Tuesday, August 1, 2023

பவானி 2 நொய்யல் - 3 - க்ருஷ்

 



காளிங்கராயன் தடுப்பணை வரலாறு 

மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழக பகுதி நீலகிரி மலையில் அப்பர் பவானி  எனும் இடத்தில் சிற்றோடையாக தொடங்குகிறது பவானி.   அனிருத்தின் இன்றைய இசை போல ஆட்டத்தை ஆடி காட்டாறு போல தரை இறங்குகிறது.  தரை இறங்கி மேட்டுப்பாளையத்தில் பத்திரகாளியம்மனை தரிசித்துவிட்டு ஏ ஆர் ரகுமானின் துள்ளல் இசை போல பவானிசாகர் வரை வந்து தேங்குகிறது. அதன் பிறகு, இசைஞானின் இசை போல மெல்லிசையாக சமவெளி ஆட்டத்தைத் துவங்குகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பவானிசாகர் இல்லை.  

11ம்  நூற்றாண்டில்  கொடிவேரி இல்லை.   சத்தியமங்கலத்துக்கும் கோபிசெட்டிபாளையத்துக்கும் இடையே கொடிவேரியில் முதலில் இந்த காட்டாறைத் தடுத்து நிறுத்த முற்படுகிறார் செயங்கொண்ட சோழ கொங்கள்வான் எனும் மன்னர்.  அப்போது கொங்கு பகுதியை ஆண்ட மன்னர் இவர். கடம்பூர் மலையில் இருந்து கற்கள் கொண்டு வந்து மூன்று வருடம் முயற்சித்து கட்டி முடித்துவிடுகிறார்கள்.  மன்னர் திறக்க வர இருக்கையில் பெரும் வெள்ளத்தால் அணை உடைகிறது.   இரண்டாவது முறையும் முயற்சித்து அணைகட்டி திறக்கும்பொழுதும் அதுபோலவே ஆகிறது.  அதன்பிறகு அந்த மன்னர், அணையை திறக்க வருவதில்லை என சபதம் எடுத்து  மூன்றாம் முறை கட்டி முடித்துள்ளார்.  

”மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.”

அய்யனின் இந்த குறளுக்கு எடுத்துக்காட்டாக இந்த மன்னர் இருந்துள்ளார்.  

அன்றிலிருந்து இன்றும் கோபி பகுதிகளில் பயனளிப்பது தான் அரசன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள்.

13ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை காளிங்கராயன்(1283) இல்லை.    இளையராஜா இசையின் டிஸ்கோ பாடல்கள் போல அந்த கொடிவேரி அணை தடுப்புக்குப் பின்னும் பவானி  ஆறு ”ஆட்டமா தேரோட்டமா” பாடிக்கொண்டு தான்,  பவானி கூடுதுறையில் காவிரியில் கலந்தது.  காவிரியில் கலக்கும் போது அமைதியாக தூங்க வைக்கும் இளையராஜாவின் இரவு இசை போல இணையட்டும் என இந்த காட்டாற்று வெள்ளத்தை மீண்டும் தடுத்து நிறுத்திய இடம் அணைநாசுவம்பாளையம்.   காவிரியில் கலக்கும் இடதிற்கு சற்று முன்.  அந்த ஆகச்சிறந்த, காலம் கடந்த, தொலை நோக்கு திட்டத்தை தீட்டியவர் காலிங்கராயன்.     குறைந்தது ஐந்து ஆறு வருடங்களாவது திட்டம் தீட்டி இருக்க வேண்டும். 

 அங்கு தடுத்து நிறுத்தப்படும் ஆற்றின் ஒரு பகுதி நீர், 56 மைல்  தாண்டி சேரும் இடம் நொய்யல் ஆறு.   தற்போது பேசப்படும் நதிநீர் இணைப்பு தான்.   ஆனால் சாத்தியப்படுத்தப்பட்ட ஆண்டு 1283.  12 வருடங்கள் உழைப்பு. இயந்திரங்களோ, தொழில் நுட்பங்கள் பெரிதாக இல்லாத காலம்.  எப்படி காலிங்கராயர் சாத்தியப்படுத்தி இருப்பார் எனும் ஆச்சர்யம் வழி நெடுக ஒவ்வொரு இடத்திலும் பிரம்மிக்க வைக்கிறது.    

அந்த இடத்தில் ஒரு பூங்கா  அமைத்துக்கொண்டு  இருந்தார்கள்.  நாங்கள் பயணம் தொடங்கிய அன்று, கட்டமைப்பு பணிகள் நடந்துகொண்டு இருந்ததால் அதன் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இந்த அணைக்கட்டு துவங்கும்  இடத்திலிருந்து ஒரு செல்பி புகைப்படத்துடன் பயணம்  ஆரம்பித்தோம்.   காலிங்கராயன் பூங்காவிற்கு அல்லது அந்த அணைகட்டுக்கு ஊரின் பின் வழியே மறுபடியும் ஒருநாள் செல்லலாம் என்று பேசிக்கொண்டே அந்த இடத்திலிருந்து ஆரம்பித்தோம்.  வேறு ஒரு நாள் அணையை பார்க்க சென்றேன்.

