Saturday, July 1, 2023

அனைவருக்குமான அரசியல்: மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவத்தை நோக்கி - க. கோடீஸ்வரன்

 




ஏப்ரல் 26 அன்று, நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பெங்களூருவில் ஆம் ஆத்மி கட்சியினர் பரப்புரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளி தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், அவர்களது சக்கர நாற்காலிகளுக்கு அனுமதி பெறவில்லை என்பதை காரணமாகக் கூறி தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். சக்கர நாற்காலியும் ஒரு வாகனம் என்பதால் அதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது அதிகாரிகளின் வாதம்.

அதிகாரிகளின் இந்த தவறான நடவடிக்கை என்பது மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் மீதான பாகுபாடு/உரிமைமீறல் ஆகும். அரசியல் கட்சிகளில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளால், நேரடி அரசியல் செயல்பாடுகளில் பங்குபெறும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை மிக சொற்பம். இதன் காரணமாக மாற்றுத்திறனாளி தொண்டர்கள், வேட்பாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் பற்றிய ஒரு அறியாமை நீண்ட காலமாக அதிகாரிகள் அளவிலும் கட்சிகள் அளவிலும் நிலவி வருகிறது. 2016ல் கொண்டு வரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் இது போன்ற மறுதலிப்புகளை பாரபட்சமான மனப்பாங்கு என வரையறுக்கிறது. 

ஒரு தனி நபர் அரசியல் தளத்தில் நுழைவதற்கான முதல் படிநிலையாக அரசியல் கட்சிகள் உள்ளன. அரசியலில் அதிகார மையத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பை இவை வழங்குகின்றன. சட்டசபைத் தேர்தலில், ஒரு கட்சியின் சார்பாக ஒருவர் போட்டியிடும் போதும் வெற்றி பெறும் போதும் அதிகாரத்தை நோக்கிய அந்த நகர்வு முழுமையடைகிறது. அந்த வகையில் ஒரு சமூகத்திற்கு பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் அரசியல் கட்சிகளுக்கு பிரதான பங்குள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பூர்வமாகவும் முழுமையாகவும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட எண்ணற்ற தடங்கல்கள் உள்ளன.  

முதலாவதாக, பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் தகவல்களை வழங்கவும் பெறவும் அரசியல் கட்சிகளின் இணையதளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பெரும்பாலான கட்சி இணையதளங்கள் உறுப்பினர்களுக்கென பிரத்யேகப் பகுதியை கொண்டுள்ளன. இவற்றின் மூலம் உறுப்பினராக சேரவும், நிதி வழங்கவும் முடியும். மேலும் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும், இணையவழி சந்திப்புகளிலும் உரையாடல்களிலும் பங்குபெறவும் இந்த தளங்கள் சந்தர்ப்பம் வழங்குகிறது. இதன் காரணமாக கட்சி இணையதளங்கள் வெறும் தகவல்களின் ஆதாரமாக மட்டுமல்லாமல், பன்முகத்தன்மை கொண்டதாக ஆகிவிட்டன. 

9 தேசியக் கட்சிகளுடைய இணையதளங்களின் அனைவரும் அணுகும்தன்மை ஒரு பொதுவான இணையதள சோதனைமுறையின் படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. புகைப்படங்களுக்கான எழுத்துவடிவ விளக்கங்கள்,  இணைப்புச்சுட்டிகளுக்கான விளக்கங்கள், காட்சியமைப்பை (contrast adjustment) சரி செய்தல் போன்ற அடிப்படை பயன்பாட்டு வசதிகளை கூட பெரும்பாலான தளங்கள் முழுமையாக கொண்டிருக்கவில்லை.

இரண்டாவதாக, தேர்தல் பரப்புரையின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தகைய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. கட்சிக் கூட்டங்களுக்கும் பரப்புரைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை அடிப்படை தேவையாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறிப்பிடவில்லை.

மூன்றாவதாக, அரசியலில் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் பல மட்டங்களிலும் சந்திக்கும் இடர்பாடுகளை அடையாளம் காண முறையான ஆவணங்களோ ஆய்வுகளோ இல்லை. இத்தகைய தகவல்களின் பற்றாக்குறை சட்டப்பூர்வமாகவும் கொள்கைரீதியாகவும் அவர்களை புறக்கணிப்பதாகவே கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016- பகுதி 16ன் படி, தேர்தல் நடைமுறைகள் மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் வகையில் அமைவதை தலைமை தேர்தல் ஆணையமும் மாநிலத் தேர்தல் ஆணையமும் உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வரைவு தேசியக் கொள்கையில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் அதிகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு முற்றிலும் மாறாக, பிற நாடுகளின் ஜனநாயக அமைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக இங்கிலாந்தின் சமத்துவ விதிகள் 2010 ன்படி அரசியல் கட்சிகள் நேடியாகவோ மறைமுகமாகவோ மாற்றுத்திறனாளி உறுப்பினர்களிடமும் வேட்பாளர்களுடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்கிறது.

2018ல் மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறும் வகையில் கட்சிகளையும் உள்ளடக்கிய தேர்தல் செயல் திட்டத்தை முன்வைத்தது. அதன்படி மிக விரிவாக ஐந்து பரிந்துரைகளை முன்மொழிந்தது- மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 

- அரசியலமைப்பையும் தேர்தல் அறிக்கைகளையும் உருவாக்குதல்
-  இணையதளங்களை ஏற்ற வகையில் வடிவமைத்தல்
- அனைத்து தேர்தல் பரப்புரை மற்றும் ஆலோசனைக் கூட்டங்களிலும் தக்க வசதிகள் செய்தல்
- வாக்குப் பதிவு மைய முகவர்கள் அளவில் பிரதிநிதித்துவம் அளித்தல்
- மாற்றுத்திறனாளிகளுடைய பங்களிப்பின் அவசியத்தை முகவர்கள் அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

இந்த பரிந்துரைகளை கட்சிகள் நடைமுறைப்படுத்துவதற்கான எந்த உறுதியும் இல்லை. இணையவழி தேர்தல் பரப்புரைகளும் இந்த பரிந்துரைகளை முற்றிலும் புறந்தள்ளியே வருகிறது. காணொளிகளுக்கோ புகைப்படங்களுக்கோ எந்த எழுத்துவடிவ விளக்கங்களோ, சைகைவழி விளக்கங்களோ சேர்க்ப்படுவதில்லை. 

