கோவில் பண்டிகை, திருவிழா கொண்டாட்டங்கள் என்பது எல்லா ஊர்களுக்கும் பொதுவான ஒன்று. மண் சார்ந்த, நம்பிக்கை சார்ந்த எல்லா கொண்டாட்டங்களும் கடவுள்களை நோக்கியே நகர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு கடவுளுக்கும் பண்டிகைகள் என்பதும், வேண்டுதல்கள் என்பதும் காலங்காலமாக இருந்துகொண்டே இருக்கின்ற விஷயங்கள். தலைமுறை தலைமுறைகளாய் நம்பிக்கையோடு ஊறிப்போன சில விஷயங்களை, அது சார்ந்த மதிப்பை மாற்றிவிடுவதென்பது அத்தனை எளிதான காரியமல்ல. பண்டிகைகள் கொண்டாப்படுவது சாமிகளை சாந்தப்படுத்த மட்டுமல்ல அதன் பொருட்டு தன் வீட்டில், தன் தெருவில், தன் ஊரில் உள்ள எல்லோரோடும் நட்பு பாராட்டவும், அன்பை வெளிப்படுத்தவும், ஊரோடு சேர்ந்து உறவாடவும் தங்களையும் எல்லோரோடும் இணைத்துக்கொள்வோம் உருவாக்கும் வாய்ப்புகள் அவை.
Friday, March 1, 2024
மாசிப்பண்டிகை - தனபால் பவானி
எல்லா ஊர்களிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒவ்வொரு விதமான தனித்துவம் இருக்கும், அப்படித்தான் எங்கள் ஊரில் மாசி மாதத்தில் நடைபெறும் செல்லியாண்டியம்மன், மாரியம்மன் பண்டிகையும். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் கொண்டாடப்படும் பெரிய திருவிழா. பவானியில் பிறந்த எல்லோருக்கும் புத்தாண்டோ, தீபாவளியோ, பொங்கலோ பெரிய பண்டிகையாய் தெரியாது. இந்த மாசிப்பண்டிகை தான் மிகப்பெரிய கொண்டாட்டமாய் இருக்கும். எப்போது மாசி மாதம் பிறக்கும் என காத்துக்கொண்டிருப்போம். மாசியின் முதல் வாரத்தில் அம்மனுக்கு “பூச்சாட்டுதல்” விழா ஒரு செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கும், அம்மனிடம் வாக்கு கேட்டு உத்தரவு வாங்கி பூச்சாட்டுவார்கள். பூச்சாட்டும் நாளன்று வெளியூர்க்காரர்கள் யாராவது எங்கள் ஊரில் இருந்தால் பொங்கல் வைக்கும் தினமன்று திரும்ப வந்து சாமி கும்பிட வேண்டுமென்பது பல காலங்களாக சொல்லப்படும் ஐதீகம். அடுத்த செவ்வாய் இரவு “கம்பம் நடுதல்”, உண்டிவில் கவட்டை போன்ற ஒரு பெரிய மரத்தில் மூன்றாவது கிளையாக ஒன்றை செதுக்கி சொருகி பானை ஒன்று உட்காருமளவுக்கு தயார் செய்வார்கள். அந்த கம்பம் நடும் நிகழ்வை அம்மனுக்கு நடக்கும் திருக்கல்யாணம் என்று சொல்வதுண்டு. அடுத்த ஒருவாரம் கழித்து புதன்கிழமையில் பவானி எல்லையம்மன் கோவிலில் இருந்து அம்மை அழைத்தல், சேத்து வேஷம் போடுதல், அலகு குத்துதல், அக்கினிச்சட்டிகள், தீர்த்தக்குடங்கள், பொங்கல், கெடா வெட்டு என ஊரே ஒரு சந்தோசமான மனநிலையில் இருக்கும்.
