Monday, February 24, 2025

மதி மயக்கும் பாலன் - கௌசல்யா ஞானேஸ்வரன்


உன்னதமான உணர்வில் 
சுமந்த மைந்தனுக்காக
துயில மறந்து...
எண்ணிலடங்கா கவி எழுதி...
அன்பாய் அணைத்து 
ஆத்ம நிம்மதி 
அடைந்த நான்...
என் உயிரின் உயிர் 
சிசுவின் சிசு ஜனித்து...
கரம் ஏந்திய நொடி 
உலகளாவிய 
இன்பம் தர...
இமைகள் இளைப்பாறாமலே 
இளந்தளிரை ரசித்திருக்க...
கருவிழி அசைந்தாடாது 
கண்ணோடு கண் பார்க்க 
கற்ற மொழியும் மறக்க...
ஐந்து மாத 
பாலன் செய்யும் 
ஜாலம் கண்டு ...
உற்சாகம் கரைபுரள
எச்சில் வழியும் உதடுகளின் 
கள்ளமில்லா இளஞ்சிரிப்பு 
காதோரம் கவி பாட...
கண் மூடினாலும் 
காட்சிகள் அசைந்தாட ..
நேசித்த வாசம் 
நெஞ்சுக்குள் பரவி...
மதியை மயக்குதே 
பேரன்பின் பேரனாலே...!


 - கௌசல்யா ஞானேஸ்வரன்

Friday, February 21, 2025

திரைகடலோடிகள் - அத்தியாயம் 1 - பிரதீபா


 


"இந்தியா ட்ரிப்" - வருடம் முழுவதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆகஸ்டு மாத வைபவம். தீபாவளி, பொங்கல், தேச ஒற்றுமை ஓங்க கும்பலாக ஆடும் தாண்டியா எல்லாவற்றையும்விட பெரிய கொண்டாட்டம் இதுதான் எங்களுக்கு. இந்த நாளுக்குத்தான் வருடம் முழுக்கவே கவுண்ட் டவுன் ஓடும். மூணு மாசம், மூணு வாரம், நாலு நாள் என்று குறைந்து கொண்டே வந்து, கிளம்பும் நாளன்று மனசு போடும் குதியாட்டம் இருக்கிறதே, மூன்று வயதுக் குழந்தை தோற்றுவிடும்.

இந்தியா சென்றுவரக் குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் தேவை. சில அலுவலகங்களில் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி. பள்ளிகளில் அதுவும் கிடையாது. 3 நாட்களுக்கு மேல் சேர்ந்தாற்போல விடுப்பு எடுத்தால் அபராதம் 160 பவுண்டுகள் கட்ட வேண்டும். உடல்நலக்குறைவு, வெளிவேலைகள் என்று அனைத்தையும் தம் கட்டி சமாளித்து வருடம் முழுக்க ஆஃபீசுக்கு லீவே போடாமல் 21 நாட்கள் சேர்த்துவைப்பது என்பது தங்கநகை சிறுசேமிப்பை விட மிகக்கடினமானது. இதில் வெள்ளைக்கார நண்பர்களின் கிண்டல் வேறு. உங்களுக்கு மட்டுமென்ன மூன்று வாரம் ஹாலிடே என்பார்கள். "We are not going for Holiday, we are going Home" என்ற பதில் அவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, எங்களுக்குத் தற்காலிகப் பெருமையைத் தரும்.

ஃபிளைட் டிக்கெட் முன்பதிவு செய்வதில் வடிவேலுவை விடப் 'பிளானிங்கில்' சிறந்த லொஜக் மொஜக்குகள் என்னைப்போல நிறையப்பேர் உண்டு. புக்கிங் தொடங்கும்போதெல்லாம் விட்டுவிட்டுக் கடைசியில் புக் பண்ணுவோம். நான்கு பேருள்ள குடும்பத்துக்கு 3200 பவுண்டுகளுக்கு மேல் தண்டம் அழ வேண்டும் என்பது பெரிய விஷயம் தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி 3 டிக்கெட் ஆயிரம் ரூபா என்று கூவிக்கூவி விற்ற ஏஜென்சிகள் இந்த நேரத்தில் நினைவுக்கு வந்து வேறு தொலைக்கும். ஊருக்குப் போகிறோம் என்ற எண்ணம் ஒருபுறம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும் , என்னவெல்லாம் செலவு செய்ய வேண்டிவருமோ என்ற லேசான கவலை மறுபுறம் ஒட்டிக்கொள்ளும். கிளம்புவதற்கான ஆயத்தங்கள் அவரவர் ஆர்வத்துக்கேற்ப சில நாட்கள் முன்பு, சில வாரங்கள் முன்பு என்று வேறுபடும். அக்கம்பக்கத்து பாட்டி தாத்தாக்களிடம், "வீட்டு மேல ஒரு கண்ணு வெச்சுக்கோங்க" என்பதில் இருந்து தொடங்கும் அனைத்துமே சுவாரஸ்யமான விஷயங்களாக இருக்கும்.
வருஷம் ஒருக்காதானே போறோம்கறதால எல்லாருக்கும் ஏதாச்சும் வாங்கணும். விதவிதமா கிப்ட் வாங்கினா எனக்கு கொறச்சல், உனக்கு ஜாஸ்தின்னு இருக்கிற மூணு வாரமும் பஞ்சாயத்துலயே போயிரும் என்ற பயத்தில் சாக்லேட் பாக்கெட்டுகளின் எடை மட்டும் எட்டு கிலோவாகியிருக்கும். 'முக்கியமானது ஏதும் இங்கேர்ந்து உங்க வீட்டுக்குக் குடுத்து விடணுமா?' என்று நட்புகளிடம் திடீர் தாராள பிரபுவாகி, அதையும் வெயிட்டு கம்மியா இருந்தா மட்டும் தாங்க என்று ஈயம் பூசியும் பூசாத மாதிரி கேட்கப்படும் கேள்விகள் அங்கும் இங்கும் உருண்டோடும்.