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளும் வாக்குப்பதிவு மற்றும் அது சார்ந்த ஏற்பாடுகள் என்ற வரையறைக்குள்ளேயே நின்றுவிடுகிறது. வாக்குப்பதிவிற்கு முந்தைய தேர்தல் செயல்பாடுகளில் இருக்கும் இத்தகைய புறக்கணிப்புகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

மாற்றுக்கட்சியினர் மீது விமர்சனத்தை முன்வைக்கும் போது, மாற்றுத்திறனாளிகளை நேரடியாக மறைமுகமாகவோ தரக்குறைவாக குறிப்பிட்டும் ஒப்பிட்டும் அரசியல்வாதிகள் பேசுவது இயல்பாக நிகழ்ந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகள்  நடத்தை விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளால் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் இருந்து தப்பி விடுகிறது. கண்ணியமான தேர்தல் செயல்பாடுகளையும் பரப்புரைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. எடுத்துக்காட்டாக நடத்தை விதிமுறை எண் 84, பெண்களின் மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எதிரான எந்தவிதமான செயல்களையோ, பேச்சுக்களையோ தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. ஆனால் அவை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

சமீபத்தில், பிரதமர் சக்கர நாற்காலியில் உள்ள மாற்றுத்திறனாளி தொண்டருடன் மனதை நெகிழச் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். பிரதமரின் இந்த அங்கீகாரம் நேரடி அரசியலில் ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு கோரிக்கைக்கு மேலும் வலுசேர்க்கிறது. பெங்களூரு தேர்தல் அதிகாரிகளின் வாதப்படி சக்கரநாற்காலி ஒரு வாகனமாக கருதப்பட்டுருந்தால், இந்த புகைப்படத்திற்கான அனுமதி கிடைத்திருக்காது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்சியின் அனைத்து மட்டங்களிலும் பங்குபெறும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் அரசியல் கட்சிகள் சமத்துவத்திற்கான கலங்கரை விளக்கமாக செயல்பட முடியும். கட்சி அலுவலகங்களிலும், பரப்புரைகளின் போதும் தக்க கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வது, பொதுக்கூட்டங்களிலும் பரப்புரைகளிலும் பங்கேற்க தகுந்த போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது, மாற்றுத் திறனாளி தொண்டர்களுக்கு தகுந்த வழிகாட்டுதலையும் நிதி ஆதரவையும் வழங்குவது போன்ற உபாயங்களை கட்சிகள் கடைபிடிக்கலாம். ஐரோப்பிய மனித உரிமைகள் ஆய்வறிக்கை இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கடைபிடிக்க கூடிய பல வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அதிலிருக்கும் சில அம்சங்களை தேர்ந்தெடுத்து, தேர்தல் சமயத்தில் மட்டுமல்லாது, அனைத்து சமயங்களிலும் கட்சிகள் பின்பற்றுவதை உறுதி செய்யலாம்.

இந்த ஆண்டு பல மாநிலத் தேர்தல்களும், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய சிறுபான்மையினரை இந்திய தேர்தல் ஆணையமும் கட்சிகளும் இந்த முறை கைவிடாது என நம்புகிறேன்.

                      
எழுதியவர்- ஷஷான்க் பாண்டே (Shashank Pandey)

உடைபடட்டும் கலாச்சார மௌனங்கள் - 1 - பூங்கொடி பாலமுருகன்

 




"  கமலா..... நான் ஆபிஸ் கிளம்பணும்..நேரமாச்சு. உன் பையன் பாத்ரூமுக்குள்ள போனது இன்னும் வெளிய வரல. ஒரு மணி நேரமா உள்ள என்னதான் பண்றான்?".


" டேய்...கேட்ட கேள்விக்கு நின்னு பதில் சொல்லிட்டு போடா...என்னடா 

முறைக்கிற?. எல்லாம் நீ புள்ள வளத்தின  லட்சணம்டீ.." 


" ஏண்டீ..ஒரு மணி நேரமா கண்ணாடி முன்னாடியே நிக்கறையே..இந்தக் 

கண்ணாடிக்கு வாய் இருந்தா கதறிரும்".


" சின்ன  புள்ளயா இருக்கும் போது நல்ல கலகலன்னுதான் பேசிட்டு இருந்தா. இப்போ என்ன ஆச்சுன்னு தெரில..யார்கூடவும் சரியா பேசறது இல்ல.எப்பவும் எதையோ தொலைச்ச மாதிரி இருக்கா!"


" எது பேசினாலும் எதுத்து பேசுற..விவாதம் பண்ற. ஒரு மட்டு மரியாதை இல்ல".


" என்னமோ ப்ரெண்ட்ஸ் கூட குசு குசுன்னு   பேசிட்டு இருக்கா.நம்ம உள்ள போனா அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கா" 


"ஏங்க...நேத்து நம்ம பையன் பாண்ட் பாக்கெட்ல சிகரெட்டை பார்த்தேன். எனக்கென்னமோ அவன் தப்பான வழியில் போய்ட்டு இருக்கானோ அப்படின்னு பயமா  இருக்குதுங்க".


 இப்படி நிறைய நிறைய உரையாடல்கள் பக்கத்து வீட்ல, எதுத்த வீட்ல, மேல் வீட்ல, கீழ் வீட்ல ஏன் உங்க வீட்ல கூட கேட்குமே!..அப்போ உங்க வீட்ல 13 வயசுக்கு மேற்ப்பட்ட  பிள்ளைகள் கண்டிப்பாக  இருப்பாங்க. என்ன நான் சொல்றது சரி தானே..


பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது அவங்களோட சின்ன சின்ன செயல்களையும், அவர்களின் வளர்ச்சியையும்  பார்த்து மகிழ்ச்சி அடைகிற நமக்கு ஏன் அவங்க வளர வளர வயதில் நெருப்பு கட்டிய உணர்வு வருகிறது?. நம்ம தூக்கி வளர்த்த குழந்தை வளர்ந்து சிறகு அவனுக்கு/ அவளுக்கு சிறகு முளைக்க தொடங்கிவிட்டது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத நிதர்சனம். தன் பிள்ளைகளை தன் கனவின் நீட்சியாக, தன் உடமைப் பொருளாக நினைக்கும் மனோபாவம்தான்  எல்லாவற்றிக்கும் காரணம். 


