Friday, March 1, 2024

கண்ணீர்க் குறியீடு - ராதா மனோகரன்


த்து வயது வரை பறந்து திரிந்த வானம்பாடி அந்தச் சுட்டிப் பெண். புத்திசாலியாகவும்சாதுர்யமாகவும்துடுக்காகவும் இருந்ததினாலேயே எல்லோர் கவனத்தையும் ஈர்த்த மகிழ்வான குழந்தை அது. 

ஆறாம் வகுப்பில் மருத்துவத்திற்கான அடிப்படைப் பயிற்சி வகுப்பில் சேர்க்க  பள்ளி மாற்றுவதாக மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்க வந்தார் அவளது தந்தை. அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு விளக்கம் சொல்ல ஆரம்பித்தேன். 

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு என்பது உடல் நிலையிலும்மன நிலையிலும்கற்றல் சூழலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் பருவம். 

உடலில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள் குழப்பத்தையும்குறுகுறுப்பையும் தரும். மனநிலையில் அவர்கள் இப்போது குழந்தையும் கிடையாதுஅண்ணன் அக்கா போன்ற டீன் ஏஜரும் கிடையாது.  

In school…Pinafore to skirt & top, primary to secondary class, general science is divided into physical science and biological science, social studies becomes history and geography, short size note book turns into long size, geometry, atlas, the list goes on…… they are neither children nor grownup. They stand in the middle to understand the transition which is not that easy. 

இத்தனை மாற்றங்களுக்கும் இடையில் பள்ளி மாற்றம் மற்றும் ஏழு வருடங்கள் கழித்து படிக்கப் போகின்ற மருத்துவப் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகள், தாங்காது சார் அந்தப் பிஞ்சு என்று எவ்வளவு சொல்லியும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த அந்தச் சிட்டுக்குருவியின்  தலையில் பனங்காயை வைக்கத் தயாராகி விட்டார் அவளின் அப்பா. 

கடைசி நாளன்று அந்தச் சுட்டிப் பெண் துண்டுக் காகிதத்தில் கொடுத்த ஐ லவ் யூ கிரீட்டிங் கார்டும்கன்னத்தில் கொடுத்துச் சென்ற முத்தமும் பத்திரமாக இருக்கின்றன.  “மேம்நான் புது ஸ்கூல் போறேன் பிடிக்கலைன்னா திரும்பி வந்துருவேன் என்று எப்பவும் போல் உற்சாகமாக கை அசைத்துச் சென்றது.

அடுத்தடுத்து இரண்டு மூன்று முறை அவளது பெற்றோரை சந்திக்க நேர்ந்த பொழுது துடுக்குத்தனமெல்லாம் குறைந்துவிட்டது ஆனால் இன்னும் செட்டில் ஆகவில்லைபிரெண்ட்ஸ் செட் ஆகவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் பெரிதாக சந்திக்கும் வாய்ப்பும் அமையவில்லை. 

ஐந்து வருடங்களுக்குப் பின் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. சில பல குறைகளை கூறிவிட்டு நேரில் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். சந்திக்க வரும் பொழுது குழந்தையையும் உடன் அழைத்து வாருங்கள் என்று கூறினேன். ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு அழைத்து  வருவதாகக் கூறினார். 

ஞாயிறு அன்று சற்று தாமதமாக வந்தார்கள். குழந்தை பையைத் தோளில் மாட்டிக் கொண்டு யூனிபார்ம் சல்வாரில் இருந்தாள். வாடிய கீரை போன்று இருந்த அவளைப் பார்த்ததும் என்னால் பழைய உருவத்தை எடுத்து விட்டு இந்த உருவத்தை கண்ணில் பொருத்திக் கொள்ளவே முடியவில்லை.  

யார்கிட்டயும் பேசறதில்லைங்க,  வந்தா ரூமுக்குள்ள போய் கதவ சாத்திக்குவாவாரத்துல நாலு நாள் தலவலிவயித்து வலின்னு படுத்திருப்பாநோட்டுல எந்நேரமும் படம் போட்டுக்கிட்டே இருப்பா... நாங்களும் புத்தி சொல்லியும் பாத்துட்டோம்மெரட்டியும் பாத்துட்டோம்கோவில் குலத்துக்கும் கூட்டிட்டுப் போனோம் என்ன பண்றதுன்னே தெரியலைங்க மேம் அப்பாவின் குற்றப்பத்திரிகை மிகுந்த ஆதங்கத்துடன் வாசிக்கப்பட்டது. 