ஃபிரீசரில் மாவும், சாம்பாரும், தேங்காய்ச் சில்லுகளும், 4 பச்சை மிளகாயும் திரும்பி வந்தபின் இரண்டு நாட்களுக்காக சேமித்து வைக்கப்படும். "இந்தியா ஷாப்பிங்ன்னு ஒரு லிஸ்ட்டு கிச்சன் கதவுல ஒட்டியிருக்கும், சீக்கிரம் அதை எடுத்துட்டு வாடா தங்கம்" என்ற கொஞ்சல் தோய்ந்த ஏவல்கள் வீட்டுப் பொடுசுகளைக் கடுப்பாக்கும். ஏனென்றால் அங்கு பரிதாபமாய்த் தொங்கிக்கொண்டிருப்பது அடிஷனல் சீட் வாங்கி சாமான்கள் எழுதி எழுதி நீண்டுவிட்ட குறுநாவல்.

இங்க பிச்சைக்காரங்களாட்டமாத் திரிஞ்சாலும் ஊருக்குப் போயி அப்டியே இருக்க முடியாதுல்ல என்று தேர்ந்தெடுத்து நிராகரிக்கப்பட்டு, மீண்டும் தேர்ந்தெடுத்து என்று ஐந்தாவது மறுபரிசீலனையில் தேர்வாகும் நல்ல துணிமணிகளும்...

கதவு ஜன்னல் சாத்தி, கார் சாவியை ஒளித்து வைத்து, சுடுதண்ணி ஹீட்டர் எல்லாம் ஆஃப் செய்துவிட்டோமா என்று சரிபார்த்து...

"அய்யய்யோ! இந்த ட்ராவுல தானே வெச்சேன், இப்போக் காணோமே" என்று தாலியை ஒரு வழியாகத் தேடி எடுத்து அணிந்துகொள்ளும் தங்கமணியும் ...
வருடம் ஒருமுறையென்றாலும் ஐஸிஐசிஐ ATM கார்டைத் தூசி தட்டி பர்சில் எடுத்து வைக்கும் ரங்கமணியும்...

வீட்டிலிருந்தே தீனிப்பைகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு இந்தப் பரபரப்பு எதிலும் அலட்டாமல் நிற்கும் பிள்ளைகளுமாய்...

ஒருவழியாக டாக்சியில் பெட்டிகளை ஏற்றிவிட்டு அமரும்போது தான் அப்பா.....டி ஒருவழியாக் கிளம்பிட்டோம் என்றிருக்கும். லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் நாங்க இந்தியா போகப்போறோம் என்று மௌனமாகக் கூச்சலிடும் மனது, நமக்குமுன் ஏர்போர்ட் சென்று போர்டிங் பாஸ் வாங்கியிருக்கும்.


(தொடரும்)


Wednesday, February 19, 2025

பொதுமறைப் புலவர் - கு.சச்சிதானந்தம்



வாழ்வின் நெறி ஒவ்வொன்றையும்
ஏழு பருக்கையினுள்ளடக்கி
இருவரிகளில் வடித்துப் பத்தாக்கி
ஓர் அதிகாரம் என்று
நூற்று முப்பத்து மூன்றில் 
முப்பால் கலந்து ஐம்புலனடக்கும்
வாழ்வியல் வித்தைதனை 
அமுதினும் இனிய தமிழில்
திருக்குறள் எனும்
விருந்து படைத்த தெய்வப்புலவோன்
நம் வள்ளுவன்!


