Friday, December 1, 2023

உடைபடட்டும் கலாச்சார மௌனங்கள் - 6 - பூங்கொடி பாலமுருகன்

குழந்தைகள் அழகிய ஆடைகளோடு, வண்ண வண்ண பட்டாம்பூச்சிகளாய் அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, பெரியவர்களோ தங்கள் உறவினர்களுடன் ஒரு சிறு குழுக்களாய் ஆங்காங்கே அமர்ந்து, உரையாடிக் கொண்டிருக்கும் காட்சியை அனைத்து விசேஷ வீடுகளிலும் நாம் சிறிது காலம் முன்பு வரைக் கண்டிருக்க முடியும். 

ஆனால் தற்போது, அழகழகாய் ஆடை அணிந்த குழந்தைகள், ஆங்காங்கே ஒரு அலைபேசியை வைத்துக்கொண்டு அதில் மூழ்கி கிடப்பதை நாம் பெரும்பாலும் காண முடிகிறது. பேருந்துக்கு காத்திருக்கும் நேரத்திலோ, பயணங்களில் இருக்கும் போதோ, வீட்டில் தனியாக அமர்ந்தோ, அலைபேசியை வைத்துக்கொண்டு, எல்லா நேரமும் இணையதள வீடியோ கேம்களில், சமூக வலைதள பக்கங்களில் தன்னை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
         
இணையம் இன்றைய குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே மாறி உள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. இணைய தள அடிமையாவதும் ஒருவகை போதை தான்.

அதிகப்படியான இணைய பயன்பாடு குழந்தைகளின் கல்வியிலும் தொழில் முறை செயல் திறனிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இணைய பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.. அதிலும் இந்தியாவில் இணைய பயனாளிகளில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தினர் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள். உலக அளவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் என்பது மிகவும் அதிர்ச்சியான ஒன்று தான்.

இந்த இணைய அடிமைத்தன பிரச்சனையின் ஆரம்ப புள்ளி எது என்று நாம் யோசித்துப் பார்ப்போம். சில காலங்களுக்கு முன்பு வரை குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கதை சொல்லியோ , பாட்டுப் பாடியோ விளையாட்டுக் காட்டியோ உணவு ஊட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போதோ அலைபேசியை கையில் கொடுத்து, அதில் அவர்களை மயங்கச் செய்து, எந்த ருசியும் அறியாமல் இயந்திரத்தை போல வாயைத் திறக்க வைத்து, உணவை அவர்களுக்குள் திணித்து விடுகிறோம். மேலும் சிறு குழந்தைகளை அமைதி படுத்தவும் அவர்களது தொந்தரவு இல்லாமல் இருக்கவும் அலைபேசியை கையில் கொடுத்து, இந்த இணையதள போதையை குழந்தைகளுக்குள் புகுத்தி விடுவதில் நாமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறோம் என்பதை மறுப்பதற்கு இல்லை.

என் மகன் அல்லது மகள், என்னை விட அலைபேசியை மிக திறமையாக பயன்படுத்துகிறான் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் ஒரு விஷயத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான இணை வழி குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இணையவழி குற்றவாளிகள் குழந்தைகளை ஈர்க்கும் பொருட்டு குழந்தைகளிடத்தில் பிரபலமாக இருக்கும் வலைத்தளங்களை குறிவைத்து, அதன் மூலம் குழந்தைகளை குற்ற செயல்களில் ஈடுபட வைக்கிறார்கள். 
         
பருவ வயதில் உள்ள குழந்தைகள், முகமறியாத நபர்களுடன், நட்பில் இணைந்து உரையாடுவதன் மூலம் எண்ணற்ற தீங்கை வரவழைத்துக் கொள்கிறார்கள். 
    
தற்போது சமூக வலைத்தளங்களில் எல்லா விவரங்களும் கிடைப்பதால், வகுப்பில் கூட எதற்கு ஆசிரியர் சொல்வதைக் கேட்க வேண்டும்? இதற்கான விடையை இணையத்தில் தேடி அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் மாணவர்களின் மத்தியில் பரவலாகி இருக்கிறது. 

அதிலும் குறிப்பாய் வளர் இளம் பருவத்தினர் இணையதளத்தில் இருக்கும் நேரத்தை, கட்டுப்பாட்டோடு வைக்க முடியாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. அவர்களின் நடத்தை பாதிக்கப்படுகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கை இழக்கப்படுகிறது. ஏன் சில நேரங்களில் தற்கொலை எண்ணம் கூட அவர்களுக்கு வருகிறது..

எந்த வகையான குழந்தைகள் அல்லது வளர் இளம் பருவத்தினர் இந்த இணையதளத்திற்கு அடிமை ஆகிறார்கள்?

* மற்றவர்களுடன் பழக முடியாமல் அதிக கூச்ச சுபாவம் உள்ளவர்கள்.

* படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்கள்.

* வீட்டில் போதிய அன்பு கிடைக்காத குழந்தைகள்.

* தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள்.

* சமூகத்தில் அதிகம் பழகாத குழந்தைகள்.

* வெறும் பொழுதுபோக்கிற்கு தானே என்று ஆரம்பித்து, இணையதளத்தில் தன்னை பலி கொடுத்து வெளியேற முடியாமல் தவிக்கும் குழந்தைகள்..

தங்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தையும் கவலைகளையும் மறக்க உதவும் ஒரு மருந்தாக இணையதளம் அவர்களுக்கு மாறிவிடுகிறது. தங்களுடைய கோபம் ,மன அழுத்தம் ,கவலை, பயம் எல்லாவற்றையும் இணையதளத்தில் ரீல்ஸ்களாகவோ, மீம்ஸ்களாகவோ பதிவு செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குக் கிடைக்கும் வரவேற்பும், லைக்குகளும் அவர்களை மீண்டும் மீண்டும் இணையதளத்தில் அடிமையாக்குகிறது.

மேலும் முகம் பார்த்து உரையாட தேவையில்லாத இந்த இணையதள உலகில் கூச்ச உணர்வின்றி குறுந்தகவல்கள் மூலம் எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் என்ற மனநிலை அவர்களுக்கு உருவாகிவிடுகிறது. 

இதனால் ஏற்படும் உடல் மனநல பாதிப்புகள்..

* தூக்கமின்மை

*உடற் சோர்வு

* கண் பார்வை திறன் குறைபாடு.

* முதுகு மற்றும் கழுத்து வலி.

* ஆன்லைன் விளையாட்டு களின் மூலம் போதிய உடற்பயிற்சி இல்லாததால், உடல் எடை அதிகரிப்பு..

* பதற்ற உணர்வு

*தன்னம்பிக்கை இழத்தல், குற்ற உணர்வு கொள்ளுதல், மன அழுத்த நோய்

* தற்கொலை எண்ணம்

* இணையம் கிடைக்காவிட்டால் எரிச்சல்..நோமோ ஃபோபியா போன்ற பதற்ற உணர்வு.. அனைத்தையும் பறிகொடுத்து விட்ட ஒரு உணர்வு..

இப்படி பல உடல் நல பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படுகிறது..

அதனால் இணையமே குழந்தைகள் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.. அதன் பயன்பாட்டை மிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டுகிறேன். 

   * குழந்தைகள் இணையத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த பல மென்பொருள் கருவிகள் உள்ளன. அவற்றை நம் கணினியிலோ அலைபேசியிலோ பதிவேற்றி விட்டால், குறிப்பிட்ட ஆபாச விளையாட்டு வலைத்தளங்களை குழந்தைகள் பயன்படுத்த முடியாது. ஒருவேளை அந்த வலைத்தளத்தை குழந்தைகள் அணுகினால் பெற்றோர்களின் மின்னஞ்சலுக்கு தகவல்கள் வரும். 

* குழந்தைகளிடம் அதிக நேரத்தை நாம் செலவிட வேண்டும். இந்த இணையத்தால் என்ன விதமான பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படும் என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். விளையாடுவது, விளையாட்டுகளில் பங்கேற்பது போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடச் செய்தல் வேண்டும்.

* அதேபோல அலைபேசி, இணையம் போன்றவற்றை பயன்படுத்தும் வயதை முடிந்தவரை காலம் தாழ்த்துவது நல்லது.

* அப்படியே குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தினாலும் பெற்றோர்களுடைய கண்காணிப்பில் குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கலாம். காலவரையறை வைத்துக் கொள்வது நல்லது.

* கணினியை பயன்படுத்துவதாக இருந்தால் அனைவரும் பார்க்கக்கூடிய இடத்தில் கணினியை வைத்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.

* அவற்றையெல்லாம் விட குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களிடம் மனம் திறந்து உரையாடுவதும், நிச்சயம் அவர்களை இணையத்தின் அடிமையாகாமல் தடுக்க உதவும். மேலும் குழந்தைகள் நாம் சொல்லிக் கொடுப்பதை கற்றுக் கொள்வதை விட, நாம் வாழ்ந்து காட்டுவதை பார்த்து தான் கற்றுக் கொள்கிறார்கள். நாமும் நம் பெரும்பான்மையான நேரங்களை இணையத்தில் செலவிடுவதை தவிர்த்து, நம் குழந்தைகளுடன் அதிகம் செலவழிக்க வேண்டும். 

* குழந்தைகளை குற்றவாளிகளாக ஒரு விரல் நீட்டும் பொழுது மூன்று விரல் நம்மைச் சுட்டியே நீள்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். 

* குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதை விட வாழ்ந்து காட்டுவோம்.

#உடைபடும் மௌனங்கள் தொடரும்....




ஐந்தும் ஆறும் - மதுகார்த்திக்

நண்பர்களுடன் ஒரு குடும்பச் சுற்றுலா. 

இரண்டு முதல் ஒன்பது வயதிலான ஆறு குழந்தைகளுடனான ஒரு வார பயணத்தின் ஒரு பகுதியாக ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சி சாலையின் பிரத்தியேக விலங்குகள் காட்சியில் நின்றிருந்தோம். 

சொன்ன திசையில் பறந்தன பறவைகள்...

கைதட்டியதும் சிரித்தென குரங்குகள்...

விசில் சத்தம் கேட்டதும் துள்ளி எழுந்தன டால்பின்கள்... 

குச்சி படும் இடமெல்லாம் படம் எடுத்து ஆடின பாம்புகள்...

பாதுகாப்பு பயிற்றுநரின் கண்ணசைவிலும் கையசைவிலும் அவர்களின் கட்டளையை இம்மி பிசகாமல் நிறைவேற்றிக் கொண்டிருந்த விலங்குகளை பார்க்க பார்க்க எங்கள் குழுவில் முணுமுணுப்பு அதிகமானது - "அஞ்சறிவு படைச்சதெல்லாம் தங்கமா சொன்ன பேச்சை கேக்குது.

நம்ம பெத்தது ஒண்ணாவது நாம சொல்றத கேக்குதா???!!!"

கேட்காது!

கேட்கக் கூடாது!!

கேட்கவும் முடியாது!!!

அதற்காக தானே மனிதனாகிய நமக்கு ஆறாம் அறிவை இயற்கை கொடுத்திருக்கிறது. 

சொன்னதை சொன்னபடியே செய்ய ஐந்தறிவு மட்டுமே போதுமே.

சுயமாய் சிந்திக்கவும் செயல்படவும் ஆறறிவு பெற்ற நம் குழந்தைகளை நம் சொல் பேச்சை மட்டும் கேட்டு நடத்தப பழக்கி ஐந்தறிவு ஜந்து ஆக்குவதா? என்ற கேள்வி மனதுக்குள் அதிர்ந்து எழுந்தது. உடனேயே ஒரு வேறுபாடும் உறுத்தியது. 

