Monday, January 1, 2024

என் அமெரிக்க பயணம் - பகுதி 2 - சக்திவேல் விரு

 


                


ரி வந்தது தான் வந்தாச்சு இந்த அமெரிக்க குடியுரிமை கும்பல் என்னதான் நம்மை வெச்சு செய்ய போகிறார்கள் என ஆவலுடன் அங்குள்ள அறைக்குள் சென்ற பொழுது தான் தெரிந்தது அங்கிருக்கும் விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்களில் பாதிபேர் நம் இந்திய மக்கள் தான். அவர்களை பார்த்த உடனே ஒரு தெம்பு வந்துவிட்டது போல ஒரு உணர்வு . 

கண்ணாடி கூண்டுக்குள் ஆறு பேர் கொண்ட விசாரணை குழுவினர் பல்வேறு  விசாகளில்  வந்தவர்கள் ஒவ்வொருவரையும் தோண்டி துருவிகொண்டு இருந்தார்கள். பலர் அவர்கள் கையில் இருந்த காகிதங்களை கண்ணாடி கூண்டுக்குள் சொருகுவது தாங்கள் வந்த நோக்கம் வேலை என்று பலவற்றை விளக்குவதுமாக போய்க்கொண்டு இருந்தது. 

ஒரு முக்கால் மணிநேரம் கழிந்த பின்னர் ஒரு குடியுரிமை அலுவலர் என் தந்தை பேரை துளசிமணி ( எப்பவும் வெளிநாடுகளில் நமது இனிசியள் பேரை தான் கூப்பிடுவார்கள் ) என  சொல்லி அழைக்க நமக்கு இனிதான் ஏழரையே  தொடங்க போகுது என்று  மனதில் எண்ணிக்கொண்டே அவரிடம் சென்றேன் .  

"சரி சொல்லுங்க எதுக்கு வந்தீங்க ? " என்றார்.

"ஒரு அலுவல் வேலை இருக்கு முடிச்சுட்டு அப்படியே அமெரிக்க நாட்டை சுத்தி பார்க்க வந்தேன் ! " என்றேன்.

"தாராளமா செய்யுங்க . சரி அதற்கான ஆவணங்கள் எங்கே ? " என்றார் .

"இதோ இந்த போனுக்குள்ள மாட்டிக்கிச்சு போனும் பேட்டரி இல்லாம செத்துடுச்சு.. ஒரு சார்ஜிங் வசதி மட்டும் செஞ்சு கொடுத்தா எல்லா உண்மையையும் அது கக்கி என்னை காப்பாத்திவிடும் " என இழுத்தேன் .

பக்கத்தில் இருக்கும் மற்றுமொரு பெண் அலுவலரிடம் பேசி ஒரு கருப்பு சார்ஜிங் பாட்டரி ஒன்றை கொடுத்தார் . அதில் போனை மாட்டியவுடன் ஐந்து நிமிடம் கழித்து உயிர்பெற்று எனது  கைபேசி என் அமெரிக்க பயண கனவை உயிர்ப்பித்தது என்றே சொல்லலாம்.

முதலில் அவர் கேட்டது  நான் லண்டன் திரும்பி செல்வதற்கான விமான டிக்கெட் , என் அலுவலக ஈமெயில் , தங்குமிட புக்கிங் ஈமெயில் , வார இறுதி நாட்களில் ஊர் சுத்தி  பார்ப்பேன் என்று நானே தேவையில்லாமல் வாயை விட்டதால் என் அக்கவுண்டில் உள்ள தொகையை இங்கிலாந்து பேங்க் அக்கவுண்ட்  ஆப்பை திறந்து காட்ட அவருக்கு சந்தேகம் தீர்ந்தது போல எனக்கு தோன்றியது . 

"சரி கிளம்புங்க. ஒழுங்கா வேலையை முடித்த பின்னர் நல்லா சுத்தி பார்த்துவிட்டு சொன்ன தேதியில் ஊர் திரும்புங்கள்" என்றார் அலுவலர். 

