Sunday, November 12, 2023

அந்தமான் - இயற்கை அன்னையின் மடி – 1 - அன்புமணி வி

 





அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்கிறார் நம் தமிழ் மூதாட்டி ஒளவை. மனிதனாய்ப் பிறந்தவன் ஒரே இடத்தில் இருந்தால் அது சேற்றுக்குச் சமம். எனவே, அவன் என்றும் ஓடும் நீரைப் போல் தூய்மையாக இருக்கப் பயணிக்க வேண்டும் என்கிறார் இந்தி இலக்கியத்தின் பயண எழுத்தாளர் அக்ஞேய்.

பிறப்பது ஒரு முறை; வாழ்வது ஒரு முறை. நடுவே நாம் வாழும் பூமிப் பந்தை இயன்றவரை சுற்றிப் பார்த்து விட வேண்டும் என்பது என் விருப்பம். இதற்காக அவ்வப்போது உறவினர் வட்டம், நட்பு வட்டம் என அனைவரிடமும் கேட்டுக் கொண்டே இருப்பேன். பல பயண ஏற்பாடு செய்யும் நிறுவனங்களிடமிருந்து சுற்றுலாத் தகவல்கள் பெற்றுக் கொண்டிருப்பது என் வாடிக்கை. அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸின் செய்தித்தாள் விளம்பரத்தைப் பார்த்து விசாரித்தேன். திருப்தியாக இருந்தது.

பின் கல்லூரியில் என்னுடன் பணிபுரியும் நெருங்கிய நட்புக்களிடம் கேட்டேன். அவர்கள் தேர்வு செய்தது அந்தமானை. தைப் பொங்கல் விடுமுறையில் செல்ல முடிவு செய்ததற்கும், பெண்கள் மட்டுமே என்பதற்கும் அவரவர் வீட்டாரும் ஒத்துக் கொண்டது பெரும் மகிழ்வைக் கொடுத்தது. இதில் ஒருவரின் கல்லூரித் தோழி பங்களூரில் இருந்து வருகிறேன் என்றார். கோவைத் தோழியும், அவர்தம் சகோதரி மகளும் இணைய 7 பேர் என்றானது. 24 வயது முதல் 52 வயது வரை.

முதலில் வாட்ஸ் அப் குழு ஒன்றைத் துவக்கினோம். இன்னும்; 3-4 பயண ஏற்பாடு செய்யும் நிறுவனங்களிடமிருந்து விலைப்புள்ளிகள் பெற்றபோது நாங்கள் தெரிவு செய்த டிராவல்ஸ் தான் சரியான தேர்வு எனத் தோன்றியது. அதற்கேற்ப அந்நிறுவனமும் ஈரோட்டில் தன் கிளையை ஆரம்பிக்க, பணியிலிருந்து ஒரு மணி நேரம் விடுப்பு எடுத்துக் கொண்டு நேரே சென்றோம். எங்கள் சந்தேகங்கள் தீர்ந்ததும் முன் பணம் கொடுத்து உறுதி செய்த பின்னர் ஏதோ திருமணம் நிச்சயித்தது போன்ற ஒரு ஆனந்தம். பயணத்திற்கு இன்னும் 45 நாட்கள் இருந்தன. நடுவில் எதுவும் நடக்கலாம்.

பயணத்திற்கு பத்து நாட்கள் இருக்கும்போதுதான் என் தமக்கையின் பெண்ணும் தனது வேலைப் பளுவிலிருந்து தப்பிக்க அருமையான பயணம் சித்தி என எங்களுடன் இணைந்து கொண்டாள். இளைஞிகள் இருவரும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் அவர்கள் இருவருக்குமே மகிழ்ச்சி. பயணத்திற்கு ஒரு வாரம் இருக்கும்போதுதான் இரு தோழிகளின் வீட்டில் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சற்று உடல்நலக் குறைவுகள் ஏற்படத் தொடங்கின. அதிலும் ஒருவர் வருவது என்பது ஐயமாகவே இருந்தது. இருப்பினும் இதுவரை நம்மை வழிநடத்திய இறைவன் வழி விடுவான் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

பயணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது என்கிறபோது நாங்கள் திட்டமிடத் தொடங்கினோம். ஒரே மாதிரி உடை வாங்கினோம். எங்களில் சிலர் அன்றுவரை அணியாத உடைகளாய் வாங்கியதைக் குறிப்பிட்டாக வேண்டும். உடைகளுக்காக நாங்கள் செலவழித்த சில ஆயிரங்கள் அங்கே கிடைத்த சந்தோசத்திற்கு கோடி ரூபாய் கொடுத்திருந்தாலும் ஈடாகாது. கிளம்பும் நேரம் முன் வரை கூட சிலர் வாங்கினோம். இறுதியாக ஐயத்திற்குரிய தோழி வருவதாகத் தெரிந்தவுடன் மகிழ்ச்சி இரட்டிப்பானது. பங்களுரிலிருந்து மற்றொரு தோழி ஈரோட்டுக்கு வந்து எங்களுடன் இணைந்தார். இரண்டு நவயுவதிகள் மற்றும் பங்களுர் தோழி ஆகிய மூவரும் எங்கள் குழுவைச் சேர்ந்த யாரேனும் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் புதியவர்கள். ஆனால் எங்களை ஒன்று சேர்த்த இறைவனைத்தான் பாராட்ட வேண்டும். புதியவர்கள் மூவரும் எங்களுடன் ஒன்றரக் கலந்து விட்டனர். இரயிலடிக்கு தோழி ஒருவரின் 4 வயதுக் குழந்தையும் கணவரும் எங்களை வழியனுப்ப வந்தனர். குழந்தையைக் கூட ஏமாற்றாத தோழியின் நேர்மை வியக்க வைத்தது. இரயிலில் ஒரே பெட்டியில் இரு இடங்களில் படுக்கைகள் கிடைத்தபோது, கடவுளுக்கே (டிடிஆர்) அது பொறுக்காமல் வயதான  தம்பதியருக்கு எங்களது கீழ் படுக்கைகளைக் கொடுக்க வைத்து எங்களை ஒன்றாகப் பயணத்தைத் தொடங்க வைத்தார். 

தலைநகர் எங்களைப் பிரியத்துடன் கைகூப்பி வரவேற்றது. சென்னையில் இரு கார்களில் பயணித்து விமானநிலையத்தை அடைந்தோம். எங்களில் ஒரு சிலருக்கு விமானப் பயணம் புதிது. அனுபவம் மிக்கவர்கள் வழிகாட்ட விமான நிலையத்தை அணுஅணுவாக இரசித்தபடி, பிரமித்தபடி விமான நிலையச் சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு, கை கால் முகம் கழுவி, பல் துலக்கித் தயாராகி வெளி வந்தவுடன் வயிறு தன் கோரிக்கையை முன் வைக்க அங்கிருந்த உணவகத்தில் சாப்பிடச் சென்றோம். அங்குதான் எங்கள் குழுவின் கடைசி நபராய் என் தமக்கை மகள் வந்து சேர்ந்தாள். அறிமுகப்படலம் முடிந்ததும் அனைவரும் விமானம் ஏறுவதற்குத் தயாரானோம்.

சில விமானங்கள் தாமதம் என்ற போது எங்கள் விமானம் குறித்த நேரத்திற்கு வந்ததை எண்ணி மிகவும் ஆனந்தமடைந்தோம். திரும்பும்போது எங்கள் விமானம் தாமதமாக வரப் போகிறது என்பதை அறியாமல். 

விமானப் பயணத்தைப்பற்றி என்னவென்று விவரிக்க.. அடடா…படைத்தவனை எண்ணி பெருமைப்பட்டேயாக வேண்டிய கணங்கள்….எங்கெங்கு காணினும் சக்தியடா என பாரதி சொன்னது போல் எங்கு பார்த்தாலும் பஞ்சுக்குவியல்கள், பஞ்சுப் பொதிகள்….ஏதோ பாற்கடலுக்கு மேலே பறந்தது போன்ற உணர்வு. மிகச் சிறந்த அனுபவமாய்….ஒரு விவரிக்க இயலாத பேரானந்தம். முதல் முறையாக, பூமிப் பந்தை விட்டுப் பிரிந்து விலகியதை சற்றே நெகிழ்வுடன் உணர்ந்த தருணம்…அந்தமானை நெருங்க நெருங்க மேகக் கூட்டங்கள் சற்றே விலகிக் கொள்ள மேலிருந்தவாறே கீழிருந்த அந்தமான்-நிக்கோபார் தீவுக் கூட்டங்களை இரசிக்கத் தொடங்கினோம்.