 காலிங்கராயன் அணை


உத்தண்டராயன் திருக்கோயிலில் மிகவும் பழைய கால ஒரு புளியமரம் ஒன்று இருந்தது.  அதனை ஒட்டித்தான் இந்த தடுப்பணை.  பவானி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சில பல சந்துகளில் புகுந்து தான்,  உள்ளே வரவேண்டும்.   ஆற்றுப்படுகை சற்று கரடுமுரடாக இருக்கும். இந்த தடுப்பணை நீர் வழிந்து ஓடிக் கொண்டே இருக்கும்.  தடுப்பணையில் வலது ஓரத்தில் காலிங்கராயன் வாய்க்கால் ஆரம்பமாகின்றது.  நீர் இல்லாத காலத்தில் காலிங்கராயன் தண்ணீரை நிறுத்திவிடுவார்கள்.  மே மாதம் / சித்திரை வைகாசி காலங்களில் தண்ணீர் திறப்பது இல்லை.  எப்பொழுதும் கோடைகாலத்தில் மழை குறைவின் காரணமாக நிறுத்திவிடுவார்கள்.   10 மாதங்கள் காலிங்கராயனில் நீர் சென்று கொண்டுதான் இருக்கும்.   முப்போகம் விளையும் பாசனம்

காலிங்கராயன் அணை எப்படியும்  கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கு வரும்.  S  வடிவில் தடுப்பணையின் கரை அமைக்கப்பட்டு இருந்தது.   எஞ்சிய தண்ணீர், காவிரியில் கலக்க  வெளியேறிக் கொண்டே இருக்கும்.  தடுப்பணையில் தேங்கிய தண்ணீர் வலதுபக்க மூலையில் காளிங்கராயன் வழியாக கொஞ்சமாக வாய்க்கால் எடுத்துக்கொள்ளும். 

பால் போல் பொங்கி கொண்டு வெளியேறும் தடுப்பணை தண்ணீரில் இருந்து பவானி பாலத்தை பார்க்க முடியும்.  அங்கிருந்து சங்கமேஸ்வரர் கோயிலும் தெரியும்.  கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு உள்ளாகவே முடியும்.  காலிங்கராயன் வலது கரையில், பவானி ஆற்றின் இடது கரைக்கும் இடைக்கியே  காலிங்கராயன் மணிமண்டபம் கட்டிக்கொண்டு வருகிறார்கள்.  மிக பிரம்மாண்டமாக வேலை நடந்து கொண்டிருந்தது.  அதனால் வலதுபுறம் வழியாக காளிங்கராயன் அணைக்கு அப்பொழுது வர முடியவில்லை.  

அங்கு தேங்கும் பவானி ஆற்றின் அல்லது காலிங்கராயன் அணையின் இரு புறமும் வயல்வெளிகள் தான். தென்னை மரங்கள்,  வாழை, மஞ்சள் என நிறைய வயல்வெளிகள் உண்டு.  கோயிலில் சுபஸ்ரீ பரிதாபி வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் தேதி ஆங்கில மாதம் 9 12 1972 பவானி ஆற்றில் அதிக வந்த நாள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதன் பிறகு அவ்வளவு வெள்ளம் வரவே இல்லையா என தெரியவில்லை.    அந்தக் கோயில் மேல்பவானி மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு சேர்ந்தது எனவும் கல்வெட்டில் எழுதி இருந்தார்கள்.  

செல்ஃபி உடன் ஆரம்பித்த இடத்திலிருந்து, வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது.   அங்கங்கு மக்கள் குளிக்க, துணி துவைக்க படிகள் கட்டப்பட்டு, இரும்புக்கம்பிகள் தடுப்பு வைக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக இருந்தது.   காலை வேளை என்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை வாய்க்காலில் இருந்து ஆரம்பித்தது.  சிலர் வேப்பங்குச்சியை ஒடித்து பல் விளக்கிக் கொண்டு இருந்தார்கள்.  சிலர் துணிகளை சோப்பு போட்டு, நுரை வர கும்மிக் கொண்டு இருந்தார்கள்.   சிலர் நம்மீது தெறிக்கும் தூரத்திற்கு அடித்து துவைத்து அலசிக் கொண்டு இருந்தார்கள்.  ஆண்களும், பெண்களும் என பலர் அங்கங்கு வாய்க்காலில் ஒய்யாரமாக குளித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்படியே ஈரோடு-பவானி சாலையை கடந்தோம்.  சங்கமேஸ்வரர் கோயில் 'சிவ சிவ' எனும் எழுத்துக்களோடு வாய்க்காலின் இடதுபுறம் தெரிந்துகொண்டிருந்தது. 7 ஆம் நூற்றாண்டில் அப்பர் பெருமானால் பாடல் பாடப்பட்ட இடம்.  

 பவானி, காலிங்கராயனோடு கால்கட்டு போடப்பட்டு  ஆகாயத் தாமரைகள் அடர்ந்து படர்ந்து அமைதியாக வந்து காவிரியில் கலந்து கொண்டு இருந்தது.  கரையின் வலதுபுறம் வாய்க்கால் நீர் வழிய ததும்ப ஆர்ப்பரித்துக் கொண்டு பாயும் புலியைப் போல சீறி காலிங்கராயன் ஓடிக்கொண்டிருந்தது.  தொடங்கும் இடத்தில் இருந்து ஒரு சில கிலோமீட்டருக்கு குளிப்பவர்கள் நோய் எதிர்ப்பு  சக்தி குறைந்தவர்கள்.  அதன் பிறகு குளிப்பவர்கள் எல்லாம் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவர்கள் தான்.    ஏன்?

 பவானி ஆற்றின் தடுப்பணைகள்

1125 - கொடிவேரி தடுப்பணை

1283 - காலிங்கராயன் தடுப்பணை

1956 - பவானிசாகர் அணை


..தொடரும்....

 

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...