Saturday, February 3, 2024

வாழ்வெனும் சாமிசடை... - ராதா மனோகரன்

 


 

ரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. மானிடனாகப் பிறவி எடுப்பதே பெரும் வரம். எனவே மானிடப் பிறவியில் அறம் தவறாமல் நடந்து கொண்டு வீடு பேற்றை அடைய வேண்டும். தவறான செயல்களைச் செய்து இழி நிலையை அடையக்கூடாது என்று ஔவைப் பாட்டி சொல்லி இருக்கிறார்கள். அதைப் பின்பற்றி நடப்பவர்களே மானிடப் பிறப்பின் பயனை அடைய முடியும் என அவ்வளவு பய பக்தியோடு அறத்தோடு வாழ்வது பற்றி பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடம் இன்றும் நினைவில் நிழலாடுகிறது..

பாடங்கள் வாழ்வியலை வடிவமைக்கத்தானே கற்றுக் கொடுக்கப்பட்டன. தலைவர்களையோ, மகான்களையோ,பெரியப்பாவையோ,அப்பாவையோ, சித்தியையோ பார்த்து அன்பையும், வாழ்வின் நெறிகளையும் கற்றுக் கொண்ட தலைமுறைதானே நம்முடையது?.

புத்தகங்களிலோ,அனுபவங்களிலோ கற்றுக் கொண்ட பாடங்கள் தான் ஆதி மனிதனை AI வடிவமைக்கும் ஆராய்ச்சியாளனாக, அறிவியல் விஞ்ஞானியாக மாற்றி இருக்கிறது. இந்தப் பெரும் மாற்றம் நிகழ்ந்த இடைப்பட்ட காலங்களிலும் எங்கோ மூளைக்கு ஒருவர் அறம் தவறி கொலை,கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடுவர். அப்பொழுது அது தெய்வ குற்றமாகவே பேசப்படும். 

அன்றெல்லாம் கொலை என்பது மிகவும் அரிது. அதுவும் வாய்க்கால் வரப்பு சண்டைகளிலோ, அரசியல் சண்டைகளிலோ மட்டும் தான்  நடக்கும். பரபரப்பாக பெருமளவில் பேசப்படும். ஊருக்கொரு மைனரோ தம்பானோ இருப்பார்கள். வெளிப்படையாக அறிவிப்பார்கள் தாங்கள் அடிதடி அண்ணன்கள் என்று. அவர்களை அண்டிப் பிழைக்கும் கைத்தடிகள் அரிவாள் மீசையை முறுக்கிக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டுவதிலேயே காண்பிப்பார்கள் நானும் ரௌடிதான் என்று. கொலை செய்தவர்கள் குடும்பத்தில் யாரைப் பார்த்தாலும் ஊரே ஓடி ஒதுங்கி காதுக்குள் கதை சொல்வதுண்டு. உயிர் இழப்பு உச்சகட்ட இழப்பாக துக்கம் அனுஷ்டிக்கப்படும்.  

கரி வித் சயனைடு கேரளாவில் சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை விளக்கும் ஒரு தொடர். வீட்டுக்குள்ளேயே மனைவி கணவனுக்கும், குடும்பத்தாருக்கும் சமையலில் சயனைடு கொடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் வீட்டில் யாருக்கும் தெரியாமல்  கொன்று விடுகிறார். அதைப் பற்றி அவனது மகன் கேட்க்கும் பொழுது ஆம் என்று மகனிடம் அந்தத் தாய் சொல்லும் தருணம் உண்மையில் நெஞ்சை அதிர வைத்தது. இது போன்று தாய்  பெற்ற குழந்தையைக் கொள்வது, கணவன், மனைவி பிள்ளைகளைக் கொள்வது போன்ற செய்திகள் தினம் ஒரு திருக்குறள் போன்று வெளிவந்துகொண்டேயிருக்கிறது. சமீபத்தில் என்னை அச்சுறுத்திய செய்தி காதலன் தன காதலியைக் கொன்று அந்தப் புகைப்படத்தை வாட்ஸ் அப் ஸ்டேடசில் வைத்திருந்தான் என்பது.

கொலை செய்யும் அளவிற்கு குடும்பத்தின் வேர்கள் அறுந்து போனதா?இல்லை உயிரின் விலை மலிந்து போனதா?

தக்க காரணங்கள் இருப்பின் பிரிந்து வாழ வேண்டியதுதானே. அதற்குத்தானே விவாகத்தை ரத்து செய்யும் சட்டம் நடைமுறையில் உள்ளது.

அதையும் தாண்டி கொலை செய்யும் அளவிற்கு எது மனித மாண்பினை சிதைத்தது? முன்னேற்றம் என்பது ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதாகத்தானே இருக்க வேண்டும். பிரித்துக் கட்டுவதும் ,தூக்கிக் கட்டுவதுமாக இருப்பது எந்தவகையில் முன்னேற்றமாக இருக்க முடியும்?