ஐந்தறிவு உடைய விலங்குகள் பிறந்த உடனே சுயமாக இயங்குகிறது. ஒரு கன்றுக்குட்டி பிறந்தவுடன் நடக்கிறது, மீன் தாய் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் நீந்துகிறது. ஆனால் மனிதக் குழந்தைகள் மட்டுமே பிறந்து பல மாதங்கள் சுயமாய் ஜீவிக்க முடியாமல் பெற்றோரின் அரவணைப்பை தேடுகிறார்கள். 

ஆரம்பத்தில் அரவணைக்கத் துடிக்கும் பெற்றோரும் கண்ணுக்குள், கைக்குள், நெஞ்சுக்குள் என்று எங்கெங்கோ தங்களுக்குள்ளே இறுகப்பற்ற துவங்குகிறார்கள். இறுக்கப்பற்றுதலுக்கும் சிறைபிடித்தலுக்குமான இடைவெளி மிகக் குறைவு என்பதை இந்த இடத்தில் அடிக்கோடிட்டு நம் கருத்தில் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, 

பிறந்த குழந்தைக்குத் தானாக உணவு சமைத்துக் கொள்ளத் தெரியாது என்பது உண்மை. ஆனால் உணவை நாம் படைக்கத்தான் வேண்டுமே தவிர அன்று நிலாவையும், இன்று கார்ட்டூனையும் காட்டி வாயில் அடைக்கத்  தேவையில்லை.

அதேபோல, பிறந்த குழந்தைக்கு உடனே நடக்கத் தெரியாது உண்மைதான். ஆனால் நடந்து பழக வாக்கரும், விழுந்தால் அதிராமல் இருக்க குஷனும் கண்டிப்பாகத் தேவையில்லை தானே.

இப்படி ஒவ்வொரு நிலையிலும் நம் குழந்தையை அரவணைப்பதாக நினைத்து நாம் செய்யும் உதவிகள் அவர்கள் வயதுக்கு தேவையான உடல் வளர்ச்சியையும், மனமுதிர்ச்சியையும் தடுக்கிறது என்றால் அந்த உதவிகள் நம் குழந்தைகளுக்குத் தேவையானது இல்லை என்பதை புரிந்து கொள்வது பெற்றோர்களின் அத்தியாவசியம்.

இந்த முதல் பாடம் முத்தாக மனதில் பதிந்தால் மட்டுமே குழந்தைகள் வளர வளர பெற்றோர்கள் அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே பகிர்ந்து உதவிகளையும் அதனால் ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்க வழியும் கிடைக்கும்.

"அது என்ன அசௌகரியசங்கள்" என்று யோசிக்கிறீர்களா???

அதில் முதலாவது - நாம் ஆரம்பத்தில் மிருகக்காட்சி சாலையில் நடந்ததாக கூறிய, "நான் சொல்றதை என் குழந்தை கேட்கல" என்கிற எதிர்பார்ப்பு!

ஆனால் ஆறறிவுடன் பிறக்கும் குழந்தை அதனுடைய எண்ணங்களின் செயலால் இயங்கும் போது பெற்றோரின் உதவியாக வரும் கையாளுகையும் அதனால் வளரும் எதிர்பார்ப்பும் சுயமாய் சிந்திப்பதை சுருக்குகிறது.

முடிவெடுப்பதில் தடுமாற்றம், செயல்படுவதில் பதற்றம் என்று பதின்வயது வரை இது போலவே கடக்கும் குழந்தைகள் பின்னர் எதிர்மறை உணர்வுகளுடன் வாழ்கிறார்கள் என்று அமெரிக்க ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.  

ஆனால் அன்பையும் அரவணைப்பையும் மட்டும் தந்து உதவி என்ற பெயரில் எண்ணங்களையும் வயது முதிர்ந்த செயல்களையும் திணிக்காமல் வளரும் குழந்தைகள் தன் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடிக் கொள்கிறார்கள். 

அதனால் நினைவில் கொள்வோம் - 
  • நம் குழந்தைகள் சொல்பேச்சு கேட்கும் ஐந்தறிவு விலங்குகளும் இல்லை.
  • ஆறாம் அறிவு சொல்பேச்சு மட்டும் கேட்டு நடப்பதற்கும் இல்லை.
  • நம் வீடுகள் மிருகக்காட்சி சாலைகளும் இல்லை!

மரத்த வச்சவன் - அதீதி

திங்க சோறு இல்லையே அப்படின்னு, சட்டிய உருட்டிக்கிட்டு இருக்கும்போது.. தம்பி அழுகிறான். என்ன செய்ய! நமக்கு இல்லை என்றால் என்ன பக்கத்து வீட்டு அக்கா கிட்ட சோறு வாங்கி தம்பிக்கு ஊட்டிடுவோம். இப்படி பல நாள் அவள் தம்பிக்கு சோறு ஊட்டி இருக்கா. அதுல ஒருவாய் தனக்கும் தேவைன்னு தோணுனாலும்,எந்த சூழ்நிலையிலும் யாருக்கிட்டயும் ஒரு ரூபாய் கூட , கையேந்தி நிற்க கூடாதுன்னு வைராக்கியமா இருக்கிற அவ அம்மா நினைப்புக்கு வந்துருவா. இவ்வளவு பாசமா தம்பிய கவனிச்சுக்கறவ சில நேரம், அவன் தொந்தரவு தாங்க முடியலன்னு அவன ரொம்பக் கோவமா அடிச்சு போடுவா. காரணம், அவளும் குழந்தை தானே!

அவளுக்குள்ளயும் ஓடி ஆடி விளையாடனுங்கற ஏக்கம் இருக்கும். ஆனா, தம்பி அம்மா வேலைக்கு போறதுக்கு ரொம்ப எடஞ்சல் பண்றான். பால் கொடி மறக்காம வீறு வீறுன்னு கத்தி ஊரையே கூட்றான்.அதனால அவனப் பார்த்துக்கிற பொறுப்பு முழுசா அவளை வந்து சேர்ந்திருச்சு. அவ ரொம்ப அழகான புள்ள ;நல்ல நெறம். இடுப்புக்குக் கீழே தொங்கும் முடி.ஊர்ல இருக்கிற சனங்கெல்லாம் இந்த பிள்ளைக்கு எவ்வளவு முடி பாரேன்.. அப்படின்னு உச்சிக்கொட்டும். நல்ல சுறுசுறுப்பான பிள்ளையும் கூட.

எல்லார் மாதிரியும் பள்ளிக்கூடத்துக்கு நல்லா அழகா ஜடையை மடிச்சு பின்னிக்கிட்டு, பாவாடை சட்டை போட்டுக்கிட்டு போயிட்டு இருந்த பிள்ளை, தம்பிக்காக என்னய பள்ளிக்கூடம் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்களேங்ற கோபம் அப்பப்ப வந்தாலும்,அதை தாண்டி என் தம்பி.. என்னோட தம்பி அப்படிங்கிற அந்த பாசமும் அவளுக்கு அதிகம்.ஆனாலும், நம்ம வேலைக்குப் போனா தான் கஞ்சியாவது குடிக்க முடியுமே அப்படிங்கறப்ப அம்மாவுக்கும் வேற வழியும் தெரியல.மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.. அப்படின்னு பசிக்குப் பேசியே வைத்தியம் பாக்குற அப்பா. இதெல்லாம் வயிறுக்குத் தெரியுமா என்ன? அப்பனா இருந்தாலும் அவனுக்கும் வயிறு இருக்கே!

ஒரு நாள் வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தி முடித்துவிட்டு அம்மா நெசவுக்கு போனதுக்கு அப்புறம், தம்பிய பாத்துக்குற வேலைய தான் முழு நேரமாக செஞ்சிட்டு இருக்க அந்த பொண்ணு,கம்மஞ்சோறு களிய தவிர திங்க ஒன்னும் கிடைக்கலையே என்கிற ஏக்கம். என்ன இருந்தாலும் விளையாட்டுப் பிள்ளை தானே..வெளிய வந்து நாலு சிறுசுகளோட விளையாடும்போது எல்லாத்தையும் மறந்துடுறா. ஒருநாள் விளையாண்டு முடிச்சு வர்ற வழியில தூரத்தில் ஒரு கடையில, அப்பா உட்கார்ந்து இருக்கிறதா பார்க்கிறா. நம்ப அப்பா மாதிரியே இருக்கே அப்படின்னு வேக வேகமா அந்த கடையை நோக்கி போறா. அங்க அப்பா பரோட்டாவும்,கோழிக் குழம்பும் வச்சு சாப்பிட்டுட்டு இருந்தாரு. அவ கண்ணெல்லாம் ஒரே கத கத கதன்னு தண்ணி.. வாயில வார்த்தை வரல.. ஒரு நிமிஷம் நின்னு தன் தகப்பன் முகத்தையும்,அவன் இலையில் இருக்கிற அந்த பரோட்டாவையும் பார்த்துட்டு அப்படி, ஒரு வேகமா... கோவமா ஒரு நடைய வீட்டை நோக்கி போடுறா. ஒரு பெரிய ஏமாற்றம், ரொம்ப பெரிய ஏமாற்றம்.. இந்த உலகத்தில் பிறக்கிற எல்லா பொம்பள புள்ளையும் பெருசா நம்பற மொத ஆம்பள அப்பன் தானே! அவளுக்குள் எத்தனை கேள்வி எழும்புச்சோ!
மரத்த வச்சவன் தண்ணி ஊத்த மறந்துட்டான்......

அன்னைக்கு முடிவு பண்றா. இனி நானா சம்பாதிச்சு வீட்ல இருக்குற எல்லாத்துக்கும் பொங்கிப் போட்ற காலம் வர்ற நேரம் அன்னைக்கு தான் எனக்கு விருந்துன்னு முடிவு பண்றா.அதுவரைக்கும் முழு சைவமா மாறிட்டா.

இப்படி வைராக்கியத்துக்காக சைவமா மாறினவங்க எத்தனையோ பேர் அதுல அவளும் ஒருத்தி.

மனிதம் - மலர் செல்வம்

 



ஒரு  நாளின்  பொழுதுகளில் நான்  அதிகமாக எதிர்பார்த்து ஏங்குவது  தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட அந்த மலர்ந்தும் மலராத தெளிந்தும் தெளியாத காலைப் பொழுதின் கலங்கல் நிமிடங்களைத்தான்.

மனம் விழித்துக் கொண்டாலும் கண்களை விழிக்க முடியாமல் அல்லது விழிக்கப் பிடிக்காமல்  நினைவின் வீதிகளில் ஒரு குட்டி உலா சென்று வருவதில் உள்ள சுகமே அலாதி.

நகரை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருக்கின்ற குடியிருப்பு என்பதால் கான்க்ரீட் காட்டிலும் சில மரங்கள் மிச்சமிருந்தன. காலையிலேயே பெயர் தெரியாத இரண்டு மூன்று பறவைகள் "இன்னுமா தூக்கம்" என்று ஓயாமல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தன. 

செம்பூத்து,மைனா,கரிக்குருவி போன்ற பறவைகளின் இசைக் கச்சேரியிலும் "பளிச்சுனு வெடிஞ்சிருச்சு. . எந்திரி. எந்திரி"என்ற அம்மாயி ஆத்தாக்களின் செல்ல அதட்டலிலும் விடியும் கிராமத்துக் காலைநிமிடங்கள் நினைவில் மோதியது. இந்தப் பறவைகள் எதைத் தேடி எந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தனவோ?  திரும்பிச் செல்ல விரும்பியும்  இப்பெரு நகரத்தின்  மாயவலையிலிருந்து மீள முடியாமல்  தவிக்கிறதோ பல மனிதர்களைப் போல?!

