Tuesday, August 1, 2023

முதல் பெங்களூர் பயணம் - மூர்த்தி


ரு வேலையாக பெங்களூர் செல்ல நேர்ந்தது. பெங்களூர் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதிகப்பட்சமாக ஓசூர் வரை சென்று வந்துள்ளேன்.  இம்முறை அவசரமாக கிளம்பிச் சென்று வர வேண்டிய சூழலாக அமைந்தது.

ஒரு மாதத்திற்கு முன் சக்லேஷ்புராவில் பார்த்து ஆச்சரியப்பட்ட கர்நாடகா இம்முறை பெங்களூருவில் கொஞ்சம் சங்கடப்பட வைத்தது.பொதுவாக ஒரு ஊருக்குச் சென்றால் அடுத்த 2,3 மாதங்களிலோ அல்லது அந்த வருடத்திற்குள்ளோ மீண்டும் அதே பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். பலமுறை இது நடந்துள்ளது.
2018'ம் வருடத்தில், ஜனவரி மாதம் திருமண நிகழ்விற்காக தென் தமிழகம் (நாகர்கோவில்) சென்றோம். மீண்டும் அதே வருடம் அக்டோபரில் தஞ்சாவூர், நவம்பரில் நாகப்பட்டினம்,  டிசம்பரில் தூத்துக்குடி என அடுத்தடுத்த மாதங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. பெரும்பாலான வெளியூர் பயணங்கள் இப்படி அமைவதுண்டு.  இந்த பயணத்தில் கூட இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த மனிதரை மீண்டும் பார்க முடிந்தது. பெங்களூர் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு, ஒரு கோவில் கும்பாபிஷேக ஒளிப்பதிவிற்காக சென்றிருந்த போது பெங்களூரை சேர்ந்த ஐயர் ஒருவர் வந்திருந்தார். அதே ஐயர் மீண்டும் சேலம் பேருந்து நிலையத்தில் எங்களை கடந்து சென்றார். பேண்ட் சர்ட் அணிந்திருந்ததால் அவரை சட்டென அடையாளம் காண முடியவில்லை. எங்கோ பார்த்தது போல உள்ளதே என யோசித்து நினைவிற்கு கொண்டு வருவதற்குள் ஐயர் சென்று விட்டார். ஒருவேளை அவர் திரும்பி வந்தால் பேச்சுக் கொடுக்கலாம் என இருந்தேன். ஆனால் வரவில்லை.
 
கர்நாடக பயணத்திற்கு வருவோம்.
சேலத்திருத்திலிருந்து காலை 10.30 மணிக்கு 1-1 பேருந்து ஏறினோம். பெங்களூர் செல்லும்போது மதியம் 2.30 மணி ஆகிவிட்டது.
மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது மூன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்த ஒருவருடன் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். அருகில் சென்ற போது தான் கவனிக்க முடிந்தது, ஒரு பார்வை மாற்று திறனரின் கண் அருகில் கன்னத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவர் பலமாக தாக்கப்படிருக்க வேண்டும். சுற்றிலும் பத்து பேர் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மீது தவறே இருந்தாலும் தாக்கப்பட்டது தவறான செயல்.

ஒரு கடை முகவரியை தேடிக்கொண்டு சென்ற போது Triveni திரையரங்கின் இடதுபுறத்தில் மூன்று பெண்கள் அவர்களுக்குள் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் மூவருக்குள் எதாவது தகராறா அல்லது அங்கிருந்தவர்கள் உடன் எதாவது தகராறா என தெரியவில்லை. இங்கும் பத்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் திரும்பி வரும்போது அதே திரையரங்கின் வலது புறத்தில் அந்த மூன்று பெண்களும் நடைபாதையில் அமர்ந்துகொண்டு இருந்தார்கள். அவர்களின் முகம் இறுக்கத்துடன் இருந்தது. சண்டை சமாதானம் ஆகி இருக்கலாம் அல்லது சண்டை ஓய்ந்திருக்கலாம். இப்போதும் அதே பத்து பேரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பத்து பேரில் ஒருவர் கூட அவர்களை தடுத்து நிறுத்தவோ சமாதானம் செய்யவோ முயற்சி செய்யவில்லை. இது போன்ற சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக இருக்கலாம். அந்த சூழல் புரிந்ததால் அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாமோ என்னவோ. சூழல் புரியாததால் நான் புலம்பிக்கொண்டுள்ளேன்.

ஒருமுறை கர்நாடகம்(சக்லேஷ்புரா) சென்று வந்ததுமே அடுத்த முறை செல்லும்போது மொழி பற்றிய தயக்கம் விலகியிருந்தது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் தமிழில் தான் பேசினோம். அவர்கள் புரிந்துகொண்டு தமிழ் அல்லது கன்னடத்தில் பதில் அளித்தார்கள். மதியும் ஒரு சிறிய ஹோட்டலில் சாப்பிட சென்றபோது என்ன சாப்பிடுவது என்ற குழப்பத்துடன் பேசிக்கொண்டிந்தோம். ஒரு எக் ஃப்ரைட் ரைஸின் விலையை விட அசைவ உணவின் விலை குறைவாக இருந்தது. அங்கு சாப்பிட வந்த ஒருவர் 'நான்-வெஜ் சாப்பிடுங்க நல்லா இருக்கும்' என்றார். ஆனால் சுவை மேல் எங்களுக்கு இருந்த சந்தேகத்தினால் எக் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்திருந்ததால் அதையே சாப்பிட்டோம். சமீபத்தில் தான் பென்னா தோசை பற்றி கேபிள் சங்கர் எழுதியிருந்தார். அடுத்த முறை சென்றால் பென்னா தோசை சாப்பிட்டு பார்க்க வேண்டும்.

நாங்கள் வேலையை முடித்து விட்டு கிளம்பும்போது மெஜஸ்டிக் பகுதியில் உள்ள போத்திஸ் கடை அருகில் இருந்து பேருந்து நிலையம் வந்து பேருந்தில் ஏற கால் மணி நேரம் ஆகியது. அங்கிருந்து சாட்டிலைட் பேருந்து நிலையம் வரை பேருந்தில் செல்ல ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது. போத்திஸிலிருந்து நேராக காசிபாளையம் பேருந்து நிறுத்தம் வந்திருந்தால் கால்மணிநேரத்திலயே சேலம் பஸ் ஏறி இருக்கலாம். சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் சேலம் பஸ் ஏறியதும் நடத்துனரிடம் எத்தனை மணிக்கு சேலம் போகும் என கேட்டதிற்கு இரவு 11 மணிக்கு போய்டும் என்றார். ஆனால் நள்ளிரவு 12 மணிக்கு தான் சேலத்தை அடைந்தது.

இடையில் கிருஷ்ணகிரி அருகே ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள். பிரபல நிறவனத்தின் பெயரில் இருந்த அந்த மோட்டலில் விலையை பார்த்தால் எல்லாம் டபுளாக இருந்தது. ஒருவருக்கு  இரண்டு சப்பாத்தியும் ஒருவருக்கு இரண்டு பரோட்டோவும் டோக்கன் வாங்கி சாப்பிட்டோம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எக் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து இருவரும் பகிர்ந்து கொண்டோம். விலை அதிகம் தான். அந்த இடத்திற்கு அந்த விலை நியாயமாக படவில்லை. ஃப்ரைட் ரைஸ் பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே எங்களது பேருந்தை ஸ்டார்ட் செய்தார் ஓட்டுனர். நாங்கள் கை காட்ட அங்கிருந்த
போக்குவரத்து உதவியாளர் ஓட்டுனரிடம் தகவல் தெரிவித்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை எங்களுக்காக பேருந்து பொறுமையாக காத்திருக்குமா என உறுதியாக நம்பமுடியவில்லை. காத்திருக்க வைப்பதும் சரியாகப் படவில்லை. கர்நாடக பேருந்தாக இருந்திருந்தால் தைரியமாக சாப்பிட்டிருப்போம். சென்ற முறை சக்லேஷ்புராவிலிருந்து வரும்போது இரவு பதினோரு மணிக்கு மோட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது இருவர் மட்டும் இன்னும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை ஸ்டார்ட் செய்தபோது சாப்பிட்டு இருப்பவர்களை பார்த்துவிட்டு மீண்டும் ஆஃப் செய்து விட்டார். எல்லா நேரமும் எல்லாவற்றையும் ஒரே மாதிரி எதிர்பார்க்க முடியாதல்லவா? இன்னொரு நாள் பெங்களூரை ஆற அமர்ந்து ரசிக்க வேண்டும். 

தனிக்குடித்தனம் - கே. ஜெயலலிதா.

 




“நான் தனியாப் போயிடலாம்னு இருக்கேன் அருண்..”

தன் அம்மாவின் இந்த வார்த்தையைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்த அருண் “ என்னம்மா என்னம்மா சொல்றீங்க, என்றவன் சற்று சுதாரித்தவனாய் “ம்மா , சும்மா சும்மனாச்சுக்கும் தானே சொல்றீங்க ..” என்றுபதறியவனையே, அவன் மனைவி ரஞ்சனாவும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளுக்குள் ஒரு திடுக்கிடல் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் இருந்தாள்.

“ இல்லடா அருண், நா சும்மாவெல்லாம் சொல்லலை. நிஜமா தான், சீரியஸ்சா தான் பேசறேன்..” என்ற தன் தாயின் முகத்தைப் பார்த்ததும் ஏதோ புரிந்து கொண்டவனாய் எழுந்து தன் தாயின் அருகில் வந்தவன் “ ஏம்மா, என்னம்மா பிரச்சனை. திடீர்னு இப்படியெல்லாம் பேசற, நா ஏதாச்சும் தப்பா பேசிட்டனா..!? இல்ல ரஞ்சனா ஏதாச்சும் சொல்லிட்டாளாம்மா.!?இல்ல அக்கா ஏதாச்சும் சொல்லி கேக்கறியாம்மா...” என்றவனின் உள்ளக்கரைசலை பதட்டத்தைப் புரிந்து கொண்ட. பூரணி “ அதெல்லாம் ஒன்னுமில்லடா, உன்னோட அக்கா எல்லாம் ஒன்னும் சொல்லலை. இதப்பத்திக் கூட இனிமே தான் அவள்ட்ட சொல்லனும்டா. அதோட உங்கரெண்டு பேருமேலயும் கூட கோபமோ வருத்தமோ எதுவுமில்லடா.

“ அப்புறம் எதுக்குமா தனிக்குடித்தனம் போறேன்ற...”