கம்பம் போட்டபின்பு ஒவ்வொரு இரவும் கொண்டாட்டமாகவே கழியும். தப்பட்டையும் பறையும் அடிப்பவர்கள் வரும்வரை கோவில் திடலில் சிறுவர்கள் கபடியோ, கண்ணாமூச்சியோ விளையாடி புழுதி கிளப்புவார்கள். இரவுகளில் பறை அடிக்கு தகுந்தபடி கால்கள் ஆடத்தொடங்கும் போதே மூன்று மூன்று பேராய் குழுவாக சேர்ந்துகொள்வார்கள். பெரிய பையன்கள் கம்பத்தை சுற்றி ஆடிவர சிறுவர்கள் ஓரமாய் ஆடிக்கொண்டிருப்பார்கள். பெண்களும் மற்றவர்களும் கூட்டம் கூட்டமாய் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அப்படி எல்லோரும் ஆடிக்கொண்டிருக்கும்போதே யார் யார் நம்மை பார்க்கிறார்கள் என கண்கள் தேடத்தொடங்கும். ஒவ்வொரு ஆட்டமும் வேகமெடுக்க கூட்டமும் சேரத்தொடங்கும். கம்பம் சுத்தி ஆடும்போதெல்லாம் எந்த கவலையும் துளி கூட தெரியாது. நடக்கத்தொடங்கி இருக்கும் குழந்தைகள் கூட ஆடத்தொடங்கும் அழகைப்பார்க்க அத்தனை கண்கள் வேண்டும். பறைகள் சூடேற கிடைக்கும் இடைவெளியில் ஒரு குவளை தண்ணீரோ ஒரு கோப்பை தேனீரோ தாகம் அடக்கும். நடு இரவில் சாமி ஊர்வலம் வரும்வரை ஆட்டம் தொடரும். கோவில் பூசாரி தீச்சட்டியை ஏந்தியபடி கம்பத்தை சுற்றிவந்து அதை கம்பத்தின் நடுவில் வைத்தபின்பு அன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வரும். சமயங்களில் இரவு 12, 1 மணி வரைகூட ஆடுவார்கள். பொங்கலுக்கு முந்தைய திங்கட்கிழமை விடிய விடிய ஆடுவார்கள் அந்த ஆட்டமென்பது அத்தனை சுவாரஸ்யம் நிறைந்தது. இந்த திங்களின் இரவென்பது விடிய விடிய ஆடுவதற்கு மட்டுமல்லாமல் வருடத்தில் ஒரே ஒருமுறை எல்லோரும் நேரடியாக கருவறைக்குள்ளேயே சென்று சாமிக்கு தண்ணி ஊற்றும் இரவும்கூட இதற்காக நிற்கும் கூட்டம் பாலம் கடந்தும் நீளும்.
நேர்த்திக்கடன், வேண்டுதலாய் அலகு குத்துவதற்கு முந்தைய நிகழ்வாக சேத்துவேசம் நடக்கும். சாமியை குதிரையில் வைத்து ஊர் எல்லையிலிருந்து கோவில் வரை சுமந்து செல்லும் வழியெங்கும் லாரிகளின் மூலமாக சாலையில் தண்ணீரை ஊற்றி சேறு நிரப்பி அதில் சிக்குவோரையெல்லாம் தூக்கிப்போட்டு சேற்று சகதியில் முக்கி எடுக்கும் விழா அவ்வளவு சிறப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கும். வெய்யில் காலம் நெருங்குவதால் அம்மைபோடுதல், தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் நோய்களில் இருந்து அம்மன் காத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சேத்துவேசம் நடக்கும். உப்பு மிளகோடு சேர்த்து காசுகளை அள்ளிவீசுவது, துணிகளை வீசுவது, பேனா பென்சில், காய்கறிகள், கைப்பைகள் என அந்தந்த கடைகளை சாமி நெருங்கும்போது அவர்களிடம் உள்ளவற்றை வீசி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். சமயங்களில் குழந்தைகளையும். குழந்தைகள் தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் சூரைவிடுவதாய் வேண்டிக்கொள்வார்கள் பின்பு கூட்டத்தில் தெரிந்தவரிடம் சொல்லி குழந்தைக்கு சேறுபூசி தூக்கிபோடுவது போல செய்து அதை பிடித்துவருபவர்களுக்கு காசும் கொடுத்தனுப்புவார்கள். இவை எல்லாமே நம்பிக்கையின் அடிப்படைகளில் இன்றுமே கடைபிடிக்கப்படுகின்றன.
சேறு நிறைந்த உடலோடு காவிரியில் குளித்துவிட்டு அலகு குத்தும் ஆட்டத்துக்கு தயாராவது ஒரு தேர்வுக்கு தயாராவதாய் நேர்த்தியாய் இருக்கும், நாக்கு அலகு, இடுப்பில் குத்திக்கொள்ளும் அலகு, வாய்ப்பூட்டு, கொடைக்கம்பி அலகு. ஏரோபிளான் அலகென விதவிதமான அலகுகள் உண்டு. முக்கிய சாலையில் கூடும் குழுக்கள் தனித்தனியாய் தங்கள் திறமையை காட்டத்தொடங்குவார்கள். ஒரே நிறத்தில் உடையணிந்து ஆடும் ஒரு கூட்டம், சிலம்பு சுழற்றும் ஒரு கூட்டம், வாயிலிருந்து தீப்பிழம்புகளை கக்கும் ஒரு கூட்டம், அலகு குத்தியபடி ஆடி வரும் ஒரு கூட்டம் இத்தனைக்கும் நடுவே தங்கள் கதாநாயகனையோ கதாநாயகியையோ தேடிக்கொண்டு ஒரு கூட்டமென வீதி முழுவதும் கூட்டமும் ஆட்டமுமாய் நடு இரவு வரை நீளும் நாளில் தேக்கி வைத்திருந்த கனவுகளில் பாதியாவது நிறைவேறி இருக்கும்.
