Wednesday, May 1, 2024

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

 


கொடைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று
கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும்
அதைப்பார்க்கலையே’ பாடல் இசைத்துக் கொண்டிருக்க, கோரஸாக பாடிக்
கொண்டே ஒவ்வொரு வளைவு திரும்பும் போதும், ‘ஹேய் ஹேய்’ என
கூப்பாடு போட்டுக் கொண்டு அந்த இரண்டு ஜோடிகள் தங்கள் தேன்நிலவு
கொண்டாட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள்.

  “யேய் சுபனேஷ் அங்கே பாரேன் அடர்ந்த மரங்கள் ஒவ்வொன்றும் எவ்வளவு
உயரமா, அகலமா பார்க்கவே பிரமிப்பா இருக்குல்ல. காரை நிறுத்தேன்
எனக்கு அங்கே போய் அந்த மரத்தை எல்லாம் கட்டிப்பிடிக்கணும்
தோணுது..”என்றாள் வர்ஷா. 
“ஏம்மா உன் ஆளுகிட்டேயே மரத்தை கட்டிப் பிடிக்கிறேன் சொல்லறே..இது ரொம்ப மோசம்” என்றாள் தாரணி.
 “அட நீங்க வேற சித்த சும்மா வாங்க மா” என்ற வர்ஷா “ப்ளீஸ் ப்ளீஸ்ப்பா…காரை கொஞ்சம் நிறுத்தேன்”. 
“இதை விட இன்னும் அடர்த்தியா உயரமான மரங்கள் நிறைந்த காடுகள் வழியில் நிறைய இருக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போயிடலாமே”. 
“டேய் அவ தான் கேக்கறாளே நீ வண்டியை நிறுத்தேன்” என்றான் விஜய். அவனுக்கும் சற்று நடக்கலாம் என்று இருந்தது.
“ஆமாம் சுபனேஷ் கொஞ்சம் நிறுத்து. எனக்கும் அப்படியே காலாற சித்த
நேரம் நடந்துட்டு வரலானு தோணுது” என்று விஜயின் மனைவி தாரணியும்
சொன்னாள். 

மூவரும் மாற்றி மாற்றி சொல்லவும், மனைவி வர்ஷாவைப்
பார்த்து, “நீ சொல்லறபடி மரத்தைப் போய் கட்டிப் பிடி, கட்டிப்பிடி
கண்ணாளானு பாடு”னு சொல்லி விட்டு சிரித்தபடியே காரை ஓரமாக
நிறுத்தினான் சுபனேஷ்.
நால்வரும் அங்கிருந்து இறங்கி அந்த அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்த அடர்
வனத்தில் நடக்க ஆரம்பித்தார்கள். வர்ஷா கைகளை விரித்துக் கொண்டு
தன்னையே தட்டாமாலை சுற்றிக் கொண்டு தாவி தாவி ஓடினாள்.அவளை
விட்டு விடுதலையானது போல் உணர்ந்தாள். அவளின் மனம் அந்த
வனத்தின் அழகில் பறந்து கொண்டிருந்தது.

வர்ஷா ஓடி ஓடி பச்சையும், கறுப்பும் கலந்த நிறத்தில் பாசி ஏறி இருந்த மரங்களின் வளவளப்பையும் சொரசொரப்பையும் தொட்டுப் பார்த்தாள்.பல மரங்கள் அவள் இரண்டு கைகளுக்குள் அகப்படாத அளவில் பெருத்து இருந்தது. அவள் செயல்களைப் பார்த்து மற்றவர்கள் சிரித்துக் கொண்டே பின் தொடர, அவள் வெக்கப்பட்டு மேலும் ஓடினாள். அவளின் ஓட்டத்திற்கு அவர்களால் ஈடு கொடுத்து செல்ல இயலவில்லை. பின் தங்கி சென்றார்கள். சுபனேஷ் அவளின் குதுகலத்தை ரசித்துக் கொண்டே சென்றான்.

மரம், செடிகளின் மீது தனக்கு அதீத காதல் உண்டு என்று வர்ஷா அவனிடம் சொல்லி இருக்கிறாள்.இன்று அவளின் செய்கைகளை பார்க்கும் போது தான் அவளின் ஆழமான நேசிப்பு புரிந்தது. திருமணமாகி இரண்டு வாரம் தான் முடிந்திருக்கிறது. அவன் ப்ரெண்ட் விஜய்க்கு இரண்டு மாதங்கள் முன்பே திருமணம் முடிந்து விட்டது. விஜய், “கொடைக்கானல் போக உங்களுக்கும் சேர்த்து ரூம் போட்டுட்டேன் கிளம்புங்க” என்று சொன்ன போது சுபனேஷால் மறுக்க முடியவில்லை. அவர்களுடன் கிளம்பினார்கள். 

திடீரென வர்ஷாவின் “ஆ..ஆ..ஆ..ஆ…அம்மா” என்ற கதறல்
சத்தம் காட்டில் உள்ள மரங்களையும் நடுங்கச் செய்யும் அளவிற்கு காடு
முழுவதும் எதிரொலித்தது. மரத்தின் இலைகள் எல்லாம் அதிர்ச்சியில்
ஆடின. சுபனேஷ் “வர்ஷா...” என்று கத்தியபடியே ஓடினான். விஜயும்,
தாரணியும் அவனைப் பின் தொடர்ந்து ஓடினார்கள். அவள் நடுங்கிக்
கொண்டிருந்தாள். சுபனேஷைக் கண்டதும் ஓடிப் போய் கட்டிப் பிடித்துக்
கொண்டு அழ ஆரம்பித்தாள். “ஏய் என்னாச்சு என்னாச்சு”! அவள் கைகளை
நீட்டிக் காண்பித்த இடத்தில் வாகைப்பூ போல் உடலெங்கும் முடிகள்
புஸ்பஸ்வென்று இருக்க கறுப்பு நிறத்தில் குட்டி விலங்கு ஒன்று ஓடிக்
கொண்டிருந்தது.‌ அது என்ன? என ஒட்டு மொத்தக் கண்களும் உற்றுப்
பார்த்தும், உறுத்தலின் தாக்கம் அந்த விலங்கின் மீது பாய்ந்தது. அது
ஈர்ப்புடன் திரும்பி பார்த்தது. அதன் கண்கள் பழுப்பு நிறத்தில் கோழிகுண்டு
போல் ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்த வினாடியில் மியாவ் என்று கத்திக்
கொண்டே பாய்ந்தோடியது. “அட, ச்சே பூனை. இதுக்கா இந்த கத்து
கத்தினே!”என விஜய் கேட்டதும். “ஆமா இவரு கரப்பான் பூச்சியைக்
கண்டாலே ஓடுவாராம். வனாந்தரத்தில ஒரு விலங்கு ஓடி வந்து மேலே
மோதிச் சென்றால் கத்தாமல் என்ன செய்வாங்களாம்” என்று தாரணி,
விஜயை கடுப்பேற்றினாள். 

“டேய் சுபா நாம உடனே இந்த இடத்தை விட்டுகிளம்பிடலாம் டா” என்றான் விஜய்! 
“ஏன் டார்லிங் எதுக்கு கிளம்பணும்? எனக்கு இப்போ பயங்கர இன்டரஸ்டிங்கா
இருக்கு. இப்படியே இன்னும் கொஞ்சம் தூரம் போய் பார்க்கலாமே இன்னும்
ஏதாவது மிருகங்கள் கூட இருக்கலாம்” என்றாள் தாரணி. 