"சரிங்க உத்தரவு வாங்கிக்கிறேனுங்க ! " என சொல்லாத குறையாக முடித்துக்கொண்டு வெளியில் நீண்ட நேரம் என்னை பிக்கப் செய்ய காத்திருந்த நண்பனை செல்பேசினேன் .

"எனக்கு தெரியும்டா முன்னரே உனக்கு விசா மறுப்பு ஆன வரலாறு இருப்பதால் (20 ஆண்டுகளுக்கு முன்பு F1 மாணவர் விசா மறுப்பு ) குடியுரிமை கும்பல் விசாரணை இருக்கலாம்  என ஒரு சந்தேகம் இருந்தது அதனால் தான் முடியட்டும் என கால் பண்ணவில்லை " என்றான்.

"அதை பற்றியெல்லாம் ஒன்னும் கேட்கவில்லை , என் கைபேசியில் எல்லா விபரங்களையும் வைத்து அதில் பாட்டரி இல்லாமல் போனது  தான் பிரச்சனை "  என்றேன்  

நல்ல நாடு நல்ல நண்பன் . 

"அப்படி என்னதாண்டா இந்த நாட்டுல வெச்சுருக்காங்க இந்தனை பேரு நம்மாட்கள் வந்திருக்கிறார்கள். குடியுரிமை அலுவல் ஆட்கள் அவர்களை வெச்சு லெப்ட் ரைட் என விசாரணை செய்துகொண்டும்  இருக்கிறார்கள்?" என்றேன் .
 
"உள்ளே வந்துட்டீல ரெண்டுநாள் போனால் நீயே புரிஞ்சுகுவே" என்றான் நண்பன் .

...பயணம் தொடரும்...

வருவதும், வாங்கிக்கொள்வதும்.......ராதா மனோகரன்

 

  

வயிற்றுப்பிழைப்பையும், வாழ்வாதாரத்தையும் முன்னிலைப்படுத்தி ஒரு செயல் செய்யப்படும் பொழுது அங்கு பொழுது போக்கோ, உயிர்பயமோ, கவலையோ பிரதானப்படுத்தப்படுவதில்லை. முடியாதும் கூட என்பதே உண்மை. அவ்வாறு பிரதானப்படுத்தப்பட்டால் வெள்ளைத் துண்டும், தண்ணீர் பாட்டிலும் மட்டுமே வாங்கி வயிற்றுப் பசியை ஆற்றவேண்டி இருக்கும் என்ற கசப்பான உண்மை அவர்களுக்கும் தெரியும்.

புத்தாடை, பட்டாசு, பலகாரம், பட்டிமன்றம், படம், பாடல், விருந்து, ஏப்பம்,  உறக்கம் என நாடே தீபாவளிக் கொண்டாட்டத்தில் களித்திருக்க ராமன் ஆண்டாள் என்ன? ராவணன் ஆண்டாள் என்ன? என்று கடமையே கண்ணாயிரமாக உத்தரகாசியில் சுரங்கத் தொழிலாளர்கள் 41 பேர் குகைக்குள் ஒட்டிய வயிறுடனும், தூக்கக் கலக்கத்துடனும் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுகிறது. மறுபகுதியில் இருந்த இவர்கள் 41 பேரும் மாட்டிக் கொள்கிறார்கள்.

வேலைக்குக் கிளம்பி வருகையில் சோறாக்க அரிசி,பருப்பு இல்லையென மூக்கைச் சிந்திய மனைவியிடம் என்ன வாக்குறுதியும், ஈசல் புற்று போன்ற குடிசையை விட்டு தலை குனிந்து வெளியே வருகையில் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேன்மிட்டாய் வாங்கிக் குடு என்று தேனை விடவும் இனிமையாகக் கொஞ்சிய புழுதி படர்ந்த மழலையிடம் என்ன சமாதானமும் சொல்லி விட்டு வந்தனரோ இனி 16 நாட்கள் வீடு திரும்பப் போவதில்லை என்று அறியாத அந்த குடும்பத்தின் ப்ரெட் வின்னர்ஸ்.  

