Saturday, June 1, 2024

பையனோட அப்பா - சக்திவேல் விரு



"என்னங்க மொதலாளி சாயந்தர வேலை முசுவரமா நடக்குது போலருக்குதுங்க   " என்ற நகைச்சுவை ததும்பும் பேச்சுடன் ப்ரோக்கர் சம்பத்து சென்னியப்பனின்  கட்டுத்தரைக்குள் வந்துகொண்டிருந்தார்.

"என்னத்த பண்ணி என்ன பிரயோசனம் சம்பத்து நம்ம சரவணன்னுக்கு ஒரு தேவைய முடிச்சுற்றலாமுன்னா ஒரு சாதகம் கூட அமையுவுனாங்கிது " என்றார்  பெருமூச்சுடன் சென்னியப்பன்.

"ஒன்னும் கவலப்  படாதீங்க இப்பதான் அம்மாவை பாத்து பேசிப்போட்டு  வாரேனுங்க" என்று சம்பத்து பதிலுரைத்தார் .

"காப்பி தண்ணியோட எப்படியும் ஒரு ஐநூறாவது தேத்திட்டு தெம்பா வர்ற நடையிலேயே தெரியுது  உஞ்சமாசாரம் என்னன்னு " என்று  நக்கல் தொனியில் சென்னியப்பன் தொடர்ந்தார் . 

"என்னுங் முதலாளி ஐநூறெல்லாம் இன்னைக்கு விலைவாசிக்கு  பஸ்ஸு ஏறி இறங்கவே சரியா போயிருமுங்க நானும் வயிறு வளக்க வேண்டாமுங்களா " என்றார் சம்பத்து .  
   
"அந்தப்பேச்சு கெடக்கட்டும்,  இங்க பாரு நேத்து அந்த கொளத்தூர் கார பொண்னோட அப்பா பேசுனாரு அவரோட சொல்லுக்கு கட்டுப்பட்டு  சாதகம் கூட பாக்க வேண்டா  பொண்ணும் பையனும் பொதுவெடத்துல  பார்த்து நாலு வார்த்தை பேசி முடிவு பண்ணிக்கிட்டும்னு ஒரேயடியா நானுன்ச்  சொல்லி போட்டேனப்பா" என்று மாட்டுக்கு வெட்டிவைத்த பசுந்தீவனம் அள்ளி போட்ட  சென்னியப்பன்  நாயம் வளர்த்திக்கொண்டே தவிட்டு கூடையில் இருந்த தவிட்டை கொட்டி  மாட்டுக்கு தவிட்டு தாழியில் கையை விட்டு அளாசும்  வேலையில் மும்மரமானார் . தவிட்டு கூடையை கண்டவுடன் குந்தாணிக்கு பக்கத்தில் வந்த மாடு மாலைமசங்கும்   நேர சீக்கடி தொல்லையால்  தலையை தாழிக்குள் விடுவதும் வெளியில் எடுப்பதுமா தலையை ஆட்டி தவிடு கலந்த  தண்ணியை ப்ரு காபி டிவி விளம்பரத்தில் வரும் நடிகர் போல குடிக்க உறிஞ்சியது.

சம்பத்து சற்று  தள்ளி  நின்றுகொண்டு கருப்பு பேண்டும் வெள்ளை சட்டையுமா ஜம்முனு நெற்றியில் சிவப்பு பொட்டுடன் கை கக்கத்தில் இன்னும் பல நாட்பதுகளின் சாதக கட்டுகள் கிழே விழாதவாறு  வலது கையால் இடது  கை  மணிக்கட்டை  இருக்கி பிடித்துக்  கொண்டு நின்றார்.

"ஏனுங்க நம்பூட்டு அம்மா அந்த சாதகம் பொருத்தமில்லன்னு சொல்லிப்போட்டு  நம்ப தம்பி சாதகத்து நகல நெறையா  கத்தையா கொடுத்து உட்டு இருக்குறாங் நீங்க இப்படி சொன்னா எப்படிங்க  மொதலாளி ?"  என்றார் சம்பத்து.

"இங்க பாருப்பா பயனுக்கு போன ஆடியோட நாற்பதை தாண்டி வயசு கிழக்க  மேக்க ஓடுற ரயிலு வண்டிக் கணக்கா ஓடிட்டு இருக்கு

அவ சொல்லறானு இந்த கெரவத்தை தூக்கீட்டு திரிஞ்சா அயிம்பதையும் எட்டி புடிச்சுரும் அப்போ  மூட்டுவலி வந்தவனுக்கு கால்க்கட்டு போடரமாதிரி  ஆயிரும்" என்றார்  சென்னியப்பன் சலிப்புடன் .    

" மொதலாளி அம்மா வேற புள்ளையும் பயனும் ஒரே வயசா இருக்குது அங்கதா  இடிக்குதுனு முட்டுக்கட்டைய போடறாங்களே என்னத்த செய்யறது சொல்லுங்க" என்றார் சம்பத்து கொஞ்சம் தாழ்ந்த குரலில் .   

"இங்க பாரு சம்பத்து என்  ஊட்டுக்கார அம்மாவுக்கு பொறந்த  சாதகமே எழுதி வைக்கிலயாமா குத்துமதிப்பா அவங்க அப்பாரு சொன்ன பவானி ஆத்துல 72ல  வந்த வெள்ள  கணக்க வெச்சு பாத்தா என்னைவிட ஒரு வயசு மூத்தவளாத்  தானிருக்கும் , கட்டியுமாச்சு புள்ளையும் பெத்தாச்சு  நாப்பத்திமூணு வருஷமுமாச்சு இப்போ என்ன கொறச்சலா போச்சுங்கறேன் " என்று எதோ ஒரு  உலக சாதனை செய்த தொனியில் பேசினார்.

"இப்ப உன்னத்தா மலைபோல நம்பி இருக்கிறன் 
ஒரு பதனஞ்சு நா கழிச்சு வா வாங்கீட்டு போன இந்த சாதககட்டு நகல அப்படியே ஒன்னு குறையாம  தூக்கிட்டு  வந்து 
நாஞ்சொல்லறமாதிரி சொல்லி அவகிட்டயே  திருப்பி குடுத்துரு "  என்று சொல்லி மேலும் 

"நாப்பது வயசுக்கு  உள்ளாரா , டைவர்ஸு ஆனது  , நாட்பதுக்கு மேல வயசான புள்ளைக அப்பங்க யாருமே  பையனுக்கு நாற்பதுக்கு மேலன்னா தம்பி சாதகத்த   கையில கூட  தொட மாட்டேன்னுட்டாங்க  இனியும் இருக்கறத உட்டுட்டு பறக்கறத புடிக்க திரிஞ்சா தம்பி சரவணன் கலியாணத்தை மறந்தற வேண்டியதுதான்னு  சொல்லி போட்டு போயிரு" என்று கெஞ்சும் தொனியில் பேசிக்கொண்டே இடுப்பு வேட்டி மடிப்பில் இருந்து எடுத்து கசங்கிய நாலு ஐநூறு ரூவா நோட்டுகளை சம்பத்து கையில் திணித்தார் .