அடுத்தநாள் காலையில் தேர் இழுப்பார்கள். அந்தத் தேரில் கல்யாணமான அம்மனுக்கு சீர்கொண்டு போவதாக பெரியவர்கள் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன் . அலங்கரிக்கப்பட்ட அம்மனோடு தேர் ஊர்வலம் போய் தன் இடத்தில் நிலைகொள்ளும் போது பாதி பண்டிகை முடிந்திருக்கும். பண்டிகை தொடங்குவதற்கு ஒருவாரம் முன்னே போட்டுவைத்த முளைப்பாரிகளுக்கு இப்போது வேலை வரும், மாலை எல்லா பெண்களும் அவரவர் முளைப்பாரி கூடைகளை சுமந்தபடி முக்கிய தெருக்களின் வழியாக பயணித்து கோவிலை வந்தடைவார்கள். அன்றைய இரவு கம்பத்தை ஆற்றில் விடும் நிகழ்வு. கம்பம் சுமந்த பூசாரி முன்னே ஆடிச்செல்ல முளைப்பாரி சுமந்த பெண்கள் பின்னே தொடர நடுவில் ஆடியபடி செல்லும் அந்த இரவு எங்கள் ஊர்க்காரர்கள் வாங்கிய வரம். ஆட்டம் பாட்டுகளோடும் வாண வேடிக்கைகளோடும் காவிரியை நோக்கி நடக்கும்போது அங்கங்கே முளைப்பாரிகளை வைத்து பெண்கள் கும்மியடிப்பார்கள். கம்பத்திற்கு பூஜை போட்டு அதை ஆற்றில் விடும்போது அம்மன் அழுவதாய் சொல்வார்கள். காவிரியிலிருந்து திரும்பி வரும் நேரத்தில் ஆர்க்கெஸ்ட்ரா என்னும் பெயரில் எம் ஜி ஆர்/ சிவாஜி பாட்டோ, நடனம் என்ற பெயரில் திண்டுக்கல் ரீட்டா போன்ற யாரோ ஆடிக்கொண்டிருப்பார்கள்.
பொங்கல் முடிந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை “மஞ்சள் நீராட்டுதல்” நிகழ்வு நடக்கும் நாளில் தெருவெங்கும் அம்மன் பல்லக்கு பவனி வரும் வேளையில் தேடிப்பிடித்து வண்ணங்கள் பூசுவது, ஜிகினாக்கள் கொட்டுவது, பெரிய கோப்பை நிறைய மஞ்சத்தண்ணியை வைத்துக்கொண்டு மாமன் மகள்களை தேடும் அத்தைப்பையன்களும் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் பெண்களுமாய் வீதிகள் நிறையும் நேரத்தில் வயதானவர்கள் தங்கள் இளமைக்காலங்களில் நனைந்து கொண்டிருப்பார்கள். சமயங்களில் முட்டைகளால் அடித்துக்கொள்வதுமுண்டு முட்டை தேய்த்துக்குளிப்பதில்தான் எத்தனை சுகம். பல்லக்கு தூக்கும் பக்தர்களுக்கு சுண்டல், கம்மங்கூழ், குளிர்பானங்கள், மோர், தர்பூசணி என ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் வரவேற்புகள் படு பயங்கரமாகவே இருக்கும். ஒவ்வொரு இரவும் அம்மனை விதவிதமாய் அலங்கரித்து முக்கிய வீதிகளின் வழியாக ஊரெங்கும் ஊர்வலமாய் வருவார்கள். கரகாட்டத்தோடு ஒருநாள், ஒயிலாட்டத்தோடு ஒருநாள் , நாதஸ்வரக் கலைஞர்களோடு ஒருநாள், கேரளா கெண்டை மேளத்தோடு ஒரு நாளென ஒவ்வொரு நாள் இரவும் சந்தோஷங்களாலும் சங்கீதங்களாலும் நிரம்பும். ஒப்பனைகளோடும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் வரும் ஊர்வலத்தை பார்க்க ஊரே விழித்துக்கிடக்கும் இரவுகள் ஒரு மாதம் வரை நீளும். உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் என வீர விளையாட்டுகளும் அங்கங்கே நடக்கும்.
இளம் வயதிலிருந்து மனதின் அடி ஆழத்தில் அழகாய் தங்கிவிட்ட, ஒரு மாதம் நடக்கும் இந்த பண்டிகையை இப்போதெல்லாம் ஏனோ முழுதாய் அனுபவிக்க முடியவில்லை. பலபேர் சென்னை பெங்களூரு என பெரு நகரங்களை நோக்கி பிழைப்புக்காக வெளியூர்களில் தங்கிவிட்ட நிலைகளில் பிடித்த ஊரைவிட்டு பிரிந்திருப்பதைப்போல, பெரிதும் இழக்கிறோம் இந்த பெரும் பண்டிகையையும், பறை காய்ச்ச போன இடைவெளியில் ஊரிலிருந்து பேசிய நண்பர்கள் இப்போதும் உணர்வதாகவே சொல்கிறார்கள் நிறைய விஷயங்களை இழப்பதாக. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்த பறையின் சத்தம் என் காதுகளில் கேட்கிறது.
பண்டிகை முடியும் கடைசி நாளிலிருந்து அடுத்த வருடத்திற்காக காத்துக்கொண்டிருப்போம் நாங்கள் மட்டுமல்ல அந்த “அம்மன்களும்தான்.
-தனபால் பவானி
29.2.2024
Subscribe to:
Post Comments (Atom)
நினைவுகளுக்கும் நிறம் உண்டு - தாரணி தேவி
காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...

No comments:
Post a Comment