Sunday, November 12, 2023

அம்மா சிரிக்கிறாள் - யசோதா பழனிச்சாமி , ஈரோடு.

 


                                              

இரவு முழுவதும் சிறுநீரகப் பையில் அடைந்து கிடந்த யூரின், வெளியே வர முயற்சிக்கும் பொழுது, விடியற்காலை தூக்கத்தை கலைத்திருந்தது.


யூரினை அடக்க முடியாமல் அரை விழிப்பு நிலையில் எழுந்து பாத்ரூம் கதவை திறந்து அறைந்து சாத்தி விட்டு உட்காரும் போது, சற்றும் வெட்கமில்லாமல்  எட்டிக் குதித்து விழுந்தது என்னுடைய பரம எதிரி. எனக்கு ஏற்பட்ட பயத்தில் நாக்கு உலர்ந்து,  யூரினை அடக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் தவித்து கதவை திறந்து  வெளியே ஓடி வந்து 'அம்மா,அம்மா' என்று சத்தம் போட்டுத் திரும்பி பார்த்தேன். அவள் படுத்திருந்த இடம் இருள் சூழ்ந்து, அமைதியாக இருந்தது.


கண்ணீரை அடக்கி கொண்டு படுக்கையறைக்குச் சென்ற போது கணவரும், குழந்தையும் ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.


அம்மா உயிரோடிருந்தால் இந்நேரம் எழுந்து வந்து என் பரம எதிரியான பல்லியை விரட்டி இருப்பாள். அவள் பல்லியை எப்போதும் அடித்துக் கொல்ல மாட்டாள். 


'அது பாட்டுக்கு ஊறிட்டு போகுது. பல்லியை ஆண்டவன் மனிதனோடு இருக்க தான் படைச்சு இருக்கான் அது எங்கே போகும்?' எனக் கேள்வி கேட்பாள்.


"ஏம்மா, பல்லி சாப்பாட்டில் விழுந்தால் விஷம்னு சொல்லுறாங்க. பள்ளிக்கூடத்தில் மதிய சாப்பாடு செய்யறப்ப சாப்பாட்டுப் பாத்திரத்தில்,பல்லி விழுந்து எத்தனை புள்ளைங்க  மயங்கிப் போறாங்க! நீ என்னடானா அந்த பல்லிக்கு இப்படி வரிந்து கட்டிட்டுப் பேசற!"


"ஹாரி மில்லர்னு  ஒருவர் பல்லியை துண்டு போட்டு மிளகுப் பொடி ,உப்பு போட்டு சாப்பிட்டு காட்டறேன் சவால் விட்டதாக நானும் படிச்சு இருக்கேன். அந்த பல்லிபாட்டுக்கு சுவத்துல ஊறிட்டுப் போவுது உன்னை என்ன செய்யுது போ வேலையைப் பாரு' என திருப்பி பேசமுடியாதபடி செய்து விடுவாள்.


இரவு நேரங்களில் பூஜை அறைக்கு பக்கத்தில் சொச்,சொச் என பல்லி கத்தும். அப்போது 'கண்ணு அந்த இடத்தில் இந்நேரத்துக்கு பல்லி கத்தினா ஏதாவது கெட்ட காரியம் வந்து சேரும். விடிஞ்சா என்ன வரப்போவுதோ! என அம்மா சொல்லும் போது, "உன்னுடைய மூட நம்பிக்கைக்கு அளவே இல்லம்மா. அது தன்னுடைய இணையை அழைக்கவும், பசிக்காகவும் கத்துது. உன் பல்லி சயனத்தை தூக்கி தூரப்போடு" என  அம்மாவிடம்  சொல்லிச் சண்டை போட்ட இரண்டு நாளில் அம்மா சொன்ன மாதிரியே இறப்பு செய்தி வந்து சேரும்.


'நான் அப்பவே சொன்னேனில்ல  பல்லி கத்துவது நல்லதுக்கில்லைனு, பசிக்கு கத்துதாம் கிழவி பேச்சு கிண்ணாரக்காரனுக்கு ஏறுமா'னு!  பேசியபடியே, அவங்க நம்பிக்கை ஜெயித்தது நினைத்து ஒரு பார்வையை வீசும் போது எனக்குள் எரிச்சல் வரும்.


எனக்குள்ளும் நாளைடைவில் பல்லி கத்தினால் ஏதாவது வந்துடுமோ என்ற  பயத்தையும் அம்மா கொடுத்து விட்டாள். எண்ணங்கள் தானே எந்த நிகழ்வையும் தீர்மானம் செய்கிறது.


அம்மா, அப்பா இறந்து போனதிலிருந்தே மிகவும் மாறிப் போனாள்.  எறும்புகள் வீட்டுக்குள்  வரிசையாய் ஊர்ந்து சென்றாலும் கூட, அந்த இடத்தில்  எறும்பால் அவளுக்கு ஏதாவது பாதிப்பு இருந்தால் தான் எறும்பை கொல்ல மருந்து போடுவாள். பாதிப்பு இல்லை என்றால் 'அட, அது பாட்டுக்கு எங்கேயோ போயிட்டு போவுது. வரிசையாய் எவ்வளவு அழகா ஊர்ந்து போகுது..அந்த  வரிசையை எப்படிக் கலைப்பது' எனச் சொல்வதை கேட்கும் போது எனக்கு கோபம் வரும்.


ஒரு நாள் உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தார்கள். காலையில் எழுந்து அடுப்பில் சூடு தண்ணீர் வைக்கப் போன  உறவினர், பல்லி ஒன்று அடுப்புக்கடியில் இருந்து ஊர்ந்து செல்வதைப் பார்த்து, அவர் போட்ட கூச்சலில் தூங்கிட்டு இருந்தவர்கள் எல்லோரும் பயந்து ஓடி வந்து, 'என்ன !என்ன! என்று கேட்கும் போது, அவருக்கு பேச நா எழாமல்  அங்கே, அங்கே ப…ப..ப..பல்லி' எனக் கையை காட்டவும் எல்லோருக்கும் சிரிப்பு. எங்கம்மாவோ, "கண்ணு எங்க வீட்டு அடுப்படியில் பல்லி  எங்க வேணாலுமிருக்கும். நாம தான் பார்த்துப் போகணும்," என அம்மா  சாதாரணமாக சொல்லிட்டு  போவதை கேட்டு, என்னிடம் வந்த உறவினர் கண்ணு அம்மா சொல்லிட்டுப் போறாங்க பல்லி வராம இருக்கிறதுக்கு சுவத்தில ஒட்டறதுக்கு பட்டனாட்டம்  கடையில விக்கறாங்க. அதை வாங்கியாந்து ஒட்டு பல்லி வராது'னு சொன்னார். நான்  அடுத்த நாளே  கடைக்குச் சென்று வாங்கி  வந்து  சுவற்றில் ஒட்டவும், வெள்ளையாய் அங்கங்கே ரேடியோ பட்டனாட்டம் காட்சியளித்தது.