“ எனக்கு தோணுதுடா. கொஞ்ச நாளைக்காச்சும் தனியா இருக்கலாம்னு, இருந்து பாக்கலாம்னு.”

“ நீ என்னம்மா பேசறே, புரிஞ்சு தா பேசறியா, நீ தனியா போனா ஊரு உலகம் சொந்தக்காரங்க எல்லாம் என்னை பத்தி, ரஞ்சனிய பத்தி என்ன பேசுவாங்கன்னு தெரியுமாமா, இவ்ளோ வருஷத்திக்கு அப்புறமா,அதுவும் இந்த வயசான காலத்துல தனியா ஒதுக்கி வெச்சுட்டாங்கன்னுல்ல சொல்லும்...என்று படபடத்தவனைக் குறுக்கிட்ட பூரணி, “ நீ இப்ப எதுக்கு இவ்ளோ படபடப்பாகறே, ஊரு உலகத்தைப் பத்தி எதுக்காக இவ்ளோ பயப்படறே. அது வாழ்ந்தாலும் பேசும். தாழ்ந்தாலும் பேசும்.அதைப் பத்தி நமக்கென்னடா அருண். உண்மை என்னன்னு நமக்கு, நம்ம குடும்பம் சம்மந்தப்பட்டவங்களுக்கு தெரியும்ல. புரியுதுல. அது போதும். அதோட எனக்கு வயசாயிடுச்சுன்னு எல்லாம் சொல்லாதே. ஜஸ்ட் அம்பத்தி அஞ்சு வயசு தான். சரியா...” என்று சொல்லிச் சிரித்தவளை பார்த்த அருண்

“ சிரிக்கறியாமா நீ, அப்படியே உன்னை ரெண்டு அப்பு அப்புனா என்னன்னு தோணுது”.

“அதெல்லாம் உங்கப்பன்ட்ட நெறையா வாங்கியாச்சு.போதும்டா..” என்றவளின் குரல் உடைவதைக் கண்டதும் ஓடி வந்து தன் தாயின் கரம் பற்றி இருக்கிக் கொண்டான்.

உடனே அருணின் நினைவும் பின்னோக்கி ஓடியது. தனக்கு ஞாபகம் தெரிந்த நாளிலிருந்து தன் ஆத்தாவிடமும், கணவர் வீட்டில் வாழ இயலாமல் தன் தாய் வீட்டிற்கே வந்துவிட்ட தன் மூத்த நாத்தனாரின் அதிகாரத்தோடும்,எதுக்கெடுத்தாலும் சிடுசிடுக்கும் தன் அப்பாவிடமும் அம்மா பட்ட கஷ்டங்களும் அவஸ்தைகளும் கொஞ்சநஞ்சமில்லை. இதையெல்லாம் அருணால் வயது வரவர புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்ட பூரணி “ ப்ஃளாஷ் பேக்கெல்லாம் வேண்டாம்டா அருண். அதச் சும்மா கூட நா நெனச்சுப் பாக்க விரும்பலடா. அதோட இனிமேலாச்சும், நான் நா நெனக்கற மாதிரி என்னோட வாழ்க்கைய வாழணும்னு ஆசைப்படறேன்டா “.

“ வாழும்மா. யாரு வேண்டானாங்க. அத நீ இங்கே எங்களோட இருந்திட்டே வாழம்மா. .”

“ அதெல்லாம்எனக்கு இங்கிருந்தா சாத்தியப்படாதுடா. ஒரு நாள் போல இன்னொரு நாள் இருக்காதுடா.அதான் நா தனியா இருந்துக்கறேன்னு சொல்றேன். உங்க அக்காவும் யு.எஸ்ல இருக்கா. உனக்கும் நல்ல தொழில் இருக்கு. எனக்கும் தனியா வாடகை, வட்டின்னு வருது. அத வெச்சு நா சமாளிச்சுப்பேன். எனக்கு ஒருத்திக்கு இதுவே அதிகம்டா....

“ இதாம்மா பிரச்சனை. நீ ஒருத்தியா இருக்கறது தான் பிரச்சனையேம்மா. இப்ப அப்பா உயிரோட இருந்து இந்த. வார்த்தையச் சொல்லிருந்தாக் கூட ஒத்திருப்பேன்....

என்று அருண் சொன்னதைக் கேட்டதும் உடனே பூரணிக்கு ஒரு பெருஞ்சிரிப்பொன்று எங்கிருந்து தான் வந்து வெடித்ததோ, எதற்கு தான் வந்ததோ தெரியலை. அப்படிச் சிரித்தாள்.

இது வரைக்கும் தன் அம்மா இப்படியொரு சிரிப்புச் சிரிச்சு பாத்ததே இல்லை . இதுக்கு அர்த்தம் சந்தோஷமா.. ஆசுவாசமா..விடுதலையான்னு.. புரியாமலயே ரஞ்சனி கொண்டுவந்து கொடுத்த டீயை வாங்கி யோசனையோடு உறிஞ்சினான் அருண்.டீயை குடித்து முடித்த பூரணியின் முகத்தில் புது உற்சாகம் வந்திருப்பதைப் பார்த்தான் அருண்.

“ எனக்கு நா இஷ்டப்பட்ட நேரத்துல எழுந்திரிக்கனும். நெனச்சாப் படுத்துக்கனும்டா அருண். அது ஒரு தனி சுகம். என் இருபத்தி அஞ்சு வயசுல இருந்து இதோ இப்ப வரைக்கும் அது முடிலடா. இதோ இப்ப வந்துரும் அப்ப வந்துரும்னு நெனச்சுட்டே இருந்தாக்க, நாளுக்கு நாள் பொறுப்பு கூடுது. ஒரு கட்டத்துல அது சுமையாத் தெரியுதுடா. வெளியே சொல்லலேனாலும் உள்ளுக்குள்ளே அழுத்துதடா. இது வரைக்கும் நா செஞ்சது, செஞ்சு முடுச்சது எல்லாம் என்னோட கடமை. அதெல்லாத்தையும் நா சரியாச் செஞ்சுட்டேன்னு நெனைக்கறேன். உன்னோட பொண்ணும் வளர்ந்து,ஸ்கூல்க்கு போக ஆரம்பிச்சுட்டா. இனி அவள நீங்க பாத்துக்குங்க. அது இனி உங்க பொறுப்பு. எதாச்சும் முடியலேன்னாச் சொல்லுங்க. ஓடி வந்து நிக்கறேன் முடுஞ்ச உதவி செய்யறேன். என்னால இனி இதான் முடியும்...என்ற தன் தாயின் பேச்சில் ஏதோ ஒரு குறியீ டு இருப்பதை உணர்ந்தவனாய் தொடர்ந்து அமைதியாகவே தன் அம்மாவின் பேச்சை கேக்கலானான். ரஞ்சனா தான் உள்ளும் வெளியுமாய் நடந்து கொண்டிருந்தாள்.

“ அதோட எனக்கு நெறையா புத்தகம் படிக்கனும். நெறையா இடங்களுக்கு டூர் போகணும். புடுச்சா சமைக்கனும். இல்லேனா புடுச்சத வாங்கிச் சாப்பிடனும். செவ்வாக்கெழமன்னா பச்சமலை முருகன் கோவிலுக்குபோயி எத்தனை நேரம் உக்காந்திருக்கந் தோணுதோ அவ்வளவு நேரம் உக்காந்திருக்கனும். வீட்ல விட்டேந்தியா யாரோட தொந்தரவும் இல்லாம அப்படியே படுத்துக் கெடக்கனும். சத்தமாப் புடுச்ச பாட்டப் போட்டுட்டே, கூட பாடிட்டே சின்னதாச் சமைக்கனும். யூ ட்யூப்ல சுகி சிவம், பவா, பர்வீனுன்னு...இப்படி பிடுச்சவங்களோட பேச்சையெல்லாம் ஆசப்பட்ட நேரத்துலெல்லாம் போட்டுக் கேக்கனும். அதப்பத்தி ஒத்த ஆளுங்கிட்ட பேசி மகிழனும். மணிக்கணக்கா புடுச்சவங்களோட பேசிட்டே இருக்கனும்.

அப்படியே சின்ன அளவுல காய்கறிகள் கீரைன்னு தோட்டத்துல போட்டு வளர்க்கனும். முடுஞ்சா கிராமத்து சிறுசுகளுக்கு டியூசன் எடுக்கனும்னு...இப்படி இன்னும் நிறைய நிறைய ஆசைகள் எனக்குள்ளே இருக்குடா...அதோட இதெல்லாம் இப்ப திடீர்னு வந்து முளைச்ச ஆசையில்லடா அருண். அன்னிக்கு , நா ஆசப்பட்ட எதுவுமே நடக்கலேனாலும், நடத்த முடியாம போனாலும்கூட, எல்லாத்தையும் பத்திரமா மனசுலே கோர்த்து கோர்த்து வெச்சதுல, இன்னிக்கு அது ஒருபெரிய மாலையாயி கெடக்குது அருண்.அதான் சொல்றேன்.” என்ற தன் தாயின் தீர்மானத்தை புரிந்தவனாய், மனதளவில் ஒத்துக்கொண்டஅருண் “

“சரிம்மா, இப்ப நீ ஆசைப்பட்ட மாதிரியே தனியா இரு. ஆனா அந்த தனி வாழ்க்கை கொஞ்சநாள்லயே உனக்கு ஒத்துவரலீன்னாவோ, பிடிக்கலீன்னாவோ என்ன பண்ணுவே சொல்லு. ஏன்னா எல்லாமே ஒரு கட்டத்துலஅலுப்பைத் தரும் தானே....”.

“ அப்படியொரு அலுப்பு வந்தா உங்க கிட்ட வந்து சொல்றேன்.உங்களோடவே வந்து இருந்துக்கறேன். அவ்ளோ தான்”.

“ இதுல நீ தெளிவா தானே இருக்கீங்க”

“ அதெல்லாம் தெளிவாவே இருக்கேன்..” என்ற தாயின் பேச்சில் நிம்மதியடைந்த அருண் ரஞ்சனியிடம்” இதுக்கு நீயென்ன சொல்ற ரஞ்சு” என்றான்.

