Friday, March 1, 2024

அந்தமான் இயற்கையின் மடி 5 - அன்புமணி

 

பரட்டாங்  தீவு - ஓர் அறிமுகம்

  திகாலை இரண்டரை மணிக்குத் தயாராக இருக்கவும் என்று சொல்லிவிட்டு சம்சுதீன் போய்விட்டார்.. எங்களைப் பொறுத்தவரை அது நள்ளிரவு. எட்டு பேர் பெண்களாக வந்திருக்கிறோம் அல்லவா? எனவே நாங்கள் உஷார் ஆனோம். “இது என்ன நமக்கு கொடுத்திருக்கக் கூடிய அட்டவணையில் காலை 7 மணிக்குக் கிளம்ப வேண்டும் என்று தான் இருக்கிறது. எப்படி இவர் 2.30க்கு தயாராக இருங்கள் என்று சொல்வார். நாம் கண்டிப்பாக இதை ஆலோசிக்க வேண்டும். தெரியாத ஊரில் பெண்களாக வந்திருக்கிறோம். நள்ளிரவு 2:30 மணிக்கு எங்கேயாவது அழைத்துக் கொண்டு போய் விட்டு விட்டால் என்ன செய்வது? அதனால் யோசிப்போம். சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்” என்று எங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டோம்.


இங்கே ஒரு விஷயம்  நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. அதாவது அந்தமானைப் பற்றி, அங்குள்ள சுற்றுலாத் தளங்கள் பற்றி எங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. பயண நிறுவனம் எங்களுக்குக் கொடுத்த அட்டவணைப்படி  செல்ல வேண்டும். அதற்கு அவர்களே எங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்த நிறுவனம் 20 ஆண்டுகளாக இருக்கிறது என்பதனால் நம்பிக்கையான நிறுவனம் என்று தெரியும். அவ்வளவு தான். 


அடுத்து அந்தமானில் இணையம் இல்லை என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். எனவே, நாங்கள் செல்லக்கூடிய இடம் குறித்துத் தெரிந்து கொள்ளவும் எங்களுக்கு வழி இல்லை. அதனால் தான் இத்தனை கேள்விகளும், ஐயங்களும் எங்கள் மனதில் எழுந்தன.


இதில் வேறு, “சூப்பர் மேம்! ரொம்ப அழகா, நல்லா யோசிக்கிறீங்க. எப்படி எல்லாம் எங்க பாதுகாப்பு பற்றி யோசிக்கிறீங்க. அருமை! அருமை!” என்றெல்லாம் தோழிகள் பாராட்டினார்கள். 


யோசனையுடன் உறங்கச் சென்றோம். நள்ளிரவு இரண்டு மணி அளவில் தங்கியிருந்த ஹோட்டல் அல்லோல கல்லோலப் பட்டது. முதலில் ஒன்றும் புரியவில்லை. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்து கேட்ட பொழுது இன்று பரட்டாங் தீவுக்குப் போக வேண்டும் அல்லவா? அதனால் தயாராகிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்றார்கள். இப்போதுதான் சம்சுதீன் சொன்னது உண்மை என்று உரைத்தது. வெகு வேகமாக சென்று மற்ற அறைகளில் உள்ள தோழிகளை எழுப்பி, “சீக்கிரம் தயாராகுங்கள்! நாம் உடனடியாகக் கிளம்ப வேண்டும்” என்று சொல்லி அவர்களை விரட்டினோம்.


எப்போதும் சம்சுதீன் ஒரு  மணி நேரம் முன்னதாகவே எங்களைத் தயாராகி வரச் சொல்லுவார் என்று குறிப்பிட்டு இருந்தேன். அந்த ஒரு மணி நேரம் எங்களுக்கு இருந்ததால், வேகமாக அனைவரும் தயாராகி வண்டிக்குச் சென்றோம். 


போகும் வழியில் சம்சுதீனிடம் பேசிய போது தான் நாங்கள் எவ்வளவு முட்டாள்தனமான எண்ணத்தில் இருந்தோம் என்பது புரிய வந்தது. அதாவது,  மத்திய மற்றும் தெற்கு அந்தமான் இடையே அமைந்துள்ள பரட்டாங் தீவு, தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே சென்று பார்த்து வர சுமார் 10 மணி நேரம்  செலவாகும். 


மேலும், ஒரு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை செய்யப்பட்டிருந்த இந்தத் தீவு அடர்ந்த காடுகள், மண் எரிமலைகள், சதுப்புநிலக் காடுகள் மற்றும்  சுண்ணாம்புக் குகைகளால் நிறைந்துள்ளது என்றும், சமீபத்தில்தான், தீவில் சுற்றுலாவை மேம்படுத்த அமைச்சகம் அதன் வாயிலைத் திறந்துள்ளது என்றும் தெரிய வந்தது. அடுத்து  காட்டிலாக்காவின் அனுமதியுடன்தான்  அங்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதால் செக் போஸ்டில் சற்று முன்னதாக சென்று காத்திருக்க வேண்டுமென. முந்தைய நாள் நாங்கள் பயந்ததை நினைத்து எங்களுக்கே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. டிரைவர் தம்பியிடம் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.


