Sunday, October 1, 2023

‘அம்மா ஒரு கதை சொல்வாயா?' ....விஜிரவி

 


                   


நண்பன் அர்ஜுனுடன் விளையாடிக் களைத்துப் போய் வீட்டிற்குள் நுழைந்த ராகுல் வாஷ்பேசினில் கைகளைக் கழுவிக் கொண்டு அப்பாவின் அறைக்குள் நுழைந்தான். அவனுக்கு முதுகு காட்டி நின்று கொண்டிருந்த அப்பா, திறந்து வைக்கப்பட்டிருந்த ட்ராலிக்குள்ளிருந்த பழைய செய்தித்தாளை எடுத்துவிட்டு புதிய செய்தித்தாளைப் பரப்பினார். கட்டிலின் மீது நேர்த்தியாக இஸ்திரி செய்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேண்ட்டுகள், ஷர்ட்டுகள்.... வண்ண வண்ண டைகள்....  

"ஊருக்கு போறீங்களாப்பா?" திரும்பிப் பார்த்த அப்பா புன்னகைத்து தலையை ஆட்டியபடியே அவன் உயரத்துக்கு குனிந்து மண்டியிட்டார்.  

"ஆமாடா செல்லம்.  மும்பை போறேன்". 

‘’ ஏம்பா திடீர்னு?’’ 

"அங்க எனக்கு கான்ஃபரன்ஸ் இருக்குடா கண்ணுஎன்றார் சிரித்த முகத்துடன். 

ராகுலின் முகம் வாடியது. அப்பாவின் கை வாஞ்சையுடன் அவன் கன்னம் தடவியது. ஒரு கணம் கண்களை உற்றுப் பார்த்தவர் அப்படியே நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். பின் எழுந்து நின்று அவனை வாரித் தூக்கிக்கொண்டு அறையின் மூலையில் கிடந்த சோபாவில் அமர்ந்தார். 

அப்பாவின் மீதிருந்து வீசிய மெல்லிய ஆஃப்டர் ஷேவ் லோஷனின் மணம் இதமாய் இருந்தது. அப்படியே தலையை பின்னுக்குத் தள்ளி அப்பாவின் வயிற்றில் சொகுசாக சாய்ந்து கொண்டான். 

"நீங்க ஊருக்குப் போயிட்டா இன்னைக்கு நைட் தூங்கும்போது எனக்கு யாரு கதை சொல்லுவா ....?" 

"அம்மா கிட்ட கதை கேளேன்" என்றார் அவன் தலைமுடியை வருடியபடி.  அந்த நினைப்பே அச்சம் தருவதாய் இருக்க,  "எத்தனை மணிக்குப்பா ஃப்ளைட்?" என்றான் பேச்சை மாற்றியபடி. 

"ஒன்பது மணிக்கு. இப்ப ஆறு மணியாகுதா?  இன்னும் அரை மணியில கிளம்பிடுவேன்". 

சட்டென்று மௌனமானான். 

"பாரு ராகுல்..... இன்னைக்கு வியாழன். நான் மண்டே காலையில இங்கே இருப்பேன். சரியா.....? நீ ஸ்கூலுக்குக்  கிளம்புறதுக்குள்ள வந்துடுவேன்". 

"நடுவுல எத்தனை நாள் அப்பா?’’  நான் விரல் விட்டு எண்ணினான். "ஐயோ மொத்தமா நாலு ராத்திரிப்பா. அதுவுமில்லாம நாளைக்கு ரம்ஜான். ஸ்கூல் லீவு. அப்புறம் சாட்டர்டே, சண்டே... மொத்தம் மூணு நாள் லீவுப்பா’’  அப்பா பதிலேதும் சொல்லாமல் முதுகில் தட்டிக் கொடுத்தார்.  

‘’அப்பா... எப்பயுமே சன்டே அன்னைக்கு  கார்ல லாங் டிரைவ் கூட்டிட்டுப போவீங்க... நீங்களும், நானும் சைக்கிளிங் போவோம். என்கூட செஸ் விளையாடுறது, பேட்மிண்டன் விளையாட்டு, எல்லாம் கட்" என்றான் சோகத்துடன். 

" டேக் இட் ஈஸி மை பாய்! அடுத்த வாரம் சனிக்கிழமை ஹாஸ்பிடலுக்கு லீவு போட்டுட்டு, உன்கூட வீக் எண்ட்ல ரெண்டு நாள் இருக்கப் போறேன். சரியா....? என்றதும் அப்பாவைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான். 

"ஓ.கே! நான் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சு பேக் பண்றேன். டைம் ஆகுது இல்ல...?" அப்பா அவனை கீழே இறக்கி விட்டார். அப்பாவின் உடைகளுக்கு ஏற்ற வண்ணத்தில் டைகளையும், சாக்ஸ் செட்டுகளும் எடுத்துத் தந்தான். 

உள்ளே வந்த அம்மா, ‘’இந்தாங்க பிரிண்ட் அவுட் எடுத்த ஏர் டிக்கெட். இது கான்ஃபரன்ஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்’’ என சில பேப்பர்களை நீட்டினாள்.  

"அப்பா, ஆதவனோட அப்பா டெய்லி ஈவினிங் அவனை பார்க் கூட்டிட்டுப் போறார்ப்பா.’’ 

"அவரு ஒரு காலேஜ் ப்ரஃபசஸர். பத்து டு அஞ்சு வேலை பார்த்தா போதும். சனி, ஞாயிறு லீவு. இங்கே அப்படியா...? உங்க அப்பா ஒரு ஃபேமஸ் சர்ஜன். நானும் ஒரு பல் டாக்டர். ரெண்டு பேரும் எப்பவும் பிஸி. ஆதவன் அம்மா வெறும் ஒரு ஹவுஸ் வைஃப். அவங்க குடும்பத்தோட நம்மள கம்பேர் பண்ணாத ராகுல்...’’ என்றாள் அம்மா சற்றே கோபத்துடன்.

‘’என்ன ஷைலு..... எட்டு வயசுப் பையன் கிட்டப் போயி இப்படிப் பேசிக்கிட்டு.... நாம என்னதான் டாக்டர்ஸா இருந்தாலும் இவனுக்கு அம்மா அப்பா. ஒவ்வொரு பிள்ளையும் பெற்றோர்  தன் கூட  கொஞ்ச நேரமாவது இருக்கணும், விளையாடணும்னு  எதிர்பார்க்கும். அது கரெக்ட் தானே..?’’ 

 ‘’ஐய்யையோ... .உங்க லெக்சரைக் கேட்க நேரமில்லை டியர். இட்ஸ் கெட்டிங் லேட். சீக்கிரம் ரெடியாகுங்க..’’ அம்மா அவசரப்படுத்த, ‘’உத்தரவு மேடம்’’ என அப்பா வலது கையை மடக்கி வயிற்றில் வைத்து குனிய, சிரிப்பு வந்தது அவனுக்கு. ‘’ஸோ ஸ்வீட் அப்பா... ஹாண்ட்சம் அண்ட் ஸ்மார்ட்’’ பெருமிதமாக இருந்தது.  

இரவு பத்து மணி. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் ராகுல். அறையின் மூலையில் மேஜை முன் அமர்ந்து லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார் அம்மா. அன்று மாலை நண்பர்களுடன் நன்றாக விளையாடியதில் உடம்பும் கால்களும் வலித்தன. அப்பா இருந்தால் அவர் மீது கால்களைப் போட்டுக்கொண்டு கழுத்தைக் கட்டிக்கொண்டு கதை கேட்டபடியே தூங்கலாம். கதை சொல்றதுல அப்பா பெஸ்ட்.  நிதானமா, பொறுமையா, அழகா சொல்லுவார். அம்மாவிடம் அது நடக்குமா.... 

 ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும்போது, அதாவது இரண்டு வருஷத்துக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்பா இதே போல ஒரு நாள் வெளியூர் கிளம்பி விட, இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். ‘எனக்குத் தான் கதை கேக்காம தூக்கம் வராதே. அம்மாவை கதை சொல்ல சொல்லலாமா?’ நினைத்தவுடன் கட்டிலை விட்டு குதித்து இறங்கி, வெளியே ஹாலுக்கு ஓடினான். டி.வியில் வெப் சீரிஸில் ஆழ்ந்திருந்த அம்மாவிடம் நெருங்கி அமர்ந்து, ‘’அம்மா’’ என்று கொஞ்சியபடியே, ஆசையாய் கையைப் பிடித்தான். 

அம்மா முதலில் அவன் புறம் திரும்பவில்லை. இரண்டாவது முறையாக அழைத்ததும், ‘’ என்னடா?’’ என்றாள் சற்றே புருவச் சுளிப்புடன். 

‘’ ஒரு கதை சொல்லுங்கம்மா’’ 

எழுந்து அலமாரியைத் திறந்து நிறைய படங்கள் போட்ட காமிக்ஸ் புத்தகங்கள் இரண்டை எடுத்துக் கொடுத்து ‘’இந்தா, நீயே படிச்சுக்க. கதை சொல்ற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை’’ என்றாள்.  

ஏமாற்றத்துடன் அவற்றை வாங்கி ஆர்வமின்றி புரட்டினான். பத்தே நிமிடங்களில் அலுப்புத் தட்ட புத்தகங்களை சோபாவின் மீது எறிந்து விட்டு மீண்டும் அம்மாவை அணுகினான். 

‘’அம்மா, நீங்களே ஒரு கதை சொல்லுங்க.’’ என முகவாயைப் பிடித்து கொஞ்சியவனின் கையைத் தட்டிவிட்டாள். ‘’அட! என்னடா நீ! சீரிஸ் பார்க்க விடாமல் தொந்தரவு பண்ணிக்கிட்டு..... கதையெல்லாம் ஒண்ணும் கிடையாது. போய்த் தூங்கு முதல்ல. நல்லா பழக்கி வெச்சிருக்காரு உங்கப்பா...’’ என கோபமாக அதட்டியதும் அழுது கொண்டே தூங்கிப் போனான். அதன் பின் அம்மாவிடம் மறந்தும் கூட கதை சொல்லச் சொல்லிக் கேட்டதில்லை. 

அந்த சம்பவம் இப்போது நினைவிற்கு வந்து ‘’இன்னும் மூணு நாளைக்கு இதே போல கதை கேட்காமலேயே தூங்க வேண்டியது தானா....? ஏக்கத்துடன் விசும்பிக் கொண்டே குப்புறப்படுத்தான். 

‘’ராகுல் கண்ணு.. எந்திரிப்பா..’’ மென்மையான கன்னங்களில் சொரசொரத்த கைகள் வருட, எரிச்சலுடன் கண்களைத் திறந்தான். எதிரில் வேலைக்கார ஆயா!

‘’மணி பத்தாகப் போகுது. எந்திரிச்சு பல்லு விளக்கிட்டு டிபனை சாப்பிடுப்பா... அம்மா இன்னும் செத்த நேரத்தில போனைப் போட்டு கேப்பாங்க.... இன்னும் எம்புள்ளைக்கு சாப்பாடு குடுக்காம என்ன பண்றேன்னு கோவிச்சுக்குவாங்க தம்பி....’’ 

சட்டென எழுந்து அமர்ந்தான் ராகுல். பாவம் ஆயா, என்னால் திட்டு வாங்க வேண்டாம். வேகமாய் குளித்து, சாப்பிட்டு விட்டு விளையாடலாம் என்று நினைக்கும் போதே யாருடன் விளையாடுவது? என்ற கேள்வி தோன்றியது. ஃபிரண்ட்ஸ் எல்லோரும் மூணு நாள் லீவை என்ஜாய் பண்ண ஊருக்குப் போயிருக்கிறாங்களே என்று நினைக்கையிலேயே மனம் சோர்ந்தது. 

அன்று மாலை வரை எதுவும் செய்யப் பிடிக்காமல் சும்மா தோட்டத்தை சுற்றி வந்தான். கொஞ்ச நேரம் டிவி பார்த்தான். ‘’ சே.. எனக்கு ஒரு தம்பியோ தங்கையோ  இருந்தா நல்லா இருந்திருக்கும்’’. அம்மாவிடம் ஒரு நாள் கேட்டதற்கு, ‘’போடா... உன்னை வளர்க்கவே படு சிரமமாக  இருக்கு. இதில இன்னொன்னு வேறயா...?’’ என்று எரிச்சலோடு சொன்னது ஞாபகம் வந்தது. 

இரவு ஏழு மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து களைத்துப் போன முகத்துடன் வந்தாள் அம்மா. ‘’நிறைய பேஷண்ட்டுகளை பார்த்திருப்பாங்க போல. அவங்க சொத்தைப் பல்லை டெஸ்ட் செய்து, கிளீன் பண்ணி... ‘’உவ்வே, வாயிலிருந்து நாத்தம் வருமே... பாவம், கஷ்டமான வேலை தான்’’ அம்மாவின் மேல் பரிதாபம் எழுந்தது.

தன் அருகில் செல்போனை வைத்து வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டு அம்மா சாப்பிட, ராகுல் ஒற்றை சப்பாத்தியுடன் எழுந்து விட்டான். டிராயிங் நோட்டை எடுத்து வண்ணம் தீட்ட ஆரம்பித்தான். 

நான்காம் பக்கத்தில் இருந்த ஒரு நாய்க்குட்டியின் படம் அவனைக் கவர்ந்தது. ‘’சே! எவ்வளவு அழகு! இந்த மாதிரி நாய்க்குட்டி நிஜத்தில இருந்தா, அது கூடவாவது விளையாடுவேன்’’ என்ற எண்ணம் தோன்ற, ஓடிப்போய் கப்போர்டைத் திறந்து அதிலிருந்து புசுபுசு உடலுடன் இருந்த ஒரு நாய்க்குட்டி பொம்மையை எடுத்தான். அதனுடன் விளையாடத் தொடங்கினான். 

சிறிது நேரம் கழித்து, ‘’ ராகுல் கண்ணா, போய்த் தூங்கு. மணி பத்தாச்சு பாரு’’ அம்மா குரல் கொடுக்க, படுக்கையில் படுத்து, அந்த நாய் பொம்மையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். 

‘’ராகுல் செல்லம்,. எந்திரி’ 

’இது என்ன?’’  முகத்தை தடவிய ஆயாவின் கைகள் சொரசொரப்பாக இல்லாமல் மெத்தென்று இவ்வளவு சாஃப்ட்டா இருக்கு? மெல்லிய நறுமணம்  மூக்கை வருட, கண்களைத் திறந்தான். 

‘’அட!’’ எதிரில் நிற்கும் உருவம் பளிச்சென்று தெரிந்தாலும், மீண்டும் கண்களை சுருக்கி பார்க்க, முகமெல்லாம் சிரிப்பாக அம்மா. 

‘’ குட்மார்னிங் ராகுல். பிரஷ் பண்ணிட்டு அப்படியே குளிச்சிட்டு வா. நாம இப்ப வெளில கிளம்பறோம்’’ 

ஆர்வம் தொற்றிக் கொள்ள, ‘’எங்கேம்மா?’’ அவசரமாக எழுந்து அமர்ந்தான். 