அடுத்த நாள் காலையில் பட்டன் வைத்த இடத்தை பல்லி கடந்து போவதை பார்த்து எனக்கோ வெறுப்பு. அம்மாவுக்கு ஒரே சிரிப்பு.


அதன் பிறகு  சில நேரங்களில் கோபம் வந்து ஹிட் எடுத்து பல்லி மீது ஸ்ப்ரே செய்து, மயங்க வைத்து முறத்தில் போட்டு தூக்கிப் போட ஆரம்பித்தேன்.


அப்போதும் அம்மா "ஏங்கண்ணு வேண்டாத வேலை. அது உன்னை என்ன செய்யுது ஆள் நடமாட்டம் இருந்தால் வராது.


நேத்து பொழுதோட வாசல்படி மேல் உட்கார்ந்து இருந்தேன் அப்போ என் முதுகில் பல்லி விழுந்து ஓடுது. எனக்கு ஒண்ணுமே ஆகலை." இதை பெருமையாய் சொல்லி பூரித்து போனாள் அம்மா.


ஒரு நாள் மாலை நேரத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போது "கண்ணு, நம்ம வீட்டுல இத்தனை பல்லி இருக்கு ஒரு மரப்பல்லியைக் கூட காணோம் அது வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க என ஏக்கத்துடன் சொன்னாள். வரவர இந்த பல்லிகளோட தொந்தரவு தாங்கமுடியல என நான் சொல்லும் போது, பல்லி வீட்டில் இல்லனு வீட்டையே வித்துட்டு போன கதை எல்லாம் உலகத்தில நடக்குது நம்ம ஊட்டுல பல்லி இருக்கேனு சந்தோஷப்படு என்பாள்.


இவ்வளவு இரக்கம் படைத்த அம்மாவை, ஆண்டவன்  எங்களுடன் அதிக நாட்கள் வாழ விடவில்லை. சின்ன உயிரைக் கூட நேசித்த அவளை இறைவன் அதிகம் நேசித்து விட்டான் போலும் விரைவில் எங்களிடமிருந்து  அழைத்துக் கொண்டான்.


அம்மா படுத்திருந்த கட்டிலை  ஒரு நாள் வெளியே  எடுத்து வந்து  வெயிலில் போட்ட போது, அம்மா ஆசையாய் கேட்ட மரப்பல்லி கட்டிலில் இருந்து விழுந்து ஓடியது.


'அம்மா..அம்மா..அம்மா...ம்மாம்மா.."எனது மகள் என்னைத் தட்டி எழுப்பினாள். நினைவு களைந்து எழுந்தேன்.


"ஏண்டாமா கத்தற". 


"ஒண்ணுக்கு வருதுமா".


ஐந்து வயது மகளை அழைத்துக் கொண்டு பாத்ரூம் கதவை பயத்துடன் திறந்தேன். நல்ல வேலை பல்லி இல்லை.


அவளை யூரின் இருக்க வைத்து, கதவை சாத்தும் போது மகளின் காலுக்கடியில் பல்லி ஓடவும் நான் சத்தமிட்டேன். 'அடச் சே ! இந்தப் பல்லியைப்



பார்த்தா கத்தற...நீ பயந்தாங் கொள்ளியம்மா  ஹ..ஹ..ஹ…ஹ என என் மகள் சிரித்த போது.


என் அம்மா என்னை கூப்பிட்டுச் சிரிப்பது போல் நெகிழ்ந்து நின்றேன்.



முறுக்கு முறுக்கிக் கொள்ளாம இருக்கணுமே! - யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

 



நான் வழக்கமாக செல்லும் சாலைகளின் ஓரத்தில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல் திடீரென புதியதாக இனிப்பு கடைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சாலைகளில் செல்வோரின் கவனத்தை ஈர்த்தது போல் என்னையும் திரும்பி பார்க்க வைத்தது.

எனக்கு அந்த கடைகளைப் பார்த்ததும் என்ன வியாபாரம் ஆகிவிடப் போகிறது. "ஒரே சாலையில் பதினாறு கடைகள் இருக்கே என்கிற ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பண்டிகையை வைத்து சம்பாதிக்க நினைக்கும் அவர்களின் நம்பிக்கை என்னை வியக்க வைத்தது. இவ்வளவு கடைகளிலும் வியாபாரம் நடக்கிறது என்றால் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தானே காரணமாக இருக்கும்..வீட்டில் பலகாரங்கள் செய்வதெல்லாம் மக்களின் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்புடையதாக இல்லையோ? யூடியூப் சேனல்கள் விதவிதமான பலகாரங்களை செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அதைப் பார்த்து பெரும்பாலும் ரசிப்பதோடு சரி. விலைக்கு வாங்கி விட்டால் வேலை முடிந்து விட்டது. இதில் யாரு உட்கார்ந்து பலகாரம் செய்யறதுனு அக்கம் பக்கம் பேசுவதும் காதில் விழுந்த நேரத்தில் என் பால்யத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை..

யூடியூப் சேனல் இல்லாத காலத்தில் தலைமுறை தலைமுறையாக காதால் கேட்பதையும், கண்ணால் பார்ப்பதையும் வைத்து பலகாரங்கள் செய்வார்கள். தீபாவளி நாளில் பெரும்பாலான வீடுகளில் முறுக்கு, லட்டு, அதிரசம், மைசூர் பாகும் தான் சுவைக்க கிடைக்கும். 

தீபாவளி பண்டிகைனாவே, பட்டாசு வெடிக்கிறோமோ இல்லையோ, முறுக்கு கடிக்காத தீபாவளி பண்டிகையாகவே இருக்காது.. அந்த நாளில் இருந்து இந்த நாள் வரைக்கும் வீட்டில் சுடும் முறுக்கு மட்டும் எத்தனை சாப்பிட்டாலும் சலிப்புத் தட்டுவதில்லை. அதில் அன்பையும் கலந்து செய்வதால் கூட இருக்கலாம்.