சரிவு நிகழ்ந்த கணத்தில் வேண்டுமானால் நம்பிக்கை முழுவதும் அறுந்து போகாமல் இருந்திருக்கலாம், இரண்டு,நான்கு,எட்டு என நாட்கள் நகர்கையில் அந்த நெஞ்சம் எப்படியெல்லாம் பதறி இருக்கும். உழைத்து உழைத்து உரமேறியது உடல் மட்டுமாகத்தானே இருக்கும். உள்ளம் பூஞ்சைதானே. இருட்டில் கிடந்து இருட்டையே சுவாசித்துக் கொண்டிருக்கும் கூலித் தொழிலாளி ஒருவனின் எண்ண அலைகளில் வயதான அம்மா, சீக்காளி அப்பா, வாயாடிப் பொண்டாட்டி, துறுதுறு மகன், துடிப்பான மகள் இவர்களைத்தவிர வருவதற்கு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. அந்த நினைவுகள் அவர்களை எப்படி எல்லாம் வாட்டி வதைத்திருக்கும்.

இடிசலில், இருட்டில் அவர்கள் உழல, வெளி(யில்)ச்சத்தில் மொத்தக் குடும்பமும் இடிந்து இருண்டு போய்க் கதறிக் கொண்டிருக்கும். பித்துப் பிடித்தது போல் அரற்றிக் கொண்டும், சாமியைக் கும்பிட்டுக் கொண்டும், சாமிக்கே சாபம் கொடுத்துக் கொண்டும், விலகிய மாராப்புச் சீலையை மேலிழுக்கத் திராணியின்றியும், பசிக்கு அழும் குழந்தையை சமாதானப்படுத்த மனமும் இன்றி இருந்திருப்பார்கள்.

பசியென வயிறு கதறிய போதெல்லாம், அய்யோ அவர்கள் அங்கு சோறின்றிக் கிடக்க இங்கே நான் வயிறு நனைப்பதா என்ற குற்ற உணர்வு ஆட்கொண்டிருக்கலாம். நாட்கள் நகர நகர நம்பிக்கையும், துக்கமும் அவர்களை விட்டு நகர ஆரம்பித்திருக்கலாம்.

இந்த முறை உயிர் தப்பினால் போதும் இனி இந்த வேலையே வேண்டாம் எனவும், இந்த வேலை இல்லையெனில் வேறு என்ன வேலை எனவும் பல முடிவில்லா கேள்விகளும், குழப்பங்களும் சூழ்ந்து வதை செய்யும் இது ஒற்றை நிகழ்வா? இது போன்று எத்தனை எத்தனை நிகழ்வுகள்? வகைகள் வேறாக இருக்கலாம், வதை ஒன்று தான்.

நிரந்தர வேலை இல்லை, நியாயமான கூலி கிடைக்காது. உயிருக்கு உத்திரவாதமும் இல்லை என்பது தெரிந்துமே காலம் வருமா? காலன் வருவானா? என்று தினம் தினம் குகை என்னும் நெருப்பில் தவமிருப்பவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள்.

அமெரிக்காவின் உட்டாக் நாட்டில் அமைந்துள்ளது நட்டிபட்டி குகை. குகை என்றால் இருட்டு வழியில் தலையில் ஹெட் லைட் எனப்படும் டார்ச் கட்டிக் கொண்டு சௌகர்யமாக ஒருவர் பின்னால் ஒருவர் நடக்க, ஆங்காங்கே தலையைக் குனிந்தும், உடலை சுருக்கியும் வளைந்து வளைந்து செல்லும் குகை அல்ல அது. ஒரு ஆள் நீளவாக்கில் கைகளிரண்டையும் நெஞ்சோடு அணைத்து குப்புறப் படுத்துக் கொண்டு பல்லி ஊர்வது போல ஊர்ந்து செல்லக் கூடிய அளவே உயரமும், அகலமும் கொண்ட குகை. 1960 ஆம் ஆண்டில் டேல் க்ரீன் என்பவரால் இந்தக்குகை கண்டறியப்பட்டது. 2004 ஆம்  ஆண்டுவரை சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு 5000 பேர் இந்தக் குகைக்குள் ஊர்ந்து உள் சென்று  வெளி வந்ததாக தரவுகள் கூறுகின்றன.