மேலும் "இத மட்டுஞ் செஞ்சுட்டீனா மிச்சத்த நான் பாத்துக்கறேன், இன்னோனையும்  இப்பவே சொல்லீறனப்பா  உனக்கு  கல்யாண பத்திரிகையை வைக்கும்போது ஆருக்கும் தெரியாதமாரி  உம்பட புள்ளை பள்ளிக்கூட செலவை கவனிக்கறமாதிரியும் ஏற்பாடு பண்ணீடறேன் தைரியமா போ  " என்றார்.

"மொதலாளி  டான்னுன்னு பாஞ்சுநா கழிச்சு பாக்கலாமுங்க, அப்போ நா வரேங்க " கும்பிடுடன் சம்பத்து ஒன்றரை பார்லாங்கு தூரத்தில் ஊருக்கு வெளியில் இருக்கும்  பஸ் ஸ்டாப்பிங்கை நோக்கி நடக்கலானார்.  

இந்த கல்யாணம் எப்படியும் நடந்தே தீர வேண்டும் என்ற அந்த தகப்பனின்  வைராக்கியதில்  சம்பத்துக்கும் பங்கு வந்து சேர்ந்தது போல மனதில் எதோ ஒரு ஓரத்தில் பாரம் சுமந்து 7 மணி பாஸ்ஸை பிடிக்க வெடுக்கான நடையில் வண்டித்தட வழியாக நடந்துசென்ற சம்பத்தை  சென்னியப்பன் ஒருவித ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே  நின்றார். 

-சக்திவேல் விரு 

ஐந்தாவது பயணம் - மூர்த்தி, ஈரோடு

 


வெள்ளியங்கிரி செல்ல இந்த வருடத்தில் இரண்டு முறை அழைப்பு வந்த போதும் வேலை பளுவின் காரணமாக தவிர்த்திருந்தேன். மூன்றாவது முறையாக அழைப்பு வந்த போதும் வேலைகள் அதிகமாக தான் இருந்தது. ஆனாலும் 26'ம் தேதிக்கு மேலே செல்வதென்றால் போகலாம் என்று சொல்லியிருந்தேன்.

இம்முறை அழைத்திருந்தது ஷான் அண்ணா. அவருக்கும், வேலைகள் காரணமாக எப்போது போகலாம் என சரியாக சொல்ல முடியாத சூழல். மே 31'ம் தேதிக்கு மேல் வெள்ளியங்கிரியில் மலை ஏற  அனுமதியில்லை. எப்படியும் இறுதி வாரத்தில் எதாவது ஒருநாள் என்று மட்டும் இருவரும் முடிவு செய்திருந்தோம்.

28'ம் தேதி போகலாம் என முடிவு செய்த பிறகு அடுத்த குழப்பமாக பகலில் செல்வதா, இரவில் செல்வதா என்ற கேள்வி வந்து நின்றது. பகலில் என்றால் வெய்யில் அதிகமாக இருக்கும். இதனால் எளிதில் களப்படைய வாய்ப்பு உள்ளது. இதற்காக அதிக தண்ணீர் மற்றும் ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான பொருட்களை சுமந்து செல்ல வேண்டி வரும். இந்த சுமைகளே நம் சோர்வினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இறுதி நாட்கள் என்பதால் மலையில் கடைகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு.

சரி இரவில் செல்லலாமே என யோசித்தால் அதற்கும் ஒரு 'க்கு' வந்து சிக்கலாக நின்றது. மலை ஏற அனுமதி முடியப் போவதால் இரவில் மலை ஏறுபவர்கள் மற்றும் இறங்குபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதனால் பாதையை கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்கும்‌. ஆனாலும் ஏற்கனவே நான்கு முறை சென்று வந்த அனுபவத்தில் இந்த சிக்கலை சமாளித்து விடலாம் என்ற தைரியத்தில் இரவு நேரத்தில் கிளம்பலாம் என உறுதி செய்து கொண்டோம். இந்த ஆலோசனைகள் எல்லாம் மே 28'ம் தேதி செவ்வாய் அன்று தான் நடந்துகொண்டிருந்தது. செவ்வாய் இரவா புதன் இரவா என்பது மட்டும் முடிவு செய்யாத நிலையில் மதியம் 1 ஒரு மணியளவில் அன்றைய இரவு செல்வதென உறுதி ஆகியது.

இரவு 9.30 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 1 மணிக்கு மலை ஏற ஆரம்பித்து காலை 6,7 மணிக்கு உச்சியை அடையலாம். திரும்ப கீழிறங்கி முடிக்க மதியம் 2,3 மணி ஆகிவிடும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பே எல்லாமே முடிந்தது.

வீட்டில் 4 லிட்டர் அளவிற்கான வாட்டர் பாட்டில்களை எடுத்து பேக்'கில் போட்டுக்கொண்டு திங்களூர் சென்று கடையில் ஆப்பிள், ஆரஞ்சு, கடலை மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், தேங்காய் பன் ஆகியவற்றை வாங்கிக்கொண்டிருக்கும்போது 'இப்போ வெள்ளியங்கிரி போறீங்களா? இப்போ விட மாட்டாங்களே' என மூன்று பேர் கேட்டனர். 'என்னது கிளம்பறப்போ பீதியை கிளப்பறாங்களே' என சற்று திகிலாக தான் இருந்தது. 9.30 மணிக்கு ஷான் அண்ணாவின் காரில் பயணம் ஆரம்பம் ஆனது.

இரவு 11.30 மணியளவில் பூண்டியை நெருங்கிக் கொண்டிருந்த போது எனக்கு தூக்கம் கண்களை தழுவ முயற்சி செய்தது. ஒரு பைக்கில் மூன்று பேர் எங்களை கடந்து சென்றார்கள். வெள்ளியங்கிரி அடையாளமாக ஒருவர் கையில் மூங்கில் குச்சி வைத்திருந்தார். சற்று நேரத்தில் சிறுநீர் கழிக்க அந்த பைக் நின்றுவிட நாங்கள் அவர்களை கடந்து சென்றோம். சென்ற வருடம் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக 1.5கி.மீ முன்பாக வாகனங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன. அப்படி நிறுத்தப்பட்ட இடம் வந்தபோது சென்ற வருட அனுபவத்தை பற்றி ஷான் அண்ணாவிடம் பகிர்ந்து கொண்டு வந்தேன். சென்ற வருடம் ஒரு குட்டி யானையில் லிஃப்ட் கேட்டு வந்ததை சொல்லிக்கொண்டிருந்த போது திடீரென முன்னால் 15 அடி இடைவெளியில் பெரிய யானை நின்று கொண்டிருந்தது. சாலையின் ஓரத்தில் நின்றிருந்த அந்த யானை ரிவர்ஸ் கியர் எடுத்து அப்படியே முன்னால் திரும்பி எங்களது காரை நோக்கி தும்பிக்கையை தூக்கிக்கொண்டு வந்தது. எனக்கு வந்த தூக்கம் எல்லாம் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிவிட்டது. ஒரு சில வினாடிகளில் ரிவர்ஸில் பின்னால் சென்று காரின் முகப்பு விளக்குகளை அனைத்து விட்டார் ஷான் அண்ணா. பின்னால் ஏதும் வாகனம் வருகிறதா என பார்த்த போது அந்த மூவர் வந்த பைக் திரும்பி நின்றுகொண்டு இருந்தது.