ஓவியப் போட்டிபாட்டுப் போட்டிநடனம்சிலம்பம்தடகளம் என புகுந்து விளையாடியவள்ஆசிரியர் வகுப்புக்கு சற்று தாமதமாகச் சென்றால் இடுப்பில் கை வைத்துகண்களை உருட்டி  வகுப்பையே கட்டி ஆண்டுகொண்டிருந்த  ஆளுமை,  பள்ளியில் எந்த ஆசிரியருக்குப் பிறந்த நாள் என்றாலும் சராமாரியாக நோட்டைக் கிழித்து கிரீட்டிங் கார்டு செய்து அதைத்  தூக்கிக் கொண்டு பின்னால் சுற்றிய அந்தப் பிள்ளை முகத்தில் சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

அவரை வெளியில் அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசத் துவங்கினேன். நீண்ட கடும் முயற்சி தேவைப்பட்டது அவளைப் பேச வைக்க. இடையிடையே அவர் எட்டிப் பார்க்கும்போதெல்லாம் ஒரு சங்கடம் தெரிந்தது அவள் முகத்தில். 

தினமும் காலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 வரை வகுப்புகள். எட்டு மணிக்கு வீடு திரும்பினால் வீட்டுப் பாடம் பின்னர் தூக்கம். எங்கிருந்து பேசுவதற்கு நேரமும்சக்தியும்ஆர்வமும் இருக்க முடியும்

தனக்கு டாக்டர் ஆக விருப்பம் இல்லை என்பதைப் பல வழிகளில் தெரிவிக்க முயற்சி செய்து,  எமோஷனல் கில்ட் ட்ரிப்பில் பயணிக்க முடியாமல் தோற்றுப் போனதால் வெறுப்பை வேறு விதமாக காட்டத் துவங்கி இருக்கிறாள். 

மேத் ஸெல்ப் ப்ரிபரேசன்  நோட்டில் எங்கெல்லாம் கூட்டல் குறியீடு வருகிறதோ அங்கெல்லாம்   ஸ்டேன்டிங் லைனுக்குப் பதிலாக கண்ணீர்த் துளிகளை  வரைந்து சிவப்பு வண்ணமிட்டு வைத்திருக்கிறாள். எவ்வளவு கொடூரமான வலி இருந்திருக்கும்துடித்துத்  துவண்டுபோய் அமர்ந்திருக்கிறது பிறப்பில் மகிழ்வான அந்த ஆன்மா. அவளிடம் பேசி கண்டிப்பாக உனக்கு உதவி செய்கிறேன் என்று உறுதியளித்த பின்னர்தான் வறண்ட கண்களில் சற்று உயிர்ப்பு வந்தது. 

ஒரு குழந்தை பெற்றோர் சொல்கேட்டுஅவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப  நடக்கும் வரை சமத்துக் குழந்தையாகக் கொண்டாடப்படுகிறது. அதே குழந்தை தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தினால் பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது. எல்லாவற்றையும் குழந்தையின் விருப்பத்திற்கு விட வேண்டும் என்று அர்த்தம் எடுக்க வேண்டியதில்லை. நியாயமான விருப்பங்களுக்கு செவி மடுக்கலாமே என்ற ஆதங்கம்தான். விருப்பத்தை ஏற்றுக் கொள்ளா விட்டாலும்விருப்பமின்மையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் இங்கு வேண்டுகோள்.

தங்களுக்குள் இருக்கும் ஆணித்தரமான விருப்பம் ஒன்றை குழந்தைக்குள் திணிக்க அதற்கு வேறு வேறு விதமான தேவையற்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. கேட்ட பொருள்கேட்காத பொருள்தேவைப்படுவதுதேவைப்படாதது எல்லாமே கொடுக்கப்படும். பின்னால் சொல்லிக் காட்ட வசதியாக இருக்கிறது என்றும் சொல்லலாம். . 

