஏற்க முடியாவிட்டாலும் அவரை புரிந்து கொண்டோம் என்ற உணர்வை முதன்மை நபர்கள் தர வேண்டும். அவர்களுக்கான தேவை சமாதானங்கள் அல்ல. நம்பிக்கை மட்டுமே. எல்லாம் சரியாகிவிடும், மாறிவிடும் என்பவை வெறும் சொற்களாக அவர்களை சென்று சேர்வது அவர்களுக்கு வெற்று சமாதானமாகத் தோன்றலாம். புரிந்துணர்வுடன் கூடிய ஊக்கம் நம்பிக்கையை நிச்சயம் விதைக்கும். ‘எந்த நேரமும் நான் ன்னோடு உடனிருக்கிறேன் நீ மீண்டு வா!’ என்பது தற்கொலை எண்ணம் இருப்பின் அதனை கையாள நிச்சயம் உதவும். நீ தனியாக இல்லை என்ற உணர்வை தொடர்ந்து நாம் அவருக்கு ஏற்படுத்த வேண்டும்.
 
சமீபமாக மனநலம் பற்றிய பேச்சு அதிகரித்திருப்பது ஆறுதலான செய்தி எனினும் இவை தொடர்ந்து பேசப்பட வேண்டியது முக்கியம். இந்தியாவில் சாலை விபத்தினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையைவிட தற்கொலையினால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் என்றால்  அதிர்ச்சியாக இருக்கக்கூடும். ஆம். 2021ல் சாலை விபத்தினால் ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை 1,55,622, கொரோனா இறப்பு எண்ணிக்கை 1,52,742. ஆனால் தற்கொலைகள் 1,64,033.
 
இந்த அதிக எண்ணிக்கைக்கு மனச்சோர்வு நோய் பெரும் பங்கு வகிக்கின்றது. இதனைப் பற்றிய புரிதலும் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவதும் மனசோர்வுக்கு ஆட்பட்டவரை கையாள உடனிருப்பவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியத் தேவையாக உள்ளது.
 
Key Words
Tension – படபடப்பு ; Anxiety - பதட்டம் ; Stress – மனஅழுத்தம்;  Conflict – மனக்குழப்பம்; Depression - மனச்சோர்வு

 

 Reference

https://www.who.int/news-room/fact-sheets/detail/depression

https://apps.who.int/iris/bitstream/handle/10665/254610/WHO-MSD-MER-2017.2-eng.pdf

https://main.mohfw.gov.in/sites/default/files/National%20Mental%20Health%20Survey%2C%202015-16%20-%20Mental%20Health%20Systems_0.pdf

https://ncrb.gov.in/sites/default/files/ADSI-2021/adsi2021_Chapter-1A-Traffic-Accidents.pdf

https://www.macrotrends.net/countries/IND/india/suicide-rate

https://www.worldometers.info/coronavirus/country/india/

  




கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...