Friday, March 22, 2024

தண்ணீர் கிராமம் - நா. கார்த்திக்

 

     ரோட்டில் வில்லரசம்பட்டி கருவிற்பாறைவலசு ஏரி அருகே இருக்கும் ஒரு அழகிய கிராமம் அது. அந்த கிராமத்தின்  நுழைவுவாயில் இருபுறமும் பசுமை நிறைந்த வேலியை போல் மரம், கொடி என அமையப்பெற்றிருக்கும். நுழைவுவாயிலின் வழித்தடம் முழுவதும் தண்ணீர் சென்றுகொண்டு இருக்கும். அந்த கிராமத்தில்  உள்ள அனைத்து வீதிகளும் சேறும் சகதியும் நிறைந்திருக்கும். ஊரின் அருகே ஒரு பெரிய ஏரி அமைந்துள்ளதால் ஊரின் மேலே உள்ள வயல்காடுகளின் வடிகால் தண்ணீர் அந்த ஊரின் வழியாகத்தான் சென்று ஏரியில் கலக்கும் . 


அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் வசதி அப்போது கிடையாது. ஊற்று கிணறுபோல் தோண்டி வைத்திருப்பார்கள் வாலியை கொண்டு தண்ணீர் இறைத்துதான் பயன்படுத்துவார்கள். ஒன்று அல்லது இரண்டு அடி கீழே தோண்டினாலே போதும் தண்ணீர் கிடைக்கும். கரண்ட், அடிப் பைப் எல்லாம் பலவருடம் கழித்தான் கொஞ்சம் கொஞ்சமாக வசதி வர தொடங்கியது அந்த ஊர் மக்களுக்கு.


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருகே உள்ள ஏரியில் துணி துவைப்பது, குளிப்பது, சிறுவர்கள் நீச்சல் பழகுவதும், ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுவது, தூண்டில் போட்டும் துணியைக்கொண்டும்  மீன்பிடிப்பது என அந்த குளம் தந்த மகிழ்ச்சிகள் ஏராளம். குளத்தின் அருகே உள்ள வயல்காடுகளுக்கு பம்புசெட் வைத்து தண்ணீரை எடுத்து பயன்படுத்துவார்கள். குளத்தை சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களும் மிக பசுமையாக இருக்கும். வெயில் காலங்களில் ஏரியில் தண்ணீர் வற்றும் போது மீன்கள் எக்கச்சக்கமாக கிடைக்கும் அப்போது ஊர் முழுவதும் மீன் குழம்பு வாசம் வீசும், தண்ணீர் வற்றிய பிறகு பெரிய பாறைகள் தென்படும், அதில் ஒருபாறை ஆமையின் வடிவில் இருக்கும், அதற்க்கு சிறுவர்கள் ஆமைப்பாறை என பெயர் வைத்தார்கள். அந்த நேரங்களில் ஏரி எங்களுக்கு கிரிக்கெட் பிச்சாக மாறும். அக்கரைக்கு சென்று பனம்பழம் அத்தி பழங்களை எடுத்துவருவோம்.  


ஏரிக்கு மிக அருகே உள்ள சில வீடுகளில் மழை அதிகம் உள்ள மாதங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிடும். அந்த நேரங்களில் ஆமை, நண்டு எல்லாம் வீடு அருகே (உள்ளேயும்) நிறைய பார்க்கலாம் கொஞ்சம் மேடான பகுதியில் உள்ள வீடுகளில் தார்பாயை வீட்டுக்குள் விரித்து அதற்குமேல் பாய் போட்டுத்தான் படுக்கவேண்டும் அந்தளவுக்கு எபோதும் ஈரம் இருந்துகொண்டு இருக்கும். 


சிறுவர்கள் நீச்சல் பழகும் வரை பெரிய அண்ணன்கள் சொல்வதையெல்லாம் செய்வார்கள். அதில் அவர்கள் கடைக்கு செல்ல சொல்வார்கள், ஆடுமாடு வைத்திருப்பவர்கள் அதற்க்கு இலைதழைகளை உடைத்து தர சொல்வார்கள், விளையாடும்போது அவர்களுக்கு முன்னுரிமை என கண்டிசன்ஸ்களுக்கு கட்டுப்பட்டு  இருப்பார்கள். பழகிய பிறகு அவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் சிறுவர்களின் அட்டகாசம் இருக்கும். 


பள்ளி சென்று வீடுதிரும்பும்போது, தலைப்பிரட்டையை மீன் என நினைத்து பிடித்து வருவது, நண்டு பிடித்து விளையாடுவது என்று வீடு வருவதற்குள் உடைகள் எல்லாம்  நனைந்துதான் வருவோம்.


அந்த ஊர் முழுவதும் தண்ணீரும், சேறும் சகதியுமாக இருப்பதால் கால் விரல்களில் சேற்று புண்களால் நிறையபேர் அவதிப்படுவார்கள். இரவு நேரங்களில் பாம்பு பூச்சி தொல்லைகள் அதிகம் இருக்கும். 


வாடகை வீட்டில் சொகுசாக இருந்துவிட்டு வந்து இந்த ஊரில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மனை கிடைத்ததால் அதை வாங்கி கூரை வீடு அமைத்து அங்கு வாழ பழக்கப்படுவதற்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது ஆனால் அப்போது  இருந்த சூழ்நிலைக்கு வாழ பழகிக்கொண்டார்கள். அதுவும் நன்றாகத்தான் இருந்தது. 


அது ஒரு பசுமைநிறைந்த காலம்.


நா. கார்த்திக்



Friday, March 1, 2024

தகிப்பு - மலர் செல்வம்



ண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தறையிறங்க ஆயத்தமானது நாங்கள் பயணித்த  பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்.

சொகுசான பிஸினஸ் க்ளாஸ் பயணம். முழுதாக அனுபவிக்க முடியாமல் ஏதேதோ நினைவுகளால் நிரம்பியிருந்தது மனம்.

"ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன். வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப் பணம். வேடிக்கை செய்யுது சின்னப் பணம்" ஊரில் பாடும் கும்மிப் பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. சுங்கத்துறை நடைமுறைகள் முடித்து உடைமைகளைச் சரிபார்த்து  வாடகை வண்டியில் ஏறினோம். புராதனமும் நவீனமும் இணைந்த அழகியதொரு கலவையாக ஈர்த்தது லண்டன் மாநகரம். ஆனாலும் காட்சிகளில் லயிக்கவில்லை மனம்.

"சூரியன்  மறையாத தேசம்" என்று சொல்லிக் கொண்டு எங்கள்  பாட்டன் பூட்டனை எல்லாம் அடிமையாக்கி ஆண்டவன் தானே இந்த பிரிட்டிஷ்காரன் ?" என்ற  ரீதியில் மனசுக்குள் ஒரு தகிப்பு .

சரித்திரப் புத்தகங்களில் படித்த சுதந்திரப் போராட்ட வரலாறுகள் எல்லாம்  மனதில் வந்தன.அனலாய்  தகித்தது மனது. லண்டனின் பிரதான சாலையொன்றில் இருந்த ரிட்ஸ் ஹோட்டலில்  தங்கும் ஏற்பாடு.

நவீனத்தையும் சொகுசையும்  கச்சிதமாக  அடைத்தது போன்ற அழகான அறை. அன்னப் பறவையின் இறகுகளால் ஆனது போன்ற மெத்தையில் விழுந்தது தான் தெரியும்.

காலையில் எழுந்து பல் துலக்க தூரிகையைத் தேடினேன்.அட!! முகம் பார்க்கும் கண்ணாடியில் தொலைக்காட்சி !!

மேலே எங்கேயோ இருந்து லேசர் மூலம்  கண்ணாடியில் காட்சி  விரிகிறது . தொழில்நுட்பம் தான் எப்படி வளர்கிறது.....  தொலைக் காட்சிப் பெட்டியே இல்லாத தொலைக் காட்சி!தயாராகிக் கீழே இறங்கி வந்தோம்.

நவீன வசதிகளுடன் வெளியே காத்திருந்த  வால்வோ பேருந்து மினுமினுவென மலைப் பாம்பை நினைவூட்டியது. படியேறும் முன்பு  ஐந்தடி நான்கு அங்குல உயரத்தில் இருந்த உயிருள்ள ப்ரிட்டிஷ் பூச்செண்டு ஒன்று புன்னகையுடன் கை கொடுத்தது.

"ஐம் மரியா லாரென்ஸ். யுவர் டூர் கைட் ஃபார் த டே". பிரிட்டிஷ் ஆங்கிலம் எளிதாகப் புரிந்தது.அடிமை ஆட்சியின் ஒரே நன்மை.

டிரைவிங் சீட்டில் இருந்தது 60 வயது நிரம்பிய ஒரு சூப்பர் ஸ்டைலிஷ் பெண்மணி. மிக நேர்த்தியான உடை, கூலர்ஸ் என்று கலக்கலாக பைலட் போல  இருந்தார். ஓய்வுக்குப் பின் இந்த வேலையை விரும்பிச் செய்கிறாராம்!
நம் ஊரில் பணி ஓய்வு பெற்ற பின் பெண்களின் பணித் தேர்வும் மனநிலையும் ஞாபகம் வந்தது. பேருந்து வேகமெடுத்ததும் மரியா லண்டனின் அருமை பெருமைகளைப் பேச ஆரம்பித்தார்.இசைபோலக் குரல்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் உயிர்ப்புடன் இருக்கும் உலகின் ஒரே நகரம் லண்டன் என ஆரம்பித்தார்.  "மதுரை வந்திருக்கியா நீ" என் வாய்வரை வந்த கேள்வியை அடக்கிக் கொண்டேன்.