குடும்பம் என்ற கட்டமைப்பு காலம் காலமாக அன்பினால் கட்டுண்டு கிடப்பது. திருமணம் செய்வது, சந்ததியினை உருவாக்கி  குடும்பம் குட்டி என்று வாழ்வது ஆகியவையே பிறப்பின் நோக்கம் என வாழ்ந்த வாழ்வு தான் தேவை என்று வாதிடவில்லை. ஆனால் அவ்வாறு ஒரு அன்பெனும் புள்ளியில் மையப் பட்டிருந்த அணுக்கள் எப்பொழுது சிதறத் துவங்கின? ஏன் சிதறத் துவங்கின? அப்படித் துவங்கிய பொழுதுதான் உளவியல் சிக்கல்கள் வேர் விடத் துவங்கியனவா?

பெரிய கூட்டுக் குடும்பமாக, பெண்கள் இனப்பெருக்கம் செய்வதும், அடுப்பெரிப்பதும், குடும்பம் குட்டிகளைக் கவனித்துக் கொள்வதும், ஆண்மக்கள் பொருளீட்டுவதும், முக்கிய முடிவுகள் எடுப்பதும், குடும்ப விழாக்களை முன் நின்று நடத்துவதுமே பழக்கமாக இருந்த பொழுது இல்லாத மன அழுத்தம், பொருளாதார சுதந்திரம், தனித் தன்மை, அடையாளம் ஆகியவை மேலோங்கி நிற்கும் இன்றைய நிலையில் அவற்றுடன் இலவச இணைப்பாக வந்து ஒட்டிக் கொண்டதா?

நமது அம்மாவோ, பாட்டியோ, பூட்டியோ கணவனை முழுவதும் பிடித்துப்போய் குறைகளே இல்லாமல் சொகுசு வாழ்வில் இணைந்திருந்தார்கள் என்று யாரேனும் சொல்லி விட முடியுமா?. அப்பா, தாத்தாவுக்கும் அதே நிலை தான். பொருளாதார சுதந்திரம் இல்லாமல் ஆண்களைச் சார்ந்து பெண்களும், சமைக்கவும், வீட்டுவேலை செய்யவும் முடியாமல் (கூடாது என்ற வீராப்பிலும்) பெண்களைச் சார்ந்து ஆண்களும் இருந்ததினால் நிறைய இடங்களில் விட்டுக் கொடுத்தல் சாத்தியமானதாகவும்,நடைமுறையில் ஒன்றாகவும் இருந்தது. குழந்தைகள் பிறந்துவிட்டால் அந்தக் காந்தப் புள்ளியிலாவது குடும்பம் என்னும்  ஊஞ்சல் ஊசலாடிக் கொண்டிருக்கும். அப்பொழுதும் அரிதாக வாழாவெட்டிகள் என்ற பெயரில் சில பெண்கள் தாய் வீடுகளில் வந்து தங்கி மீதிக் காலத்தைக் கழிப்பார்கள்.

இன்று பெண்களும் சம்பாதிக்கின்றனர், ஆண்களும் சமைக்கின்றனர் எனவே  அடிப்படை சார்புத்தன்மை விலகிவிட்டது. அதனுடன் விட்டுக் கொடுத்தாலும் விலகி விட்டது. குழந்தை வளர்ப்பில் இருவருக்கும் பங்கு இருப்பது பாராட்டுதற்கு உரியது. ஆனால் ஒருவருக்கு பொறுப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் இன்னொருவர் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்ற நிலையிலும் நீ செய்யவில்லை நான் மட்டும் ஏன் செய்ய வேண்டும்? என்ற பொறுப்பற்ற விவாதங்களே மேலோங்கி இருக்கின்றன.

அன்று ஒரு ஆணும் பெண்ணும்  ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலே காதல் என்ற ஒற்றை அடையாளத்தைத் தவிர வேறு வார்த்தைகள் கிடையாது. ஆனால் இன்று infatuation, crush, casual partner, serious partner, open partner, date mate, live in partner   இத்தனை படிநிலைகளையும் கடந்து அந்த அன்பு நீடிக்குமேயானால் தான் காதல், திருமணம் என்ற பந்தமெல்லாம்.

அதற்குள்  எத்தனை சந்தேகங்கள்,நிரூபணங்கள்,உறவுகள்,முறிவுகள்?

உறவுகளையும், முறிவுகளையும் பார்த்துப் பார்த்துப் பழகி விடுவதால் திருமண பந்தம் முறிவதிலும் பெரும் போராட்டமோ,பாதிப்போ இருப்பதில்லை.

சில ஆண்களுக்கோ பெண்கள் தன்னைவிட திறமைசாளிகளாக இருந்து விட்டால் தன்னை மதிக்காமல் போய்விடுவார்கள் என்ற பயம். பல பெண்களுக்கோ வேலைக்கு செல்வதாலும் பொருள் ஈட்டுவதாலும்  சுதந்திரம் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் எடுத்துக் கொண்டு வடிவம் கொடுப்பதென்ற குழப்பம். நினைத்தபடி ஆடைகள் அணிவதும், மது அருந்துவதும், நினைத்ததைப் பேசுவதும் மட்டுமே சுதந்திரம் என்ற தவறான புரிதல். இவர்களுக்கு இடையில் தள்ளாடுவது குழந்தைகள் தான்.