மாமியாருக்கும் இவளுக்கும் தனிப்பட்ட எந்தவொரு மோதலும் கிடையாது.இதுவரைக்கும் வீட்டு பொறுப்பு, சமையல்னு எல்லாத்தையும் மாமியாரையே பார்க்கச் சொல்லி விட்டு இவள் நிம்மதியாகவே இருந்தாள். மேலும் அருண் தன் மாமியாரை எப்படியும் தனியாக விடமாட்டான் என்ற நம்பிக்கையுடனே இருந்த ரஞ்சனிக்கு, இந்த முடிவு பிடிக்காவிட்டாலும் கூட “ “ . அம்மா நம்மோடயே இருக்கனுன்றது தான் என் ஆசை. ஊம்..., என்னமோ போங்க, உங்களுக்கு எது சரின்னு படுதோ அதச் செய்யுங்க” என்றாள்.

அப்போது பூரணியின் செல் ஒலிக்க அதை எடுத்த பூரணி “ சரிப்பா, நா கொஞ்ச நேரம் போயி படுக்கறேன். இதை பத்தி அப்புறமா பேசலாம்... என்றவள் போனை ஆன் பண்ணிக் கொண்டே தன் அறைக்கு வந்தாள்.போனில் ரஞ்சனியின் அம்மா காந்திமதி. “ என்ன சம்மந்திம்மா இப்படி பண்றீங்க. இது உங்களுக்கே நல்லாருக்கா. ஊரு உலகத்துல எம்மகளை பத்தி என்ன நினைப்பாங்க. அவ தான் தன் மாமியாரை வீட்டவிட்டு வெரட்டிட்டான்னும், அம்மாவையும் பையனையும் பிரிச்சு வெச்சுட்டாங்கன்னு எல்லாம் பேசுமே. அதுக்கு என்ன பதில் சொல்றதாம். வயசான காலத்துல உங்களுக்கு புத்தி ஏன் இப்படி வேல செய்யுது. படிக்கனும்., பாட்டுக் கேக்கனும், டூர் போகனும்னு ......எல்லாம்.இதயெல்லாம் செஞ்சு இனியென்னாகப் போகுது.இல்ல இனியெத்தக் கிழிக்கறீங்ளாம். பைத்தியம் கீது புடுச்சுப் போச்சா சம்மந்தி....” என்ற தன் சம்மந்தியைக் கோபமாகாக் குறுக்கிட்ட பூரணி “ “

ஓ...அதுக்குள்ளே எல்லாத்தையும் உங்ககிட்ட ஒன்னுவிடாம போட்டுக் கொடுத்துட்டாளா, எப்படி ..ரொம்ப நல்லா புள்ளைய வளர்த்திருக்கீங்க.”

“ஆமாம். அதான் எம்பொண்ணு...என்று சொல்லி கலகலவென்று சிரிந்த காந்திமதியோடு இணைந்து பூரணியும் சிரித்தாள்.

“ நீங்க செய்யறது தான் சரி சம்மந்தி. உங்க ஆசையும் நிறைவேறும். ரஞ்சனிக்கும் குடும்பப் பொறுப்பு வரும். கூடவே மாப்பிள்ளைக்கும் ரஞ்சுக்கும் இடையே கூடுதல் இணக்கமும் வரும். அவங்களுக்கு முடியாதப்ப போயி நின்னு உதவி செய்வோம். அவ்ளோ தான்.ஒரு அம்மாவா இதச் சொல்லக் கூடாது தான். ஆனாலும் உண்மையச் சொல்றது தானே நியாயம். எம் பொண்ணு நாலு நாளைக்கு என் வீட்ல இருந்தாவே என்னைய. படுத்தி எடுத்திடறாள். எப்படா கெளம்புவான்னு நெனைப்பேன். அப்பெல்லாம் உங்கள தா நெனச்சுப்பேன். நீங்க எப்படி தான்  இவளச் சமாளிக்கறீங்ளோன்னு. இதுக அன்புன்ற பேருல நம்மள யூஸ் பண்ணிக்கறாங்கப்பா.....என்றவளின் பேச்சைச் சிரித்தபடியே ஆமோதித்தாள் பூரணி.

முனீஸ் சைக்கிள் கடை - யசோதா பழனிச்சாமி





முனீஸ் சைக்கிள் கடை என்று எழுதப்பட்ட ஃபோர்டின் வாசகத்தை வாசித்தபடியே, அந்த கடையின் முன்  இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்  அறுபத்தி ஐந்து வயதிருக்கும் சக்தி. அந்தக் கடையின் முன் வாயிலில் யாருமில்லை.


"சார்..சார்.. யாராவது உள்ளே இருக்கீங்களா?" என்ற அவரின் குரல் உள்ளே பழைய சைக்கிள் ஒன்றை பழுது பார்த்துக் கொண்டு இருந்த முனியப்பன் காதில் வந்து விழுந்ததும் அவர் வெளியே வந்தார். தன் வயதொத்த அந்த நபர் தன் தொப்பையைத் தூக்கி நடந்து வருவதைப் பார்க்கும் போது, சக்திக்கு சிரிப்பு வந்தது. அவரது முகத்தை எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கே என்று நன்கு உற்றுப் பார்த்தார்.  ஆச்சரியத்தில் நெற்றியைச் சுருக்கி, "நீங்க காரப்பாளையம் முனியப்பன் தானே" என ஆச்சிரியத்தில் கூவினார்.


தன் கண்ணாடியை சரி செய்தபடியே, தன் கடைக்கு வந்த அந்த நபரை பார்த்து ஆமாம் நான் முனியப்பன் தான். "நீங்க.நீ… நீ… சக்தி தானே."!  வாட்ட சாட்டமாக வயசானாலும், டை அடித்து பேண்ட் சர்ட் போட்டு நல்ல பர்சனாலிட்டியா  நின்றிருந்தார் சக்தி.


"ஆமா சக்தி தான்.."


" உன்னை இந்த இடத்தில் பார்ப்பேனே நினைக்கல முனியப்பன்.ஆமா, சைக்கிள் கடை உன்னுதா?." 


"ஏண்டா, நானெல்லாம் சைக்கிள் கடை வைக்க கூடாதா"? என்றார் முனியப்பன் குதர்க்கமாக.


" டேய் முனி உனக்கு இன்னும் என் மேல் இருக்கிற கோபம் தீரலையா?"


"டேய், நானாருடா? உம் மேல கோபபடறதுக்கு? உங்க வசதி வாய்ப்பு எங்கே? நாங்க எங்கே"?


"டேய், முனி இப்படி எல்லாம் பேசறதா இருந்தா நான் கிளம்பறேன்டா.

என் பேத்திக்கு நான்கு வயசாகுது. அவளுக்கு பொறந்தநாளு வருது. சைக்கிள் வேணுனு கேட்டாள். நாங்களும் இந்த ஊருக்கு புதுசு எங்கே சைக்கிள் வாங்கறதுனு தெரியல. எங்க வீட்டுக்குப் பக்கத்தில  இருக்கிறவங்க தான் சொன்னாங்க மூனிஸ் சைக்கிள் கடைக்குப் போங்கன்னு.இங்கே வந்து உன்னைப் பார்த்ததும் எத்தனை மகிழ்ச்சியா இருந்தது தெரியுமா? நீ என்னடானா பழச நினைச்சு இப்படிக் குதர்க்கமா பேசற?" என்று குரல் மறுகச் சொன்னார் சக்தி.


முனி என்கிற முனியப்பன் தலை கவிழ்ந்தார்.." சாரிடா சக்தி.  நீ அன்னைக்கு அப்படி செய்யலைனா, நான் சத்தியமா இந்த நிலைக்கு உயர்ந்திருக்க மாட்டேன்".


"அன்னைக்கு நானும்  உன்னை காட்டிக் கொடுத்திருக்க கூடாது என்ன செய்யறது. அப்ப எனக்கு விவரம் இல்லாம போச்சு" என்றார் சக்தி.


"ஆமாம் சத்தி, நமக்கு அப்ப எத்தனை வயசிருக்கும்?. பத்து பணிரெண்டு வயசு இருக்குமா? அந்த சைக்கிள் கடையால் தானே நாம பிரிந்து போனோம். தலையாட்டிய இருவரின் மனக்கண்ணிலும் காட்சிகள் விரிய ஆரம்பித்தது.


காரப்பாளையம் ஊருக்குள் புதியதாக முளைத்த சைக்கிள் கடையை ஒட்டி நிறைய சிறுவர்கள் குழுமி இருந்தார்கள். காரணம் அந்த சைக்கிள் கடையின் முன்பாக,   சிறுவர்கள் ஓட்டுவதற்கு இலகுவாக இரண்டு சக்கர மிதிவண்டி இரண்டு குட்டி குதிரையாக  நின்று கொண்டு இருந்தது.


அந்த குட்டிக் குதிரை  சிறுவர்களுக்கு  வாடகைக்கு ஓட்டுவதற்கு தரப்படும் என்று எழுதியிருந்த அறிவிப்பே சிறுவர்கள் குழும காரணமாக அமைந்தது. ஒரு மணி நேரம் ஓட்டிப் பழக 50 பைசா கொடுக்கணும். ஐம்பது பைசா என்றாலும்  அவ்வளவு எளிதில்  கிடைக்காது காலம்.


முனியப்பன் குடும்பம் நடுத்தர வசதிக்கும் குறைவானது. அவனுக்கு மூணு வேலை சாப்பாடு உறுதியாக கிடைக்கும். ஆனால், ஐந்து பைசா காசுக்கு ஐஸ் வாங்கித் திங்க முடியாத வறுமை இருக்கும். இதில எங்கே ஐம்பது காசு போட்டு தினமும்  சைக்கிள் ஓட்டுவது. அவன் ஏக்கத்துடன் அந்த சைக்கிள் கடையைப் பார்த்துட்டே எதுத்தாப்பல இருக்கிற வேப்பமரத்துக்கு கீழே முக வாட்டத்துடன் உட்கார்ந்து கொண்டான்.


அப்போது, மெத்தை வீட்டு சக்தி அந்த குட்டிச் சைக்கிளை வாடகைக்கு எடுத்து வந்து முனியப்பன் முன் 'ட்ரிங்... ட்ரிங்... கிணி.. கிணி'  என  பெல்லை அமுக்கினான்..


"டேய் முனி நீயும் வாயேன், இரண்டு பேரும் சேந்து சைக்கிள் ஓட்டுவோம்" எனச் சொன்னதும் முனியப்பனுக்கு பெருமை பிடிபடவில்லை. எப்படியாவது இன்னைக்கு இந்த சைக்கிளை ஓட்டிப் பார்த்துட வேண்டியது தான் என மனசுக்குள் குதுகலித்தான்.