Monday, February 17, 2025

ஏமாறுவதற்கு வரி விலக்கு உண்டு - ஈரோடு கதிர்

தாம் புத்திசாலி எனும் எண்ணம் சிலருக்கு வலுவாக இருக்கும். பலருக்கு அதுவே மனதின் அடி ஆழத்தில் மென் புழுதியாகப் படிந்திருப்பதுண்டு. புத்திசாலி என்பதற்கு அளவுகோல் எதுவும் வைக்க முடியாது. அப்படியே அளவுகோல் என ஒன்றை வைத்தாலும், அது மிகப் பெரும்பான்மையானோருக்கு உடன்படக்கூடியதாக இருக்காது. பலருக்கு உடன்படாதது எப்படி பொதுவானதாகும்? தாம் புத்திசாலியென அடி மனதில் படிந்து கிடப்பதை சிலர் அதன் விதமாகவே அழகு பார்ப்பதுண்டு, சிலர் விரல் நுனிகளால் அதில் கோலமிட்டு புன்னகைப்பதுண்டு. வெகு சிலர் மட்டுமே ‘ஃப்பூ’ என ஊதி விட்டு அதனைக் கடந்து செல்வர்.

தன்னை ஏதோவொரு கணத்தில் புத்திசாலி எனச் சொல்வோர் அனைவருக்கும் பொது ஒற்றுமை ஒன்று உண்டு. அது, யாரோ ஒருவர் தன்னை ஒரு காலகட்டத்தில் ஏமாற்றிவிட்டதாக விரல் சுட்டுவது. ஏமாற்றப்பட்டது என்பது, பிள்ளைப் பிராயத்தில் மிட்டாய் தருவதாகச் சொல்லி தாராது போன நட்பு தொடங்கி, பருவ வயது காதல், மண வாழ்க்கை, பாகப்பிரிவினை, கொடுக்கல் வாங்கல், பணியிடம், தொழில் உள்ளிட்டவற்றில் யார்யாரோ தம்மை ஏமாற்றியதாக ஒவ்வொருவரிடமும் ஓர் பட்டியல் உண்டு. பட்டியலில் இடம் பெற்ற பெயர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் வேறுபடலாம். அதே சமயம், ஏமாந்தவர்களின் பட்டியல் அத்தனை சிறியதும் அல்ல.

இது எப்படி நிகழ்ந்தது எனக் கேட்டால், தன்னைப் பார்த்தாலே அவர்களுக்கெல்லாம் ஏமாற்றத் தோன்றியிருக்க வேண்டுமென ஒரே மாதிரி பதிலை பலரும் சொல்வதுண்டு. ”அது எப்படி ஒருவரைப் பார்த்தாலே ஏமாற்றத் தோன்றும்?!” எனும் கேள்வியை அவர்கள் ஏற்பதில்லை. ஏமாற்றப்பட்டது குறித்துப் பேசும்போது, தாம் அறிவித்த அல்லது தம் அடி மனதில் புழுதியாகப் படிந்திருந்த ‘புத்திசாலி’த்தனம் மிக லாவகமாக மறைக்கப்படும்.

தமக்கு நிகழ்ந்த ஏமாற்றத்தையொட்டி, தானே தன் மீது பச்சாதாபம் தேடுவது முதல் வன்மத்துடன் பழி வாங்குவது வரை பலவிதமான வினைகள் இங்கு ஆற்றப்படுவதுண்டு. அதைவிடுத்து, அந்த ஏமாற்றம் ஏன் நிகழ்ந்தது என்று சிந்திப்பது மிகக் குறைவு.

இங்கு இரண்டு வகையினர் உண்டு. ஒன்று ஏமாற்றுவோர் மற்றொன்று ஏமாற்றப்படுவோர். இவர்கள் எல்லா நேரங்களிலும் இதில் ஏதோ ஒரு வகையில் மட்டுமே நிலைத்து நிற்பது போல் கட்டமைக்கப்படுகின்றனர். அவர்களின் நிலைகள் சில நேரங்களில் மாறுவதுண்டு. அதே சமயம், வகை மாறினாலும், அது தற்காலிகம் என்று சொல்வதுபோலே, மீண்டும் தம் வகை இதுதான் என எது தனக்கு வசதிப்படுகின்றதோ அதில் நின்றுகொள்வர்.