பெற்றோர்களின் வெறுப்பையும், தான் என்னும் அகங்காரத்தையும் பார்த்து வளரும் குழந்தைகள் இரண்டையும் இணைத்து ஹைப்ரிட்டான ஒரு கதாப் பாத்திரத்தில் வளர்கிறார்கள்.

வயது வித்தியாசம் இல்லாமல் 6 முதல் 100 வயது வரை அனைவரும் சகஜமாக உபயோக்கிக்கும் வார்த்தைகள் depression, stress, anxiety  and suicidal thoughts.  பெரும்பாலான குடும்பங்களில் யாராவது ஒருவர் என்னை யாருக்கும் பிடிப்பதில்லை, நான் தேவை இல்லை, நான் போனால் தான் என் அருமை புரியும், நான் போனால் இங்கு யாருக்கும் கவலை இல்லை போன்ற வார்த்தைகளை குட் மார்னிங், குட் நைட் போன்று உபயோகித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆரம்பத்தில் பிறருக்குப் பதட்டத்தைத் தரும் இதுபோன்ற  வார்த்தைகள் பின்னர் பழகி விடுகிறது. அவர்கள் சகஜமாக எடுக்க ஆரம்பித்தவுடன் அந்த நபர் அழுகை, ஆர்ப்பாட்டம் போன்ற வேறு வேறு ஆயுதங்களை பிரயோகிக்க ஆரம்பிக்கிறார். அது தீவிரமான உளவியல் சிக்கல் மற்றும் சீழ் வடியும் காயமாக மாறி விடுகிறது. ஒரு எதிர்பாராத தருணத்தில் தற்கொலை என்ற அவசர முடிவுக்கு இழுத்துச் செல்கிறது.  

உடம்புப் பிரச்சினையை வெளியில் சொல்லும் அளவிற்கு உளவியல் பிரச்சினையை சொல்ல முடிவதில்லை. உடல் சிக்கலுக்கு உலகத்தின் எந்த மூலையிலும் சென்று எவ்வளவு செலவு செய்தும் வைத்தியம் பார்க்கத் தயாராக இருக்கும் நாம் உளவியல் பிரச்சினையை வெளியில் தெரியாமல் இருக்க பல வேடங்கள் அணிந்து நாடகம் ஆடுகிறோம். அதுவும் சுமை என்று தெரிந்தே.

வாழ்க்கைத் துணை  மீதான கோபமென்றால் அவன்/ அவள்  வழி வந்த உறவுகள், ஏன் பல சமயங்களில் அவர்களால் வந்த குழந்தை என்று பெற்ற பிள்ளைகளிடம் வெறுப்பை உமிழும் பெற்றோர்களும் உண்டு. பெற்ற குழந்தை மீது வெறுப்பு வந்தவுடன் பிறரை அவர்கள் கொண்டாட வேண்டுமென்றா எதிர் பார்க்க முடியும்?

வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கல்களும், முடிச்சுக்களும் கொண்ட சாமி சடை ஆகிவிட்டது. திண்ணை வீடும், கட்டுத்தறியும், காடு கழனியும், விவசாயமும் ஆக வாழ்ந்த பொழுது வாழ்க்கை எளிதாகத்தானே இருந்தது. வாழ்க்கையை எளிதாக்க வந்த அறிவியலும் விஞ்ஞானமும் நமது பண்பாட்டின் வேர்களையும், கலாச்சாரத்தின் விழுதுகளையும் விழுங்கி விட்டனவா?

எதை விற்று எதை வாங்கினோம் ?

  

 

Thursday, February 1, 2024

தூரி - மலர் செல்வம்

 


னிமையும் வெறுமையும் நேரத்தைத் தின்று கொண்டிருக்கும்   நாட்களில்  சட்டென்று மனசுக்குள் வண்ணங்களை வாரிஇறைத்து நிரப்பும் வல்லமை கொண்டவை நம் சிறுவயது நினைவுகள். என் மனசுக்கு மிக நெருக்கமாக இருப்பது தூரி நோம்பி/ ஆடி நோம்பி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஆடி 18 தான்.


ஆடி நோம்பி, தை நோம்பி, தேர் நோம்பி எல்லாம் அந்தக் காலத்தில் கொங்கு விவசாயக் குடும்பங்களில் உள்ள  சிறுசுகளின் மனசில்  குதூகலத்தை விதைக்கும் பண்டிகைகள்.


நோம்பி அப்படின்னா  கொங்கு அகராதியில் பண்டிகை .


தூரி நோம்பி மனசுக்கு பிடிக்க முதல் காரணம் பெரிய லீவு முடிஞ்சு  ஹாஸ்டலுக்குப் போனதுக்கப்புறம் வீட்டுக்கு வர்றதுக்கு கெடைக்கிற முதல் விடுமுறை !!  மூணு நாள் லீவுங்கறது அவ்வளவு பெரிய சந்தோஷம்!! 