"இருடா வரேன்" என சக்தி பின்னால் ஓடினான் முனி. சக்தி சீட்டியில் ஏறிக் உட்கார்ந்ததும் அவனால் பேலன்ஸ் செய்ய முடியாமல், பொத்துனு கீழே விழுந்தான். "டேய் முனி என்னை சைக்கிளோட  சேத்திப் பிடிச்சுக்கோ"டா எனச் சொன்னதைக் கேட்டு, முனியும் அவனுக்கு சாரதியாக சைக்கிள் பிடிக்க ஆரம்பித்தான்.ஒரு மணி நேரம் கடந்தது. தான் ஓட்டவே இல்லை என்பது முனிக்கு புரிந்ததும்,  "டேய், சக்தி நீ எனக்கு சைக்கிளே ஓட்டக் கொடுக்கல"டா, என்றான் பரிதாபமாக.


"டேய் முனி, நான்  முதல்ல ஓட்டிப் பழகிட்டு உனக்கு ஓட்டச் சொல்லிக் கொடுக்கறேன்டா" எனச் சமாளித்தான் சக்தி. விவரம் எதுவும் தெரியாத  முனியும் சரினு தலையாட்டினான். ஒரு மணி நேரம் முடிந்தது. சைக்கிள் கடைக்காரருக்கு சைக்கிளை திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.


"டேய் முனி நாளைக்கு சத்தியமா நாம சேந்து ஓட்டலாண்டா"னு சொல்லிட்டே வீட்டுக்கு ஓடினான் சக்தி. முனி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.


வீடு திரும்பிய பிறகும் அவனுக்குள் அந்த சைக்கிள் மீதான மோகம் குறையவேயில்லை. பாத்திரத்தைத் துலக்கிக் கொண்டிருந்த அவன் அம்மாவிடம் சென்றான்.


" அம்மா, அம்மா"


" என்னடா கண்ணு"


" ஒரு அம்பது காசு இருந்தாக் கொடேன் நான் சைக்கிள் ஓட்டணும்மா.."


"அடேய்!  பொழையா குப்பை,இங்கே எங்கடா காசு கொட்டிக் கிடக்குது. அம்பது காசு இருந்தா இரண்டு  காய் கசம்பு வாங்கிப் போட்டா கொழம்புக்காகும். போடா போ சைக்கிளாம் சைக்கிளு." அவள் அம்மா வசை பாடியதை கேட்டதும் கண்களில் நீர்வழிய போய் படுத்தவன், தனக்கு காசில்லாததால் தானே சைக்கிள் ஓட்டிப் பழக முடியல என யோசித்த போது, சாமிகிட்ட போய்  சொன்னாக்க எல்லாக் குறையும் தீர்ந்திடுணும் அம்மா அடிக்கடி சொல்லுவாளே என்ற நினைவு வந்தது. நாமளும்   நாளைக்கு போய் அந்த சாமிகிட்டையே கேப்போம் என நினைத்தாவறே தூங்கிப் போனான். காலையில் எழுந்ததும் ஊரோரும் ஊஞ்சமரத்தடியில் இருக்கும் கருப்பணசாமியைத் தேடி  கோவிலுக்குப் போனான்.


அங்கே அவன் போகும் முன்பே திருநீரு வைத்திருந்த தட்டில் பத்து பைசா, ஐந்து பைசா என  நாலைந்து சில்லறை காசுகளை சாமி கும்பிட வந்தவர்கள் போட்டுச் சென்றிருந்தார்கள்.


முனியப்பனுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது. 'அட ! நாம சாமிகிட்ட கேக்காமலே, சாமி நம்மளுக்குனே  காசை இங்கே வச்சிருக்கு, நாம போயி அம்மாகிட்ட காசக் கேட்டு நேத்து ஏச்சைக் கேட்டது தான் மிச்சம்.' என அவன் குதுகலித்தான்.


கருப்பணசாமி கோவில் வாசலிலிருந்து காசை எடுத்த முனி, நேராக சைக்கிள் கடைக்குச் சென்றான். மகிழ்ச்சி தாண்டவமாட காசை கொடுத்து, வாடகைக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு தள்ளிட்டு வந்த போது,  அங்கே சக்தி வந்து சேர்ந்தான்.


"டேய் முனி, உனக்கு எப்படிடா காசு கிடைச்சது?.."


"அதெல்லாம் உனக்கு எதுக்கு?

நீ தான் நேத்து எனக்கு சைக்கிளே கொடுக்கலையே அப்புறம் என்ன பேச்சு வேண்டியிருக்கு."  எங்கே அவன் நம்ம கிட்ட சைக்கிள கேட்டுடுவானோனு கோபமாக பேசினான் முனி.


சக்திக்கு மட்டும் சந்தேகம் தீரல.

முனி  சைக்கிள் ஓட்டி முடித்த பிறகு தான்  சக்திக்கு  ஓட்டுவதற்கு சைக்கிள் கிடைத்தது. 

அதுவும் தினமும் சக்தி  வருவதற்கு முன்பே வந்து, முனி சைக்கிளை எடுத்து வந்து ஓட்டுவது சக்திக்கு சுத்தமாகப் பிடிக்கல.


நேற்று, முனியின் அம்மா கையில காசில்லைனு, அவன் அம்மாகிட்ட கேட்டு, பருப்பு வாங்கிட்டு போனதை சக்தி பார்த்திருந்தான். மளிகை சாமான் வாங்கவே காசில்லாத அவன் அம்மா முனிக்கு எப்படி தினமும் காசு   வைச்சிருப்பார் கொடுப்பாங்க.?என  சக்திக்குள் பெருத்த சந்தேகமும், கேள்வியும் எழுந்தது.


அடுத்த நாள்  காலையில்  முனி வீட்டுக்குச் சென்று மறைந்திருந்து பார்த்தான் சக்தி.  முனி வீட்டிலிருந்து கிளம்பி, நேராக கோவிலுக்குச் செல்வதையும், அங்கே பூசைத் தட்டிலிருந்த காசை எடுத்த முனி, அசால்ட்டாக தன்  டவுசர் சோப்பில் போட்டதையும் பார்த்து அதிர்ச்சியானான்.


'கருப்பணசாமி    கண்ண குத்திடுமோனு இவனுக்கு பயமேயில்லையா.!?அய்யோ சாமி காச எடுக்கறானே'! சக்திக்கு, உதறல் எடுத்தது. முனியிடமும் அவன் எதுவும் கேட்கவில்லை..'சரி நாளைக்கும் இதே மாதிரி செஞ்சா அவன் அம்மாகிட்ட சொல்ல வேண்டியது தான் திருடறது தப்பில்லையா?' என ஒரு  முடிவோடு கிளம்பினான் சக்தி.


இது எதுவும் தெரியாத முனியப்பன் சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்தான்.


அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சக்தி, "அய்யோ கருப்பா என்னை வுட்டுடு, நான் உன்னட காச எடுக்கல நான் எடுக்கல என்னட கண்ணப் பிடுங்காதே அரிவாளைக் கீழே போடு"னு கத்தினான். அவன்  சத்தம் வெளியே வரல. நடுங்கிப் போய் "ஓ…..னு அவன் அழுவற சத்தம் கேட்டு அவனுடைய அம்மா  எழுந்து ஓடி வந்தாள்.


"டேய் சத்தி, சத்தி என்னடா கனவு கண்ட இப்படி நடுங்கறே அடேய்,! இதென்னடா ஒண்ணுக்கு கூட இருந்து வச்சிருக்க. அய்யோ, ஏனுங்க இங்க வாங்க, ஒரு நாளையில கட்டலோடு ஒண்ணுக்கு போவமாட்டானே, இவனுக்கு என்னாச்சுனு பாருங்க". அவன் அம்மா போட்டக் கூச்சலில் அவன் அப்பாவும் ஓடி வந்தார்.


சக்தி கொஞ்ச நேரம் திருதிருனு முழிச்சான், பிறகு 'அட, நமக்கு கண்ணு தெரியுது. இதோ அம்மா, அப்பா நிக்கறாங்க. கீழே குனிந்து தன் காலைத் தொட்டுப் பார்த்தான். அப்ப நம்ம கண்ணெ சாமி குத்தல. அவன் எழுந்து சந்தோஷத்தில், 'அய்யா எனக்கு கண்ணு தெரியுது, கண்ணு போகல போகலை'னு கத்தறதைக் கேட்டு அவன் அம்மாவும், அப்பாவும்  கவலைப்பட ஆரம்பித்தார்கள்..


"பொழுதான அந்த கருப்பணங் கோவிலுப் பக்கம் போயி ஆட வேண்டானு சொன்னா கேக்கறானா, ஏதோ காத்து கீது அடிச்சிருச்சோ என்னவோ தெரியலையே. அய்யா கருப்பராயா என்னடா புள்ளைய எதுவும் செஞ்சுடாதே,  ஆடி மாசம் உனக்கு ஒரு கிடா வெட்டிப் பொங்கல வைக்கிறேன்" மனசுக்குள்ள மருவ ஆரம்பிச்சா அவன் அம்மா.


"ஏனுங்க அந்த மாரியாயி கோவிலு தின்னீரு எடுத்தாந்து நெத்தியில இடுங்க"என்று சொன்னாள். அதன் பிறகு  சக்தி நன்றாகத் தூங்கி விட்டான். அவன் எழுந்திரிக்கும் போது மணி எட்டு. 'வெடிஞ்சதும் முனியப்பனைப் பாக்கப் போவலனுல்ல இருந்தேன்! அய்யய்யோ அவன் இந்நேரம் காச எடுத்துட்டு ஓடி இருப்பானே' என படபடத்தான் சக்தி.


'ஆமா, கோவில் தட்டில் இருந்த காசை எடுக்காத என்னட கனவுல வந்த கருப்புசாமி ,   என் கண்ணெ    எதுக்கு எடுக்க  வந்துச்சு.?. காசை எடுத்தவன்  முனி அவன் கண்ணல்ல எடுக்கணும். அவன் கண்ணு நல்லாத்தானே இருக்கு' என்ற  குழப்பம் அவனுக்குத் தீரவில்லை.


அடுத்த நாள் காலையில், நேரமே எழுந்த சக்தி,  முனி வீட்டுக்குப் பக்கத்தில் சென்று மறைந்து கொண்டான்.. முனியப்பன் விசிலடித்துக் கொண்டே வீட்டிலிருந்து வெளியே கிளம்பினான். அவன் சென்றதும், சக்தி, முனி அம்மாவிடம் சென்றான்.


பாத்திரம் விலக்கிக் கொண்டிருந்த அவள் கையைப் பிடித்து  கொண்டு, " நீங்க எங்கூட வாங்க" என இழுத்தான்.