வழக்கம் போல தலையணைக்கடியில் கையை விட்டால்...அய்யய்யோ!! காணோமே? என்ன ஆச்சு? எங்கே போச்சு? வழக்கமாக இரவில் தலையணைக்கடியில்  கழற்றி வைத்து விட்டு காலையில் அணிந்து கொள்ளும் கொடிச் சங்கிலியை அங்கே காணவில்லை...!!பரபரவென போர்வையைக் கலைத்துப் போட்டு படுக்கையை உதறி பக்கவாட்டு சின்ன மேசையை நகர்த்தி...ம்ஹும்... எங்குமே இல்லை. சங்கிலியைக் காணோம் என்பதை விட எதிர்கொள்ளப் போகும்  கேள்விகள் இன்னும் அதிகம் பயமுறுத்தின.

"கழட்டி வைக்கிறவங்களுக்கு இது எதுக்கு?"

"ஆனாலும் இவ்வளவு ஆகாது"

"எப்பவுமே இவ இப்படித்தான்" ரீதியில் வந்து விழப் போகும் சொல் அம்புகளை நினைத்தால் "திக்" கென்றிருந்தது.

ஒருவேளை இவர் தான் எடுத்து வைத்திருப்பாரோ??

அடிக்கடி நடப்பது  தான். ஏதாவது கேட்கலாமென்றால் பால்கனியில் ஐயா ஆழ்நிலைத் தியானத்திலிருந்தார்.விசுவாமித்திரர் தவமாவது மேனகை வந்தால் கலைந்து விடக் கூடும். இது அதையும் தாண்டி...!! தானாய் கலைந்தால் தான் உண்டு.

"ஏங்க  தலையணைக்கு அடியில இருந்து எடுத்து  என் சங்கிலியை எங்கே வச்சிருக்கீங்க?

வழக்கமான  பாணி கேள்வி தான்.பூமராங் மாதிரி டக்கென  திரும்பி வந்தது  பதில்.."நான் பாக்கல. லாக்கர்ல வச்சிர வேண்டியது தானே அவ்ளோ கனமா இருந்தா?"

யோகாவைத் தொடர்ந்தார். ஞானி.

'நல்ல ஐடியா தான். செஞ்சிருக்கலாம்' என்று நினைத்தபடி நடந்தேன் காலைக்கடமைகளை நோக்கி.

காபித்தூளை பெர்கோலேட்டரில் நிரப்ப ஆரம்பித்தேன். பெர்கொலேட்டரில் கீழே தண்ணீர். மேலே சேகரமாகும் டிகாக்க்ஷன். அதுவரை பயன்படுத்தி வந்த ஃபில்டருக்கு நேர்மாறான விஷயம்.

கேள்விகளோ எதிர்ப்புக்களோ இன்றி மாற்றம் எளிதாக வரவேற்புடன் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது 'புதுமை' என்ற பெயருடன். ஆனால் வாழ்க்கை நிகழ்வுகளில் மாற்றத்தை  ஏற்பதில்  மக்களுக்கு எத்தனை தயக்கம்? எத்தனை  மனத் தடைகள்...?!

ஸ்ட்ராங்கான சூடான சர்க்கரை குறைவான நுரை தளும்பும் காஃபியுடன் பால்கனியில் அமர்ந்தேன். காஃபி யின் உயிருக்குப் பெயர் நுரை.

கடவுளின் வடிவம் ஒருவேளை காஃபியைப் போல இருக்கலாமோ?

நறுமணம் நாசியையும் மனத்தையும் ஒரு சேர நிரப்பியது.

ரசித்து ருசித்து காபியுடன் ஐக்கியமானேன்.

அதுவே ஆகச் சிறந்த தினசரி தியானம் எனக்கு!எனது 'மீ டைம்'.

நேற்றைய நிகழ்வுகளை மீண்டும் மனத் திரையில் ஓட்டிப் பார்த்த போது சட்டென மின்னல் அடித்தது.

நேற்று மதியம் தூங்கும் போது சங்கிலியைக் கழற்றி வைத்ததும் அதற்குப் பின் ஒரு பெயிண்ட்டர் வந்து அரைமணி நேரம்  சீலிங்கில் ஒரு சிறிய பராமரிப்பு வேலையின் தொடர்ச்சியைச் செய்து சென்றதும் நினைவில் வந்தது.

இது போன்ற பணிகளில் இப்போதெல்லாம் அதிகம் தென்படும் வட இந்திய முகங்களுக்கிடையே  எப்போதாவது தென்படும் தமிழ் முகம்.

வேலை முடித்து போகும் போது "பெயர் என்னப்பா" என்றேன்."பாஸ்கர்" என்றான்.ஏழ்மையைச் சொல்லும் உடை. ஏனோ  அவனை சந்தேகப் படத் தோன்றவில்லை. ஆனால் நேற்று உள்ளே வந்த ஒரே வெளி நபர் அவன்  தான். அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றது சிந்தனை.

புதிய இடங்களுக்குப் போகப் பிடிக்கும். ஆனால் இது முற்றிலும் புதிய இடம். போக நினைக்காத இடம். வாழ்க்கையில் முதல் முறையாக வந்துள்ள  இடம் காவல் நிலையம். புகார் கொடுக்கத் தான் வந்திருக்கிறோம் என்றாலும் அந்த  செங்கல் கட்டிடத்திற்கு முன் மகிழ்வுந்தை நிறுத்தியதும் வயிற்றுக்குள் ஏதோ உருண்டது. காலங்காலமாக நம்பிக்கைகள்  மனித மனங்களுக்குள்  கட்டமைக்கப் படுவது  இது போல் அடிப்படையே இல்லாத  சில   அச்சங்களால் தான் எனத் தோன்றியது. 

பளிச்சென சுத்தமாக இருந்தது காவல் நிலையம். இளம்   உதவி  காவல் ஆய்வாளர் அனுசரணையுடன் அணுகியது ஆச்சரியமாக இருந்தது. அவருடைய அம்மாவின் நினைவு வந்திருக்கலாம்.வி பரம் கேட்டார்.

"ஏட்டையாவிடம் கம்ப்ளெய்ண்ட் எழுதிக் குடுங்க"

ஏட்டையா ஒரே பாட்டையா தான். இந்த வருடம் ஓய்வு பெறலாம் ஒருவேளை.

" மாங்கல்யச் சங்கிலியை எதுக்கும்மா கழட்டறீங்க. இதென்ன சினிமால வர்ற மாதிரி?!"

எங்கெங்கும் கலாச்சாரக் காவலர்கள்!!

சப் இன்ஸ்பெக்டர்  கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார்."என்ன பண்றீங்க."

"வீட்ல எத்தனை பேர்"

"எப்ப வச்சீங்க"

" எங்க வச்சீங்க"

" வீடு முழுக்க தேடியாச்சா"

"எத்தனை பவுன்" வழக்கமான கேள்விகளுக்கப் புறம்  முக்கியமான கேள்விக்கு வந்தார்.

"யார் மேலயாச்சும் சந்தேகமிருக்கா?"

"இல்லை"

"யார் நேத்து புதுசா வீட்டுக்கு வந்த வெளியாள்?"

"பெயிண்ட்டர்'

"அவரோட ஃபோன் நம்பர் இருக்கா"

"இல்லை.அவரை அனுப்பிய மேலாளரைக் கேட்டுச் சொல்றேன்."

வேலை செய்பவர் என்பதாலேயே சந்தேகப் பட முடியுமா? இருபது வயது தான் இருக்கும். கருமமே கண்ணாயினான் போல இருந்தானே. அவனைப் பற்றிக் காவலரிடம்  குறிப்பிட்டிருக்கக் கூடாதோ என்று கூடத் தோன்றியது.

"அவன்தான் எடுத்திருப்பான்னு என்னால உறுதியா சொல்ல முடியல. கூட்டிட்டு வந்து ரொம்ப அடிச்சறாதீங்க  சார்".

"புகார் கொடுத்திருக்கீங்க. கண்டு பிடிக்கிறது எங்க வேலை.ஒத்துழைப்பு கொடுத்தீங்கன்னா போதும்.. இப்ப நீங்க கிளம்புங்க"

காவல் நிலையத்திலிருந்து வீட்டுக்கு வருவதற்கும் காவல்துறை வாகனம் பின்னாலேயே வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.  பத்து நிமிடத்தில் பாஸ்கர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டதாகத் தகவல். நெஞ்சு பதறியது.

"ரொம்ப அடிச்சிருவாங்களோ?

ஒருவேளை இவன் எடுத்திருக்கா விட்டால்??

சங்கிலியைத் தொலைத்ததற்குச் சமமான  கவலையாக இருந்தது எனக்கு.

இரவெல்லாம் மனதில் அந்த பாஸ்கரின் முகம் தான். அந்தக் காவல் ஆய்வாளர் அப்படி ஒன்றும் கரடுமுரடான தோன்றவில்லை என்று சமாதானம் செய்து கொண்டேன்.

வீட்டிலேயே எங்காவது இருந்து விட்டால்?

பாதி தூக்கத்தில் எழுந்து வீடு முழுக்க தேடு தேடென தேடியாச்சு. காணாமல் போனதாக நினைத்திருந்த ஒற்றைக் கம்மல், சங்கிலி அறுந்த வெளிநாட்டுக் கைக்கடிகாரம், வெள்ளி குங்குமச் சிமிழின் மூடி என்று நிறைய புதையல். வீடு சுத்தமாச்சு. மனசு பாரமாச்சு.

சிந்தனைகள் சுற்றிச் சுற்றி ஆக்டோபஸாகி மனதை அழுத்தியது. மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்கக் கூடாது .  வீட்டில் இன்னும் நன்றாகத் தேட வேண்டும் எனத் தோன்றியது.

காலை எழுந்ததும் தச்சு வேலை ஆசாரியை வரச் சொல்லி  கட்டிலை முழுதும் பிரித்துப் போட்டாயிற்று. சங்கிலியின் தரிசனம் கிடைக்கவில்லை. காலைக் காஃபியும் கசந்தது. படுக்கையும் நொந்தது. ஏனோதானோவென அலைந்து கொண்டிருந்தேன் வீட்டுக்குள்.

12 மணிக்கு அழைப்பு மணியின் இன்னிசை. கதவைத் திறந்தால் உதவி காவல் ஆய்வாளர் மஃப்டியில். வரவேற்று அமரவைத்து குடிக்க பானைத்  தணணீர் கொடுத்தேன். சென்னையில் தரமான குடிநீரென்பது  பெரும் லக்சுரி! 

"எனக்கு க்ரைம் ஸ்பாட்ட பாக்கணும்"

என்னது க்ரைம் ஸ்பாட்டா...

படுக்கை அறையைக் காட்டினோம்.  இண்டீரியர்ஸ்  கண்களை உறுத்தாமல் அழகா செய்திருக்கீங்க என்றார்.  பதில் பேசும் மனநிலையில் நானில்லை.

"மெத்தைக்கும் சுவருக்கும் உள்ள இடைவெளியில் சங்கிலி விழுந்திருக்கலாம். அங்கே தான்  பூச்சு வேலை செய்த இடம்" என்று  விரிவாக சொல்லிக் கொண்டிருந்தேன்.

மௌனமாகக் கேட்டார். சட்டென பாக்கெட்டில் கையை விட்டு எதையோ எடுத்தார். "இதுவா பாருங்க" என்றார் புன்சிரிப்புடன்.

"கண்டேன் சீதையை"னு அனுமன் பாடியது தான் நினைவுக்கு வந்தது.ஆச்சர்யத்தில் எனக்கு பேச்சே வரவில்லை. கண்கள் விரிந்தன.  இதயம் படபடத்தது.

அவரது கையில்   என் கொடிச் சங்கிலி.

