Wednesday, May 1, 2024

ஊருசுத்தி - தனபால் பவானி

   


  பயணங்கள் என்பது கவலைகளை மூட்டைகட்டி மூளையின் மூலையில் போட்டுவிட்டு மனதையும் நினைவுகளையும் எப்போதுமே ஈரமாகவே வைத்திருப்பவை. காலங்கள் பல கடந்தபோதும் எப்போதோ போய் வந்த பயணங்களின் சுவடுகள் இதமாய் கொடுக்கும் ஒத்தடம் போல வெதுவெதுப்பாய் சுட்டபடி மனதின் எல்லா பக்கங்களிலும் இருந்து எட்டிப்பார்க்கும். அப்படி எப்போதோ போய் வந்த பயணமொன்று இன்னும் இதமாய் நினைவுகளை மீட்டுகிறது கம்பிகள் அறுந்தபின்னும் இசை கசியும் ஒரு வீணையைப்போல.


நீண்ட நாட்களாகவே "பொன்னியின் செல்வன்" கதை நடந்ததாக கூறும் இடங்களுக்கு ஒருமுறை போய்வரவேண்டுமென ஆசை உள்ளுக்குள் உழன்றுகொண்டே இருந்தது. சரியான நட்பும், சரியான காலமும் வாய்த்துவிட்டால் நினைத்ததை விட அதிகமான இடங்களையும் அனுபவங்களையும் நினைவுகளில் சுமக்கலாம் என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். அப்படித்தான் அந்த பயணமும் அமைந்தது.
 
2016 செப்டெம்பர் மாத இறுதியில்  சென்னையிலிருந்து தொடங்கிய பயணத்தில் முதலில் போனது "ஆலம்பாறை கோட்டை". சென்னையிலிருந்து மகாபலிபுரம் வழியாக போனால் 110KM தூரத்தில் உள்ளது இந்த பழங்கால சிதிலமடைந்த கோட்டை. இதை  “கோட்டை” என்று சொல்வதை விட கோட்டை இருந்த இடமென்று சொல்வதுதான் பொருந்தும்.  ஒரு காலத்தில் இந்நகரை ஆண்ட மன்னர்கள் கடல் வழி வணிகங்களுக்காக உருவாக்கிய கோட்டையாக இருக்கலாம். செங்கற்களால் மட்டுமே கட்டப்பட்டிருந்த கோட்டை முற்றிலும் சிதைந்து தோட்டத்து பங்களாவின் மூலையில் குடிசைக்குள் சிறைவைத்த வயதான பாட்டியைப்போல தன் அனுபவத்தையெல்லாம் இழந்து உதிர்ந்து நிற்கிறது. இடிந்து விழுந்திருந்த சுற்றுச்சுவர்களின் இடைவெளிகளை நுழைவு வாயில்களாக மாற்றி நின்றுகொண்டிருந்தது. பிரம்மாண்ட அணிலொன்று கடல்பார்த்தபடி உட்கார்ந்திருப்பது போல இருந்தது உடைந்துகிடந்த அந்த சுவர். ஒருகாலத்தில் அது கலங்கரைவிளக்கமாக கூட இருந்திருக்கலாம். இதைப்போலவே கிணறு வடிவில் ஒரு தொட்டி , பல ஜன்னல்கள் வைத்த பெரிய அறை, படிக்கட்டுகள் நிறைந்த மாடிக்கு போகும் வழி, படகுத்துறை, கடலுக்கு நடுவே குட்டி தீவு போல மணல்திட்டு என எத்தனையோ விஷயங்கள் ரசிக்க ரசிக்க ரம்மியமாய் இருந்தது. இப்போதும் அந்த மன்னர்களின் ஆட்சியாகவே இருந்திருந்தால் எத்தனை அழகாய் இருந்திருக்குமென்ற கேள்விக்கு பதிலாய் பெருமூச்சொன்று மட்டுமே வந்தது. போகன் படத்தில் வரும் “செந்தூரா” பாடலில் இதை அத்தனை அழகாக வீடியோவாக காட்டியிருப்பார்கள். புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடம்.