ஒவ்வொரு கட்டிடத்திலும் அதன் எண்கள் பிரதானமாகப் பொருத்தப்பட்டிருப்பது  ஆச்சரியமாக இருந்தது. அது அவர்களது கௌரவத்தின் அடையாளமாம்!!

10.டௌனிங் ஸ்ட்ரீட் இங்கிலாந்து பிரதமரின் இல்லம் என்பது உலகத்துக்கே தெரியும். எண 7. லோக் கல்யாண் மார்க் என்பது  பாரதப் பிரதமரின்  இல்லம்னு  இந்தியர்களுக்காவது தெரியுமா?என்று நினைத்துக் கொண்டேன்.

கல்கண்டு  வாரஇதழ் மட்டுமே படிக்க அனுமதிக்கப் பட்ட என் சின்னஞ்சிறு வயதில் அதில்  படித்துத் தெரிந்து கொண்டது தான் லண்டனில் உள்ள மேடம் ட்விசாட் எனும் மெழுகுச் சிலை மியூசியம்.பிரபலமானவர்களின் அச்சு அசலான மெழுகுச் சிலைகளின் காட்சியகம் அது.. உள்ளே நுழைந்த போது அத்துணை பரவசம்!! சிலைகளில்  தான் எத்தனை உயிர்ப்பு!

என்னவர் பழைய ஹாலிவுட் ஹீரோக்களுடன் ஓடி ஓடி நின்று படமெடுத்துக் கொண்டிருந்தார். "ஹாலிவுட் ஹீரோஸ் எல்லாம் பார்த்தா மாமா சந்தோஷப் படுவாங்க" என்றபடி. என் அப்பா ஆங்கிலப் படங்களின் தீராக் காதலர்.சரியாகச் சொன்னால் சீன் கானரி 007 ஜேம்ஸ்பாண்ட் பைத்தியம்.

இங்கிலாந்து ராணியுடன் (மெழுகுச் சிலையுடன் தான்) சேர்ந்து படமெடுக்க அங்கு ஏக நெருக்கடி.காந்தி ஹிட்லர் சச்சின் என அனைத்து பிரபலங்களுடனும் கை குலுக்கி விட்டு தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லையே என நினைத்தபடி கீழே இறங்கினேன்.  வேகமாகத் திரும்பும் போது ஒரு சிறு கவனப் பிசகு. இரும்பு ரெய்லிங்கில் 'நங்'கென்று காலில் ஒரு பயங்கர அடி.ஏற்கெனவே ஷு ஒவ்வாமையால் இருந்த  வீக்கத்தின் மீதே.. யம்மா.. வலியோ வலி....

நொண்டி நொண்டி நடந்து ஒரு வழியாக பேருந்தை அடைந்தேன்.

ஷாப்பிங் என்று கடைவீதியில் இறக்கி விட்ட போது  நடக்க முடியவில்லை. ஒரு நடைபாதை இருக்கையில் அமர்ந்த படி லண்டனை அளந்தேன்.என்னை அதிகம் கவர்ந்தவை அகலமான சுத்தமான சாலைகளும் மக்களின் கட்டுப்பாடும் ஒழுங்கும் தான்.

சைக்கிளில் செல்பவர்கள் நிறையபேரைப் பார்க்க முடிந்தது. சைக்கிளைப் பூட்டிவிட்டுச் செல்ல அதற்கான கம்பங்கள் வேறு ஆங்காங்கு! மற்ற ஐரோப்பிய நகரங்களைக் காட்டிலும்  லண்டனில் நிறைய ஆசிய முகங்கள் என்று தோன்றியது.

அடுத்து சென்றது பிரம்மாண்டமான பக்கிங்ஹாம் அரண்மனை.  அங்கு ராஜ குடும்பத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் மரியாதையையும் அன்பையும் பார்க்க விசித்திரமாக இருந்தது.

அரண்மனையின் முன்புறம் அமைந்திருந்த  பிரம்மாண்டமான கண்கவரும்
நீரூற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என் சிந்தனையோட்டம் தடைபட்டது.

எங்கேயோ இருந்து மின்னலாய்  இரண்டு கம்பீர வெண்புரவிகள். அதன் மேல் முழுச் சீருடையணிந்த இரண்டு பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள். எட்டடி உயரம் இருப்பானோ..யம்மாடி!

கணீரென்ற அதிகாரக் குரலில் தொண்டை நரம்பு புடைக்கக் கத்தினான்."நகருங்கள். வரிசையில் இணையுங்கள். நெரிசலை ஏற்படுத்தினால் நான் கடுமையாக நடக்க வேண்டி வரும்". ஒலி பெருக்கியை முழுங்கி விட்டுப் பிறந்தானோ..

என்ன குரல் இது?

முக பாவமும் அகம்பாவமான உடல் மொழியும் குரலும் அச்சமூட்டின.  இங்கேயே இத்தனை வேகமா? அடிமை இந்தியாவில் சாதாரண மக்களை  பிரிட்டிஷ் வீரர்கள் என்ன பாடு படுத்தினார்களோ என்ற ரீதியில் ஓடியது சிந்தனை...

அரண்மனையைச் சுற்றிப்  பார்க்க மனமின்றி  தனியே  நடக்க ஆரம்பித்தேன்.
மற்றவர்கள் வரும் வரை நிற்கும் பொறுமையும் இல்லை. காலில் உயிர் போகும் வலி வேறு.

சற்று தொலைவில் நின்ற பேருந்தின் அருகே  எப்படியோ நடந்து வந்து விட்டேன். மேலே ஏற முடியும் என்று தோன்றவில்லை. அந்த ஏழு படிகள் எவரெஸ்டை நினைவு படுத்தியது.  கண்ணீரில் வலியைக் கரைக்க முயற்சித்து மௌனமாக நின்று கொண்டிருந்தேன்.

"வாட் ஹேப்பண்ட். உங்கள்  அழகான புன்னகை முகம் வாடிப்போய் விட்டதே" என்றார் மரியா. வலியைப்  பற்றிச் சொன்னேன்.

அப்போது தான் நான் சற்றும் எதிர் பார்க்காத அந்த விஷயம் நடந்தது.  மரியா ஓடி வந்து என் அருகில் மண்டியிட்டு அமர்ந்தார்.

என் பாதத்தை தன் கைகளில் ஏந்தினார். "ப்ளீஸ் வெய்ட்" என்று சொல்லி விட்டு ஷூ லேஸை அவிழ்த்து சாக்ஸ் எல்லாம் கழற்றினார்.என் சுண்டு விரலில் பழுத்து வெடித்துச் சிதறக் காத்திருக்கும் பழம் போல் ஒரு கொப்புளம்.

 முதலுதவிப் பெட்டியை  எடுத்தார்.

கால் மண்ணைத் துடைத்தார். பஞ்சினால் மருந்திட்டார். மெதுவாக காலை வருடிக் கொடுத்தார்.

" நோ ஒர்ரீஸ். த பெய்ன் வில் சப்சைட்" என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு கைத்தாங்கலாக முன் சீட்டில் அமரவைத்தார்.

என் பாதங்களை அவர் கையிலேந்திய அந்த நொடியில் என்  நீண்ட நெடுங் காலத் தகிப்பின் மேல்  ஒரு அடர்த்தியான அன்பின் ஊற்று சில் லென்று பொழிந்தது போல் உணர்ந்தேன்.

"காலங்கள் மாற மாற  நம் மனதில் பற்பல காரணங்களால் துருவாகப் படிந்து  போயுள்ள  வரலாற்றின் தேவையற்ற படிமங்கள் மறக்கப்பட வேண்டும் .வன்மங்கள் மீண்டும் மீண்டும்  உயிர்த்தெழுவதால் சேதாரமே அதிகம்" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.த பெய்ன் ஹேஸ் டு சப்சைட்...!

லேசான  மனதுடன்   லண்டன் டவரில்  உள்ள ஜூவல் ஹவுஸில்  கோஹினூர் வைரத்தைப் பார்வையிடத் தயாரானேன்.

"எங்க நாட்ல இருந்து  கோகினூர் வைரத்தைத் திருடிக் கொண்டு போய்விட்டு எக்ஸிபிஷன்ல வெச்சு எங்களையே டிக்கெட் போட்டு பாக்க விடறீங்களா" என்று  அன்று இரவு மீண்டும் ஓலமிட ஆரம்பித்தது மனது.

சில வருடங்களாக லண்டனில் தங்கியிருக்கும் குடும்ப நண்பர் சக்தி வேலிடம் உரையாடிய போது "இது போல்  மன வியாதி(!)  எனக்கு மட்டும் தானா?நீங்க எப்படி லண்டன்லயே இருக்கீங்க? என் மனதை அடக்க  ஒரு வழி சொல்லுங்களேன்" என்றேன்.

"லண்டன் உலகின் அனைத்து மக்களையும் ஓரிடத்தில்  கொண்டுவந்து சேர்க்கும் இடம் . இன்றைய தலைமுறை பிரிட்டிஷ் மக்கள்  இந்தியன் என்று  தனியாக யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு வெளிநாட்டவர்கள்  எல்லோரும் ஒன்றுதான்.   லண்டனில் மட்டும் 250 பலதரப்பட்ட  மொழிகள்  பேசும் ஒரு கோடி மக்கள் உண்மையான சமத்துவதுடன் வாழ்கின்றார்கள் .  அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விரும்பத்தகாத செயல்கள் எப்பவாவது நடைபெறும். அனாலும் அடுத்த நொடியே போலீஸ் களத்தில்  இறங்கி  மக்களை காப்பாற்றி விடுகின்றது. வெள்ளைகாரர்களாக இருந்தாலும்   தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் தண்டனை ஒன்று தான்.