உண்மையைச் சொல்லப் போனால் அந்த வயதைக் கடந்து வந்த நாம் , அதே அனுபவங்களை, அதே சந்தேகங்களை கடந்து வந்த நாம், நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பது போல நடந்து கொள்கிறோம் என்பதுதான் உண்மை.


நாமும் நமது சமூகமும், அந்த பதின் பருவப் பிள்ளைகளின் பல பல கேள்விகளுக்கு நேர்மையான பதில்களைச் சொல்லி இருக்கிறோமா?. அவர்களின் உணர்வுகள் குறித்து ஒரு நிமிடமாவது அவர்கள் பார்வையில் யோசித்து பார்த்து இருக்கிறோமா? நிறைய நேரங்கள் மௌனம் மட்டும்தான் நம் பதிலாக இருக்கிறது. இல்லை என்றால் 'வாயை மூடு இந்த வயதில் உனக்கு இது தேவை இல்லாதது' என்ற அடக்குமுறையை பிரயோகிக்கிறோம். இதற்கான காரணம் நம்மிடம் இருக்கிற கலாச்சார மௌனம்.

             

குழந்தைப் பருவத்திற்கும், வயது வந்த பருவத்திருக்கும் இடைப்பட்ட காலம்தான் இந்த வளரிளம் பருவம். 13 வயதில் இருந்து பதினெட்டு வரை என்று நம் நாடுகளில் வரையறை செய்து இருக்கிறோம். உலக சுகாதார நிறுவனம் 10  வயதில் இருந்து 19 வயது வரை உள்ள பருவம் என்று குறிப்பிடுகிறது. இந்த வளர் இளம் பருவம் மகிழ்ச்சி, கொண்டாட்டம், புரியாமை, ஆச்சரியம்  நிறைந்த பருவம்.இந்த நேரத்தில் அவர்களின் உடல், மனம் எல்லாவற்றிலும் மாறுதல்கள் வரும். உடல், மன உணர்வுகளில் ஊசலாட்டம் வரும்.ஹார்மோன்களின் விளையாட்டுகள் மெல்லத் தொடங்கும். தன் இருப்பை முக்கியமாய் கருதும் நட்பு வட்டம்தான் முக்கியமான ஒன்றாகத் தோன்றும். சரியான அணுகுமுறை இல்லை என்றால் இந்த அழகிய பருவம் மகிழ்ச்சியற்ற, ஆறாத வடுவை ஏற்படுத்திவிடும். இந்த முக்கியமான கால கட்டத்தில் அவர்கள்  உடல், மன மாற்றங்கள் வெகு வேகமாய் நிகழும்.


என்ன என்ன மாற்றம் வரும்? கொஞ்சம் யோசிப்போம். நாம் கடந்து வந்ததுதானே. குரலில் மாற்றம், மீசை தாடி வளர்த்தல், அக்குள் மற்றும் ஆண் பெண் உறுப்புகளில் முடி வளர்தல், பருக்கள், மார்பக வளர்ச்சி, மாதவிடாய் தொடக்கம், ஆண் குழந்தைகளுக்கு இரவில் உறக்கத்தில் விந்து கழிதல், தோற்றம் பற்றிய மதிப்பீடுகள்......இப்படி மாற்றங்கள் வரும்.இவை உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமே. மனம் இன்னும் அதிவேகமான மாற்றங்களை சந்திக்கும். அந்த உடல், மன மாற்றங்களை பற்றி நாம் நம் பிள்ளைகளிடம் பேசி இருக்கிறோமா? 

        

இதுவரை பேசாவிட்டால்கூட இனி பேசலாம். நம்மிடம் இருக்கும் கலாச்சார மௌனம் உடைக்கப்பட வேண்டும். இல்லை என்றால் நம் குழந்தைகள் கற்றுக் கொள்ள இந்த கணினி யுகம் ஏராளமான வழிகளை கொடுக்கும். அந்த வழிகள் மட்டும் சரியாக இல்லாமல் தவறாக இருந்துவிட்டால் அந்த பிள்ளையின் வாழ்வே கேள்விக்குறியாகி விடும். எனவே இந்த வயதில் அவர்களுக்கு தேவை சரியான வழிகாட்டுதலும், நல்ல நட்பான அணுகுமுறையும் தான்.


பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். 

       

பெற்றோர்களாகிய நாமும் அந்த வயதை கடந்து தான் வந்திருக்கிறோம். எனவே நம்முடைய அனுபவங்கள் கண்டிப்பாக நம் பிள்ளைகளுக்கு பயன்படும். அவர்களுடன் மனம் திறந்து பேசுவது இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. உடலைப் பற்றிய ஒரு சரியான புரிதலை அவர்களுக்கு இந்த நேரத்தில் தர வேண்டும். 

          

இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரின் மீது வரும் ஈர்ப்பு பற்றியும் ஒரு நண்பனைப் போல பேச வேண்டிய தேவையும் இருக்கிறது. எல்லோரும் இந்த வயதில் கடக்க கூடிய விஷயம் தான்.. ஆனால் ஆர்வக்கோளாறால் செய்யக்கூடிய தவறுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களை மட்டும் அல்லாமல் அவர்களைச் சார்ந்தவர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை மனம் திறந்து அவர்களுடன் பேசுதல் அவசியம். 


மனம் திறந்து பேசுவதன் மூலம் வாழ்க்கையின் அவர்களுடைய பொறுப்பை பற்றி தெளிவாகப் புரிய வைக்கலாம். 

    

வீட்டிற்கு அடுத்தபடியாக வளர இளம் பருவத்தினர் அதிக நேரம் செலவழிப்பது பள்ளியில் தான். எனவே தான் ஆசிரியர்களின் பங்கும் அவர்களுடைய வாழ்வியல் முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது


நல்ல நட்பு முறையில், தட்டிக் கொடுக்கும் ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் இந்த வயதில் பின்பற்ற தயாராக இருப்பார்கள். 


மாணவர்களுடைய செயல்முறைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை கண்டிப்பதை விட அவனுக்கு பிடித்த விஷயத்தில் மடைமாற்றம் செய்ய ஆசிரியரால் இயலும்..


