வெள்ளியங்கிரி செல்ல இந்த வருடத்தில் இரண்டு முறை அழைப்பு வந்த போதும் வேலை பளுவின் காரணமாக தவிர்த்திருந்தேன். மூன்றாவது முறையாக அழைப்பு வந்த போதும் வேலைகள் அதிகமாக தான் இருந்தது. ஆனாலும் 26'ம் தேதிக்கு மேலே செல்வதென்றால் போகலாம் என்று சொல்லியிருந்தேன்.
இம்முறை அழைத்திருந்தது ஷான் அண்ணா. அவருக்கும், வேலைகள் காரணமாக எப்போது போகலாம் என சரியாக சொல்ல முடியாத சூழல். மே 31'ம் தேதிக்கு மேல் வெள்ளியங்கிரியில் மலை ஏற அனுமதியில்லை. எப்படியும் இறுதி வாரத்தில் எதாவது ஒருநாள் என்று மட்டும் இருவரும் முடிவு செய்திருந்தோம்.
28'ம் தேதி போகலாம் என முடிவு செய்த பிறகு அடுத்த குழப்பமாக பகலில் செல்வதா, இரவில் செல்வதா என்ற கேள்வி வந்து நின்றது. பகலில் என்றால் வெய்யில் அதிகமாக இருக்கும். இதனால் எளிதில் களப்படைய வாய்ப்பு உள்ளது. இதற்காக அதிக தண்ணீர் மற்றும் ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான பொருட்களை சுமந்து செல்ல வேண்டி வரும். இந்த சுமைகளே நம் சோர்வினை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இறுதி நாட்கள் என்பதால் மலையில் கடைகள் இருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு.
சரி இரவில் செல்லலாமே என யோசித்தால் அதற்கும் ஒரு 'க்கு' வந்து சிக்கலாக நின்றது. மலை ஏற அனுமதி முடியப் போவதால் இரவில் மலை ஏறுபவர்கள் மற்றும் இறங்குபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதனால் பாதையை கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்கும். ஆனாலும் ஏற்கனவே நான்கு முறை சென்று வந்த அனுபவத்தில் இந்த சிக்கலை சமாளித்து விடலாம் என்ற தைரியத்தில் இரவு நேரத்தில் கிளம்பலாம் என உறுதி செய்து கொண்டோம். இந்த ஆலோசனைகள் எல்லாம் மே 28'ம் தேதி செவ்வாய் அன்று தான் நடந்துகொண்டிருந்தது. செவ்வாய் இரவா புதன் இரவா என்பது மட்டும் முடிவு செய்யாத நிலையில் மதியம் 1 ஒரு மணியளவில் அன்றைய இரவு செல்வதென உறுதி ஆகியது.
இரவு 9.30 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 1 மணிக்கு மலை ஏற ஆரம்பித்து காலை 6,7 மணிக்கு உச்சியை அடையலாம். திரும்ப கீழிறங்கி முடிக்க மதியம் 2,3 மணி ஆகிவிடும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டிருந்த நேரத்திற்கு முன்பே எல்லாமே முடிந்தது.
வீட்டில் 4 லிட்டர் அளவிற்கான வாட்டர் பாட்டில்களை எடுத்து பேக்'கில் போட்டுக்கொண்டு திங்களூர் சென்று கடையில் ஆப்பிள், ஆரஞ்சு, கடலை மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், தேங்காய் பன் ஆகியவற்றை வாங்கிக்கொண்டிருக்கும்போது 'இப்போ வெள்ளியங்கிரி போறீங்களா? இப்போ விட மாட்டாங்களே' என மூன்று பேர் கேட்டனர். 'என்னது கிளம்பறப்போ பீதியை கிளப்பறாங்களே' என சற்று திகிலாக தான் இருந்தது. 9.30 மணிக்கு ஷான் அண்ணாவின் காரில் பயணம் ஆரம்பம் ஆனது.