மன்னர் குடும்பம் இங்கு இருந்தாலும் உண்மையான மக்களாட்சி நடைபெறுகிறது. ஒரு எம்.பி.யை நான்  நேரிலோ தொலைபேசியில் அழைத்து விட்டோ உடனே  சென்று  சந்தித்து என் பிரச்னையைச் சொல்ல முடியும்.இந்தியாவில் அப்படியா?

நம் நாட்டில் மக்களாட்சி என்ற பெயரில் என்ன நடைபெறுகிறது என்று நீங்களே யோசியுங்க.இங்கு இருக்கும் இந்தியர்களுக்கு அமைதியான நல்ல வாழ்க்கை  கிடைக்கிறது.

வரலாறு  நம்மை வழிநடத்த வேண்டும்.இல்லையெனில் பழசைக் கிளறுவதில்  பயன் என்ன சொல்லுங்க" என்றார் புன்சிரிப்புடன்.

வேறு கோணத்தில் சிந்தனையைச் செலுத்தியது அவரது பேச்சு.

'ஜென் கதைகள்' புத்தகத்தில் எப்போதோ வாசித்த வரிகள் நினைவுக்கு வந்தது..

"குருவே!ஆமை ஏன் மெதுவாகச் செல்கிறது?

முயல் ஏன் துள்ளிக் குதித்து ஓடுகிறது?"

"முயலுக்கு  ஓடு எனும்  சுமை இல்லை சிஷ்யனே!"

குருவின் பதில் எனக்கானதும் தான்.ஓடுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்!!

இன்று நம் நாட்டில்  ஏதேனும் இரு பிரிவினருக்கிடையே ஒரு விதமான  அமைதியற்ற கொதிநிலை இருந்து கொண்டே இருப்பதற்கு  மக்களின் மனம் சுமக்கும் கடந்தகால வரலாறெனும்  கனமான ஓட்டின் சுமை தான்  முக்கிய காரணம் என்று தோன்றியது.

கடந்த காலத்தின் தழும்புகள் அனைவருக்கும் உண்டு. தழும்புகள் வலிப்பதில்லை.ஆனால் எத்தளை நாட்களுக்கு நாம்  தழும்புகளைக் கீறிக்கீறி  ஆறவிடாமல் பார்த்துக் கொள்ளப் போகிறோம்?   அதன் பொருட்டு நிகழ்கால பொழுதுகளின் நிம்மதியை,மகிழ்ச்சியைத் தொலைக்கப் போகிறோம்?

நாளைய பொழுதுகளை  நோக்கி நம்பிக்கையோடு நகர்வோம் சுமைகளற்று....! 

அந்தமான் இயற்கையின் மடி 5 - அன்புமணி

 

பரட்டாங்  தீவு - ஓர் அறிமுகம்

  திகாலை இரண்டரை மணிக்குத் தயாராக இருக்கவும் என்று சொல்லிவிட்டு சம்சுதீன் போய்விட்டார்.. எங்களைப் பொறுத்தவரை அது நள்ளிரவு. எட்டு பேர் பெண்களாக வந்திருக்கிறோம் அல்லவா? எனவே நாங்கள் உஷார் ஆனோம். “இது என்ன நமக்கு கொடுத்திருக்கக் கூடிய அட்டவணையில் காலை 7 மணிக்குக் கிளம்ப வேண்டும் என்று தான் இருக்கிறது. எப்படி இவர் 2.30க்கு தயாராக இருங்கள் என்று சொல்வார். நாம் கண்டிப்பாக இதை ஆலோசிக்க வேண்டும். தெரியாத ஊரில் பெண்களாக வந்திருக்கிறோம். நள்ளிரவு 2:30 மணிக்கு எங்கேயாவது அழைத்துக் கொண்டு போய் விட்டு விட்டால் என்ன செய்வது? அதனால் யோசிப்போம். சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்” என்று எங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டோம்.


இங்கே ஒரு விஷயம்  நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. அதாவது அந்தமானைப் பற்றி, அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றி எங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. பயண நிறுவனம் எங்களுக்குக் கொடுத்த அட்டவணைப்படி  செல்ல வேண்டும். அதற்கு அவர்களே எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் 20 ஆண்டுகளாக இருக்கிறது என்பதனால் நம்பிக்கையான நிறுவனம் என்று தெரியும். அவ்வளவு தான். 


அடுத்து அந்தமானில் இணையம் இல்லை என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். எனவே, நாங்கள் செல்லக்கூடிய இடம் குறித்துத் தெரிந்து கொள்ளவும் எங்களுக்கு வழி இல்லை. அதனால் தான் இத்தனை கேள்விகளும், ஐயங்களும் எங்கள் மனதில் எழுந்தன.


இதில் வேறு, “சூப்பர் மேம்! ரொம்ப அழகா, நல்லா யோசிக்கிறீங்க. எப்படி எல்லாம் எங்க பாதுகாப்பு பற்றி யோசிக்கிறீங்க. அருமை! அருமை!” என்றெல்லாம் தோழிகள் பாராட்டினார்கள். 


யோசனையுடன் உறங்கச் சென்றோம். நள்ளிரவு இரண்டு மணி அளவில் தங்கியிருந்த ஹோட்டல் அல்லோல கல்லோலப் பட்டது. முதலில் ஒன்றும் புரியவில்லை. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்து கேட்ட பொழுது இன்று பரட்டாங் தீவுக்குப் போக வேண்டும் அல்லவா? அதனால் தயாராகிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்றார்கள். இப்போதுதான் சம்சுதீன் சொன்னது உண்மை என்று உரைத்தது. வெகு வேகமாக சென்று மற்ற அறைகளில் உள்ள தோழிகளை எழுப்பி, “சீக்கிரம் தயாராகுங்கள்! நாம் உடனடியாகக் கிளம்ப வேண்டும்” என்று சொல்லி அவர்களை விரட்டினோம்.


எப்போதும் சம்சுதீன் ஒரு  மணி நேரம் முன்னதாகவே எங்களைத் தயாராகி வரச் சொல்லுவார் என்று குறிப்பிட்டு இருந்தேன். அந்த ஒரு மணி நேரம் எங்களுக்கு இருந்ததால், வேகமாக அனைவரும் தயாராகி வண்டிக்குச் சென்றோம். 


போகும் வழியில் சம்சுதீனிடம் பேசிய போது தான் நாங்கள் எவ்வளவு முட்டாள்தனமான எண்ணத்தில் இருந்தோம் என்பது புரிய வந்தது. அதாவது,  மத்திய மற்றும் தெற்கு அந்தமான் இடையே அமைந்துள்ள பரட்டாங் தீவு, தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே சென்று பார்த்து வர சுமார் 10 மணி நேரம்  செலவாகும். 


மேலும், ஒரு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை செய்யப்பட்டிருந்த இந்தத் தீவு அடர்ந்த காடுகள், மண் எரிமலைகள், சதுப்புநிலக் காடுகள் மற்றும்  சுண்ணாம்புக் குகைகளால் நிறைந்துள்ளது என்றும், சமீபத்தில்தான், தீவில் சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சகம் அதன் வாயிலைத் திறந்துள்ளது என்றும் தெரிய வந்தது. அடுத்து  காட்டிலாக்காவின் அனுமதியுடன்தான்  அங்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதால் செக் போஸ்டில் சற்று முன்னதாக சென்று காத்திருக்க வேண்டுமென. முந்தைய நாள் நாங்கள் பயந்ததை நினைத்து எங்களுக்கே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. டிரைவர் தம்பியிடம் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.


தீவிற்குள் செல்வதற்கு முன் அது பற்றி மேலும் சில முக்கிய தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வது அவசியம். அஃதாவது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள சுண்ணாம்புக் குகைகள் நீண்ட காலமாக உலகிலிருந்து மறைக்கப்பட்ட பரட்டாங் தீவில் அமைந்துள்ளன. இந்தத் தீவு உலகின் மிகவும் மூத்த பழங்குடியினரான ஜராவா பழங்குடியினரின் தாயகமாகும். அந்தமானில் வசித்து வரும் நான்கு பழங்குடிகளில் ஒரு பிரிவான ஜராவாக்கள் சுமார் 50,000 ஆண்டுகளாக  வசித்து வரும் பகுதியைக் கடந்துதான் பரட்டாங் தீவிற்குச் செல்ல வேண்டும். எனவே, இந்திய அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் பழங்குடி மண்டலத்தைக் கடக்க வேண்டியிருப்பதால், அந்த அழகான தீவிற்கு பயணம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 


ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் சுற்றுப்பயணங்களில், சுற்றுலாப் பயணிகள், நெடுஞ்சாலையில் ஜராவாக்களைப் பார்க்க நேரிடும்போது அவர்களைப் புகைப்படம் எடுக்கிறார்கள் அல்லது தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள். இவை இந்தியச் சட்டத்தின்படி சட்டவிரோதமானவை. 2002 இல், இந்திய உச்ச நீதிமன்றம் அந்தமான் டிரங்க் சாலையை மூட உத்தரவிட்டது. மேலும் மார்ச் 2008 இல், அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் சுற்றுலாத் துறை, ஜராவாஸுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பது, அவர்களைப் புகைப்படம் எடுப்பது, அவர்களின் நிலத்தின் வழியாகச் செல்லும்போது வாகனங்களை நிறுத்துவது அல்லது சவாரி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று சுற்றுலா நடத்துநர்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டது. மீறினால் பழங்குடியினரின் பாதுகாப்பு ஒழுங்குமுறைச்  சட்டத்தின் கீழ் கடுமையான வழக்கு தொடரப்படும் என்றும் வலியுறுத்தியது.