வகுப்பறையில் மாணவர்களுடன் அவர்கள் பிரச்சனையைப் பற்றி மனம் திறந்த கலந்துரையாடல்கள் செய்ய முன்வர வேண்டும். 


வளரிளம் பருவம்  புதிரும் , புனிதமும் நிறைந்த சிக்கலான பருவம். சிக்கல்களை கடந்து செல்வதைவிட நம் பிள்ளைகளுக்கு சிக்கல்களைக்  கையாளக் கற்றுக் கொடுப்போம். 


வாருங்கள். நம் காலச்சார மௌனங்களை உடைத்து, நம் பிள்ளைகளுக்காக நாம் தொடர்ந்து உரையாடுவோம். 


தொடரும்.....

        


அடையாளம் - மகேஸ்வரி மதன்

                                                                      

எங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு வேப்பமரம்.  முன்னால் என்றால் எங்கள் வீடு முடிந்த அரை அடி தூரத்தில்.  (அருகில் இருக்கும் காலி மனையின் சாக்கடைக்கு முன்னால் சாலையோரத்தில்.)    இவ்வீட்டிற்கு  மகன் ஐந்து மாதம் எனும்போது வந்தோம். நாங்கள் வந்த சில மாதங்களில் அந்த வேம்பு வந்தது. தற்போது மகன்  17   வயதை  கடந்துவிட்டான்.   அப்போதிலிருந்து  எங்களுடன் இந்த வேம்பும் ஒன்று.  சற்றே வளர்ந்ததும் கொஞ்சம் பராமரிப்பு செய்ய ஆரம்பித்தோம். பெரிதாக ஒன்றுமில்லை, வாசல் தெளிக்கும் நீர் மரத்தைச்  சென்றடையும் வகையில் வழி செய்தோம். காலி மனை என்பதால்  அப்பப்போ   எங்கள் சுற்றுச்சுவர்  ஒட்டிய  புதர்களைச் சுத்தம் செய்யும் போது  அவ்விடமும் சுத்தமாகும்.

 

சில வருடங்களில் நன்கு செழித்து வளரத்தொடங்கியது. எங்கள் வீட்டின் முதல் மாடியை எட்டியது. மேல் வீட்டில் இருப்பவர்கள் காலை எட்டிப்பார்ப்பதே  இந்த வேம்பில் தான். காக்கை குருவிகளின் வாழ்விடமாக மாறியது. காலையும் மாலையும் ராகமில்லா பாடல் கேட்கும்.  அகன்றும்  நேருமாக  வளர்ந்த வேம்பு பெரிய லோடோடு வரும் கனரக வாகனத்தில் அடிபடத் தொடங்கியது. பராமரிக்க ஆள் வரசொல்லியாயிட்ரு.  அவர் வந்து மரமேறும் போதுதான் வளர்ந்த பெரும் மரத்தை கவனித்தேன். அதுவரை பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே நிகழும் எங்களுக்குள்.   ஒரு பார்வையோடு,  அதும் அதன் தண்டை மட்டுமே அதிகம் பார்த்துக் கடந்து சென்ற நான்  அண்ணார்ந்து  பார்த்த மாத்திரத்தில் அதன் வளர்ச்சியை உணர்ந்தேன்.  பருவப்பெண்ணும்  ஆணும்  டக்கென  வளர்த்து   நிற்பார்களே  அப்படி.

 

ஒரே வருடத்தில் இரண்டாம்  மாடியைத்தொட்டது. கொஞ்சம் கிளைகளை வெட்டினோம். சாலையில்  யாருக்கும் எவ்வண்ணம் இடையூறு வராமல்   பார்த்துக்கொள்வோம். மின்சாரக்  கம்பிகளுக்கு எந்த சேதமும் இல்லாமல் அது வளர்ந்தது. மேலும் வளர்த்து மெல்ல எங்கள் மொட்டை மாடியைத் தொட்டது.  அப்போதிலிருந்தே பறவைகளுக்கான தண்ணீர் தொட்டி வைத்தோம். தொட்டியின் மேலேறி குடிக்கும், சிறு பறவைகள்  உள்ளிறங்கிக்  குளிக்கும். மொட்டை மாடியில் நாங்கள் நால்வரும் காய வைக்கும் கோதுமை, ராகி மேலும் சமையல் பொருட்கள்  அவர்களுக்கு உணவானது. நாங்கள் நல்ல நாள், சனிக்கிழமை, அந்த நாள் இந்த நாள் என உணவு வைக்களானோம். எங்கள் உணவின் சுவை பிடிக்கவில்லை போல,எங்கோ போய் கறி சாப்பிட்டு, இப்படியும் வைக்கலாம் எனத் தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்து நாங்கள் சுத்தம் செய்யும் போது உணரவைக்கும்.


எங்கள் வீட்டின் உயரம் தாண்டியது. எங்கள் வீட்டின் அடையாளமாக மாறியது. வீட்டுக்கு வழி சொல்லுங்கள்  என்றால், "அந்த department store தெருவில் வலது பக்கம் பெரிய வேப்பமரம் இருக்கும் பாருங்க... அந்த வீடு"  இப்படிச்  சொல்லலானேன். மார்கழி தொடங்கினால் போதும், சற்றே கவலை வரும். காலை  வாசலைக்கூட்டி வேப்ப இலைகளை   குவிக்கக் கொஞ்சம் இல்லை... கூடவே மெனக்கெட வேண்டி இருக்கும். இப்போதெல்லாம் எல்லா பருவத்திலும் மழை வருகிறதே. எங்கள் sunshade முழுவதும் தினமும் இலைகள் நிரம்பி இருக்கும், அதில் மழையும் பெய்தால் நினைத்துப் பாருங்கள்... 10 நாட்களுக்கு ஒருமுறை அதையும் சுத்தம் செய்வதாக இருக்கும். அப்போதெல்லாம் கொஞ்சம் மரத்திடம் கடிந்துகொள்வேன். ஆடிக்காற்றில் மரம் ஆடும் போது சற்றே பீதி கொள்வேன். சிறிய இடத்தில் பெரிதாக வளர்ந்து நிற்கும் மரத்தை பார்த்து எனக்கே கொஞ்சம் பயம் வரும். வேர் நன்கு ஆழம் சென்றிருக்குமா? இப்படி ஆடி சாய்ந்துவிடுமோ என்ற தயக்கம். ஆனால் ஒருபோதும் ஒரு கிளை கூட விழுந்ததில்லை. வெயில் காலத்தில் மரம் எங்கள் வரம். வருடம் தோறும் புது உச்சத்தை அடையும் இவ்வெயிலில்  வெளியே  எங்கு  சென்று வந்தாலும், வாசல் கதவைத் திறக்கும் போதே வேம்பின் நிழலும் அதன்  ஈரப்  பச்சை வாசமும் எல்லா அழுப்புக்கும் ஆறுதலாய் அமையும்.  மழைக் காலத்தில், சின்ன தூறல் எல்லாம் எங்கள் வாசலை வந்தடைய முடியாது. பலநேரம் மரநிழல் விழும் பாதி வாசல் பாசம் பிடித்துவிடும் அச்சமயத்தில். சற்றே கவனமாக வண்டியை வாசலில் நிறுத்துவோம். இப்படியாக எல்லா காலமும் எங்கள் மரத்தோடு நிற்போம்.

