நம் அனைவருமே நமது உடல் மற்றும் மன நலம் பேணிட பல வழிமுறைகளை மேற்கொள்கிறோம். உடல் நலம் மன நலத்தை காக்கின்றதா இல்லை மனநலம் உடல் நலத்தை மேம்படுத்துகிறதா என்பதற்கான பதில் சற்றே சவாலானதே. காற்று வந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற சந்தேகமே இன்னும் தீர்ந்தபாடில்லையே.
இதில் மனநலத்தை மேம்படுத்திட பல நுட்பங்களை கையாள்கிறோம். மனதின் கட்டுப்பாட்டில் நாம் பிடி படுவதை விட, மனதினை நாம் நம் பிடியில் பிடித்து வைக்கும் போது எண்ணியதை கைப் பற்றிட முடிகிறது.
அவ்வாறான நுட்பங்களில் ஒன்று தினமும் positive affirmations “நான் நன்றாக இருக்கிறேன்”, “நான் நினைத்தது நிறைவேறுகிறது” ‘என் பணியை நான் சிறந்த முறையில் செய்து முடிக்கிறேன்” என பாசிட்டிவான வாக்கியங்களை சொல்ல சொல்ல நமக்கு நேர்மறையான விஷயங்கள் நடக்கும் என்ற psychological factors ஐ பலரும் கடைப்பிடிக்கிறோம்.
இதேபோல் உங்கள் வாழ்வில் நல்லவற்றை எண்ணிப்பாருங்கள், அவ்வாறான நல்லவைகள் பல்கிப் பெருகும் என்பதுவே Count your blessings என்பதின் சாராம்சம். நல்லனவற்றை எண்ணிப் பார்ப்பது நமது சுய புலம்பல்களை தவிர்க்கும். “என்னிடம் இது இல்லையே”, “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?”, “நான் மட்டும் ஏன் இவ்வாறு கஷ்டப்பட வேண்டும்”, “நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே” போன்ற சொற்றொடர்கள் இன்றைய அன்றாட வாழ்வில் பலருடைய ரீங்காரமாக இருக்கின்றது. இதை தவிர்க்க நாம் நேர்மறை வாக்கியங்களுடன் அவற்றை திரும்பத் திரும்ப எண்ணி நன்றி உணர்வினை வெளிப்படுத்திக் கொண்டே இருத்தல் பயனளிக்கின்றது.
இவ்வரிசையில் Sense of Gratitude என்பது புதுவரவு. நன்றியுணர்வு.இந்த நன்றியுணர்வு நிலையில் எதிர்மறை சிந்தனைகள் மட்டுப்படுத்தப்பட்டு, நாம் வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டிய விஷயங்கள் மேல் அக்கறை செலுத்த ஆரம்பிக்கின்றோம்.“இன்று காலை நான் ஆரோக்கியமாக இருப்பதற்கு நன்றி. “ “எனக்கு கிடைத்த சத்தான உணவிற்கு நன்றி. “ “இன்று நான் பத்திரமாக அலுவலகம் வந்தடைந்ததற்கு நன்றி. “ இவையே கிடைத்ததற்கு நம் நன்றியுணர்வினை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் மாதிரி வாக்கியங்கள்.
இந்த இடத்தில் சற்றே மாறுபட்டு சிந்திப்போமா? ‘நான்’ என்று சொல்லும் போது ஒட்டாத உதடுகளை ‘நாம்’ என்று சொல்லி இணைப்போமா?நன்றியுணர்வினை ‘நான்’ என்பதை முன்னிலைப்படுத்தி மட்டுமே செய்யாமல், இந்த வட்டத்திற்குள் நம்முடன் சார்ந்தவர்களையும் இணைத்துக் கொள்ளும் போது, வாழ்வில் நமக்கான நேர்மறையான எண்ணங்கள், நல்ல விஷயங்கள் யாவுமே மேலும் பெருகுவதை காண முடிகின்றது.
