Monday, April 1, 2024

தோழி எந்தன் தோழி - 1 - ஜெயலலிதா

அத்தியாயம்  1


கிச்சனில் வேலையாக இருந்த காயத்ரியிடம் வெளியே இருந்து ஓடி வந்த புஷ்பா   “அம்மா உங்களைப் பார்க்க ஒருத்தர் வந்திருக்காரும்மா. பார்த்தாக்க டவுனுக்காரரு மாதிரி தெரியறாரு. உங்க பேரைச் சொல்லித் தான் விசாரிச்சாரும்மா “ என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்.

“ யாரு புஷ்பா ?. இதுக்கு முன்னாடி இவரு நம்ம வீட்டிற்கு வந்திருக்காரா என்ன?” புஷ்பாவிடம் கேட்டாள் காயத்ரி.

புஷ்பா கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக இதே  வீட்டில் காயத்ரிக்கு உதவியாக இருப்பவள். காயத்ரியின் சுக துக்கங்களில் உண்மையான அக்கறை கொண்டவள்.

“ இல்லம்மா, இதுக்கு முன்னாடி இவரு நம்ம வீட்டுக்கு வந்த மாதிரியே தெரியலம்மா. வயசு கூட கிட்டத்தட்ட அம்பது வயசு, நம்ம ஐயா வயசே இருக்கும்னு  நினைக்கறேன். ஆனாலும் ஆளு ஷோக்கா இருக்கறாரும்மா “ என்று வந்தவரை வர்ணித்தாள் புஷ்பா. 

“ சரி, வா போய்ப் பார்க்கலாம்” என்ற காயத்ரி “ ஆமா வந்தவரை வாசல் கேட்லயே நிக்க வெச்சிருக்கியா இல்ல வீட்டுக்குள்ளே வரச் சொன்னியா புஷ்பா” என்று கேட்டாள்.

“ என்னம்மா நீங்க இப்படி கேட்டுப்புட்டீங்க…! நம்ம வீட்டு பழக்க வழக்கம் எல்லாம் எனக்கு தெரியாதா என்ன. அவரை உள்ளே  வரச்சொல்லி  முன்கூடத்துல உக்கார வெச்சுட்டு தான் வந்திருக்கேன்மா” என்றாள் பெருமையாய் புஷ்பா.

“ சரி சரி கொஞ்சம் பேசாத வர்றியா…!" என்ற காயத்ரி சமையல் கட்டுக்கு  அடுத்தபடியாக இருக்கும் விசாலமான சாப்பாட்டு கூடம் தாண்டி, அதற்கு அடுத்துள்ள பெருங்கூடம் கடந்து, பின் நெருங்கிய உறவினர்கள் வந்து உட்காந்து உறவாடும் பெரிய அறைதாண்டி, அதற்கு  அடுத்துள்ள வீட்டின் அகலமான வரவேற்பறையைக் கடந்து முன்கூடத்திற்கு வந்தாள்.

பெரும்பாலும் முன்பின் அதிகம் பழக்கம் இல்லாதவர்களையும், அறிமுகம் இல்லாதவர்களையும் மட்டுமே முன்கூடத்தில் அமரவைத்துப் பேசுவது  வழக்கம். மற்றபடி அந்த வீட்டின் விருந்தோம்பலும் உபச்சாரமும் பற்றி அந்த எட்டுப்பட்டி கிராமத்துக்கும் அத்துபடி.

கூடத்தில் அமர்ந்திருந்தவரின் பளீரென்ற சிவப்பும், உயரத்துக்கு தக்க பருமனுமாய், தகுந்த விதத்தில் “ டக்  “ செய்யப்பட்டிருந்த அவரது பேண்ட் சர்ட் நேர்த்தியும்,  கூடவே காயத்ரியைக் கண்டதும் களைப்பையும் மீறி அவரது முகத்தில்  தோன்றிய பளீரென்ற மின்னல் சந்தோஷமும், அவரது நெற்றியில் இருந்த திருநாமமும் காயத்ரியின் மனதில் பதிந்தது.

ஏதோ நினைவில் அவரையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தவளிடம் வந்திருந்தவர் “ என்னைத் தெரியலியா காயத்ரி? . நா கேசவன். ரகுராமனோட அத்தைப் பிள்ளை” .

“ ஓ…காட்….!!. சட்டுனு நினைவுக்கு வரல.ஆனா… மனசுக்குள்ளே உங்க முகம் ஆழமாப் பதிஞ்சு போன நெனப்பு. அதான் பேசக் கூட முடியல.  இப்போ எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குது தெரியுமா..!?” என்று சொன்ன காயத்ரியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் ஒளி.