"ஆமாங்க சார். என்னுடைய சங்கிலி தான்"

கையில் வாங்கியவுடன் என்னை அறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது. ஏதேதோ கவிதை வரிகளெல்லாம் நினைவில் ஓடியது.

"ரொம்ப நன்றிங்க சார்" குரல் கம்மியது.

"எப்படி கெடச்சுது?"

"இப்ப கட்டில் சந்திலிருந்து நான் தான் எடுத்தேன்."

நீங்க பாக்கெட்டிலிருந்து எடுத்ததைத்தான் நான் பார்த்தேனே எனச் சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.

"அப்படி நீங்க எழுதிக் கொடுத்திருங்க"

"முதல்ல எழுதிக்  கொடுங்க அப்புறம் சொல்றேன்.."

முடிந்தது.

"பாஸ்கர் தான் மேடம். அஞ்சாவது நிமிஷம் ஒத்துக்கிட்டான். நகையையும் கொடுத்திட்டான்.

அவனை நம்பி ஒரு பெரிய குடும்பம். வெளிய தெரிஞ்சா வேலை போயிரும். இது தான் முதல் முறை. "என்னை விட்ருங்க சார். வேலை போய்ட்டா தற்கொலை பண்ணிக்குவேன்'னு அழுகை. அதான் ஃபைல முடிச்சிரலாம்னு.

இதயத்தில் யாரோ ஓங்கி அறைந்தது போல் இருந்தது எனக்கு. சங்கிலி கிடைத்தது சந்தோஷம் என்றால் சக மனிதர்கள் மேல்  வைத்திருந்த நம்பிக்கை  தூள் தூளானது வருத்தம்.

"தாலிச் சங்கிலி காணோம்னு எவ்வளவு வருத்தப்பட்டிருப்பீங்க. பண மதிப்புடன் செண்டிமெண்ட்டான விஷயம் வேறு.

ஊறுகாயைப் பார்த்தால் எச்சில் ஊறுகிற மாதிரி தான். கண் முன்னாடியே நகை கிடந்தால்  சிலருக்கு கை பரபரக்கும். கவனமா இருங்க. ஆனா ஒரு விஷயம். நகை எப்படி கெடச்சுதுன்னு யார்கிட்டேயும் இப்ப சொல்லிக்க வேண்டாம்". வீட்டிலிருந்து அவர் கிளம்பினார். ஆனால் மனதுக்குள் நிரந்தரமாக கம்பீரமாக அமர்ந்து விட்டார்.

மனிதம் அழிவில்லாதது. எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பார்க்காத இடத்திலிருந்து நம்முடன்  தொடர்ந்து கை குலுக்கிக் கொண்டே தான் இருக்கும். மனிதர்கள் மேலிருந்த நம்பிக்கையில் இன்று புதிதாக ஒரு துளிர்.

பாஸ்கரின் மேலாளரின்  எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. நேற்று இது பற்றி அவரிடம் பேசியிருந்தேன்.

"மேடம் என்ன ஆச்சு".

ஒரு நிமிடம் நிதானித்தேன் வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கினேன்.

"வீட்டிலேயே கட்டிலுக்கடியில கெடச்சிருச்சு."

"சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க மேல தப்பை  வச்சிக்கிட்டு பாஸ்கரோட வாழ்க்கையை அழிக்கப் பாத்தீங்களே. வேலை செய்யறவங்கன்னாலே கேவலமா நெனக்கக் கூடாது. நீங்க போய் இப்படி செய்வீங்கன்னு நினைக்கவே இல்லை. வாழ்க்கையே போயிருக்கும் அவனுக்கு. இனிமேல் எதை சொல்றதுக்கு முன்னாடியும் இன்னொரு முறை  யோசிங்க மேடம். மனுசங்க மேல நம்பிக்கை வையுங்க"

"இன்னொரு முறை யோசித்ததால் தான்  இந்த பதில்" என்று சொல்லத் தோன்றியது.. சொல்லவில்லை.

சில நேரங்களில் பதில் சொல்லாமலிருப்பதைப் போல் பொருத்தமான பதில்  வேறு எதுவுமில்லை..!!

எளிமையின் சுவடுகள்.....ராதா மனோகரன்

தோட்டத்தின் நடுவே நீண்ட பெரிய வாசல், அதே நீளத்திற்குத் திண்ணை, சௌகர்யமான ஆசாரம், சிறிய அறைகள், பெரிய சமையலறை, அதைச் சுற்றிலும் உயரமான கருங்கல் மதில் சுவர் கொண்ட ஓட்டுவீடு எங்கள் வீடு.

வீட்டு மதில் சுவரை சுற்றிலும் பத்து பதினைந்து தென்னை மரங்கள், கைக்கு எட்டும் தூரத்தில் பழுத்துத் தொங்கும் பப்பாளி மரம், பூத்துக்குலுங்கும் கனகாம்பரம்,மல்லிகை,பன்னீர்ரோஜா செடி கொடிகள் இருக்கும். மதில் சுவரைத் தாண்டினால் உயர்ந்து வளர்ந்த பனை மரங்கள், இலையை பூக்கள் மறைக்கும் வேப்ப மரங்கள், காயும்,பழமும் கொட்டிக் கிடக்கும் இழந்தை மரம், வேலியாய் வளர்ந்து கிடக்கும் கிளுவை, அதில் பற்றிப் படரும் ஊஞ்சன் கொடி என திசைக்கு ஒன்றாக நின்று கொண்டிருக்கும்...நடுநடுவில் மழை காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டைகள்.

தாத்தா,அம்மா,இரண்டு சித்திகள், இரண்டு சித்தப்பாக்கள், ஏழு சகோதரிகள், ஒரே சகோதரன் என பதினான்கு பேர் கொண்ட கூட்டுக் குடும்பம். அத்தையின் பையனும் எங்கள் வீட்டிலேயே வளர்ந்தார்கள். எனக்கு நினைவு தெரியும் முன்னரே அப்பா இறந்து விட்டார்.

பால் ஊற்றி நெகுநெகுவென பூசி மெழுகப்பட்ட சிமென்ட் தரை கொண்ட திண்ணை, ஆசாரம் மற்றும் அறைகள். ஆசாரத்தின் ஓரத்தில் சிவப்பு வண்ணத்தில் பார்டரும், நடுவில் ஒரு வட்டத்துக்குள் எட்டு இதழ்கள் கொண்ட பூவும் இருக்கும். இரண்டு கயிற்றுக் கட்டில்கள் தான் பர்னிச்சர். அதில் ஒன்று வேலைப்பாடுடன் கூடிய நான்கு கால்களைக் கொண்டிருக்கும் அது தாத்தாவிற்கும், உறவினர் வந்தால் அமர்வதற்கும். மற்றொன்று அப்பாக்களுக்கும் குழந்தைகள் ஏறிக்குதித்து விளையாடுவதற்கும். அம்மாக்கள் எப்போதும் சுவற்றில் சாய்ந்து கால்களை நீட்டி குதிகாலைப் பின்னலிட்டுக் கொள்வார்கள். அப்பாக்களோ, தாத்தாவோ இல்லாத மதிய வேளையில் கட்டில் சுகம் காண்பார்கள்.

பத்துக்கு நாற்பது என்ற அளவில் சமையலறை. முன்னர் தறிக்குடோனாக இருந்து மேக்ஓவர் செய்யப்பட்டது.. நான்கு நீளமான, நடுவில் தடுக்கப்பட்ட ஸ்லாப் கற்கள். ஒரு அடுப்பு மேடை அதற்கு மேல் சதுரக் கொண்டை போன்ற புகைக்கூண்டு.

மனைப்பலகைகள் தான் டைனிங்டேபிள். மூன்று சைஸ்களில் பத்துப் பலகைகள் இருக்கும். நீளமான பலகையில் அமர்ந்து கால்களை குத்தவைத்துதான் சாப்பிடுவார்கள் அப்பாக்களும், தாத்தாவும்.. நாங்களெல்லாம் சிறு பலகையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். அம்மாக்கள், அனைவருக்கும் பரிமாறிவிட்டு எப்போதும் போல சுவருக்கு முட்டுக் கொடுத்து கால் நீட்டித்தான் சாப்பிடுவார்கள். 

வெவ்வேறு வட்ட வடிவங்களில் வட்டல் எனப்படும் எவர் சில்வர் தட்டுக்கள். பெரிய வட்ட(ல்)ம் எப்போதும் போல ஆண்களுக்கு. நடு வட்டம் பெண்களுக்கு. குட்டி வட்டம் எங்களுக்கு. ஒரு கோண வட்டல் அது தம்பிக்கு. ஒரே ஒரு மூன்று குழிகள் கொண்ட டிபன் பிளேட் அது சுழற்சி முறையில் எங்கள் ஏழு பேருக்கும். எனக்கு புதன்கிழமை கிடைக்கும். அனைவரும் சாப்பிட்டுவிட்டு சலதாரையில் சென்று தட்டைக் கழுவி வைக்க வேண்டும். தாத்தா,அப்பாக்கள் மட்டும் சிறப்பு சலுகையில் (பிங்கர் பௌல்) சொம்புத் தண்ணீரை வைத்து தட்டிலேயே கழுவிக் கொள்வார்கள். உறவினர் வந்தால் பந்திப்பாயும், வாழை இலையும்.

காய் வணக்கினால் குழம்பு கிடையாது, குழம்பு வைத்தால் பொரியல் கிடையாது. ரசமும் , கரந்த எருமைப் பாலில் புரையிடப்பட்ட கெட்டித் தயிரும் எப்போதும் அவைலபில். உறவினர்கள் வருவது முன்னமே தெரிந்தால் பொரியல்,குழம்பு, ஜவ்வரிசிப் பாயாசம் பருப்பு வடை என முழு உணவு தயாராகும். அறிவிப்பின்றி வந்துவிட்டால் என்ன இருக்கிறதோ அதுவே பரிமாறப்படும். ராகி பக்கோடா அல்லது கோதுமைப் போண்டா போனஸ்.
.
போக்குவரத்து என்பதே பெரும்பாலும் பேருந்துகளிலும் சிலர் டி.வி.எஸ். 5௦ யிலும் தான். மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது புது வண்டியையோ, செருப்பையோ பார்த்துவிட்டால் மனதுக்குள் ஒரே மழைதான். அதிலும் பொண்ணு மாப்பிள்ளை விருந்து என்றால் கேட்கவே வேண்டாம்.

குறைந்தது இரண்டு நாட்கள் தங்கி இருப்பார்கள். ஸ்டுடியோவிற்குச் சென்று கருப்பு வெள்ளை புகைப்படம் எடுக்கப்படும். அந்தப் புகைப்படத்தில் பௌடர் தவிர பெரிய அலங்காரம் எதுவும் இல்லாத முகத்தில் நடு நெற்றியில் வட்டப் போட்டு வைத்து , மல்லிகைப்பூவை சரமாக வைத்து அதில் பாதியை எடுத்து முன்புறம் விட்ட படி போஸ் கொடுத்த யாருமே இன்று வரை அழகில் குறைவாகத் தோன்றியதில்லை. ஆண்கள் திருத்தப்பட்ட அழகுடனும் பெண்கள் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போன்ற முக லட்சணத்துடனும் இருப்பார்கள்.

ஒரே மாதிரி உடை அணிந்து,இரட்டை சடை, கனகாம்பரப் பூ, எண்ணெய் வழியும் முகமுமாக நாங்கள் நின்று கொண்டிருப்போம். அரைக்கால் டிரௌசரும், பூப் போட்ட சட்டையுமாக தம்பி யாராவது கைகளில் ஏறிக்கொண்டு பாலைத்திருடிக் குடித்த பூனையின் பார்வை பார்த்துக் கொண்டிருப்பான். வீட்டின் மூத்த பெண்ணாக இருந்தால் கூடைச் சேரில் உட்கார்ந்த போட்டோவும், பையனாக இருந்தால் உச்சிக் குடுமி போட்டு கவுன் அணிந்த ஒரு போட்டோவும் கண்டிப்பாக இருக்கும்.