ஏமாந்த, ஏமாற்றப்பட்ட மற்றும் ஏமாந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள் அனைத்திலும் பெரும் பங்கு வகித்தது ஏமாற்றியவரா அல்லது ஏமாற்றப்பட்டவரா எனும் கேள்விக்கு ’ஏமாற்றியவர்’ என எளிதாகப் பதில் அளித்துவிடுகின்றனர். அது அவர்களுக்குப் பிடித்த பதில்தானே தவிர, அதுவே உண்மையாக இருப்பதில்லை. என்னைப் பொறுத்தவரையில் ஏமாறுவதில் பெரும் பங்கு வகிப்பது ஏமாற்றப்படுகிறவரே. காரணம் ஏமாற்றப்படுவதற்கான அத்தனை வாய்ப்புகளையும் அவர்கள் தன்னகத்தே கொண்டிருப்பார்கள்.

எந்தவிதமான பணம் ஈட்டுவது சார்ந்த ஏமாற்றங்களுக்குப் பின்னாலும், மிகப் பெரிய பேராசை ஒன்று இருந்திருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அந்தப் பேராசையை வசதியாக மறைத்தபடி, ஏதோ தாங்கள்தான் உலகின் அதிசிறந்த அப்பிராணி போலவும், நியாயமான ஒன்றையே தாங்கள் அடைய முற்பட்டதுபோலவும், தங்களைத் திட்டமிட்டு வஞ்சகமாக ஏமாற்றியதாகவும்  அவர்கள் நடந்துகொள்வதுண்டு. பொதுவாக நிதி மோசடிகளில் ஏமாற்றும் திட்டத்தோடு வருகின்றவர்கள் பெரும்பாலும் தனித்த மனிதர்களைக் குறி வைக்கமாட்டார்கள். பறவைகளுக்கு வலை விரிப்பதுபோல், தோதான இடத்தில் வலை விரிப்பார்கள். அவர்களுக்கு இதில் சிலரோ பலரோ சிக்குவார்கள் என்று தெரியும். ஆனால் யார் யாரெனத் தெளிவாகத் தெரியாது. ஆனால் ஏமாறுகின்றவர்கள் தம்மைத் தாமாக வெளிப்படுத்தி, தாம் சிக்குவதற்கு எந்த வலை சிறந்தது என்று மிக எளிதாகத் தேர்ந்தெடுத்து விடுவதுண்டு.

ஏமாறுதலில் அடுத்ததாகப் பெரும் பங்கு வகிப்பது அறியாமை. பெற்றிருக்க வேண்டிய அறிவினைப் பல்வேறு காரணங்களால் பெற முடியாது போவது ஒருவகையென்றால், பெற மறுப்பது மற்றொரு வகை. அறிவியல் அவ்வளவாக வளர்ச்சியடைந்திடாத காலத்தில் அறியாமையோடு இருப்பதற்குப் பல்வேறு சமாதானங்கள் இருந்தன. இன்றைய காலகட்டத்தில் அறியாமைக்குப் பெரிதும் காரணமாக இருப்பது, அறிந்துகொள்ள முற்படாததே. ஒருவரே நேரடியாக எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முடியுமா என்றால் 'ஆம்' என்று சொல்வது நியாயமான பதிலாக இருக்காது. எந்த ஒன்றிலும் அறிந்தவர்கள், அதில் குறைந்தபட்ச அறிவு பெற்றவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள் என்று பலரும் உண்டு. தன்னால் அறிந்துகொள்ள முடியாது என்றால் இவர்களில் யாரையேனும் துணைக் கொள்ளலாம். அதைவிடுத்து அறியாமை என்னுடைய அடையாளம் என்போரும், தாம் ஏமாறுவதற்குத் தயார் என்று சிவப்புக் கம்பளம் விரிப்பதும் நிதர்சனமான உண்மை.

அறியாமை போன்றே இருக்கும் மற்றொன்று அறிவுக் குறைபாடு. தான் ஈடுபட வேண்டியதில் மிக மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருப்பதில் திருப்தி கொள்வது, அறிந்தது போதும் என நினைப்பது, சில பல காரணங்களால் மனத்தடை ஏற்படுத்திக்கொண்டு மேலும் அறிந்துகொள்ள மறுப்பது ஆகியவை அறிவுக் குறைபாட்டிற்குக் காரணமாகின்றன. அறிவுக்குறைபாட்டோடு எதை அணுகினாலும், புரிதலின்மை ஓங்கி நிற்கும், புரிதலின்மை ஓங்கியிருக்கும் இடத்தில் முழுமையான புரிதலோடு வருகின்றவர் எளிதாக தனக்கான இடங்களைக் கைப்பற்றுவர். அவர்கள் ஏதேதோ செய்து ஏமாற்றி அந்த இடத்தை அடைந்துவிட்டதாகக் கருதுவதும் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் வகையன்றி வேறென்ன?