ஆலம்பாறை கோட்டையிலிருந்து அடுத்ததாய் நாங்கள் போன இடம் பிச்சாவரம். சிதம்பரத்துக்கு அருகே கடலூர் மாவட்டத்தில் உள்ளது. ஆலம்பரையிலிருந்து 120KM வரும். "பேக் வாட்டர் லேக்" என்று சொல்லும் கடல்நீர் நிரம்பிய ஏரியில் படகுசவாரி. தசாவதாரம் படத்தில் கமலை சிலையோடு கட்டிக்கொண்டுபோய் நீருக்குள் மூழ்கடிக்கும் இடம். இங்கு தண்ணீரில் வளர்ந்திருக்கும் "சுரபுன்னை" மரங்களால் நிரம்பிய தீவுகள் குட்டிகுட்டியாய் நிறைய இருக்கின்றன. இந்தக்காடுகளை "அலையாத்திக்காடுகள்" என அழைக்கிறார்கள். இங்குள்ள மரங்களின் காய்களில் இருந்துவிழும் விதைகளால் மீண்டும் மரங்கள் வளர்வதாக சொல்லப்படுகிறது. விதவிதமான படகுகள் போக்குவரத்தை சுற்றுலாத்துறை செய்திருக்கிறது. அதைப்போலவே "விதவிதமான" கட்டணங்களும் உண்டு. நாங்கள் போனது துடுப்பு போடும் வகை படகில். இதில் படகோட்டியாக வந்தவர்  நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே வந்தார்.  அதிகாரிகள் தங்கும் விடுதி தண்ணீர் சூழ்ந்த நடுமையத்தில் சுனாமியின் தாக்கத்தால் இடிந்து கிடந்தது. சட்டென செடிக்குள் இருந்து பறக்கும் விதவிதமான பறவைகள், நீளமாய் வளர்ந்த மரத்தின் வேர்கள், படகுகள் போகும் பாதைக்கு தக்கவாறு வளர்ந்திருக்கும் மரங்கள் என இதை நினைக்கும்போதே அமேஸான்  காடுகளின் பிரம்மாண்டத்தையும் பயத்தையும் உணர முடிகிறது. கட்டிடங்களின் நடுவே மட்டுமே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஒருமுறை இங்கு சென்றால் காடுகளின் நடுவே வாழும் வாழ்வின் ஒரு சில மணிநேரங்களை உணரலாம்.

அன்றைய இரவு மன்னார்குடியில் நண்பரின் வீட்டில் நல்ல ஓய்வுக்குப்பின் விடிந்த காலையில் கிளம்பி தஞ்சாவூர் போனோம். வழியெங்கும் தஞ்சை நெற்களஞ்சியத்தின்  அழகு கண்கொள்ளா காட்சி பச்சை போர்த்திய நெல்வயல்கள், சாலையின் இரண்டு பக்கமும் வளர்ந்து நிற்கும் அரணாய் நிழல் பரப்பும் புளியமரங்கள் அழகு. தஞ்சை சென்றதும்  முதலில் சோழர்கள் அருங்காட்சியகம் போனோம்.  அருங்காட்சியகத்தின் கண்ணாடி பேழைக்குள் இருக்கின்றன சோழர்கள் பயன்படுத்திய பொருட்களும் உலகிற்கே சவால் விட்ட தமிழர்களின் வீரத்திற்கு துணைநின்ற சில ஆயுதங்களும்.  அதே இடத்தின் அருகில் ராஜராஜ சோழனின் மணிமண்டபத்தில் குடித்துவிட்டு  தூங்கிக்கொண்டிருந்தார்கள், இன்றைய தமிழ்நாட்டின் சில "வீரர்கள்". உலகெங்கும் தமிழனின் வீரத்தை கல்வெட்டுகளில் பதித்த அந்தமாவீரனின் மணிமண்டப சுவர்கள் சுமந்துகொண்டிருக்கின்றன, யாரையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு போன பழைய காதலிகளின் பெயர்களை.