மேலும், 2013 ஆம் ஆண்டில், சர்வைவல் மற்றும் உள்ளூர் அமைப்பான 'தேடல்' அமைப்பு, 'மனித சஃபாரிகளை' தடை செய்ய மேற்கொண்ட பிரச்சாரத்தைத் தொடர்ந்து, ஏழு வாரங்களுக்கு ஏடிஆர்(அந்தமான் ட்ரங்க் ரோட்) வழியாக சுற்றுலாப் பயணிகளை பயணிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததாம். மனித சஃபாரிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என அந்தமான் அதிகாரிகள் தங்கள் விதிகளைத் தாங்களே மாற்றிய பிறகு, தடையை திரும்பப் பெறுவதைத் தவிர உச்ச நீதிமன்றத்திற்கு வேறு வழி இருக்கவில்லை.


அக்டோபர் 2017 இல், தீவிற்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றுக் கடல் வழியும் திறக்கப்பட்டது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கடல் வழியைத்தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த போதிலும், மிகச் சிலரே அதனை இன்று வரை பயன்படுத்துகின்றனர், அதனால் சாலை வழியில் மனித சஃபாரிகளின் சந்தை செழித்து வருகிறது என்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயமாகும்.  



அதிகாலை 4 மணிக்கே செக்போஸ்ட்டை அடைந்து விட்டோம். ஆனால் 6 மணிக்குத்தான் திறக்கப்படுமாம். அதுவரை என்ன செய்வது..பசி வேறு வயிற்றைக் கிள்ளத் துவங்கியது. இயற்கை உபாதை வேறு அழைக்க, கழிவறையைத் தேடிக் கிளம்பினோம். போகிறோம்..போகிறோம்… கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து விட்டோம். அத்தனை தொலைவிற்கும் ரயில்வண்டியின் பெட்டிகள் போல் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகள் தொடர்ந்து நீள் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. வண்டிகளுக்குள்ளே  எண்களைப் போல் பல சுற்றுலாப் பயணிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 


வழி எங்கும் கடைகள் வேறு. சுடச்சுட உணவுடன். ஒரு கடையில்  தமிழ் திரைப்படப் பாட்டு ஒலிக்க உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது. 


....தொடரும்....

மாசிப்பண்டிகை - தனபால் பவானி



கோவில் பண்டிகை, திருவிழா கொண்டாட்டங்கள் என்பது எல்லா ஊர்களுக்கும் பொதுவான ஒன்று. மண் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த எல்லா கொண்டாட்டங்களும் கடவுள்களை நோக்கியே நகர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு கடவுளுக்கும் பண்டிகைகள் என்பதும், வேண்டுதல்கள் என்பதும் காலங்காலமாக இருந்துகொண்டே இருக்கின்ற விஷயங்கள். தலைமுறை தலைமுறைகளாய் நம்பிக்கையோடு ஊறிப்போன சில விஷயங்களை, அது சார்ந்த மதிப்பை மாற்றிவிடுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. பண்டிகைகள் கொண்டாப்படுவது சாமிகளை சாந்தப்படுத்த மட்டுமல்ல அதன் பொருட்டு தன் வீட்டில், தன் தெருவில், தன் ஊரில் உள்ள எல்லோரோடும் நட்பு பாராட்டவும், அன்பை வெளிப்படுத்தவும், ஊரோடு சேர்ந்து உறவாடவும் தங்களையும் எல்லோரோடும் இணைத்துக்கொள்வோம் உருவாக்கும் வாய்ப்புகள் அவை.


எல்லா ஊர்களிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கும், அப்படித்தான் எங்கள் ஊரில் மாசி மாதத்தில் நடைபெறும் செல்லியாண்டியம்மன், மாரியம்மன் பண்டிகையும். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் கொண்டாடப்படும் பெரிய திருவிழா. பவானியில் பிறந்த எல்லோருக்கும் புத்தாண்டோ, தீபாவளியோ, பொங்கலோ பெரிய பண்டிகையாய் தெரியாது. இந்த மாசிப்பண்டிகை தான் மிகப்பெரிய கொண்டாட்டமாய் இருக்கும். எப்போது மாசி மாதம் பிறக்கும் என காத்துக்கொண்டிருப்போம். மாசியின் முதல் வாரத்தில் அம்மனுக்கு “பூச்சாட்டுதல்” விழா ஒரு செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கும், அம்மனிடம் வாக்கு கேட்டு உத்தரவு வாங்கி பூச்சாட்டுவார்கள். பூச்சாட்டும் நாளன்று வெளியூர்க்காரர்கள் யாராவது எங்கள் ஊரில் இருந்தால் பொங்கல் வைக்கும் தினமன்று திரும்ப வந்து சாமி கும்பிட வேண்டுமென்பது பல காலங்களாக சொல்லப்படும் ஐதீகம். அடுத்த செவ்வாய் இரவு “கம்பம் நடுதல்”, உண்டிவில் கவட்டை போன்ற ஒரு பெரிய மரத்தில் மூன்றாவது கிளையாக ஒன்றை செதுக்கி சொருகி பானை ஒன்று உட்காருமளவுக்கு தயார் செய்வார்கள். அந்த கம்பம் நடும் நிகழ்வை அம்மனுக்கு நடக்கும் திருக்கல்யாணம் என்று சொல்வதுண்டு. அடுத்த ஒருவாரம் கழித்து புதன்கிழமையில்  பவானி எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல், சேத்து வேஷம் போடுதல், அலகு குத்துதல், அக்கினிச்சட்டிகள், தீர்த்தக்குடங்கள், பொங்கல், கெடா வெட்டு என ஊரே ஒரு சந்தோசமான மனநிலையில் இருக்கும்.

கம்பம் போட்டபின்பு ஒவ்வொரு இரவும் கொண்டாட்டமாகவே கழியும். தப்பட்டையும் பறையும் அடிப்பவர்கள் வரும்வரை கோவில் திடலில் சிறுவர்கள் கபடியோ, கண்ணாமூச்சியோ விளையாடி புழுதி கிளப்புவார்கள். இரவுகளில் பறை அடிக்கு தகுந்தபடி கால்கள் ஆடத்தொடங்கும் போதே மூன்று மூன்று பேராய் குழுவாக சேர்ந்துகொள்வார்கள். பெரிய பையன்கள் கம்பத்தை சுற்றி ஆடிவர சிறுவர்கள் ஓரமாய் ஆடிக்கொண்டிருப்பார்கள். பெண்களும் மற்றவர்களும் கூட்டம் கூட்டமாய் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அப்படி எல்லோரும் ஆடிக்கொண்டிருக்கும்போதே யார் யார் நம்மை பார்க்கிறார்கள் என கண்கள் தேடத்தொடங்கும். ஒவ்வொரு ஆட்டமும் வேகமெடுக்க கூட்டமும் சேரத்தொடங்கும். கம்பம் சுத்தி ஆடும்போதெல்லாம் எந்த கவலையும் துளி கூட தெரியாது. நடக்கத்தொடங்கி இருக்கும் குழந்தைகள் கூட ஆடத்தொடங்கும் அழகைப்பார்க்க அத்தனை கண்கள் வேண்டும். பறைகள் சூடேற கிடைக்கும் இடைவெளியில் ஒரு குவளை தண்ணீரோ ஒரு கோப்பை தேனீரோ தாகம் அடக்கும். நடு இரவில் சாமி ஊர்வலம் வரும்வரை ஆட்டம் தொடரும். கோவில் பூசாரி தீச்சட்டியை ஏந்தியபடி கம்பத்தை சுற்றிவந்து அதை கம்பத்தின் நடுவில் வைத்தபின்பு அன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வரும். சமயங்களில் இரவு 12, 1 மணி வரைகூட ஆடுவார்கள். பொங்கலுக்கு முந்தைய திங்கட்கிழமை விடிய விடிய ஆடுவார்கள் அந்த ஆட்டமென்பது அத்தனை சுவாரஸ்யம் நிறைந்தது. இந்த திங்களின் இரவென்பது விடிய விடிய ஆடுவதற்கு மட்டுமல்லாமல் வருடத்தில் ஒரே ஒருமுறை எல்லோரும்  நேரடியாக கருவறைக்குள்ளேயே சென்று சாமிக்கு தண்ணி ஊற்றும் இரவும்கூட இதற்காக நிற்கும் கூட்டம் பாலம் கடந்தும் நீளும்.