சுட்டு வைத்த முறுக்கு தீரும் வரை , வீட்டில் சோறு குறைவாக செய்தால் போதும். காரணம் எந்த நேரமும் முறுக்கும் கையுமாக இருப்பதால் சோறு செல்லாது. அதுவும் யாராவது ஒருவர் முறுக்கை சாப்பிட எடுத்துட்டு வந்தாலே உடனே நமக்கும் சாப்பிடத் தோன்றும்.
அன்றைய தீபாவளி நாளில் அம்மாயி வீட்டில் முறுக்கு செய்ய ஆட்டாங்கல்லில் அரிசியை போட்டு இருவர் சேர்ந்து ஆட்டி எடுப்பார்கள். அப்புறம் வரமிளகாயும், உப்பையும் அம்மியில் வைத்து வரக்வரக்கென அரைத்து எடுத்ததில் கை எரிச்சல் கண்டிருக்கும். அம்மாயி மாவு பிசையும் போது ' இந்த மொளவாய அரைச்சு கையெறிது' என  பாட்டு பாடிட்டே கடலமாவை சலித்தெடுத்து, ஆட்டிய அரிசி மாவில் கொட்டி பிசைந்து எடுப்பார். அதன் பிறகு விறகடுப்பை பற்ற வைத்து விடுவார்கள். எங்களுக்கு பலகாரம் செய்யும் நாள் ஒரு திருவிழாவாகத் தெரியும்.

காரணம் அம்மா, பெரியம்மா, சின்னம்மாயி,பெரியம்மாயினு ஒரு பட்டாளமே சேர்ந்து இரண்டு பேர்  முறுக்கும் பிழிய, இரண்டு பேர் எடுக்க என விறகடுப்பருகே உட்கார்ந்து இருப்பார்கள். ஊரு நாயமும் சலிக்காமல் பேசப்படும். உள்ளே போனால் விறகு எரிந்து புகையாக வரும். பெரிய இரும்பு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு மாவை பிழிந்து விடுவார்கள். "கடலையெண்ணெய்" என்பதால் பொங்கி வந்து அடுப்பில் விழும். நெருப்பு அணைந்து அடுப்பு புகைய ஆரம்பித்து விடும். பொங்கி வராமல் இருக்க புளியை போடுவதும்,அதன் பிறகும் பொங்கி வந்தால் வாழைப்பழத்தோலையும் போடுவார்கள். இறுதியாக 'கண்ணு பட்டிருந்தால் கூட இப்படி பொங்கிப் போகும்' எனச் சொல்லிட்டு வரமிளகாய் சுற்றிப் போடுவார்கள். என்ன மாயமோ, மந்திரமோ எண்ணெய் பொங்குவது நின்று போகும்.

அதற்குள் சில முறுக்குகள் வீணாகி போயிருக்கும். முறுக்கு ஒன்றும் இப்போது மாதிரி ரொம்ப மொறு மொறுனு இருக்காது. பல்லு உடையாமல் கடிக்கிற அளவுக்கு இருக்கும்.அதுவே அப்போது தேவாமிர்தம். சில நேரங்களில் முறுக்கில் புகை வாசமும் கூட சேர்ந்து வரும். முறுக்கு சுடுவது என்றால் ஒரு நாளே ஒதுக்க வேண்டும். அதுக்காகவெல்லாம் அம்மாயி, ஒரு நாளும் சலித்துக் கொண்டதே இல்லை.

ஐப்பசி அடைமழை காலம். மழை ஈரத்தன்மைக்கு முறுக்கு நவுத்துப் போய்விடும் என்று, முறுக்கை எல்லாம் எடுத்து ஒரு மலக்காகிதப் பையில் போட்டு, நூல் போட்டு கட்டி பாத்திரத்தில் வைத்து நன்றாக மூடி வைத்து விடுவார் அம்மாயி.

முறுக்கு சுட்டு முடிப்பதற்குள் நாங்கள் பலதடவை எட்டி எட்டிப் பார்த்ததில், நாங்களே முறுக்கு சுட்டு எடுத்தது போல் முறுக்கு சுட்ட எண்ணெய் வாசனை எங்கள் மீதும் ஒட்டிக் கொள்ளும்.

இன்றைக்கு முறுக்கு சுடுவது மிகவும் எளிதானதாக மாறி இருக்கிறது. ஆனால் முறுக்கு சுடுவதற்கு நேரம் இருப்பது இல்லை பல பேருக்கு.
முறுக்கு சுடுவதற்கு அரிசி ஊறப்போட்டு வீட்டுக் கிரைண்டரில் நைஸாக போட்டு எடுக்க இரண்டு மூணு மணி நேரம் ஆகும். அது பெரிய வேலையாக தெரியும்.
இப்போது மாவு அரைக்கும் பெரிய இயந்திரங்கள் வந்து விட்டதால் அரிசியை ஊறவைத்து கடைக்கு எடுத்து சென்றால் பத்து நிமிடத்தில் அரைத்து கொடுத்து விடுகிறார்கள்.

அம்மாயி முறுக்கு சுட்ட காலத்தில் கடலை மாவு சேர்த்து செய்த முறுக்கு இப்போது ருசிப்பதில்லை. பொட்டுக்கடலை மாவு, உளுந்து மாவு, வெண்ணெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுடுவதால் இன்று மொறு மொறுனு வர ஆரம்பித்து விட்டது. அப்படி வரலைனா முறுக்கு தீரும் வரை வீட்டில் இருப்பவர்கள் முறுக்கு தின்பதுடன் நம்மையும் வாயில் பேசி அரைத்து எடுத்து விடுவார்கள். இன்றும் முறுக்கு சுடும் போது, சில நேரங்களில், 'கோவித்துக் கொண்டு முறுக்கி போகும் சில மாப்பிள்ளைகள் போல் முறுக்கு முறுக்கிட்டு' தனித் தனியாக, பிரிந்து போய் விடுவதும் உண்டு.

முறுக்கு சுட்டால் அது எப்படி வருமோ என்ற பயத்திலேயே சிலர் முறுக்கு சுடுவதற்கு எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்? என சுடுவதில்லை. கண்முன்னே விரிந்து கிடக்கும் கடைகளில் விதவிதமாக அழகாக அடுக்கி வைத்திருக்கும் பதார்த்தங்கள் என்னைப் பார், வாங்கி சுவைத்துப் பார் என நாவில் எச்சில் ஊற வைக்கும் அளவில் மனசைக் குழப்பி விடுவதால் கடையில் வாங்கி கொள்வதே சிறந்ததாக மாறி விட்டது.

எல்லா நாட்களிலும் எல்லா பலகாரங்களும் தங்குதடையின்றி இப்போது கடைகளில் கிடைத்து விடுவதால் பண்டிகைகள் சுவாரசியம் குறைந்து போனதாக தெரிகிறது.

கொரானா வந்த காலத்திலும் கூட எதற்கு தட்டுப்பாடு வந்ததோ வரலையோ, சாலையோரங்களில் உணவு கடை வைத்து நடத்துவோரின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து இருந்தது.

