" கமலா..... நான் ஆபிஸ் கிளம்பணும்..நேரமாச்சு. உன் பையன் பாத்ரூமுக்குள்ள போனது இன்னும் வெளிய வரல. ஒரு மணி நேரமா உள்ள என்னதான் பண்றான்?".
" டேய்...கேட்ட கேள்விக்கு நின்னு பதில் சொல்லிட்டு போடா...என்னடா
முறைக்கிற?. எல்லாம் நீ புள்ள வளத்தின லட்சணம்டீ.."
" ஏண்டீ..ஒரு மணி நேரமா கண்ணாடி முன்னாடியே நிக்கறையே..இந்தக்
கண்ணாடிக்கு வாய் இருந்தா கதறிரும்".
" சின்ன புள்ளயா இருக்கும் போது நல்ல கலகலன்னுதான் பேசிட்டு இருந்தா. இப்போ என்ன ஆச்சுன்னு தெரில..யார்கூடவும் சரியா பேசறது இல்ல.எப்பவும் எதையோ தொலைச்ச மாதிரி இருக்கா!"
" எது பேசினாலும் எதுத்து பேசுற..விவாதம் பண்ற. ஒரு மட்டு மரியாதை இல்ல".
" என்னமோ ப்ரெண்ட்ஸ் கூட குசு குசுன்னு பேசிட்டு இருக்கா.நம்ம உள்ள போனா அப்படியே ஒன்னும் தெரியாத மாதிரி இருக்கா"
"ஏங்க...நேத்து நம்ம பையன் பாண்ட் பாக்கெட்ல சிகரெட்டை பார்த்தேன். எனக்கென்னமோ அவன் தப்பான வழியில் போய்ட்டு இருக்கானோ அப்படின்னு பயமா இருக்குதுங்க".
இப்படி நிறைய நிறைய உரையாடல்கள் பக்கத்து வீட்ல, எதுத்த வீட்ல, மேல் வீட்ல, கீழ் வீட்ல ஏன் உங்க வீட்ல கூட கேட்குமே!..அப்போ உங்க வீட்ல 13 வயசுக்கு மேற்ப்பட்ட பிள்ளைகள் கண்டிப்பாக இருப்பாங்க. என்ன நான் சொல்றது சரி தானே..
பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது அவங்களோட சின்ன சின்ன செயல்களையும், அவர்களின் வளர்ச்சியையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிற நமக்கு ஏன் அவங்க வளர வளர வயதில் நெருப்பு கட்டிய உணர்வு வருகிறது?. நம்ம தூக்கி வளர்த்த குழந்தை வளர்ந்து சிறகு அவனுக்கு/ அவளுக்கு சிறகு முளைக்க தொடங்கிவிட்டது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாத நிதர்சனம். தன் பிள்ளைகளை தன் கனவின் நீட்சியாக, தன் உடமைப் பொருளாக நினைக்கும் மனோபாவம்தான் எல்லாவற்றிக்கும் காரணம்.
உண்மையைச் சொல்லப் போனால் அந்த வயதைக் கடந்து வந்த நாம் , அதே அனுபவங்களை, அதே சந்தேகங்களை கடந்து வந்த நாம், நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பது போல நடந்து கொள்கிறோம் என்பதுதான் உண்மை.
நாமும் நமது சமூகமும், அந்த பதின் பருவப் பிள்ளைகளின் பல பல கேள்விகளுக்கு நேர்மையான பதில்களைச் சொல்லி இருக்கிறோமா?. அவர்களின் உணர்வுகள் குறித்து ஒரு நிமிடமாவது அவர்கள் பார்வையில் யோசித்து பார்த்து இருக்கிறோமா? நிறைய நேரங்கள் மௌனம் மட்டும்தான் நம் பதிலாக இருக்கிறது. இல்லை என்றால் 'வாயை மூடு இந்த வயதில் உனக்கு இது தேவை இல்லாதது' என்ற அடக்குமுறையை பிரயோகிக்கிறோம். இதற்கான காரணம் நம்மிடம் இருக்கிற கலாச்சார மௌனம்.
குழந்தைப் பருவத்திற்கும், வயது வந்த பருவத்திருக்கும் இடைப்பட்ட காலம்தான் இந்த வளரிளம் பருவம். 13 வயதில் இருந்து பதினெட்டு வரை என்று நம் நாடுகளில் வரையறை செய்து இருக்கிறோம். உலக சுகாதார நிறுவனம் 10 வயதில் இருந்து 19 வயது வரை உள்ள பருவம் என்று குறிப்பிடுகிறது. இந்த வளர் இளம் பருவம் மகிழ்ச்சி, கொண்டாட்டம், புரியாமை, ஆச்சரியம் நிறைந்த பருவம்.இந்த நேரத்தில் அவர்களின் உடல், மனம் எல்லாவற்றிலும் மாறுதல்கள் வரும். உடல், மன உணர்வுகளில் ஊசலாட்டம் வரும்.ஹார்மோன்களின் விளையாட்டுகள் மெல்லத் தொடங்கும். தன் இருப்பை முக்கியமாய் கருதும் நட்பு வட்டம்தான் முக்கியமான ஒன்றாகத் தோன்றும். சரியான அணுகுமுறை இல்லை என்றால் இந்த அழகிய பருவம் மகிழ்ச்சியற்ற, ஆறாத வடுவை ஏற்படுத்திவிடும். இந்த முக்கியமான கால கட்டத்தில் அவர்கள் உடல், மன மாற்றங்கள் வெகு வேகமாய் நிகழும்.