நேர்த்திக்கடன், வேண்டுதலாய் அலகு குத்துவதற்கு முந்தைய நிகழ்வாக சேத்துவேசம் நடக்கும். சாமியை குதிரையில் வைத்து ஊர் எல்லையிலிருந்து கோவில் வரை சுமந்து செல்லும் வழியெங்கும் லாரிகளின் மூலமாக சாலையில் தண்ணீரை ஊற்றி சேறு நிரப்பி அதில் சிக்குவோரையெல்லாம் தூக்கிப்போட்டு சேற்று சகதியில் முக்கி எடுக்கும் விழா அவ்வளவு சிறப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கும். வெய்யில் காலம் நெருங்குவதால் அம்மைபோடுதல், தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் நோய்களில் இருந்து அம்மன் காத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சேத்துவேசம் நடக்கும். உப்பு மிளகோடு சேர்த்து காசுகளை அள்ளிவீசுவது, துணிகளை வீசுவது, பேனா பென்சில், காய்கறிகள், கைப்பைகள் என அந்தந்த கடைகளை சாமி நெருங்கும்போது அவர்களிடம் உள்ளவற்றை வீசி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சமயங்களில் குழந்தைகளையும். குழந்தைகள் தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் சூரைவிடுவதாய் வேண்டிக்கொள்வார்கள் பின்பு கூட்டத்தில் தெரிந்தவரிடம் சொல்லி குழந்தைக்கு சேறுபூசி தூக்கிபோடுவது போல செய்து அதை பிடித்துவருபவர்களுக்கு காசும் கொடுத்தனுப்புவார்கள். இவை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படைகளில் இன்றுமே கடைபிடிக்கப்படுகின்றன. 
 
சேறு நிறைந்த உடலோடு காவிரியில் குளித்துவிட்டு அலகு குத்தும் ஆட்டத்துக்கு தயாராவது ஒரு தேர்வுக்கு தயாராவதாய் நேர்த்தியாய் இருக்கும், நாக்கு அலகு, இடுப்பில் குத்திக்கொள்ளும் அலகு, வாய்ப்பூட்டு, கொடைக்கம்பி அலகு. ஏரோபிளான் அலகென விதவிதமான அலகுகள் உண்டு. முக்கிய சாலையில் கூடும் குழுக்கள் தனித்தனியாய் தங்கள் திறமையை காட்டத்தொடங்குவார்கள். ஒரே நிறத்தில் உடையணிந்து ஆடும் ஒரு கூட்டம், சிலம்பு சுழற்றும் ஒரு கூட்டம், வாயிலிருந்து தீப்பிழம்புகளை கக்கும் ஒரு கூட்டம், அலகு குத்தியபடி ஆடி வரும் ஒரு கூட்டம் இத்தனைக்கும் நடுவே தங்கள் கதாநாயகனையோ கதாநாயகியையோ தேடிக்கொண்டு ஒரு கூட்டமென வீதி முழுவதும் கூட்டமும் ஆட்டமுமாய் நடு இரவு வரை நீளும் நாளில் தேக்கி வைத்திருந்த கனவுகளில் பாதியாவது நிறைவேறி இருக்கும். 

அடுத்தநாள் காலையில் தேர் இழுப்பார்கள். அந்தத் தேரில் கல்யாணமான அம்மனுக்கு சீர்கொண்டு போவதாக பெரியவர்கள் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன். அலங்கரிக்கப்பட்ட அம்மனோடு தேர் ஊர்வலம் போய் தன் இடத்தில் நிலைகொள்ளும் போது பாதி பண்டிகை முடிந்திருக்கும். பண்டிகை தொடங்குவதற்கு ஒருவாரம் முன்னே போட்டுவைத்த முளைப்பாரிகளுக்கு இப்போது வேலை வரும், மாலை எல்லா பெண்களும் அவரவர் முளைப்பாரி கூடைகளை சுமந்தபடி முக்கிய தெருக்களின் வழியாக பயணித்து கோவிலை வந்தடைவார்கள். அன்றைய இரவு கம்பத்தை ஆற்றில் விடும் நிகழ்வு. கம்பம் சுமந்த பூசாரி முன்னே ஆடிச்செல்ல முளைப்பாரி சுமந்த பெண்கள் பின்னே தொடர நடுவில் ஆடியபடி செல்லும் அந்த இரவு எங்கள் ஊர்க்காரர்கள் வாங்கிய வரம். ஆட்டம் பாட்டுகளோடும் வாண வேடிக்கைகளோடும் காவிரியை நோக்கி நடக்கும்போது அங்கங்கே முளைப்பாரிகளை வைத்து பெண்கள் கும்மியடிப்பார்கள். கம்பத்திற்கு பூஜை போட்டு அதை ஆற்றில் விடும்போது அம்மன் அழுவதாய் சொல்வார்கள். காவிரியிலிருந்து திரும்பி வரும் நேரத்தில் ஆர்க்கெஸ்ட்ரா என்னும் பெயரில் எம் ஜி ஆர்/ சிவாஜி பாட்டோ, நடனம் என்ற பெயரில் திண்டுக்கல் ரீட்டா போன்ற யாரோ ஆடிக்கொண்டிருப்பார்கள்.  

பொங்கல் முடிந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை “மஞ்சள் நீராட்டுதல்” நிகழ்வு நடக்கும் நாளில் தெருவெங்கும் அம்மன் பல்லக்கு பவனி வரும் வேளையில் தேடிப்பிடித்து வண்ணங்கள் பூசுவது, ஜிகினாக்கள் கொட்டுவது, பெரிய கோப்பை நிறைய மஞ்சத்தண்ணியை வைத்துக்கொண்டு மாமன் மகள்களை தேடும் அத்தைப்பையன்களும்  அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் பெண்களுமாய் வீதிகள் நிறையும் நேரத்தில் வயதானவர்கள் தங்கள் இளமைக்காலங்களில் நனைந்து கொண்டிருப்பார்கள். சமயங்களில் முட்டைகளால் அடித்துக்கொள்வதுமுண்டு முட்டை தேய்த்துக்குளிப்பதில்தான் எத்தனை சுகம். பல்லக்கு தூக்கும் பக்தர்களுக்கு சுண்டல், கம்மங்கூழ், குளிர்பானங்கள், மோர், தர்பூசணி என ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வரவேற்புகள் படு பயங்கரமாகவே இருக்கும். ஒவ்வொரு இரவும் அம்மனை விதவிதமாய் அலங்கரித்து முக்கிய வீதிகளின் வழியாக ஊரெங்கும் ஊர்வலமாய் வருவார்கள். கரகாட்டத்தோடு ஒருநாள், ஒயிலாட்டத்தோடு ஒருநாள் , நாதஸ்வரக் கலைஞர்களோடு ஒருநாள், கேரளா கெண்டை மேளத்தோடு ஒரு நாளென ஒவ்வொரு நாள் இரவும் சந்தோஷங்களாலும் சங்கீதங்களாலும் நிரம்பும். ஒப்பனைகளோடும்  அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வரும் ஊர்வலத்தை பார்க்க ஊரே விழித்துக்கிடக்கும் இரவுகள் ஒரு மாதம் வரை நீளும். உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் என வீர விளையாட்டுகளும் அங்கங்கே நடக்கும்.

இளம் வயதிலிருந்து மனதின் அடி ஆழத்தில் அழகாய் தங்கிவிட்ட, ஒரு மாதம் நடக்கும் இந்த பண்டிகையை இப்போதெல்லாம் ஏனோ முழுதாய் அனுபவிக்க முடியவில்லை. பலபேர் சென்னை பெங்களூரு என பெரு நகரங்களை நோக்கி பிழைப்புக்காக வெளியூர்களில் தங்கிவிட்ட நிலைகளில் பிடித்த ஊரைவிட்டு பிரிந்திருப்பதைப்போல, பெரிதும் இழக்கிறோம் இந்த பெரும் பண்டிகையையும், பறை காய்ச்ச போன இடைவெளியில் ஊரிலிருந்து பேசிய நண்பர்கள் இப்போதும் உணர்வதாகவே சொல்கிறார்கள் நிறைய விஷயங்களை இழப்பதாக. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்த பறையின் சத்தம் என் காதுகளில் கேட்கிறது.

பண்டிகை முடியும் கடைசி நாளிலிருந்து அடுத்த வருடத்திற்காக காத்துக்கொண்டிருப்போம் நாங்கள் மட்டுமல்ல அந்த “அம்மன்களும்தான்.

-தனபால் பவானி
29.2.2024

Menstrual Cup- தெரிந்ததும் தெரியாததும் - பிரதீபா புஷ்பராஜ்

  


Menstrual cup (மென்செஸ் கப்)

மாதவிடாய்க்காலங்களில் பெண்கள் உபயோகப்படுத்தும் சானிட்டரி நாப்கின், துணி, டேம்ப்போன் போன்றவைகளுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்படும் சிலிகோனால் ஆன சிறு கப். இதைப்பற்றிய புரிந்துணர்வு சிலருக்குத் தேவைப்படலாம் என்பதால் இந்த விளக்கப்பதிவு. பெண்களே இதன் உபயோகிப்பாளர்களாக இருப்பதால், பின்வரும் முழுக்கட்டுரையும் அவர்களை நோக்கியதாகவே எழுதப்பட்டிருக்கும்.


மென்செஸ் கப் (Menstrual cup) என்றால் என்ன?

அதிகபட்சமாக 30 மில்லி மட்டுமே இருக்கும் M-கப் , மாதவிடாய் நேரங்களில் சேனிட்டரி நேப்கின்களுக்கு மாற்றாக யோனிக்குழாய் மூலம் கர்ப்பப்பை வாய்க்கு நெருக்கமாகப் பொருத்தப்பட்டு கசிவைச் சேகரிக்கும். ஒவ்வொரு முறையும் கப்  நிரம்பியபின் (சராசரி 4-6 மணி நேரம்), அதை வெளியில் எடுத்து டாய்லெட்டில் ஊற்றிவிட்டு, கப்பை நீரால் சுத்தம் செய்து மீண்டும் பொருத்திக்கொள்ளலாம்.  மற்ற மாதவிடாய் உபகரணங்கள் போல ஒருமுறை உபயோகித்தபின் குப்பையில் வீசும் அவசியம் இல்லாமல் குறைந்தபட்சம் 5 வருடங்கள் மீண்டும் மீண்டும் உபயோகிக்கலாம். விலையும் ரூபாய் 300 முதல் 600 வரையே!