தஞ்சை அரண்மனையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் பழங்கால பொருட்களின் வரிசையில் இருக்கிறது அம்மிக்கல்லும், ஆட்டாங்கல்லும். தங்கக்காசுகளையும், நகைகளையும் போட்டு வைக்கும் மிகப்பெரிய மரப்பெட்டிகளில் இன்னும் அந்த வீரம் உறங்கிக்கொண்டிருக்கலாம். அந்த அரண்மனையில் நடக்கும்போது "ராஜாதி ராஜ , ராஜ மார்த்தாண்ட , சோழர்குல தில" என்று நீளும் கம்பீர சொற்கள் காதுகளுக்குள் உருளுவதை உணரமுடிந்தது. தலையாட்டி பொம்மைகளின் பிரம்மாண்ட உருவ சிலைகள் அரண்மையின் இருபக்கங்களிலும் தலையாட்டாமல் இருந்தன. பயிற்சி ஆசிரியர் கல்லூரியில் இருந்து வந்த பெண்கள், தன் மகனை தேர் ஏற்றிக்கொன்ற மனுநீதி சோழனைப்பற்றி கேட்ட கதையால் புருவம் உயர்த்திய போது தெரிந்தது கல்விமுறை கட்டமைப்பின் மீதான வருத்தம். அரண்மனை வெளியே தலையாட்டி பொம்மைகள் செய்யும் கடைகள் சாலையின் இரு பக்கங்களிலும் வரிசை கட்டி நிற்கின்றன. அதில் வேலை செய்யும் அத்தனை பேரும் உளிகளை பயன்படுத்தாத சிற்பிகள்தான்.

சூரியன் மறையத்தொடங்கிய மாலையில் இருந்து இரவு வரை தஞ்சை பெரியகோவிலின் அழகை பிரமிப்பு அகலாமல் ரசிக்க முடிந்தது. இதற்கு முன்னால் பலமுறை போயிருந்தாலும் இந்தமுறை பொறுமையாய், நிதானமாய் ரசித்து ரசித்து பார்க்க பலவிஷயங்கள் இருந்தன. கோவில் முழுவதும் ராஜராஜசோழனின் மேற்பார்வையில் கட்டியிருப்பதன் நேர்த்தி இருக்கிறது. கோவில் முழுவதும் கற்கள் அடுக்கிய இடங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும். ஆனால் நந்தியின் வலப்பக்கம் இருக்கும் ஒரு சிறு கோவிலில் கற்கள் கோணல் மாணலாய் வைத்து கட்டப்பட்டிருக்கும். இதை ராஜராஜசோழன் இருக்கும்போது கட்டியிருக்க வாய்ப்பு மிகக்குறைவு. பரந்துவிரிந்த புல்தரையில் ஓடி விளையாடும் குழந்தைகளை ரசிக்கும் கோவில் சிற்பங்கள், யானையிடம் ஆசிர்வாதம் வாங்க பயப்படும் ஒரு புதுப்பெண், கைப்பேசியில் செல்பி எடுக்கும் இரண்டு குழந்தைகள், வாண்டுகளிடம் சிக்கிக்கொண்ட கைப்பேசியை பிடுங்க துரத்திக்கொண்டு ஓடும் தகப்பன், எறும்புக்குழி மீது நின்றுவிட்டு கடிக்கும் எறும்புகளை திட்டியபடி நகரும் ஒரு வாலிபன், திருநீறை கணவனின் நெற்றியில் வைத்துவிட்டு அது கண்களில் விழுந்துவிடாமல் இருக்க கைகுவித்து ஊதும் ஒரு மனைவியென இன்னும் ரசிக்க நிறைய விஷயங்கள் அங்கே இருந்தன. எத்தனை முறை கிடைத்தாலும் இனிக்கும் காதலியின் முத்தங்களைப்போல எத்தனை முறை ரசித்தாலும் குறையாத பிரமிப்பின் உச்சம் தஞ்சை பெரியகோவில்.