வர்ஷாவிற்கும் அந்த இடத்தை விட்டு உடனே போய்விடுவது நல்லது என்றே தோன்றியது. காரணம் மூன்று நாட்களுக்கு முன்பு தான், தன் அம்மாவின் வீட்டிற்கு எங்கிருந்தோ வந்த பூனை ஒன்று, வீட்டின் கொல்லைப்புற குளியறைக்குள் மூன்று குட்டிகளை போட்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் அந்த பூனை சுற்றிக் கொண்டே இருந்தது. அதன் குட்டிகள் ‘ங்ஙே ங்ஙே’ என முணகலாக விடாமல் சத்தம் செய்யது அவள் காதுகளுக்குள் நராசுரமாக கேட்டது. அவள் அம்மா வந்து பூனையை விரட்டி விட்டாள். தாய் பூனை மட்டும் வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தது. இரண்டு, மூன்று நாளில் குட்டிகள் கண் முழித்து ஊற ஆரம்பித்த அன்று மாலையில் பெரிய பூனை தன் குட்டிகளை ஒவ்வொன்றாக வாயில் கவ்விக் கொண்டு, அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்கு அகன்றதும் “உஷ் அப்பாடா தொல்லை விட்டது” என்றாள் அம்மா. 

இரண்டு குட்டிகளை எடுத்து சென்ற பிறகு, மூன்றாவது பூனைக்குட்டியை
எடுத்துச் செல்ல வெகுநேரம் கடந்தும் பெரிய பூனை வரவில்லை.
அப்போது, வீட்டினுள் இருந்த பூனைக்குட்டி திறந்திருந்த முன் கேட் வழியே
சாலைக்கு ஊர்ந்து செல்வதைக் கவனித்தாள். ‘உஷ் அப்பாடா, இந்த
பூனைக்குட்டி எப்படியோ, வீட்டை விட்டு போனால் சரி’ என்று எண்ணினாள்.
காரணம் பூனை, நாயெல்லாம் அவளுக்கு வளர்க்கப் பிடிக்காது. அதனுடைய
முடிகள் விழுந்து நம் சுவாசத்தின் வழியாக கூட, உடலுக்குள் சென்று
விடலாம் அதனால், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதிப்பு
ஏற்படும் என்பதை படித்து இருந்தாள். “அந்த தாய்ப் பூனை வந்து கூட்டிட்டு
போயிடும். புதுசா கல்யாணம் ஆனவ, மால நேரத்தில அங்கே நிக்காதே
உள்ளே வா” என்றாள் அம்மா. 

அவர்கள் உள்ளே வந்த சற்று நேரத்தில் நாய்கள் ஒன்றோடொன்று வ்வ் ..வவ்.. ..லொள் லொள்..ஊ..ஊ..என கத்திக் கொண்டு, ஊளையிட்டு, சண்டையிட்டு கொள்ளும் இரைச்சல் வீட்டுக்குள் கேட்டதும். ‘அய்யோ, நாய்க வந்துடுச்சு. அந்த பூனைக்குட்டி என்னாச்சோ’ என வர்ஷா மீண்டும் வெளியே ஓடி வந்தாள். அங்கே சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களை தெருவில் சென்ற ஒருவர் கல்லெடுத்தெறிந்து விரட்டிக் கொண்டிருந்தார். நாய்கள் கூட்டம் களைந்து ஓடியது. வேகமாக ஓடி வந்த நாய் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த பூனைக் குட்டியை கவ்விக் கொண்டது. வர்ஷா படபடப்போடு கேட்டை திறந்து வந்து நாயை விரட்டினாள். நாய் இவளின் சத்தம் கேட்டதும் வாயிலிருந்து
பூனைக்குட்டியை ஒரு உதறல் உதறியதும், பூனைக் குட்டி பரிதாபமாக
மூச்சில்லாமல் கீழே விழுந்தது.

வர்ஷாவின் கண்களில் கண்ணீர்..அவள் அம்மாவிடம் சென்று, “அம்மா அந்தப் பூனைக்குட்டியை இங்கேயே வச்சிருக்கலாம். பாவம்..வீணா ஒரு உசிரு போயிடுச்சு.”
 “அட இதுக்கு போயி கவலைப்படற. இந்த பூனை இருக்கே, அது சில சமயங்களில் தன்னுடைய குட்டியை கூட தின்னு போடும். இதெல்லாம் பெரிசா நினைச்சுகிட்டு இருக்காதே”னு அம்மா சொல்வதைக் கேட்ட பிறகும் அவளுடைய மனம் அமைதியடைவில்லை. 

இரவில் சுபனேஷிடம் பூனை சம்பவத்தை சொன்னாள். அவனும் சிரித்தபடியே “நாம கோழி, ஆடு, மீனெல்லாம் திங்கறோமே அப்பெல்லாம் நீ பாவப்படறீயா? இப்ப மட்டும் என்ன பாவம்!”
“இல்ல அது வேற இது வேற”
“எல்லாம் ஒன்னு தான் அதையே நினைக்காம தூங்கு சரியாயிடும்.”
அன்று இரவு அவள் நன்றாக உறங்கிய நிலையில் ‘ங்க.. ங்க.. ங்க..’என குழந்தை அழுவது போன்ற சத்தம் கேட்டு திடுக்கிட்டு
விழித்தாள். கணவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மீண்டும் குழந்தை
அழுவது போல்..‘ங்யா..ங்கயா..ங்கயா’.

 அவளுக்கு வியர்த்தது. மெதுவாக அறையை விட்டு வெளியே வந்து, ஹாலுக்கு வந்த போது, ‘ச்சே போய் தொலையேன் சனியனே, இந்த நேரத்தில் வந்து அழுதுட்டு இருக்கே’ என்று அவள் அம்மா ஜன்னலின் மீது இருந்த தாய்ப்பூனையை விரட்டிக் கொண்டிருந்தாள். வர்ஷா, எதுவும் பேசாமல் வந்த சுவடு தெரியாமல் அறைக்குள் சென்று படுத்தாள். ‘என் குழந்தையை, உங்கிட்ட தானே கொடுத்துட்டு போனேன் நீ அநியாயமா காவு கொடுத்துட்டியே’ என்று கதறவது போல அதன் கதறல் அவளுக்குள் உள்வாங்கியது. அவள் இரவு முழுவதும் தூங்கவில்லை. காலையில் எழுந்து கணவனிடம் சொன்னாள். 
“அட, எல்லாம் மனப்பிரமை . நீ போய், இன்னைக்கு ஹனிமூன் போறதுக்கு
நம்ம டிரஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணு. அங்கே போயிட்டு வந்தால்
எல்லாம் சரியாகும்” என்று சொன்னான். 

இப்போது, கொடைக்கானல் வந்தும் இத்தனை பேர் இருக்க தன்மீது பூனை வந்து மோதியதில் பயந்திருந்தாள். சுபனேஷ்க்கு அவள் பயம் புரிந்தது. உடனே, “சரிமா நாம கிளம்பலாம். இதெல்லாம் காடுகளில் சகஜம்” என்று சொல்லி விட்டு அவளை சமாதானம் செய்து காரில் ஏற்றினார்கள். கார் கிளம்பி சிறிது தூரம் சென்ற போது திடீரென ப்ரேக் போட்டான் விஜய். “என்னாச்சு விஜய்”
 “அங்கே பாரு!”
காரின் முன்னால் கறுப்பு பூனை ஒன்று குறுக்கே கடந்து சென்றது. பின் சீட்டில்
உட்கார்ந்து இருந்த வர்ஷா “ஏங்க மறுபடியும் பூனையா? பூனை குறுக்கே
போனால் அபசகுணம்னு அம்மா சொல்வாங்க..” 
“சரி இப்படியே திரும்பிடலாமா வர்ஷா” என்று விஜய் சிரித்தான். 
அவளுக்கு இன்னும் பயம் தெளிவாகல. 
“ஒரு விஷயம் தெரியுமா வர்ஷா? இந்த பூனைகள் மக்கள்
இருக்கும் இடத்தில் தான் வாழுமாம். அதனால, அந்தக் காலத்தில் போர்
செய்ய வரும் மன்னர்களுக்கு முன்பாக பூனை சென்றால் இங்கே மக்கள்
வசிக்கின்றனர் எனக் கருதி போர் செய்வதற்கு வேறு இடத்தை
தேர்ந்தெடுப்பார்களாம். மக்களை காப்பாற்றிய பூனைக்கு நாளாவட்டத்தில
அபசகுணம்னு பேரு பாரு.. அதெல்லாம் எதுவும் ஆகாது. நாம அறைக்கு
போயிட்டு, கிளம்பி வந்தால், குணா குகையை பார்க்கப் போக
லேட்டாயிடும். இப்படியே வண்டியை விடுவோம். நாம நேரா அங்கே போய்
வர்ஷாவின் பயத்தை எல்லாம் தூர எறிந்து விடலாம்” என்றான்.
அவர்கள் கார் குணா குகையை நோக்கி விரைந்தது. வழியில் ஒரு
ஓட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு கிளம்பினார்கள்..வர்ஷா
இப்போது தெளிவாக இருந்தாள்.
குணா குகை இருந்த இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பே வாகனத்தை
நிறுத்தி விட்டு அடர்ந்த மரங்களை கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
குணா குகை செல்லும் வழியில் இருந்த ஒரு மரத்தின் வேர் ஆக்டோபஸ்
போல் பரவி பிண்ணி இறுகி கிடந்தது. பார்க்க சற்று பயமாக கூட இருந்தது.