“இவ கேட்டா எல்லாம் பண்ணேன்வந்து பாருங்க வீட்லஇவளுக்குத் தனி ரூம்ஏ.சி.லேப்டாப்படிக்க அத்தனை புத்தகங்கள்டிரஸ்நகை இப்பவே 50 பவுனுக்கு மேல சேர்த்து வெச்சிருக்கேன்... என்ன குறை வெச்சேன்னு சொல்லச் சொல்லுங்கபோன மாசம் சித்தப்பா வீட்ல கார் மாத்தினாங்கன்னு இவ பொக்குன்னு போயிருவான்னு என்னோட சக்திக்கு மீறி லோன் போட்டு கார் எடுத்தேன்.... இவ நல்லதுக்குதான சொல்றோம்பிடிவாதம் பிடிச்சா எப்படி மேடம்?”

கேட்டார்களாஅப்படியே கேட்டிருந்தாலும் தேவையற்றதையும்சக்திக்கு மீறியதையும் ஏன் தரவேண்டும்அவ்வாறு கொடுக்கப்படும் எல்லாமே டெம்ப்ரரி ப்ளஷர் என்று சொல்லக் கூடிய தற்காலிக சந்தோசம் மட்டுமே. பொருட்களின் மீதான பற்றை வளர்க்கக் கூடிய மெட்டீரியலிஸ்டிக் வாழ்க்கை முறைக்குள்  வலிந்து தள்ளி விட்டு பதிலுக்கு அவர்களின் மேற்படிப்பைஎதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில் கை வைக்கப் படுகிறது .குழந்தை அந்த உரிமையைக் கோரினால் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் சொல்லிக் காண்பிக்கப்பட்டுகுடும்ப சூழலும் இலவச இணைப்பாகக் கூறப்படும். அதன் பின்னர் அந்தக் குழந்தை எமோஷனல் கில்ட் டிரிப்புக்குள் தள்ளப்படுகிறது.  பதின் பருவத்தில் கில்ட் டிரிப்பை விட கடினமான தண்டனை வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அதன்பின் அந்தக் குழந்தையின் மனக் கதறலைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இங்கு யாருக்கும் காதுகள் கூர்மையாக இருப்பதில்லை.அப்படியான சூழல் தான் இங்கும்.

அவள் அப்பாவுடன் நீண்ட உரையாடல் தொடர்ந்தது. “நல்லாப் படிக்கிற புள்ளைன்னுதான டாக்டர் ஆக்க நினைச்சேன்நம்ப குடும்பத்தில் ஒரு புள்ள டாக்டர்ன்னா கௌரவமா இருக்கும்ன்னு நினைச்சேன் புலம்பிக் கொண்டிருந்தார்.  

இறுதியாகஉங்கள் பெண் மருத்துவப் படிப்பில் சேரும் வரை இருப்பாளா என்று தெரியவில்லைஅப்படியே இருந்தாலும் உயிரை மட்டும்  கையில் பிடித்து, உயிர்ப்பை விற்றுத்தான் மருத்துவர் என்ற பட்டத்தைப் பெற்று வருவாள். அந்தக் குழந்தையின் மனப் போராட்டத்தில் இவ்வளவு தூரம் தாக்குப் பிடித்ததே கஷ்டம். உங்கள் பெண் வேண்டுமென்றால் முதலில் அவளை நீட் பயிற்சி வகுப்பில் இருந்து வெளியே எடுங்கள். டாக்டர் தான் வேண்டுமென்றால் அவளின் எந்த முடிவுக்கும் தயாராக இருங்கள் என்று சொன்ன பின்னர்தான்  அவர் முகத்தில் அதிர்ச்சி அலை பரவுவதை உணர முடிந்தது. சரீங்க மேடம் என்றார் தொய்வான குரலில். 

அளவாக சிந்திய புன்னகையுடன் தோளில் பையை மாட்டிக் கொண்டு கையசைத்துச் சென்றது குழந்தை. பொலிவிழந்து சுருங்கிப் போய் இருந்த அந்த வண்ணத்துப் பூச்சியின் இறகுகள் விரியும் என்ற நம்பிக்கையுடன் நானும் விடை கொடுத்தேன்.

குழந்தை புத்திசாலியாக இருப்பது குற்றமாஅதற்காக அதன் உரிமையைப் பறிப்பது நியாயமா?


ராதா மனோகரன்

2 comments:

  1. உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு உயிர்ப்பை விற்றுத்தான் மருத்துவம் படித்து வருவாள். பெற்றோரின் மனக்கண்களை திறக்க வைக்கும் வரிகள்.. சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள் மா

    ReplyDelete
  2. எந்தக் குழந்தையின் சிறகையும் இனி இந்தக் கட்டுரையைக் காட்டி விரிக்கலாம்.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...