2004 ஆம் ஆண்டு உள்ளே மாட்டிக் கொண்ட  இரண்டு இளைஞர்களை மீட்புப்பணியினர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றி உள்ளனர். குகைக்குள் இருக்கும் பாதுகாப்பு பற்றி ஐயம் மற்றும் அதிருப்தி ஏற்பட்டதால் அந்த ஆண்டே நட்டிபட்டி குகை மூடப்பட்டது.

பல சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் மீண்டும் 2009 மே மாதம்  நட்டிபட்டி குகை திறக்கப்பட்டது.

சிறு வயது முதலே கேவ் டைவிங் எனப்படும் குகைப் பயணத்தில்  பேரார்வம் மிக்கவர்களாக இருந்தனர் அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயது  ஜான் எட்வார்ட் ஜோன்சும் , அவரது 23 வயது தம்பி ஜோஷும். எட்வார்டின் மனைவி எமிலி. அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருந்தது.

விடுமுறையை களிப்போடு கொண்டாட விரும்பிய  ஜோன்ஸ் 24.11.2009 அன்று எமிலி, ஜோஷ் மற்றும் சில நண்பர்கள் உட்பட ஒன்பது பேருடன்  இரவு எட்டு மணியளவில்  நட்டிபட்டி குகை இருக்கும் இடத்தை அடைந்தார்.

அந்தக் குறுகிய குகைக்குள் குப்புறப் படுத்து ஊற ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை எந்த விதமான சிரமமும் இல்லாமல்தான் இருந்தது அவர்களுக்கு. சுமார் 150 அடி ஆழம் வரை சென்று விட்டனர். முன்னால் ஜோன்சும் பின்னால் ஜோஷும்,நண்பர்களும் வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் பர்த் கேனல் என்னும் மிகச்சிறிய துளை வழியாக உள்ளே சென்று மறுபுறம் வெளியே வர முடிவு செய்கின்றனர் ஜோன்ஸ், ஜோஷ் மற்றும் சில நண்பர்கள். துளை மிகவும் சிறியதென்பதால் அனுபவம் மிகுந்தவர்கள் மட்டுமே உள்ளே சென்று வெளியே வரமுடியும்.

இருட்டில் சுரங்க வழித்தட வரைபடத்தில் கவனம் தப்பியதால் பர்த் கேனல் என நினைத்து முன்னால் இருந்த வேறொரு துவாரத்தில் நுழைந்து விடுகிறார் ஜோன்ஸ். உள்ளே சிறிது தூரம் சென்ற பின்னர்தான் தெரிகிறது அது பர்த் கேனல் இல்லை என்று. சற்று நேரத்தில் ஜோன்சுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கு வழியே இல்லை என்றும் புரிகிறது. எப்படியாவது திரும்ப இடம் கிடைக்குமா என்று இருந்த இடத்தில் இருந்து சற்று முன்னேறிச் செல்கிறார். அதுதான் அவர் செய்த தவறும் கூட.

அவருக்கு முன்னால் செங்குத்தான பள்ளம் ஒன்று தெரிகிறது. அந்தப் பள்ளத்தில் வழுக்கி விழுந்து தலைகீழாக சிக்கிக் கொள்கிறார் ஜோன்ஸ். கைகளிரண்டும் நெஞ்சோடு கட்டப் பட்டிருந்ததால் நகரவும் முடியவில்லை. ஜோன்ஸ் சிக்கிக் கொண்டதை பின்னால் வந்த அவரது சகோதரர் ஜோஷ் உணர்ந்த நொடியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அண்ணனின் கால்களைப் பிடித்து இழுத்துப் பார்கிறார்.  முடியாத நிலையில் மேலே சென்று மீட்புப் பணியினரைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைக்கிறார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த சூசை பல தொடர் சிரமங்களுக்கு இடையிலும்  குகைக்குள் பயணப்பட்டு ஜோன்ஸ் இருந்த இடத்தை அடைகிறார்.