‘இந்த வேருக்கு திடீரென உயிர் வந்து எழுந்து கொள்ள ஆரம்பித்தால் இங்கே
இருக்கிற எத்தனை உயிரை மென்று முழுங்குமோ’ என நினைக்கும் போது
வர்ஷாவுக்கு உதறல் எடுத்தது. ‘என்ன எனக்கு மட்டும் இப்படியான கற்பனை
எல்லாம் வருகிறது ச்சே போ’ என்று கற்பனையை விரட்டி விட்டு அந்த
ஆக்டோபஸ் மரத்தின் விழுதுகளில் காலை வைத்த போது, வழவழப்பான
பாறையின் மீது நடந்தால் சறுக்கி விழுந்து விடுவோம் என்ற நடுக்கத்தில்
கவனமாக காலை வைத்து நடப்பது போல் சுபனேஷின் தோள்களை பிடித்துக்
கொண்டு மரத்தின் மீது நடந்தாள். பல கிளைகள் தலையில் முட்டும்
அளவிற்கு தாழ்ந்து தொங்கியது. தொங்கிய விழுதுகளைப் எம்பி குதித்து
பிடித்து தொற்றியபடி ஊஞ்சல் ஆடியவர்களை மரம் ஆட்டுவித்துக்
கொண்டிருந்தது.

மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அத்தனை கூட்டத்தையும் கடந்து
தான் அந்த சம்பவம் ஆம்! . கறுப்பு பூனை ஒன்று மீண்டும் பாய்ந்து ஓடி
வந்து வர்ஷாவின் காலருகே மோதி மியாவ் என்று கத்திச் சென்றது.
எல்லோரும் காட்டுப்பூனையை படம் பிடித்து கொண்டிருந்தார்கள். வர்ஷா
மயக்கமடைந்து கீழே விழுந்தாள். 
“விஜய், இந்த பூனைகளுக்கு தீயசக்திகள்
கண்ணுக்குத் தெரியுமாம். நான் படிச்சிருக்கேன் வர்ஷாவைச் சுத்தி ஏதோ தீய
சக்தி நடமாட்டம் இருக்கிறதோ அது தான் அவளையே சுத்தி சுத்தி
வருகிறதோ” அவன் காதில் கிசுகிசுத்தாள்.
“ஏய் அவ மயக்கமா கிடக்கிறா
தீயசக்தியாம் உனக்கு என்னவெல்லாம் கற்பனை வருது பார்” என்று
முறைத்து விட்டு, வர்ஷா முகத்தில் தண்ணீர் அடித்தான்.
அவள் எழுந்த பின்பும், வர்ஷா காதுக்குள் மட்டும் ‘மியாவ் மியாவ்’ என்ற
சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. 
“சுபா நாம இந்த இடத்தை விட்டு
கிளம்பிடலாம்.ரிசார்ட் போகலாம் எனக்கு என்னவோ நான் பூனைக்குட்டியை
கண்ணெதிரே கொல்ல விட்ட பாவம் தான் என்னை ஊரு விட்டு ஊரு
வந்தும் தொரத்தி அடிக்குதோனு தோணுது. நாம இப்ப இந்தக் குணா
குகையை பார்க்கப் போக வேண்டாம் ப்ளீஸ்..” என்றாள்

“விஜய் நீங்க இரண்டு பேரும் குணா குகை பார்த்துட்டு, கால்டாக்ஸி பிடித்து
தங்குமிடம் வந்திடறீங்களா? இவ்வளவு தூரம் வந்தாச்சு ஏன் பார்க்காம
வர்றீங்க”
”அட போப்பா ஊரே குணா குகையை வீடியோ போட்டு போட்டு
கண்ணு முன்னாடி நிறுத்தி வச்சிருக்கு. அதுவும் இந்த நிலையில் வர்ஷாவை
முதலில் சரி செய்வோம் வா. குணா குகை எங்கும் போகாது” என்று
அவர்களுடனே கிளம்பி சென்றார்கள்.
மலைச்சரிவில் இருந்த அந்த தங்கும் அறையின் முன்பாக காரை
நிறுத்தினார்கள். ரிசார்ட் சுற்றிலும், விதவிதமான பூக்கள் அதன் அழகு
மனசுக்கு ரம்மியமாக இருந்தது. ஆங்காங்கே உயர்ந்த மரங்களும்,
போகன்வில்லா மரங்களும் இருந்தன. அவர்கள் தாங்கும் ரிசார்ட்டில் மூன்று
அறையும், ஒரு ஹாலும் இருந்தது. அவரவர் அறையில் ட்ராலியை வைத்து
விட்டு..ஹாலில் இருந்த சோஃபாவில் சாய்ந்தார்கள். “நீ போய் முதல்ல
குளிச்சிட்டு வா வர்ஷா. உன்னுடைய பயமெல்லாம் போயிரும்” என்று
சொல்லிக் கொண்டே அங்கே இருந்த தொலைக்காட்சியை சுபனேஷ் ஆன்
செய்தான்.
நீயூஸ் சேனல் வந்தது. அதில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ”குணாகுகை
அருகே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தழைத்து ஓங்கிய ஆலமரம் ஒன்று
தன் விழுதுகளை பரப்பி, நிலங்களிலும் வேர் விட்டு ஆக்டோபஸ் போல்
கோணல்மானலாக விரித்துக் கிடக்கும் காட்சியை அங்கே சென்றவர்கள்
பார்த்திருக்கலாம். சற்று முன் வந்த செய்தி குணாகுகை செல்லும் வழியில்
நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும், சிலர் சரிவுகளில் சிக்கி இருக்கலாம்
என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. அதைப் பற்றிய தகவல்கள் விரைவில்..”

அந்த செய்தியைக் கேட்டு நால்வரும் உறைந்து நின்றார்கள். தாரணி தான்
வாய் திறந்தாள். “அப்போ, வர்ஷாவை தொடர்ந்து வந்த, அந்த கறுப்பு
பூனையின் கண்களுக்கு ஏதோ ஒரு தீயசக்தி தெரிந்து இருந்திருக்குமோ?
அதனால் தான் நம்மை தொடர்ந்து வந்திருக்குமோ?” என்றாள். வர்ஷாவின்
மனதிலோ வீட்டில் பூனைக்குட்டியை இழந்த தாய் பூனை மியாவ், மியாவ்
எனக் கத்திய அந்த சத்தம், அவளுக்குள் நான் உன்னை நேசிக்கிறேன்
என்று சொல்வது போல் இருந்தது .

- யசோதா பழனிச்சாமி ஈரோடு.