‘’அது சர்ப்ரைஸ். நீ க்விக்கா ரெடியாகு’’ 

பாத்ரூமை நோக்கி குதித்தோடி, பத்தே நிமிடங்களில் குளித்து, அதைவிட விரைவாக டிபனை சாப்பிட்டு, ஸ்கூட்டியில் அம்மாவின் இடுப்பைக் கட்டிக்கொண்டு போகையில், ‘’ ஊ, ஜாலி, ஜாலி’’ உற்சாகத்தில் திளைத்தது அவன் மனது. 

சில நிமிடங்களில் வண்டி ஒரு கடையின் முன் நின்றது. ‘’அட, இது பெட் ஷாப் இல்லை? இங்க எதுக்கு அம்மா கூட்டிட்டு வந்தாங்கனு தெரியலையே’ என வியந்தவனை’, ‘’இதைப் பாரு, இதை வாங்கலாமா ?’’ அம்மா சுட்டிக்காட்டிய போது இன்னும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான்.   

’’வாவ்! ஃபண்டாஸ்டிக்!’’ வெண்ணிலா ஐஸ்கிரீம் கலரில் புசு புசுவென வெள்ளைப் பந்து போல அழகான பாமரேனியன் நாய்க்குட்டி. 

சிறிய மூங்கில் கூடையில் வைத்து அதை வீட்டுக்கு கொண்டுவந்த போது வானத்தில் மிதப்பது போல இருந்தது. பட்டன் கண்களுடன், குட்டி வாலுடன், மெத்து மெத்தென்று  மென்மையாக, சின்னக் குரலில் மெலிதாய் குரைத்தபடி அவனுடன் விளையாட ஆரம்பித்து விட்டான் அந்த புது ஃப்ரெண்ட் ‘மிட்டு’. அவன் போகுமிடமெல்லாம் பின்னாலேயே வர, குஷியாகிவிட்டது ராகுலுக்கு.  

இரவு தூக்கம் வரும் வரை அதனுடன் விளையாடி விட்டு, கட்டில் காலடியில் மிட்டுவை ஒரு கார்ப்பெட்டில் படுக்க வைத்தான். பெட்டில் படுத்து, போர்வையை கழுத்து வரை போர்த்திக்கொண்டு, கண்களை மூடினான்.

மெத்தென்ற கைகள், தன் மேல் பட கண்ணைத் திறந்தான். படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து. அவன் கால்களை எடுத்து தன் மடி மீது போட்டுக் கொண்டு, ‘’மிட்டுவோட விளையாடினது அசதியா இருக்கும்ல.” என்றபடி கால்களை இதமாக பிடித்து விட ஆரம்பித்தாள் அம்மா. ‘’ நான் ஒரு கதை சொல்லட்டா?’’

 நம்பமுடியாமல் சட்டென எழுந்து அமர்ந்தான் ராகுல்.’’ நிஜமாவாம்மா?’’

 ‘’ ஆமா. படுத்துக்கோ’’ மென்சிரிப்புடன் கதை சொல்ல ஆரம்பிக்க, அவனுக்கு ஒரே ஆனந்தம். ஒரு மந்திரவாதிக் கதையை சொல்லி முடித்த அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டான். ‘’தேங்க்யூமா.... தேங்க்யூ’’ என்ற போது குரல் தழுதழுத்தது. 

  ‘’ நான் சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்ல வளர்ந்தேன். ஆனா உன் அப்பா  கூட்டுக்குடும்பத்தில தாத்தா, பாட்டி கிட்ட  நிறைய கதைகள் கேட்டு வளர்ந்தார். அவரளவுக்கு எனக்கு கதை சொல்லத் தெரியல. ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி சொல்லி இருக்கேன். நீ நிம்மதியா தூங்கு’’ இதமாக முதுகைத் தட்டித் தர சில வினாடிகளில் உறங்கிப்போனான் ராகுல்

 ‘’ என் அம்மா இறந்து, அப்பா இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டார், நாலு வயசுல என்னை ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. எனக்கு இது வரை யாரும் கதை சொன்னதில்லை. எப்பவும் அழுதுக்கிட்டே பொம்மையைக் கட்டிப்பிடிச்சிட்டுத் தான் தூங்குவேன். உன் அப்பா ஊருக்குப் போனதிலிருந்து உன் முகமே சரியில்லை ராகுல். ஒரே ஏக்கமா, பார்க்கவே பாவமாக இருந்தது. நேத்து நைட் நீ அந்த நாய் பொம்மையைக் கட்டிப்பிடிச்சுகிட்டு தூக்கத்துல, அப்பா, எனக்கு கதை சொல்ல யாருமில்லை.  அப்படீன்னு புலம்பிக்கிட்டு இருந்தே. அதைக் கேட்டதும் என் சின்ன வயசு நியாபகம் வந்தது. அப்பத்தான் எனக்கு உன் ஃபீலிங்க்ஸ் புரிஞ்சது கண்ணா’’ தூங்கும் மகனைப் பார்த்தவாறு மனதிற்குள் பேசிக்கொண்ட அம்மாவின் கன்னங்களில் வழிந்தது சூடான கண்ணீர்.

 

                    

 


மனங்கொத்திகள்.... யசோதா பழனிச்சாமி, ஈரோடு

 



கனகா காலையில் கண் விழித்தவுடன் தலைமாட்டில் இருந்த செல்போனை அழுத்தி மணியைப் பார்த்தாள். விடியற்காலை நாலு மணி.. 'அட, அதுக்குள்ள நாலாயிடுச்சா' என முனகியபடியே குளிருக்குப் போர்த்தியிருந்த போர்வையை உதறி தள்ளிவிட்டு அரக்க பரக்க எழுந்தாள். எழுந்ததும் பேஸ்ட்டை எடுத்து பிரஷில் வழிய தடவி வாயில் வைத்துக் கொண்டே அடுக்களைக்குள் புகுந்தாள். பாத்திரத்தை எடுத்து காபிக்கு தண்ணி ஊற்றி வைத்து விட்டு வாய்கொப்பளிக்கச் சென்றவள் முகம் கழுவி, காலைக் கடன் முடித்து வரும் போது தான், தண்ணிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்த நினைவே வந்தது. 'அச்சச்சோ' என ஓடினாள். நல்லவேளை பாத்திரம் அடிப்பிடிக்கலைனு நினைச்சுட்டே மீண்டும் தண்ணீர் ஊற்றி வைத்து காபித்தூள் இரண்டு ஸ்பூன் கொட்டி விட்டு அடுப்பை நிறுத்தினாள்.

'ஏய், என்ன செய்யற? இன்னுமா கிளம்பல.? காலையில நாலு மணிக்கு கிளம்பிடலானு நேத்து படுக்கறப்பவே சொல்லியிருந்தனல்ல, நீ என்னடானா இப்பத்தான் ஆடி அசைஞ்சு எந்திரிச்சு வர்ற. மணி நாலரை ஆயிடுச்சு தெரியுமா? அங்க சந்தையில உங்கப்பனா கடையை வச்சுட்டு உட்காந்து இருக்கான். போனதும் நாலு காயை எடுத்துப் போட்டு வாங்கிட்டு வரதுக்கு. ஒவ்வொருத்தருகிட்டேயும் ஒரு விலை விக்கும். எங்க கம்மியா இருக்குனு விலையைக் கேட்டு விசாரிச்சு, நல்லதா நாலு காய்களைப் பார்த்து வாங்கறதுக்குள்ள நாலு வரிசை கட்டி நிக்கறாங்க. நாம கடைசியில போனா நல்ல காய்களா எப்படி வாங்கறது?' என அவன் கத்திக் கொண்டு இருந்ததை அவள் காதில் ஏற்றுக் கொள்ளாமல், அவனுக்கு முன் சென்று காபி டம்ளரை நீட்டினாள். அவன் அவளை முறைத்துக் கொண்டே காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தான். அந்த பனிக் குளிரின் வெடவெடப்பில் அவனுக்கு காபி தேவையாகவும் இருந்தது. ஆனால் அதை ஒத்துக் கொள்ள மனமில்லை.