புகைப்படங்கள் ஆசாரத்தில் நீளமாக அடிக்கப் பட்ட ரீப்பர் எனப்படும் சட்டத்தில் வரிசையாக தொங்கிக் கொண்டிருக்கும். அதைப் பார்த்துப் பார்த்து சில சமயம் தாத்தாவும், பல சமயம் அம்மாக்களும் கதை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டுத்தரை. பண்டங்கள் அல்லது உருப்படிகள் என்று அழைக்கப்படும் மாடுகள், எருமைகள் , கன்றுகள், ஆட்டுக் குட்டிகள் என இருபத்தி ஐந்துக்கும் குறைவாக அங்கு மக்கள் தொகை இருந்ததே இல்லை. வருடம் முழுவதும் ஏதோ ஒன்று பிள்ளைத்தாச்சியாக இருந்துகொண்டே இருக்கும். எங்கள் சித்தப்பா அவ்வளவு கண்ணும் கருத்துமாக கட்டுதரையையும், ஆடு ,மாடுகளையும் கவனித்துக் கொள்வார். அதில் ஒரு பக்தி இருக்கும்.

கறவை போடுவது, கலசல் கூட்டுவது, வெள்ளாட்டுக் குட்டிகளுக்கு பாட்டிலில் பால் காட்டுவது, மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது, தீவனம் அறுத்து வந்து போடுவது, தவிடு காட்டுவது, சினை ஏற்றத்திற்குக் கூட்டி செல்வது என எல்லாமே அட்டவணைப்படிதான் நடக்கும். எந்த விசேசம், பண்டிகைகளுக்குச் சென்றாலும் அந்த நேரத்திற்கு ஓடி வந்து விடுவார்.

இடுப்பில் கோவணமும் தலையில் உருமாலையும் கட்டியே இருக்கும் தாத்தா அப்பாவெல்லாம் விசேசம் என்றால் அலமாரியில் மடித்து வைக்கப் பட்ட வெள்ளை வேட்டியும் பழுப்பு நிற சட்டையும் அணிவார்கள். வேட்டியின் உள் கொத்தை கொஞ்சம் மேலே ஏற்றி முனையைப் பல்லில் கடித்து இடுப்பை சுற்றி இறுகக் கட்டுவது ஒரு கலை. இறக்கி விட்டால் வேட்டிக்கு மேலேயும், மடித்துக் கட்டினால் வேட்டிக்குக் கீழேயும் நீளமும்,பச்சையும்,வெள்ளையும் என சன்னமான கோடு போட்ட அண்டர் வேர் தெரியும். ஆனாலும் அதிலொரு கம்பீரம் இருக்கும்.

அம்மாக்களின் அலமாரியில் அதிக பட்சம் ஆறு புடவைக்கு மேல் பார்த்ததில்லை.அவங்க பாணியில் இரண்டு புடவை ஒடைக்கு, இரண்டு புடவை எழவு எடஞ்சளுக்கு,இரண்டு புடவை கல்யாணம் காட்சிக்கு...உள்ளங்கைதான் அயன் பாக்ஸ் ...நீவி நீவி மடித்து ஜாக்கட்டை அதனுள் வைத்து மூன்று வரிசைகளில் இரண்டிரண்டாக அடுக்கி வைத்திருப்பார்கள்.அம்மா பின்கொசுவம் வைத்துக் கட்டுவார்கள். பல்லில் கடித்து சிறு மடிப்புகளாக எடுத்து உள்ளங்கை அளவு வைத்து பின்னால் நகர்த்தி உள்ளங்கையின் பின்புறத்தை வைத்து நீவிக் கட்டி முடிப்பார்கள். அதில் அவ்வளவு நேர்த்தி இருக்கும்.

தோற்றத்தில் விறைப்பும், உள்ளத்தில் அன்பும் நிறைந்தவர் தாத்தா. கொஞ்சமாகப் பேசுவார் ஆனால் ஒருநாளும் கொஞ்சிப் பேசியதில்லை.நகைச்சுவை உணர்வு கொண்ட தாத்தா அதைக்கூட கடுமையாகத்தான் வெளிப்படுத்துவார். அவரது கரடு முரடான வெளிப்பாட்டில் ஒளிந்து கிடக்கும் அக்கறை நாங்கள் அனைவரும் அறிந்ததே என்பதால் தாத்தாவை அப்படியே நேசிப்போம். தாத்தா வீட்டின்(டோல்கேட்) கருப்பசாமி. அவரைத் தாண்டி எதுவும்,யாரும் வீட்டுக்குள் நுழைந்து விட முடியாது. எவர் உரிமையிலும் தலையிடவே மாட்டார், எதற்குமே மறுப்பு சொல்ல மாட்டார். எனினும் அவரிடம் உத்தரவு வாங்காமல் அணுவும் அசையாது வீட்டில். 

மருமகள்களை மகளை விட அதிகமாக நேசிப்பார் தாத்தா. மருமகள்களும் அப்படியே அம்மாயி வீட்டில் மூன்று ஆண் பிள்ளைகளுக்குள் இளவரசியாக வளர்ந்த ஒரே பெண் அம்மா. அப்பா இறந்த உடன் அம்மா மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீடு சென்று விடாமல் இங்கேயே இருந்ததற்கு காரணங்கள் உண்டு. அம்மா வீட்டின் மூத்த மருமகள். அம்மாவின் திருமணம் முடிந்து குறுகிய காலத்திலேயே ஆத்தா இறந்து விட்டார்கள். அண்ணியின் மீது அளவுகடந்த மரியாதையும் தனிப் பிரியமும் கொண்ட திருமணமாகாத கொழுந்தன்கள் ,அப்பாவின் ஒரே அக்கா(அத்தை) வீட்டின் அரசி. மாமியார் ,நாத்தனார் இரு ரோல்களையும் அடிஷனல் பர்பாமான்ஸ் பண்ணக் கூடியவர். பாதிநாள் இங்கேதான் இருப்பார்கள். அத்தையின் பையன் நிரந்தரமாகவே இங்குதான் இருப்பார்கள். கொஞ்சம் காடு தோட்டமும் கைத்தறியும் தொழிலாக இருந்ததால் காபிக்கும், சாப்பாட்டிற்கும் ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். அடுப்பில் உலை கொதித்துக் கொண்டே இருக்கும். இத்தனை பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அம்மா விரும்பவில்லை.

அதன் நன்றிப் பிரவாகமாக தாத்தாவும், சித்தப்பாக்களும், பின்னர் வந்த சித்திகளும் அம்மாவை ,அம்மாவின் முடிவுகளை பெரிதும் மதித்தார்கள் என்றே சொல்லலாம். இன்றும நாங்கள் வரை எல்லோருமே முக்கியமான முடிவுகளை சித்தப்பாக்களிடம் ஆலோசித்துதான் எடுப்போம்.

வேறு வேறு வீடுகளில் இருந்து வந்த மூன்று உடன் பிறவா சகோதரிகளுக்குள் இன்றைய நாள் வரை வாக்குவாதமோ, சண்டையோ வந்ததே இல்லை என்ற பெரும் ஆச்சர்யத்தை நம்பித்தான் ஆகவேண்டும்.

இரண்டுமாடிக் கட்டிடமோ, குளிரூட்டப்பட்ட அறைகளோ, படகு போன்ற கார்களோ, நிரம்பி வழியும் வார்ட்ரோப்போ கற்றுக் கொடுக்க முடியாத ஒற்றுமை,உழைப்பு,மரியாதை,விருந்தோம்பல் போன்ற வாழ்க்கைக் கல்வியையும், மகிழ்ச்சி பொருட்களில் இல்லை மனங்களில் ஒளிந்து கிடக்கிறது என்ற ரகசியத்தையும் எங்கள் ஓட்டு வீடும், கூட்டுக் குடும்பமும் தலைமுறைகளுக்குக் கடத்திச்சென்றது.

அதை மட்டுமா கடத்திச் சென்றது?....


..தொடரும்..

Bangalore Days (DIDAC 2024) - பகுதி 1 - உமா சிவக்குமார்



அக்டோபர் 16,2023 - மதியம் 3.30 மணி 

சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் விரைந்து கொண்டிருந்த மாருதி டிசையர் கார், பண்ணாரி கோவில் அருகே சற்று வேகம் குறைந்தது. காரில் இருந்தபடியே கன்னத்தில் போட்டு கொண்டேன். சில பழக்கங்கள் தன்னிச்சையானது. பின் இருக்கைகளில் நானும் கோபிசெட்டிபாளையம் - Amaze Academy பள்ளியின் முதல்வர் திருமதி. மங்கையற்கரசி மேடமும் அமர்ந்திருந்தோம் . முன் இருக்கைகளில் Amaze Academy பள்ளியின் தாளாளர் திரு. சங்கர் கோவிந்தராஜ் சாரும் அவரது நண்பரும் ( பெயர் மறந்து விட்டது). அந்த நண்பர் தான் வாகனத்தை ஓட்டி வந்தார். எங்களைத் தாளவாடி வரை பத்திரமாக கொண்டு சேர்த்தவரின் பெயரை நினைவில் நிறுத்தவில்லை .

நிகழ்ந்த நல்லவற்றையும் நிகழ்த்திய நல்லவர்களையும் நினைவில் நிறுத்திக் கொள்ள பழக வேண்டும். மனம் எதை மீண்டும் மீண்டும் மீட்டிப் பார்க்கிறதோ அது தானே நிற்கும். சத்தியமங்கலம் வனத்துறை செக் போஸ்ட் தாண்டியதும் சில நிமிடங்களில் இரண்டு புள்ளி மான்கள் கண்ணில் பட்டன. 

மலைப்பயணம் கூடுதல் பிரியமானது . மேனி வருடும் குளிர்ந்த காற்றும், பார்க்கும் இடமெங்கும் படர்ந்திருக்கும் பசுமையும், அருகே உள்ள மலைத்தொடர்களின் உச்சியில் தெரியும் விரல் உயர மரங்களின வரிசையும் எப்போதும் பரவசப்படுத்தும். எத்தனை இருந்தும் இன்னும் வேண்டும் என கேட்கும் மனது - மூடுபனிக்கு ஆசைப்பட்டது. 

“என்ன சுற்றுலாவா செல்கிறாய் ? அடங்க மாட்டாயா? ", என்றது அறிவு.

எங்கள் பயணத் திட்டபடி , மாலை 4 மணிக்கு மங்கை மேடம், தாளவாடி KCT பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் சுரேஷ்குமார் சார், நான் மூவரும் தாளவாடியில் இருந்து பெங்களூரு நோக்கி கிளம்பியிருக்க வேண்டும். DIDAC Conference 2023 இந்த ஆண்டும் பெங்களூருவில் நடைபெறுகிறது. 

கடந்த நவம்பரில் சென்னை வேதா அகாடமியின் செய்தி மலரில் வெளிவந்த DIDAC 2022 கட்டுரை ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது.  இது குறித்து கட்டுரை ஆசிரியர் மற்றும் வேதா அகாடமியின் நிறுவனர் திரு. வேதா டி. ஸ்ரீதரனிடம் உரையாடிய போது - இந்திய அளவிலும், சர்வதேச அளவில் கல்விச்சந்தை(?) எப்படி எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகவே பார்வையிடலாம் என்று கூறினார் .