அடுத்தது ஆடி நோம்பிக்கு கண்டிப்பா புதுத் துணி உண்டு. ஃப்ராக்,கௌன், ஸ்கர்ட்  மாதிரி குட்டித்துணி எல்லாம் அஞ்சாறு வயசு வரைக்கும் தான்.மேலிருந்து  முழங்காலுக்குக் கொஞ்சம் கீழே வரைக்கும்  இருக்கும்   பாடிபாவாடையும் இடுப்பு வரை இருக்கும் நீள ஜாக்கெட்டும் ஏழெட்டு வயசு வரைக்கும் போடுவாங்க.

 தரையக் கூட்டற அளவுக்கு கால் வழிய முழுப் பாவாடையும் கை வைத்த நீள மேல்சட்டையும்  ஒரு பண்ணன்டு வயசு வரைக்கும் . அதுக்கப்புறம் தாவணி என்று தான்  அம்பது வருஷத்துக்கு முன்னாடி உடை உடுத்தும் வழக்கம் கிராமங்களில் இருந்தது.

பெரும்பாலும் பூப் போட்டது அல்லது வட்டம் கோடு சதுரம்னு ஜியாமெட்ரி வடிவங்கள் போட்டதுன்னு  இரண்டு  வகை பாவாடைகள் தான் இருக்கும். 

பருத்தி அல்லது  பாலியஸ்டர்ல  பாவாடையும் ஒரே நிறத்தில் டூ பை டூல   

மேல்சட்டையும் இருக்கும்.

 பீஸிலிருந்து கிழிச்சு டெய்லரிடம்  கொடுத்து தெச்சுப் போடறது தான் வழக்கம். 


ஆம்பளப் பசங்களுக்கு  அரைக்கை சட்டை, அரை ட்ரவுசர்.  வீட்ல  எதாச்சும் கல்யாணம்  வந்தா முழுக்கால் பேண்ட் , முழுக்கைச் சட்டை எல்லாம் உண்டு.ரெடிமேட் கிடிமேட்லாம் அப்ப அவ்வளவா தெரியாது.


துணிஎடுக்க பஸ் ஏறி  டவுனுக்கு போறது, அப்புறம் அளத்தி குடுக்க  டெய்லர் கடைக்குப் போறது,  அளத்தி துணியை டெய்லரிடம்  குடுத்துட்டு 'இது நெம்ப கரெக்டா  இருக்கும். ஆனா கை மட்டும் ஒரு இஞ்சு நீளம் கொறைச்சுரு, உடம்பு மட்டும் அரை இஞ்சு லூஸ் வச்சிரு, ஜாக்கெட் ஒரு இஞ்சு எறக்கம்  வச்சிரு , பாவாடைல இரண்டு இஞ்சு  டக் புடிச்சிரு"ன்னு அவரை   லூஸாக்கறது, தெச்ச துணிய  டைலர் கடைல மணிக்கணக்கா காத்திருந்து  வாங்கிட்டு வர்றதுன்னு ஒவ்வொண்ணும் ஒரு பெரிய கதை.


அம்மாயி  ஊர்ல  எங்க மணியகாரர் வளுவில  உரல்ல அரிசி மாவு இடிச்சுச் சலிக்கற வேலை ஆரம்பிச்சா நோம்பி வந்தாச்சுன்னு அர்த்தம். கச்சாயம்,எள்ளுச் சீடை, லட்டு,முறுக்கு இல்லாம நோம்பி ஏது?  வீட்டில் உருக்கிய தோட்டத்து பசுமாட்டின் நெய்மணமும் ஏலக்காய் கலந்த வெல்லப் பாகின் கொதிக்கும்  மணமும்   வீட்டுப் பெரியவங்களோட கை மணமும் போட்டி  போடும் காலம் அது...


 இதெல்லாத்தையும் விட புடிச்ச விசயம் நோம்பிக்கு எங்களை மாதிரியே அம்மாய் வீட்டுக்கு வந்திருக்கும் சித்தி பெரிமா வீட்டு அக்காங்க,தம்பிங்க தங்கைங்க,மாமா வீட்டுக் குட்டீஸ் எல்லாரும் ஒண்ணு சேர்றது தான்.


அம்மாவுக்கு ஒரு சித்தப்பா ஒரு பெரியப்பா. மூணு தாத்தா வீடும் ஒரே மாதிரி அடுத்தடுத்து இருக்கும். ஒரே பெரிய  வாசல். வளுவில் பத்து  பெண்கள். அதனால  பத்துக்குடும்பங்கள் ஒரம்பரையா வந்து சேர்ந்துரும்.அதில இருபத்தஞ்சு சிறுசுக. கொண்டாட்டத்துக்கு கேக்கணுமா?


எந்த வீட்டுக்குள்ள வேணா பூந்து ஓடி தொட்டு வெளையாட்டு வெளையாடலாம். எந்த வீட்ல வேணா பலகாரம் திண்ணலாம். ஆனா  குறும்பு பண்ணா எந்த வீட்ல வேணா மொத்து விழும்கறது தான் ஹைலைட்.


 அம்மாய் வீட்டுக்கு வந்தாச்சு.புதுத் துணி வந்தாச்சு. வெளையாடறதுக்கு ஒரு பட்டாளமே வந்தாச்சு. பலகாரமும் இருக்கு.

ஆடி நோம்பி வந்திருமா? 