கனகா ஒரு ஸ்வெட்டர் ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பினாள். வயசுக்கு வந்த புள்ளைங்க இரண்டும், ஒன்னு மேல் ஒன்னு காலைப் போட்டுட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. காலமிருக்கிற நிலையில அவர்களைத் தினமும் தனியாக விட்டுட்டு சந்தைக்குப் போக பயம் அதிகரித்ததால், லைன் வீடாக இருந்தால் பாதுகாப்பாக இருக்குமென்று தேடிப் பிடித்து இந்த வீட்டுக்குப் போன மாசம் தான் குடிவந்து சேர்ந்தார்கள். இப்பெல்லாம் குறைவான வாடகைக்கு வீடும் கிடையாது. வீட்டு வாடகை, கடை வாடகைனு, மாசம் பத்தாயிரம் போயிடுது. இதுல வியாபரத்துக்கும் பணம் வேணும். பணப் பற்றாக்குறையை சமாளிக்க கந்துக்கு வாங்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. 

'ஏய், என்னடி இன்னும் யோசனை வண்டியில ஏறுடி', அவனின் சத்தம் காதையடைக்க, இரண்டு மூணு சாக்குப் பையை எடுத்து அவசரமாக அள்ளிப் போட்டு, வண்டியில் ஏறி பின் சீட்டில் குருவிக் குஞ்சாட்டாம் குறுக்கி உட்கார்ந்து கொண்டாள். 

ஊருக்கு போறது, சினிமாவுக்கு போறது என எந்த சுற்றலும் கிடையாது. இந்த சந்தைக்கு போறது தான் பிக்னிக். வாரச்சந்தைக்கு போய் கடைபரப்பி விக்கறது தான் பிக்னிக் ஸ்பாட் என அவள் வாழ்க்கை ஒரு வட்டத்துக்குளேயே சுழன்றது. ஏழையாக பொறந்தாலும் சில பேர் தங்கள் வாழ்க்கையை கடன உடன வாங்கியாவது கொண்டாடித் தீர்க்கிறாங்க. அதுக்கெல்லாம் நமக்கெங்க கொடுப்பினை இருக்கு! தொழில் அமையறதைப் பொருத்து தான் வாழ்க்கையும் அமையும். ஒரு நாளைக்கு காலைல ஆறு மணி வரைக்கும் தூங்கி எந்திரிக்கக் கூட கொடுப்பனை இல்ல. ஆனாலும், சொந்தமா ஒரு தொழிலை உருட்டிட்டி ஓடறதில ஒரு நிறைவு அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

சந்தையில் கொண்டு போய் வண்டியை நிறுத்தி இறங்கியதும், இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் பையை எடுத்துட்டு ஓட்டமாக சென்று ஒவ்வொரு காய்கறிகளை தேடி, விலை விசாரித்து வாங்கி, அள்ளிப் போட்டு பையை நிரப்பிக் கொண்டு இருந்தார்கள். பெண்கள் கூட்டம் குறைவா இருக்கிற இடத்தில் கனகாவை கூப்பிட்டு, நிற்க வைத்தான்.

காய்களை வாங்கி வந்து ஒரு பக்கமாக குவித்து எடுத்து வைத்தார்கள். அந்த காய்களை கடைக்கு எடுத்துச் செல்ல, ஒரு வேனை வாடகைக்கு பேசி வைத்திருக்கிறான். அந்த வேன் அங்கிருந்த காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்து, கடைக்கு முன்னால் இறக்கிப் போடும்.

'ஏய்..கனகா இன்னுமா வாங்கற சீக்கிரமா வந்து தொலைடி வேனுக்காரன் சத்தம் போடறான்' என்ற அவன் குரலைக் கேட்டதும் கனகா வேகமாக காய் மூட்டைகளை எடுத்து வந்தாள். வரும் போதே 'ஏங்க, இந்த வெங்காய மூட்டையை மட்டும் மண்டியிலிருந்து எடுத்துப் போட்டு, சாயங்காலத் சந்தை கூடற இடத்துல கொண்டு போயி இறக்கச் சொல்லிடுங்க. இல்லைனா சாயங்காலம் ஒருக்கா வாடகை கொடுக்கணும்.' என அவள் சொல்லும் ஆலோசனையை அவன் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. 

காய்கறிகளை வேனில் ஏற்றி விட்ட கையோட, கடையைத் திறக்க வேகமா கிளம்பினார்கள். கொஞ்சம் நேரமாயிடுச்சுனாலும் காய் வாங்க வரவங்க பக்கத்துக் கடைக்கு வாங்கப் போயிடுவாங்க. தெருவுக்கு ஒன்னா இருந்த காய்கறி கடை, இந்த கொரனாவுக்கு பிறகு தெருவுக்கு நாலஞ்சா, பெருகிடுச்சு. அதனால போட்டியும் அதிகமா இருக்கு. 

'ஏங்க வாங்க ஒரு காபியை குடிச்சுட்டு போலாம்" என கனகா கூப்பிட்டாள்.

"ஏய் மணி என்னாச்சு? ஆறரை தெரியுமா? டீ காபிக்கெல்லாம் நிக்க நேரமில்லை. வா, வந்து வண்டியில ஏறு" என நின்றவனை முறைத்தபடியே ஏறினாள். சிறிது தூரம் சென்றதும் அங்கே ஒரு கடையில் நிறுத்தி பீடியை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு கிளம்பினான்.

கனகாவுக்கு பீடி நாற்றமும், எரிச்சலும் ஒரு சேர எழுந்தது. 'ச்சே என்ன மனுசன். அவனுக்கு வேணுனா வண்டியை நிறுத்தி பீடி வாங்கி குடிக்கலாம் நேரமாகாது. ஆனா நமக்கு ஒரு காபி குடிக்க நேரமாச்சுங்கறான். மீறிக் கேட்டா, காலங்கார்த்தால ரெண்டு பேருக்கும் சண்டை வரும். கடையைத் திறக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னால சண்ட போடணுமா' என யோசித்த கனகா அந்த வயிற்றெரிச்சலையே, காபியா நினைச்சு விழுங்கிக் கொண்டாள்.

எத்தனை தான் இந்த ஆளுக்கு நிகரா வேலை செஞ்சாலும், ஒரு நாள் கூட தன் உணர்வுக்கு மதிப்பு அளிக்காத புருஷனைக் காணும் போதெல்லாம் கனகாவுக்கு வயிற்றெரிச்சல் தான் அதிகமாகும். தொலைக்காட்சி நாடகத்தில் வரும் கணவன்கள் எல்லாம் அவங்க பொண்டாட்டிகளை கொஞ்சறதையும், அவங்க தேவை அறிஞ்சு வேலை செஞ்சு கொடுக்கறதையும் பார்க்கும் போது தன் மன ஓட்டத்தை அதனுள் பொருத்தி இப்படி ஒரு புருஷன் இருந்திருக்கலாம் என ஆதங்கப்படுவதைத் தவிர அவளுக்கு வேறு ஏதும் செய்யத் தெரியவில்லை.

கடையில் கொண்டு வந்து வண்டியை நிறுத்தியதும் தன் மன ஓட்டத்தை நிறுத்தி விட்டு, கடையைப் பரப்ப ஆரம்பித்தாள்.