இரவு 11.30 மணியளவில் பூண்டியை நெருங்கிக் கொண்டிருந்த போது எனக்கு தூக்கம் கண்களை தழுவ முயற்சி செய்தது. ஒரு பைக்கில் மூன்று பேர் எங்களை கடந்து சென்றார்கள். வெள்ளியங்கிரி அடையாளமாக ஒருவர் கையில் மூங்கில் குச்சி வைத்திருந்தார். சற்று நேரத்தில் சிறுநீர் கழிக்க அந்த பைக் நின்றுவிட நாங்கள் அவர்களை கடந்து சென்றோம். சென்ற வருடம் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக 1.5கி.மீ முன்பாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அப்படி நிறுத்தப்பட்ட இடம் வந்தபோது சென்ற வருட அனுபவத்தை பற்றி ஷான் அண்ணாவிடம் பகிர்ந்து கொண்டு வந்தேன். சென்ற வருடம் ஒரு குட்டி யானையில் லிஃப்ட் கேட்டு வந்ததை சொல்லிக்கொண்டிருந்த போது திடீரென முன்னால் 15 அடி இடைவெளியில் பெரிய யானை நின்று கொண்டிருந்தது. சாலையின் ஓரத்தில் நின்றிருந்த அந்த யானை ரிவர்ஸ் கியர் எடுத்து அப்படியே முன்னால் திரும்பி எங்களது காரை நோக்கி தும்பிக்கையை தூக்கிக்கொண்டு வந்தது. எனக்கு வந்த தூக்கம் எல்லாம் துண்டை காணோம் துணியை காணோம் என ஓடிவிட்டது. ஒரு சில வினாடிகளில் ரிவர்ஸில் பின்னால் சென்று காரின் முகப்பு விளக்குகளை அனைத்து விட்டார் ஷான் அண்ணா. பின்னால் ஏதும் வாகனம் வருகிறதா என பார்த்த போது அந்த மூவர் வந்த பைக் திரும்பி நின்றுகொண்டு இருந்தது.
இன்னும் ஒரு 100 அடி சென்றால் இடது புறம் பிரியும் சாலையில் பறந்து விடலாம். ஆனால் அந்த இடத்தில் தான் செக் போஸ்ட் போட்டது போல யானை நின்று கொண்டு இருந்தது. காரின் விளக்குகள் அனைக்கப்பட்ட பிறகு யானை மெதுவாக திரும்பி எதிரே இருந்த சாலையில் பயணித்தது. யானை சென்று விட்டதை உறுதி செய்த பின் கிளம்பும் தருவாயில் அருகில் இருந்த ஷெட்டின் கேட்'டை நீக்கிக்கொண்டு, கையில் டார்ச் லைட் மற்றும் வயர்லெஸ் உடன் ஒருவர் எட்டி பார்த்தார். 'யானை போயிடுச்சா' என எங்களிடம் கேட்டார். போய் விட்டது என்று சொன்ன பிறகு 'பார்த்து போங்க. ஒரு திருப்பம் வரும். அது யானை கிராஸ் பண்ணற ஏரியா..பார்த்து போங்க' என்றார். அந்த இடத்திலிருந்து இடது புறம் திரும்பிச் செல்லும்போது எதை பார்த்தாலும் யானை நிற்பது போலவே தெரிந்தது.