ஒவ்வொருவரையும் சுற்றி 360 டிகிரி சுற்றளவிலும் போட்டி ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றது. ஒருவர் மட்டுமே தேவையுள்ள இடத்திற்கு ஓராயிரம் பேர் போட்டியிடும் நிலை முக்கியமான அனைத்துத் தளங்களிலும் உண்டு. அந்தப் போட்டிக்குத் தன்னை முழுமையாகத் தகுதிப்படுத்திக் கொள்ளாததும், தம்மைப் போதுமான அளவு வளர்த்துக் கொள்ளாததும், அந்த இடத்தை வேறொருவர் கைப்பற்றிட எளிதில் வழி வகுக்கின்றன. நானும்தான் விரும்பினேன், அதற்காக உழைத்தேன், தகுதிப்படுத்திக் கொண்டிருந்தேன், ஆனால், எனக்கு வேண்டுமென்றே வழங்கப்படவில்லை என்பது பெரிதும் உடனிருப்போரை சமாதானப்படுத்தும் எளிய வழியாக வேண்டுமானால் இருக்கலாம். அந்தச் சமாளிப்புகள் ஒருபோதும் அவர்களைச் சமாதானப்படுத்தாது. ஒருவேளை அதுவே அவர்களைச் சமாதானப்படுத்துவதாக அவர்கள் கருதினால், அது அவர்களை அவர்களே ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை. 

தகுதிப்படுத்திக்கொள்ளாமை ஏமாறுவதில் ஒருவகை என்றால், அதற்கு இணையான மற்றொருவகை வழங்கப்படும் வாய்ப்பினை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிடுவது. வாய்ப்பு எப்போதும் தன்னை அலங்கரித்துக்கொண்டும், வெளிச்சமிட்டுக்கொண்டும் வருவதில்லை. சில நேரங்களில் மேகத்தில் மூழ்கிய நிலவொளிபோல் மங்கலாக இருக்கும். சில நேரங்களில் மின்மினி போல் கண் சிமிட்டும். சில தருணங்களில் அது தன்னைத் திடமாக அறிவிக்கும். வாய்ப்புகள் எந்த வடிவில் வந்தாலும், தெளிவாகவோ, தெளிவற்றதாகவோ இருந்தாலும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள தன்னைத் தயார்படுத்தி வைத்திருப்பதுவும், திடப்படுத்தி வைத்திருப்பதுவும் மிகவும் முக்கியம். பெரு வெளிச்சமாக வருமென எதிர்பார்த்திருப்பது, மின்மினியாய் சிணுங்கும்போது அதனை இனம்கண்டு, வாய்ப்பினை ஏற்று, தன்னை நிரூபித்தல் மட்டுமே தன்னையே ஏமாற்றிக்கொள்வதைத் தவிர்க்கச் செய்யும்.

தனக்கென்றிருக்கும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட மறப்பதுவும், மறுப்பதுவும் தான் அடைய வேண்டிய நிலை, இடம் ஆகியவற்றைத் தடுக்கவே செய்யும். வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும் உரிமை என்பது, அந்த வாழ்தலில் தனக்குத் தேவையானதை அடைய தனக்கு இருக்கும் அடிப்படை உரிமையை உணர்தலே. தான் உரிமையை நிலைநாட்ட மறுக்கும் இடங்களில் வேறொருவர் எளிதாக அந்த உரிமையை எடுத்துக்கொள்வார். காரணம் உரிமைகள் என்பது யாரோ ஒருவரால் செலுத்தப்படவேண்டிய ஓர் இயங்கு ஆற்றல். இயங்கிக் கொண்டிருப்பதைப் பயன்படுத்த வேண்டியவர் பயன்படுத்தத் தவறினால் அல்லது மறுத்தால் அந்த இயக்கம் ஓய்ந்து போய்விடாது, தன்னை இயக்கத் தகுதியானவரை அனுமதித்துத் தொடர்ந்து இயங்குவதையே விரும்பும். அதுவே நியதி. நான் என் உரிமையை அங்கே நிலைநாட்டியிருக்க வேண்டும், நான் தவறவிட்டதால் எல்லாம் என் கைவிட்டுப் போய்விட்டது, நான் ஏதோ ஒருவகையில் வஞ்சிக்கப்பட்டேன் எனும் சமாதானங்களால் யாருக்கு என்ன பயன் இருந்துவிட முடியும்?

ஏமாற்றங்களில் உச்சம் பெற்றிருப்பது மூடநம்பிக்கை. மூடநம்பிக்கைகளின் ஆயுட்காலம் எப்போதும் என்னை ஆச்சரியப்படுத்துவதுண்டு. இது எப்படி இத்தனை காலமும் செழிப்பாக இருந்து கொண்டிருக்கின்றது? நியாயமாகச் செய்ய வேண்டிய ஒன்றைச் செய்ய மறுத்து, எந்தவகையிலும் ஏற்க முடியாத, ஏற்கக் கூடாத, விளைவுகளை ஏற்படுத்தாத ஒன்றை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், சிறப்பாகிவிடும் என நம்புவது யாருடைய பிழை?