                    
    வலதுபக்கம் பெரியதாகத் தெரியும் மரம்      


2018 எங்கள் மொட்டை மாடியை தாண்டி....


எப்போது மரம் பராமரிப்பு செய்ய ஆள் வந்தாலும் நம் வீட்டிலும், அண்டை வீடுகளிலும் உடனே கேட்பது, "வெட்டவா?"  என்பது தான்.  பெருந்தொற்றுக்கு  முன்னர் வண்டியில் வந்து அவர்களே பெரும் கிளைகளை வெட்டி  எடுத்துச்சென்றார்கள். இதுவே இதுவரை செய்த மிகப்பெரிய வேலை. மற்றபடி எங்களோடு கொஞ்சம் தள்ளி நின்று எங்களை  நன்றாகப்  பார்த்துக்கொண்டு இருந்தது வேம்பு. எங்கள் வாழ்வின் ஒரு அங்கம்.


சும்மா கிடந்த இடத்தில் மேல்வீட்டு அக்கா காய்,  கீரை,  பூ போன்ற எண்ணற்ற செடிகளை வளர்த்து வந்தார்.  கண்ணுக்கும் மனதுக்கும் நெருக்கமாக இருந்த இடம் அது. காலி மனை விலை பேசும் நடவடிக்கைகள் தொடங்கும் போதே பக்கத்து வீட்டு அண்ணா சொன்னார்,  நீங்களே இடத்தை வாங்கப் பாருங்க,  உங்களோடே  இருக்கட்டும்ன்னு. ஆசை தான்,  கையறு நிலை.


சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன். காலி மனை கை மாறியது. வாங்கியவர்கள் அப்படியே இடத்தை வைத்திருக்க வேண்டும் என்று வேண்டாத சாமி இல்ல. சாமி சொன்னாலும் ஆசாமி கேட்கணுமே.. வாங்கிய சில மாதங்களில் வீடு கட்டும் பணிக்கான பார்வைகள் வரத்தொடங்கின. சில வாரங்களிலேயே முடிவாகியும்விட்டது. எங்கிருந்தோ ஒரு பாரம் மனதில் வந்து தங்கியது. சொல்லவியலாத எதோ ஒன்று மனதைப் பிசைந்துகொண்டே இருந்தது. இடத்தை சுத்தம் செய்ய நாள் குறித்திட்டதும் அவர்கள் நாங்கள் வைத்த செடிகளை எங்களையே அழித்துத் தரச் சொன்னார்கள். மாதுளை பிஞ்சு வைத்திருந்தது. வாழை கன்று ஈன்றிருந்தது, மல்லி மலர்ந்திருந்தது, முருங்கை தளைத்திருந்தது, நெல்லி மரமாகி இருந்தது, செம்பருத்தி அழகிய இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்து நின்றது. நன்கு தளைத்திருக்கும் அதனை அவர்கள் வெட்டக் கூடாதாம். சொல்லி வைத்திருந்த ஆள் வராததால், வளர்த்ததை அக்காவே பெரும் வலியோடு அழித்துக்கொடுத்தார்.

 

பின்னர் பெரும் சப்தத்தோடு வண்டி வந்தது. எல்லாம் முடிந்தது. இடம் சுத்தமானது. வந்த புல்டோசர் சென்றுவிட்டது. அப்பாடா மரம் தப்பித்தது என்று அத்தனை மகிழ்ச்சி கொண்டேன். இரண்டு நாட்களில் வந்தது சேதி. வேர் நிலத்திற்குள் ஊடுருவும், பொறியாளர் அழிக்கச் சொல்கிறார் எனச் சொன்னார்கள். இடி இறங்கியது மனதில். நேரடியாக அந்த இடத்து அம்மாவைப் பார்த்து கோரிக்கை வைத்தேன். நல்லா வளர்ந்த மரம்,  கொஞ்சம் பாருங்களேன் என.. எல்லா இடத்திலும் அனுமதி வாங்கிவிட்டார்கலாம் அழிக்க.. அவர்கள் இரண்டு நாளில் ஆள் அனுப்புவார்கள் இல்லையெனில் இவர்களே எடுப்பதாகச் சொன்னார்கள். எனக்கு என்ன பேசுவதெனத் தெரியவில்லை. அந்த இரண்டு நாட்கள் சொல்ல முடியாத ஒரு வலியைச் சுமந்தேன்.  பிறரிடம் சொல்லும் போது “அவர்கள் இடம்”, “மரம் தானே” என்பது போன்ற பதில்கள். என்னால் பிள்ளையைப் போல என சொல்ல முடியவில்லை. சொன்னாலும் புரியுமா எனத் தெரியவில்லை. அந்த நாளும் வந்தது. எப்போதும் விடுப்பு எடுக்காமல் கல்லூரி செல்லும் நான், ஒருநாள் அதிசயமாக எடுக்க, அன்றே வந்தது அந்த மரம் வெட்டும் வாகனம். வந்தது முதல் என்னமோ பேரம் ஒத்துப்போகாமல் சத்தகமாக இருந்தது. எனக்கு இருப்புகொள்ளவில்லை. வேகமாய் கிளம்பினேன். எந்த திட்டமிடலும் இல்லை. செல்லும் முன் அண்ணாந்து பார்த்தேன். கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தெரு முனையில் மீண்டும் ஒருமுறை பார்த்து நன்றி சொல்லி வாகனம் போன திசையில் போகலானேன். சிலமணி நேரம் கழித்து வந்தேன். வியந்து பார்த்த தண்டு துண்டு துண்டாக வாகனத்தில். கிளைகளும் இலைகளும் வீதியெங்கும். அடியோடு அறுக்கப்பட்ட மரத்தின் வாசம் எனக்கோ பிண வாசமாய்... இரண்டு நாள் உண்ண முடியவில்லை. வெளியில் வரப் பிடிக்கவில்லை.