“கேசவண்ணா எப்படியிருக்கீங்க?. வீட்டில் எல்லாரும் செளக்கியமா? அப்புறம் உங்க மாமா பிள்ளை எப்படி இருக்கிறார்?. உம்…அப்பவே அரைச்ச உளுந்து மாவு மாதிரி புஸ்புஸ்னு  வெள்ளை வெளேர்னு இருப்பார். இப்ப எப்படி தொந்தியும் தொப்பையுமா ….. அடடா…நா ஒண்ணு, வந்தவரை வீட்டுக்குள்ளே கூடக் கூப்பிடாம நிக்கவெச்சுட்டு, சந்தோஷத்துல ஏதேதோ பேசிட்டிருக்கேன்  பாருங்க..” என்று பரபரத்த காயத்ரி புஷ்பாவிடம் திரும்பி

“ என்ன புஷ்பா நீயும் நின்னுட்டே இருக்கறியே..? கேசவன் அண்ணாக்கு அப்புடியே கெட்டி பால்ல காபி பொடியைப் போட்டு கொஞ்சம் தூக்கலான இனிப்போட நுரைக்க நுரைக்க ஆத்திக்குடிக்கறது தான்  ரொம்பப் பிடிக்கும். நீ  போயி சீக்கிரமா காபி கொண்டு வா புஷ்பா..” என்ற காயத்ரி, கேசவனிடம் இதோ ஒரு நிமிசம் இருங்க, மேக்காலத் தோட்டம் போயிருக்கற என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் போட்டு நீங்க வந்திருக்கற. விசயத்தைச் சொல்லிட றேன் “ என்று சந்தோஷமாய்ப் படபத்த காயத்ரியை ஆச்சரியமாகப் பார்த்தபடியே காபி கலந்து வர உள்ளே சென்றாள் புஷ்பா.

இத்தனை வருடங்களில் தன் எஜமானியம்மாளிடம் பார்த்திராத ஒரு முகமாய் இந்தக் குதூகலம் தெரிந்தது. 

பொதுவாகவே காயத்ரி அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள். தன்மை அறிந்து உதவி செய்வதில் காயத்ரியை மிஞ்ச ஆளே கிடையாது. தன்னுடைய தோழிகள்  யாராவது வீட்டிற்கு வந்தாலும் கூட ஓடிச் சென்று கை பிடித்து அழைத்து வந்து அளவளாவுவாள்.மற்றபடி….

காயத்ரியின் இந்த குதூகலமும், இந்த உறவும் புஷ்பாவிற்குப் புதிதாகவே இருந்தது. புரியவும் இல்லை. ஆனாலும் காயத்ரியின் சந்தோஷமும் பரபரப்பும் இவளையும் தொற்றிக்கொள்ள வேகமாகக் காபி கலந்தாள்.

நாற்பதின் பிற்பகுதியில் நிற்கும் காயத்ரியின்  முகத்தில் இப்போது தெரிந்த சந்தோஷ அலை அவளை அப்படியே இருபதுக்குள் இழுத்துச் சென்றது.

காபியை குடித்து முடித்த கேசவன்   “ அப்புறம்…நீ எப்படி இருக்கறே காயத்ரி, உன்னைப் பத்தி எதுவுமே சொல்லலையே?”

“ நான் நல்லா இருக்கேன். எங்க வீட்டுக்காரர் கதிர் மாமாவைப் பத்தி தான் உங்களுக்கு  நல்லாத் தெரியுமே கேசவண்ணா. என்ன…எங்க பெரிய மாமா திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்ததுக்குப் பிறகு, இவரு தன்னோட ஜாப்பை விட்டுட்டு வந்து விவசாயத்தைப் பார்க்கவேண்டியதாப் போச்சு.

 வேறென்ன பண்றதுங்ணா, எங்க பெரிய மாமாவுக்கு இவரு மட்டும் தானே வாரிசு. ஒரே பிள்ளை. சோ…அப்பாவுக்கு பின்னால மகன் தானே எல்லாத்தையும் பார்த்தாகனும். அதனால இத்தனை சொத்துக்களையும்  கட்டிக் காப்பாத்தனுமேன்ற பொறுப்புல வேலையை விட்டுட்டு விவசாயம் பார்க்க வந்துட்டாருங்க.

ஆரம்பத்துல சில சமயம் நான் கூட மனசு பொறுக்காம. அவருட்ட கேட்டேன்...'ஒரு ஆபிஸரா ஜீப்புல கெத்தா போய்  வந்து இருந்துட்டு, இப்ப இப்புடி ஆளு அம்போட நெலத்துல இறங்கி விவசாயம் பண்றது கஷ்டமா இல்லியா மாமா'ன்னு…?

