"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக"
- திருவள்ளுவர்
கல்வி நமக்கு வரமாகும். அத்தகைய கல்வியை கற்று நாம் மேம்பட வேண்டும். கல்வியை கற்பதன் மூலம் நல்லொழுக்கம் , அறிவு , தெளிவு, நாகரிகம் ,பண்பாடு, விடாமுயற்சி, திறமை,.., ஆகியவை நம்மால் வளர்த்துக் கொள்ள முடியும். கல்வியை நாம் கற்றால் மட்டும் போதாது மேலும் அதைப் பின்பற்றவும் வேண்டும், பிறருக்கு கற்பித்தலும் நம் கடமையாகும்.
கல்வி என்பது மனித வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மன வளர்ச்சியையும் மேன்மைப்படுத்துகிறது. ஒருவர் என்னிடம் கேட்டார் "பல டிகிரிகள் படித்தால் மட்டும் பணம் கிடைக்குமா ?" என்றார். அதற்கு நான், பல டிகிரிகள் படித்தால் பணம் கிடைக்காது, ஆனால் கல்வி நமக்கு பணம் உள்ளபோது எவ்வாறு பண்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தருகிறது என்றேன்.
"கண்ணுடையார் என்பார் கற்றோர்"
-திருவள்ளுவர்
பழங்காலங்களில் மனிதர்கள் ஒவ்வொருவரும் பார்த்து பேசி பழகிக் கொண்டும் ஒருவருக்கொருவர் கதையை பரிமாறிக் கொண்டும் அறிவை வளர்த்தார்கள். இன்றைய காலத்தில் கல்வி என்னும் பொக்கிஷம் நமக்கு கிடைத்திருக்கிறது மேலும் இன்றைய மாணவர்களுக்கு கல்வி கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
கல்வியை பயிலும் மாணவர்களுக்கு, பயிற்றுவிக்க ஆசிரியர்களும் இன்றைய காலகட்டத்தில் ஆர்வமுடன் உள்ளனர். "கல்வியைக் கற்றால் மற்றும் மேம்பட முடியுமா ?" என்றால் அது இன்றைய அளவிலும் கேள்விக்குறியாக தான் உள்ளது. பற்றி முழுமையாக கற்று அதை முழுமையாக பின்பற்றும் போது தான் ஒருவர் மேம்பட முடியும்.
கல்வி நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகும். கல்வியை கற்றதன் மூலம் மூடத்தனத்தையும் , பல முட்டாள்தனத்தையும் வேரறுக்க முடியும். சாதாரண நபரை பொறுப்புள்ள நபராக மாற்ற கல்விக்கு பெரும்பங்கு உண்டு. கல்வி மனிதனை வாழ வைத்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த தேர்ந்த எதிர்காலத்திற்கும் வழிவகுக்கிறது.
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"
கல்வியறிவு கொண்ட மக்கள் அதிகம் உள்ள நாடே பொருளாதாரத்தில் தலைசிறந்த நாடாகவும் ; கல்வி அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு கொண்ட மனிதனே தலைசிறந்த மன்னனாகவும் அமைவதால் கல்வியின் முக்கியத்துவம் நமக்கு புரிகிறது. கல்வியைக் கூர்ந்து முழுமையாக கற்பதன் மூலம் நல்ல புதிய புதிய அரிய கண்டுபிடிப்புகளை இயற்றவும் முடிகிறது.
"ஆசிரியர் மையம முறை " ஆக இருந்த கல்வி இன்று "மாணவர் முறையாக " மாறி உள்ளது. முன்னொரு காலத்தில் கல்வி கற்க குருகுலம், ஆசிரியர் இல்லம், ஆலமரத்துப் பள்ளிக்கூடம் என்று மாணவர்கள் ஆசிரியரிடம் தேடிச் சென்று கல்வி கற்றுக் கொண்டனர். அக்காலகட்டத்தில் ஒழுக்கமும் பண்பாடுமே முதன்மை பெற்றிருந்தது என்று என் தாத்தா கூறுவார்.
இன்றைய காலத்தில் கல்வியை கற்க புதிய புதிய வழிகள் உள்ளன. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் , இணைய வழிகள், நூலகங்கள் போன்ற பல வழிகள் இருக்கின்றன. 2020 ஆம் ஆண்டு "கொரோனா" என்ற பெருந்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலை ஏற்பட்ட போதும், கல்வி தடைபடாமல் "இணையவழியில்" மாணவர்கள் அனைவரும் கல்வி கற்றனர். புதிய ஆய்வுகள் , புதிய செய்திகள் அனைத்தையும் இணைய வழியில் கற்க முடியும்.
இன்றைய காலத்தில் கல்வி போதிக்கும் முறையும், கல்வி பயிலும் முறையும் சுலபமாகிவிட்டது. கல்வி கற்க விரும்புவோர் புத்தகத்தை இணையவழியில் மின் புத்தகங்களாக ( இ - புக்) என்கிற முறையில் செல்பேசியில் பதிவிறக்கம் செய்ய முடிகிறது. கல்வி நமக்கு அறிவை தந்து, நமது ஆற்றலை இரு மடங்காக்கி, நம்மைத் தலைசிறந்த மனிதனாகுகிறது.