               
                                                 நினைவாய் ....                                  

காலம் மருந்து கொடுக்கும் தானே. கொடுத்தது. எப்படியும் அவ்விடம் மீண்டும் எங்கோ ஒரு வேர் விடும் என்ற அசரீரி மட்டும் கேட்கிறது. ஒரு சகாப்தம் அழிந்தது. அதைப் பராமரிப்பு மட்டுமே செய்து விட்டிருக்கலாம். வீதியில் போவோர் வருவோர் எல்லாம் கேட்ட கேள்விகளும், அடடா என்ற பார்வையும் ஒரு வாரம் இருந்தது.


 கடந்த வாரம் பத்திரிக்கை வைக்க வந்தவர் அதே தெருவை 4 முறை சுத்தியும் எங்கள் வீட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் அழைத்திருக்கிறார். வகுப்பு முடிந்து வந்து நான் மீண்டும் அழைத்துப் பேசுகையில் சொன்னார்... "வேப்ப மரத்து வீடு கண்டு பிடிக்க முடியலை கண்ணு","பரவாயில்லைகா. நாங்க வந்துடறோம்". சொல்லி முடிக்கையில் வலியொன்று உணர்ந்தேன். 

 

வீட்டின் அடையாளத்துக்கு என்ன சொல்ல இனி...  யோசிக்கிறேன்.

 


பவானி 2 நொய்யல்  வழி  காலிங்கராயன் - 2 ......க்ருஷ்






காலை 5:30 க்கு அலாரம் வைத்திருந்தேன்.  அடிக்கவில்லை.  எப்படியோ ஒரு 6 மணி வாக்கில் எழுந்து  மொபைலைப்  பார்த்தேன்.  ஒரு சிறிய சிகப்பு புள்ளியைச் சுற்றி இரு குட்டி கருப்புப்புள்ளி வட்டப் பாதையில் சூரியனை பூமி சுற்றுவது போல சுற்றிக் கொண்டு இருந்தது.  சமீபத்தில் வாங்கிய போன். வாங்கியதில் இருந்து இதுபோல நான் பார்த்தது இல்லை.  ஏதோ ஒரு அப்டேட் ஓடிக்கொண்டிருக்கலாம் என யோசனை.  தயாராகிவிட்டு மீண்டும் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன்.   6.30 க்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அது  வட்டப்பாதையில் இருந்து விலகாமல் சுற்றிக்கொண்டே இருந்தது.  

மொபைல் இல்லாமல் எப்படி இந்த பயணத்தைத் துவங்குவது?   புகைப்படம் எடுப்பது?  வீடியோ எடுப்பது? பல கேள்விகள் ரீ-ஸ்டார்ட் பட்டனை பலதுறை அழுத்தி் அழுத்திப் பார்த்தேன்.  ஆனால் அப்பவும் எந்தவித அசைவும் இன்றி சுற்றிக் கொண்டு இருந்த வேலையைத் தொடர்ந்தது. 



என்ன ஆயிற்று?  அப்டேட் தான் ஓடுகிறதா? இல்லை அதிகமாக சார்ஜ் ஆகிவிட்டதா?  இல்லை நேற்று கீழே கதை போட்டோமா? என்று பலவித யோசனை.   வேறு ஒரு கைபேசி தயார் செய்து கொண்டு கிளம்ப முடிவு செய்தேன்.  ‘ரெண்டு’ திரைப்படத்தில் வடிவேலுவும், மாதவனும் அடமானம் வைக்க ஒரு தெல்பத்ரி சிங் ஆட்டோ போல எனக்கு மகளதிகாரத்தின் போன். ஆன்லைன்  வகுப்பில் கலந்து கொள்வதற்கு ஒரு பழைய போன் வைத்திருந்தாள்.   அன்று அவளுக்கு வகுப்பு இல்லை என்பதை நானாக உறுதி(!) செய்துகொண்டு அதனை ‘சூட்’ செய்ய  முடிவெடுத்தேன். ஆனால் அதற்கும் சார்ஜ் இல்லை.  'ரைட்டு. சனி சார்ஜ்ல வருது...' என்ற மைன்ட் வாய்ஸ்யோடு  அரை மணி நேரம்  அதை சார்ஜ் போடலாம்..அப்புறம் எப்படின்னு பார்க்கலாம்' என்று முடிவெடுத்தேன்.   


   ‘சரி அண்ணனிடம் இந்த கலவர நிலவரத்தை சொல்லிடலாம்' என்றால் அவரின்  தொலைபேசி எண்ணும் எனது மொபைலில் தான் இருந்தது.  'ரைட்ரா இன்னிக்கு வெச்சு செய்யுமாட்ட இருக்கு' என்ற மைன்ட்வாய்ஸோடு வேறு எதில் இருக்கும் என மடிக்கணினியை உயிர்ப்பித்தேன்.   ஒரு வழியாக ஈமெயிலில் புகுந்து, அங்கு தேடி, இங்கு தேடி, அவரின் வலைப்பூ பக்கத்தில் இருந்த தொலைபேசி எண்ணை எடுத்தேன்.  மனைவியின் போனில் இருந்து  அழைத்தேன்.  ‘காலங்காத்தால யார் இது..புது நம்பராக இருக்கே?’ என அண்ணன் யோசித்துக் கொண்டே எடுத்திருக்க வேண்டும்.  “இந்த மாதிரி இந்த மாதிரி as I am suffering from கலவரங்கள்.. ஒரு அரை மணிநேரம் கழித்து கிளம்பலாம்" என தெரிவித்தேன்.  எப்படியும் இன்று கால்வாய் கரையையாவது மிதித்தே தீருவோம் என அண்ணன் சரி என்றார்.


