Sunday, November 12, 2023

பவானி 2 நொய்யல் - 6 - க்ருஷ்

 



கருங்கல்பாளையம்  
காலிங்கராயன் தொடங்கும் அணை நாசுவம் பாளையத்தில் வாய்க்காலின் இடது கரையில் ஊர் உள்ளது.  அதன் பிறகு பள்ளிபாளையம் சாலை சந்திக்கும் இடத்திற்குப் பிறகு, அதே போல இடது கரையில் பெரிய ஊர் உள்ளது.   இந்த இரு இடத்திலும் கரையின் மேல் தார் சாலை அமைத்து உள்ளார்கள்.   இவை விளைநிலங்களாக இருந்து காலத்தின் கோலத்தில் 'விலை' நிலங்களாக மாறி இருக்கும்.   

காலிங்கராயன் மிக அதிகமாக அசுத்தப்படுத்தப்படும் பகுதி எனில் அது இங்கே கருங்கல்பாளையத்தில் இருந்து ஈரோடு  நகர்  முடியும் வரை.  அதிலும் குறிப்பாக ஈரோட்டின் காரை வாய்க்கால் வரை.   இதற்கு இடைப்பட்ட இடங்களில் இன்னும் பேபி வாய்க்கால் கட்டப்படவில்லை.   இந்தப்பகுதிகள் மக்கள் தொகை  மிக அதிகமுள்ள பகுதியும் கூட.   வாய்க்கால் கரைகளை கழிப்பறைகளாக  பயன்படுத்திக் கொண்டிருந்த மக்கள்,   இடது  கரையில் வாய்க்காலை தூர்வாரி கிடந்த சேறு, அதில் கிடந்த பிளாஸ்டிக் பைகள்,  துணிகள், பாட்டில்கள்,  அங்கங்கு கிடந்த உடைந்த அல்லது உடைக்கப்பட்ட சரக்கு பாட்டில்கள் என நீக்கமற நிறைந்து கிடந்தது.  அந்தப்பெரிய கரை ஒற்றையடிப் பாதையாக இந்த இடத்தில் நீண்டது. இவை அனைத்தும்,  பயணத்தை தவறாக கரையில் திட்டமிட்டு விட்டோமோ என்று யோசிக்க வைத்தது.   அந்த ஊர்களின் எல்லா அசுத்தங்களும் காளிங்கராயனில் சேர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.


இடது வாய்க்கால் கரை இப்படி இருக்க சில இடங்களில் வலது வாய்க்கால் கரையில் கரை என்பதே இல்லை.  சிலர்  நேரடியாக வாய்க்காலில் வீட்டுக் கழிவினை கலந்து விட்டு இருந்தார்கள்.     சில வீடுகளின் சுவர் வாய்க்காலின் கரையாக  இருந்தது.   சில வீடுகள் சிதிலமடைந்து வாய்க்காலில் நீந்திக் கிடந்தது.  



இவற்றை எல்லாம் சமாளித்து கடந்து செல்லும்பொழுது பழைய காரை வாய்க்காலை அடைந்தோம்.   அந்தக் காரைவாய்க்கால் அம்மன் கோவில் கேரளா கோவில் அமைப்பில் மிக அழகாக இருந்தது.   

காரைவாய்க்கால் - பெரும்பள்ளம் ஓடை 


அந்த இடத்தில்தான் ஈரோட்டின் நடுவில் ஓடும் பெரும்பள்ளம் ஓடை கடந்தது.  சூரம்பட்டி நால்ரோடு வழியாக ரயில் நிலையம் வரும் வழியில் மீன் மார்க்கெட் அருகில் வரும் இந்த ஓடை.   பன்னீர் செல்வம் பார்க்கில் இருந்து ரயில் நிலையம் வரும்போது பெரியார் நகர் வளைவிற்குப்  பின் வருகிறது.  அதுவே மரப்பாலத்தில் கடக்கிறது. இதனை ஈரோட்டின் கூவம் என சமீபத்தில் அமரரான புலவர் ராசு அவர்கள் கூறுகிறார்.   ஆனால் தற்போது மூன்று ஓடையும் கூவம் போல மாறி இருந்தது. 

 

இந்த இடத்தில் காலிங்கராயன் குமுளி மதகின் வழியாக செல்லவில்லை.   மாறாக ஓடை கீழே செல்கின்றது.  காலிங்கராயன் மேலே மேம்பாலத்தின் வழி கடக்கிறார்.   அன்று கட்டப்பட்ட கல் பாலம்.  அங்கங்கு நீர் சொட்டிக் கொண்டு இருந்தது அந்த கற்பாலத்தில்.   கீழே கற்களை அடுக்கி தூண்கள் போல பத்து அடிக்கு ஒன்றாக நிறுத்தி உள்ளார்கள்.  மேலே அதுபோலவே நீண்ட கற்களை பலகைபோல செதுக்கி அதன் மேல் வைத்து உள்ளார்கள்.   இதன் மேல் மற்றும் சுவர்களில் சுண்ணம்பினால ஆன காரையை பூசி உள்ளார்கள்.  இதன் காரணமாவே இந்த இடம் காரை வாய்க்கால் எனப்படுகிறது.  


இந்த அமைப்பை பற்றி புக்கனான் எனும் ஆங்கிலேயர் வியந்து பாராட்டி உள்ளார்.


இன்னும் இந்தப்  பாலம் நடைமுறையில் இருந்து கொண்டு இருக்கின்றது.   ஓடையில், பாலத்திற்கு நேராக ஒரு 50 மீட்டர் தள்ளி அந்த ஓடையைக் கடக்க கான்கிரீட் பாலம் அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.  அனேகமாக புதிய பாலமாக இருக்கலாம். நீரை மடை மாற்றி புதிய பாலத்தில் விடும் பொழுது,  இந்த அமைப்பை சிதிலம் அடையாமல் ஒரு தொல்பொருள் இடமாக  பாதுகாக்கலாம். 


இங்கிலாந்தின் ரோமன் பாத் எனப்படும் பழமையான  இடத்தை அப்படிதான் மாற்றி இருப்பார்கள்.   அது மிகவும் சிறிய ஒன்று தான். அங்கங்கு தகவல் பலகைகள்,  கண்காட்சிகள். ஒரு சில இடங்களில் 3D மூலமாக அன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் எப்படி, அங்கு, அந்த இடத்தில் உலாவினார்கள் என்பதை அழகாக காட்சிப் படுத்தி இருப்பார்கள்.   அதுபோல இந்த இடத்தை அழகு படுத்தலாம். அரசு வருமானத்தை  மேலும் ஈட்ட முடியும்.  

பயணிப்போம்...


No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...