ஏமாற்றுபவர்கள் ஏமாறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதைவிட, ஏமாறுபவர்கள்தான் ஏமாற்றுபவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.

செய்தியும் படமும் - மகேஸ்வரி மதன்

சாதாரணமாகக் கேட்கும் ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தி நம்மைப்  பதற்றம் அடையச் செய்து பின்தொடர வைக்கும்.  அப்படி மிக எளிதாக மனதுள் ஊடுருவி தினம் தேட வைத்த ஒரு செய்தி இது. இரண்டு வாரங்களுக்கு மேலாக எச்சூழ்நிலையிலும் இதை பின்தொடர்ந்துகொண்டே இருந்தேன். நெருங்கிய நட்புகளிடம் பேசி அங்கலாய்த்து கொள்வேன். 


2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி. தெளிந்த நீலவானம், அழகிய மலை, மலை நிறைய மரங்கள், எங்கும் பறவை சப்தம், மலையடிவாரத்தில் நேர்த்தியான கால்பந்து மைதானம். வைல்டு போர்ஸ் என்ற கால்பந்தாட்ட அணி பயிற்சியில் இருக்கிறார்கள். பசங்களுக்கு 12 முதல் 16 வயது. உதவி பயிற்றுனருக்கு 25  வயது. பயிற்சி முடித்து பீராபட் சோம்பியாங்ஜாய் பிறந்தநாள் விருந்துக்கு முன்னர் அருகில் இருக்கும் தாம்-லுவாங் குகைக்கு  (சியாங் ராய் மாகாணம், தாய்லாந்து) சென்றுவிட்டு திரும்ப உற்சாகமாகக் கிளம்புகிறார்கள். ஒரு சிறுவன் மட்டும் வீட்டுக்குச் செல்கிறான். மீதம் 12 சிறுவர்களும் உற்சாகமாக தங்கள் மிதிவண்டிகளை எடுக்க,  பொழுது இறங்குவதற்குள் திரும்ப அழைத்துவருவதாகச் சொல்லி உதவி பயிற்சியாளரும் உடன்  செல்கிறார்.

Tham Luang Nang Non - Wikipedia

Photo Credit : விக்கிப்பீடியா 

இருபுறமும் பரந்து கிடக்கும் வயல்களுக்கு நடுவே கிராம சாலை. இயற்கையின் நேரடி பார்வை பட்ட  இடமெனக் கொள்ளலாம். மிகுந்த உற்சாகத்தோடு குகையை அடைகிறார்கள். தாய்லாந்தின் நான்காவது பெரிய குகை தாம்-லுவாங். உறங்கும் பெண் போன்ற அமைப்பைக் கொண்ட மலை. அங்கே சிலையாக உறங்கும் பெண் கடவுளைக்  குகை தொடங்கும் இடத்தில் எல்லோரும் வணங்கி உள்ளே செல்கிறார்கள்.   அவளும் சிரித்து வழியனுப்புவாள். முன்பே பழக்கப்பட்ட உள்ளூர் குகை என்பதால் வேகமாய் உற்சாகமாய் உள்ளே செல்கிறார்கள். உற்சாகமும், பேச்சும், சிரிப்பும் குகையில் ஆனந்தமாய் எதிரொலிக்கிறது. உள்ளே ஆர்வமாய் போய்க் கொண்டே இருக்கிறார்கள். தம் கைகளில் இருக்கும் டார்ச் வெளிச்சத்தைக் குகைக்கும்  காட்டி முன்னேறுகிறார்கள். வெளியே திடீரென கருமேகம் சூழ்கிறது. பலத்த காற்றோடு மழை பிடிக்கிறது. வழக்கமாக ஜூலை மாதம் இறுதியில் தொடங்கும் பருவநிலை ஏனோ சொல்லாமல் கொள்ளாமல் அன்று தொடங்கியது. ஒவ்வொரு பருவமழையிலும் குகை நிரம்பும். மழை வெளுத்து வாங்குகிறது. சிரிப்பும் குதூகலமும் நிரம்பிய அந்த சிறுவர்களுக்கு இது எதுவும் தெரியவில்லை. இண்டு, இடுக்கு எல்லாம் நுழைந்து போன பிறகு பாறைகளில் நீர் வடியத் தொடங்குவதைச் சிலர் கவனிக்கிறார்கள்.  ஆனாலும் தொடர்ந்து உள்ளே செல்வதை நிறுத்தவில்லை. 