மீண்டும் 15 நிமிடங்கள் வராத பஸ்ஸுக்கு காத்திருக்கும் பயணி போல ஓடியது.  அலைபேசியில் சிறிய சிகப்பு புள்ளியைச் சுற்றி இருந்த கருப்புப் புள்ளி தனது வட்டப் பாதையை நிறுத்தியது.   போன் உயிர்பெற்றது, கூடவே நானும்.  அப்டேட் தான் அந்த அதிகாலை நேரத்தில் ஓடிக்கொண்டு இருந்திருக்கும் போல. 'அதுக்கு ஒரு நேரங்காலம் வேண்டாமாடா…ஸ்க்ரீன்ல  சின்னதாக இந்தமாதிரி  இந்தமாதிரி அப்டேட் ஓடுது… போய் டீ சாப்ட்டு வா.. இல்ல டிபனே சாப்பிட்டு வா.. இவ்வளவு நேரமாகும்ன்னு  போட்டுருக்கலாமேடா'.    இன்றைய காலகட்டத்தில் ஒரு அலைபேசி இல்லாமல் போனால் தனித்து இயங்குவது என்பது தான் எவ்வளவு சிரமம்.   ஒரு மணிநேரம் தாமதம். 


மொபைல் சரி ஆகும் நேரத்தில் பயணத்திற்கு ஒரேயொரு தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். நம்மூர்  வெயில் வேறு.  பாட்டிலை எதில் வைத்துக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது.  என்னிடம் இருந்தது அனைத்தும் பெரிய பெரிய பைகள்.   மீண்டும் எங்க வீட்டு தெல்பத்ரி சிங் சிக்கினாள்.  சிறிய இலகுவான ட்ரெக்கிங் பேக்-பேக்(backbag) ஒன்று அவசரத்திற்கு கிடைத்தது. யாரோ பிறந்த நாளுக்கு ரிட்டர்ன் கிப்ட்டாக கிடைத்திருக்கும்.   எப்படியும் சண்டை வரும். 'சரி இப்பதான் மொபைல் எடுக்கல இல்ல, பை தானே.. சாயங்காலம் வந்ததும் சமாளித்துக் கொள்ளலாம்' என்று அதனை லவட்டிக்கொண்டேன்.   


அண்ணணனுக்கு உடனே போன் அடித்துவிட்டு ஒருவழியாக வண்டியைக் கிளப்பினேன்.  ஆனால் அப்போது எனக்குத் தெரியவில்லை பையை எடுத்ததற்கு மட்டும் தெல்பத்ரி சிங்கிடம் கடும் சண்டை நடக்கும் என…


Time Line of காலிங்கராயன் வாய்க்கால்  


12 வருட கட்டுமானம் 

36 மைல்கள்- காளிங்கராயன் தொடங்கி முடியும் இடம் நேர் வழியாக

56.2 மைல் (90.5 கிமீ)  - காளிங்கராயன் வாய்க்கால் 

739  வருடங்கள் 

544 அடி கடல் மட்டத்திலிருந்து : தொடக்கம் 

412 அடி கடல் மட்டத்திலிருந்து : முடிவு 

1840 மதகுகள்

15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி



தொடரும்.......

*தேனோற்சவம்* - கோதை

     
                                      
 

முதல் படத்துல இருக்கற தேன்கூட்டுக்கு வயசு சரியா 30 நாள். ரெண்டாவது படத்துல இருக்கற கூட்டுக்கு ஆறரை (61/2 )மாசம். இதே எடத்துல, ஒரே வருஷத்துல  ​மூணாவது தடவையா கூடு கட்டியிருக்குதுங்க. இதுக்கு முன்னாடி ரெண்டு தடவையும் ஆள் வரவெச்சு, கயிறு கட்டி எறங்கி, தீப்பந்தம் புடிச்சு தேன்கூடு இருந்த சுவடே இல்லாம சுத்தமா அழிச்சப்பறமும் அதே எடத்துல திரும்பத் திரும்ப வந்து கூடு கட்டற சூட்சுமந்தான் என்னன்னு தெரியல.


தொடக்கத்துல பத்துப் பதினஞ்சு பூச்சிங்கதான் பறந்துட்டிருந்துது. ஒவ்வொரு பூச்சியும் பெருசு பெருசா இருந்துது. திடீர்னு ஒண்ணு மேல ஒண்ணு, ஒண்ணு மேல ஒண்ணுன்னு உக்கார்ற மாதிரி இருந்துது. அஞ்சு நிமிஷத்துல குட்டி மாங்கா அளவுக்கு கூடு மாதிரி ஒண்ணு தெரிஞ்சுது. அந்த, 'மாதிரி' அதிகபட்சம் அரைமணி நேரத்துல இவ்ளோ பெரிய (முதல் படம்) தேனடையா உருமாறனது / உருவாக்கனது மிகப் பெரிய ஆச்சரியத்த உண்டு பண்ணுச்சு. ஆனா, அத என்னால ரசிக்க முடியல. ஏனோ ஒருவிதமான அருவெருப்புதான் வந்துது. அதுக்குக் காரணம் மொய்மொய்மொய்னு நகந்துக்கிட்டே இருந்த பூச்சிங்கதான். 

சுறுசுறுப்புக்கு உதாரணமா தேனீக்கள சொல்லுவாங்க. அது எவ்வளவு பெரிய உண்மைங்கறத நேர்ல, அதும் இவ்வளோ பக்கத்துல பாக்கும்போது நல்லாவே புரிஞ்சுக்க முடியுது.  ஒரு நொடி கூட  அதுங்க சும்மாவே இருக்கறதில்ல. நகந்துக்கிட்டே இருக்குதுங்க. வெளில எங்கேயும் போற மாதிரி தெரியல. அப்பறம் எங்கருந்து தேனக் கொண்டு வந்து சேக்குதுன்னும் புரியல. 