அவளுடைய புருஷன், இன்னும் ஒரு நடை இருக்கு நான் போயி எடுத்துட்டு வந்துடறேன்' என வேகமாகக் கிளம்பினான். "அது தான் வேன்காரங்கிட்ட எல்லாத்தையும் எடுத்துப் போட்டாச்சே. இன்னும் அங்கே என்ன இருக்கு" என்றாள்.

"வெங்காய மூட்டை மண்டியில கிடக்குதே அதாரு உங்கப்பானா எடுத்தாருவான். ஒழுங்கா கடையை எடுத்து வை வந்துடறேன்." எனக் கிளம்பினான். 'அந்த வெங்காயத்துக்கு அவ்வளவு ஒன்றும் அவசரம் கிடையாது. அது சாயங்கால சந்தைக்கு தான் வேணும். அதை அப்பவே வேனில எடுத்துப் போடச் சொல்லியும் அவன் எடுத்துப் போடல. இப்ப கனகா ஒருத்தியும், சாமானத்தை எடுத்து வச்சு வியாபாரத்தையும் கவனிக்கணும். ஒரு நொடி கவனத்த சிதற விட்டால், காசு வாங்கறதில கவனம் சிதறிப் போயிடும். இதுல வயிறு வேற எனக்கு திங்க ஏதாவது கொடுனு கத்திட்டே இருந்தது. காலையில நாலு மணிக்கு குடிச்ச காபி, கொஞ்சமாவது இந்தாளுக்கு என்னட மேல ஒரு கரிசனம் இருக்கா' என உள்ளுக்குள் குமறினாள்.

கடையில் வியாபரத்தை கவனித்துக் கொண்டிருந்ததில் அனைத்தும் மறந்து போனாள். வெங்காய மூட்டையை ஏற்றிட்டு வந்து நிறுத்தியவனிடம், 'மூட்டையை இறக்கிட்டு, ஒரு காபி வாங்கிட்டு வா' என கனகா சொன்னதும், 'உனக்கென்னடி வந்ததும் வராததுமா காபிக்குத் தான் அவசரமா' என அவன் கத்தியதை கேட்டவளின் கண்களில் கண்ணீர் திரண்டது. அவள் எதுவும் பேசாமல் வெற்றுப் பார்வையில் நின்றிருந்தாள்.  

சற்று நேரம் கழித்து மெதுவாக காபி வந்து சேர்ந்த போது, அவளுக்கு பசியே மறந்து போயிருந்தது. கோபத்தில் அவள் காலைச் சுற்றிக் கத்திக் கொண்டிருந்த பூனைக் குட்டிக்கு காபியை எடுத்து ஊற்றினாள். அதைப் பார்த்ததும் அவள் புருஷன் 'அடி கேணச் சிறுக்கி' என கோபமாக கையோங்கி கொண்டு அடிக்கச் சென்றான்.

அப்போது, அங்கே கந்துக்காரர் பைக்கில் வந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். உடனே கையை இறக்கி விட்டு குலைய ஆரம்பித்தான். "யேய், கனகு கந்துக்காரர் வறாரு. கடை வாடகை கொடுக்கப் பணம் பத்தாது, அதனால், அவருகிட்ட சொல்லி, இன்னும் கொஞ்சம் பணத்தைக் கேட்டு வாங்கு" என அவளிடம் வழிந்து கொண்டிருந்தவனை புழுவைப் போல் அற்பமாகப் பார்த்தாள். அவளின் பார்வையில் தெரிந்த வீச்சத்தை தாங்கயிலாது அவன் தலை குனிந்தான்.

அவள் வளர்க்கும் பூனை, கனகாவை உரசியபடி அந்த காபியைக் குடிக்காமலே கடந்தது.



நினைவெனும் பொக்கிஷம் - கோடீஸ்வரன்

 



சில ஆசைகளுக்கு ஆயுள் கிடையாது; வயது வித்தியாசம் கிடையாது; அப்படி ஒரு ஆசை தான் கோவா. அதிலும் குறிப்பாக சாலைப் பயணம். என் வாழ்க்கையில் நான் நடக்கும் என்று நினைத்திடாத, எதிர்பார்த்திடாத, ஆனால் மனதளவில் பல முறை மேற்கொண்ட ஒரு பயணம். அது நிகழ்ந்த காலமும் சூழலும் மிக முக்கியமானது. அவசியமானது.

Katheyondu Shuruvagide எனும் இயல்பும், யதார்த்தமும், காதலும் கொண்ட கன்னடப்படம். அந்த படத்தின் மீதான ஈர்ப்பு அது படமாக்கப்பட்ட கர்நாடக கடற்கரையின் ரம்மியத்தில் இருந்தது. அந்த படத்தை பற்றிய நினைவுகள் அந்த கடற்கரையிலேயே நிகழ்ந்தது. கால ஓட்டத்தில் மங்கிய அந்த உணர்வு, சில காலம் கழித்து (dia) எனும் மற்றொரு கன்னடப்படத்தை பார்க்கும் பொழுது மீண்டும் கிளர்ந்தது. இம்முறை அது ஆர்வமாக பரிணாமம் பெற்றது. கடற்கரை நகரான கார்வாரின் புறநகர் பகுதியை ரசனைக்குரிய வகையில் பதிவு செய்திருந்தனர். மேலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் இந்தியாவின் மிக அழகிய ரயில் நிலையங்களில் ஒன்று கார்வார் எனவும், தனித்துவமிக்க கடற்கரை மரவந்தே (Maravante-Tresi Beach) எனும் செய்திகளையும் காணொளிகளையும் கண்ட பொழுது, தென்னிந்தியாவில் சுற்றுலா என்றால் கேரளா மட்டுமே நினைவுக்கு வந்தது மாறி கர்நாடக கடற்கரைகள் மனதில் நிழலாடத் துவங்கி இருந்தது.இந்நிலையில் அர்ஜுன் ரெட்டியில் படமாக்கப்பட்ட மங்களூரின் பசுமையும் கடற்கரையின் அழகியலும், மங்களூரில் துவங்கி கார்வாரில் முடியும் கர்நாடக கடற்கறைகளை பற்றிய பேரார்வத்தையும் ஆச்சர்யத்தையும் நீடித்துவிட்டிருந்தது. மங்களூரு முதல் கார்வாரை தொட்டு அடுத்து இருந்த கோவா வரையிலான முழுமையான கர்நாடக கடற்கரை பயணம் எத்தகையதாக இருக்கும் என்ற ஆசைக்கும் கற்பனைக்கும் இடையில், அதற்கான அற்ப சாத்தியங்களால், அது நிகழும் என்ற நம்பிக்கையோ நிகழ்வோ தேவை இன்றி, அந்த கற்பனையே போதுமானதாக இருந்தது. 

இந்நிலையில் கடந்த ஜனவரியில் கோவா அரசு சமூக நல மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இந்தியாவில் முதன்முறையாக purple fest என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கோவா கடற்கரைகளையும், அங்குள்ள சாகச நிகழ்வுகளையும் மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. திடீரென வாய்த்த இந்த எதிர்பாராத சந்தர்ப்பத்தில் உள்ள அரிய வாய்ப்பு அந்த பயணத்திற்கான உந்துதலை அளித்தது. எனினும் யாருடன் பயணம் செய்வது என்ற கேள்வி அந்த வாய்ப்பை நீர்த்து போகச் செய்தது. நாளடைவில் அந்த ஆசையும் அது சார்ந்த உரையாடல்களும் மெதுவாக வடிவம் பெற்று சந்தர்ப்பமும் சூழலும் துணையும் வாய்க்கும் பட்சத்தில் தீபாவளி விடுமுறைக்கு செல்வது என்று மனதளவில் தீர்மானம் செய்திருந்தேன். ஆனால் சாதாரண ஒரு பயணமாக இன்றி, அந்த பயணத்தின் எந்தவொரு அனுபவத்தையும் இழந்து விடக்கூடாது என்பதன் பொருட்டும் ஆர்வத்தின் காரணமாகவும், அந்த பயணத்தில் காரை ஓட்டிச் செல்வதென்ற தீர்மானம் செய்து இருந்தேன். அதற்காக அவ்வப்போது வார இறுதி நாட்களில் நீண்ட பயணங்களை மேற் கொண்டு தயாராகி வந்தேன்.