இன்னும் ஒரு 100 அடி சென்றால் இடது புறம் பிரியும் சாலையில் பறந்து விடலாம். ஆனால் அந்த இடத்தில் தான் செக் போஸ்ட் போட்டது போல யானை நின்று கொண்டு இருந்தது. காரின் விளக்குகள் அனைக்கப்பட்ட பிறகு யானை மெதுவாக திரும்பி எதிரே இருந்த சாலையில் பயணித்தது. யானை சென்று விட்டதை உறுதி செய்த பின் கிளம்பும் தருவாயில் அருகில் இருந்த ஷெட்டின் கேட்'டை நீக்கிக்கொண்டு, கையில் டார்ச் லைட் மற்றும் வயர்லெஸ் உடன் ஒருவர் எட்டி பார்த்தார். 'யானை போயிடுச்சா' என எங்களிடம் கேட்டார். போய் விட்டது என்று சொன்ன பிறகு 'பார்த்து போங்க. ஒரு திருப்பம் வரும். அது யானை கிராஸ் பண்ணற ஏரியா..பார்த்து போங்க' என்றார். அந்த இடத்திலிருந்து  இடது புறம் திரும்பிச் செல்லும்போது எதை பார்த்தாலும் யானை நிற்பது போலவே தெரிந்தது.

அடிவாரத்தை அடைந்து வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக்கொண்டு, வனத்துறை சோதனைகளை முடித்துக்கொண்டோம். மலை ஏற ஆரம்பித்த போது மணி 11.57'ஐ காட்டியது. மலை ஏறுபவர்களும் இறங்குபவர்களும் ஓரளவிற்கு இருந்ததை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. முதல் மலையில் திருச்சியில் இருந்து வந்திருந்த, நான்காம் வகுப்பு படிக்கும் சுலேகா தன் தந்தையுடன் மலை ஏறிக்கொண்டிருந்தார். சுபலேகா'வின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரது தந்து 'பாப்பா மெதுவா போ' என்றாவறே பின்னால் சென்று கொண்டிருந்தார். சிறிது நேரத்திலயே சுபலேகா ஷான் அண்ணாவுடன் இணைந்து கொண்டார். 'மெதுவா போ மெதுவா போ' என்றவாரே வந்த அவர் அப்பா, எங்களிடம் 'நீங்க போங்க நாங்க மெதுவா வரோம்' என்று இரண்டு மூன்று முறை கூறினார். சுபலகாவிடம்'மெதுவா போ..அவங்க போகட்டும்' என்றதிற்கு 'இந்த அங்கிள் கூடவே போனா சீக்கிரம் ஏறிடலாம்' என்றார் சுபலேகா. 'நீங்க ஏறிடுவிங்க..ஆனா அப்பானால முடியாது' என்றோம். சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் முன்னால் சென்று விட்டோம்.

எங்களுக்கு சற்று முன்னால் ஏதோ சத்தம்
கேட்க சற்று வேகமாக முன்னால் சென்றோம். சத்தம் கேட்டவுடனே, எங்களை சற்று நேரத்திற்கு முன்னாள் கடந்து சென்ற சுதாகர் 'தம்பி என்ன ஆச்சு?' என சத்தம் போட்டார். சுதாகர் பற்றி பின்னால் பார்க்கலாம். அவர் இரண்டு மூன்று முறை கூப்பிட்டும் எந்த பதிலும் இல்லாததால் சற்று பதட்டமாகவே ஓடினோம். அருகில் நெருங்கும்போது கீழே விழுந்த நபர் எழுந்து விட்டார். 40+ வயதிருக்கலாம். கல் மீது கால் வைத்தபோது கல் புரண்டதில் விழுந்திருக்கக்கூடும். கீழே கிடந்த டார்ச் லைட் மற்றும் குச்சியை எடுத்து கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டவர் 'ஒன்னும் பிரச்சினை இல்லையே' என ஷான் அண்ணா கேட்டதிற்கு கூட எதுவும் பேசமால் கீழே இறங்கிச்சென்றார். அவர் சென்ற பிறகு 'அவர் என்ன மொழி பேசுவார்? குரல் எப்படி இருக்கும்' என மனம் யோசிக்க ஆரம்பித்தது. 'எப்படி இருந்தால் என்ன பத்திரமாக கீழே இறங்கினால் சரி' என அதே மனது சமாதானம் சொல்லியது.

சரவணம்பட்டியில் இருந்து வந்திருந்த மூன்று பேர் கொண்ட குழுவில் ஒருவருக்கு அஜீரண கோளாறு காரணமாக வாந்தி ஏற்பட, அப்படியே உட்கார்ந்து விட்டார்கள். நாங்கள் அவர்களை நெருங்கும்போது 'வாந்தி மாத்திரை இருக்கா' என கேட்டார்கள். ஷான் அண்ணா எடுத்து வந்திருந்த எலக்ட்ரால் பாக்கெட்டுகளில் ஒன்றை கொடுத்தார். அதில் பாதியை தங்களுடைய வாட்டர் பாட்டிலில் கொட்டிக்கொண்டு மீதியை திருப்பி தந்துவிட்டார்கள்.

முதல் மலையை ஒரு மணி நேரத்திலும், இரண்டாவது மலையை அரை மணி நேரத்திலும் கடந்து விட்டோம். அதற்கு மேல் நேரத்தை கவனிக்க வில்லை. ஐந்தாவது மலையில், முந்தைய வாரம் மழை பெய்த சமயங்களில் புது புது பாதைகளை உருவாக்கி இருந்தார்கள். இந்த பாதைகளில் சுற்றி சுற்றி போனதால் எங்கு செல்கிறோம் என்பதே தெரியவில்லை. ஐந்தாவது மலை வந்து விட்டால் சமதளமாக இருக்கும், நடக்க கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும் என்பதால் மனம் ஐந்தாவது மலை  எப்போது வரும் என எதிர்பார்த்துக்கொண்டே சென்றது. ஆனால் நாம் சென்று கொண்டிருப்பது நான்காவது மலையா ஐந்தாவது மலையா என்பதே தெரியாமல், 'இதுக்கு இல்லையா சார் என்ட்'டு என்பது போல் போய்க்கொண்டே இருந்தது. ஆறாவது மலை கீழ் நோக்கி செல்லும் மலை. அதில் இறங்கும்போது தான் புரிந்தது ஐந்தாவது மலையை கடந்து விட்டோம் என்று. அதன் பின் விரைவாகவே ஆறாவது மலையின் முடிவில் இருக்கும் பாம்பாட்டி சுனையை அடைந்து விட்டோம்.