எனது சிறுவயது ஞாபகங்களிலிருந்து... - யோகாசக்தி மீனா

  


ரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை விட்டு விடுவார்கள். வெயில் தகித்தாலும் தண்ணீர் பந்தல், மோர் பந்தல், அன்னதானம், பாணக்கம் என தூள் பறக்கும். 


முதல் 10 நாட்களும் தினமும் மாலை 5 மணி அளவில் மதுரை மணக்கும் உருட்டுக்கட்டு மல்லிகைப் பூ வாங்கி ரெட்டை ஜடை பின்னலலில் வைத்துக்கொண்டு அக்கம் பக்கம் அனைவரும் சேர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் திருவிழாவிற்கும் மாட வீதி உலாக்களுக்கும் சென்று வருவோம். 

அப்போது பெரியவர்கள் கொடுக்கும் திருவிழாக் காசு உண்டியலில் சேர்த்து வைப்போம். 

அத்தை, சித்தப்பா, பெரியப்பா, மாமா என உறவினர்கள் கட்டாயம் வீட்டில் இருப்பார்கள். விளையாட்டுக்குப் பஞ்சமே இல்லை. 

ஆஞ்சநேயர் வேடமிட்டு தண்ணீர் குடுவைகளில் தண்ணீர் பீய்ச்சி அடிப்பார்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும். இதுவும் ஒருவகை வேண்டுதல் தான்.

பட்டாபிஷேகத்தன்று மீனாட்சி அம்மன் செங்கோல் வாங்கி கம்பீரமாக வரும் அழகே அழகு. அடுத்த ஆறு மாதம் மீனாட்சி அம்மன் ஆட்சி.

ஒட்டகங்கள் குதிரைகளின் ஒய்யார அணிவகுப்பு, கோலாட்டம் , மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், பரதநாட்டியம் என கணக்கில் அடங்கா கலைஞர்கள் பங்கு பெறுவர். அது மட்டுமா?. எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு முருகர் போல , மீனாட்சி அம்மன் போல, கருப்பர் போல, அழகர் போல, பெருமாள் போல வேடமிட்டு திருவிழாவிற்கு அழைத்து வருகிறேன் என்று வேண்டிக் கொள்பவர்களும் உண்டு. குழந்தைகள் மீனாட்சி அம்மன் போல் வேடமிட்டு உலா வருவதைக் காண கண் கோடி வேண்டும்.

திருக்கல்யாணத்திற்கு தங்கள் வீட்டு விருந்துக்கு காய் நறுக்குவது போல் அனைவரும் முதல் நாள் அருவாமனை கத்தி எல்லாம் எடுத்துக் கொண்டு கோயிலில் போய் காய் நறுக்கிக் கொடுப்பார்கள்.

திருக்கல்யாணத்திற்கு பாஸ் வாங்கி அம்மாக்கள் கட்டாயம் சென்று விடுவார்கள். பிரம்மாண்டமான திருக்கல்யாண விருந்து அமர்க்களப்படும். அன்றிரவே பூப்பல்லாக்கில் சாமி ஊர்வலம். அதிகாலை தேரோட்டத்திற்கு நசுங்காமல் சென்று திரும்பி வருவது பெரும் சாமர்த்தியம். 

அதுவரையில் கள்ளழகர் நிதானமாக அழகர் மலையிலிருந்து இறங்கி அன்போடு அழைக்கும் பக்தர்கள் வீட்டுக்கும் மண்டகப்பிடிக்கும்(மண்டபம்) எல்லாம் சென்று விருந்தாடி விட்டு எதிர் சேவை முடித்து வைகை ஆற்றில் இறங்கும் பொழுது திருமணம் ஏற்கனவே முடிந்த செய்தியை கேட்டு கோபித்துக் கொண்டு கிளம்பி விடுவார். கள்ளழகர் எந்த வண்ணப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குகிறார் என்பதைப் பொறுத்து அந்த ஆண்டு எப்படி செழிப்பாக இருக்கும் என்பதைக் கணிப்பர்.

" வாராரு வாராரு அழகர் வாராருருரு" என்ற குரல் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம் மதுரையில். 

" வேட்டு சத்தம் கேட்டுருச்சு..சாமி வந்துருச்சு " என்று அக்கம் பக்கம் குரல் கேட்டவுடன் அடுத்த நொடி ஓடிச் சென்று வீட்டின் அருகே தங்க குதிரையில் கொள்ளை அழகுடன் வரும் கள்ளழகரை கண்களில் நிரப்பிக் கொண்டால் தான் பிறவிப் பயன் கிட்டும். 

சர்க்கரைப் பிரசாதங்களை வாங்கிக்கொண்டு அழகர் பின்னாலே கிளம்பி விடுவோம். அவரைச் சுற்றி சுற்றி அங்கங்கு சென்று தரிசித்து விட்டுத்தான் வீடு திரும்புவது வழக்கம். 

வண்டியூரில் இருக்கும் நட்புக்கள் அவர்கள் பகுதியில் இன்று அழகர் தங்குவதால் வீட்டிற்கு அழைப்பார்கள். அன்றுதான் அங்கு சிவராத்திரி. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அன்னதானம் என்று ஒரே களைக்கட்டும். 

மறுநாள் கிளம்பி சேஷ வாகனத்தில் அழகர் மலைக்கு புறப்பட்டு விடுவார். அவரை அனுப்பி வைத்து விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார்கள். 

அப்படி ஒரு உணர்வுப்பூர்வமான திருவிழா. அடுத்த இரண்டு வாரங்கள் ஊரிலிருந்து யாருக்கு பேசினாலும் 
" திருவிழாவுக்கு எப்ப வர? " "இன்னுமா கிளம்பல" என்பதுதான் முதல் கேள்வி.

இன்றளவிலும் பெரிதாக எதுவுமே மாறவில்லை. 

சித்திரை கொடி பறக்கும்
கத்திரி வெயில் அடிக்கும்
மதுரை அழகு மதுரை

சுத்தியும் சனம் இருக்கும்
முத்திரை பதிக்க வரும்
குதிரை அழகர் குதிரை

இதுவும் திருவிழாவை குறிக்கும் ஒரு பாடல் தான். 

உங்கள் திருவிழா அனுபவங்களைப் பற்றிப் பகிரலாமே. படிக்க ஆவலுடன் காத்திருப்போம்!

- யோகாசக்தி மீனா 

பவானி2 நொய்யல் - காலிங்கராயன் தடம் 10 - க்ருஷ்

 


காவிரியில் இருந்து காங்கேயன்பாளையம் ஊர் கடந்து, அப்படியே கரையில் செல்லாமல் நேராக சென்றால் சாவடிப்பாளையம் பேருந்து நிறுத்தம். அந்தப் பாதையில் செல்லாமல், மீண்டும் காலிங்கராயன் கரையில் தொடர்ந்தோம்.  அடுத்த முக்கியமான இடம் சாவடிப்பாளையம் தாண்டி சற்று தொலைவில் சாவடிப்பாளையம்-பஞ்சலிங்கபுரம் நடுவில்.  அது ஈரோடு-கரூர் நெடுஞ்சாலை, ஈரோடு-கரூர் ரயில் பாதை, மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் மூன்றும் ஓரிடத்தில் அருகருகே இணையாக செல்லுமிடம்.  காலிங்கராயன் எனக்கு முதன்முதலில் அறிமுகமான இடம் இந்த இடமாகத்தான் இருக்கும்.  ஈரோடு-கரூர் சாலையில் இருந்து மொடக்குறிச்சி செல்ல ரயில் தண்டவாளத்தின் அடியில் ஒரு நுழைவு பாலம் இருக்கும். 