ஒரு தீவு எப்படி இருக்கும் மேலிருந்து பார்க்க என்று எண்ணிய போது…பள்ளியில் படித்த புவியியல் பாடமெல்லாம் நினைவிற்கு வந்தது. பிறவிப்பயனை அடைந்ததுபோல் தோன்றியது. கீழ்க்காணும் தீவுகளுள் நாங்கள் எங்கெங்கு போகப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பே பேருவகையைத் தந்தது. ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்தமானில் பல வயல்வெளிகளில் ஒரு பெரியபரப்பை சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறார்கள். வரவேற்கத்தக்க ஒரு விடயம். 

ஒரு வழியாக எங்கள் கனவுக்கோட்டை அந்தமானின் வீர சாவர்க்கார் சர்வதேச விமான நிலையத்தில் காலை 10.35 மணிக்குத் தடம் பதித்தோம். சிறிய விமான நிலையம். திரைப்படங்களில் பார்ப்பது போல் எங்களுக்கென பதாகை தாங்கி வரவேற்றார் எங்கள் டூரிஸ்ட் கைடு மற்றும் வாகன ஓட்டுனர். அடுத்த 5 நாட்களுக்கு எங்கள் அலப்பரைகளைத் தாங்கப் போகும் அவரைப் பின்தொடர்ந்து வாகனத்தை அடைந்தோம. 11 மணிக்கே சுளீர் என வெயில் எங்களைத் தாக்கியது. அப்போதுதான் ஒரு பெட்டியை விமான நிலையத்தில் விட்டு வந்தது தெரிய வர, தோழிகள் இருவர் ஓடிப் போய்த் தேடி எடுத்து வந்தனர். அந்தமானில் திருட்டுப் பயம் இல்லை என கூகுள் ஆண்டவர் சொன்னது சரிதான் போல் என சிலாகித்தபடி தங்கும் ஹோட்டலை அடைந்தோம்.

வரவேற்பறையில் உட்கார்ந்தவுடனேயே அங்கிருக்கும் பணியாளர்கள் பெரும்பானோர் தமிழகத்தை, குறிப்பாகக் காரைக்குடி மற்றும் சிவகங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் இரட்டிப்புச் சந்தோசத்தையும் உரிமையையும் கொடுக்க, அவர்களும் நாங்கள் கேட்டதற்கிணங்க, வெயிலுக்கேற்ற குளிர்பானம் கொடுத்து வரவேற்றனர். அது ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் என்றபோதும் சில சிறு சிறு குறைகள் இருந்தன.  ஆனால் அந்த ஹோட்டல் பணியாளர்களின் பணிவான நடத்தையும், அன்பான உபசரிப்பும் அனைத்தையும் மறக்கச் செய்தன. 

அந்தமான் சென்ற பிறகுதான் அங்கு 2ஜி (இப்போது நன்றாக உள்ளது) மட்டுமே வேலை செய்யும் எனத் தெரிந்தது. உடனுக்குடன் உற்றவர்களுக்குப் புகைப்படம் அனுப்ப முடியவில்லை என்ற போதும் தகவல் கூறும் அளவு மட்டுமே சில நெட்வொர்க்குகள் இருந்ததே போதுமானதாய் இருந்தது. இல்லையெனில் நாங்கள் எங்களுக்குள் அளவளாவியது குறைந்து ஆண்ட்ராயிடு போனுடனே ஒட்டியிருந்திருக்க வாய்ப்பிருந்தது. எனவே இணைய வசதி அதிகம் கிடைக்காததே எங்களுக்கு மிகப் பெரிய வரமாக இருந்தது.

அந்தமானில் இருந்தபோது நாங்கள் ஏதோ தமிழகத்தில் இருந்தது போலவே உணர்ந்தோம். முதல் காரணம், அங்குள்ள ஜனத்தொகை  நாலரை இலட்சம் பேரில் மூன்றில் ஒருவர் தமிழர் என்பதுர. இரண்டாவது பல பெயர்ப்பலகைகள் தமிழில் இருந்தது. மூன்றாவது தமிழர் அல்லாதவர்களும் தமிழ் பேசியது. நம்மூருக்குள்ளேயே வெளிநாடு இருந்தால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி.

எங்களுக்காக டிராவல்ஸ் மூலம் வேறு ஒரு ரம்மியமான இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவை மதியம் 1 மணி அளவில் உண்ட பினனர் எங்கள் வரலாற்றுப் பயணம் தொடங்கியது.

தொடரும்....

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...