இந்நிலையில், உடல்நிலையளவில் ஒரு பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. முதுகுத்தண்டு விபத்தால் ஏற்படக்கூடிய உணர்விழப்பு (sensory loss) காரணமாகவும், காயம், வலி போன்றவற்றை உணர முடியாததன் விளைவாகவும், திடீரென ஏற்பட்ட உடல்நலப் பின்னடைவின் காரணம் appendicitis என்பதை கண்டுபிடிக்கவே இரு வாரங்கள் ஆகிவிட்டிருந்தது. இந்த சிக்கலின் காரணமாக அறுவை சிகிச்சை, ஓய்வு என மேலும் இரு வாரங்கள் 4 சுவர்களுக்குள்ளேயே கடந்து விட்டது. விபத்திற்கான 8 வருட காலத்தில் எதிர்கொண்ட உடல்நிலை சார்ந்த மிகப் பெரிய சவால் இது. இது மிகப்பெரிய மன அழுத்தமும், சோர்வும் ஏற்படுத்தி இருந்தது. இவற்றுடன் வேலைப்பளுவும் சேர, இதுவரை கொஞ்சம் கொஞ்சமாக சேகரம் செய்த உற்சாகமும் பிடிப்பும் ஈடுபாடும் களைந்து, நாட்கள் வெறுமையாக நகரத் துவங்கின. 

இந்நிலையில் ஒரு வாரகால விடுமுறைக்கான சூழல் ஏற்பட்டது. ஒரு நீண்ட பயணத்திற்கான தேவையும், சூழலும் எதிர்பாராத விதமாக அமைந்ததை உணர்ந்தவுடன் மனம் விழித்துக் கொண்டது. வீடு திரும்பிய இரண்டாவது வாரத்தில் பயணம் என்பது ஓரத்தில் சிறு தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், சூழலையும் என் மனநிலையையும் உணர்ந்து, குடும்பத்தினர் ஊக்கமளித்தனர். அதனால் ஏற்பட்ட ஒரு அசட்டு தைரியத்தில் பயணம் மேற்கொள்வதென முடிவானது. ஈரோடு-மைசூரு-மங்களூரு- உடுப்பி-கோகர்னா-கார்வார்-கோவா-ஷிமோகா-பெங்களூரு-ஈரோடு வழித்தடத்தில் பலகட்டங்களாக பிரித்து மேற்கொள்வதென திட்டம். பயணத்தின் போது அன்றைய அஸ்தமனத்திற்கு முன் அடையும் நகரில் தங்குவதென முடிவு. அதன்படி முதல்நாள் மங்களூரு/உடுப்பியிலும், இரண்டாவது இரவு கோகர்னா/கார்வாரிலும், மூன்றாவது இரவில் கோவா அடைந்து, ஒரு நாள் ஓய்விற்கு பின், ஐந்தாவது இரவு சூழலை பொறுத்து ஷிமோகா/பெங்களூருவிலும் தங்குவதென உத்தேசித்திருந்தோம். 

பயணத்திற்கு முந்தைய நாள் இரவு காரின் ignition switch எச்சரிக்கை சமிக்ஞை வந்தது. உடன் வருவதாக இருந்தவர் கடைசி நேரத்தில் வர இயலவில்லை போன்ற எதிர்பாராத சூழல்கள். எதன் பொருட்டும், திட்டத்தில் சமரசமின்றி, வருவது வரட்டும் என பயணம் துவங்கியது. கடற்கரை சாலை பயணத்தை எதிர்பார்த்து மேற்கொண்ட பயணத்தில், எதிர்பாராத விதமாக மைசூருக்கும் மங்களூருக்கும் இடையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊடாக செல்லும் சாலையின் அழகியல் நீண்ட பயணத்தின் முதல் நாளுக்கு தேவையான உற்சாகத்தையும் அமைதியையும் மிக நிறைவாக அளித்தது. மலை, மழை, பசுமை, ஏகாந்தம் அனைத்தும் ஒரு முழுமையான பயணத்திற்கு தேவையான சரிவிகித அளவில் கலந்திருந்தது. குறிப்பாக வனப்பகுதியின் வாயிலில் தனித்து அந்த coffee shop அமைந்திருந்த சூழல் மிக ரம்மியமானது.

இந்த மகிழ்ச்சியின் முடிவில் வேறொரு சிக்கல் காத்திருந்தது. காலை 4:30 துவங்கி இரவு 7 வரை நீடித்த பயணத்தின் விளைவாகவும், உற்சாகத்தில் அவ்வப்போது இடையில் உடலுக்கு கொடுக்க வேண்டிய ஓய்வை கொடுக்க மறந்து, தொடர்ந்து ஓட்ட வந்ததாலும், pressure sore சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. இதற்கு மேல் கார் ஓட்ட இயலாது. பயணத்தை படுத்த நிலையில் தான் தொடர முடியும். ஒரு சிக்கலில் இருந்து மீண்டு அடுத்த ஒன்றில் சிக்கி விட்ட உணர்வு தந்த தடுமாற்றம். பயணத்தை கைவிடலாமா தொடரலாமா என்ற போராட்டம். கோழிக்கோடு வழியாக திரும்பி விடலாம் என்று அரை மனதாக முடிவானது. கிளம்ப வேண்டிய நேரம் வந்தது. உடன் வந்தவர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறேன் என்ற நினைவு எழ, மீண்டும் ஒரு அசட்டு தைரியத்துடன், திட்டமிட்டபடி இரண்டாவது நாளை தொடர்வது என்றும் முன்னேற்றம் இருந்தால் மேற்கொண்டு தொடரலாம்; இல்லையேல் கைவிடுவது என முடிவு செய்து தொடர்ந்தோம். படுத்த நிலையில் பயணம் தொடர்ந்தது. Tresi beach, Maravante beach, Murdeshwar சிவன் கோவில், Mirjan Fort வழியாக மாலை கோகர்னாவை (Gokarna) அடைந்தோம். பிரபலமான சுற்றுலாத் தளமாக இருந்த போதிலும் எதிர்பார்ப்பிற்கு மாறாக சிறிய ஊராக இருந்த கோகர்னாவில் wheelchair accessible தங்குமிடத்தை கணலடுபிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. 