“ ஹாய் ஜான்,

“ஹாய் சூசை, தேங்க்ஸ் பார் கம்மிங், ஐ ரியல்லி ரியல்லி வான்ட் டு கெட் அவுட் ஆப் ஹியர் எப்படியாவது தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பிக்கையோடும், பிரார்த்தனையோடும் பேசியிருக்கிறார் ஜோன்ஸ்.

ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உதவிக்கு வந்தும் புல்லிங் சிஸ்டம் மூலம்  எவ்வளவு முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

கடைசியாக மனைவி எமிலியிடம் எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடுங்கள் என்று பரிதாபமாகக் கூறி இருக்கிறார். இதை விடக் கொடுமையான சூழலை எந்த ஒரு கணவனும் மனைவியும் சந்தித்திருக்கவே முடியாது. 

இருபத்தி எட்டு மணிநேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஜோன்ஸ் தன மூச்சை நிறுத்திக் கொண்டார். ஒரு உயிரை காவு வாங்கிய பின்னர்  அந்தக்குகை நிரந்தரமாக தன வாயிலை மூடிக் கொண்டது.                       

ஒருவனுக்கு பிழைப்பு இன்னொருவனுக்கு பொழுது போக்கு......      எடுக்கப்படும் தவறான முடிவுகளால் தானாக வாங்கிக் கொள்ளும் ஒரு கூட்டம், வேறு வழியேயின்றி வருவதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இன்னொரு கூட்டம்...... வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.

 

     

ஒரு சொல் போதும் - ஈரோடு சர்மிளா

 

                


  

சொற்கள் மிகவும் மகத்தானவை.  ஒரு சொல் போதும் வாழ. ஒரு சொல் போதும் வீழ. ஆதலால் சொற்களை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

மிகப்பெரிய வன்முறைகள் நிகழும் இடம் யாதென கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லுவார்கள். சாதி, சமயம், மதங்கள் , ஏழை, பணக்காரன், ஆண், பெண் போன்ற பேதங்களின் அடிப்படையில் பல வன்முறைகள் நடப்பதைத் தினந்தோறும் காண்கிறோம். இவை எல்லாவற்றையும் விட வலி மிகுந்த வன்முறை என்பது வகுப்பறை வன்முறை தான்.

குழந்தைகள் மீது மிகப்பெரிய ஆதிக்கத்தினைச் செலுத்துபவர்கள் ஆசிரியர்கள். குழந்தமையைக் குழி தோண்டிப் புதைப்பவர்களும் ஆசிரியர்கள் தான். நிராகரிப்பு ,அலட்சியம், நக்கல், நையாண்டி ஏளனப்பார்வை போன்றவற்றை சர்வசாதாரணமாக வகுப்பறைகளில் நிகழ்த்துபவர்கள்.

ஒரு குழந்தை ஆசிரியர் அடிப்பதைக் கூட மறந்து விடும். வார்த்தையால் அடித்ததை வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை. பிராய்லர் கோழிகளை வளர்ப்பதைப் போல் குழந்தைகளையும் வளர்க்க விளைகின்றனர்.

குழந்தைகள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் தண்டனைகள் கட்டாயம் உண்டு விசாரணைகள் தான் இல்லை. விசாரணை செய்தாலும் பதில் என்னவோ கேள்வி கேட்பவர்கள் உடையதாகவே ஆகிவிடுகிறது.

உதாரணமாக உரிய நேரத்தில் வகுப்பிற்கு வரவில்லை என்றாலும் வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்றாலும் பக்கத்தில் பேசி சிரித்து விட்டாலும் கூட வகுப்பிற்கு வெளியே மாணவர்களை  நிற்க வைக்கும் ஒரு பொதுவான விதி இருக்கிறது.