மூன்றாம் நாள் கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சையிலிருந்து 80KM தொலைவில் தஞ்சையைப்போலவே அழகான கோவில்தான். ஆனால் அத்தனை கூட்டமில்லாதது வருத்தம். நாங்கள் போனபோது கருவறை பூட்டப்பட்டிருந்தது. உள் நுழைந்ததும் இடப்பக்கம் இருக்கும் கிணற்று தண்ணீர் அத்தனை ருசி. சுற்றியுள்ள மதில் சுவர்களில் பல கற்கள் காணாமல் போயிருந்ததால் நிறைய இடங்களில் வெறுமை. கோவிலை சுற்றி ரசித்துவிட்டு திரும்பினோம். கோவிலின் வெளியே உள்ள தெப்பக்குளத்தில் நிறைய அழுக்கடைந்த கொஞ்சமான தண்ணியில் ஒரு ஆமை தலைநீட்டி பார்த்துவிட்டு ஒளிந்துகொண்டது. பொன்னியின் செல்வனில் பூங்குழலி படகோட்டும் கோடியக்கரை பகுதிக்கு போவதற்கான வாய்ப்பு அமையவில்லை. ஊருக்கு திரும்பும் வழியில் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை கடக்கும்போது வந்தியத்தேவன் குதிரையின் குளம்படி சத்தம் காதுகளில் கேட்பதாக தோன்றியது. இருகரைகளையும் தொட்டபடி ஓடிய கொள்ளிடம் ஆற்றில் ஒரு சொட்டு கூட தண்ணீரில்லாமல் வறண்டு கிடந்தது. மிகப்பெரிய அளவில் மணல் திருட்டு நடந்ததற்கான ஆதாரத்தை அங்கங்கே இருந்த குழிகள் கதறியபடி கூறிக்கொண்டிருந்தன கேட்பதற்குத்தான் ஆளில்லை. நிறைவான மனதோடும், குறையாத கனவோடும் ஊர் திரும்பினோம்.

இப்போதும் கூட எப்போதாவது போரடித்தால் வண்டியை எடுத்துக்கொண்டு ஊருசுத்த கிளம்பிவிடுவதுண்டு. பெரும்பாலும் தனிமையின் துணையோடு போகும் பயணங்களில் ஒரு சுதந்திரத்தை உணர முடியும். வெளியே போய் ஊருசுத்த போதிய நேரம் இல்லையென்றாலும் உள்ளூரில் நான்கு தெருக்களுக்குள் ஒரு ரவுண்ட் போய்விட்டு வந்தாலே மனதுக்குள் ஒரு புத்துணர்ச்சி பாயும். அது ஒரு போதை போல, ஊருசுத்துவதும் ஒருவித போதைதான். ஒவ்வொரு பயணத்தின் போதும் பல ஜன்னல்கள் திறக்கத்தான் செய்கின்றன, பல ஆச்சரியங்கள் பூச்சொரிகின்றன, மனதின் இடுக்குகளில் பரவசம் வந்து அப்பிக்கொள்கிறது, சுத்தமான காற்று நுரையீரலின் ஆழம் வரை செல்கிறது, பழைய கவலைகள் மறக்கின்றன, புதிய மனிதர்கள் கிடைக்கிறார்கள்.

பயணங்கள் எத்தனை தூரம் நீள்கிறதோ அத்தனை புது விஷயங்களை மனது உள்வாங்கிக்கொள்கிறது. இன்னும் இன்னும் பயணிக்க சிறகுகள் விரிக்க ஏங்குகிறது. தமிழ்நாட்டிலேயே எத்தனையோ இடங்கள் இன்னும் பார்க்க வேண்டியுள்ளது. காலங்களும் நட்புகளும் அதற்கு இசையும் தருணங்களில் இன்னும் பயணிக்கணும், இன்னும் ஊருசுத்தணும்.

--- தனபால் பவானி 

1 comment:

  1. உங்கள் எழுத்துக்களின் வாசனையோடு உங்களுடன் இணைந்து பயணித்த உணர்வு.... பயணங்களை நிறைய செய்து நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...