மழைக் காலங்களில் அந்த பாலத்தின் அடியில் எப்பொழுதும் தண்ணீர் ஓடை போல ஒரு அடிக்கு மேல் ஓடும்.  அதிலும் நாங்கள் வண்டியில் வருவோம்.  வண்டி சரியாக நடு தண்ணீரில் நடு பாலத்தின் அடியில் சைலன்சரில் நீர் புகுந்து நின்றுவிடும். இறங்கி தள்ளு தள்ளு தான். இன்று அந்த இடத்தில் எஸ் கே எம் ஒரு தொடர்வண்டி நிறுத்தத்தை சரக்கு ஏற்ற இறக்க ஏற்படுத்தி உள்ளார்.  இந்த ஏரியாவின் வளர்ச்சியில் அவரின் பங்கு நிறைய. பாலத்தின் இடதுபுறம் சென்றால் ஒரு கோசாலை உள்ளது.   ஈரோட்டின் வடக்கத்திய தொழிலதிபர்களால் உருவாக்கப்பட்ட இடம். இதுவும் என் சிறுவயதில் இல்லை.   இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து ரக மாடுகளும் உள்ளது என்றார்கள்.


மீண்டும் பயணத்துக்கு வருவோம்.   ஓரிடத்தில் பெரிய ஆலமரம் ஒன்று வாய்க்காலின் அந்தப்புறம் இருந்தது.  அந்த இடத்தில் வாய்க்காலைத் தாண்ட ஒரு பாலம் இருந்ததால் நாங்கள் அந்த ஆலமரத்தின் அருகில் சென்றோம்.   விழுதுகள் எங்களை ஊஞ்சல் ஆட வா வா என அழைதத்து.  அருகில் வாய்க்கால் ஆலமரத்து நிழல்.  இந்த வெயிலுக்கு வாய்க்காலில் குதித்துவிட்டு இந்த ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருப்பது எவ்வளவு மகிழ்வாக இருக்கும்? அதனை ஒட்டியே ஒரு கதிரடிக்கும் களம்.  ’இந்த இடம் கூட அழகாக உள்ளது. மக்களுக்கு ஒரு அவுட்டிங் போல இங்கு புத்தகம் வெளியிடலாமா?’ என பேசிக்கொண்டே கிளம்பினோம்.  


அடுத்து பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலை வாய்க்காலில் குறுக்கிட்டது. இந்த இடத்தில் ஒரு சிறிய மலரும் நினைவுகள் வந்து சென்றது.  காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுத்துக் கொண்டு செல்லும் பொழுது குறுக்கிடும்  இந்த இடத்தைப் பற்றி #காவிரி2தேம்ஸ் நூலில் விளக்கமாக எழுதி இருப்பேன்.  ஒரு கல் பாலம் அதனைக் கடந்து செல்ல உதவும். அந்தக் கல்பாலத்திலிருந்து சிறுமிகள் சிறுவர்கள் வாய்க்காலில் குதித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  நமக்கே குதித்து விளையாட தோன்றும் போது, சிறுவர்களுக்கு அங்கிருந்து செல்லவே தோன்றாது.  


இன்று அது புதிய கான்ங்ரீட் பாலமாக தரம் உயர்த்தப்பட்டு இருந்தது.  அதற்கு சற்று தள்ளி ஒரு நெல் அறுவடை செய்யும் களம், இப்பொழுது பாழடைந்து கிடந்தது.   


காலிங்கராயன் வாய்க்கால் இந்தப்பகுதியில் சற்று அகன்று இருந்தது. கரையின் இடதுபுறம் வயல்வெளிகள். தூரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பள்ளத்தில் காவிரி.  காலிங்கராயன் தண்ணீர் வந்து ஒரு மாதம் ஆன நிலையில் இருந்ததால் அப்பொழுதுதான் நாற்றங்கால் தயார் செய்துகொண்டு இருந்தார்கள்.  நாற்று நட்டுக் கொண்டு சற்று பசுமையாக இருந்தது.  அங்கங்கு மஞ்சள்.  ரசித்துக்கொண்டு விரைவாக சென்று கொண்டு இருந்தோம்.  


பஞ்சலிங்கபுரத்தை அடுத்து வரும் இடம் காவிரியை ஒட்டி இருக்கும் சிலுவன் கொம்பு.  அங்கு பலங்கால பச்சியம்மன் கொயில் இருக்கும்.  10-12 பெரிய முனிகள் அங்கு இருக்கும்.  அந்த முனிகள் ஆணும் பெண்ணும் கலந்த முனிகளைப்போல இருக்கும். . ஊரிலிருந்து ஞாயிறுகளில் கிடாவெட்ட சிலுவன் கொம்பு வருபவர்கள் அதிகம். 


ஒரு சிறு பாலத்தில் இருந்து வந்தவர்கள் வண்டியை நிறுத்தினார்கள்.  அவர்கள் கொண்டு வந்த கூடையில் இருந்ததை அப்படியே வாய்க்காலில் கொட்டினார்கள். ப்ராய்லர் கடையின் கழிவுகள். பார்த்துக் கடந்த நாங்கள் அதிர்ச்சி அடைந்து அப்படியே வண்டியைத் திருப்பி அவர்கள் முன் நிறுத்தினோம். 

 ”என்ன பண்ணறீங்க” என்றார் அண்ணன்.  

“அது வந்து சார்…”.  அவர் எங்களை அலுவலர்களாக நினைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.  

”தண்ணிய அசுத்தபடுத்த எப்படீங்க மனசு வருது” என ஆரம்பித்து கொஞ்ச நேரம். கடிந்து கொண்டார். 

” சாரி சார்.. இனிமே இங்க கொட்டலைங்க” என்றார்.  


 நாங்கள் பார்த்தவரை வாய்க்கால் தண்ணீரை மாசு படுத்துவதில் இந்த ஊர் அந்த ஊர் என சொல்ல முடியாது.   ஒருவருக்கொருவர் சலைத்தவர்கள் அல்ல.    


- தொடர்வோம்.



ஊருசுத்தி - தனபால் பவானி

   


  பயணங்கள் என்பது கவலைகளை மூட்டைகட்டி மூளையின் மூலையில் போட்டுவிட்டு மனதையும் நினைவுகளையும் எப்போதுமே ஈரமாகவே வைத்திருப்பவை. காலங்கள் பல கடந்தபோதும் எப்போதோ போய் வந்த பயணங்களின் சுவடுகள் இதமாய் கொடுக்கும் ஒத்தடம் போல வெதுவெதுப்பாய் சுட்டபடி மனதின் எல்லா பக்கங்களிலும் இருந்து எட்டிப்பார்க்கும். அப்படி எப்போதோ போய் வந்த பயணமொன்று இன்னும் இதமாய் நினைவுகளை மீட்டுகிறது கம்பிகள் அறுந்தபின்னும் இசை கசியும் ஒரு வீணையைப்போல.


நீண்ட நாட்களாகவே "பொன்னியின் செல்வன்" கதை நடந்ததாக கூறும் இடங்களுக்கு ஒருமுறை போய்வரவேண்டுமென ஆசை உள்ளுக்குள் உழன்றுகொண்டே இருந்தது. சரியான நட்பும், சரியான காலமும் வாய்த்துவிட்டால் நினைத்ததை விட அதிகமான இடங்களையும் அனுபவங்களையும் நினைவுகளில் சுமக்கலாம் என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படித்தான் அந்த பயணமும் அமைந்தது.
 