மழையில் நனைந்த  மலை, தன்பால் பெருகும் நீரைக் குகைக்குள் கொண்டு சேர்க்கிறது.  அவர்களை நனையாமல் அழைத்துவர பெற்றோர்கள் வாகனம் எடுத்துக் கிளம்பி குகைக்குச் செல்கிறார்கள்.  காட்டிலாகா அதிகாரிகளும் வந்து சேர்வார்கள். குகையில் தண்ணீர் மட்டம் உயர்வதால் குகை மூடப்படுகிறது. உள்ளே சென்றவர்களை எதிர்பார்த்து வெளியே காத்திருப்புகள் தொடங்குகிறது. மழையும் நிதானமாய் விடாமல் தொடர்ந்து பெய்கிறது. Navy  Seals, ராணுவம் என்று தாய்லாந்து நாட்டின் முக்கிய அரசுத்துறைகள் வந்தடைகிறது. மாகாண ஆளுநர் வருகிறார். மீட்புப் பணி தீவிரமடைகிறது. என்ன செய்வதென்ற பெரிய திட்டங்கள் இல்லாமல், நீரை வெளியேற்றி மீட்கும் முயற்சிகளோடு துவங்குகிறது. அதற்குள் உறவினர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் வரக் கூட்டம் கூடிக்கொண்டே போகிறது. 13 பேரையும் உயிரோடு மீட்டுவிட அனைவரும் தத்தம் முயற்சிகளைச் செய்கிறார்கள். 

Thai Cave Rescue: A Timeline

Photo Credit : India Today

பயிற்சி பெற்ற Navy Seals உள்ளே செல்கிறார்கள். எங்குமே குறைந்தது மார்பளவு நீர்  இருக்கிறது. பல இடங்களில் முழுவதுமாக மூழ்கும் நிலையே. இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டரோடு நுழைவாயிலிருந்து 800 மீட்டர் வரை சென்று திரும்புகிறார்கள். நீரின் வேகமும் அளவும் கூடிக்கொண்டே போக, வெளியேற்றமும் தொடர்கிறது. உள்ளே சென்ற Navy Seals நீரின் சீற்றத்தால் பாறைகளில் மோதி காயத்தோடு வெளியே வருகிறார்கள். வெளியே பயமும், பதற்றமும் அழுகையும் தொடங்குகிறது. நம்பிக்கை குறையும் போது தானே ஆறுதலும் தேற்றுதலும் தேவைப்படுகிறது. அமைச்சர், உள்நாட்டு ஆர்வலர்களும் வந்து உதவ ஆரம்பிக்கிறார்கள். மழை நின்ற பாடில்லை. மலையிலிருந்து குகைக்குச் செல்லும் நீரைத் தடுத்து வெளியேற்ற  கிராம மக்கள் தங்களின் விளைநிலங்களைக் கொடுக்கிறார்கள் அணில் செய்த செயல் போல.   