இனிப்புக்கடைகள் வழக்கத்தை விட இப்போதெல்லாம் அதிகமாகவே பெருகி இருக்கிறது. மக்கள் சர்க்கரை, பிரஸர்,கொலஸ்டிரால் இருக்கிறது என்று மருத்துவப் பரிசோதனையில் வந்த ரிசல்ட்டை வைத்து, மாத்திரை எடுத்துக் கொண்டாலும், இந்த நாக்கு மட்டும் ருசியை விடாது அடம் பிடித்து, தீபாவளி பலகாரங்களை ஒரு பிடி பிடித்து விடுகிறது.

வீட்டுக்கு வரும் நாளிதழ்களில் இந்த வருடம் அதிகமாக வந்த விளம்பரங்கள் தீபாவளி இனிப்பு குறித்தான விளம்பரங்களே! பல தொழில்கள் இன்று நலிவடைந்து போனாலும் முன்பை விட அதிக அளவில் திறக்கப்படுவது உணவு பொருட்கள் சார்ந்த கடைகளே!

தீபாவளிக்கு இந்த வருடம் போனஸ் வருமா வராதா என்ற நிலையில் கூட நம்பிக்கை இழக்காமல் பண்டிகையை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கும் போனஸை வாங்கி கொண்டு துணிக்கடைக்கும்,பட்டாசுக் கடைக்கும், பலகாரக்கடைக்கும் அலைமோதிக் கொண்டு, பொருட்களை வாங்கும் சாமானிய மக்களால்தான் இன்றும் பண்டிகைகள் உயிர்ப்புடன் இருக்கிறது.







பெருவெடிப்புகளில் பெருவரம் - மைதிலி

 






எல்லாம் சரிதான்

ஆனால் கழுவில் ஏற்றிய பிறகு 
காலம் பதில் சொன்னால் என்ன?
சொல்லாவிட்டால் தான் என்ன?

மனம் பட்ட பாடை 
திருப்புதல் செய்ய 
இயலுமா என்ன?

கசக்கிப் பிழிந்து விட்டு
காலம் பதில் சொல்லிவிட்டால்
கசங்கியது நேர்கோடாகிடுமா?

இருப்பினும்
மன தைரியத்துடன்
தனித்தியங்கிடும் 
இன்பம் அலாதி தான்.

மனிதம் அறிய முடிகிறது !
மனம் புரிய முடிகிறது!

பாதைகளின் நோக்கம் புரிகிறது !
பயணங்களின் திசையும் புரிகிறது !

கொள்கைகளை இறுகப் பற்றிட முனைகிறது !
கோட்பாடுகளை மேலும் வேரூன்றிட முனைகிறது !

இதை கடந்து பயணித்திட 
புதிய பாதைகளை உருவாக்கிட 
எத்தனிக்க இயலுகிறது! 
இதை தவிர்த்து ஆக்கப் பூர்வமாய்
செயலாற்றிட ஆற்றலை  
சேமிக்க இயலுகிறது !

நம்பிக்கை விருட்சமாகிட-
அதன் நிழலில் அயர்ந்து 
உறங்கிட முடிகிறது ! 

இதுவே சோதனைகளின் பெருவெடிப்பு !
இதில் மகிழ்ந்திருக்கிறேன் என்பது பெருவரம் !!

பெருவெடிப்புகளில் பெருவரம் 
பெற்று உயிர்த்திருப்பவள். 
என் பிறப்பின் நோக்கங்களை
உணர்ந்திருப்பவள்.


உடைபடட்டும் கலாச்சார மௌனங்கள் - 5 - பூங்கொடி பாலமுருகன்

    



' ஒன்னாவதிலிருந்து அஞ்சாவது வரைக்கும் ஒரு பொண்ண ரொம்ப சின்சியரா லவ் பண்ணினேன் மிஸ்.. ஆறாவது படிக்கும் போது தான் தெரிஞ்சது அது எனக்கு பெரியப்பா பொண்ணு முறைன்னு.. அதுக்குப் பிறகு வெறுத்துப் போய் இப்பெல்லாம்  லவ்வே பண்றது இல்லைங்க' இப்படின்னு சொன்னது 13 வயசுல இருக்குற ஒரு பையன்...

நாலாவது படிக்கிற ஒரு பொண்ணுக்கு அஞ்சாவது படிக்கிற பையன் தன்னுடைய காதலை போய் சொல்றான். 

எட்டாம் வகுப்பு படிக்கிற பையனுக்கு , ஆறாம் வகுப்பு படிக்கிற பிள்ளை மேல காதல்..

இப்படியான செய்திகளை கேட்டால் உங்களுக்கு என்ன தோணும்...

மொளச்சு மூணு இலை விடல அதுக்குள்ள காதலா? 

ரொம்ப ரொம்ப சேட்டை. இப்பவே இப்படின்னா... இவங்க எல்லாம் பெரியவங்க ஆகி    என்ன பண்ண போறாங்களோ?...

இப்படித்தான் நம்மில் பெரும்பாலான பேர் அந்த குழந்தைகளை திட்டுவோம். முன்பெல்லாம் 17 அல்லது வயதில் வந்த காதல்.. தற்போது எல்லாம் 10 வயதில் ஆரம்பித்து விடுகிறது.  இதற்குக் காரணம் குழந்தைகள் மட்டும் தானா? நம் மனதை தொட்டு இதற்கு பதில் சொல்வோம். 

பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற பையனும் பெண்ணும் காதல் செய்து வீட்டை விட்டு ஓடிப் போகின்ற திரைப்பட காட்சிகளும், இந்த வயதில் பாய் பிரண்ட் அல்லது கேர்ள் பிரண்ட் இருந்தால் தான் கெத்து என்று சொல்லுகின்ற சோசியல் மீடியாக்களும் தானே , வியாபார நோக்கத்திற்காக  குழந்தைகளின் உணர்ச்சிகளை வெகுவாக தூண்டி விடுகிறார்கள். அதுபோன்ற சினிமாக்களை நாமும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் , சினிமா தானே என்று மௌனமாய் கடந்து விடுகிறோம். ஆனால் பிள்ளைகள் காதலிக்கிறார்கள் என்று தெரியும்போது அவர்களை அடித்து அல்லது திட்டி துன்புறுத்துகிறோம். இது சரியான அணுகுமுறையா?  என்று சிறிது யோசிப்போம்..

பள்ளி பருவத்தில் வரும் காதல், எதனால் வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த வயதில் உள்ள பல்வேறு குழந்தைகளிடம் பேசிய போது...

*  தனக்கென்று ஒரு காதலி இருப்பது  நண்பர்கள் மத்தியில் ஒரு கெத்து...