மறுநாள் மதியம் கோவாவை அடைந்த போது வெள்ளிக்கிழமைக்கே உண்டான வார இறுதி உற்சாகம் சாலைகளில் வழிந்தோடியது. பயணத்திற்கு இடையூறும் ஏற்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்துடன் எதிர்பார்த்திருந்த தென்மேற்கு பருவமழை, அதுபோல் எந்த சிரமமும் கொடுக்காமல், அந்த கடற்கரை விடுதியில் நாங்கள் சேரும் சமயத்திற்கு காத்திருந்தாற்போல் பெய்து தீர்த்தது. இடர்களையும் சந்தேகங்களையும் கடந்து, சேர வேண்டிய இடத்தை அடைந்ததும் ஒரு முழுமையான நிறைவான உணர்வு ஏற்பட்டது. அடுத்த ஒரு முழுநாள் ஓய்வு pressure sore மற்றும் உடலுக்கு ஓய்வளித்து விட்டு, மறுநாள் பயணத்தை நிறைவு செய்வதென முடிவானது. அதன்படி ஞாயிறு காலை 9:15 மணி துவங்கியது பயணம். சுமார் 3 மணி நேரம் ஆள் அரவமற்ற அடர்வன மலைப்பகுதி வழியாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஊடருத்து சென்ற, சுமார் 60கிமீ மலைப் பாதை மிகவும் சவாலானது. இந்த பயணத்தில் கர்நாடக எல்லை சோதனைச்சாவடியை ஒட்டி மட்டும் கடைகளும் மனிதர்களும் தென்பட்டனர். அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் வனப்பகுதி வழியாக பயணித்து சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையை மதியம் எட்டி, இரவு 2 மணிக்கு, தொடர்ச்சியான 17 மணி நேரத்திற்கு பிறகு, 848கிமீ கடந்து பயணத்தை நிறைவு செய்தோம். 

இந்த பயணத்தின் துவக்கத்தில், ஏன் கேரளாவைப் போல் கர்நாடக கடற்கரை மற்றும் தொடர்ச்சிமலை சுற்றுலாவிற்காக அறியப்படவில்லை என்ற கேள்வி இருந்தது. அதற்கான பதிலை இந்த பயணம் அளித்தது. இது முற்றிலும் கர்நாடக சுற்றுலாத்துறையின் தோல்வி. பல இடங்களிலும் சுற்றுலாத்தளங்களுக்கான பெயர்பலகைகளும் திசைகாட்டிகளும் கூட கன்னடத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. உள்கட்டமைப்பு ரீதியாகவும், தளங்களை விளம்பரப்படுத்தவும் பெரிய முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை என்பதற்கு, அந்தந்த வழிகளில் கூட திசைகாட்டிகள் இல்லை என்பதே போதுமான சான்று. மங்களூரு போன்ற மிகப்பெரிய நகரத்தில் கூட wheelchair accessibility குறித்து சரியான புரிதல் விடுதிகளுக்கு இல்லை. Wheelchair accessible restroom என்பது குறித்தெல்லாம் எந்த புரிதலும் இன்றி, சாய்தளம் வைத்து விட்டாலே wheelchair accessible என்றளவிலேயே அவர்களது புரிதல் உள்ளது. 

ஒரு பயணம் என்ன செய்யும் என்பதையும், பயணம் என்பதன் அனுபவத்தையும் உணர்த்திய 5 நாட்கள். பல தயக்கங்களை உடைத்து, நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்து, மீண்டும் என்னை மீட்டெடுத்த முக்கியமான திருப்புமுனையாக அமைந்த பயணம். இதுவரை பல விசாரிப்புகள், எச்சரிக்கைகள் என அனைத்தையும் திட்டமிட்டு முழுமையான தயாரிப்புடன் மட்டுமே பயணம் செய்து வந்த நிலையில், அந்த தயக்கங்களும் அதீத எச்சரிக்கையுணர்வும் தகர்ந்துள்ளது.

வாழ்வின் மிகச்சிறந்த இந்த அனுபவத்தை சாத்தியப்படுத்தியதற்காக உடன் பயணித்த மோகனுக்கும் கவிராஜிற்கும் இந்த கட்டுரை சமர்ப்பணம்

கற்கை நன்றே கற்கை நன்றே ... மகேஸ்வரி மதன்

 




மதியவேளை, மூன்றுமணி நேரப் பேருந்து பயணம். ஈரோட்டில் கிளம்பியபோது சன்னலோர இருக்கை கிடைத்த மகிழ்ச்சியில் அமர்ந்தாயிற்று. சன்னல் வழியே காற்றோடு வெயிலும் பட்டையைக் கிளப்பஇருக்கை மாற்றி அமர்ந்தேன். இரண்டுபேர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்திருந்த பெண் அழகாக மல்லிகைப்பூ தொடுத்து வந்தார். கருத்த கைகளில் வெண்மை அழகாய் இருந்தது. பயண சினேகத்தில் பேசிக்கொண்டே வந்தவர் தொடுத்த மல்லியோடு   கொண்டு      வந்திருந்த          ரோஜா பூக்களை என்னிடம் கொடுத்து வைக்கச் சொன்னார்.  தன் தோழிக்கு வாங்கி செல்வதாகக் கூறியிருந்தமையால்அவர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்றேன். பரவாயில்லை நீங்களும் கொஞ்சம் வையுங்கள் என மூன்று  ரோஜாவையும் கொடுத்ததோடுதலையில் வைக்க ஊக்கு இருக்கா கண்ணு என்று கேட்டுக் கொடுத்தார். கையில் ஊக்கு கொடுத்தால் மனச்சங்கடம்  வருமெனச் சொல்லிஎன் புத்தகத்தின் மேல் வைத்தார். நிறைவான மனதோடும் முகம் மலர்ந்த சிரிப்போடும் பெற்றுக்கொண்டேன். பூ வைக்க வலிக்குமா என்ன?
 
அருகிலிருந்த மூன்றுபேர் அமரும் இருக்கையில் கைக்குழந்தையோடு இளம் தம்பதியினர் அமர்ந்தனர். வெயில் இன்னும் குறைந்தபாடு இல்லை. ஆரன் சப்தம் குழந்தையை விருக்கென பயம் கொள்ளச் செய்தது. வேறொரு பின் இருக்கையைக் காட்டி, அங்கே செல்லச் சொன்னேன். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையின் வெயில் படாத கடைசிப் பகுதிக்கு மாறினேன். பூ கட்டும் அக்காவும் ஆசுவாசமாக அமர்ந்தார். மூடியிருந்த புத்தகத்தை வாச்சிகளானேன். ஒரு அழைப்புக்காக அலைபேசியை எடுத்துப்  பார்த்தாலும்புத்தகம் விடாமல் பிடித்துக்கொண்டது. நான்கு அத்தியாயம் முடித்த வேளையில் அடுத்த நகரம் வந்திடகூட்டம் அலைமோதியது. சூரியனும் சற்றே தணிந்திருந்தார்.
  
இளம் பெண் ஒருவர் நான் அமர்ந்திருந்த இருக்கையில் சன்னலோரம் வந்தமர்ந்தார். பள்ளி விடுதியில் தங்கி இருந்த மகனை நான்கைந்து பையோடு விடுமுறைக்கு (10 அல்லது +2) வீட்டுக்கு அழைத்துச்செல்லும் ஒரு அம்மா மற்றும் விடுமுறைக்கு மகனை (5ம் வகுப்பு) தன் அம்மா வீட்டிற்கு அழைத்துச் செல்லும் இன்னொரு நடுத்தர வயதுப் பெண்... இருவருமே மீதம் இருக்கும் ஒரு இருக்கைக்கு வர, நான் நடுவில் நகர்ந்துஎன் அருகில் இரண்டு மகன்களையும் அமரச் செய்தேன். பூ கட்டும் பெண்ணருகில் பெரிய பையனின் அம்மா உட்கார்ந்துகொண்டார். சிறுவனின் தாய் நின்றபடி வந்தார். ஓட்டுநர் அவரை எஞ்சின்  மேல் உட்காரச் சொன்னார். சூரியனுக்கும் எஞ்சினுக்கும் போட்டி வைத்தால், இப்போது எஞ்சினே வெல்லும்  (இரண்டுமே அன்று அளவில்லாமல் கொதித்தது தனிக்கதை). இருக்கையில் அமர்ந்திருந்த அம்மா, மகனை அழைத்து, விடுதியிலிருந்து எடுத்து வந்த பையிலிருந்து போர்வையை எடுத்து அவருக்குக் கொடுக்க சொன்னார். ஊசி நுழையா கூட்ட நெரிசலில் சற்றே சிரமப்பட்டு எடுத்துக் கொடுத்தான். முகமும் அகமும் மகிழச் சிறுவனின் தாய் அதைப் பெற்றுக்கொண்டு அமைந்தார்.
 