 வரவே வராதே!ச

தூரி வந்தாகணுமே?! இதுக்குப் பேரே தூரி நோம்பியாச்சே..


 தூரிங்கறதை கயிற்றாலான  டெம்பரவரிஊஞ்சல் னு சொல்லலாம். ஆனா ஊஞ்சல் அல்ல. கெணத்தில தண்ணி சேந்தற கயிறு அல்லது விவசாயத்தில பயன்படுத்தற   வடக்கயிறில  வீட்டுக்கு வெளியே மரத்திலயோ  வீட்டில ஆசாரத்து விட்டத்திலயோ  ஊஞ்சல் மாதிரி கட்டறது தான் தூரி.


ஊருக்குப் பொதுவா, பெரிய ஆலமரத்தில  பெரியவங்களுக்காகக் கட்டற பலகைத் தூரியும் இருக்கும்.


வீட்ல கட்டற தூரில  ஒருத்தருக்கு ஒண்ணுன்னு மாமாக்கள்  அஞ்சு தூரி ஏற்பாடு பண்ணீருவாங்க. கயிறு பத்தாம சந்தைல போய் வாங்கிட்டு வர்றதும் உண்டு.


சமையலறையைத்  தாண்டி ஆசாரத்துக்குப் போற நடைக்கிட்ட சின்னத் தூரி  கடைசித் தங்கைக்கு. பெரிய ஆசாரத்தில  உயரத்தில ரண்டு விட்டம் இருக்கும். ஒவ்வொன்னிலும் ரவ்வண்டு தூரி. எனக்கு, பெரிய தங்கைக்கு, தம்பிக்கு, மாமா மகனுக்குன்னு.


காலை உந்தி உந்தி வெரசா ஆடி,யார் கால் பக்கத்து ஆசாரத்து விட்டத்தை தொட்டுட்டு வருதுன்னு போட்டி வேற நடக்கும்.விட்டம் சாதாரணமா ரெண்டு ஆள் வளத்தில ஒசரமா  இருக்கும்.


தூரி கட்டிக் குடுக்கறதோட முடிஞ்சிருமா மாமாக்களோட வேலை. தூரி ஆட்டி விடுங்கன்னு மாத்தி மாத்தி நச்சு பன்றதையும் சமாளிக்கணும்.


தூரில நாம உக்கார்ற இடத்தில பழைய புடவை , உரச் சாக்கு, பழைய தலகாணின்னு எதாச்சும் இதமா இருக்கும்.ஆனாலும் விடாம ரெண்டு நாளும்  ஆடி ஆடி தொடையெல்லாம் தழும்பாகி ரத்தம் கண்ணிப் போய் கால் நடக்க முடியாம ஒரு தினுசா நடந்து தான் லீவு முடிஞ்சு ஹாஸ்டலுக்குப் போவோம்.


 சிறுவயசில ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடறோம் அதன் நோக்கம் என்னன்னெல்லாம் யோசிச்சதில்லை..

தூரிய விட்டா சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப் பட்ட நாள்னு  ஓடாநிலை போவாங்க.


பொன்னியின் செல்வன் படிக்க ஆரம்பிச்சப்ப அதில முதல் அத்தியாயமே ஆடிப்பெருக்கில் தான் ஆரம்பிக்கும்.

மக்கள் ஆத்தங்கரைக்குப் போறதும் ஆடிப் பாடறதும் சித்ரான்னங்கள் கொண்டு போய் சாப்பிடறதும்  கல்கியின் எழுத்தில் அவ்வளவு அழகா இருக்கும்.

  ஆடிப் பெருக்குன்னா

 இப்படி யெல்லாம் இருக்குமா?

தூரியைத் தாண்டி நெறைய விஷயம் இருக்கும் போலன்னு யோசிச்சதே அப்பத் தான். அப்புறம் நிறைய விஷயங்கள் அங்கங்கே கேட்டுத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

 ஆத்தில புதுத் தண்ணி வந்ததும் ஆடிப் பட்டத்தில  விதைக்கலாம்னு விவசாயி மனமகிழ்ச்சியோடு தண்ணிய வணங்கற  நிகழ்வு தான் ஆடி 18.

நம்ம மகிழ்ச்சியை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தத் தான் தூரி ஆடறது.


மஹாபாரதக்கதைன்னு சொல்லி ஒரு  கதை ஒண்ணு உலாத்திட்டிருக்கு.எனக்கென்னமோ அது ஒரு கட்டாய இடைச் செருகலோன்னு தோணும்.


சமீபத்தில ஈரோடு வாசல் நட்பு மதுமதி கிட்ட ஆடி 18 பத்தி பேசிட்ருந்தப்ப அவங்க சொன்ன ஒரு தகவல் ரொம்பவே சுவாரசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்துச்சு.


ஆத்தங்கரையோரம் இருக்கற ஊர்ல மக்கள் ஆத்துக்கு பூஜை பண்ணி முளைப்பாரிய தண்ணில விடற பழக்கமுண்டாம். இது எதுக்குன்னு காரணம் தெரிஞ்சப்போ 'தமிழண்டா'ன்னு காலரைத் தூக்கி விட்டுக்கத் தோணுச்சு.