இப்போது மணி 3.30 ஆகி இருந்தது. ஏழாவது மலையின் துவக்கத்தில் சற்று ஓய்வும், சிறிதளவு உணவுகளும் எடுத்துக்கொண்டு மலை ஏற ஆரம்பித்தோம். துவக்கத்திலயே ஒரு வயதான அம்மா மற்றும் அவர் உடன் வந்தவர்கள் 'இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு' என்று கேட்டனர். 'அவ்வளவு தான் அஞ்சு நிமிஷத்துல பாம்பாட்டி சுனை வந்திடும்' என்றதும் அவர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். 'பார்த்து போங்க தங்கம். மழை பெய்ஞ்சதனால வழுக்குது. நாங்க குச்சி இல்லாம போயிட்டோம். நல்ல வேளையா எங்களுக்கு மேல குச்சி கிடைச்சது. பார்த்து போங்க தங்கம்' என்று சொல்விட்டுப் போனார் அந்த அம்மா. அவர்கள் மலை ஏற ஆரம்பித்து இப்போது வரை பத்து மணி நேரம் ஆகி இருந்து. 'இவங்க முடிக்கறதுக்கு இன்னும் பத்து மணி நேரம் ஆகுமா?' என்றார் ஷான் அண்ணா. 'இறங்கும்போது இன்னும் டயர்டா இருப்பாங்க. 12 மணி நேரம் கூட ஆகலாம்' என்றதற்கு ' சரி வா..நாம என்ன லட்சணத்துல முடிக்கப் போறமோ' என்றார்.

ஏழாவது மலை களி மண் என்பதாலும் மழை போன்றே பனி பெய்து கொண்டிருந்ததாலும் வழுக்கியது. பாறைகளும் கூட ஈரப்பதத்தினால் வழுக்கியதால் கவனமாகவே கால் வைக்க வேண்டியதாக இருந்தது. காற்று பலமாக வீசியது. மேக கூட்டங்கள் நகரங்களில் பாயும் வாகனங்களை போல வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. சிறு சிறு ஓய்வுகள் எடுத்துக்கொண்டு ஏழாவது மலையை அடைந்தோம்.

நேரம் இப்போது அதிகாலை 4.40 ஆகி இருந்தது. எதிர்பார்த்த நேரத்தை விட முன்பே உச்சியை அடைந்திருந்தோம். உச்சியில் பனி மூட்டம் அதிகமாகவே இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் இருவர் மட்டுமே உச்சியை அடைந்திருந்தோம். வெளிச்சம் வந்த பின் தரிசனம் செய்யலாம் என்பதால் பூஜை செய்பவரிடம் சிறிது நேரம் கழித்து வருவதாக சொன்னோம். 'அங்கயே இருக்கனும். இங்க அடிக்கடி வந்து கேட்டுட்டு இருக்க கூடாது. இங்க வர்வங்க பாதுக்காப்புக்கான பொறுப்பு அவங்களோடது தான். இங்க வந்து தொந்தரவு பண்ண கூடாது' என சொல்லி அனுப்பினார். நிறைய தொந்தரவுகளை அவர் எதிர் கொண்டு இருக்கலாம். பூஜை எப்போது என கேட்டதிற்கு '6 - 7 மணிக்குள்' என்றார்.

ஒரு பாறையின் ஓரமாக அமர்ந்து கொண்டோம். குளிர் பிண்ணி எடுத்தது. சிறிது நேரம் அமர்ந்த படியே தூங்க முயற்சி செய்தும் பெரிதாக பலனளிக்க வில்லை. ஒரு துண்டை இறுக போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தேன். ஷான் அண்ணா அந்த இடத்தை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தார். குளிர் தாங்காமல் நானும் சிறிது நேரம் அங்குமிங்கும் நடந்தேன். குளிரில் கைகள் லேசாக மறுத்து போனது. எங்கோ ஓரிடத்தில் வானம்பாடி பறவையொன்று வித விதமாக ஒலியெலிப்புக்கொண்டு இருந்தது. மேக கூட்டங்கள் புயல்களாய் வீசிக்கொண்டிருந்தன. ரம்மியமான காட்சி.

முதல் மலையில் சந்தித்த சுபலேகா அவரது அண்ணனுடன் வந்து சேர்ந்தார். நேராக சாமி கும்பிட்டு விட்டு நாங்கள் இருந்த பாறையின் ஓரத்தில் வந்து படுத்துக் கொண்டார்கள். 6.15 மணிக்கு பூஜையை பார்க்க சென்றிருந்த போது அலங்காரம் செய்துகொண்டு இருந்தார்கள். சிறிது சிறிதாக கூட்டம் சேர்ந்துகொண்டு இருந்தது. ஈஷா டீ சர்ட் அணிந்திருந்த ஒருவர் அடிக்கடி சங்கு ஊதினார். லிங்கத்தின் அருகில் வைத்து மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கென்றே உதவியாளர் ஒருவரை வைத்திருந்தார். சென்னையில் இருந்து வந்திருந்தார்கள்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. அதுவரை நாங்கள் அங்கே தான் நின்று கொண்டிருந்தோம். சுற்றி இருந்தவர்கள் சூரிய தரிசனம் கிடைக்குமா என எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஈசனை தரிசிக்க சூரியன் எத்தனை முறை முயன்றாலும் மேக கூட்டங்கள் தடுத்துக்கொண்டே இருந்தன. ஒரு வழியாக அலங்காரம் முடியும் தருவாயில் சற்றே மங்கலாக எட்டி பார்த்தார் சூரியனார்.

இப்போது சுதாகர் பற்றி பார்ப்போம். பன்ரூட்டியை சார்ந்த சுதாகர் அரசு கலை கல்லூரியில் பணியாற்றுகிறார். தீவிர சிவன் பக்தர் என்பதற்கு அடையாளமாக இடது கையின் தோள்பட்டைக்கு கீழே உடுக்கையுடன் இருக்கும் வேல் படத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். ஐந்தாவது வருடமாக மலை ஏறுகிறார். முதல் மலை ஏற ஆரம்பித்தவுடன் வரும் பாலத்தில் சோர்வாக அமர்ந்திருந்த ஒருவரிடம் தண்ணீர் வேண்டுமா என கேட்டுக்கொண்டு இருந்தார்.