"ஏஞ்சாமி என்னாச்சு? என்னட கையைப் பிடிச்சிழுத்து எங்க கூட்டிப்போற?"


"நீங்க வாங்க வந்து பாருங்க" என கையைப்பிடித்துக் கொண்டு செல்ல, முனியின் அம்மாவும் ஒன்றும் விளங்காமல் அவன் பின்னால் சென்றாள். அவன் கோவிலுக்கு கூட்டிட்டுப் போனான்.."அங்கே பாருங்க"  என்றான் சக்தி.


முனியப்பன் சாமியைக் கும்பிட்டு, தட்டிலிருந்து சரியாக ஐம்பது பைசா மட்டும் பொறுக்கி எடுத்து சோப்பில் போட்டுக் கொண்டு கிளம்புவதைப் பார்த்தாள் முனியின் அம்மா.


"அடேய் கேண பல்லிக்கிரி நாயே", காவக்கர சாமிகிட்டயே கையை வைக்கறீயே இது அடுக்குமாடா? சாமி காசத் திருடித் திங்கறது எவ்வளவு பெரிய பாவம்".. எனச் சொல்லிக் கொண்டே அங்கேயே அடி போட ஆரம்பித்தாள்.அவள் அடித்த அடியில் ஊரே கூடி விட்டது.


சக்தி திருதிருவென முழித்தான். பேர் வருவாங்கனு அவனுக்கும் தெரியல. எல்லோரும் முனியைப் பேசி திட்ட ஆரம்பித்தனர்.


"முளைச்சு மூணு எல விடல, இவனெல்லாம் இப்பவே கோவில் காசத் திருடறானா நாளைக்கு பெரிய கொள்ளக்காரனா வந்து, சாமிச் சிலையைக் கூட திருட வருவானுங்க" என ஒருவர் சொல்லியதும், "ஆமாங்க".. ஆமாம், என ஒரு கூட்டம் ஆமோதித்து தலையாட்டியது.


எல்லோரும் ஆளாளுக்கு ஒன்று பேசுவதைக் கேட்டு பொறுக்கயிலாத முனியப்பன்.. தன் காதைப் பொத்திக் கொண்டு 'எல்லாரும் கொஞ்சம்  பேசாம இருங்க' எனக் கத்தினான்.


"ஆமா, சக்தி ஊட்டுல, அவனோட அம்மா தினத்திக்கும் சைக்கிள் ஓட்டிப் பழவ அம்பது பைசா கொடுக்கறாங்க. எங்கம்மாகிட்ட கேட்டேன் காசில்லைனு சொல்லுச்சு.  எங்கம்மா தான் நீ எது வேணுணாலும் சாமி கிட்ட கேளுடா, சாமி கொடுக்குணு சொல்லியிருக்கு. அதான் இங்கே சாமிகிட்ட  காசு கேட்டு வந்தேன். அதனுடைய தட்டத்தில காசு இருந்தது. எடுத்துக்கிட்டேன் இதிலென்ன தப்புனு?" கேட்க, ஊருச் சனம் எல்லாம் வாயடைத்துப் போனார்கள்.


அதன் பிறகு சக்தியும், முனியப்பனும் பிரிந்து ஆளுக்கொரு திசையில் ஓடினார்கள். காலம் இப்போது மீண்டும் இருவரையும் இணைத்திருக்கிறது.


"ஆமாம் முனியப்பன் எப்படி இங்கே வந்து சைக்கிள் கடை வச்சே.?"


"அதெல்லாம் ஒரு கதையாச்சுப்பா.சுருக்கமா சொல்லறேன். நீயெல்லாம் டவுனுக்கு படிக்க போயிட்டா. நான் எட்டாவது படிச்சேன். அதுக்கு பிறகு படிக்க வசதியில்லை. அப்பா திடீருனு இறந்துட்டாங்க. அம்மா வூட்டு வேல செஞ்சு காப்பத்துனா. அக்காவுக்கு கல்யாணம் செய்யணுமே. நான் படிக்கறத விட்டுட்டேன். நாம சைக்கிள்  வாடகைக்கு எடுத்தோமே அந்த  சைக்கிள் கடைக்கு வேலைக்குப் போனேன். தொழிலை நல்லாக் கத்துகிட்டேன். நான் போய் தனியா கடை வச்சுடுவேன் நினைச்சாரோ என்னவோ தெரியல. அந்த சைக்கிள் கடைக்காரர் என்ன நம்பி அவரு பொண்ணை கல்யாணம் கட்டி வச்சுட்டார்.


அங்கேயே தான் இருந்தோம்.கிராமத்திலிருந்து டவுனுக்கு போனா நல்ல தொழில் செய்யலாம். குழந்தைகளையும் டவுனுல படிக்க வைக்கலானு டவுனுக்கு வந்துட்டோம்.


இங்கே வந்ததும் "முனீஷ் சைக்கிள் கடை"னு பேரை மாத்திகிட்டேன்.


"ஆமா, சக்தி நீ என்ன செய்யற?" 


"நான் என்ன செய்யறேன். ஆசிரியர் வேலையிலிருந்து ரிட்டையர் ஆகியாச்சு. என்னுடைய மனைவி இப்போ உயிரோடு இல்லை. மகன் பேங்கில வேலை செய்யறான்.  இந்த டவுனுக்கு மாத்தி இருக்காங்க. அவன் குடும்பத்தோடு  நான்  இருக்கேன்."


"சரி சக்தி நேரம் இருக்கும் போது இங்கே வா" எப்ப வந்தாலும் நீ மனம் விட்டுப் பேசலாம் என்று முனியப்பன் சொல்ல, புதிய பகுதியில் திக்குத் தெரியாத காட்டில் இருப்பது போல் தவித்த சக்திக்கு புதிய வெளிச்சம் ஒன்று கிடைத்தது போல் இருந்தது.. பேத்திக்கான சைக்கிளுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு மகிழ்வோடு கிளம்பினான்.


உடைபடட்டும் கலாச்சார மௌனங்கள் - 2 - பூங்கொடி பாலமுருகன்





வளரிளம் பருவம் சூறாவளி மற்றும் அழுத்தம் நிறைந்த பருவம் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுவார்கள்.. ஏனென்றால் இந்த வயதில் அவர்களின் உடல்  மட்டுமல்ல மனமும் மிக வேகமாக வளர்ச்சி அடைகிறது.. தாங்கள் யார்?  என்று ஒரு சுய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள  மனம் முயலும்.. அப்படி முயலும் போது ஆழமான கேள்விகளும், மன உளைச்சல்களும், குழப்பங்களும்  கண்டிப்பாக ஏற்படும்.. அதனை அடையாளச் சிக்கல்  என்று உளவியலாளர் எரிக்சன் குறிப்பிடுகிறார்.. அந்த அடையாளச் சிக்கலை தீர்த்து வைக்க ஒரு பெற்றோராக, ஒரு ஆசிரியராக இல்லாமல் அவர்களைப் புரிந்து கொண்ட ஒரு தோழமை மிகுந்த நபராய் நாம் நம்மை உருமாற்றிக் கொள்ள வேண்டும்..

நம் குழந்தைகளும் இந்த வயதில் சின்னஞ்சிறு மனிதர்களாக நம்மை போல உருவெடுக்க ஆரம்பிக்கிறார்கள் என்பதை மட்டும் ஏனோ நம் மனது ஒத்துக் கொள்வதே இல்லை...

இந்த வயதில்  கெட்டுப் போய்விடுவார்கள் என்ற பயத்தில் அதீத கண்டிப்பு, அதீத கண்காணிப்பு , அதீத அறிவுரைகள் என்று வீட்டிலும், அடுத்த வீடு என்று சொல்லக் கூடிய  பள்ளிக்கூடத்தில், இந்த வயதில் பொதுத்தேர்வுகள் என்ற அழுத்தம், இந்த வயதை சந்தேக கண்ணோடு குறுகுறு என்று பார்க்கும் சமூகம்... இத்தனையும் தாண்டி தப்பித்துக் கொள்ள, என்னிடம் வா, வா .. உனக்கான இளைப்பாறுதலை நான் தருகிறேன் என்று இரு கை நீட்டி வரவேற்கும் இணைய உலகம்.. புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றலாம் வா என்று அழைக்கும் நண்பன்... கடைக்கண் பார்வைகளால் கவர்ந்திழுக்கும் எதிர்ப்பாலினம்...

அப்பப்பா... இத்தனை சிக்கல்களை அந்த வயதில் கடக்கும் குழந்தைகளுக்கு ஆதரவாக நாம் இருக்கிறோமா?

இதெல்லாம் ஒன்றுமே கிடையாது;  இது நான் கடந்து வந்த பாதை தான். நான் உனக்குச் சொல்லிக் கொடுக்கிறேன் என்று தோளில் கை போட்டு அரவணைத்து பேசியிருக்கிறோமா? 

இதுவரை இல்லாவிட்டாலும் கூட , இனிமேல் கண்டிப்பாக நாம் முயற்சிக்க வேண்டும்.. இந்தப் பருவப் பிள்ளைகளுக்கு ஆறுதலும், அரவணைப்பும், மனம் திறந்த உரையாடல்கள் மட்டுமே, அவர்களின் அந்த அடையாளச் சிக்கலை தீர்ப்பதற்கு உதவும். அதோடு மட்டுமல்லாமல் இந்த பருவத்தில் தான் அவர்கள் என்னவாக வேண்டும் என்பதை கட்டமைக்க போகிறார்கள். எனவே இந்த முக்கியமான பருவத்தில் நம் துணை அவர்களுக்கு வேண்டும்.


குளிரூட்டப்பட்ட ஒரு பெரிய அறை.. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள். அனைவருமே  இனிமையான, சிக்கல்கள் நிறைந்த   வளரிளம் வயதில் இருக்கக்கூடியவர்கள்.. இவர்கள் ஐந்து நாட்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற ஆர்வம் மிகுந்த பார்வைகள், அலட்சியம் மிகுந்த பார்வைகள், அதைப்பற்றி சிந்தனையே இல்லாத பார்வைகள்.. இப்படி பலவிதமான பார்வைகளை அவர்களை உற்று நோக்கியதில் அறிய முடிந்தது. 

ஒரு கலைக்கல்லூரியின் அரங்கத்தில் தான் நான் சொன்ன இந்த காட்சி. அந்த கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து நாட்கள் மதிப்பூட்டும் கல்வி பற்றிய  பயிலரங்கம்.. அந்தப் பயிலரங்கத்தில் நானும் ஒரு பயிற்சியாளராகச் சென்றிருந்தேன்..