இந்த உலகத்தில் கல்வியால் உயர்ந்தவர்கள் என நாம் பலரைக் குறிப்பிடலாம். அவர்களுள் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், ஆப்ரஹாம் லிங்கன், பிளாட்டோ, டெசி தாமஸ், கல்பனா சாவ்லா போன்றவர்கள் என இன்னும் பலர் உள்ளனர். ஏவுகணை நாயகன் என்று குறிப்பிடப்படும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், இந்திய நாட்டின் 11 வது குடியரசு தலைவராக பணியாற்றினார். கற்பதில் திடமான ஆர்வம் கொண்டவராகவும் விளங்கினார். கல்வியால் டாக்டர் ஏபிஜே அவர்கள் உயர்வான நிலைக்குச் சென்றார். உலகமே இவரைப் பற்றிப் பேசுவதற்கு "கல்வியறிவே" இன்றியமையாத காரணியாக அமைந்தது.
ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா அவர்கள். இவரின் கல்வியறிவு இவரை உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது. பாற்கடலை போல் அகன்று விரிந்த கல்வியின் நோக்கமே "கசடற கற்றலே" ஆகும். நாம் கற்கும் கல்வியால் நாமும் பயனடைய வேண்டும், நமது சமுதாயமும் பயனடைய வேண்டும்.
"யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே ! "
என்றென்றும் ஒருவருக்கு மணியோசையைப் போல கல்வி திகழ வேண்டும். ஒவ்வொருவரின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் கல்வியைக் கற்பதன் மூலம் வெளிக்கொணரமுடியும்.
நாணயத்தில் இருபுறம் இருப்பதைப் போல புற அறிவையும் , அகச்செறிவையும் ஒருமைப்படுத்தும் கல்வியே சிறந்த கல்வியாகும்.
மனிதர்களின் மூளைக்கும் இதயத்திற்கும் பாலமாகக் கல்வி விளங்க வேண்டும். நல்ல மனிதர்களை உருவாக்கும் கல்வியே மகத்தான கல்வியாகும். அத்தகைய " கல்வியின் நன்மைகள் தீமைகளை ஆராய்ந்தும் பிறர் துன்பத்தை தீர்க்கும் மருந்தாகும், தன் காலில் தானோன்றி நிற்க உதவுவதும் கல்வியே " என்பார் விவேகானந்தர்.
கல்வி என்னும் வேரூன்றி, கற்றவர்களும் தலையவும், தேசம் உயரவும் வேண்டும். ஒரு நாட்டின் வளம் அந்த நாட்டின் கல்வித் தரத்தை பொருத்தே அமைகிறது. இன்றைய கற்பித்தல் முறை மாணவர்களைத் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அமைகிறது. என்றென்றும் கற்பித்தல் என்பது மாணவர்களின் அறிவையும் , செயலாற்றலையும் வளர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இன்று அரசாங்க வேலைகளில் கூட சாதி , மத பாகுபாட்டை ஏற்படுத்தி இருக்கின்றனர். எதற்கு கல்வியில் சாதி மத வேறுபாடு ? கல்வி கற்பதும், அரசாங்க வேலை பெறுவதும்
அனைவரின் உரிமையாகும்.
"சாதிகள் இல்லையடி பாப்பா,
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார் பாரதியார்.
ஆனால் இன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி முறையிலே, ஒவ்வொரு அரசாங்க வேலைகளுக்கும் இந்த சாதி, மதம் என இத்தனை சதவீதம்(%) என்று அரசாங்க வேலையை சாதி, மதங்களே நிர்ணயம் செய்கிறது.
ஏன் கல்வியை கையூட்டு வாங்காமல் ; அரசாங்க வேலைகளில் சாதி, மத சதவீதம் பார்க்காமல் ; அனைவருக்கும் சமரச கல்வியைக் கொண்டு வர முடியாது ? ஏன் பணத்தால் கல்வியை பாகுபடுத்த வேண்டும்? ஏன் அனைவருக்கும் ஒரே பாடத்திட்டங்கள் வழங்க முடியாது?
அழிவில்லாத சிறந்த செல்வம் என்பது என்றென்றும் கல்விச்செல்வமே என்று என் அம்மா எனக்கு அடிக்கடி நினைவூட்டுவார். அச்செல்வத்தை (கல்வியை) முறையாக கற்று, ஒவ்வொருவரும் சிறந்த உயரத்துக்குச் செல்ல வேண்டும். கல்வியால் உயர்ந்தவர்களை முன் உதாரணமாகக் கொண்டு அழியாச் செல்வமான கல்வியைப் பெறுவோம், நாமும் உயர்வோம்.
"ஒறுமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப் புடைத்து"
- செந்நாப்போதார்
"நீண்டகாலப் போராட்டத்திற்கு பிறகு
தான் தெரிந்தது
கற்ற கல்வியைத் தவிர, உற்ற
துணை வேறெதுவும் இல்லை என்று ! "

"கற்றோர் சென்ற இடமெல்லாம் சிறப்பு .."
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகல்வியா ?செல்வமா? வீரமா?
ReplyDeleteகல்வி கற்றால் அறிவுச்செல்வமும் அசைய வீரமும் தானாக வந்து சேரும்💯