Monday, April 1, 2024

"தேவர் யாம்!" என்பவரைத் தெவ்வர் எனல் - உதயபாஸ்கர் நாச்சிமுத்து

 



கயமை என்னும் அதிகாரத்தில் இடம்பெறும் ஒரு குறள்,


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் [குறள் 1073]


இந்தக் குறளில் மட்டுந்தான் வள்ளுவர் “தேவர்” என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், பரிமேலழகர் சொல்வதுபோல, கயவரைப் புகழ்வது போன்று வள்ளுவர் இகழ்கிறார் என்றுதான் தோன்றும். ஆழ்ந்து படிக்கும்போது, அதில் உள்ள அறச்சீற்றம் புலப்படும்.


பழந்தமிழரின் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வகை கொண்ட வாழ்வியலை முறையாகத் தொகுத்து வழங்குகிறது திருக்குறள். வள்ளுவரின் காலத்தில் தனிமனித ஒழுக்கத்தில் எவையெல்லாம் அறம், அறமற்றவை என்பதை அறத்துப்பாலில் தொகுத்திருக்கிறார். தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்வதே சமூக வாழ்வு, ஒழுக்கம் தவறினால் பிறப்பே இழிபிறப்பாகிவிடும் (ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - குறள் 133) என்கிறார் வள்ளுவர். அறத்துப்பாலில் தொகுத்திருப்பது போன்றே பொருட்பாலின் குடியியலிலும் அறம் சார்ந்த சமூக வாழ்வு, அறமற்ற சமூக வாழ்வு என்பவற்றை வகைப்படுத்தியிருக்கிறார். அறமற்ற சமூக வாழ்வின் தொகுப்பாக “கயமை” என்னும் பொருட்பாலின் கடைசி அதிகாரம் அமைந்திருக்கிறது. 


பெரும்பாலான அதிகாரங்களில் தலைப்பிற்கான இலக்கணம் முதற்சில குறட்பாக்களிலேயே விளக்கப்பட்டிருக்கும். கயமை அதிகாரத்திலும் முதன்மூன்று குறட்பாக்கள் கயமையை விளக்கிவிடுகின்றன. அறம் என்பதை “அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் - நான்கும் இழுக்கா இயன்றது அறம் [குறள் 35]” (பொருள்: தீயவழி, விருப்புவெறுப்பு, கோபம், கடுஞ்சொற்கள் ஆகிய நான்கும் தவிர்த்து வாழ்வதே அறம்!) என்று நேரடியாக விளக்கும் வள்ளுவர் கயமை என்பதைக் கொஞ்சம் சுற்றி வளைத்துத்தான் விளக்குகிறார். 


கயமையின் முதற்குறள் தோற்றத்தை (Appearence) அடிப்படையாகக் கொள்கிறது. 


மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில் [குறள் 1071]


தோற்றத்தை வைத்து இன்னார்தான் கயவர் என்று அடையாளம் காண முடியாது என்கிறார் வள்ளுவர். இன்று தமிழ்த் திரைப்படங்களில் திருநெல்வேலிக்காரர்கள் என்றாலே கையில் அரிவாளோடு திரியும் முரடர்கள், வடசென்னைக்காரர்கள் என்றாலே சமூகவிரோதிகள் என்ற பிம்பம் அமைக்கப்படுகிறது. இங்கே இப்படி! ஆனால், வடக்கே இந்தித் திரைப்படங்களில் வரும் மதராசிகள் எல்லோரும் பட்டை போட்டுக்கொண்டு சாம்பாரை ஊற்றிக் குடிக்கும் நோஞ்சானான கோமாளிகள்! எண்பது தொண்ணூறுகளில் சர்தார்ஜிகள் எல்லோரும் முட்டாள்கள் என்பது போன்ற தோற்றத்தை அப்போதைய நகைச்சுவைத் துணுக்குகள் ஏற்படுத்தின. அவ்வளவு ஏன்? குறவர்கள் எல்லோரும் திருடர்கள் என்பதுபோல “கொறவன் மாதிரி முழிக்கிறான் பாரு!” என்றும், குயவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்பதுபோல “சுத்தக் கொசவனா இருக்கிறே!” என்றும், பெண்கள் எல்லோரும் வலிமையற்றவர்கள் என்பதுபோல “மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா, ஒத்தைக்கு ஒத்தை வாடா பொட்டையா!” என்றும் சொல்வதெல்லாம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. இவையெல்லாம் “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” என்னும் சமத்துவத்துக்கு எதிரானவை; அறமற்றவை! ஒருவரின் தோற்றம் அவர் நல்லவரா கெட்டவரா என்பதைத் தீர்மானிப்பதில்லை என்னும் வள்ளுவரின் சமத்துவப் பார்வையைப் பறைசாற்றும் குறள் கயமையின் முதற்குறள்! 


கயமையின் இரண்டாவது குறள் மனநிலையை (Attitude) அடிப்படையாகக் கொள்கிறது. 


நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர்  [குறள் 1072]


இந்தக் குறளுக்கு உரையாசிரியர்கள் கயவர் என்பதை மட்டுமே எழுவாயாகக் (Subject) கொண்டு “நன்றை அறிந்தவரை விட கயவர்கள் தம் நெஞ்சத்தில் அவலமில்லாத திருவுடையர் (Luckier)” என்று உரையெழுதி இருக்கிறார்கள். அறமற்ற சமூக வாழ்வு வாழ்வதை இழிபிறப்பு என்று வரையறுக்கும் வள்ளுவர், சமூகவாழ்வுக்குப் புறம்பான கயவர்களை Luckier என்று ஏன் புகழவேண்டும்? 


கயமையின் முதலிரண்டு குறட்பாக்களைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் முதலில் திருக்குறள் அறநூல் என்பது புரிபடவேண்டும். திருக்குறளைப் பொறுத்தவரை அறமே நன்று! அறம் அகம் சார்ந்தது; புறத்தோற்றம் சார்ந்ததன்று. கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் மனத்தில் அழுக்கை வைத்துக்கொண்டு புறத்தோற்றத்தில் நல்லவர்போல நடிப்பதை வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார். அதிலிருந்து சில குறட்பாக்கள்,


மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர் [குறள் 278]


வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்

தான்அறி குற்றப் படின் [குறள் 272]


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின் [குறள் 280]


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும் [குறள் 275]


இவை நான்கும் ஒருசேர இவ்வாறு பொருள்படுகின்றன: “மனம் முழுக்க அழுக்கை நிரப்பிக் கொண்டு மாண்புடையவர்கள் போல வலம்வரும் பலர் இருக்கிறார்கள். தாம் செய்வதெல்லாம் தன்னலமிக்க குற்றம் (அநியாயம்) என்று தெரிந்தும் உயர்ந்த தோற்றம் பூண்டிருப்பதால் என்ன பயன்? மொட்டையடித்துக் கொண்டும், தாடி வளர்த்திக் கொண்டும் மெய்யறிவு பெற்றவர்போல் நடிப்பதெல்லாம் வேண்டாம்; உலகம் பழிக்கும் அறமற்ற இழிசெயல்களை ஒழித்துவிட்டாலே போதும்! தன்னை ‘பற்றேதும் இல்லாத சற்குரு’ என்று பறைசாற்றிக் கொள்வாரின் கயமை, பின்னர் வருந்தும்படியான நிலைக்கு அவர்களைத் தள்ளிவிடும்” 


உண்மையில், கயமையின் இரண்டாம் குறள்  Compare-and-Contrast முறையில் அமையப்பெற்ற இரண்டு எழுவாய்கள் கொண்ட குறள். கயவர்கள் அறம் என்பதை அறியாத தன்னலம் மிக்கவர்கள். அறனறியும் பேறு பெற்றவர்கள் (திருவுடையர்) தம் நெஞ்சத்தில் அவலம் இல்லாதவர்கள். ஏனெனில், அறனறிந்தவர்களின் மனம் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இல்லாதது. தன்னலமும், விருப்புவெறுப்பும், கோபமும் கொண்ட கயவர் நெஞ்சம் நாளும் அவலத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் என்பதே இந்தக் குறளின் பொருள்.


கயமையின் மூன்றாம் குறள்தான் முதலில் சொல்லப்பட்ட,


தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான் [குறள் 1073]


என்னும் குறள். இது கயவரின் பண்பைக் (Character) காட்டும் குறள். எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தம் மனம் விரும்பியபடியெல்லாம் செய்து நடப்பதால் கயவரும் தேவரைப் போன்றவர் என்கிறார் வள்ளுவர். தேவரின் குணமும் கயவரின் குணமும் வேறுவேறல்ல என்பது இந்தக் குறளின் நேரடிப் பொருள். ஆனால், இதை பரிமேலழகர் கயவரைத் தேவரோடு ஒப்பிடும் வஞ்சப்புகழ்ச்சி என்று தன் உரையில் சொல்கிறார். ஏனெனில், வடமரபின் தாக்கத்தால் வானோர் என்பதையும் தேவர் என்பதையும் ஒரேபொருளில் பார்க்கிறார் பரிமேலழகர். ஆனால், வானோர் வேறு தேவர் வேறு என்பது வள்ளுவரின் பார்வையாக இருக்கிறது. 


வானோர் என்பதை வள்ளுவர் இவ்வாறு வரையறுக்கிறார்:


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் [குறள் 50]


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு [குறள் 86]


யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த உலகம் புகும் [குறள் 346]


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி  [குறள் 25]


இவற்றின் பொருள்: “அறனறிந்து, மக்களை நேசித்து, விருப்புவெறுப்பற்று, மக்களுக்காக வாழ்ந்தவன் வானுறையும் தெய்வமாக மக்களால் போற்றப்படுவான். அறஞ்சார்ந்து விருந்தோம்பி வாழ்வாங்கு வாழ்ந்தவன் இறந்தபின் வானத்தவர்க்கு நல்விருந்தினனாக ஆகிறான். தான், தனது என்னும் தன்னலமற்று வாழ்பவன் வானோரைவிட உயர்ந்த உலகம் புகுவான். ஐம்புலன்களையும் அடக்கி விருப்புவெறுப்பற்று வாழ்ந்ததற்கு வானோர் தலைவனான இந்திரனே சான்று!