பயந்து பயந்து பாத்துட்டிருக்கறப்ப, இந்தப் புறாங்க வந்து பலகை மாதிரி இருக்கற கல்லு மேல உக்காந்து அலகோட அலகு கொத்தி, கழுத்த வருடி, தலைய சாச்சு, ஒண்ணு மொகத்த ஒண்ணு பாத்துன்னு காதல் செஞ்சுகிட்டே, 
'காற்றுச் சீரமைப்பி' அதான் 'AC', அதுலருக்கற குழாய் வழியா சொட்டற அந்தத் தண்ணிய தலைய சாச்சு, அலக மட்டும் உள்ள விட்டு, தண்ணி குடிக்கறது ரசனைக்குரியதா இருக்கும்.  அதே நேரம் பயமாவும் இருக்கும். ஆனா, இதுங்க அதுங்களையோ, அதுங்க இதுங்களையோ ஏறெடுத்தும் பாக்காதுங்க. "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே"ன்னு சொல்ற மாதிரியே இருக்கும்.

பகல்ல கூடப் பிரச்சனை இல்ல. ராத்திரி நேரத்துலதான் சிரமமா இருக்கும். கதவு, சன்னல் எதையும் தெறந்து வைக்க முடியாது. லைட் வெளிச்சத்துக்குப் பூச்சிங்க வந்துரும். அப்படியும் கொசு வலைதான் போட்டிருக்கறமேன்னு சன்னலத் தெறந்து வெச்சாலும் அங்க வந்து உக்காந்துக்கிட்டு,  'ஙொய்' ன்னு சத்தம் பண்ணி, அதுங்க பண்ணற அலப்பற இருக்கே....எந்திரிச்சுப் போயி நறுக்குன்னு ஒரு கிள்ளு கிள்ளி உட்ரலாமான்னு கோபமா வரும்.


'இந்தக் கூட்ட அழிச்சிரு, விட்டு வெச்சா பெரிய பிரச்னையாயிரும்'

'அமாவாசைக்கு ரெண்டு நாள் முன்னாடி அழிச்சா தேன் நெறையாக் கெடைக்கும்'

' நான் வேணா கூட்ட அழிச்சுத் தர்றேன். காசு வேண்டாம். தேன மட்டும் எடுத்துக்கறேன்'

'இந்த மாதிரி தேன் பூச்சி கடிச்சு எனக்குத் தெரிஞ்சவங்க செத்தே போய்ட்டாங்க'

'அடே சாமி! எந்தாச் சோட்டுத் தேன்கூடு?'

இந்த மாதிரி பயமுறுத்தியும், ஆசகாட்டியும், ஆசப்பட்டும், வியந்தும்
நெறையப் பேரு நெறைய விதமா கருத்து சொன்னாங்க.

ஆனா, யாரு சொன்னதையும் எம் மனசு ஏத்துக்கல. 

அதுங்க எத்தனையோ கஷ்டப்பட்டு எங்கெங்கயோ அலைஞ்சு திரிஞ்சு தேனக் கொண்டு வந்து சேக்குதுங்க. அதுங்களோட வாழ்வுக்கு ஆதாரமும் ஆகாரமும் அதுதானேன்னு நெனச்சப்போ அந்தக் கூட்டக் கலைக்கக் கூடாதுங்கறதுல நான் உறுதியா இருக்க ஆரம்பிச்சேன்.

கிட்டத்தட்ட ஏழு மாசமா இந்தத் தேனீக்களப் பாத்துக்கிட்டு இருக்கேன். திடீர்னு நூறு எறநூறு தேனீங்க கும்பலா இங்கயும் அங்கயுமா கொறஞ்சது பத்து நிமிஷத்துக்காட்டம் பறக்கும். ஏன் இப்படிப் பறக்குதுன்னு நெறைய நேரம் யோசிச்சிருக்கேன். 

அதப் பத்தித் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சப்பதான் ரகசியம் புரிஞ்சுது. அது என்னன்னா, வேலைக்காரத் தேனீ ஒண்ணு தேன் நெறஞ்சிருக்கற மலருங்க இருக்கற எடத்தக் கண்டுபிடிச்சு தேனை எடுத்துட்டு வந்து மத்த தேனீங்களுக்குக் குடுக்கும். அதக் குடிச்ச மத்த தேனீங்கள்லாம் அந்தத் தேனோட தரம், அளவு, அந்தத் மலர் இருக்கற தூரம் இதெல்லாம் பொறுத்து அழகாவும் உற்சாகத்தோடயும் ரொம்ப நேரம் ஆடுமாம்.

இதத் தெரிஞ்சுக்கிட்டப்பறம் அந்தத் தேனீங்க,

"பூந் தேனே தேனே வா
தாளம் போட"ன்னு பாட்டுப் பாடிக்கிட்டே ஆடறப்ப 
அதுல ஒரு நளினமும் வேட்கையும் இருக்கறத உணர முடிஞ்சுது.

ஆரம்பத்துல அதுக பண்ணன ரவுசு எரிச்சலையும் கோவத்தையும் உண்டாக்கனாலும் போகப் போக அது பழகிடுச்சு. ( ஒரு செயல தொடர்ந்து 90 நாள் செஞ்சா அது பழக்கமாயிருமாமா)

இப்பல்லாம் அதுங்க பெருசா நகர்ற மாதிரி தெரில (ஒருவேள கண்கள் அந்த நகர்தலுக்குப் பழகிருச்சோ?!).

"பூக்களிலுள்ள தேனை உண்ணும் தேனீ அதைத் தவிர வேறு எதையும் உண்பதில்லை. ஆனால், பூக்களில் உள்ள தேனன உண்ணும் 'ஈ' யானது அதை மட்டுமின்றி 'அனைத்தையும்' உண்ணும். நீ எப்பொழுதும் தேனீயாகவே இரு."

அப்படின்னு பத்தாம் வகுப்பு முடிக்கும்போது, என்னோட சீனியர் அக்கா 'ஆட்டோகிராஃப்' போட்டுக் குடுத்தது ஞாபகம் வருது.

தெனம் காத்தால எந்திரிச்சு, அந்தக் கூட்டத்தையும் அப்பப்ப அதுங்க ஆடற தேனோற்சவத்தையும்  (எப்புடி??.... நாங்களும் கண்டுபுடிப்பம்ல) பாத்தா, மனசுக்குள்ள மகிழ்ச்சி இழையோட ஆரம்பிக்கும்.

கொசுறு: 

"தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்து விட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சமிருக்காது" என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நாம வாழணும்னா தேனீக்கள வாழ விடணும்.

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...