அடிவாரத்தை அடைந்து வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் பிடித்துக்கொண்டு, வனத்துறை சோதனைகளை முடித்துக்கொண்டோம். மலை ஏற ஆரம்பித்த போது மணி 11.57'ஐ காட்டியது. மலை ஏறுபவர்களும் இறங்குபவர்களும் ஓரளவிற்கு இருந்ததை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. முதல் மலையில் திருச்சியில் இருந்து வந்திருந்த, நான்காம் வகுப்பு படிக்கும் சுலேகா தன் தந்தையுடன் மலை ஏறிக்கொண்டிருந்தார். சுபலேகா'வின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவரது தந்து 'பாப்பா மெதுவா போ' என்றாவறே பின்னால் சென்று கொண்டிருந்தார். சிறிது நேரத்திலயே சுபலேகா ஷான் அண்ணாவுடன் இணைந்து கொண்டார். 'மெதுவா போ மெதுவா போ' என்றவாரே வந்த அவர் அப்பா, எங்களிடம் 'நீங்க போங்க நாங்க மெதுவா வரோம்' என்று இரண்டு மூன்று முறை கூறினார். சுபலகாவிடம்'மெதுவா போ..அவங்க போகட்டும்' என்றதிற்கு 'இந்த அங்கிள் கூடவே போனா சீக்கிரம் ஏறிடலாம்' என்றார் சுபலேகா. 'நீங்க ஏறிடுவிங்க..ஆனா அப்பானால முடியாது' என்றோம். சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் முன்னால் சென்று விட்டோம்.
எங்களுக்கு சற்று முன்னால் ஏதோ சத்தம்
கேட்க சற்று வேகமாக முன்னால் சென்றோம். சத்தம் கேட்டவுடனே, எங்களை சற்று நேரத்திற்கு முன்னாள் கடந்து சென்ற சுதாகர் 'தம்பி என்ன ஆச்சு?' என சத்தம் போட்டார். சுதாகர் பற்றி பின்னால் பார்க்கலாம். அவர் இரண்டு மூன்று முறை கூப்பிட்டும் எந்த பதிலும் இல்லாததால் சற்று பதட்டமாகவே ஓடினோம். அருகில் நெருங்கும்போது கீழே விழுந்த நபர் எழுந்து விட்டார். 40+ வயதிருக்கலாம். கல் மீது கால் வைத்தபோது கல் புரண்டதில் விழுந்திருக்கக்கூடும். கீழே கிடந்த டார்ச் லைட் மற்றும் குச்சியை எடுத்து கொடுத்தோம். அவற்றை வாங்கிக்கொண்டவர் 'ஒன்னும் பிரச்சினை இல்லையே' என ஷான் அண்ணா கேட்டதிற்கு கூட எதுவும் பேசமால் கீழே இறங்கிச்சென்றார். அவர் சென்ற பிறகு 'அவர் என்ன மொழி பேசுவார்? குரல் எப்படி இருக்கும்' என மனம் யோசிக்க ஆரம்பித்தது. 'எப்படி இருந்தால் என்ன பத்திரமாக கீழே இறங்கினால் சரி' என அதே மனது சமாதானம் சொல்லியது.
சரவணம்பட்டியில் இருந்து வந்திருந்த மூன்று பேர் கொண்ட குழுவில் ஒருவருக்கு அஜீரண கோளாறு காரணமாக வாந்தி ஏற்பட, அப்படியே உட்கார்ந்து விட்டார்கள். நாங்கள் அவர்களை நெருங்கும்போது 'வாந்தி மாத்திரை இருக்கா' என கேட்டார்கள். ஷான் அண்ணா எடுத்து வந்திருந்த எலக்ட்ரால் பாக்கெட்டுகளில் ஒன்றை கொடுத்தார். அதில் பாதியை தங்களுடைய வாட்டர் பாட்டிலில் கொட்டிக்கொண்டு மீதியை திருப்பி தந்துவிட்டார்கள்.