பயிலரங்கத்தின் முதல் நாள் சிறிது விளையாட்டும், குதூகலமுமாய் தான் சென்றது.. பொதுவாக அந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு சினிமாவையும், விளையாட்டையும் இணைத்துப் பேசும் பொழுது தான், அவர்களின் கவனம் நம்மேல் குவிகிறது. அதைத்தான் நாங்களும் கையாண்டோம்..

சக பயிற்சியாளரான எனது நண்பன் அவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, நான் அந்த அரங்கத்தில் நடந்து கொண்டே ஒவ்வொரு மாணவர்களையும் கவனித்துக் கொண்டே நகர்ந்தேன்.. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் கைகளில் அலைபேசி..

அலைபேசிகளில் கேம்ஸ் விளையாடிக் கொண்டோ, இணைய நண்பர்களுடன் உரையாடிக் கொண்டோ, ரீல்ஸ் பார்த்துக்கொண்டோ இருந்தார்கள்.. நான் அவர்களை நெருங்கும் போதெல்லாம் டக்கென்று அலைபேசியை அணைத்துவிட்டு கவனிப்பது போல பாசாங்கு செய்தார்கள்.. சிலர் கீழே குனிந்து கொண்டு அலைபேசியில் தங்கள் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். 

மெல்ல ஒரு மாணவனின் அருகே சென்று, அவன் தோளில்  பரிவோடு கை வைத்தேன்.. அவன் அந்த தொடுகையை எதிர்பார்க்கவில்லை போலும். சட்டென்று  நிமிர்ந்து  என் கண்களை பார்க்க, " கண்ணா இப்படி குனிந்து கொண்டு அலைபேசியை பார்த்தால், உன் கண்ணும் கெட்டுவிடும்; கழுத்துப் பகுதியில் வலி வரும்.. நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து அலை பேசி உன்னிடம் இருந்து சற்று தொலைவில் வைத்துக் கொண்டு விளையாடு.. உன் நல்லதுக்கு தான்  சொல்றேன்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்..
        
அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு என்னை பார்த்து ஒரு சிறிய புன்முறுவல் செய்தான். என் சொற்கள் அவன் மனதை சிறிது  அசைத்திருக்கிறது.. அவன் அருகில் இருந்த மற்ற மாணவர்களையும் , விளையாடுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை அணைத்து வைக்கக் கோரினான்.

ஐந்து நாள் பயிற்சியின்போது  நன்கு நிகழ்வை கவனித்துக் கொண்டிருந்த மாணவர்களைத் தாண்டி அசட்டையாக அலைபேசியைப் பார்த்துக் கொண்டோ, நண்பர்களுடன் உரையாடிக் கொண்டோ இருந்த மாணவர்களிடம் தான் அதிக கவனம் குவித்தேன்..
      
அந்தக் கல்லூரியில் பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் மலையாளத்தைத் தாய்மொழியாக கொண்டவர்கள்.. எனக்குத் தெரிந்த அரைகுறை மலையாளத்தில்  அவர்களுடன் உரையாடும் பொழுதும்,  மோனே ( மகனே) என்று  அழைத்து உரையாடிய பொழுதும், மெல்லிய நெகிழ்ச்சியை அவர்களின் முகத்தில் என்னால் உணர முடிந்தது.. அது தாய்மொழியின் வலிமை அல்லவா?..

மூன்று நாட்கள் வரை மேடம் என்று அழைத்துக் கொண்டிருந்த அந்த மாணவர்கள் நான்காவது நாள் காலையில்  நான் உள்ளே சென்றதும் அக்கா...என்று    அன்போடு அழைக்க துவங்கியிருந்தார்கள்..

நான்காம் நாள் இறுதியில் அவர்களுக்கு இருக்கக்கூடிய அத்தனை சிக்கல்களையும் எழுதித் தரும்படி வேண்டுகோள் வைத்த பொழுது, கிட்டத்தட்ட 95% மாணவ மாணவியர்கள் வெளிப்படையாகத் தங்களுடைய அத்தனை சிக்கல்களையும் எழுதி இருந்தார்கள். மிக வியப்பாகவும் பெருமையாகவும் உணர்ந்த தருணம் அது.

வெறும் ஐந்து நாட்கள் மட்டுமே பழகிய எங்களுடன் அவர்களின் மனவெழுச்சியைப் பகிர்ந்து கொள்ள  முடிந்த அவர்களால், தினமும் சந்திக்கும் பெற்றோர்களிடமும், ஆசிரியர்களிடமும் ஏன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை? எது தடையாக இருந்திருக்கிறது? 

அவர்கள் எழுதிக் கொடுத்த சீட்டுகளின் வாயிலாகவும், அனுபவத்தின் வாயிலாகவும் கண்ட உண்மை.. பெரும்பாலான வீடுகளிலோ, வகுப்பறையிலோ மனம் திறந்த உரையாடல்கள் நடத்தப்படவில்லை. அவனுடைய சொல்லுக்கு செவிமடுக்க பெரிய காதுகள்  பெரும்பான்மையானவர்களுக்கு  இல்லை .. குடும்பமும் சரி.. பள்ளிக்கூடமும் சரி... சமூகமும் சரி.. குழந்தைகளை இலக்கை நோக்கி ஓடும் இயந்திரங்களாக மாற்றத்தான் துடிக்கிறார்கள்..

அந்த வயதில் உள்ள குழந்தைகளுக்கு ஒரு அனுசரணையான பார்வையோ, ஆறுதலான அரவணைப்போ அதிகம் கிடைக்கவே இல்லை என்பதுதான் உண்மை..
        
காலையில்   விழிக்கும் போதே நேரமாச்சு... எந்திரி.. பள்ளிக்கு கிளம்பனும் ...கல்லூரிக்கு கிளம்பனும்.. என்ற சொற்களைத் தாண்டி, வேறு அன்பான சொற்களை அவர்களின் காதுகள் கேட்டிருக்குமா?...

மெல்ல உறங்கும் பிள்ளையின் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டு, கட்டி அரவணைத்து, நம் அன்பை வெளிப்படுத்தி இருக்கிறோமா? முத்தமும் அரவணைப்பும் வளர்ந்த பிறகு அவர்களுக்கு தேவையில்லை என்று நினைக்கிறோம்.. ஆனால் மனிதனுக்கு பிறந்தது முதல், அவன் வாழ்வு முழுவதுமே, அன்பான தொடுதல் தேவையாக இருக்கிறது..

வாய் பேசாமலேயே பல விஷயங்களை, நம் அன்பை தொடுதல் மூலமாக பேசிவிட முடியும். அந்தத் தொடுதலும் அணைப்பும் ஒரு நொடியில் நம் அன்பை குழந்தைகளுக்குக் கடத்தி விடும்.. மெல்ல மெல்ல அந்த அன்பும் அரவணைப்பும், மனம் திறந்த உரையாடல்களை வீட்டில் வளர்க்கும்..

இனி தினமும் அதிகாலையிலும் இரவு உறங்கப்போகும் போதும், நம் பிள்ளைகளுக்கு கட்டி அணைத்து ஒரு முத்தமும், மெல்லிய அரவணைப்பும் தந்து, நம் பிள்ளைகளின் மனங்களை மலர வைத்து, மௌனங்களை உடைத்து நம்முடன் உரையாட வைப்போமா?...

...தொடரும்.....

நகை - இளங்கோ குமாரசாமி



 


புதுப்புது தங்க 
நகைகளை
அணிவித்து
 மகிழ்கிறாள்...
 விற்பனைப் பெண்
 மஞ்சள் கயிறணிந்து!

பவானி 2 நொய்யல் - 3 - க்ருஷ்

 



காளிங்கராயன் தடுப்பணை வரலாறு 

மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழக பகுதி நீலகிரி மலையில் அப்பர் பவானி  எனும் இடத்தில் சிற்றோடையாக தொடங்குகிறது பவானி.   அனிருத்தின் இன்றைய இசை போல ஆட்டத்தை ஆடி காட்டாறு போல தரை இறங்குகிறது.  தரை இறங்கி மேட்டுப்பாளையத்தில் பத்திரகாளியம்மனை தரிசித்துவிட்டு ஏ ஆர் ரகுமானின் துள்ளல் இசை போல பவானிசாகர் வரை வந்து தேங்குகிறது. அதன் பிறகு, இசைஞானின் இசை போல மெல்லிசையாக சமவெளி ஆட்டத்தைத் துவங்குகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பவானிசாகர் இல்லை.  

11ம்  நூற்றாண்டில்  கொடிவேரி இல்லை.   சத்தியமங்கலத்துக்கும் கோபிசெட்டிபாளையத்துக்கும் இடையே கொடிவேரியில் முதலில் இந்த காட்டாறைத் தடுத்து நிறுத்த முற்படுகிறார் செயங்கொண்ட சோழ கொங்கள்வான் எனும் மன்னர்.  அப்போது கொங்கு பகுதியை ஆண்ட மன்னர் இவர். கடம்பூர் மலையில் இருந்து கற்கள் கொண்டு வந்து மூன்று வருடம் முயற்சித்து கட்டி முடித்துவிடுகிறார்கள்.  மன்னர் திறக்க வர இருக்கையில் பெரும் வெள்ளத்தால் அணை உடைகிறது.   இரண்டாவது முறையும் முயற்சித்து அணைகட்டி திறக்கும்பொழுதும் அதுபோலவே ஆகிறது.  அதன்பிறகு அந்த மன்னர், அணையை திறக்க வருவதில்லை என சபதம் எடுத்து  மூன்றாம் முறை கட்டி முடித்துள்ளார்.  

”மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.”

அய்யனின் இந்த குறளுக்கு எடுத்துக்காட்டாக இந்த மன்னர் இருந்துள்ளார்.  

அன்றிலிருந்து இன்றும் கோபி பகுதிகளில் பயனளிப்பது தான் அரசன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள்.

13ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை காளிங்கராயன்(1283) இல்லை.    இளையராஜா இசையின் டிஸ்கோ பாடல்கள் போல அந்த கொடிவேரி அணை தடுப்புக்குப் பின்னும் பவானி  ஆறு ”ஆட்டமா தேரோட்டமா” பாடிக்கொண்டு தான்,  பவானி கூடுதுறையில் காவிரியில் கலந்தது.  காவிரியில் கலக்கும் போது அமைதியாக தூங்க வைக்கும் இளையராஜாவின் இரவு இசை போல இணையட்டும் என இந்த காட்டாற்று வெள்ளத்தை மீண்டும் தடுத்து நிறுத்திய இடம் அணைநாசுவம்பாளையம்.   காவிரியில் கலக்கும் இடதிற்கு சற்று முன்.  அந்த ஆகச்சிறந்த, காலம் கடந்த, தொலை நோக்கு திட்டத்தை தீட்டியவர் காலிங்கராயன்.     குறைந்தது ஐந்து ஆறு வருடங்களாவது திட்டம் தீட்டி இருக்க வேண்டும். 