வானுறையும் தெய்வம் வானோர். அவர்கள் விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்கள்! இறந்த பின்பும் தன்னலமற்று மக்களைக் காப்பார்கள் என்பது மக்களின் நம்பிக்கை. இதுவே, தமிழரின் முன்னோர் வழிபாட்டின் ஆணிவேர்! கருப்புசாமியை வழித்துணைக்கு அழைக்கும் வழக்கமெல்லாம் இந்த நம்பிக்கையிலிருந்தே எழுகிறது. 


வானோர் என்பது தமிழ்ச்சொல். தேவர் என்பது வடசொல். தேவர் என்னுஞ்சொல்லை மட்டுமே வள்ளுவர் கயமை அதிகாரத்தில் பயன்படுத்தியிருக்கிறார். வானோர் என்பதை விளக்குவதுபோல தேவர் என்பதை விளக்கவில்லை. மாறாக, தேவரும் கயவரும் தாம் விரும்புவனவற்றை எல்லாம் செய்யும் குணத்தால் ஒன்றே போன்றவர்கள் என்கிறார். விருப்புவெறுப்பு அறத்துக்கு எதிரானது! வள்ளுவர் வரையறுக்கும் வானோர் வாழ்நாள் முழுக்க தன்னலமற்று வாழ்ந்து, இறந்த பின்பும் தன்னலமற்று மக்களைக் காப்பவர்கள். அதனால்தான் மக்கள் தம் குறைதீர தெய்வத்தை நாடுகிறார்கள். ஆனால், தேவர்கள் மக்களைக் காப்பவர்களாக எந்தக் கதையும் இல்லை; மாறாக, தேவர்கள் தம் குறையைத் தீர்த்துக்கொள்ள தன்னலத்துடன் ஆற்றல் மிக்க விஷ்ணுவிடம் முறையிடுபவர்கள் என்றுதான் புராணக்கதைகள் கூறுகின்றன. 


மேலும், தேவர் தலைவனும் இந்திரன். வானோர் தலைவனும் இந்திரன். தேவர் தலைவன் அகலிகையின் புற அழகில் மயங்கி முறைதவறி நடந்தவன். வானோர் தலைவன் ஐம்புலன்களையும் அடக்கி விருப்புவெறுப்பற்று அறவாழ்வுக்குச் சான்றாக வாழ்ந்தவன். தேவர் தலைவனுக்கு இந்திரன் என்பது பதவி. வானோர் தலைவனுக்கு இந்திரன் என்னும் அடைமொழி அவனின் ஒப்பற்ற அறவாழ்வுக்குக் கிடைத்த சிறப்பு! இருவரும் வேறுவேறு!


ஏழே சீர்கள் கொண்ட குறளில் தேவர் என்னும் வடசொல்லை “கயமை” என்னும் அதிகாரத்தில் கயவரின் குணத்தைக் (Character) குறிக்கும் உவமையாகப் பயன்படுத்தியிருக்கும் மதிநுட்பம் வள்ளுவரின் அன்றைய அரசியல். நீரும் எண்ணெயுமாக ஒட்டியும் ஒட்டாமலும் தென்னாட்டில் பயணிக்கும் வடமரபும் தென்மரபும் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ளும் இந்த அரசியல் இன்றுவரை தொடர்கிறது. சென்ற நூற்றாண்டில் பாவேந்தர் பாடிய “திராவிடர் திருப்பாடல்” என்னும் பாடல் இந்த அரசியலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருந்தும் அந்தப் பாடலிருந்து சிலவரிகள்: 


கோவாழும் இல்லொன்றே கோவிலாம், மற்றவை

நாவாலும் மேல்என்னோம்! நல்லறமே நாடுவோம்!

தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்!

சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம்!

வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்!

மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்

தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க

பாவையரே, காளையரே பல்லோரும் வாரீரோ! 


[பொருள்: மக்களைக் காக்கும் அறம்சார்ந்த தலைவனின் இல்லமே கோவிலாம்; மற்றவை, எதுவும் மேலான இடமில்லை! அறவாழ்வு வாழ்வோம. “நாங்களே தேவர்கள்” என்பவரை எதிரிகள் என எதிர்ப்போம்! “இறப்புக்குப் பின்னான சாவில்லாத மறுவாழ்வு” என்பதில் ஒப்புதல் இல்லை. “புண்ணியம் செய்தால் சொர்க்கம்” என்ற வரவுசெலவுப் பயனை எதிர்பார்ப்பதில்லை! இந்தக் கொள்கை நிரம்பிய திராவிடத்தைத் வீழ்த்த வடக்கர் தாவி வந்தார்! அவர்களை எதிர்க்க இளைஞர்களே இளம் பாவையரே திரண்டு வாருங்கள்!]


No comments:

Post a Comment

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...