இப்போது எங்கள் சன்னலோர இளம் பெண்ணின் மீது உங்கள் பார்வை வரட்டும். பார்த்த நொடியில் கல்லூரி படிக்கிறாள் என்பது புரிந்தது. கிராமப்புறப் பெண். இங்கே போர்வை பரிமாற்ற  கவனத்திலிருந்ததால்,    நோட்டு ஒன்றை எடுத்துப் படித்துவந்தவரைக் கவனிக்க மறந்துவிட்டேன். மொட்டு மொட்டாக அழகாகத் தொடுக்கப்பட்ட எழுத்துகள். நோட்டுப் புத்தகத்திலிருந்த அழகிய ஆங்கில வரிகளைப் படிக்கத் தொடங்கினேன். உடல் சார்ந்த ஒரு படிப்பு என்று மட்டும் தெரிந்தது. எங்கள் இருவர் கைகளிலும் வாசிப்புக்கு ஒன்று இருந்தது மகிழ்வைத் தந்தது. என்ன படிக்கறம்மா என்று கேட்க முற்படும் போது, கூடுதலாக இரு கண்கள் என்னோடு பயணிப்பதாக உணர்ந்தேன். அருகில் அமர்ந்திருந்தானே குட்டி சுட்டி பயல்... அவன் கண்கள் தான் அது. வேகமாக எழுத்துக்கூட்டி என் புத்தகத்தைப் படித்து வந்தான். அசைவேதும் இல்லாமல் என் தலையை மட்டும் உயர்த்தி பார்த்தேன். உழைத்த கருத்த மெல்லிய உடலோடு, கழுத்தில் மங்கள மஞ்சள் கயிறு மட்டுமே இருந்த அவனது அம்மாவின் கண்கள் மகனின் உதட்டசைவைக் கூர்ந்து கவனித்து வந்தது. என் பார்வையை அவர் உணர்ந்திருப்பார் போலபார்த்து புன்முறுவல் பூத்தார். சிரித்தேன். எங்கள் பார்வை பரிமாற்றத்தை உணர்ந்த அவன் எங்கள் இருவரையும் பார்த்தான். 
 
அவன் அம்மா கண் ஜாடையில் வாசிப்பைத் தொடரச் சொன்னார். அவனோ கண் சாடையில் அலைபேசி கேட்கிறான். இந்த மெளன யுத்தத்தில் வென்றது அம்மாவே. நான் சற்றே புத்தகத்தை அவன் பக்கம் திருப்பஎன்னைப் பார்க்க பொறுமையா படி... கை வைத்துப் படி என்றேன். ஆர்வமாய் மீண்டும் தொடங்கினான். சிறுபிள்ளைசில வார்த்தைகளை கடினமாக இருக்க, நான் எழுத்துக்கூட்டிப் படிக்க, அவனும் செய்தான்.
 
மீண்டும் இந்தப்பக்கம் கல்லூரி பெண்மௌனமாய் வாய்விட்டுச்    சொல்லிப் படித்து வந்தார். என்ன படிக்கறம்மா என்று கேட்டே விட்டேன். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், வார இறுதி விடுமுறைக்கு வீட்டுக்குச் செல்வதாகவும் கூறினார்.  இதற்கிடையே  அலைபேசி அடிக்க பேசினார். வீட்டுக்கு தானே வந்துவிடுவதாகவும், பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டாம் எனவும் மறுமுனையில் இருப்பவரிடம் கூறினார். பரஸ்பர விசாரிப்புகள் நடந்தன. எங்களைச் சிறுவனும் கவனித்தான். சிறு கிராமத்தைச் சார்ந்த அந்தப் பெண் அரசுப் பள்ளியில் பயின்று இரண்டாம் கலந்தாய்வில் இங்கே இடம் கிடைத்துச் சேர்ந்ததாகக் கூறினார்.  தாமதமாகச் சேர்ந்ததால்        நிறையப் படிக்க வேண்டி இருப்பதாகவும், விடுமுறை முடிந்து வருகையில் தேர்வு இருப்பதால் படிப்பதாகவும் கூறினார். பொறுப்பாகப் பேசினாள். என் உதட்டில் புன்முறுவல், கண்சாடையில் தொடர்ந்து படிக்கச் சொன்னேன். இப்போது நானும் சிறுவனும் எங்கள் புத்தகத்தைத் தொடர்ந்தோம். 
 
சற்றுநேரத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் இயங்க, இருபக்க மலைக்கு நடுவே காற்று பலத்த வேகத்தில் அடிக்கத் தொடங்கியது. கைகளிலிருந்த புத்தகமும் நோட்டும் சப்தமாய் அலறத் தொடங்கின. அவற்றைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் புத்தகத்தையும் நோட்டையும்  மூடினோம். நால்வரின் கண்களும் இப்போது மலையை நோக்கி. இருப்பதிலேயே பெரிய புத்தகமான இயற்கையைப் படித்தோம். அம்மாவின் முகத்தை மீண்டும் பார்த்த சிறுவன் கிடைக்காத அலைபேசியை ஏக்கமாய் பார்த்தான். மெல்லப் பேச்சு கொடுத்தேன். படிப்பு, புத்தகம், ஆசிரியர், பள்ளி, வீடு, அம்மாயி வீடு என எல்லாவற்றைப் பற்றியும் பேசினான். காத்திருந்த அழைப்பு வர பேசி முடித்தேன். அரசுப் பேருந்து மோட்டலில் நின்றது. தனக்கு இதெல்லாம் வேண்டுமென கேட்ட மகனிடம், அக்காவிடமும் கேள் என்றார் அவர் அம்மா. உங்களுக்கு ஏதும் வேணுமா என்றான். சற்றுநேரத்தில் இறங்கும் இடம் வருவதால் வேண்டாமென்றேன். வேகமாய் இறங்கி  தனக்குத்  தேவையானதை வாங்கிட ஓடினான்இறங்கும் இடம் வந்ததுசிறுவனுக்கு புத்தகம் கொடுத்தேன். வேண்டாமென மறுத்தான்.  நன்றாகப் படி எனச் சொல்லி அவனிடமும், மருத்துவ மகளிடமும் சொன்னேன். பூ கொடுத்த அக்கா, போர்வை கொடுத்த அம்மா, நோட்டுப் புத்தகத்தோடு கனவைச் சுமந்த மகள், விளையாட்டாய் வாசிக்க முற்பட்ட சிறுவன், வீட்டிற்குச் செல்லும் ஆவலோடு பெரியவன், வாசிக்கும் மகனை ரசித்த அம்மா என அனைவரிடமிருந்தும் சிரிப்போடு விடைபெற்றேன். நேர்கோட்டில் நாங்களும் பயணமும்.
 
சிலநாட்களாக சிறுவட்டத்துள் சிக்கித்தவித்த என் மனம் சற்றே ஆசுவாசமடைந்தது. பயணத்தில் பாட்டு பிடித்த ஒன்றேயாயினும், பாட்டில்லா இப்பயணம் மிகப்பிடித்த ஒன்றாய் மாறிப்போனது. அன்பு சூழ் உலகு.
 

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...