**தான் காதலிக்கும் பெண்  தங்கள் நட்பு வட்டத்தை கடந்து செல்லும் பொழுது தன்னுடைய பெயரை நண்பர்கள் உச்சரிப்பது ஒரு வித மகிழ்ச்சியை தருகிறது.

** தன்னிடம் பேசாவிட்டாலும் ஒரு சின்ன புன்முறுவல் போதும்..

** தான்  வளர்ந்து விட்டேன் என்பதை  உணர முடிகிறது.

** சின்ன சின்ன பொருட்கள் பரிசாக தரும் போது ஒரு வித மகிழ்ச்சி மனதில் பரவுகிறது.

** பேச முடியாவிட்டாலும் தூரத்திலிருந்து பார்ப்பது ஒரு மகிழ்வை தருகிறது..

இந்த கருத்துகளை தான் பெரும்பாலும் அந்தக் குழந்தைகள் சொன்னார்கள். 

மொத்தத்தில் இந்த வயதில் வருவதை காதல் என்று சொல்வதை விட இனக் கவர்ச்சி என்று சொல்லலாம். பெரும்பாலும் எந்த தொலைநோக்கு சிந்தனையும் இல்லாத ஒரு கள்ளம் கபடம் இல்லாத அன்பு மட்டும் தான் பெரும்பாலும் இருக்கும். இந்தப் பெண்ணை அல்லது பையனைத் தான்  திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற எதிர்காலச் சிந்தனைகள் ஏதுமின்றி, அப்போதைய தினத்தில் சிறு சிறு மகிழ்ச்சியை காணும் ஒரு வயது. பெரும்பாலும் அவர்களுக்கு இந்த வயதில் காதல் என்ற உணர்வில் காமம் கலந்திருப்பது இல்லை. எனவே இந்த காதலைப் பற்றி அதிகம் பயப்படத் தேவையில்லை.

அப்படி என்றால் அவர்கள் காதலிக்கட்டும் என்று கண்டுகொள்ளாமல் விட்டு விடலாமா என்ற கேள்வி நமக்கு வரும். 

கண்டிப்பாக இந்த உணர்வுகள் அவர்களின் படிப்பை பாதித்து விடக்கூடாது. மேலும் அவர்களுக்குள் ஒரு கோஷ்டி மோதலையும் உருவாக்கி விடக்கூடாது. 

திட்டியோ அடித்தோ அவர்களை நாம் மாற்றுவது கடினம்..பிறகு என்ன என்ன செய்வது ? 

குழந்தைகளுடனான நம் மனம் திறந்த உரையாடல்கள் மட்டும் தான். நம் மனதை தொட்டுச் சொன்னால் நம்மிடம் பெரும்பாலான பேர் இந்த சிறுவயது இன கவர்ச்சியை கடந்து இருப்போம். அதில் மாட்டிக்கொண்டு நம் வாழ்வை தொலைத்திருக்கிறோமா என்ன? இல்லை தானே...

நம் கடந்த கால அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து, கடந்த கால அனுபவங்களில் இருந்து, நம் பிள்ளைகளின் புதிய அனுபவத்தை அன்புடன்  வழிநடத்தலாம். நம்முடைய வெளிப்படையான உரையாடல்கள் இந்த புதிய உணர்வுகளை சமாளிக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கும்.

பதின்பருவ வயதில் உள்ள ஒரு பெண் குழந்தை தன் தாயிடம், தன் வகுப்பில் படிக்கும் தன் நண்பன் ஒருவனை நான்  காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன் என்று பகிர்ந்து கொண்டாள்.. அந்தத் தாய்க்கு முதலில் சிறிது அதிர்ச்சி வந்தாலும், மெல்ல தன் குழந்தையுடன் உரையாடி, அவளுக்கு வந்திருப்பது காதல் அல்ல. அந்த நண்பனின் மீது அதீத அன்பு. அதிகப்படியாக சினிமாக்களை பார்ப்பதன் விளைவாக அதை காதல் என்று நீ நினைத்துக் கொள்கிறாய். எதனால் அந்தப் பையனை உனக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்டார். குழந்தை காரணங்களைச் சொன்னவுடன் ,   மற்றவர்களை காட்டிலும் அவனின் மேல் சிறிது அன்பு அதிகம். உனக்கு மட்டுமே நண்பனாக இருக்க வேண்டும் என்ற பற்று அதிகமாக உனக்குள் இருக்கிறது. அதை  காதல் என்று எடுத்துக் கொண்டாய்..இந்த காதல் என்பதை மறந்து விட்டு மிக இயல்பாக அவனுடன்  நட்பில் இரு. இந்த எண்ணம் ஒரு முதிர்ச்சி வரும்பொழுது உன்னிடம் இருந்து விலகி விடும். அதையும் மீறி இந்த அன்பு உனக்கு தொடர்ந்தால், உரிய வயது வரும்போது இதை பற்றி பேசலாம் என்று அந்த குழந்தையிடம் அன்பான வார்த்தைகளில் சொன்னார். மகளும் தாயின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, படிப்பில் எந்தவித கவனிச்சிதறலும் இன்றி, இயல்பாய் அந்த உணர்வை கடந்தாள். 

இந்த நிகழ்வில் நாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கிறது. 

ஒளிவு மறைவின்றி தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கையை அந்த தாய் அந்த குழந்தையிடம் பெற்றிருக்கிறார்.

இந்த நம்பிக்கையை ஒரே நாளில் அவரால் கட்டமைத்து விட முடிந்திருக்குமா?.. இல்லை.. தன் மகளிடம் சிறு வயதிலிருந்தே நட்பை போல, அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும், சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருப்பார். 

அந்தக் குழந்தை தவறு செய்திருந்தால் கூட தண்டிக்காமல், கோபப்படாமல்,  அவளுக்கு புரியக்கூடிய வகையில் பேசி மீண்டும் அந்தத் தவறு நிகழாத வண்ணம் அந்த குழந்தையின் மனதை மாற்றி இருப்பார். அதுபோன்ற நிகழ்வுகள் தான் குழந்தைக்கும் தாயிக்குமான  நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மிக அழகாக அந்த குழந்தையை அவளுக்கு பிடித்த விஷயத்தில் மடைமாற்றம் செய்தார். 

நாம் நம் குழந்தைகளிடம், ஒளிவு மறைவின்றி அனைத்தையும் நம்மிடம்  பகிர்ந்து கொள்ளும் சூழல் ஏற்படுத்தி  தந்திருக்கிறோமா? நம் வாழ்வில் நடந்த அனுபவங்களைச் சொல்லி,  அவர்களை வழிநடத்துகிறோமா? என்பதை நமக்குள் கேட்டுக் கொள்வோம்.