அன்றே 2023ல் செல்ல முயற்சிக்கலாம் என்று எண்ணம் பதிந்தது. அடுத்தடுத்த நாட்களில் அதை முற்றிலும் மறந்திருந்தேன். இந்த ஆண்டு அறிவிப்பு வெளியானதும், இருந்த அலுவல்களுக்கிடையே பெரிதாக ஆர்வம் காட்டாமல் தான் இருந்தேன் . செப்டம்பரில் Amaze Academy பள்ளியில் நடைபெற்ற “AWARENESS ON LEARNING DISABILITIES” நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. KCT பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் சார் மற்றும் ஆசிரியர்களும் வந்திருந்தனர். 

நிகழ்வைத் தொடர்ந்த உரையாடலில் தான் DIDAC குறித்து பேச்சு திரும்பியது. DIDAC கருத்தரங்கில் சர்வதேச அளவிலான கற்றல்/கற்பித்தல் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைந்திருக்கும். மேலும் பல்வேறு கல்வி சார்ந்த அமைப்புகளின் பயிலரங்குகள் நடைபெறும் என்றும் தெரிந்து கொண்டேன். 

சுரேஷ்குமார் சார், மங்கை மேடம், நான் - மூவரும் செல்லலாம் என்பது உறுதியானது . DIDAC Conference 2024 ல் கலந்து கொள்ள அவரவர் பள்ளியின் பெயரில் DIDAC இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் . 

காலை முதல் மாலை வரை பல்வேறு பயிலரங்குகள் நடைபெறும். 60 நிமிடங்கள் நடக்க இருக்கும் ஒவ்வொரு பயிலரங்கிற்கும் தனித்தனியாக பதிவு செய்தல் அவசியம் . ஒரு நபர் ஒரு தினத்தில் அதிகபட்சம் இரண்டு பயிலரங்குகளில் மட்டுமே பங்கேற்கலாம்.

ஒத்திப்போடும் பழக்கம் இன்னும் ஒட்டி கொண்டிருப்பதால் பதிவு செய்யாமல் இருந்தேன். மூவரில் முதலில் பதிவு செய்தவர் மங்கை மேடம். சில பயிலரங்குகளுக்கு அனைத்து இடங்களும் பூர்த்தி ஆகி விட்டது- எனவே விரைந்து பதிவு செய்ய சொன்னார். உடனடியாக நானும் சுரேஷ்குமார் சாரும் பதிவு செய்தோம். 

காலாண்டு விடுமுறை முடிந்து இரண்டாம் பருவம் சற்று பரபரப்பாகவே துவங்கியது. இந்த குறுகிய பருவத்தைத் தான், சரஸ்வதி பூஜை, விஜயதசமி தீபாவளி என விடுமுறைகள் வரிசை கட்டிக்கொண்டு மேலும் குறைக்கும். அக்டோபர் 10 ம் தேதிக்கு மேல் தான் DIDAC நினைவிற்கு வந்தது. அக்டோபர் 17,18,19 மூன்று நாட்கள் DIDAC மாநாடு. அக்டோபர் 16 பயணம் . அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை . தொடர்ந்து ஐந்து நாட்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் சூழலில் , நிறைய முன்னேற்பாடுகள் தேவைப்பட்டன . 

இப்படியாக அக்டோபர் 16 பெங்களூரு நோக்கி பயணம் துவங்கியது . DIDAC குறித்த எதிர்பார்ப்பை விட மங்கை மேடம் மற்றும் சுரேஷ் குமார் சாருடன் மூன்று நாட்கள் என்பது தான் பிரதானம். இருவரிடமும் இதுவரை கற்று கொண்டது ஏராளம். மங்கை மேடத்தை முதன் முதலில் ஊட்டி அருகே உள்ள அய்யன்கொல்லியில் நடைபெற்ற வேதா கோடைகால ஆசிரியர் முகாமில் 2016ல் சந்தித்தேன் .  
         
தமிழகத்தில் எந்த பள்ளியிலும் காணக் கிடைக்காத அளவிற்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் மங்கை மேடத்தின் Amaze பள்ளியில் இருக்கும் - இப்படித்தான் வேதா.டி. ஸ்ரீதரன் சார் மங்கை மேடத்தை அறிமுகம் செய்தார். ஆறு வருடங்கள் கழித்து 2022ல் Amaze பள்ளிக்கு சென்ற போது ஸ்ரீதர் சார் கூறியது 100% உண்மை என்பதை உணர்ந்தேன். 

அது மட்டுமல்ல குழந்தை கருவில் உருவானது முதல் பிறந்து, ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வரும்போது அவர்கள் உலகம் எப்படியானது என்பதற்கு 25 சிறந்த புத்தகங்கள் படிப்பதும், மங்கை மேடத்துடன் சில மணி நேரங்கள் உரையாடுவதும் ஒன்று. குறிப்பாக 0-5 வயது வரை குழந்தைகளுக்கான கற்றல், கற்பித்தல் மற்றும் அது சார்ந்த உளவியலில் மங்கை மேடத்தின் ஆழ்ந்த அறிவும், அனுபவமும் எங்கள் மழலையர் பிரிவு ஆசிரியர்களை சீராக வழி நடத்திக் கொண்டிருக்கிறது. 

...தொடரும்...


என் அமெரிக்கப் பயணம் - 1 - சக்திவேல். விரு


                                  


எண்பதுகளில்  பள்ளிப்பருவத்தை  கடந்த நான் என்றோ எங்கோ நூலகத்தில் படித்த சில கட்டுரைகள் வழியாகவோ, முத்தாரம், கல்கண்டு மற்றும் சில சஞ்சிகைகளின் வாசிப்பின் ஊடாகவோ அமெரிக்கா என்று ஒரு  பிரமாண்ட பிம்பம் என்னுள் கடமைக்கப்பட்டு அங்கே சென்றடைய   கல்வி  பேருதவியாக இருக்கும் என்று சிறுவயதில் நம்பியவன் நான். 

தொன்னூற்றி எட்டில் சென்னையில் இயந்திரவியல் பொறியியல் பட்ட படிப்பும் முடித்தாகி விட்டது. தமிழக அரசின் குடும்பத்தின் முதல் பட்டதாரி நிதியுதவியுடன் படித்தாலும் அமெரிக்கா சென்று மேல் படிப்பு  படிக்கும்  அளவுக்கு வீட்டில்  பொருளாதாரம்  சிறப்பாக இல்லாத காரணத்தால் அதை தள்ளிப்போட வேண்டிய கட்டாயத்தில்  தள்ளப்பட்டேன். பின்னர் பலப்பலவேலைகள் செய்து பணம் சேமிக்கும் வழிகளில் என்னை ஈடுபட்டு கொண்டேன்.  

GRE , TOEFL எல்லாம் எழுதி அமெரிக்க கல்லூரி ஒன்றில் இடமும்  கிடைத்து F1 விசாவுக்கு சென்ற பொழுது 9/11 என்று அழைக்கபடும் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து முடிந்திருந்த தருணம். விசா லேது என்று சொல்லி இருமுறை சென்னை ஜெமினி பாலத்தின் கீழ் இருக்கும் அமெரிக்க எம்பஸி அலுவலகம் கைவிரித்து விட்டது. அத்துடன் என் அமெரிக்க கனவும் கலைந்துபோனது என்றே சொல்லலாம்.  சரி அமெரிக்கா தான் போக முடியவில்லை அமெரிக்க நிறுவனமான  IBMல்  பெங்களூரிலாவது சேர்ந்து மனதை தேற்றலாம் என IBMல் பணியில் சேர்ந்துகொண்டேன்  .

பின்னர் கணணி லவ்தீக வாழ்வு யூகேவில் குடியமர்த்தி  சுமார்  20 ஆண்டுகள் வரைக்கும் அமெரிக்கா போக வேண்டும் என்ற எண்ணம் பெரிதாக தலைதூக்கவே இல்லை என சொல்லலாம். போன மாதம் அக்டோபரில் அலுவலகம் வழியாக அவசரமாக  உங்கள் அணியிலிருந்து செல்ல இருந்தவர் வேறு காரணங்களால் செல்ல இயலவில்லை  நீங்கள் போக இயலுமா என்றோரு கோரிக்கை வந்தபொழுது கரும்பு தின்ன கூலியா என எண்ணிக்கொண்டே உடனே சரி சொல்லிவிட்டேன்.  பின்பு தேதியை குறித்துக்கொண்டு மீண்டும் பழைய அமெரிக்க பற்றிய ஆர்வம் தொற்றிக்கொண்டது போல ஒரு வாரம் ஓடிற்று. Virgin Atlantic விமான நிறுவனத்தின்  விமான எண் VS-19 ல்  ஏறி அக்டோபர் 19ம் தேதி லண்டனில் இருந்து சான்பிரான்ஸிஸ்கோ நோக்கி பயணம்.  ஏற்கனவே விமானம்  பயணப்படும்  தகவல்களை  இணையத்தில் தேடி ஜன்னல் சீட்டையும் செக்-இன் செய்து பிடித்துக்கொண்டேன். 

யூகே பாஸ்போர்ட்டில் போவோருக்கு ஓன்லைன் விசாவே (அது விசா அல்ல பயணம் செய்வதற்கான entry clearance மட்டுமே என்பது பின்னர் தான் தெரிய வந்தது வேறு கதை) போதும் என்பதால் ஒருவாரம் முன்னரே ESTA என்றழைக்கப்படும் அமெரிக்கா இணையம் மூலம் பதிவும் செய்து பயண முன்அனுமதியும் பெற்றாகி விட்டது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து  அமெரிக்கா செல்லும்  விமானங்கள்  பூமிப்பந்தின் வடதுருவ கூரை வழியாக மேலேறி கிரீன்லாந்து நோக்கி பயணித்து பின்னர் கீழிறங்கி கனடா வழியாக தென்மேற்கு நோக்கி பயணப்பட்டு அமெரிக்க மேற்குக்கரை நகரங்களை சென்றடைவதுதான் வழித்தடம் என்பதை இணையத்தில் தேடி அறிந்துகொண்டேன். 

Virgin Atlantic VS -19 விமான பயண வழித்தட வரைபடம் 
                                     

விமானத்தில் எனது இருக்கை ஜன்னல் வடக்கு பக்கமாக இருந்தபடியால் வழித்தடம் முழுவதுமாக கிரீன்லாந்தை ரசித்தபடி பயணப்பட்டேன். சரியாக  மதியம் 12 45 மணிக்கு லண்டனில் இருந்து விமானம் பறக்க தொடங்கியது. பயண நேரம் முழுவதும் பகல் என்பதால் சுமார் 40 ஆயிரம் அடியில் இருந்து கீழிருக்கும் பகுதிகளை படமெடுத்தும் ஆர்வமிகு விழிகளின் வழியாக மனதிற்குள் உள்வாங்கியும் 10 மணிநேர பயணத்தையும்   பேரார்வத்துடன்  கடத்துவது ஒரு அற்புத அனுபவம் என்றே சொல்லலாம். 

36 ஆறாயிம் உயரத்தில் இருந்து கிரீன்லாந்து பனிச்சிகரங்கள் 
      



மனித சுவடுகளே அற்ற கீரீன்லாந்தை கடந்து கனடாவின் கியூபெக், ஒண்டாரியோ மாகாணங்கள்  மேலாக  விமானம் பயணித்து  அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணம் வழியாக அமெரிக்காவினுள் நுழைந்தபொழுது ஒரு பால்யவயது சிறுவனின் கண்கள் வழியாக அமெரிக்காவை எட்டி பார்த்த தருணம் இன்னும் மனதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இரு பத்தாண்டுகள் முன்பே மாணவனாக அங்கே கால்பதித்து இருந்தால் என்ன செய்திருப்போம் என்பதை எண்ணி ஒருவித  மனத்தவிப்பும் கூட சேர்ந்துகொண்டது தான் உண்மை.  அமெரிக்க மாகாணங்கள் வழியாக 40 ஆயிரம் ஆடி  உயரத்தில்  எங்கோ காற்றில் பறந்துகொண்டே மனமும் உடலும் பயணப்பட்டது . விமானம் ஒரேகன் மாகாணத்தின் சால்ட் லேக் சிட்டி(Salt lake city) மீது பறக்கும் பொழுது தென்மேற்கு திசையில் இருந்து திரும்பி நேர்  மேற்காக சான்பிரான்ஸிஸ்கோ நோக்கி பயணப்பட்டது. 