இப்போது சிவனுக்கு அலங்காரம் நடைபெறும்போது வந்து சேர்ந்த சுதாகர் பின்னால் ஓரமாக நின்றுகொண்டு, ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த பாடலை பாட ஆரம்பித்தார். ஒரு மணி நேரமாக ஒரே இடத்தில் கால்கடுக்க நின்றுகொண்டிருந்தவர்களுக்கு அவரது பாடல் இதமாக  இருந்தது. ஏதோ பெயருக்கு பாடுவதாக இல்லாமல் தத்ரூபமாக பாடினார். அவரது குரல் அந்த பாடலுக்கு இன்னும் மெருகூட்டியது.

அலங்காரம் முடிந்ததும் அனைவரும் தரிசனம் செய்து விட்டு போகலாம் என்றார்கள். பூஜை எல்லாம் இல்லை. நான் வேறு ஷான் அண்ணாவிடம் 'பூஜை நடக்கும்போது பறை இசை போல் இசைக்கப்படும். பார்க்க நன்றாக இருக்கும்' என சொல்லி வைத்திருந்தேன். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மட்டும் பூஜை நடக்கும் போல. இரண்டரை மணி நேரம் காத்திருந்தவர்களுக்கு நெற்றியில் பட்டையை பட்டு நடுவே நாமத்தை போட்டு அனுப்பி வைத்தார்கள்.

கோவிலை விட்டு தள்ளி வந்ததும் வெட்ட வெளியாய் தெரிந்த மலைகளை, வெடிகுண்டு வீசினால் எழும் புகையை போல் மேகக் கூட்டங்கள் வேகமாக வந்து மூடிக்கொண்டன. ஏழாவது மலையை விட்டு இறங்கும் வரை மேகக் கூட்டங்களுக்கு நடுவே நடப்பது போன்றே இருந்தது. இந்த ரம்மியமான காட்சிகளை பார்த்ததும் 'கயிலாயத்தில் இருப்பது போன்றே உள்ளது' என்றார் ஷான் அண்ணா.

அந்த உற்சாகத்துடனே ஒரே மூச்சாக ஐந்தாவது மலையை அடைந்தோம். ஆளுக்கு இரண்டு தேங்காய் பன் சாப்பிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பினோம். மேலே இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு இருந்தன. மூன்றாவது மலை வரை மட்டுமே கடைகள் இருந்தன. கூட்டம் குறைவாக இருந்ததால் இம்முறை 'இன்னும் எவ்வளவு தூரம் போகனும்?' என கேட்பவர்கள் குறைவாகவே இருந்தனர். மலை ஏறும் போது முதல் மலை ஏறிய 10'வது நிமிடத்திலேயே திருச்சி அருகே உள்ள கீரனூரிலிருந்து வந்திருந்த கார்த்தி கேட்டார். அடுத்த அரை மணி நேரம் கழித்து ஒருவர் 'கால் நின்னுக்க சொல்லுது..மனசு போகலாம்னு சொல்லுது' என தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் சும்மா இருக்காமல் ' இன்னும் அரை மணி நேரம் தான்..கீழே இறங்கிடலாம்' என்றேன். 'இப்போ எதுக்கு சொன்னீங்க..நானே இன்னும் முப்பது படிதான் இருக்குனு ஒரு தைரியத்துல வந்துட்டு இருக்கேன்' என்றார். திரும்பி பார்க்காமல் சென்று விட்டேன்.

ஏழாவது மலை ஏறும்போது 'பார்த்து போங்க தங்கம்' என்று சொன்ன அம்மா திரும்பி வரும்போது காலை 11 மணியளவில் முதல் மலை முடியும் வெள்ளை விநாயகர் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். முதல் மலை இறங்கும்போது சேலத்திலிருந்து வந்திருந்த ஒரு இளைஞர் நடக்காமல் ஓட்டமாக எங்களை கடந்து ஓடினார். எதிரே மலை ஏறிக்கொண்டு இருந்தவர் அவரை திரும்பி பார்த்து 'ஓடாதீங்க' என்றார். ஓடி வந்த சேலத்துக்காரர் 'நடந்து போனா கால் வலிக்கும். ஓடினா சீக்கிரம் இறங்கிடலாம்' என்றார். 'அதெல்லாம் தப்பு..கொஞ்சம் கால் பிசக்கினால் விழுந்து அடி பட்டிடும்' என அக்கறையாக சொல்லியபடி சென்றார்.

கால் மணி நேர நடைக்கு பிறகு இடையில் இருந்த பாலத்தில் அமர்ந்திருந்தார் அந்த சேலத்து நண்பர். எங்களை பார்த்ததும் சாக்லேட் இருக்கா என கேட்டார். ஓடி வந்ததில் களப்படைந்துள்ளார். நாங்கள் எடுத்துச் சென்ற சிறிய அளவிலான ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் அப்படியே இருந்தது. அதை எடுத்து கொடுத்ததிற்கு ஒரு மிட்டாய் மட்டும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். நான்கைந்து கடலை மிட்டாய்களும் இருந்தது. அதில் ஒன்றை கொடுத்துவிட்டு கிளம்பினோம். இந்த சமயத்தில் உடும்பு ஒன்று அங்கிருந்த மரத்திலிருந்து  இறங்கி மீண்டும் மரத்தில் ஏற ஆரம்பிக்க நாங்கள் கீழே இறங்க ஆரம்பித்தோம். இப்போது சேலத்து நண்பர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து நடக்க ஆரம்பித்தார். அவ்வப்போது பின்னால் திரும்பி பார்த்து அவர் வருவதை உறுதி செய்து கொண்டே வந்தோம். முடியும் தருவாயில் அவரை காணவில்லை. எப்படியும் மெதுவாக வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் நண்பகல் 11.45 மணியளவில் பயணத்தை நிறைவு செய்தோம்.

உண்மையிலயே இம்முறை நிறைவான பயணம் தான். தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் ஊட்டம் அளிக்கும் உணவு பொருட்களை எடுத்துக்கொண்டோம். சீரான இடைவெளியில் தேவையான அளவிற்கு மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்டோம். கூட்டம் அதிகம் இல்லாததால் நெரிசல் இல்லாத மலை ஏற்றமாக அமைந்தது.  ஒரு வாரத்திற்கு முன்பு பெய்திருந்த மழை காரணமாக பசுமை படர்ந்து வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. எங்களுக்கு தேவைப்படவில்லை என்றாலும் தண்ணீர் பிடிக்கு இடங்கள் அதிகமாகவே இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஏழாவது மலையில் கண்ட மேக கூட்டங்களும், மேக சாரல்களும் புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்த பயணத்தை இனிமையான பயணமாக மாற்றிய ஷான் அண்ணாவிற்கு நன்றி.