2016 செப்டெம்பர் மாத இறுதியில்  சென்னையிலிருந்து தொடங்கிய பயணத்தில் முதலில் போனது "ஆலம்பாறை கோட்டை". சென்னையிலிருந்து மகாபலிபுரம் வழியாக போனால் 110KM தூரத்தில் உள்ளது இந்த பழங்கால சிதிலமடைந்த கோட்டை. இதை  “கோட்டை” என்று சொல்வதை விட கோட்டை இருந்த இடமென்று சொல்வதுதான் பொருந்தும்.  ஒரு காலத்தில் இந்நகரை ஆண்ட மன்னர்கள் கடல் வழி வணிகங்களுக்காக உருவாக்கிய கோட்டையாக இருக்கலாம். செங்கற்களால் மட்டுமே கட்டப்பட்டிருந்த கோட்டை முற்றிலும் சிதைந்து தோட்டத்து பங்களாவின் மூலையில் குடிசைக்குள் சிறைவைத்த வயதான பாட்டியைப்போல தன் அனுபவத்தையெல்லாம் இழந்து உதிர்ந்து நிற்கிறது. இடிந்து விழுந்திருந்த சுற்றுச்சுவர்களின் இடைவெளிகளை நுழைவு வாயில்களாக மாற்றி நின்றுகொண்டிருந்தது. பிரம்மாண்ட அணிலொன்று கடல்பார்த்தபடி உட்கார்ந்திருப்பது போல இருந்தது உடைந்துகிடந்த அந்த சுவர். ஒருகாலத்தில் அது கலங்கரைவிளக்கமாக கூட இருந்திருக்கலாம். இதைப்போலவே கிணறு வடிவில் ஒரு தொட்டி , பல ஜன்னல்கள் வைத்த பெரிய அறை, படிக்கட்டுகள் நிறைந்த மாடிக்கு போகும் வழி, படகுத்துறை, கடலுக்கு நடுவே குட்டி தீவு போல மணல்திட்டு என எத்தனையோ விஷயங்கள் ரசிக்க ரசிக்க ரம்மியமாய் இருந்தது. இப்போதும் அந்த மன்னர்களின் ஆட்சியாகவே இருந்திருந்தால் எத்தனை அழகாய் இருந்திருக்குமென்ற கேள்விக்கு பதிலாய் பெருமூச்சொன்று மட்டுமே வந்தது. போகன் படத்தில் வரும் “செந்தூரா” பாடலில் இதை அத்தனை அழகாக வீடியோவாக காட்டியிருப்பார்கள். புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடம்.



ஆலம்பாறை கோட்டையிலிருந்து அடுத்ததாய் நாங்கள் போன இடம் பிச்சாவரம். சிதம்பரத்துக்கு அருகே கடலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆலம்பரையிலிருந்து 120KM வரும். "பேக் வாட்டர் லேக்" என்று சொல்லும் கடல்நீர் நிரம்பிய ஏரியில் படகுசவாரி. தசாவதாரம் படத்தில் கமலை சிலையோடு கட்டிக்கொண்டுபோய் நீருக்குள் மூழ்கடிக்கும் இடம். இங்கு தண்ணீரில் வளர்ந்திருக்கும் "சுரபுன்னை" மரங்களால் நிரம்பிய தீவுகள் குட்டிகுட்டியாய் நிறைய இருக்கின்றன. இந்தக்காடுகளை "அலையாத்திக்காடுகள்" என அழைக்கிறார்கள். இங்குள்ள மரங்களின் காய்களில் இருந்துவிழும் விதைகளால் மீண்டும் மரங்கள் வளர்வதாக சொல்லப்படுகிறது. விதவிதமான படகுகள் போக்குவரத்தை சுற்றுலாத்துறை செய்திருக்கிறது. அதைப்போலவே "விதவிதமான" கட்டணங்களும் உண்டு. நாங்கள் போனது துடுப்பு போடும் வகை படகில். இதில் படகோட்டியாக வந்தவர்  நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே வந்தார்.  அதிகாரிகள் தங்கும் விடுதி தண்ணீர் சூழ்ந்த நடுமையத்தில் சுனாமியின் தாக்கத்தால் இடிந்து கிடந்தது. சட்டென செடிக்குள் இருந்து பறக்கும் விதவிதமான பறவைகள், நீளமாய் வளர்ந்த மரத்தின் வேர்கள், படகுகள் போகும் பாதைக்கு தக்கவாறு வளர்ந்திருக்கும் மரங்கள் என இதை நினைக்கும்போதே அமேஸான்  காடுகளின் பிரம்மாண்டத்தையும் பயத்தையும் உணர முடிகிறது. கட்டிடங்களின் நடுவே மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஒருமுறை இங்கு சென்றால் காடுகளின் நடுவே வாழும் வாழ்வின் ஒரு சில மணிநேரங்களை உணரலாம்.

அன்றைய இரவு மன்னார்குடியில் நண்பரின் வீட்டில் நல்ல ஓய்வுக்குப்பின் விடிந்த காலையில் கிளம்பி தஞ்சாவூர் போனோம். வழியெங்கும் தஞ்சை நெற்களஞ்சியத்தின்  அழகு கண்கொள்ளா காட்சி பச்சை போர்த்திய நெல்வயல்கள், சாலையின் இரண்டு பக்கமும் வளர்ந்து நிற்கும் அரணாய் நிழல் பரப்பும் புளியமரங்கள் அழகு. தஞ்சை சென்றதும்  முதலில் சோழர்கள் அருங்காட்சியகம் போனோம்.  அருங்காட்சியகத்தின் கண்ணாடி பேழைக்குள் இருக்கின்றன சோழர்கள் பயன்படுத்திய பொருட்களும் உலகிற்கே சவால் விட்ட தமிழர்களின் வீரத்திற்கு துணைநின்ற சில ஆயுதங்களும்.  அதே இடத்தின் அருகில் ராஜராஜ சோழனின் மணிமண்டபத்தில் குடித்துவிட்டு  தூங்கிக்கொண்டிருந்தார்கள், இன்றைய தமிழ்நாட்டின் சில "வீரர்கள்". உலகெங்கும் தமிழனின் வீரத்தை கல்வெட்டுகளில் பதித்த அந்தமாவீரனின் மணிமண்டப சுவர்கள் சுமந்துகொண்டிருக்கின்றன, யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு போன பழைய காதலிகளின் பெயர்களை.

தஞ்சை அரண்மனையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பழங்கால பொருட்களின் வரிசையில் இருக்கிறது அம்மிக்கல்லும், ஆட்டாங்கல்லும். தங்கக்காசுகளையும், நகைகளையும் போட்டு வைக்கும் மிகப்பெரிய மரப்பெட்டிகளில் இன்னும் அந்த வீரம் உறங்கிக்கொண்டிருக்கலாம். அந்த அரண்மனையில் நடக்கும்போது "ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட , சோழர்குல தில" என்று நீளும் கம்பீர சொற்கள் காதுகளுக்குள் உருளுவதை உணரமுடிந்தது. தலையாட்டி பொம்மைகளின் பிரம்மாண்ட உருவ சிலைகள் அரண்மையின் இருபக்கங்களிலும் தலையாட்டாமல் இருந்தன. பயிற்சி ஆசிரியர் கல்லூரியில் இருந்து வந்த பெண்கள், தன் மகனை தேர் ஏற்றிக்கொன்ற மனுநீதி சோழனைப்பற்றி கேட்ட கதையால் புருவம் உயர்த்திய போது தெரிந்தது கல்விமுறை கட்டமைப்பின் மீதான வருத்தம். அரண்மனை வெளியே தலையாட்டி பொம்மைகள் செய்யும் கடைகள் சாலையின் இரு பக்கங்களிலும் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் வேலை செய்யும் அத்தனை பேரும் உளிகளை பயன்படுத்தாத சிற்பிகள்தான்.