கடைசி இரண்டு மணித்தியால பயணத்தில் காலிஃபோர்னியா மாகாணத்தின் ஊடாக பயணப்பட்டு சான் பிரான்ஸிஸ்கோவை சென்றடையும் பொழுது உள்ளூர் நேரம் மதியம் மூன்றுமணி . இறங்கிய பின்னர் அமெரிக்க குடியுரிமை பரிசோதனை  ஊழியர் முன்பு நின்ற பொழுது தான் தெரியவந்தது என் கைபேசி  பாட்டரியின்மையால்  உயிரற்று கிடந்த உண்மை . எனது எந்த  பயண திட்ட அலுவல் தகவலையும் காட்டமுடியாத ஒரு சூழல். மற்றபடி மனதால் எந்த தடுமாற்றமும் ஆகவில்லை என்பதை போல உள்ளூர ஒருவித பயத்துடன் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தேன். 

ஏனென்றால் குடியுரிமை அலுவலருக்கு என்னை திருப்பி அனுப்ப அனைத்து உரிமையும் உள்ளது என்ற நிதர்சனம் முன்னரே நான் அறிந்து கொண்ட தகவல் தான். அதுவும் முதல் முறை அமெரிக்க பயணம் என்பதால் அவர்களுக்கு கேள்விக்கணைகள் தொடுக்க சந்தர்பங்களை நானே உருவாக்கி விட்டதுபோல இருந்தது. எங்கே தங்குகிறோம் எந்த தேதி  திரும்பி செல்கிறேன் போன்ற விபரங்களை வாய்வழி உரையாடலாக சொல்ல அவர் அதை நம்பவில்லை என்பதை என்னால் ஓரளவு யூகிக்கிக்க முடிந்தது. 

அதுவும் முதல் முறையாக  அமெரிக்காவில் நுழையும் பயணத்தின் பொழுது பயண தகவல் டாக்குமெண்டகளை  பேப்பர் காப்பி பிரிண்ட் இல்லாமல் சென்றதால் எவ்வளவு  பெரிய சிக்கலில் தேவையே இல்லாமல் மாட்டிகொண்டேன் என்பது அப்பொழுது தான் மண்டைக்குள் உரைத்தது.  மாப்பிள்ளை நீங்க வரிசையில் இருந்து வெளியில் வாங்க உங்களுக்கு தனியா மரியாதை செய்யவேண்டும் என்று அழைத்து சென்று ஒரு அறையில் தங்கவைத்தார் ஒரு கருப்பு உடை அணிந்த குடியுரிமை அலுவலர். 

பின்னர் தான் புரிந்தது அமெரிக்கக் குடியுரிமை அலுவலக ஏழரை  கும்பல்கள் விசாரணை என்ற பெயரில் அங்கு வருவோரை என்ன பாடெல்லாம் படுத்துவார்கள்  என்பது .......

...அமெரிக்கப் பயணம் தொடரும்...

Farmer in India - R.K. Ramesh Kumar

 


Being a farmer in India:

Be an Indian, or an American or an European or an African, one thing vital for survival is food. How is the lifestyle of one who produces food, the farmer in our country? Do we think of our food producers apart from the hashtag seasons like severe drought or flood causing a lot of damage to the crop and the life of the farmer. Does our role simply end with sharing hashtags like save farmers or we are with farmers. Have we ever thought why farming or related activities are not so beneficial to the people involved?

In the past, agriculture in India was one of the profitable activities. The scenario changed in the middle of the 20th century with the introduction of artificial fertilizers and pesticides. In the past farming in India was a self sustained process. It has its own inputs, reduces the cost of raw materials and has its own control system. Are our farmers forced to do something they are not used to or they fell into some sort of trap depending on others for their sustainabili
ty.

Being one from a farming family and involved partly in organic farming, I felt few things have made a great impact on the livelihood of the current generation farmers. I have questioned myself many times, even though I have a passion for farming, why am I not fully involved in that ? The answer is always financial sustainability. The further question arises is how do people solely rely on agriculture lead their life? What is keeping me away from attaining sustainable farming? When conversing with a few old people who have been involved in farming, animal rearing etc as their only source of income, I understood a few reasons that may be keeping farmers away from financial freedom or profitability .

First and foremost thing is the small farm size in Indian agriculture. The average farm size in India is 1.06 hectares compared to 178 hectares in the USA. Yes you read it right, the farm size in the USA is more than 150 times bigger than their Indian counterparts. This helps in easy mechanization and the cost of mechanization is much cheaper. The larger farm sizes bring in the advantages of Economies of Scale. The cost of production is drastically reduced through reduction in input costs in man, machine and transportation. The larger scale operation helps in bringing technology to farm with minimal investment per acre and has some control in marketing of products.

To be frank, spraying manure or pesticide for a 200 acres mango orchard is much easier because the farmer can access technology like even spraying with a drone or sprayer fitted tractor or any new technology. The same pesticide spraying in a 2 acre orchard the farmer has to depend on the labor . The delay in execution leads either to loss in production or loss in quality of production both impact the revenue at the harvest. The same farm size gives advantage while marketing the harvest, the farmer with 200 acres have better say than a small farmer.

Second major issue I know is the lack of proper infrastructure to store the harvest or usable technological advancements for storage of the harvest. Majority of the farmers suffer due to supply demand imbalance. We are all aware that tomato prices go up till 150 -200 per kg for a few days
and the same goes south to 5 per kg.. In the first scenario the middle men and to some extent farmers enjoy the high price. But in the second scenario only the farmer burns his livelihood and bears the complete loss of the input cost and not even salary for his labor.

With no major common platform to share what crop is in production and to what extent, the farmers are at the mercy of the traders who have better control over demand supply. With the recent governments focussing on creating cold storages at the production points, some harvest are finding good prices by getting marketed at the high demand period.

With more than 1/3rd of the population getting involved in agriculture and related activities, a major focus towards making them sustainable will greatly contribute to the GDP of the nation. At present the contribution of agriculture to GDP stood at 30% which can be improved if the farming focuses on more mechanization with the increased farm size & geometrically shaped farms.

Third issue is proper disposal of waste especially from paddy fields in North India and plantain fields. If the technology available now can be made popular and the paddy waste and plantain waste are converted to fiber that can be used on sarees etc, it would be a great income generator for the farmers.

Apart from the above discussed areas if proper marketing support is available our farmers can make a decent revenue. The recent attack from polluting industries is also making the fertile lands becoming barren.

As a responsible individual we should understand the difficulties every farmer undergoes in bringing the food to our plate and stop bargaining at the street vendors and road side vendors.

காதலர் தின முத்தம் - Dr.K.தமிழ்செல்வன்

 


னி மலைகளுக்கிடையே ஒரு பயணம். பயணத்தின் இடையே கையில் பாரதிதாசனின் கவிதைகள் புத்தகம். இப்படியாய் வாசிப்பு ....

"முல்லை விலை என்ன என்று கேட்டேன். 
முல்லை இல்லை என்றாள்.
பல்லை இதோ என்று காட்டி 
பத்து முத்தம் பதித்தான்".

கவிதை நினைவூட்டியது காதலியை மட்டுமல்ல இன்று காதலர் தினம் என்பதையும் தான். 

அலைபேசியில் அழைத்தான் சிறு புன்முறுவலுடன். காதில் கேட்டது காலர் டியூன் மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி... பாடல் மிகப் பொருத்தமாய்....

மறுமுனையில் அவனின் அன்புக்குண்டான அந்தக் குரல் "சொல்லுங்கள்".

"என்ன சொல்ல உன் நினைவாகவே இருக்கிறேன்", இந்தப் புறமிருந்து இவனின் பதில். 

"பொய் பேசாதீர்கள். காலையிலிருந்து அழைக்கவில்லை. இப்பொழுதுதான் என் நினைவு வந்ததா", என காதலர்கள் இடையேயான உரையாடல். 

"நான் காலையிலிருந்து பல முறை உங்களை தொடர்பு கொள்ள முயன்று முடியாமல் தவித்தேன்".

"இல்லை அன்பே. காலையிலிருந்து பணி நிமித்தமாக பனி அதிகமான ஒரு இடத்தில் முகாம் அமைத்து அங்கு இருக்க வேண்டியிருந்தது. அதோடு  அலைபேசியில் சமிக்கை இல்லாத இடத்தில் இருந்தேன். பயணத்தினிடையே சமிக்கை வந்தவுடன் அழைத்திருக்கிறேன். நீ என் உயிர் அல்லவா? உன் நினைவின்றி நான் எப்படி இருக்க முடியும்?"
 
இப்படி உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கையில் அவன் கேட்டான்... "இன்று காதலர் தினம் அல்லவா எனக்கு இன்று அலைபேசி வழியாக ஒரு முத்தம் கொடு" என்று... 

"மூன்று மாதங்கள் கழித்து நேரில் வருவீர்கள் அல்லவா? அப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்", என்பது அவளின் பதில். 

"அப்பொழுது நம் திருமணமும் நடந்தேறி இருக்கும். முத்தமென்ன மொத்தமும் உங்களுக்குத்தானே", என்று கூறி அலைபேசி வழியாக தனது வெட்கத்தையும் பதிவு செய்தாள்.

"அத்துடன் ஒரு நிபந்தனையும். நீங்கள் ஏற்கனவே சொன்னது போல திருமணத்திற்குப் பின்னரும் கூட நீங்கள் உங்கள் தேசம் போலவே என்னை  நேசிக்க வேண்டும்". 

"நான் மரிக்கும் வரை நீயும்,தேசமும் எனக்கு ஒன்றே தானடி", என்றுரைத்தான்.

"சரி, நான் கேட்ட முத்தத்தை இப்பொழுது தா", என்று மீண்டுமொரு முறை கேட்டான். 

அவளும், "சரி தருகிறேன்", என்றாள். 

முத்தம் இந்தப் பக்கம் அலைபேசி அவள் இதழ்களில் இருந்து பெற்றது. சிறிய ஓசையாக அந்தப் பக்கம் அவனைச் சென்றடைய சில ஆயிரம் மைல்களைக் கடக்க வேண்டி இருந்தது. இருப்பினும்  தொலைத்தொடர்பு சாதனங்கள் அதை வினாடிகளில் சுருக்கி இருந்தது.  அந்த சிறிய ஓசை சென்றடையும் முன் காதைப் பிழக்கும் ஒரு சத்தம் அவன் காதுகளில். கரும்புகை சூழ உடல் முழுவதும் எங்கோ தூக்கி வீசப்பட்டது போல ஒரு உணர்வு. அவனுக்கு புரிந்தது வழிப்பயணத்தில் எங்கோ ஏதோவொரு  விபத்து நிகழ்ந்திருக்க வேண்டும். 

உடலில் ஏதும் வலிகள் இல்லை. காயங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. கண்முன்னே அலைபேசி தொடு திரை அவளின் முத்த ஓசையினை உடைந்த நிலையிலும் பரிமாற பதிலுக்குத்தானும் முத்தமிட நினைத்து அலைபேசியைத் தொட முயற்சிக்கும் போதுதான் அவன் உணர்ந்தான்..தன் தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. கண்களை இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. இது வெறும்  விபத்தல்ல. ஏதோ தீவிரவாதிகளின்  வெடிகுண்டு தாக்குதல் என்று.