- மூர்த்தி, ஈரோடு

கேடில் விழுச் செல்வம் - யசோதா பழனிச்சாமி, ஈரோடு



    டுக்குமாடி வீடு கட்டியிருந்தால் சரியான தேதிக்கு வாடகை வந்திடுமோ

என்னவோ, இந்த பழைய சீமையோடு வீட்டுக்கு வாடகை கொடுக்கறதூனா

மூக்கால அழறாங்க. என்ன செய்ய? குடியிருப்பது எல்லாம் கூலி

வேலைக்குப் போகிறவர்கள். ஆறு மாச வாடகையை நமக்கு கொடுக்காமல்

இருப்பார்கள்.நாம கேக்கும் பொழுதெல்லாம் “அக்கா க்கா.. வரத்

திங்கள்கிழமை கொடுத்தறேங்க்கா கோவிச்சுக்காதீங்க்கா”. எனக்

கெஞ்சுவார்கள். ஆனால், இவர்களுக்கு கடன் கொடுக்கும் கந்துக்காரர் வரும்

வண்டிச் சத்தம் தெருமுனையில் கேக்கும் போதே, பணத்தை எடுத்துட்டு

வீட்டு வாசப்படிக்கு ஓடுவார்கள். நமக்கு மட்டும் வீட்டு வாடகையைத்

தரமாட்டார்கள். போனில் அழைத்தால் போனை எடுத்துக் கூட

பேசுவதில்லை. நாம என்னவோ அவர்களுக்கு கடன்பட்டவர்கள் போல்

இருக்கும். என்ன காலமோ மொத்தத்தில் இரக்க சுபாவம் இருக்கிறவர்களுக்கு

வாடகையை கூட சரியா வசூலிக்க முடியாதுனு எனக்கு புரிஞ்சு போச்சு.

இன்னிக்கு வாடகை வசூல் செய்ய நேராக வீட்டுக்கே போய்விடலாம்

வேண்டும் என்று கிளம்பிவிட்டேன்.

வீட்டுக்கு போனதும் முன் வாசல் கதவு எப்போது போல் திறந்திருந்தது.

“வசந்தி, வசந்தி” என நான் கூப்பிடுவது கேட்காத அளவுக்கு வீட்டினுள்

தொலைக்காட்சி சத்தம். இரண்டு வாசற்படி ஏறி, “ வசந்தி வசந்தி” என

மீண்டும் கூப்பிட்டதும் “யாருங்க” என உள்ளே இருந்து வெளியே வேகமாக

வந்தான் வசந்தியின் ஒன்பதாவது படிக்கும் மகன். என்னைப் பார்த்ததுமே

“என்னங்க்கா” குரலை மென்று விழுங்கினான். “உங்கம்மா எங்கடா?”

“வேலைக்குப் போயிருக்காங்க”. “பட்டறையில் தானே இருக்காங்க.போயி

கூட்டிட்டு வா” என்று நான் திண்ணையில் உட்கார்ந்து விட்டேன். வீட்டுக்கு

பின்புறம் இருக்கும் வீட்டில் தான் வசந்தி வீட்டு வேலை செய்கிறாள். அவள்

புருஷன் தறி ஓட்டுகிறான்.

வசந்தியின் மகன் அவள் அம்மாவைக் கூட்டி வரச் சென்றதும் அவள் மகள்

வெளியே வந்தாள். அவள் உதட்டோரம் கிழிந்து ரத்தம் வந்து காய்ந்து போயி,


உதடு வீக்கம் கண்டிருந்தது. எனக்கு பார்த்ததும் அதிர்ச்சி. “அட !இதென்ன

உதடு இப்படி கிழிஞ்சிருக்கு என்னாச்சு?” சற்று பதட்டமாக கேட்டேன்.

“ஒண்ணுமில்லங்க்கா” என மறைத்தாள். “ஆமா நீ இன்னைக்கு பள்ளிக்கூடம்

போகலையா?” என நான் வினவிக் கொண்டிருந்த நேரத்தில், மூச்சு வாங்க

வீட்டுக்குள்ளே வந்தாள் வசந்தி, “நல்லாக் கேளுங்க்கா நானும் படிச்சு படிச்சு

சொல்லறேன் பள்ளிக்கூடம் போகமாட்டேனு அடம் பிடிக்கிறா. அதனால்,

காலையில் எனக்கு கோவம் வந்து நான் அடிச்ச அடியில் உதடு கிழிஞ்சு

வீங்கிக் கிடக்குதுங்க்கா.இதோ இங்கே மரமாட்டம் நிக்கறானே இவனும்

பள்ளிக்கூடம் போவமாட்டேங்கறான்‌ நான் என்னத்த பண்ணறதுங்க்கா? நாயா

பாடுபட்டு கிடக்கிறோம். இவனாவது படிச்சு வேலைக்குப் போயிட்டா

பரவாயில்லைனு பார்த்தா இவனும் பள்ளிக்கூடம் போக மாட்டேன்

சொல்லறான். எனக்கு மட்டும் படிப்பு இருந்திருந்தா நான் இப்படி வூடுவூடா

வேலை செஞ்சு பொழைப்பு நடத்துவேனா” என புலம்பித் தீர்த்தாள்.

“ஏப்பா, உங்கம்மா வூட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியாம இருக்கா,

இதுல உங்கள படிக்க வைக்கிறதுக்கு வேற சிரமப்படறா? நீங்க ஏன்

பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு செல்லறீங்க?” 

“நல்லா கேளுங்க்கா”.

பதினான்கு வயது பையன் வாயே திறக்கவில்லை. “உங்கிட்ட தான் கேக்கறேன் ஏப்ப ஸ்கூலுக்கு போக மாட்டேங்கிற..சாரோ, டீச்சரோ ஏதாவது சொல்லறாங்களா?”

இல்லை எனத் தலையாட்டினான். “அப்புறம் உனக்கு என்னதான் பிரச்சினை?”..

அவன் எதுவும் பேசாமல் நின்றான். “டேய் அந்தக்கா கேக்றாங்களே

வாயத்தொறந்து சொல்லித் தொலையேண்டா” என்றாள். “எனக்கு படிப்பு

வரலைங்க்கா”.

 “சரி டியூசன் படிக்கிறீயா? சேர்த்துவுடறேன்” என்றேன்.

“எனக்கு சுத்தமா கணக்கே வரமாட்டேங்குதுங்க்கா” என்று சொல்லியபடியே

தலையை கவிழ்ந்தான்.

“அட கணக்கு தானே வரல வீட்டுக்கு வா அக்கா சொல்லிக் கொடுப்பாங்க”

என்றதும் “இல்லைங்க்கா நான் பள்ளிக்கூடம் போகலைங்க்கா..”