பொதுவாக மாணவர்கள் என்றாலே தவறுகள் மட்டுமே செய்யக்கூடியவர்கள் என்ற பொது புத்தி பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு இருப்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். உதவாக்கரை, திருந்தமாட்ட, உருப்படமாட்ட, முட்டாள் முட்டாள், மக்கு, இடியட் ,ஸ்டுப்பிட் போன்ற அர்ச்சனை வார்த்தைகளின் பட்டியலை அடுக்கலாம். வார்த்தைகளை மிக கவனமாகக் கையாள வேண்டிய இடம் வகுப்பறைகள் தான். சில வார்த்தைகள் குழந்தைகளின் மனங்களைக் மிகக் கடுமையாகக் காயப்படுத்தும் என்பதைக் கூட உணராமல் தினம் தினம் வதைக்கின்றனர்.

குழந்தைகளின் மனங்களை உற்சாகப்படுத்தி உயிரூட்டுபவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள். ஆஹா, அருமை, சிறப்பு, அற்புதம்,நன்று  போன்ற வார்த்தைகளில் தான் எத்தனை ஜீவன் இருக்கின்றன.

 "இனிய உளவாக இன்னாத கூறல்

 கனியிருப்ப காய் கவர்ந்தற்று

என்ற வள்ளுவனின் இந்த குறளை ஒவ்வொரு ஆசிரியரும் மந்திரத்தைப் போல் உச்சரிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும் ஆசிரியர்களே உன்னதமானவர்கள்.இவர்களே குழந்தைகளின் அற்புதமான உலகத்தினை மேலும் மேலும் அழகாகும் தேவதைகள்.

நாம் எதிர்பார்ப்பதெல்லாம் எல்லா குழந்தைகளும் டாக்டராகவோ என்ஜினியராகவோ வேண்டியதில்லை. மகிழ்ச்சிகரமான, ஆரோக்கியமான உயர்ந்த நற்சிந்தனைகளோடு நல்ல மனிதர்களாக நாளை வாழ வேண்டும் என்பதே.கவலைப்படதே நான் இருக்கிறேன் என்ற ஆறுதல் சொல் ஒன்று போதும் மனித மனங்கள் வாழ. ஆனால் பல ஆசிரியர்கள் தொடர்ந்து குழந்தைகளின் தன்னம்பிக்கையை மழுங்கடிக்கும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டுள்ளனர்.

எத்தனையோ பொருளாதார நெருக்கடிகளைச் கடந்து தமது குழந்தைகள் நன்றாக படித்து முன்னேறிவிட மாட்டார்களா என்ற பல பெற்றோர்களின் கனவுகளை ஒரு சொல்லால் கலைத்து விடுகின்றனர். குழந்தைகள் பெற்றோரிடத்தில் தலைவலி, வயிற்று வலி, சளி என்று ஏதாவது காரணத்தைக் காட்டிப் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதையே பெரும்பாலான குழந்தைகள் செய்கின்றனர். இன்றைக்காவது ஆசிரியர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கம் தான் அதிகம். பள்ளிக்குச் செல்வதைக் காட்டிலும் தனக்கு காய்ச்சலோ, தலைவலியோ, வயிற்று வலியோ போன்ற வியாதிகள வந்தாலும் கூடப் பரவாயில்லை என்ற நிலைக்கு ஆளாகிறார்கள்.

ஆசிரியர்களுக்கு அன்பைப் போல மிகப்பெரிய ஆயுதம் வேறொன்றுமில்லை. எப்பேர்பட்ட குழந்தைகளையும்  வசப்படுத்திவிடும் பேராற்றல் கொண்டது. சிறு புன்னகையோடு அன்பில் நனைந்த வார்த்தைகளால் மட்டுமே மாணவ சமூகத்தை மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல முடியும். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது காட்டும் பேரன்பு தான் அவர்களை மிகப்பெரிய உச்சங்களைத் தொடவைக்கும்

ஆதலால் அன்பு செய்வீர்.‌


கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...