நாங்கள் உன்னுடைய பெற்றோர்கள்.. நாங்கள் சொல்வதைத்தான் நீ செய்ய வேண்டும் என்ற அதிகார தோரணையில் இருந்து, இறங்கி வந்து, இது உன்னுடைய வாழ்க்கை அதை எப்படி வாழ வேண்டும் என்ற முழு சுதந்திரமும் உனக்கு உண்டு. ஆனால் நீ தவறும் வேளையில் , அதை பெற்றோராக சரி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இதற்கெல்லாம் வீடுகளில் மௌனங்கள் உடைக்கப்பட்டு மனம் திறந்த உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

மௌனங்களை உடைப்போம்; உரையாடல்களை தொடங்குவோம்.

தொடர்ந்து உரையாடுவோம்...


பவானி 2 நொய்யல் - 6 - க்ருஷ்

 



கருங்கல்பாளையம்  
காலிங்கராயன் தொடங்கும் அணை நாசுவம் பாளையத்தில் வாய்க்காலின் இடது கரையில் ஊர் உள்ளது.  அதன் பிறகு பள்ளிபாளையம் சாலை சந்திக்கும் இடத்திற்குப் பிறகு, அதே போல இடது கரையில் பெரிய ஊர் உள்ளது.   இந்த இரு இடத்திலும் கரையின் மேல் தார் சாலை அமைத்து உள்ளார்கள்.   இவை விளைநிலங்களாக இருந்து காலத்தின் கோலத்தில் 'விலை' நிலங்களாக மாறி இருக்கும்.   

காலிங்கராயன் மிக அதிகமாக அசுத்தப்படுத்தப்படும் பகுதி எனில் அது இங்கே கருங்கல்பாளையத்தில் இருந்து ஈரோடு  நகர்  முடியும் வரை.  அதிலும் குறிப்பாக ஈரோட்டின் காரை வாய்க்கால் வரை.   இதற்கு இடைப்பட்ட இடங்களில் இன்னும் பேபி வாய்க்கால் கட்டப்படவில்லை.   இந்தப்பகுதிகள் மக்கள் தொகை  மிக அதிகமுள்ள பகுதியும் கூட.   வாய்க்கால் கரைகளை கழிப்பறைகளாக  பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள்,   இடது  கரையில் வாய்க்காலை தூர்வாரி கிடந்த சேறு, அதில் கிடந்த பிளாஸ்டிக் பைகள்,  துணிகள், பாட்டில்கள்,  அங்கங்கு கிடந்த உடைந்த அல்லது உடைக்கப்பட்ட சரக்கு பாட்டில்கள் என நீக்கமற நிறைந்து கிடந்தது.  அந்தப்பெரிய கரை ஒற்றையடிப் பாதையாக இந்த இடத்தில் நீண்டது. இவை அனைத்தும்,  பயணத்தை தவறாக கரையில் திட்டமிட்டு விட்டோமோ என்று யோசிக்க வைத்தது.   அந்த ஊர்களின் எல்லா அசுத்தங்களும் காளிங்கராயனில் சேர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.


இடது வாய்க்கால் கரை இப்படி இருக்க சில இடங்களில் வலது வாய்க்கால் கரையில் கரை என்பதே இல்லை.  சிலர்  நேரடியாக வாய்க்காலில் வீட்டுக் கழிவினை கலந்து விட்டு இருந்தார்கள்.     சில வீடுகளின் சுவர் வாய்க்காலின் கரையாக  இருந்தது.   சில வீடுகள் சிதிலமடைந்து வாய்க்காலில் நீந்திக் கிடந்தது.  



இவற்றை எல்லாம் சமாளித்து கடந்து செல்லும்பொழுது பழைய காரை வாய்க்காலை அடைந்தோம்.   அந்தக் காரைவாய்க்கால் அம்மன் கோவில் கேரளா கோவில் அமைப்பில் மிக அழகாக இருந்தது.   

காரைவாய்க்கால் - பெரும்பள்ளம் ஓடை 


அந்த இடத்தில்தான் ஈரோட்டின் நடுவில் ஓடும் பெரும்பள்ளம் ஓடை கடந்தது.  சூரம்பட்டி நால்ரோடு வழியாக ரயில் நிலையம் வரும் வழியில் மீன் மார்க்கெட் அருகில் வரும் இந்த ஓடை.   பன்னீர் செல்வம் பார்க்கில் இருந்து ரயில் நிலையம் வரும்போது பெரியார் நகர் வளைவிற்குப்  பின் வருகிறது.  அதுவே மரப்பாலத்தில் கடக்கிறது. இதனை ஈரோட்டின் கூவம் என சமீபத்தில் அமரரான புலவர் ராசு அவர்கள் கூறுகிறார்.   ஆனால் தற்போது மூன்று ஓடையும் கூவம் போல மாறி இருந்தது. 

 

இந்த இடத்தில் காலிங்கராயன் குமுளி மதகின் வழியாக செல்லவில்லை.   மாறாக ஓடை கீழே செல்கின்றது.  காலிங்கராயன் மேலே மேம்பாலத்தின் வழி கடக்கிறார்.   அன்று கட்டப்பட்ட கல் பாலம்.  அங்கங்கு நீர் சொட்டிக் கொண்டு இருந்தது அந்த கற்பாலத்தில்.   கீழே கற்களை அடுக்கி தூண்கள் போல பத்து அடிக்கு ஒன்றாக நிறுத்தி உள்ளார்கள்.  மேலே அதுபோலவே நீண்ட கற்களை பலகைபோல செதுக்கி அதன் மேல் வைத்து உள்ளார்கள்.   இதன் மேல் மற்றும் சுவர்களில் சுண்ணம்பினால ஆன காரையை பூசி உள்ளார்கள்.  இதன் காரணமாவே இந்த இடம் காரை வாய்க்கால் எனப்படுகிறது.  


இந்த அமைப்பை பற்றி புக்கனான் எனும் ஆங்கிலேயர் வியந்து பாராட்டி உள்ளார்.


இன்னும் இந்தப்  பாலம் நடைமுறையில் இருந்து கொண்டு இருக்கின்றது.   ஓடையில், பாலத்திற்கு நேராக ஒரு 50 மீட்டர் தள்ளி அந்த ஓடையைக் கடக்க கான்கிரீட் பாலம் அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.  அனேகமாக புதிய பாலமாக இருக்கலாம். நீரை மடை மாற்றி புதிய பாலத்தில் விடும் பொழுது,  இந்த அமைப்பை சிதிலம் அடையாமல் ஒரு தொல்பொருள் இடமாக  பாதுகாக்கலாம். 