என்ன என்ன மாற்றம் வரும்? கொஞ்சம் யோசிப்போம். நாம் கடந்து வந்ததுதானே. குரலில் மாற்றம், மீசை தாடி வளர்த்தல், அக்குள் மற்றும் ஆண் பெண் உறுப்புகளில் முடி வளர்தல், பருக்கள், மார்பக வளர்ச்சி, மாதவிடாய் தொடக்கம், ஆண் குழந்தைகளுக்கு இரவில் உறக்கத்தில் விந்து கழிதல், தோற்றம் பற்றிய மதிப்பீடுகள்......இப்படி மாற்றங்கள் வரும்.இவை உடல் ரீதியான மாற்றங்கள் மட்டுமே. மனம் இன்னும் அதிவேகமான மாற்றங்களை சந்திக்கும். அந்த உடல், மன மாற்றங்களை பற்றி நாம் நம் பிள்ளைகளிடம் பேசி இருக்கிறோமா?
இதுவரை பேசாவிட்டால்கூட இனி பேசலாம். நம்மிடம் இருக்கும் கலாச்சார மௌனம் உடைக்கப்பட வேண்டும். இல்லை என்றால் நம் குழந்தைகள் கற்றுக் கொள்ள இந்த கணினி யுகம் ஏராளமான வழிகளை கொடுக்கும். அந்த வழிகள் மட்டும் சரியாக இல்லாமல் தவறாக இருந்துவிட்டால் அந்த பிள்ளையின் வாழ்வே கேள்விக்குறியாகி விடும். எனவே இந்த வயதில் அவர்களுக்கு தேவை சரியான வழிகாட்டுதலும், நல்ல நட்பான அணுகுமுறையும் தான்.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
பெற்றோர்களாகிய நாமும் அந்த வயதை கடந்து தான் வந்திருக்கிறோம். எனவே நம்முடைய அனுபவங்கள் கண்டிப்பாக நம் பிள்ளைகளுக்கு பயன்படும். அவர்களுடன் மனம் திறந்து பேசுவது இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்று. உடலைப் பற்றிய ஒரு சரியான புரிதலை அவர்களுக்கு இந்த நேரத்தில் தர வேண்டும்.
இந்த வயதில் எதிர்ப்பாலினத்தவரின் மீது வரும் ஈர்ப்பு பற்றியும் ஒரு நண்பனைப் போல பேச வேண்டிய தேவையும் இருக்கிறது. எல்லோரும் இந்த வயதில் கடக்க கூடிய விஷயம் தான்.. ஆனால் ஆர்வக்கோளாறால் செய்யக்கூடிய தவறுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்களை மட்டும் அல்லாமல் அவர்களைச் சார்ந்தவர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை மனம் திறந்து அவர்களுடன் பேசுதல் அவசியம்.
மனம் திறந்து பேசுவதன் மூலம் வாழ்க்கையின் அவர்களுடைய பொறுப்பை பற்றி தெளிவாகப் புரிய வைக்கலாம்.
வீட்டிற்கு அடுத்தபடியாக வளர இளம் பருவத்தினர் அதிக நேரம் செலவழிப்பது பள்ளியில் தான். எனவே தான் ஆசிரியர்களின் பங்கும் அவர்களுடைய வாழ்வியல் முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நல்ல நட்பு முறையில், தட்டிக் கொடுக்கும் ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் இந்த வயதில் பின்பற்ற தயாராக இருப்பார்கள்.
மாணவர்களுடைய செயல்முறைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை கண்டிப்பதை விட அவனுக்கு பிடித்த விஷயத்தில் மடைமாற்றம் செய்ய ஆசிரியரால் இயலும்..
வகுப்பறையில் மாணவர்களுடன் அவர்கள் பிரச்சனையைப் பற்றி மனம் திறந்த கலந்துரையாடல்கள் செய்ய முன்வர வேண்டும்.
வளரிளம் பருவம் புதிரும் , புனிதமும் நிறைந்த சிக்கலான பருவம். சிக்கல்களை கடந்து செல்வதைவிட நம் பிள்ளைகளுக்கு சிக்கல்களைக் கையாளக் கற்றுக் கொடுப்போம்.
வாருங்கள். நம் காலச்சார மௌனங்களை உடைத்து, நம் பிள்ளைகளுக்காக நாம் தொடர்ந்து உரையாடுவோம்.
தொடரும்.....

No comments:
Post a Comment