“அட அவிய எத்தனை நல்லது சொல்லறாங்க நீ திரும்ப திரும்ப பள்ளிக்கூடம்

போவலைனே சொல்லற. நானும் உங்கப்பனும் தான் படிக்காம போயி கூலி

வேல செய்யறோம். நீயாவது நாலெழுத்து படிச்சு எப்படியாவது ஒரு பெரிய

வேலைக்கு போயிட்டா எங்க கஷ்டம் விடிஞ்சுடுனு பார்த்த நீ இப்படியே

பேசறீயே” என கத்தினாள். நான் வசந்தியை அமைதிப்படுத்தி விட்டு,

அவனிடம்

“ஏப்பா, எதுக்கு ஸ்கூலுக்கு போகமாட்டேன் சொல்லற?” என மீண்டும்

முதலிலிருந்து வந்தேன். அவள் அம்மா வாய் திறந்தாள். “அக்கா இவனை

விட பெரிய பசங்க எல்லாம் இவனை மிரட்டறாங்களாம். அந்த பசங்க

ஸ்கூல்ல சிகரெட் பிடிச்சிருக்காங்க, அப்புறம் என்னவோ போதை மருந்தை

போட்டுட்டு இருந்தாங்களாம். இதையெல்லாம் இவன் பார்த்துட்டு சாருகிட்ட

போயி சொல்லிட்டான். ஸ்கூல் சாரு அந்தப் பசங்களை எல்லாம் கூப்பிட்டு

மிரட்டி இருக்காங்க. உடனே அடுத்த நாளு அஞ்சாறு பசங்க இவனை வந்து

கண்டபடி பேசி மிரட்டி, அடிச்சுட்டு போயிருக்காங்க. அதிலிருந்து சுத்தமா

பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்லறானுங்க” என்றாள். 

அவனிடம் “ஏப்பா அதெல்லாம் ஒன்னும் பெரிசா பிரச்சினை வராது நீ அமைதியா போயிட்டு எதையும் கண்டுக்காம பாடத்தை மட்டும் படிச்சிட்டு வா. அவங்க உனக்கு தொந்தரவு தந்தா ஸ்கூல்ல சாரிடம் சொல்லு, இல்ல வீட்டுல வந்து அம்மாகிட்ட சொல்லு. வேற யாராவது பெரியவர்களை கூட்டிட்டு போய் கூட கேக்கலாம்” என்று சமாதானப்படுத்தியதில் என் தொண்டையின் ஈரம் தான் காய்ந்தது. அவன் மனசில் படிக்க வேண்டும் என்ற ஈரம் ஒரு துளி கூட சுரக்கவேயில்லை. அவன் பள்ளிக்கூடம் போறேன் என்று வாயே

திறக்கவில்லை.

“ஏனுங்க்கா, எப்படி அமுக்கினி குரங்காட்டம் நிக்கறான் பாருங்க‌.!”

என்றாள்.அவனிடம் எந்த வித ரியாக்ஷனும் இல்லை. “சொல்லுடா

நாளையிலிருந்து பள்ளிக்கூடம் போறேன் சொல்லுடா” என்றாள் அவள்

அம்மா. “இல்லம்மா நான் போகமாட்டேன். எனக்குப் பிடிக்கலை என்று

பிடிவதமாக நின்றிருந்தான். அவன் இருக்கும் நிலையில் எத்தனை

சொன்னாலும் இவன் படிக்க மாட்டான் எனத் தோன்றியது. “அக்கா ஸ்கூல்

எச்.எம் கூட இவங்கிட்ட பேசிட்டாரு. அடப் படிக்க வேண்டாம் நீ தினமும்

ஸ்கூலுக்கு வந்துட்டு போ அதுக்குப்பிறகு பார்த்துக்கலானு சொல்லிப்

பார்த்துட்டாருங்கா” அவங்ககிட்டேயேயும் ஸ்கூலுங்கு வரலைனு

சொல்லாறானுங்கா”என்றாள் வசந்தி.


“சரிப்பா, படிக்கல அப்புறம் என்ன தான் செய்யறதா இருக்கே?”

“நான் வேலைக்குப் போறேங்க்கா”. “உனக்கு என்ன வேலை

தெரியும்?”..”அக்கா அவன ஏதாவது கடகண்ணியில சேர்த்து ஊட்டுடலானு

போயி நானும் நாலு பக்கம் கேட்டேனுங்க. நான் கேட்ட இடத்தில் குழந்தை

தொழிலாளர் வரிசையில இருக்கான்ந. அவனுக்கு வேலை கொடுக்க

முடியாது. நீ கேக்கறேனு பரிதாபப்பட்டு உன் பையனை நாங்க வேலைக்கு

வச்சப்பிறகு, எங்களுக்கு வேண்டாதவங்க யாராவது எங்க மேல புகார்

கொடுத்தால் எங்கள ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போயிடுவாங்க. எங்களுக்கு

எதுக்கு தேவையில்லாத வேலை. முதல்ல நீங்க அவனைப் பள்ளிக்கூடம்

அனுப்பற வழியைப் பாருங்கனு என்னைத் தாட்டியுடறாங்க்கா. இத்தாச்

சோட்டுப் பையனை வூட்டுல வச்சுட்டு இருந்தா, இவன் பொழுதுக்கும் இந்தா

டி.வியைப் பார்த்துட்டு படுத்திருக்கிறான். அவன் வூட்டுல டி.வி.யைப்

பார்த்துட்டே படுத்திருக்கிறதப் பார்த்துட்டு, இப்ப இதா இந்தக் கழுதையும்

பள்ளிக்கூடம் போகலைனு அடிவாங்கிட்டு வூட்டுல படுத்திருக்கு” என்று

வசந்தி அரற்றிக் கொண்டிருந்தாள்.

“ஏப்பா உன்னைய வேற ஸ்கூல்ல சேர்த்தி விட்டா படிக்கப் போறீயா?”

“இல்லைங்க்கா எனக்கு படிக்கவே புடிக்கல.” “இப்ப தெரியாதுப்பா நாளைக்கு 

நீ வளர்ந்த பிறகு ஒரு தொழில் செய்ய கடன் வாங்கப் போனால் கூட,

படிச்சிருந்தா அதுக்கு ஒரு மதிப்பு இருக்குப்பா. உங்கம்மா இப்படி வேலை

செஞ்சுட்டு கிடக்கிறா நீயும் இது போல அலைய வேண்டாம்னு தானே

படிக்கச் சொல்லறா”..அவனுக்குச் சொல்லும் எந்த அறிவுரையும் செவிக்குள்

கூட நுழையாது என்பது புரிந்தது.

“சரி வசந்தி நீ போய் ஸ்கூல்ல சொல்லி டி.சி.யை வாங்கி வச்சுக்க. ஒரு

காலத்தில படிக்க ஆசைப்பட்டா அந்த டி.சி வேணும்..ஆமா உங்க பிரச்சினையில் நான் வாடகை கேக்க வந்ததையே மறந்துட்டேன்” என்றதும்

மீண்டும் அதே பல்லவி “அக்கா ஓனருகிட்டே கேட்டிருக்கேன் இன்னும்

இரண்டு நாளு பொறுங்க்கா. எப்படியாவது ஒரு இரண்டு மாசத்து

வாடகையாவது கொண்டு வந்துடறேனுங்க்கா.” என்று அவ பொய்

பல்லவியை பாட ஆரம்பித்தாள். அப்போது தான் திரும்பவும் அந்த

பையனைக் கவனித்தேன். அவன் அவ அம்மாவிடமிருந்த போனை பிடிங்கி

கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் அம்மா சொல்வதையோ நான்

சொல்வதையோ எதையும் காதில் நுழைத்துக் கொண்டதாக தெரியவில்லை.