இங்கிலாந்தின் ரோமன் பாத் எனப்படும் பழமையான  இடத்தை அப்படிதான் மாற்றி இருப்பார்கள்.   அது மிகவும் சிறிய ஒன்று தான். அங்கங்கு தகவல் பலகைகள்,  கண்காட்சிகள். ஒரு சில இடங்களில் 3D மூலமாக அன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் எப்படி, அங்கு, அந்த இடத்தில் உலாவினார்கள் என்பதை அழகாக காட்சிப் படுத்தி இருப்பார்கள்.   அதுபோல இந்த இடத்தை அழகு படுத்தலாம். அரசு வருமானத்தை  மேலும் ஈட்ட முடியும்.  

பயணிப்போம்...


அந்தமான் - இயற்கை அன்னையின் மடி – 1 - அன்புமணி வி

 





அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் நம் தமிழ் மூதாட்டி ஒளவை. மனிதனாய்ப் பிறந்தவன் ஒரே இடத்தில் இருந்தால் அது சேற்றுக்குச் சமம். எனவே, அவன் என்றும் ஓடும் நீரைப் போல் தூய்மையாக இருக்கப் பயணிக்க வேண்டும் என்கிறார் இந்தி இலக்கியத்தின் பயண எழுத்தாளர் அக்ஞேய்.

பிறப்பது ஒரு முறை; வாழ்வது ஒரு முறை. நடுவே நாம் வாழும் பூமிப் பந்தை இயன்றவரை சுற்றிப் பார்த்து விட வேண்டும் என்பது என் விருப்பம். இதற்காக அவ்வப்போது உறவினர் வட்டம், நட்பு வட்டம் என அனைவரிடமும் கேட்டுக் கொண்டே இருப்பேன். பல பயண ஏற்பாடு செய்யும் நிறுவனங்களிடமிருந்து சுற்றுலாத் தகவல்கள் பெற்றுக் கொண்டிருப்பது என் வாடிக்கை. அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸின் செய்தித்தாள் விளம்பரத்தைப் பார்த்து விசாரித்தேன். திருப்தியாக இருந்தது.

பின் கல்லூரியில் என்னுடன் பணிபுரியும் நெருங்கிய நட்புக்களிடம் கேட்டேன். அவர்கள் தேர்வு செய்தது அந்தமானை. தைப் பொங்கல் விடுமுறையில் செல்ல முடிவு செய்ததற்கும், பெண்கள் மட்டுமே என்பதற்கும் அவரவர் வீட்டாரும் ஒத்துக் கொண்டது பெரும் மகிழ்வைக் கொடுத்தது. இதில் ஒருவரின் கல்லூரித் தோழி பங்களூரில் இருந்து வருகிறேன் என்றார். கோவைத் தோழியும், அவர்தம் சகோதரி மகளும் இணைய 7 பேர் என்றானது. 24 வயது முதல் 52 வயது வரை.

முதலில் வாட்ஸ் அப் குழு ஒன்றைத் துவக்கினோம். இன்னும்; 3-4 பயண ஏற்பாடு செய்யும் நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெற்றபோது நாங்கள் தெரிவு செய்த டிராவல்ஸ் தான் சரியான தேர்வு எனத் தோன்றியது. அதற்கேற்ப அந்நிறுவனமும் ஈரோட்டில் தன் கிளையை ஆரம்பிக்க, பணியிலிருந்து ஒரு மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டு நேரே சென்றோம். எங்கள் சந்தேகங்கள் தீர்ந்ததும் முன் பணம் கொடுத்து உறுதி செய்த பின்னர் ஏதோ திருமணம் நிச்சயித்தது போன்ற ஒரு ஆனந்தம். பயணத்திற்கு இன்னும் 45 நாட்கள் இருந்தன. நடுவில் எதுவும் நடக்கலாம்.

பயணத்திற்கு பத்து நாட்கள் இருக்கும்போதுதான் என் தமக்கையின் பெண்ணும் தனது வேலைப் பளுவிலிருந்து தப்பிக்க அருமையான பயணம் சித்தி என எங்களுடன் இணைந்து கொண்டாள். இளைஞிகள் இருவரும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் அவர்கள் இருவருக்குமே மகிழ்ச்சி. பயணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போதுதான் இரு தோழிகளின் வீட்டில் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சற்று உடல்நலக் குறைவுகள் ஏற்படத் தொடங்கின. அதிலும் ஒருவர் வருவது என்பது ஐயமாகவே இருந்தது. இருப்பினும் இதுவரை நம்மை வழிநடத்திய இறைவன் வழி விடுவான் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

பயணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது என்கிறபோது நாங்கள் திட்டமிடத் தொடங்கினோம். ஒரே மாதிரி உடை வாங்கினோம். எங்களில் சிலர் அன்றுவரை அணியாத உடைகளாய் வாங்கியதைக் குறிப்பிட்டாக வேண்டும். உடைகளுக்காக நாங்கள் செலவழித்த சில ஆயிரங்கள் அங்கே கிடைத்த சந்தோசத்திற்கு கோடி ரூபாய் கொடுத்திருந்தாலும் ஈடாகாது. கிளம்பும் நேரம் முன் வரை கூட சிலர் வாங்கினோம். இறுதியாக ஐயத்திற்குரிய தோழி வருவதாகத் தெரிந்தவுடன் மகிழ்ச்சி இரட்டிப்பானது. பங்களுரிலிருந்து மற்றொரு தோழி ஈரோட்டுக்கு வந்து எங்களுடன் இணைந்தார். இரண்டு நவயுவதிகள் மற்றும் பங்களுர் தோழி ஆகிய மூவரும் எங்கள் குழுவைச் சேர்ந்த யாரேனும் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் புதியவர்கள். ஆனால் எங்களை ஒன்று சேர்த்த இறைவனைத்தான் பாராட்ட வேண்டும். புதியவர்கள் மூவரும் எங்களுடன் ஒன்றரக் கலந்து விட்டனர். இரயிலடிக்கு தோழி ஒருவரின் 4 வயதுக் குழந்தையும் கணவரும் எங்களை வழியனுப்ப வந்தனர். குழந்தையைக் கூட ஏமாற்றாத தோழியின் நேர்மை வியக்க வைத்தது. இரயிலில் ஒரே பெட்டியில் இரு இடங்களில் படுக்கைகள் கிடைத்தபோது, கடவுளுக்கே (டிடிஆர்) அது பொறுக்காமல் வயதான  தம்பதியருக்கு எங்களது கீழ் படுக்கைகளைக் கொடுக்க வைத்து எங்களை ஒன்றாகப் பயணத்தைத் தொடங்க வைத்தார். 