சூரியன் மறையத்தொடங்கிய மாலையில் இருந்து இரவு வரை தஞ்சை பெரியகோவிலின் அழகை பிரமிப்பு அகலாமல் ரசிக்க முடிந்தது. இதற்கு முன்னால் பலமுறை போயிருந்தாலும் இந்தமுறை பொறுமையாய், நிதானமாய் ரசித்து ரசித்து பார்க்க பலவிஷயங்கள் இருந்தன. கோவில் முழுவதும் ராஜராஜசோழனின் மேற்பார்வையில் கட்டியிருப்பதன் நேர்த்தி இருக்கிறது. கோவில் முழுவதும் கற்கள் அடுக்கிய இடங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஆனால் நந்தியின் வலப்பக்கம் இருக்கும் ஒரு சிறு கோவிலில் கற்கள் கோணல் மாணலாய் வைத்து கட்டப்பட்டிருக்கும். இதை ராஜராஜசோழன் இருக்கும்போது கட்டியிருக்க வாய்ப்பு மிகக்குறைவு. பரந்துவிரிந்த புல்தரையில் ஓடி விளையாடும் குழந்தைகளை ரசிக்கும் கோவில் சிற்பங்கள், யானையிடம் ஆசிர்வாதம் வாங்க பயப்படும் ஒரு புதுப்பெண், கைப்பேசியில் செல்பி எடுக்கும் இரண்டு குழந்தைகள், வாண்டுகளிடம் சிக்கிக்கொண்ட கைப்பேசியை பிடுங்க துரத்திக்கொண்டு ஓடும் தகப்பன், எறும்புக்குழி மீது நின்றுவிட்டு கடிக்கும் எறும்புகளை திட்டியபடி நகரும் ஒரு வாலிபன், திருநீறை கணவனின் நெற்றியில் வைத்துவிட்டு அது கண்களில் விழுந்துவிடாமல் இருக்க கைகுவித்து ஊதும் ஒரு மனைவியென இன்னும் ரசிக்க நிறைய விஷயங்கள் அங்கே இருந்தன. எத்தனை முறை கிடைத்தாலும் இனிக்கும் காதலியின் முத்தங்களைப்போல எத்தனை முறை ரசித்தாலும் குறையாத பிரமிப்பின் உச்சம் தஞ்சை பெரியகோவில்.

மூன்றாம் நாள் கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சையிலிருந்து 80KM தொலைவில் தஞ்சையைப்போலவே அழகான கோவில்தான். ஆனால் அத்தனை கூட்டமில்லாதது வருத்தம். நாங்கள் போனபோது கருவறை பூட்டப்பட்டிருந்தது. உள் நுழைந்ததும் இடப்பக்கம் இருக்கும் கிணற்று தண்ணீர் அத்தனை ருசி. சுற்றியுள்ள மதில் சுவர்களில் பல கற்கள் காணாமல் போயிருந்ததால் நிறைய இடங்களில் வெறுமை. கோவிலை சுற்றி ரசித்துவிட்டு திரும்பினோம். கோவிலின் வெளியே உள்ள தெப்பக்குளத்தில் நிறைய அழுக்கடைந்த கொஞ்சமான தண்ணியில் ஒரு ஆமை தலைநீட்டி பார்த்துவிட்டு ஒளிந்துகொண்டது. பொன்னியின் செல்வனில் பூங்குழலி படகோட்டும் கோடியக்கரை பகுதிக்கு போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஊருக்கு திரும்பும் வழியில் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது வந்தியத்தேவன் குதிரையின் குளம்படி சத்தம் காதுகளில் கேட்பதாக தோன்றியது. இருகரைகளையும் தொட்டபடி ஓடிய கொள்ளிடம் ஆற்றில் ஒரு சொட்டு கூட தண்ணீரில்லாமல் வறண்டு கிடந்தது. மிகப்பெரிய அளவில் மணல் திருட்டு நடந்ததற்கான ஆதாரத்தை அங்கங்கே இருந்த குழிகள் கதறியபடி கூறிக்கொண்டிருந்தன கேட்பதற்குத்தான் ஆளில்லை. நிறைவான மனதோடும், குறையாத கனவோடும் ஊர் திரும்பினோம்.

இப்போதும் கூட எப்போதாவது போரடித்தால் வண்டியை எடுத்துக்கொண்டு ஊருசுத்த கிளம்பிவிடுவதுண்டு. பெரும்பாலும் தனிமையின் துணையோடு போகும் பயணங்களில் ஒரு சுதந்திரத்தை உணர முடியும். வெளியே போய் ஊருசுத்த போதிய நேரம் இல்லையென்றாலும் உள்ளூரில் நான்கு தெருக்களுக்குள் ஒரு ரவுண்ட் போய்விட்டு வந்தாலே மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி பாயும். அது ஒரு போதை போல, ஊருசுத்துவதும் ஒருவித போதைதான். ஒவ்வொரு பயணத்தின் போதும் பல ஜன்னல்கள் திறக்கத்தான் செய்கின்றன, பல ஆச்சரியங்கள் பூச்சொரிகின்றன, மனதின் இடுக்குகளில் பரவசம் வந்து அப்பிக்கொள்கிறது, சுத்தமான காற்று நுரையீரலின் ஆழம் வரை செல்கிறது, பழைய கவலைகள் மறக்கின்றன, புதிய மனிதர்கள் கிடைக்கிறார்கள்.

பயணங்கள் எத்தனை தூரம் நீள்கிறதோ அத்தனை புது விஷயங்களை மனது உள்வாங்கிக்கொள்கிறது. இன்னும் இன்னும் பயணிக்க சிறகுகள் விரிக்க ஏங்குகிறது. தமிழ்நாட்டிலேயே எத்தனையோ இடங்கள் இன்னும் பார்க்க வேண்டியுள்ளது. காலங்களும் நட்புகளும் அதற்கு இசையும் தருணங்களில் இன்னும் பயணிக்கணும், இன்னும் ஊருசுத்தணும்.

--- தனபால் பவானி 

இரகசியம் - Abu G

 



 "எண்ணம் போல் வாழ்க்கை" என்னும் கூற்றை நாம் அனைவரும் அறிந்திருப்போம். வாழ்க்கையில் எல்லாமே எண்ணங்களால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அனைத்து எண்ணங்களும் நிஜமாக உருப்பெறவில்லை. வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டும் தான் கிடைக்கிறது. சிலருக்கு தெரிந்த இரகசியம் (இலக்கை அடைவதற்கு) பலருக்கும் பயன்பட வேண்டும். நம்முடைய எண்ணங்களை நாம் மேம்படுத்திக் கொண்டால் நிறைவேறா எண்ணங்களையும் நிஜமாக மாற்றி முழுமையான வெற்றியை அடையலாம்.


எண்ணங்கள் தான் மனதையும், சிறப்பான எதிர்கால வாழ்க்கையையும் வடிவமைக்குகின்றன. ஒவ்வொருவரின் இயல்புத்தன்மை தான், அவரின் மனதை வடிவமைக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய "இயல்புத் தன்மையை" அறிந்து கொள்ள வேண்டும். நாம் நம் மனதை வடிவமைப்பதன் மூலமாகச், சிறந்த எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும்.

யார் சாதனையாளர்கள் ?

"நான் என் இலக்கை அடையும் வரை உறுதியோடு முயற்சி செய்து கொண்டிருப்பேன்" என்று விடாமுயற்சியோடு போராடுபவர்களே சாதனையாளர்கள். சிலமுறை முயன்று முயன்று தோற்று விட்டு, "இனி என்னால் முடியாது" என்று சொன்னால் => அடைய வேண்டிய இலக்கு என்றும் வெறும் கனவாக மட்டுமே இருக்கும். முதல் சில முயற்சியிலே மிகப்பெரிய வெற்றி ஒரு சிலருக்கு தான் கிடைக்கும்‌. ஓர் இலக்கை அடைய, ஒவ்வொரு தடைகளையும் நம் முன்னேற்றத்திற்கானப் படிக்கட்களாக எண்ணி, விடாமுயற்சியோடு போராட வேண்டும்.

அடிமைத்தனத்தை ஒழித்து, வரலாறு படைத்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன், ஐந்து(5) முறை தோல்வியைத் தழுவினார். அவரின் விடாமுயற்சி அவரை வெற்றி பெறச் செய்தது.

மகாத்மா காந்தி மற்றும் அடால்ஃப் ஹிட்லர் ஆகிய இருவருமே வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் தான். இவர்களுக்குள் இருந்த வித்தியாசமே இவர்களின் இயல்புத்தன்மை தான். அந்த இயல்புதான், "மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகவும்; அடால்ஃப் ஹிட்லரை சர்வாதிகாரியாகவும்" மாற்றியது.