அந்தக் காலத்தில பெரிய பெரிய மண்மொடாவுல தான் விதை தானியமெல்லாம் யெல்லாம் சேமிச்சு வெப்பாங்க. ஆடி மாசம்  வந்தா விதையோட வீரியத்தை சோதிக்க ஒரு கை விதை எடுத்து முளைப்பாரில விதைப்பாங்களாம். அது முளைச்சா அந்த விதையை பயன்படுத்தலாம். எல்லா முளைப்பாரியும் கோயில்ல கொண்டு வந்து வச்சு யாரோடது நல்லா முளை விட்ருக்குன்னு பாத்து  அவர்கிட்ட மத்தவங்க விதை தானியம் வாங்குவாங்களாம்.

 சரி‌.முளைப்பாரியை எதுக்கு ஆத்தில விடணும்?

'எங்ககிட்ட  நல்ல விதை இருக்கு‌ .எங்க ஊரு சனத்துக்கு சாப்பாட்டுக்கு பிரச்னையில்லை.ஆனா எங்கயாச்சும் ஒரு ஊர்ல மழை பேயாம இருக்கும். விதை தானியம் இல்லாம இருக்கும். இந்த தானியம் அவங்க கைக்குக் கிடைக்கட்டும்.

பட்டினி பஞ்சமில்லாம எல்லா சனத்துக்கும் வயிறு நிறையட்டும்'னு  தண்ணிய வணங்கி முளைப்பாரிய ஆத்துல விடறதாம்!

யாதும் ஊரே யாவரும் கேளிர்னு சும்மா பேச்சுக்குச் சொல்லி வைக்கலை! இதைக் கேட்டதும்  மனசு நெகிழ்ந்திருச்சு எனக்கு. எவ்வளவு நாகரீகமான சமூகம் நம் தமிழ்ச் சமூகம்!! இந்த ஒரு செய்கை போதுமே தமிழன் நாகரீகத்தைச் சொல்ல!  கீழடியும் கொடுமணலும் ஆதிச்சநல்லூரும்  பொருந்தலும் அரிக்கமேடும் இதைவிட என்ன நாகரீகத்தை  வெளிக் கொணர்ந்துவிடப் போகின்றன ஏன்று தோன்றியது....


 இரண்டாயிரம் வருடத்துக்கு  முந்தைய  இரண்டு கிலோ அளவு  விதைநெல் ஒரு அழகிய  நாலுகால் கொண்ட ஜாடியில் வைத்து பாதுக்காக்கப் பட்ட நிலையில் பழனிக்கு அருகிலுள்ள பொருந்தல் அகழாய்வில் கிடைத்ததே!!கி.மு.500லேயே  நெல் பயிரிட்ட சமூகம் மட்டுமல்ல  இயற்கையை  வழிபட்ட  சமூகம் இது!

ஆத்துத் தண்ணிய வழிபட தூரி நோம்பி என்றால் ஆகாச  சூரியனுக்கு நன்றி சொல்ல தை நோம்பி. பெருமையாத்தான் இருக்கு நம்ம பாட்டன் பூட்டனை எல்லாம்  .


பட்டணத்தில் சனங்கள் ஏராளம். இருக்க வீடில்லை. பட்டிக்காட்டில் வீடுகள் தாராளம். இருக்க சனமில்லை. எத்தனை முரண் !எத்தனை மாற்றங்கள்!!


போன வருசம் ஆடி நோம்பி சமயத்துக்கு அம்மாயி ஊருக்குப் போகும் வாய்ப்பு அமைஞ்சுது.


சிறுவயதில் நான் தூரிகட்டி காலை உந்தி உந்தி ஆடிய  ஆசாரத்து விட்டத்தை அண்ணாந்து பார்த்ததும்  புரிந்து கொண்டார் மாமா. 'ஏங்கண்ணு ஆடி நோம்பி ஞாயித்துக் கெழம வருது.சனிக்கிழமையே எல்லாரும் வந்துருங்க" என்றார் வாஞ்சையுடன். 

"ஆமாம்.வாங்க . எள்ளுச் சீடை புடிக்கும் உனக்கு. செஞ்சு தாரேன் " என்றார் பிரியமுடன் அத்தை.


இந்த வருசம் இதோ ஆடி நோம்பி வந்திருச்சு. 

"வா கண்ணு" என்று சொல்லும் மாமாவின் சிரித்த முகம் புகைப்படச் சட்டங்களுக்குள் சிறைபட்டுக் கிடக்கிறது...


நோம்பியின் அத்தனை இன்ப நினைவுகளும்  சட்டென்று மனக் கடலின் அடி ஆழத்தில் மூழ்கி விட   வாசல் கதவின் நிலைப் படியில்  லேசாகச் சாய்ந்தபடி முகமெல்லாம் விரிந்த சிரிப்புடன் அடர் மீசையைத் தடவியபடி  ஒரு பழங்கால ஓவியத்தில் இருந்து  உயிர்த்து வந்த  ஜமீன்  போல கம்பீரமாக நிற்கும்  பெரிய மாமாவின்  நினைவுகள் மனவீட்டில் ஓய்வின்றி  தூரி ஆடிக் கொண்டிருக்கின்றன.