 எல்லாருக்கும் ஒரே அளவிலானதா?

பெரும்பாலும் சிலிக்கோனால் செய்யப்படும் M-கப் , suction கொண்டு வேலை செய்கிறது. டீனேஜ் பெண்கள், தாம்பத்யத்தில் ஈடுபடாத அல்லது இயற்கை வழியில் பிரசவிக்காத 30 வயதின் கீழ் உள்ள பெண்களுக்கு S சைஸிலும், மற்றவர்களுக்கு மீடியம் சைஸிலும் கிடைக்கிறது. A , B என்ற அளவிலும் சில பிராண்டுகள் இருக்கும், உங்களுக்கு எது சரியானது என்று படித்துப்பார்த்து வாங்கலாம். எவ்வாறு பொருத்துவது, வெளியே எடுப்பது என்ற வழிமுறைகள் யூட்யூபில் காணலாம்.


 பொதுவான சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் பதில்கள்:

  • உள்ள போட்டு தொலைஞ்சிட்டா?
  • வெளில எடுக்க முடியாம போய்ட்டா?
  • நழுவி விழுந்துட்டா?
  • ரொம்பி வழிஞ்சுட்டா?
  • உள்ள குத்திட்டா?

இப்படி பல 'ட்டா'க்களுக்கு ஒரே பதில் தான். கர்ப்பப்பை ஒன்றும் two-way road அல்ல, M-கப் ஒன்றும் அட்சயப் பாத்திரமும் இல்லை. இதைக் குறித்த ஆரம்ப மனத்தடைகளை உடைக்க ஒரே வழி உபயோகிக்கத் தொடங்குவது மட்டுமே! 2-3 மாதங்களில் சுலபமாகப் பழக முடியும், அதனால் பயமின்றி உங்கள் புதிய பயணத்தைத் தொடங்கலாம்.


1. M-கப்பை மடக்கி உள்ளே வைக்க வேண்டும், உபயோகிக்கும் புதிதில் சரிவரப் பொருந்த 6-8 தடவை ஆகும்.


2. சரியான பொசிஷனில் நின்று அல்லது அமர்ந்து (ஒரு கால் கீழே, ஒரு கால் மேலே உயரமான இடத்தில் ஊன்றி வைக்கலாம்) பொருத்தலாம். ஒரு அளவிற்கு மேல் உள்ளே திணிக்க முடியாது, கவலை வேண்டாம்.


3. முதல் சில தடவைகள் 5 நிமிடங்கள் நேரம் எடுக்கும். அமைதியான, ரிலாக்ஸான மனநிலையை ஏற்படுத்தி, மெதுவாகப் பொருத்தவும். சரியாகபப் பொருந்தியுள்ளதா என்று லேசாக இழுத்துப்பாருங்கள். கர்ப்பவாயின் அருகே சென்று suction செட் ஆகி விட்டால் நழுவி வெளியே வராது.


4. பீரியடின் முதல் நாள்/இறுதி நாள் மட்டுமே ஸ்டெர்லைஸ் செய்தால் போதும். உபயோகிக்கும் 3-5 நாட்களும் ஒவ்வொரு முறையும் கொதிக்க வைத்து சுத்தம் (ஸ்டெர்லைஸ்) செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


5. முதலில் வீட்டில் உபயோகிக்கப் பழகுங்கள். என்ன ஏது என்று புரிந்தபின் வெளியிலும் உபயோகிக்கலாம்.


6. பொதுக் கழிப்பிடங்களில் டாய்லெட்டில் கொட்டியப்பின் wipes உபயோகித்து கப் சுத்தம் செய்து பிறகு மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். சில பொது இடங்களில் வாஷ் பேசினுடன் கூடிய டாய்லெட்டை உபயோகிக்கலாம் ,

சௌகரியமாக இருக்கும்.


7. அவரவர் உதிரப்போக்கிற்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் 3-6.30 மணி நேரம் ஆகும், அடுத்தடுத்த நாட்களில் இந்த நேரக்கணக்கு கூடவோ குறையவோ செய்யும். பழகப்பழக எப்போது கப் நிரம்பும் என்பது உடலின் சங்கேத மொழிகளில் (ஈரம் உணர்தல்) புரியத்தொடங்கும் .


8. அருவருப்பு என்பது நிச்சயம் வேண்டாம்.  கைகளில் படத்தான் செய்யும், சுத்தமாகக் கழுவிக்கொள்ளலாம். நம் உதிரம், நம் சுத்தம்.


9. ஒரு மாதத்திற்கு சானிட்டரி பேட் வாங்கும் அதே விலையில் இந்த M கப்பை வாங்கி விடலாம். இது குறித்த விழிப்புணர்வு நிறைய பேருக்கு இருப்பதால் இப்போது மருந்தகங்களில், அமேசானில் என்று பெரும்பாலான இடங்களில் கிடைக்கிறது. ஒருமுறை வாங்கினால் குறைந்தது 5 வருடங்கள் வரும்.


10. சரியாகப் பொருத்தியிருந்தால் கப் வைத்த உடனேயே லீக் ஆகாது. லீக் ஆனால் சரியாகப் பொருந்தவில்லை என்ற ஒரே காரணம் தான்.


11. வெளியில் எடுக்கும்போதும் வம்படியாக இழுக்கக் கூடாது. Wall Suction holder பார்த்திருப்பீர்கள் தானே, நடுவில் பிடித்து இழுப்பதைவிட ஓரமாக லேசாக தூக்கினாற்போல் எடுத்தால் சுலபமாக விடுபடும்.  அதே லாஜிக் தான் இங்கேயும்! படபடப்பாக இல்லாது அமைதியான மனநிலையில், உங்களுக்கேற்ற பொஷிஷனில் நின்று அல்லது அமர்ந்து கப்பின் அடிப்பகுதியை ஓரமாக சிறிது அழுத்தினால் suction விடுபடும்.  பிறகு மெதுவாக இழுத்தால் சுலபமாக வெளியே எடுத்துவிடலாம். படிப்பதற்கு என்னம்மோ ராக்கெட் சயின்ஸ் போல் இருந்தாலும், பழகிய பின் 30 செகண்ட் வேலை தான். 


12. M-கப்பை வெளியே இழுக்க உதவும் stem - உபயோகித்துப்பழகியபின் உங்கள் வசதிக்கேற்ப அதன் நீளத்தைக் குறைத்துக்கொள்ளலாம்.


நன்மைகள்:

  • சேனிட்டரி பேட் உபயோகிப்பதால் வரும் Rashes(புண்) கப்-பினால்  வராது.
  • பல நூறு சேனிடரி பேடுகள் குப்பைக்குப் போவதை தவிர்க்கலாம், காட்டன் துணிகள் துவைப்பதையும் அதை உலர வைக்கும் வேலையும் தவிர்க்கலாம்.
  • மாதவிலக்கு அசௌகரியங்களே இல்லாமல் சுதந்திரமாக, உடையில் கறை படியும் பயம் ஏதுமின்றி நடமாடலாம்.
  • யூரின், மலம், மாதவிடாய் மூன்றையும் தனித்தனியாய் டீல் செய்யலாம்.
  • எதிர்பாராமல் தண்ணீரில் அல்லது மழையில் நனைந்தால் உடை நாஸ்தியாகும் என்ற கவலை வேண்டாம்.
  • லீக் பற்றிய எண்ணம் இல்லாது, இரவில் எந்த பொஷிஷனில் வேண்டுமானாலும் தூங்கலாம்.
  • சேனிடரி பேடுகளைப் போல எங்கே டிஸ்போஸ் செய்வது, வாங்குவதை மறந்தால் என்ன செய்வது என்ற கவலை இதில் இல்லை.
  • வீட்டில் இருக்கும்போதும், வெளியே எங்கு செல்லும்போதும், குறைந்தபட்சம் டாய்லெட், flushable toilet wipes இருந்தாலே போதும், சுவடே இல்லாமல் மாதவிடாய் நாட்களை சுலபமாகக் கடக்கலாம்.


இந்தத் தலைப்பில் எனக்குத் தெரிந்த எல்லாமும் சொல்லியிருக்கிறேன்; உபயோகிக்கும் முறை அறிந்து, உங்கள் உடலமைப்பைப் புரிந்து, பயமின்றி உங்கள் M-cup புதிய பயணத்தைத் தொடங்க வாழ்த்துக்கள்!

 

-பிரதீபா புஷ்பராஜ்

வெள்ளச்சி - யசோதா பழனிச்சாமி

 


செழியன் அந்த தெருவுக்கு குடி வந்து ஒரு வருடமாகிறது. ஏரியா கொஞ்சம் நசநசவென இருந்தாலும் வாடகை குறைவு என்பதால் தேடிப் பிடித்து குடும்பத்தோடு குடியேறினான். சுவற்றுக்கு வண்ணம்  அடிக்கும் வேலை. ஒரு பெண் குழந்தை தன்யா ஏழு வயதாகிறது.