" எண்ணங்களை வடிவமைத்து கொண்டால்
எதிர்காலத்தையும் வடிவமைத்துக் கொள்ளலாம் "

சிறந்த எண்ணங்களுடன் கூடிய மனிதர்களின் நட்பைத் தேடுங்கள். நல்ல சிந்தனைகளால் மனதை நிரப்புங்கள். உங்களுக்கு பிடித்த வாசகத்தை உங்கள் கண்களுக்கு தினமும் புலப்படும் படி சுவற்றிலோ அல்லது ஏதாவது ஒரு இடத்திலோ வைத்து தினமும் அவ்வாசகத்தை வாசியுங்கள். சிறந்த சிந்தனைகளே ஒவ்வொருவர் மனதிலும் ஓங்கி இருக்கட்டும். "என் வாழ்க்கையின் சிறந்த விஷயங்கள் இனிமேல் தான் நடக்கப் போகின்றன...
 இப்பொழுது இருப்பதை விட இன்னும் என் வாழ்க்கை பல மடங்கு அழகானதாக இருக்கும்...
 நான் என் எதிர்காலத்தை சிறந்த முறையில் வடிவமைக்கப் போகின்றேன்...
 எனது கொள்கையை அடைய நேர்வழியில் என்றும் பாடுபடுவேன்... 
எந்த நிலை வந்தாலும் பாறையைப் போல் உறுதியாக நிமிர்ந்து நிற்பேன்...
 என் வாழ்க்கையின் அனைத்துத் தருணங்களிலும் நன்றியுணர்ச்சியை பயிற்சி செய்வேன்"
 என்ற உறுதி ஒவ்வொரு மனதிலும் ஓங்கி இருக்க வேண்டும்.

 ஒவ்வொருவருக்கும் கொள்கைகள் இருக்க வேண்டும். அதாவது ஒரு இலக்கை அடைவதற்காக நாம் பின்பற்றப்படும் எண்ணங்களும், வழிமுறைகளும் நமது கொள்கைகளுக்கு வழிவகுக்க வேண்டும். "நான் யார்? நான் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும்?..."என்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்திக்காமல், நமது கொள்கையை அடைய நிலைப்பாடுகளை வகுத்துக்கொண்டு, இலக்கை அடையும் வரை முயற்சி செய்ய வேண்டும். தோல்வியுற்றாலும் அது நமக்கு முடிவல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விடாமுயற்சியை கைவிட்டால் மட்டுமே அது நமக்கு தோல்வியாக முடியும்.

நமக்கு புதிய வாய்ப்பு பிரச்சனை உருவத்திலும் வரலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர், "அலெக்சாண்டர் கிரகாம்பெல்" ஆவார். அவர் தன் காது கேளாத மனைவிக்காக, காது கேட்பதற்குக் கருவி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது தான், தொலைபேசியை தற்செயலாகக் கண்டுபிடித்தார்.
எண்ணிக்கையில்லா வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.நாமும் நம்முள் நம்மையே கண்டுபிடிக்க, இதுவரை அனுபவித்திராத அந்த அழகானப் பயணத்தை மேற்கொண்டு விடாமுயர்ச்சியோடு போராடுவோம்.

"ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் தன் கனவுகளின் வழியில் பயணிக்கும் போது, அவர் எதிர்பாராத வெற்றிகளை எதிர்பாராத விதமாக எதிர்கொள்வார் " -டேவிட்

ரோஜர் பேனிஸ்டர் வரும் வரை,நான்கு நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க முடியும் (மே 6,1954) என்பது தெரியாததாகவே இருந்தது. எட்மண்ட் வரும் வரை, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவது (மே 29,1953) என்பது தெரியாததாகவே இருந்தது.

நாம் ஒவ்வொருவரும் இதுவரை செய்யாத ஒன்றை செய்யும்போது தான் தன்னம்பிக்கை பல மடங்கு உயரும். நாம் பிறந்தோம் மடிந்தோம் என்று இருந்து விடாமல் சாதாரண மனிதனான நம்மை நாமே மாமனிதர்களாக மாற்றி,பல அனுபவங்களைப் பெற்று, சரியான வழிகாட்டுதல்களுடன் நம் இலக்கை நம்மால் அடைய முடியும்.

"எங்கேயெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றதோ, அங்கேயெல்லாம் அவ்வாய்ப்பைப் பயன்படுத்த நம் கைகளை, முதல் கையாக உயர்த்துவோம்." ஒரே ஒருவரால் மட்டுமே நம் வாழ்க்கையை மாற்ற முடியும் அது வேறு யாருமில்லை - நாம் மட்டும் தான். ஒரு செயலை விருப்பப்பட்டு செய்யும் போது, அச்செயலை அடைவதற்கு பல வழிகள் நமக்குக் கிடைக்கும்.

விடாமுயற்சியால் வரலாற்றில் இடம்பெற்ற சிலரை பற்றி தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு மனிதரும் பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு, பல புரட்சிகளைச் செய்தனர். அதில் தலை சிறந்த மனிதர்களாக பலரும் விளங்கினர்.
• சமூக உரிமைக்காக போராடிய - மார்ட்டின் லூதர் கிங்,
• இந்திய திருநாட்டிற்கு விடுதலை பெற்றுக் கொடுத்த அறவழிப் போராட்ட வீரர் - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 
• பிரம்ம சமாஜம் நிறுவிய - இராஜாராம் மோகன் ராய் போன்ற இன்னும் பலர் பல வழிகளில் சமூகத்தின் அவலங்களை மாற்றியமைக்கப் பாடுபட்டவர்கள். இவர்களைப் போன்றவர்கள் எல்லோரும் முதல் நபராய் தங்கள் கைகளை உயர்த்தி தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, நம் நாட்டிற்காக அரிதான வாய்ப்புகளை பயன்படுத்தி, பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பாடுபட்டவர்கள். ஆகையால் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எது முட்டாள்தனம் ? 

சார்புக் கோட்பாட்டை கண்டுபிடித்த ஐன்ஸ்டினிடம் முட்டாள் தனத்திற்கு விளக்கம் கேட்டபோது, அவர் "ஒரே வேலையை திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு, வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்கு பெயர் தான் முட்டாள்தனம்" என்றாராம்.

நாமும் முதல் நபராக நம் கைகளை உயர்த்தி, நம் பாதங்களை முன்னோக்கி அடி எடுத்து வைத்து, தகரத்தை தங்கமாக மாற்றும் ரசவாதியாக இருப்போம் வாருங்கள்! .

ஒரு இலக்கை அடைவதற்கும்;
ஒரு துறையில் சாதனை படைப்பதற்கும்;
ஒரு முத்திரை பதிப்பதற்கும்;
சாதனையாளர்களாக வலம் வருவதற்கும்
ஒருவர் இளம் வயதிலிருந்தே மேதையாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
 தன்னம்பிக்கையும் + ஆர்வமும் + விடாமுயற்சியும் + திட்டமிட்ட வழிகளும் + உழைப்பும் இருந்தால் போதும் எந்த வயதிலும் நாம் சாதனை படைக்கலாம்.

வந்தோம்!
 வாழ்ந்தோம்!
 சென்றோம்!
 என்றில்லாமல் வாழ்க்கையில் ஒரு சரித்திரத்தை படைத்தோம் என்று நாமும் புதிய பாதையை உருவாக்குவோம் - அதற்கு இந்த நொடிமுதல் புதிய ஆரம்பமாக இருக்கட்டும்..... புதிய ஆரம்பத்தை தொடங்குவோம் ! வாருங்கள்.....

*தொலைநோக்குப் பார்வை + விடாமுயற்சி + இலக்கை அடைய அறிவாற்றலுடன் கூடிய முயற்சி + சரியான வழிகாட்டி = இலக்கை அடைவதற்கான இரகசியம்...*

-பேபி அபர்ணா குணசேகரன் ( Abu G )

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...