சமீபத்தில் வாசித்த 'நீர்வழிப் படூஉம்' நூலின் காரு மாமா நினைவில் வருகிறார்.  தாய் மாமாக்களின் பிரியங்களால் நிரம்பியது   இளவயதின்நோம்பி நினைவுகள்.

கல்வி - அபர்ணா குணசேகரன்



 "கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்கு தக"
          - திருவள்ளுவர்

       
         கல்வி நமக்கு வரமாகும். அத்தகைய கல்வியை கற்று நாம் மேம்பட வேண்டும். கல்வியை கற்பதன் மூலம் நல்லொழுக்கம் , அறிவு , தெளிவு, நாகரிகம் ,பண்பாடு, விடாமுயற்சி, திறமை,.., ஆகியவை நம்மால் வளர்த்துக் கொள்ள முடியும். கல்வியை நாம் கற்றால் மட்டும் போதாது மேலும் அதைப் பின்பற்றவும் வேண்டும், பிறருக்கு கற்பித்தலும் நம் கடமையாகும்.


           கல்வி என்பது மனித வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மன வளர்ச்சியையும் மேன்மைப்படுத்துகிறது. ஒருவர் என்னிடம் கேட்டார் "பல டிகிரிகள் படித்தால் மட்டும் பணம் கிடைக்குமா ?" என்றார். அதற்கு நான், பல டிகிரிகள் படித்தால் பணம் கிடைக்காது, ஆனால் கல்வி நமக்கு பணம் உள்ளபோது எவ்வாறு பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது என்றேன்.


"கண்ணுடையார் என்பார் கற்றோர்" 
            -திருவள்ளுவர்


          பழங்காலங்களில் மனிதர்கள் ஒவ்வொருவரும் பார்த்து பேசி பழகிக் கொண்டும் ஒருவருக்கொருவர் கதையை பரிமாறிக் கொண்டும் அறிவை வளர்த்தார்கள். இன்றைய காலத்தில் கல்வி என்னும் பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்கிறது மேலும் இன்றைய மாணவர்களுக்கு கல்வி கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.


           கல்வியை பயிலும் மாணவர்களுக்கு, பயிற்றுவிக்க ஆசிரியர்களும் இன்றைய காலகட்டத்தில் ஆர்வமுடன் உள்ளனர். "கல்வியைக் கற்றால் மற்றும் மேம்பட முடியுமா ?" என்றால் அது இன்றைய அளவிலும் கேள்விக்குறியாக தான் உள்ளது. பற்றி முழுமையாக கற்று அதை முழுமையாக பின்பற்றும் போது தான் ஒருவர் மேம்பட முடியும்.

கல்வி நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். கல்வியை கற்றதன் மூலம் மூடத்தனத்தையும் , பல முட்டாள்தனத்தையும் வேரறுக்க முடியும். சாதாரண நபரை பொறுப்புள்ள நபராக மாற்ற கல்விக்கு பெரும்பங்கு உண்டு. கல்வி மனிதனை வாழ வைத்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த தேர்ந்த எதிர்காலத்திற்கும் வழிவகுக்கிறது.


"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"


           கல்வியறிவு கொண்ட மக்கள் அதிகம் உள்ள நாடே பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடாகவும் ; கல்வி அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு கொண்ட மனிதனே தலைசிறந்த மன்னனாகவும் அமைவதால் கல்வியின் முக்கியத்துவம் நமக்கு புரிகிறது. கல்வியைக் கூர்ந்து முழுமையாக கற்பதன் மூலம் நல்ல புதிய புதிய அரிய கண்டுபிடிப்புகளை இயற்றவும் முடிகிறது.


       "ஆசிரியர் மையம முறை " ஆக இருந்த கல்வி இன்று "மாணவர் முறையாக " மாறி உள்ளது. முன்னொரு காலத்தில் கல்வி கற்க குருகுலம், ஆசிரியர் இல்லம், ஆலமரத்துப் பள்ளிக்கூடம் என்று மாணவர்கள் ஆசிரியரிடம் தேடிச் சென்று கல்வி கற்றுக் கொண்டனர். அக்காலகட்டத்தில் ஒழுக்கமும் பண்பாடுமே முதன்மை பெற்றிருந்தது என்று என் தாத்தா கூறுவார்.


         இன்றைய காலத்தில் கல்வியை கற்க புதிய புதிய வழிகள் உள்ளன. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் , இணைய வழிகள், நூலகங்கள் போன்ற பல வழிகள் இருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு "கொரோனா" என்ற பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலை ஏற்பட்ட போதும், கல்வி தடைபடாமல் "இணையவழியில்" மாணவர்கள் அனைவரும் கல்வி கற்றனர். புதிய ஆய்வுகள் , புதிய செய்திகள் அனைத்தையும் இணைய வழியில் கற்க முடியும்.