 அங்கு தடுத்து நிறுத்தப்படும் ஆற்றின் ஒரு பகுதி நீர், 56 மைல்  தாண்டி சேரும் இடம் நொய்யல் ஆறு.   தற்போது பேசப்படும் நதிநீர் இணைப்பு தான்.   ஆனால் சாத்தியப்படுத்தப்பட்ட ஆண்டு 1283.  12 வருடங்கள் உழைப்பு. இயந்திரங்களோ, தொழில் நுட்பங்கள் பெரிதாக இல்லாத காலம்.  எப்படி காலிங்கராயர் சாத்தியப்படுத்தி இருப்பார் எனும் ஆச்சர்யம் வழி நெடுக ஒவ்வொரு இடத்திலும் பிரம்மிக்க வைக்கிறது.    

அந்த இடத்தில் ஒரு பூங்கா  அமைத்துக்கொண்டு  இருந்தார்கள்.  நாங்கள் பயணம் தொடங்கிய அன்று, கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு இருந்ததால் அதன் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இந்த அணைக்கட்டு துவங்கும்  இடத்திலிருந்து ஒரு செல்பி புகைப்படத்துடன் பயணம்  ஆரம்பித்தோம்.   காலிங்கராயன் பூங்காவிற்கு அல்லது அந்த அணைகட்டுக்கு ஊரின் பின் வழியே மறுபடியும் ஒருநாள் செல்லலாம் என்று பேசிக்கொண்டே அந்த இடத்திலிருந்து ஆரம்பித்தோம்.  வேறு ஒரு நாள் அணையை பார்க்க சென்றேன்.

 காலிங்கராயன் அணை


உத்தண்டராயன் திருக்கோயிலில் மிகவும் பழைய கால ஒரு புளியமரம் ஒன்று இருந்தது.  அதனை ஒட்டித்தான் இந்த தடுப்பணை.  பவானி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சில பல சந்துகளில் புகுந்து தான்,  உள்ளே வரவேண்டும்.   ஆற்றுப்படுகை சற்று கரடுமுரடாக இருக்கும். இந்த தடுப்பணை நீர் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கும்.  தடுப்பணையில் வலது ஓரத்தில் காலிங்கராயன் வாய்க்கால் ஆரம்பமாகின்றது.  நீர் இல்லாத காலத்தில் காலிங்கராயன் தண்ணீரை நிறுத்திவிடுவார்கள்.  மே மாதம் / சித்திரை வைகாசி காலங்களில் தண்ணீர் திறப்பது இல்லை.  எப்பொழுதும் கோடைகாலத்தில் மழை குறைவின் காரணமாக நிறுத்திவிடுவார்கள்.   10 மாதங்கள் காலிங்கராயனில் நீர் சென்று கொண்டுதான் இருக்கும்.   முப்போகம் விளையும் பாசனம்

காலிங்கராயன் அணை எப்படியும்  கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கு வரும்.  S  வடிவில் தடுப்பணையின் கரை அமைக்கப்பட்டு இருந்தது.   எஞ்சிய தண்ணீர், காவிரியில் கலக்க  வெளியேறிக் கொண்டே இருக்கும்.  தடுப்பணையில் தேங்கிய தண்ணீர் வலதுபக்க மூலையில் காளிங்கராயன் வழியாக கொஞ்சமாக வாய்க்கால் எடுத்துக்கொள்ளும். 

பால் போல் பொங்கி கொண்டு வெளியேறும் தடுப்பணை தண்ணீரில் இருந்து பவானி பாலத்தை பார்க்க முடியும்.  அங்கிருந்து சங்கமேஸ்வரர் கோயிலும் தெரியும்.  கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு உள்ளாகவே முடியும்.  காலிங்கராயன் வலது கரையில், பவானி ஆற்றின் இடது கரைக்கும் இடைக்கியே  காலிங்கராயன் மணிமண்டபம் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.  மிக பிரம்மாண்டமாக வேலை நடந்து கொண்டிருந்தது.  அதனால் வலதுபுறம் வழியாக காளிங்கராயன் அணைக்கு அப்பொழுது வர முடியவில்லை.  

அங்கு தேங்கும் பவானி ஆற்றின் அல்லது காலிங்கராயன் அணையின் இரு புறமும் வயல்வெளிகள் தான். தென்னை மரங்கள்,  வாழை, மஞ்சள் என நிறைய வயல்வெளிகள் உண்டு.  கோயிலில் சுபஸ்ரீ பரிதாபி வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி ஆங்கில மாதம் 9 12 1972 பவானி ஆற்றில் அதிக வந்த நாள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதன் பிறகு அவ்வளவு வெள்ளம் வரவே இல்லையா என தெரியவில்லை.    அந்தக் கோயில் மேல்பவானி மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு சேர்ந்தது எனவும் கல்வெட்டில் எழுதி இருந்தார்கள்.  

செல்ஃபி உடன் ஆரம்பித்த இடத்திலிருந்து, வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது.   அங்கங்கு மக்கள் குளிக்க, துணி துவைக்க படிகள் கட்டப்பட்டு, இரும்புக்கம்பிகள் தடுப்பு வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருந்தது.   காலை வேளை என்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை வாய்க்காலில் இருந்து ஆரம்பித்தது.  சிலர் வேப்பங்குச்சியை ஒடித்து பல் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.  சிலர் துணிகளை சோப்பு போட்டு, நுரை வர கும்மிக் கொண்டு இருந்தார்கள்.   சிலர் நம்மீது தெறிக்கும் தூரத்திற்கு அடித்து துவைத்து அலசிக் கொண்டு இருந்தார்கள்.  ஆண்களும், பெண்களும் என பலர் அங்கங்கு வாய்க்காலில் ஒய்யாரமாக குளித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்படியே ஈரோடு-பவானி சாலையை கடந்தோம்.  சங்கமேஸ்வரர் கோயில் 'சிவ சிவ' எனும் எழுத்துக்களோடு வாய்க்காலின் இடதுபுறம் தெரிந்துகொண்டிருந்தது. 7 ஆம் நூற்றாண்டில் அப்பர் பெருமானால் பாடல் பாடப்பட்ட இடம்.  

 பவானி, காலிங்கராயனோடு கால்கட்டு போடப்பட்டு  ஆகாயத் தாமரைகள் அடர்ந்து படர்ந்து அமைதியாக வந்து காவிரியில் கலந்து கொண்டு இருந்தது.  கரையின் வலதுபுறம் வாய்க்கால் நீர் வழிய ததும்ப ஆர்ப்பரித்துக் கொண்டு பாயும் புலியைப் போல சீறி காலிங்கராயன் ஓடிக்கொண்டிருந்தது.  தொடங்கும் இடத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டருக்கு குளிப்பவர்கள் நோய் எதிர்ப்பு  சக்தி குறைந்தவர்கள்.  அதன் பிறகு குளிப்பவர்கள் எல்லாம் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவர்கள் தான்.    ஏன்?

 பவானி ஆற்றின் தடுப்பணைகள்

1125 - கொடிவேரி தடுப்பணை

1283 - காலிங்கராயன் தடுப்பணை

1956 - பவானிசாகர் அணை


..தொடரும்....

 

அன்னம் - ஈரோடு காதர்






ஊரின் கோயில் திருவிழாவுக்காக கணவனின் வரவுக்காக காத்திருந்த அன்னத்திடம் அவளின் மகன் மணி ,"அம்மா அப்பா எப்பமா வருவாரு" என்றான்.


அன்னமோ "அப்பா நேத்தே வரேன்னு போன்ல சொன்னாரு ஆனா இன்னும் வரல போன் போட்ட சுட்ச் ஆப்னு வருது என்னானு தெரியலையேப்பா இன்னைக்கு ராவுக்குள்ள வந்துருவாருபா" என்றாள்.

"மா நேத்தைக்கும் இதே தான் சொன்ன, இன்னைக்கும் இதே சொல்ற. காசு குடுமா... நோட்டு பேனால்லாம் வாங்கனும். எதுக்கு காசு கேட்டாலும் அப்பா வரட்டுங்கற, கோயில் கடையில் பேனா, பேக், செருப்பு கடையெல்லாம் போட்டிருக்காங்க ஊர்ல பசங்க எல்லாம் வாங்கராங்கமா நானும் வாங்கனும்மா. காசு குடுமா" என்றான்.

"மணி எங்கிட்ட காசு இல்லப்பா.  அப்பா ஊர்ல இருந்து வந்து தந்தாதன் காசு, இல்லாட்டி நீ அண்ணன்ட்ட போயி சித்தி காசு கேட்டுச்சுனு கேளு கொடுத்தா போயி எல்லாம் வாங்கிக்க" என்றாள்.

சரி என்றவாரு மணி சைக்கிளை எடுத்துக் கொண்டு அண்ணன் ராஜா வேலை செய்யும் டூவீலர் மெக்கானிக் ஷாப்புக்கு சென்றான். அங்கே சென்று அம்மா சொன்னதாக "அப்பா ஊர்ல இருந்து வர்ல. கோயில் கடைல இதெல்லாம் வாங்கனும் காசு வேணும் என்று கூற, ராஜாவும் ஓனரிடம் சென்று 700 ரூபாய் சம்பளத்தை முன்னதாக வேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டு வந்து மணியிடம் கொடுத்து விட்டு "மணி நீ ஐனூறு எடுத்துக்கோ சித்திட்ட இரநூர கொழம்பு செலவுக்கு கொடுத்துடு, அப்பா வர வரைக்கும் சித்திக்கு செலவுக்கு இருக்கட்டும்.
அப்புறம் நான் ராவுக்கு வீட்டுக்கு வரமாட்டேன். ஓனர் ஒரு வண்டியோட இன்ஜின் பிரிக்கனும்ருக்கார் அதனால் இங்கேயே படுத்துட்டு விடியகாலதான் வீட்டுக்கு வருவேனு சித்திட்ட சொல்லிரு, எனக்கு காலைல சமச்சா போதும்னு மறக்காம சொல்லிரு. இல்லாட்டி காலைல வீட்டுக்கு வந்தவுடனே இராவுல எனக்கு சாப்பிட செஞ்சதெல்லாம் வீணா போச்சுனு சித்தி வாய்க்கு வந்ததெல்லாம் திட்டும். சரியா மறக்காம சொல்லிரு மணி" என்றான்.