நன்றியை நமக்கு நாமே உரைப்பதோடு அல்லாமல், அந்த நன்றி உணர்வினை நமது அன்றாட வாழ்வில் உடன் பயணிக்கும் ஒவ்வொருவரிடமும் வாய்விட்டு பகிர்ந்து அளிக்கும் போது, மேலும் நல்லுணர்வுகள் மேலோங்குவதை காண முடிகிறது.அந்தப் பரவசத்தை நாம் உணர்ந்தால் மட்டுமே அது தரும் சுகத்தை அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக நாம் வேலை செய்யும் அலுவலகங்களில் நமக்கு முன்னர் வந்து கதவை திறந்து வைப்பவர் அலுவலகத்தின் உதவியாளர். அது அவரது வேலை தான். அதற்காகத்தான் அவருக்கு சம்பளமும் தரப்படுகிறது. ஆனால் நாம் அவருக்கு நன்றி சொல்லி நகரும்போது அவருக்கு அது அன்றைய நாளின் உத்வேகமாக அமைவதோடு, தான் ஏதோ சாதித்து விட்டது போன்ற உணர்வினையும் தருகிறது. இதைத் தொடர்ந்து செய்யும்போது நம் மீதான மதிப்பும் அவர்களது மனதில் உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தான் வீட்டிற்கு காய்கறி, பழ வகைகளை வியாபாரம் செய்ய வருபவர்களிடமும்,வாங்கும் பொருளுக்கு தகுந்த பணத்தைக் கொடுத்துவிட்டு கூடவே நன்றியையும் உரைக்கும் போது, அடுத்த முறை அக்கறையுடன் நமக்கானதைப் பார்த்து வாங்கி வந்ததாக அவர்கள் உரைப்பதைக் கேட்க முடியும். எத்தனை முறை நாம் பயணம் செய்யும் பேருந்து ஓட்டுனரிடம் நன்றி சொல்கிறோம்? ஒருமுறை சொல்லித்தான் பார்ப்போமே. அவர் தனது புன்னகையின் மூலம் நம்மை மனதால் வாழ்த்தி, நமக்கான நேர்மறை எண்ணங்களைத் தருகிறார் என்பதை அனுபவிப்போமா?
ஒருமுறை ரயிலில் பயணித்த போது புகை வண்டியை இயக்கியவரைப் பார்த்து நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்று எனது மனது விரும்ப, தேடிச் சென்று நன்றி உரைத்த போது, அவர் கண்களில் நீர் தழும்ப மிகவும் நெகிழ்ச்சியாக உணர்வதாகவும், தேடி வந்து நன்றியுரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி எனவும் வாழ்த்தியது இன்றளவும் மனதில் பசுமையாய் இருக்கிறது.
வயதில் மூத்தோர் - இளையோர், அதிகாரத்தில் மூத்தவர் - இளையவர், படிப்பறிவு உடையவர் - இல்லாதவர், என எந்தப் பாகுபாடும் இன்றி இயங்கக்கூடிய ஒரு தளம் இந்த நன்றி உணர்வினை வெளிப்படுத்தி , நாம் பிறருடன் இணைந்து பயணிக்கும் தளம் மட்டுமே.
நாம் அனைவரும் இத்தளத்தில் பயணித்து நமக்கான மனநலத்தினை மேம்படுத்திக் கொள்வோமா?நன்றியுணர்வு கொடுக்க கொடுக்க ஊறும் கேணி. நமக்கான நல்லுணர்வை கொடுத்துக் கொண்டே இருக்கும் அமுதசுரபி.
நன்றியுணர்வினைப் பற்றி பகிர்ந்தளித்த என் எண்ணங்களை ஆவலுடன் படித்த நல் உள்ளங்களுக்கு எனது நன்றிகள்.

சிறந்த கட்டுரையைத் தாங்கள் வழங்கியமைக்கு நன்றி...😊🙏
ReplyDelete