ஆனா அதுக்கு அவரோ, 'அடியே மக்கு.. நா இருந்தது ஒரு அக்ரி ஆபீசரா. இப்ப நா பண்றதும் அக்ரிகல்சர். இதுல என்ன பெரிய வித்தியாசம்?.  தியரியா எல்லார்ட்டயும் சொல்லிட்டு இருந்ததை,  இப்ப பிராக்டிக்கலா பண்ணிட்டு இருக்கேறேன். இப்ப நம்ம மகசூலைப் பார்த்துட்டு மத்தவங்க எல்லாம் இது எப்படி சாத்தியம்னு எங்கிட்ட வந்து  கேட்டுத் தெரிஞ்சுக்கறாங்ளே..இந்த சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காது காயத்ரி'ன்னு சொல்லுவார்

அப்புறறம்..எங்க பெரிய மாமா போன கவலையிலயே அடுத்த ரெண்டு வருஷத்துல எங்க அத்தையும் காலமாயிட்டாங்க. அதனால வீட்டுப் பொறுப்பு பூராவும் என்னுடையதாயிடுச்சுங்”.

“ ஓ….சரி, பிள்ளைங்கெல்லாம்….”

“ ரெண்டு பிள்ளைங்க கேசவண்ணா. மொதல்ல பொண்ணு. இஞ்சினியரிங் படிச்சா. இப்போ கல்யாணத்துக்கு பிறகு சென்னைல அவங்களோட கம்பெனியையே பார்த்துட்டு இருக்கிறாள். ரெண்டாவதா  பையன். இப்போ பிளஸ் டூ படிச்சுட்டு இருக்கிறான். ரெண்டு பேருக்குமிடையே கொஞ்சம் அதிக கேப் தான்”  என்று தன்னைப் பற்றி மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள் காயத்ரி.

அப்போது வாசல் கேட் அருகே புல்லட் சத்தம் கேட்டதும் “இதோ மாமா வந்துட்டார் கேசவண்ணா” என்ற காயத்ரி எழுந்து வாசலை பார்த்தாள்.

வீட்டிற்குள்  ஆர்வமாக நுழைந்த கதிர், “ வாங்க..வாங்க..கேசவன்.எப்படி இருக்கீங்க?. பார்த்து ரொம்ப வருஷமாச்சு இல்லீங்ளா…அப்புறம் ரகுராமன் எப்படி இருக்கிறார்..” என்று கேட்டவர் அன்பு மேலிட அப்படியே கேசவனை தன்னோடு அணைத்துக் கொண்டார்.

பின் காயத்ரியிடம் “ காயத்ரி நீ போயி சாப்பிடறதுக்கு ஏற்பாடு பண்ணும்மா” என்ற கதிர்வேல் கேசவனிடம் “ அப்புறம் இவ்வளவு வருஷம் கழிச்சு எங்களைத் தேடிட்டு வந்திருக்கீங்க. ரொம்ப முக்கியமான விசயமா இருக்கனும் தானே! சொல்லுங்க கேசவன்” என்றார் கதிர்.

கதிரின் சரியான கேள்வியில் கலங்கிப் போன கேசவனுக்கு மேற்க்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் கண்கள் கலங்கியது.

அதைப் பார்த்ததும் பதறிப் போன கதிர், “ என்ன கேசவன் நா எதுவும் தப்பாக் கேட்டுட்டேனா?.எனக்கு உங்களையும் ரகுராமனையும் நெனச்சுட்டாலே என்னம்மோ ரொம்ப நாள் பழகிய உணர்வு வருது. அது எனக்கே வந்துச்சா இல்ல காயத்ரி சொல்லிச் சொல்லி அவளால அவளுக்காக வந்துச்சுன்னாவே தெரியலை. ஆனா அப்படி ஒரு அன்பு. ஒரு பிடிப்பு உங்க மேல. அதான் ஆர்வம் தாங்கமுடியாம சட்டுனு வெளிப்படையாவே  கேட்டுட்டேன். அதுவும் ரகுராமன் வராம, நீங்க மட்டும் இங்கே வந்ததுல, மனசுக்குள்ளே ஒரு நெருடல் கேசவன். நீங்க ஒன்னும் தப்பா நெனச்சுக்காதீங்க” என்று சொன்ன கதிர் கேசவனது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து இறுக்கிக் கொண்டான்.

“ நான் தப்பா எதுவும் நினைக்கல கதிர். நா சொல்ல வந்ததை எப்படிச் சொல்றதுன்னு தெரியாம தடுமாறிட்டு இருந்தேன். அதான் உங்களோட சரியான கேள்வி என்னைக் கண் கலங்க வெச்சுடுச்சு” என்றான் கேசவன்.

“ சொல்லுங்க, என்ன விசயம் கேசவன்?” .

தொடரும்….

1 comment:

  1. அடுத்த மாதம் வரும் தொடருக்காக ஆவலுடன்...💐

    ReplyDelete

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...