சரி என்று சொல்லி விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த மணி அம்மாவிடம் 200 ரூபாயைக் கொடுத்து விட்டு ஐநூறை எடுத்துக்கொண்டு "மா! அண்ணா, ராவுக்கு வரதாமா இன்ஜின் பிரிக்கர வேலை இருக்காம். காலைல தான் வருமாம். ராவுக்கு சாப்பிட செய்ய வேண்டாமாம்னு சொல்லுச்சுமா" என்று கூறிவிட்டு குளித்து ரெடியாகி விட்டு கோயில் கடைகளை சுற்றிப் பார்த்து விட்டு தனக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கிளம்பினான்.

அன்னமும் கையில் காசு வந்தவுடன் மலர்ந்த முகத்தோடு அண்ணாச்சி கடைக்கு சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்க சென்றாள். அங்கே அன்னத்தின் அக்காவை எதிரில் சந்தித்தாள் "ஏய் அன்னம், காலையில் ஒன்னும் சமைக்கல. கைல காசு இல்லன.  இப்ப கடைக்கு வந்திருக்கிர. மணியோட அப்பா வந்துட்டாரா" என்றாள்.

அதற்கு அன்னம் "இல்லை" என்றவுடன் "அப்புறம் ஏது காசு" என்று கேட்க ராஜா கொடுத்தான் என்று சொன்னாள்.  "ஓ அவரோட மொத பொண்டாட்டியோட மகன் கொடுத்தானா?" என்றாள்.

 "ம்.. ராஜா கொடுத்தது என்று வெடுக்கென்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.

"ஏய் நான் என்னாடி சொல்லிட்டேன் இப்படி வெடுக்குனு சொல்லிட்டு போற" 

உடனே அன்னம் "பின்ன எப்ப பாரு ராஜா பத்தி பேசுனா அவன் மொத தாரத்து பையன்னே... பேசர, இல்ல, நான் தெரியாமத்தான் கேட்கறேன். எப்ப பாரு ராஜா பத்தி பேச்சு வந்தாவே அவன் மொத தாரத்து பையன்னு பேசரயே, உன் மனசுக்குள்ள அவன கேவலமா பேசனும்ற எண்ணமா இல்ல நான் இரண்டாம் தாரம்னு கேவலபடுத்தலாம்கிறது உன் எண்ணமா சொல்லு" என்றாள்.

"யேய் அன்னம் நான் இப்ப என்ன கேட்டுட்டேன். இப்படி கோபப்படுற. உண்மையத்தானே கேட்டேன்"

"எது உண்மை நான் ரெண்டா தாரங்கறதா, இல்ல ராஜாவுக்கு சித்திங்கறதா".

"அடியேய் நான் எந்த எண்ணதலையும் கேட்குல. கஷ்டத்துல இருக்கரையே, நாலு வார்த்த பேசினா மன பாரம் கொறையுமேனு தான் கேட்டேன், கேட்டது தப்புதான் வுடூ. கஞ்சிக்கு காசு இல்லனாலும் கவுரவம் கொரையுதா பாரு" 

"கஞ்சிக்கே காசு இல்லனாலும் யாரோட வீட்டுலயும் வந்து நிக்கல,  கா.வயித்தோட இருந்தாலும் கவுரதயோட இருக்கேன். மொத தாரத்து பையனா இருந்தாலும் நானும் அவன்ட்ட அப்படி நடந்துக்குல .அவனும் அப்படியில்ல. கூப்புடறது தான் சித்தினு தவிர மனசுக்குள்ள அம்மாவாதான் நினைக்கறான். புரியுதா" என்று படபடவென்று பேசிவிட்டு நகர்ந்தாள்.

இரவு பதினோரு மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அன்னம் கணவனைக் கண்டவுடன் மனநிம்மதியடைந்து புன்னகைத்தாள்.. தூங்கிக் கொண்டிருந்த மணி எழுந்து "அப்பா" என்று அழைத்தபடி வந்து அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் கடந்தவுடன் அன்னம் வீட்டின் சூழ்நிலையையும் போன் சுட்ச் ஆப் ஆகி இரவு வரை வராததால் பயந்ததையும் கூற, கணவன் தான் வேலை செய்யும் விதத்தையும் வருமானத்தையும் போன் சுட்ச் ஆனதையும் பயணத்தையும் சொல்லிக் கொண்டிருக்க, மணியோ தந்தை ஊரில் இருந்து கொண்டு வந்த பேக்கில் இருந்து அவர் வாங்கி வந்த ஒவ்வொரு பொருளாக எடுத்தான்.. ஷூ, பெல்ட், ஸ்பேரே, வாட்ச், ஹெட் போன்,என பல பொருட்களையும்,. பலகாரத்தையும் எடுத்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

கணவனோ "அன்னம், ராஜா எங்கே என்று கேட்க,

"ம்...அவனுக்கு நைட் வேல இருக்குனு ஓனர் இருக்க சொல்லிட்டராம்" என்று அன்னம் சொல்ல

"நைட் வேலையா? இந்த வயசுலயா? அன்னம் அவனுக்கு பதினேழு வயசுதான் ஆகுது படிச்சிட்டுருந்தா பனிரென்டாவது தான் படிச்சிட்டிருப்பான். இந்த வயசுல போயி நைட் வேலையா" என்றான்.

"ம்.. நானா நைட் வேல பாருன்னு சொன்னேன்., படிக்க வேண்டானு சொன்னேன், அவந்தானே படிக்கப் புடிக்கலைன்னான். மெக்கானிக் ஷாப்புக்கு  போனா நான் என்ன செய்ய.." என்று சொல்லி விட்டு ,"தா உட்லயே இப்படி பேசுனா வெளியல நான் தான் சித்தி கொடும பன்ற மாதிரி நினைக்கறாங்க .என்ன பன்றது, எல்லாம் என் தலையெழுத்து" என்றாள்.

கணவனோ "அன்னம் நான் உன்ன ஒன்னும் சொல்லல அவன நினைச்சு சொன்னேன். நீ அதை ஒன்னும் பெரிசு பண்ணிக்காத" என்று சமாதானப்படுத்தினான். மணி எப்படி படிக்கிறான், திருவிழா எப்படி இருக்கிறது என்று மற்ற விஷயங்களைப் பேசியவாறு எல்லோரும் உறங்கிவிட்டனர்.

அதிகாலை ராஜா வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவைப் பார்த்து சந்தோஷமாக சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்க, அன்னம் வந்து அதட்டலுடன் "ராஜா போயி மொதல்ல குளிச்சிட்டு வா" என்றாள்.. காலைக் கடமைகளை முடித்து குளித்துவிட்டு தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போது காபி டம்ளருடன் வந்த அன்னம் "இந்தா, காபியைக் குடி" என்று ராஜாவிடம் கூறிவிட்டு கணவனைப் பார்த்து "ஏங்க, கடைக்குப் போய் கறி எடுத்துட்டு வாங்க" என்றாள்.. கணவனும் ராஜாவிடம் பேசுவதை விட்டு எழுந்து செல்ல சிறிது நேரத்தில் ராஜாவை சாப்பிட அழைத்தாள்.. ராஜாவும் சாப்பிட அமர்ந்தான். அவனுக்குப் பிடித்த பூரி. 

ஆசையுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, "ராஜா நீ இன்னைக்கு கடைக்குப் போகாதே. லீவு போடு" என்றாள்.. 

"ஏன் சித்தி" என்றான் "இன்னைக்கு காலையில கோயிலுக்கு போயிட்டு வீட்ல சில வேல இருக்கு அதை முடிச்சுட்டு சாயாங்காலம் கோயில் கடைவீதி போகணும்" என்றாள்.

சரியென்று கூறிவிட்டு பூரியை சாப்பிட்டு விட்டு  உறங்கினான்.. சிறிது நேரத்தில் அன்னம் ராஜாவை எழுப்பி, "இந்தா ராஜா இந்த டிரசைப் போட்டுட்டு இந்த வாட்ச் கட்டிட்டு இந்த செண்ட்டை அடுச்சுட்டு வா. கோயிலுக்குப் போகனும்" என்றாள்.

சிறிது நேரத்தில் தயாராகி கோயிலுக்குக் குடும்பமாக சென்று கொண்டிருக்கையில் "அண்ணே வாட்ச அம்மா உனக்கு குடுத்துடுச்சா. நான் கேட்டேன், இல்லேனுச்சுணா" என்றான். ராஜா "தம்பி வாட்ச் உனக்கு வேணும்னா அப்பப்போ எடுத்து கட்டிக்கோ" என்றான்.

கோயிலில் அர்ச்சனையில் ராஜாவின் தாயின் பெயரை சொன்னாள்.. மதிய உணவின் போது ராஜாவுக்கு பிடித்த ஈரலை தனியாக எடுத்து வைத்து பரிமாறினாள்.

மாலையில் கோயில் மற்றும் கடைவீதியைச் சுத்திப் பார்க்க ராஜாவையும், மணியையும் அனுப்பி விட்டு கணவனை அழைத்துக்கொண்டு  அன்னம் அந்த ஊரில் உள்ள டுடோரியல் காலேஜுக்கு சென்றாள். 

இரவு வீட்டுக்கு வந்தவுடன், "ராஜா நீ இனி வேலைக்குப் போக வேண்டாம். அப்பா ஓனர்ட்ட பேசிக்குவாரு. அங்க டேபிள் மேல  அப்ளிகேஷன் இருக்கு. அதை பில் பண்ணு, அடுத்த வாரத்திலிருந்து படிக்கப் போகலாம். வீட்டுக்குத் தேவையான வருமானம் அப்பா கொடுப்பாரு. அது பத்தலனா நான் பூக்கட்டி சம்பாரிச்சுக்கறேன்" என்றாள். சித்தியின் பேச்சில் ஒரு தாயின் மிரட்டல் இருந்தது.. எனவே ராஜாவும் அன்னம் சொன்னதை  மறுக்காமல் செய்தான். 

இரவு படுக்கையில் கணவன் அன்னத்தைப் பார்த்து "அன்னம் நீ பிரித்துப் பார்ப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ எதைப் பிரிக்கனுமோ அதைப் பிரிக்கறாய்" என்று முகம் மலரக் கூறினான்.

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...