இன்றைய காலத்தில் கல்வி போதிக்கும் முறையும், கல்வி பயிலும் முறையும் சுலபமாகிவிட்டது. கல்வி கற்க விரும்புவோர் புத்தகத்தை இணையவழியில் மின் புத்தகங்களாக ( இ - புக்) என்கிற முறையில் செல்பேசியில் பதிவிறக்கம் செய்ய முடிகிறது. கல்வி நமக்கு அறிவை தந்து, நமது ஆற்றலை இரு மடங்காக்கி, நம்மைத் தலைசிறந்த மனிதனாகுகிறது.


           இந்த உலகத்தில் கல்வியால் உயர்ந்தவர்கள் என நாம் பலரைக் குறிப்பிடலாம். அவர்களுள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், ஆப்ரஹாம் லிங்கன், பிளாட்டோ, டெசி தாமஸ், கல்பனா சாவ்லா போன்றவர்கள் என இன்னும் பலர் உள்ளனர். ஏவுகணை நாயகன் என்று குறிப்பிடப்படும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், இந்திய நாட்டின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றினார். கற்பதில் திடமான ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். கல்வியால் டாக்டர் ஏபிஜே அவர்கள் உயர்வான நிலைக்குச் சென்றார். உலகமே இவரைப் பற்றிப் பேசுவதற்கு "கல்வியறிவே" இன்றியமையாத காரணியாக அமைந்தது.


                   ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா அவர்கள். இவரின் கல்வியறிவு இவரை உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது. பாற்கடலை போல் அகன்று விரிந்த கல்வியின் நோக்கமே "கசடற கற்றலே" ஆகும். நாம் கற்கும் கல்வியால் நாமும் பயனடைய வேண்டும், நமது சமுதாயமும் பயனடைய வேண்டும்.


        "யானை வரும் பின்னே
         மணியோசை வரும் முன்னே ! "

                 என்றென்றும் ஒருவருக்கு மணியோசையைப் போல கல்வி திகழ வேண்டும். ஒவ்வொருவரின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் கல்வியைக் கற்பதன் மூலம் வெளிக்கொணரமுடியும்.
நாணயத்தில் இருபுறம் இருப்பதைப் போல புற அறிவையும் , அகச்செறிவையும் ஒருமைப்படுத்தும் கல்வியே சிறந்த கல்வியாகும்.

             மனிதர்களின் மூளைக்கும் இதயத்திற்கும் பாலமாகக் கல்வி விளங்க வேண்டும். நல்ல மனிதர்களை உருவாக்கும் கல்வியே மகத்தான கல்வியாகும். அத்தகைய " கல்வியின் நன்மைகள் தீமைகளை ஆராய்ந்தும் பிறர் துன்பத்தை தீர்க்கும் மருந்தாகும், தன் காலில் தானோன்றி நிற்க உதவுவதும் கல்வியே " என்பார் விவேகானந்தர்.


                  கல்வி என்னும் வேரூன்றி, கற்றவர்களும் தலையவும், தேசம் உயரவும் வேண்டும். ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் கல்வித் தரத்தை பொருத்தே அமைகிறது. இன்றைய கற்பித்தல் முறை மாணவர்களைத் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைகிறது. என்றென்றும் கற்பித்தல் என்பது மாணவர்களின் அறிவையும் , செயலாற்றலையும் வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


                  இன்று அரசாங்க வேலைகளில் கூட சாதி , மத பாகுபாட்டை ஏற்படுத்தி இருக்கின்றனர். எதற்கு கல்வியில் சாதி மத வேறுபாடு ? கல்வி கற்பதும், அரசாங்க வேலை பெறுவதும் 
அனைவரின் உரிமையாகும். 

     "சாதிகள் இல்லையடி பாப்பா,
      குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார் பாரதியார்.

                ஆனால் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி முறையிலே, ஒவ்வொரு அரசாங்க வேலைகளுக்கும் இந்த சாதி, மதம் என இத்தனை சதவீதம்(%) என்று அரசாங்க வேலையை சாதி, மதங்களே நிர்ணயம் செய்கிறது.

  ஏன் கல்வியை கையூட்டு வாங்காமல் ; அரசாங்க வேலைகளில் சாதி, மத சதவீதம் பார்க்காமல் ; அனைவருக்கும் சமரச கல்வியைக் கொண்டு வர முடியாது ? ஏன் பணத்தால் கல்வியை பாகுபடுத்த வேண்டும்? ஏன் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டங்கள் வழங்க முடியாது?

                   அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது என்றென்றும் கல்விச்செல்வமே என்று என் அம்மா எனக்கு அடிக்கடி நினைவூட்டுவார். அச்செல்வத்தை (கல்வியை) முறையாக கற்று, ஒவ்வொருவரும் சிறந்த உயரத்துக்குச் செல்ல வேண்டும். கல்வியால் உயர்ந்தவர்களை முன் உதாரணமாகக் கொண்டு அழியாச் செல்வமான கல்வியைப் பெறுவோம், நாமும் உயர்வோம்.


"ஒறுமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப் புடைத்து" 
   ‌ - செந்நாப்போதார்



"நீண்டகாலப் போராட்டத்திற்கு பிறகு 
தான் தெரிந்தது
கற்ற கல்வியைத் தவிர, உற்ற
துணை வேறெதுவும் இல்லை என்று ! "

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...