தலைநகர் எங்களைப் பிரியத்துடன் கைகூப்பி வரவேற்றது. சென்னையில் இரு கார்களில் பயணித்து விமானநிலையத்தை அடைந்தோம். எங்களில் ஒரு சிலருக்கு விமானப் பயணம் புதிது. அனுபவம் மிக்கவர்கள் வழிகாட்ட விமான நிலையத்தை அணுஅணுவாக இரசித்தபடி, பிரமித்தபடி விமான நிலையச் சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு, கை கால் முகம் கழுவி, பல் துலக்கித் தயாராகி வெளி வந்தவுடன் வயிறு தன் கோரிக்கையை முன் வைக்க அங்கிருந்த உணவகத்தில் சாப்பிடச் சென்றோம். அங்குதான் எங்கள் குழுவின் கடைசி நபராய் என் தமக்கை மகள் வந்து சேர்ந்தாள். அறிமுகப்படலம் முடிந்ததும் அனைவரும் விமானம் ஏறுவதற்குத் தயாரானோம்.

சில விமானங்கள் தாமதம் என்ற போது எங்கள் விமானம் குறித்த நேரத்திற்கு வந்ததை எண்ணி மிகவும் ஆனந்தமடைந்தோம். திரும்பும்போது எங்கள் விமானம் தாமதமாக வரப் போகிறது என்பதை அறியாமல். 

விமானப் பயணத்தைப்பற்றி என்னவென்று விவரிக்க.. அடடா…படைத்தவனை எண்ணி பெருமைப்பட்டேயாக வேண்டிய கணங்கள்….எங்கெங்கு காணினும் சக்தியடா என பாரதி சொன்னது போல் எங்கு பார்த்தாலும் பஞ்சுக்குவியல்கள், பஞ்சுப் பொதிகள்….ஏதோ பாற்கடலுக்கு மேலே பறந்தது போன்ற உணர்வு. மிகச் சிறந்த அனுபவமாய்….ஒரு விவரிக்க இயலாத பேரானந்தம். முதல் முறையாக, பூமிப் பந்தை விட்டுப் பிரிந்து விலகியதை சற்றே நெகிழ்வுடன் உணர்ந்த தருணம்…அந்தமானை நெருங்க நெருங்க மேகக் கூட்டங்கள் சற்றே விலகிக் கொள்ள மேலிருந்தவாறே கீழிருந்த அந்தமான்-நிக்கோபார் தீவுக் கூட்டங்களை இரசிக்கத் தொடங்கினோம்.

ஒரு தீவு எப்படி இருக்கும் மேலிருந்து பார்க்க என்று எண்ணிய போது…பள்ளியில் படித்த புவியியல் பாடமெல்லாம் நினைவிற்கு வந்தது. பிறவிப்பயனை அடைந்ததுபோல் தோன்றியது. கீழ்க்காணும் தீவுகளுள் நாங்கள் எங்கெங்கு போகப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பே பேருவகையைத் தந்தது. ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்தமானில் பல வயல்வெளிகளில் ஒரு பெரியபரப்பை சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறார்கள். வரவேற்கத்தக்க ஒரு விடயம். 

ஒரு வழியாக எங்கள் கனவுக்கோட்டை அந்தமானின் வீர சாவர்க்கார் சர்வதேச விமான நிலையத்தில் காலை 10.35 மணிக்குத் தடம் பதித்தோம். சிறிய விமான நிலையம். திரைப்படங்களில் பார்ப்பது போல் எங்களுக்கென பதாகை தாங்கி வரவேற்றார் எங்கள் டூரிஸ்ட் கைடு மற்றும் வாகன ஓட்டுனர். அடுத்த 5 நாட்களுக்கு எங்கள் அலப்பரைகளைத் தாங்கப் போகும் அவரைப் பின்தொடர்ந்து வாகனத்தை அடைந்தோம. 11 மணிக்கே சுளீர் என வெயில் எங்களைத் தாக்கியது. அப்போதுதான் ஒரு பெட்டியை விமான நிலையத்தில் விட்டு வந்தது தெரிய வர, தோழிகள் இருவர் ஓடிப் போய்த் தேடி எடுத்து வந்தனர். அந்தமானில் திருட்டுப் பயம் இல்லை என கூகுள் ஆண்டவர் சொன்னது சரிதான் போல் என சிலாகித்தபடி தங்கும் ஹோட்டலை அடைந்தோம்.

வரவேற்பறையில் உட்கார்ந்தவுடனேயே அங்கிருக்கும் பணியாளர்கள் பெரும்பானோர் தமிழகத்தை, குறிப்பாகக் காரைக்குடி மற்றும் சிவகங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இரட்டிப்புச் சந்தோசத்தையும் உரிமையையும் கொடுக்க, அவர்களும் நாங்கள் கேட்டதற்கிணங்க, வெயிலுக்கேற்ற குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர். அது ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் என்றபோதும் சில சிறு சிறு குறைகள் இருந்தன.  ஆனால் அந்த ஹோட்டல் பணியாளர்களின் பணிவான நடத்தையும், அன்பான உபசரிப்பும் அனைத்தையும் மறக்கச் செய்தன. 

அந்தமான் சென்ற பிறகுதான் அங்கு 2ஜி (இப்போது நன்றாக உள்ளது) மட்டுமே வேலை செய்யும் எனத் தெரிந்தது. உடனுக்குடன் உற்றவர்களுக்குப் புகைப்படம் அனுப்ப முடியவில்லை என்ற போதும் தகவல் கூறும் அளவு மட்டுமே சில நெட்வொர்க்குகள் இருந்ததே போதுமானதாய் இருந்தது. இல்லையெனில் நாங்கள் எங்களுக்குள் அளவளாவியது குறைந்து ஆண்ட்ராயிடு போனுடனே ஒட்டியிருந்திருக்க வாய்ப்பிருந்தது. எனவே இணைய வசதி அதிகம் கிடைக்காததே எங்களுக்கு மிகப் பெரிய வரமாக இருந்தது.

அந்தமானில் இருந்தபோது நாங்கள் ஏதோ தமிழகத்தில் இருந்தது போலவே உணர்ந்தோம். முதல் காரணம், அங்குள்ள ஜனத்தொகை  நாலரை இலட்சம் பேரில் மூன்றில் ஒருவர் தமிழர் என்பதுர. இரண்டாவது பல பெயர்ப்பலகைகள் தமிழில் இருந்தது. மூன்றாவது தமிழர் அல்லாதவர்களும் தமிழ் பேசியது. நம்மூருக்குள்ளேயே வெளிநாடு இருந்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி.

எங்களுக்காக டிராவல்ஸ் மூலம் வேறு ஒரு ரம்மியமான இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவை மதியம் 1 மணி அளவில் உண்ட பினனர் எங்கள் வரலாற்றுப் பயணம் தொடங்கியது.

தொடரும்....

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...