உலக நாடுகளிடமிருந்து உதவிகள் வரத்தொடங்குகிறது. அப்படியாகப் பிரிட்டிஷ் குகை மீட்புக் குழுவிலிருந்து ரிக்கி மற்றும் ஜான் வருகிறார்கள். ஐந்து நாட்களுக்குப் பிறகு புது முயற்சிகள் இவர்களால் துவங்குகிறது. நுழைவாயிலிருந்து 800 மீட்டர் முதல் 900 மீட்டர் வரை ஊசிப்பாறைகள் மேலேயும், கீழே நிலமட்டம் என மிகக்குறுகலான ஆபத்தான பாதையைக் கடந்து வருகிறார்கள். முதுகில் இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள். வாயில் எப்போதும் அதன் முகப்பு, இறுக்கமான உடை, நீச்சல் உடுப்புகள் என இவற்றோடு 900 மீட்டர் முதல் 1600 மீட்டரை கடக்க 3.50 மணிநேரம் எடுக்கிறது. சாதாரண மீட்பு இதுவல்ல என எல்லோருக்கும் தெரிகிறது. உடல் நைந்து போகும் பயணம் இது. எட்டாம் நாளும் அவர்களைக் காணாமல், மீட்க முடியாமல் நிறைவுபெறுகிறது. உயிரோடு இருப்பார்களா என்ற அவநம்பிக்கைக்   கேள்விகள்  பலருக்கும் தொடங்குகிறது.. மீட்புக்குழுவுக்கும்!சற்றே ஓய்ந்த  மழையினால் பிரிட்டிஷ் மீட்புக் குழு ஆபத்தான T-ஜங்ஷனை கடந்து செல்கிறார்கள். உயிர் தேடல் துவங்கும் இடமும் இதுவே. நுழைவாயிலிருந்து 2500 மீட்டர் தொலைவில் வித்தியாசமான  மணம் உணர்ந்து டார்ச் அடித்து குரல் கொடுக்க, வெளிச்சமும், முணுமுணுப்பும் கேட்கிறது. 13 பெரும் உயிரோடு இருக்கிறார்கள். அங்கிருக்கும் உயரமான இடத்தில் பயிற்சியாளர் சிறுவர்களைப் பத்திரமாக வைத்திருக்கிறார். பயம், பசியை  ஏக்கமான கண்கள் சொல்கிறது. உதவி வருமென உயிரைக் கையில் பிடித்தபடி நம்பிக்கையோடு இருந்த அவர்களை 10 ஆம் நாளில், நுழைவாயிலிருந்து 2500 மீட்டர் தொலைவில், 6 மணிநேரம் 15 நிமிடங்களில் பார்த்து பிரம்மித்து போகிறார்கள் பிரிட்டிஷ் மீட்புக் குழு. படம் எடுத்துக்கொண்டு மறுநாள் உணவு மருந்து எடுத்து வருவதாக நம்பிக்கையளித்துக் கிளம்புகிறார்கள். யாரும் யாரையும் விட்டுக்கொடுக்காமல் ஒற்றுமையோடு ஒருவருக்குக்கொருவர் உதவியாய் இருப்பது இவர்களுக்கு நெகிழ்ச்சியை தருகிறது. காப்பாற்றப்பட்டு விடுவோம் என்ற நம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கிறது. எப்படி காப்பாற்றப் போகிறோம் என்ற கேள்வி இவர்களுக்கு எழுகிறது. அவர்களாக நீந்த உடலில் வலு இல்லை, மழையும் விட்டபாடில்லை, நீர் மட்டமும் குறைந்தபாடில்லை. மீட்கும் ஆலோசனைகள் நடக்கிறது. புத்திசாலித் தனமா, பைத்தியகக்காரத்தனமா என்று சொல்ல முடியாத ஒரு முயற்சியில் பொட்டலங்களைக் கொண்டுவருவது போல 13 பேரையும், இறுதியான 3 நாட்கள் முயற்சியில் 19 நாட்களுக்கு பிறகு உயிரோடு மீட்கிறார்கள். எல்லோர் குரலும் கேட்டும் அதுவரை உறங்கிய மலையின்  பெண் தெய்வம்,  எழுந்தாள். சகமனிதனுக்கு உதவி தேவைப்படும்போது உதவ நீளும் கரங்களுக்கு உதவுவதற்காகவாவது நம் கரங்கள் இருக்கட்டும்.

July 2, 2018.

A group of boys posing for a photo

AI-generated content may be incorrect.

A group of people in scuba gear

AI-generated content may be incorrect.

Photo Credit : Javier Zarracina/Vox



A group of people in a cave

AI-generated content may be incorrect.

Photo Credit : The Times

ஒரே மூச்சில் சொல்லியிருக்கிறேன். ஆனால், இந்த சம்பவம் நடந்த ஒவ்வொரு நாளின் முடிவிலும் பெரிய முன்னேற்றமில்லாது நகர்ந்த போது, மனம் தவித்துப் போனது. ஏதாவது செய்யுங்களேன் என்று சலித்துக்கொண்டேன். வெகுதூரத்தில் நின்று 13 பேரையும் சீக்கிரம் மீட்கவேண்டும் என்று எண்ண முடிந்ததே தவிர, அந்த குகை பற்றியோ, மலை பற்றியோ, ஆபத்தைப் பற்றியோ தெரியவில்லை. வெற்றிகரமான அதிசய மீட்பு என்றே கூற வேண்டும். மீட்புக்குழுவின் தலைவரை அவரின் தலைமைப் பண்பிற்காகவே பாராட்ட வேண்டும். உள்நாட்டு மீட்புக்குழு, பல்வேறு நாட்டிலிருந்து வந்த மீட்புக்குழு, ராணுவம், தன்னார்வலர்கள், மக்கள், உறவினர்கள், உதவியவர்கள் எனப் பத்தாயிரம் பேரை அவர் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியே நிறைவான மீட்புக்கு காரணம். குகைக்குள் பயிற்றுனரின் தலைமைப்பண்பு அதனினும் அருமை. நிதானத்தோடும் நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் சிறுவர்களைப் பேணிக்காத்தார். யார்மீதும் எந்த குற்றமும் சுமத்தாமல், பழி போடாமல் அனைவரும் ஒரே நோக்கத்திறக்காக உழைத்தது நம் அனைவருக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அந்த நிகழ்வைத் திரைப்படமாகப் பார்க்கக் கிடைத்த போது தான் கள நிலவரம் புரிந்தது. உண்மையில் அசாத்திய நிகழ்வு இது. நீங்களும் பாருங்கள்.

படம்: 13 Lives (2022), Amazon Prime 

மேலும் படிக்க: https://www.bbc.com/news/world-asia-44791998 



நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...