தீவிற்குள் செல்வதற்கு முன் அது பற்றி மேலும் சில முக்கிய தகவல்களை இங்கு நாம் அறிந்து கொள்வது அவசியம். அஃதாவது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள சுண்ணாம்புக் குகைகள் நீண்ட காலமாக உலகிலிருந்து மறைக்கப்பட்ட பரட்டாங் தீவில் அமைந்துள்ளன. இந்தத் தீவு உலகின் மிகவும் மூத்த பழங்குடியினரான ஜராவா பழங்குடியினரின் தாயகமாகும். அந்தமானில் வசித்து வரும் நான்கு பழங்குடிகளில் ஒரு பிரிவான ஜராவாக்கள் சுமார் 50,000 ஆண்டுகளாக  வசித்து வரும் பகுதியைக் கடந்துதான் பரட்டாங் தீவிற்குச் செல்ல வேண்டும். எனவே, இந்திய அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் பழங்குடி மண்டலத்தைக் கடக்க வேண்டியிருப்பதால், அந்த அழகான தீவிற்கு பயணம் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 


ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் சுற்றுப்பயணங்களில், சுற்றுலாப் பயணிகள், நெடுஞ்சாலையில் ஜராவாக்களைப் பார்க்க நேரிடும்போது அவர்களைப் புகைப்படம் எடுக்கிறார்கள் அல்லது தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள். இவை இந்தியச் சட்டத்தின்படி சட்டவிரோதமானவை. 2002 இல், இந்திய உச்ச நீதிமன்றம் அந்தமான் டிரங்க் சாலையை மூட உத்தரவிட்டது. மேலும் மார்ச் 2008 இல், அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் சுற்றுலாத் துறை, ஜராவாஸுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பது, அவர்களைப் புகைப்படம் எடுப்பது, அவர்களின் நிலத்தின் வழியாகச் செல்லும்போது வாகனங்களை நிறுத்துவது அல்லது சவாரி செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று சுற்றுலா நடத்துநர்களுக்கு புதிய எச்சரிக்கையை வெளியிட்டது. மீறினால் பழங்குடியினரின் பாதுகாப்பு ஒழுங்குமுறைச்  சட்டத்தின் கீழ் கடுமையான வழக்கு தொடரப்படும் என்றும் வலியுறுத்தியது.


மேலும், 2013 ஆம் ஆண்டில், சர்வைவல் மற்றும் உள்ளூர் அமைப்பான 'தேடல்' அமைப்பு, 'மனித சஃபாரிகளை' தடை செய்ய மேற்கொண்ட பிரச்சாரத்தைத் தொடர்ந்து, ஏழு வாரங்களுக்கு ஏடிஆர்(அந்தமான் ட்ரங்க் ரோட்) வழியாக சுற்றுலாப் பயணிகளை பயணிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததாம். மனித சஃபாரிகளை தொடர அனுமதிக்க வேண்டும் என அந்தமான் அதிகாரிகள் தங்கள் விதிகளைத் தாங்களே மாற்றிய பிறகு, தடையை திரும்பப் பெறுவதைத் தவிர உச்ச நீதிமன்றத்திற்கு வேறு வழி இருக்கவில்லை.


அக்டோபர் 2017 இல், தீவிற்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றுக் கடல் வழியும் திறக்கப்பட்டது. அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கடல் வழியைத்தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த போதிலும், மிகச் சிலரே அதனை இன்று வரை பயன்படுத்துகின்றனர், அதனால் சாலை வழியில் மனித சஃபாரிகளின் சந்தை செழித்து வருகிறது என்பது வருத்தத்திற்குரிய ஒரு விடயமாகும்.  



அதிகாலை 4 மணிக்கே செக்போஸ்ட்டை அடைந்து விட்டோம். ஆனால் 6 மணிக்குத்தான் திறக்கப்படுமாம். அதுவரை என்ன செய்வது..பசி வேறு வயிற்றைக் கிள்ளத் துவங்கியது. இயற்கை உபாதை வேறு அழைக்க, கழிவறையைத் தேடிக் கிளம்பினோம். போகிறோம்..போகிறோம்… கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து விட்டோம். அத்தனை தொலைவிற்கும் ரயில்வண்டியின் பெட்டிகள் போல் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகள் தொடர்ந்து நீள் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. வண்டிகளுக்குள்ளே  எண்களைப் போல் பல சுற்றுலாப் பயணிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 


வழி எங்கும் கடைகள் வேறு. சுடச்சுட உணவுடன். ஒரு கடையில்  தமிழ் திரைப்படப் பாட்டு ஒலிக்க உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது. 


....தொடரும்....

1 comment:

  1. ஆர்வத்துடன் அடுத்த தொடரை எதிர்பார்த்து...உங்களுடனே பயணிக்கிறேன் அன்பு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...