இறுதியாக கண்களை மூடும் முன் நான் என்  உதடுகள் அருகில் இருக்கும் இந்த மண்ணை முத்தமிடுகிறேன். இது என் தேசம் அல்லவா...நான் என் தேசம் போல உன்னை நேசிக்கும் இந்திய  ராணுவ வீரன் அல்லவா..

இந்த முத்தம் உன்னை வந்து நிச்சயம் சேரும்....

இது மாலை 3.15 மணி

பிப்ரவரி 14ஆம் நாள் 

2019 ஆம் ஆண்டு.

இது எதிரிகளின் கோழைத்தனமான தாக்குதல்.

இந்த இடம் புல்வாமா மாவட்டம்.

நான் ஒரு இந்திய  ராணுவ வீரன் .

இப்போது பாரதியாரின் வரிகளுக்கு மாறினான். 

இப்படியாக...

நான் இங்கு சரித்திரத் தேர்ச்சி கொள்கிறேன்.

சாவதற்கு அஞ்சவில்லை.

சிதையா நெஞ்சு கொண்டிருக்கிறேன்.

இது என் தேசம். சீறுவோர் சீறட்டும். 

ஜெய்ஹிந்த். 

- Dr.K.தமிழ்செல்வன்,
ஹேப்பி ஹோமியோபதி கிளினிக், திண்டல் 

மனதின் தேர்வு - அப்பா நலமாக இருப்பார் - வேனில் ராஜ்


மும்பை - எனக்கு எப்போதும் செல்ல பிடிக்காத ஊர்.

நாம் சில சமயம் ஒரு ஊருக்கு ஒருமுறை தான் சென்று இருப்போம். அதுவும் சில மணி நேரம் தான் அங்கே இருந்திருப்போம், சில மனிதர்களை அங்கே  பிடித்திருக்கும், காலநிலை நன்றாக இருந்திருக்கும், காரணம் தெரியாது ஆனால் அந்த ஊர் நமக்கு பிடிக்கும் .

ஆனால் மும்பை எனக்கு ஏன்  பிடிக்கவில்லை என்று பல முறை யோசித்து கண்டுபிடிக்கமுடியாமல் , சரி விடு என்று  பிடிக்காத ஊர் பட்டியலில் இதை சேர்த்துவிட்டேன் .

மும்பை ஏர்போர்ட், மும்பை டு கோவை பயணம் அன்று, 8 மணி விமானத்துக்கு 5 மணிக்கு ஏர்போர்ட் வந்து 2 மணிநேரம் ஏர்போர்ட்டில் உள்ள டிராபிக்கை  கடந்து வந்து சீட்டில் வந்து உட்கார்ந்தேன்.

நமக்கு நடு சீட் , இடது பக்கம் ஒரு 23 -25 வயது உள்ள  பெண், வலது பக்கம் அதே வயது ஒரு புள்ளிங்கோ பையன். இருவரும் தமிழ் தான்.

அந்தப் பெண் முகத்தில் மிகப்  பெரிய ஒரு சோகம் இருப்பது தெரிந்தது. கண்ணீர் வரக்கூடிய தருணம் . சில மணித் துளிகளுக்கு ஒரு முறை பல தடவை  மொபைல் செக் செய்து கொண்டு மிகவும் பதட்டத்துடன் இருந்தார்.

அடுத்து நம் புள்ளிங்கோ, வடிவேல் வின்னர் படக் காமெடியை  மொபைலில் போட்டு பல டெசிபல் சத்தமாக வைத்துக் கேட்டு சிரித்துக்கொண்டு என் உலகம் தனி என்பதுபோல் இருந்தான். 

சிறிது நேரத்தில் ஏர்ஹோஸ்டஸ் வந்து ஆங்கிலத்தில். "Sir, Reduce your volume or use headphones. It is disturbance to other passengers" என்றார். புள்ளிங்கோ முகத்தில் நான் என்ன குற்றம் செய்தேன் என்பது போல் முகம் சுளிப்பு.

விமானம் டேக்ஆப் ஆக ரெடி. அப்போது விமானப் பைலட் ஒரு அறிவிப்பு செய்தார். நம்  விமானத்தின் Take off லேனில்  டிராபிக் உள்ளதால்  இன்னும் 35 நிமிடம் ஆகும் என்றார். இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் அந்தப் பெண் கண்ணீர் வரக்கூடிய தருணத்தை உடைத்து அழுக ஆரம்பித்து விட்டார்., அந்த அழுகை சிறிய  சத்தத்துடன் சில நிமிடங்கள் தொடர்ந்தது .

என் மனம் அந்த அழுகை எதற்காக .. என்று கேட்கலாமா என்று தோன்றியது , ஆனாலும்  அமைதியாக இருந்தேன்.

இன்னும் விமானம் Take off ஆகவில்லை .

அடுத்து நம் புள்ளிங்கோ சில நிமிட அமைதிக்குப் பிறகு ஜில்லா படத்தைப்  போட்டு பார்த்துக்கொண்டு  இருந்தார். அதே டெசிபல் அதே  சத்தமாக.. அப்போது அந்த படத்தில் ஒருவர் இறந்து வீட்டில் சாவு மணி அடித்துக் கொண்டிருந்த சீன் வந்தது. சட்டென்று அந்த பெண் மீண்டும் பெரிய அழுகையுடன் அந்தப் புள்ளிங்கோவைப் பார்த்து, "ப்ரோ, மொபைல் ஆப் பண்ணுங்க, ப்ளீஸ்.. என்னால இத கேட்க முடியலே", என்று அவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார்.

அந்த பெரிய அழுகை என்னை சிறிதுநேரம் ஸ்தம்பிக்க வைத்தது . ஆனால் நம் புள்ளிங்கோ total அப்செட் ..நாட்ல ஒரு மொபைலில் படம் கூட பார்க்க முடியலே என்று புலம்பிகொண்டிருந்தான்.

அழுகை தொடர்ந்தது அந்தப் பெண்ணிடம் .

சிறிது நேரம் கழித்து மெதுவாக நான் அந்தப் பெண்ணிடம்,   "தண்ணீர் வேண்டுமா ?",  என்று கேட்டேன்.

ஆம் என்று தலை அசைத்தார்.

ஏர்ஹோஸ்டஸ்சை அழைத்து  தண்ணீர் வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பெண்ணின்  உடல்மொழிக்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய சோகம் உள்ளது என்று எனக்கு புரிந்தது .

"எதாவுது சாப்பிட வேணுமா?", என்று கேட்டேன்.

"இல்ல அங்கிள்.  எதுவும் சாப்பிடற  நிலைமையில் நா இல்ல ..வேண்டாம்", என்றார் .

"மும்பையில் படிக்கிறாயா ?"  

"இல்லை அங்கிள் நான் போலந்தில் ஒர்க் செய்கிறேன்"

ஒரு பெரிய மௌனம் .. மீண்டும் சில கண்ணீர் துளிகள் ..

"அப்பாவுக்கு  Accident..  சேலத்தில் உள்ள ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி  ஐசியூவில்  உள்ளார்... நான் சீக்கிரம் போகணும்" .

நான்  எப்படி அந்த Accident என்ற கேள்வியை கேட்கவில்லை .

"எப்ப போலந்தில் இருந்து கிளம்பனீங்க ?"
 
"2 டேஸ் ஆகுது அங்கிள்".
 
"எதாவுது சாப்புட்டீங்களா ?"

"இல்லை".
 
"காபி ஆர்டர் பண்ணட்டுமா ?"

"சரிங்க அங்கிள்".
 
ஏர்ஹோஸ்டஸ்சை அழைத்து காபி ஆர்டர் செய்து கொடுத்தேன் .

காபி குடித்தபிறகு அந்தப் பெண் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டார் என்று என் உள்ளுணர்வு சொன்னது .

நான் தொடர்ந்து .."கோவையில் இருந்து எங்கே போகணும் ?"

"சேலம்  அங்கிள் ".

"எப்படி போறிங்க ?"

"பெரியம்மா மற்றும் தம்பியும் ஏர்போட்டுக்கு வராங்க .."

"அப்பா என்ன பண்றாங்க ?"

"விவசாயம்"

"நீங்க போலந்து எப்படி ?"

"இன்ஜினியரிங் படித்து விட்டு போலந்தில் ஒர்க் செய்யுறேன்"

அவர்கள் பேச்சு தொடர்ந்தது..

"அப்பா ரோட்டுல நடந்து போறப்ப ஒரு காரும் பைக்கும் மோதி அந்தப் பைக்கில வந்த பையன் தூக்கி எறியப்பட்டு இவர் மேல வந்து விழுந்துட்டான்
அப்பாவுக்கு கொஞ்சம் சீரியசுன்னு சொல்றாங்க .."

மீண்டும் ஒரு அழுகை . அந்த பெண்ணுடைய நிலைமை புரிந்தது .

"அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. தைரியமாக இருங்க."

விமானம் கோவை வந்தது ...மணி 11 PM. luggage எடுக்க பெல்ட் 1 என்று அறிவித்தார்கள். விமானத்தில் கீழே இறங்கி பெல்ட் 1க்கு வந்தேன்.அதற்குள் அந்தப் பெண் மொபைல் பேசிக்கொண்டு பதட்டத்துடன் என்னை நோக்கி வந்துகொண்டு இருந்தார்.

என்னுள் எதாவுது தவறான தகவல் வந்துவிட்டதா என்று அந்த சில நொடிகளில் பதட்டம் கூடியது.

அருகில் வந்து. "அங்கிள், எங்க பெரியம்மா வந்த கார் பெருந்துறை அருகே ரிப்பேர் ஆகி விட்டது. இப்ப அவர்களும் வரமுடியல. நான் இப்ப என்ன பண்ணுவது ?" என்பது போல் என்னைப் பார்த்தார்.

நான், "சரி. உங்க பெரியம்மாவுக்கு கால் பண்ணுங்க. நான் பேசறேன்".

அந்த அம்மாகிட்ட பேசி அவர்கள் லொகேஷன் அறிந்துகொண்டு அருகில் இருக்கும் ஒரு பேக்கரியில் இருக்குமாறு சொல்லிவிட்டு நான் ஈரோடு தான் செல்கிறேன். என்னுடைய காரில் நீங்க வாங்க. பெரியம்மாவைப் பெருந்துறையில் பிக்கப் செய்து சேலம் போய்டுங்க. நான் பஸ்சில் பெருந்துறையில் இறங்கி ஈரோடு போய்க்கிறேன் ."

"ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.."

அந்த பெண்ணிடம் மீண்டும், "அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது. தைரியமாகப் போங்க ..Be postive", என்றேன்.

பிறகு நான் பெருந்துறையில் இறங்கி ஈரோடு வந்துவிட்டேன் .

சில நேரத்துக்குப் பிறகு ஒரு மெசேஜ் அந்த பெண்ணிடம் இருந்து, "Reached Hospital. Thanks For your help ."

காலையில் எழுந்தவுடன் போன் செய்து அப்பாவுக்கு எப்படி உள்ளது என்று கேட்கலாமா என்று தோன்றியது. ஆனால் மனம் - வேண்டாம் அந்த அப்பா நலமாக இருப்பார் - நலமாகத் திரும்புவார். அது மட்டும் என்னுள் இருக்கட்டும் என எண்ணிக் கொண்டேன்.

இதுவரை அந்தப் பெண்ணிடம் இருந்து எனக்கு எந்த மெசேஜ்ம் வரவில்லை – வரவும் வேண்டாம்.

அப்பா நலமாக இருப்பார்.

கடவுள் இருப்பான் குமாரு !


கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...