செழியன் அன்று காலை ஆறுமணி வேலைக்கு கிளம்பினான்.காலையில் ஆறுமணிக்கே சென்றால் தான் ஒன்னரை நாள் கூலி கிடைக்கும். பெயிண்டர் என்றாலே தண்ணி போடுவார்கள் என்ற ஒரு வழக்கம் இந்த சமுதாயத்தில் இருக்கிறது. ஆனால், செழியனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அதனால், அவன் சம்பாத்தியம் போக சேமிப்பும் இருந்தது. அவன் வீட்டுக் கதவை திறந்து  வெளியே வரும் போது வீட்டிற்கு வெளியே, பிறந்து ஒரு  மாதமிருக்கும் நாய்க் குட்டி ஒன்று மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. 


'அடச்சே! காலங்கார்த்தால இங்கே என்ன பண்ணற போ அங்கே' என்று விரட்டி விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.


அந்த நாய்க்குட்டி, எதிரும், புதிருமாக  இருக்கும்  அந்த தெருவின் வீடுகளின் முன் ஊறத் தொடங்கியிருந்தது.


ஒவ்வொரு வீட்டின் கதவின் தாழ்ப்பாள் விலகியதும் பெரியவர்களின் கண்களில் அந்த நாய்க்குட்டி தென்பட்டது. அவரவர் வேலை அவரவருக்கு. அங்கே அடிக்கடி இப்படி தான் நாய்க்குட்டிகள் வரும் அப்புறம் காணாமல் போய்விடும். ஊரச் சுத்தி நாய்களா மேயுது. இது எங்கிருந்து வந்து தொலைஞ்சதோ, அரசாங்கம்  தெருநாயை ஒழிக்கிறதுக்கு எப்பத்தான் வழி செய்யுமோ? இதுல சில அமைப்புகள் நாய்களை இம்சிக்க கூடாதுனு வேற  சொல்லறாங்க. ஆனால்,தெருவில் நடந்து போனால் பத்து இருபது தெருநாய்கள் ரவுண்ட் கட்டி நின்னு நம்மள பயமுறுத்தும். இரண்டு சக்கர வாகனத்தில் போகும் போது, எங்கிருந்துதான் வருமோ அசுரன் போல் வேகமா குரைத்துக் கொண்டே  ஓடி வந்து வாகனத்தில் மோதி கீழே விழ வைச்சிடும். சில நேரங்களில் உயிர் சேதம் கூட நிகழும்  யார் பொறுப்பேத்துக்கிறாங்க? என்று மனசுக்குள் முணுமுணுப்பு செய்யாமல் பெரும்பாலோர் தெருநாய்களை கடந்து செல்வதில்லை.


அந்த நாய்க்குட்டி நல்ல வெள்ளை வெளேறுனு இருந்தது. என்னை எடுத்துக் கொஞ்சுங்களேன் என்று சொல்வது போல, தன்னை கடக்கும் மனிதர்களின் கால்களை பிரண்ட ஆரம்பித்தது.பெரியவர்கள், "அடச்சே!அந்தாண்டா போ" என விரட்டினாலும் அதன் அழகை ரசிக்காமல் நகரவில்லை..


செழியன் சென்ற பிறகு அவன் மனைவி குழாய் தண்ணீர் பிடிக்க வீட்டுக்கு வெளியே  இருக்கும் தெருமுனைக்கு வந்தாள். அவளைப் பின் தொடர்ந்து   மகள் தன்யாவும் வந்து கொண்டிருந்தாள். அப்போது, தன்யாவின் கால்களுக்கிடையே  வெள்ளை நாய்க்குட்டி புகுந்து ஊர்ந்தது.


" அம்மா நாய்க்குட்டி" எனக் கத்தினாள். அதன் அழகைப் பார்த்ததும் கையில் எடுக்கப்போனாள் தான்யா.


"ச்சீ விடு அது எங்கத்த நாயோ என்ன கண்றாவியோ தெரியல கீழே போட்டு வா" என கத்திக் கொண்டே அவள் அம்மா தண்ணீர் பிடிக்கும் வரிசைக்கு சென்றாள்.



அம்மா சென்றதும் அந்த நாய்க்குட்டியை எடுத்து கையால் தொட்டு தடவிய போது, தன் குட்டி வாலை ஆட்டிக் கொண்டு நாக்கை நீட்டி "க்ர் க்ர் "என  மெல்லிய குரலில் கத்த ஆரம்பித்தது. தன்யா குறுகுறுப்பாக  அதைக் கவனித்தாள். அதற்குள் அந்த தெருவிலிருக்கும் குழந்தைகளின் கூட்டம் கூடியிருந்தது.


" ஏய் நாயி ரொம்ப அழகா இருக்குல்ல"


"ஆமாப்பா" நாம வளத்தலாமா? இன்னொரு குழந்தை கேட்டது.


" நம்ம வீட்டுல ஒத்துக்க மாட்டாங்களே கொஞ்சம் வளர்ந்த பையன்".


"நாம திங்கிற சாப்பாடு இருக்கில்ல அதில ஆளுக்கு ஒரு வாய் கொண்டு வந்தா போதும்" என்றான் இன்னொரு சிறுவன்.


தன்யா பெரிய மனுஷி போல் "அய்யோ அது இப்ப போய் சோறு திங்குமா? அதுக்கு இன்னும் பல்லு முளச்சிருக்காதே"என்றாள்.


"அட ஆமாம்ல்ல அப்புறம் என்ன செய்யறது?"


"அதுக்கு பால் தான் கொடுக்கணும் அதுக்கு எங்க போறது?"


"எங்க வூட்டுல எனக்கே காபிதான்."என்றது ஒரு குரல்.


"எங்கம்மா எனக்கு பால் கொடுப்பாங்க. நான் குடிக்கும் பாலில் பாதியை அதுக்கு  கொண்டு வந்து ஊத்தறேன்" என வீட்டுக்குள் சென்ற தான்யா டம்ளரிலிருந்த பாலை எடுத்து வந்தாள்.


பாலை ஊற்றி வைக்க டப்பா தேடினார்கள். அங்கே காளான் அடைத்த காலி டப்பா ஒன்று நீல நிறத்தில் கிடந்தது. அதை எடுத்து சுத்தம் செய்து  பாலை ஊற்ற அந்த நாய்க்குட்டி டபலபக், டபலபக் என்று குடித்தைப்  பார்த்த குழந்தைகள் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.


"இந்த நாயிக்கு என்ன பேரு வைக்கலாம் ? "


"இது வெள்ளையா இருக்கு அதனால அதுக்கு வெள்ளையன் பேர் வைக்கலாமா?" ஒரு சிறுவன் குரல் உயர்த்த ஓ….வைக்கலாமே!


அங்கே இவர்களின் கூடுகையை களைக்க தன்யாவின் அம்மா, "ஏய் இன்னுமா அந்த நாயிக்கிட்டையே இருக்க? இரு வரேன்" என்று கத்தினாள். 


குழந்தைகள் கலைந்தார்கள். வெள்ளையன் தனிமையானான். வயிறு நிரம்பி இருந்தது.


தன்யா வீட்டின் முன்னால் இருந்த வேப்பமர நிழலில் அதுக்கு ஒரு பழைய துணியை   சிறுவர்கள் விரித்துப் போட்டார்கள் படுத்துக் கொண்டது. 


குழந்தைகள் தாங்கள் குடிக்கும் பால், காபி, கூழ் எதுனாலும் அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் கொடுக்க வெள்ளையன் வந்த மூன்று மாதத்தில் புஸ்டியாகி நின்றது.


அந்த தெருவில் இருந்த பெரியவர்கள் வெள்ளையன் வளரும்  வரை சரியாக கவனிக்கல. அது வளர்ந்த பிறகு தனக்கு சோறு போட்ட குழந்தைகள் வீட்டின் முன் நின்று கொண்டு வாலாட்டி விளையாட ஆரம்பித்தது. அங்கே வந்த பெரியவர் ஒருவர்  "அட! இது பொட்ட நாயி இது எதுக்கு இங்கே திரியுது மொதல்ல அடிச்சு விரட்டுங்க" என  சொல்லிச் சென்றார். ஆனால்  அதை விரட்டி விட யாருக்கும் நேரமில்லை.


தன்யா தன் வயதொத்த சிறுவர்களிடம், "டேய் இது வெள்ளையன் இல்லை வெள்ளச்சி" எனக் கூறியதும் அனைவருக்கும் சந்தோஷமானது. குழந்தைகள் வளருவது போல் நாயும் வளர்ந்து நின்றது.


தன்யா, தன்  வீட்டில் அப்பாவும், அம்மாவும் வேலைக்குச் செல்லும் நேரங்களில் எல்லாம் நாயுடன் விளையாடினாள். ஒரு நாள்  வெள்ளச்சியின் உடல் பெருத்து வயிறு கீழே தொங்க நல்ல மினுமினுப்பு தெரிந்தது ஏழு வயது தன்யாவுக்கு காரணம் புரியவில்லை.


"டேய் இப்போ வெள்ளச்சியைப் வந்து பாருங்க நல்லா கொழுக்கு மொழுக்குனு இருக்கா" எனச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்த போது,  அங்கே எதோச்சையாக வந்த செழியன் தன்யா பேசியதைக் கேட்டு, அப்போது தான் அந்த வெள்ளச்சியை நன்கு கவனித்தான். அது தாய்மை அடைந்திருக்கிறது என்று புரிந்து போனது.