அவன் உலகத்தில் அவன் இருந்தான். “ அக்கா இப்ப கவர்மென்ட்

பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு இந்த போதை மருந்து எப்படியோ

கிடைக்குதுங்க்கா. சில பசங்க அதைப் போட்டுடறாங்க்கா எனக்கும் இப்ப

ஸ்கூலுக்கு விடவே பயமாத்தான் இருக்குங்க்கா” என்று அவள் கூறியதும்

நான் நேரில் பார்த்த காட்சி கண்முன்னே ஓடியது.

வீட்டுக்கு அருகில் உள்ள பார்க்கில் அன்று நான் நடைபயிற்சி செய்து

கொண்டிருந்தேன். அங்கே பதினைந்து, பதினாறு வயதிருக்கும் இருக்கும்

பதின்பருவ சிறுவர்கள் ஓய்வெடுக்கப் போட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்து

கொண்டு தாங்கள் கொண்டு வந்த அலைபேசியை வைத்து கொண்டு

விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு அலைபேசி

இருந்தது. அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும். நல்ல

விஷயங்கள் ஏரளாமாக இருந்தாலும் அவர்களை ஈர்ப்பது வன்முறை

தூண்டும் காட்சிகளும், பாலியல் உணர்வைத் தூண்டும் படங்களும் தானே!

அவர்கள் வீட்டில் பார்க்காமல் வீட்டில் இருந்து வெளியே வந்து

பார்க்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு சந்தேகம் என் மனசுக்குள் விழுவதை

தவிர்க்க இயலாமல் போனது. அது மட்டுமல்ல அந்த சிறுவர்கள் வெளியே

சென்று சிகரெட் பிடிப்பதைப் பார்த்ததும் என் அடிவயிறு சில்லிட்டுப்

போனது.இந்த வயதில் இருக்கும் என் குழந்தைகள் உறவினர்கள் குழந்தைகள்

எல்லாம் கண்முன்னே வந்து செல்ல நான் நடுங்கிப் போய் வீடு வந்து

சேர்ந்தேன். படித்த பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை

சரியாக கண்காணிக்க முடிவதில்லை. இதில் படிக்காதவர்கள் என்ன

செய்வார்கள்? இதனால், பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகளை

வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகள் ஒரு ஒழுங்கு

முறைக்கு வரும் வரையில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தானே

இருக்க வேண்டும். இதைத் தடுப்பதற்கு என்னதான் வழிமுறைகள்

ஆன்லைன் வகுப்புகள் இன்று சர்வசாதாரணமான ஒன்றாக மாறி விட்டது.


அப்படியானால் குழந்தைகளுடனான உறவை பெற்றோர்கள் பலப்படுத்த

வேண்டும்.அவர்களுடைய நண்பர்கள் குறித்தும் அவசியம் அறிந்திருக்க

வேண்டும்.தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து

கண்காணித்தல் அவசியமாகிறது..என்று நான் யோசித்து கொண்டிருந்த

நேரத்தில், “அக்கா, எம்பையனுக்கு எங்காவது வேலை தருவாங்கலானா

கேட்டுச் சொல்லுங்க்கா” என்று மறுபடியும் வசந்தி என்னிடமே கேட்டாள்.

நான் என்ன பதில் சொல்வது? படிக்கவே மாட்டேன் என்று நிற்கும்

குழந்தைகளை குழந்தை தொழிலாளர்கள் வரிசையில் சேர்ப்பதா? அல்லது

படிக்க விருப்பமில்லாத மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில்

ஏதாவது தொழில் கல்வியைக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையை

மேம்படுத்திக் கொள்வார்களா?என்று யோசித்தபடியே வாடகையை

வாசூலிக்காமல் அவர்கள் வீட்டுப் பிரச்சினையை என் மண்டையில் ஏற்றிக்

கொண்டு வந்து என் வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்தும் அங்கே நடந்த சம்பவங்களை மனசு அசைபோட்டது.

போதை வஸ்துக்கும் அலைபேசிக்கு அடிமையாக மாறிக் கொண்டிருக்கும்

இந்த தலைமுறை தானே நாளைய தூண்கள்.இந்த தூண்களின் அஸ்திவாரம்

சரியாக இல்லாமல் போனால் எப்படி கூரையைத் தாங்கி நிற்கும்? என

யோசிக்கும் போது, நேற்று எதிர் வீட்டுப் பெண் சொல்லியது நினைவுக்கு

வந்தது. ‘அக்கா, காலையில் எழுந்து அவசர அவசரமாக வீட்டு வேலை

செய்யறப்ப தொந்தரவு செய்யறான். அதனால் அவருக்கு ஆபீஸ் கிளம்ப

நேரமாயிடுதுனு அவரு சத்தம் போடறார். சரி நீங்க பிள்ளையை பார்த்துகிட்ட

நான் வீட்டு வேலையை சீக்கிரம் முடிக்க முடியும். சொல்றதை காதில

போடறதேயில்ல.அவரும் செல்போனை எடுத்து வச்சுக் உட்கார்ந்துகிறார்.

என்னால் இவனை சமாளிக்க முடியல. அதனால், அவனுக்கு ஒரு பொம்மை

சேனலை போட்டு, போனைக் கையில் கொடுத்துட்டால், அவனும் போனை

பார்த்துட்டு அமைதியா உட்கார்ந்துக்கிறான். நானும் நிம்மதியா வீட்டு

வேலையை செஞ்சு முடிக்கிறேன்’ என்றாள். விவரம் அறியாத குழந்தைகள்

கையில் போனைக் கொடுப்பது பெற்றோர்கள் மீது தவறா? இல்லை இந்த

காலத்தில் செல்போன் ஆறாவது விரலாகிடுச்சு அது இல்லாமல் ஒன்றும்

செய்ய முடியாது என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டுமா? என்ற


கவலையில் நான் தோய்ந்து கொண்டே, தொலைக்காட்சியை ஆன் செய்த

பொழுது, செய்தி சேனலில் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கில

பொதுத் தேர்வு எழுதுவதற்கு 12696 பேர் வரவில்லை என்ற செய்தியை

வாசித்துக் கொண்டு இருந்தார்கள். நான் எப்போதோ படித்த கற்கை நன்றே

கற்கை நன்றே பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்ற செய்யுள் வரிகள் என்

மனதில் ஓட ஆரம்பித்திருந்தது.

- யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...