"தன்யா இந்த வெள்ளச்சி இன்னும் கொஞ்ச நாள்ல குட்டி போடப் போவுது எதுக்கும் அதுக்கு கொஞ்சம் சோத்த சேத்திப் போடுங்க" என்று சொன்னதைக் கேட்டதும் தன்யாவிற்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆயிரம் தான் ஒருவரை வெறுத்தாலும் தாய்மை அடைந்ததை பார்க்கும் யாருக்கும் மனதில் ஒரு பரிவு இயல்பாகவே  வந்து விடும். அந்த இயல்பு வரவில்லை என்றால் அவர்கள் மனிதர்களே இல்லை.


தன்யா தெருவுக்குள் ஓடினாள். அங்கே விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களுடன் "டேய் நம்ம வெள்ளச்சி குட்டி போடப் போவுதாம்" எனச் சொல்லியதும் எல்லோரும் "ஹைய் ஹைய்" எனக் குதித்து குதித்து சந்தோஷப்பட்டார்கள்.


தன்யாவின் அம்மாவிற்கு இது பிடிக்கவேயில்லை. 'எந்த நேரமும் வெள்ளச்சி, வெள்ளச்சினு வீதியில திரியுற படிக்கற நேரம் கூட இப்ப வீட்டுல இருக்கிறதில்லை' என்று திட்ட ஆரம்பித்தாள்.


குடிநீர் குழாயில் கூடிய பெண்களும் "இந்த புள்ளைங்க எந்த நேரமும் இந்த பொட்ட நாயி பின்னாலையே சுத்திட்டுத் திரியுதுங்க. இந்த நாயை மொதல்லையே விரட்டி விட்டிருக்கணும். நாமளும் பாக்கம வுட்டு, இப்ப பாரு வவுத்த தள்ளிட்டு நிக்குது‌ இது எத்தனை குட்டிப் போடப் போவுதோ? ஏற்கனவே இந்த ஒத்த  பொட்ட நாயிக்கு, பத்து நாயி நம்மளையும் சேந்து ராத்திரிக்கு தூங்க விடாம தொரத்திட்டு சண்டைப் போட்டுட்டு பின்னால திரியுதுக. இது குட்டி போட்டு இன்னும் நாலஞ்சு வந்தா  நம்ம தெருவே பிடிக்காதே. அதனால், குட்டி போட்டதும் எங்காவது கண்காணத இடத்தில கொண்டு போய் சாக்குப் பையில போட்டு எடுத்தெறிஞ்சடுணும்.." 


"ஆமாம் நீ சொல்லறது தான் சரி" என பெண்கள் ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்.


அங்கே குழந்தைகள் " டேய் வெள்ளச்சி குட்டி போட்டா நாலஞ்சு போடுமாம். அதுகளுக்கு எப்படி நாம பால் ஊத்த முடியும்" என தன்யா சோகமானாள். "அய்யோ, தன்யா, நாம வெள்ளச்சிக்கு மட்டும் நல்ல சாப்பாடு போட்டாப் போதும். அது குட்டிகளுக்கு பாலைக் கொடுத்துடும்." என்றான் வளர்ந்த சிறுவன்.


"அட அப்படியா?" என எல்லாக் குழந்தைகளும் ஆச்சரியத்தில் நின்றார்கள்.


குழந்தைகள் எல்லோரும் வெள்ளச்சியின் குட்டிகளை எதிர் நோக்கி காத்திருக்க, பெற்றவர்கள் அந்த குட்டியை எங்கே விடுவது என ஆலோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அந்த சம்பவம் நடந்தது.


வெள்ளச்சி தன் வயிற்றை தொட்டலிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், அந்தப் பகுதியில் அதிக அளவில் வெறிநாய்கள் சுற்றிக் கொண்டு இருந்தது. அந்த தகவல் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு யார் மூலமாகவோ சென்றது.

அதனால், அங்கே இருக்கும்  தெரு நாய்களைப் பிடிக்க ஒரு பெரிய வாகனத்துடன் வந்திருந்தார்கள் நாய் பிடிக்கும் பணியாளர்கள்.


"நாங்க  நாய் பிடிக்க வந்திருக்கோம்மா. இந்த தெருவில் ஏதாவது நாய்கீது சுத்திட்டு இருக்குதாம்மா?" என வீட்டுக்கு வெளியே நின்று தன்யாவின் அம்மாவிடம் தான் விசாரித்தார்கள்.


விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்‌ அதைக் கேட்டதும்,  "அய்யோ நாய் பிடிக்கிற வண்டியாம் இப்ப என்ன செய்வது? வெள்ளச்சியைப் பிடிச்சிட்டுப் போயிடுவாங்களே" என்ற கவலையில் தேய்ந்து கொண்டிருந்த போது, தன்யாவின் வீட்டு முன் இருந்த  மருதாணிச் செடியின் ஓரத்தில் வெள்ளச்சியிடமிருந்து 'ம்ம்..ம்ம்ம் ..ஊஊ…ஊ ஊ' என முனகல் சத்தம் கேட்க ஆரம்பித்தது.


குழந்தைகள் அங்கே ஓடிப் பார்க்க அங்கே வெள்ளச்சி பிரசவித்து இருந்தது.

புதியதாக வந்த நபர்கள் வெள்ளச்சியை எட்டிப் பார்க்க, வெள்ளச்சி 'கொர் ..உர் ..உர்'.. என கத்தி முறைக்க ஆரம்பித்தது. "அய்யோ  நாய் குட்டி போட்டிருக்கும் போலயிருக்கு.  இந்த நாயை நாம பிடிக்க முடியாது. வேறு நாய் ஏதாவது இருந்தால் பிடிக்கலாம் வாங்க" என களைந்தார்கள்.


வேடிக்கை பார்க்க வந்த ஆண்களும், பெண்களும் 'அடச்சே எப்படியாவது இந்த தெருவை விட்டுத் தொரத்திடலானு பார்த்தால் இப்படி ஆகிடுச்சே!' என பேசிக் கொண்டு இருந்தார்கள். வெள்ளச்சி ஈன்ற குட்டிகள் அரிசியும் உளுந்தும் கலந்தது போல், கறுப்பும் வெளுப்புமாக, வெள்ளச்சியின் நெட்டி தொங்கிக் கொண்டிருந்த முலைக்காம்பை பிடித்து சப்பிக் கொண்டு இருந்ததைக் கண்ட பெரியவர்கள்,  "டேய், அந்த நாய்கிட்ட போயி, அது குட்டிகளை தொட்டுடாதீங்க கடிச்சாலும் கடிச்சிடும்." என அறிவுறுத்தி விட்டு நகர்ந்ததும் குழந்தைகள் ஒன்று சேர்ந்து குதுகலித்தார்கள்.


வெள்ளச்சி சிறுவர், சிறுமியர்களைக் கண்டதும் தன் வாலை மெதுவாக ஆட்டிக் கொண்டு, தலையைத் தூக்கி பார்த்து விட்டு பிரசிவித்த களைப்பில் கண் மூடிக் கொண்டது.


வெள்ளச்சியையும், குட்டிகளையும்  குறுகுறுப்போடு பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்  குழந்தைகள்.


அப்போது நாலைந்து நாய்கள் வெள்ளச்சியைத் தேடி வந்தது. அந்த நாய்கள்  வெள்ளச்சி அருகே போனதும், எந்த அயர்ச்சியும் இல்லாமல் விருட்டென எழுந்து வந்த வெள்ளச்சியின் ஆக்ரோஷத்தை பார்த்து சிறுவர் சிறுமிகள், மிரண்டார்கள். அருகே வந்த நாய்களை "லொள் ..லொள்..லொள் உர் உர் என மிகப் பெரும் சத்தத்துடன் விரட்டி அடித்தது. அந்த நாய்களும் அதன் குட்டியை எடுக்க விழைந்தது. வெள்ளச்சியோ எந்தப் பக்கமும் வேறு நாய்கள் வராமல் ஓடி ஓடி குலைத்து தடுத்து தன் குட்டிகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தது. 


அப்போது அங்கே வேகமாக சைக்கிளை அழுத்தியபடியே ஓடி வந்த செழியன். வெள்ளச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் அருகில் ஓடினான்.  'எல்லாரும் இங்கே  என்ன பார்க்கறீங்க? சீக்கிரமாக ஓடி வாங்க' என்று அழைக்க தெருவாசிகள் வேகமாக பின் தொடர்ந்தார்கள். தெருமுனையிலிருந்த  குப்பைத் தொட்டியின் அருகில் உடல் முழுவதும் துணியை சுற்றி முகம் மட்டும் தெரிய சூரிய வெளிச்சம் கண்களில் வெப்பத்தை கொடுக்க தாங்கயிலாத குழந்தை ஒன்று 'க்யா க்யா' என  கத்திக் கொண்டிருந்தது. அதன் சத்தம் கேட்டு அங்கேயிருந்த தெருநாய்கள் குழந்தையைப்  பார்த்து வேகமாக குரல் எழுப்பிக் கொண்டிருந்தன.  பெத்த குழந்தையை தூக்கி எரிந்த அரக்கமற்றவரின் ஈனச் செயலை  திட்டிக்கொண்டே, அந்தக் குழந்தையை எடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைக்க திரும்பியபோது, இரக்கமற்ற மனித ஜென்மங்களுக்கு புத்தி சொல்வது போல் தன் குட்டிகளை காக்க போராடிக் கொண்டிருந்த வெள்ளச்சியின் தாய்மை உணர்வு ஏரியவாசிகளை மெய்சிலிர்க்க வைத்தது.


- யசோதா பழனிச்சாமி ஈரோடு.

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...