முதல் மலையை ஒரு மணி நேரத்திலும், இரண்டாவது மலையை அரை மணி நேரத்திலும் கடந்து விட்டோம். அதற்கு மேல் நேரத்தை கவனிக்க வில்லை. ஐந்தாவது மலையில், முந்தைய வாரம் மழை பெய்த சமயங்களில் புது புது பாதைகளை உருவாக்கி இருந்தார்கள். இந்த பாதைகளில் சுற்றி சுற்றி போனதால் எங்கு செல்கிறோம் என்பதே தெரியவில்லை. ஐந்தாவது மலை வந்து விட்டால் சமதளமாக இருக்கும், நடக்க கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும் என்பதால் மனம் ஐந்தாவது மலை எப்போது வரும் என எதிர்பார்த்துக்கொண்டே சென்றது. ஆனால் நாம் சென்று கொண்டிருப்பது நான்காவது மலையா ஐந்தாவது மலையா என்பதே தெரியாமல், 'இதுக்கு இல்லையா சார் என்ட்'டு என்பது போல் போய்க்கொண்டே இருந்தது. ஆறாவது மலை கீழ் நோக்கி செல்லும் மலை. அதில் இறங்கும்போது தான் புரிந்தது ஐந்தாவது மலையை கடந்து விட்டோம் என்று. அதன் பின் விரைவாகவே ஆறாவது மலையின் முடிவில் இருக்கும் பாம்பாட்டி சுனையை அடைந்து விட்டோம்.
இப்போது மணி 3.30 ஆகி இருந்தது. ஏழாவது மலையின் துவக்கத்தில் சற்று ஓய்வும், சிறிதளவு உணவுகளும் எடுத்துக்கொண்டு மலை ஏற ஆரம்பித்தோம். துவக்கத்திலயே ஒரு வயதான அம்மா மற்றும் அவர் உடன் வந்தவர்கள் 'இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு' என்று கேட்டனர். 'அவ்வளவு தான் அஞ்சு நிமிஷத்துல பாம்பாட்டி சுனை வந்திடும்' என்றதும் அவர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். 'பார்த்து போங்க தங்கம். மழை பெய்ஞ்சதனால வழுக்குது. நாங்க குச்சி இல்லாம போயிட்டோம். நல்ல வேளையா எங்களுக்கு மேல குச்சி கிடைச்சது. பார்த்து போங்க தங்கம்' என்று சொல்விட்டுப் போனார் அந்த அம்மா. அவர்கள் மலை ஏற ஆரம்பித்து இப்போது வரை பத்து மணி நேரம் ஆகி இருந்து. 'இவங்க முடிக்கறதுக்கு இன்னும் பத்து மணி நேரம் ஆகுமா?' என்றார் ஷான் அண்ணா. 'இறங்கும்போது இன்னும் டயர்டா இருப்பாங்க. 12 மணி நேரம் கூட ஆகலாம்' என்றதற்கு ' சரி வா..நாம என்ன லட்சணத்துல முடிக்கப் போறமோ' என்றார்.
ஏழாவது மலை களி மண் என்பதாலும் மழை போன்றே பனி பெய்து கொண்டிருந்ததாலும் வழுக்கியது. பாறைகளும் கூட ஈரப்பதத்தினால் வழுக்கியதால் கவனமாகவே கால் வைக்க வேண்டியதாக இருந்தது. காற்று பலமாக வீசியது. மேக கூட்டங்கள் நகரங்களில் பாயும் வாகனங்களை போல வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. சிறு சிறு ஓய்வுகள் எடுத்துக்கொண்டு ஏழாவது மலையை அடைந்தோம்.
நேரம் இப்போது அதிகாலை 4.40 ஆகி இருந்தது. எதிர்பார்த்த நேரத்தை விட முன்பே உச்சியை அடைந்திருந்தோம். உச்சியில் பனி மூட்டம் அதிகமாகவே இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் இருவர் மட்டுமே உச்சியை அடைந்திருந்தோம். வெளிச்சம் வந்த பின் தரிசனம் செய்யலாம் என்பதால் பூஜை செய்பவரிடம் சிறிது நேரம் கழித்து வருவதாக சொன்னோம். 'அங்கயே இருக்கனும். இங்க அடிக்கடி வந்து கேட்டுட்டு இருக்க கூடாது. இங்க வர்வங்க பாதுக்காப்புக்கான பொறுப்பு அவங்களோடது தான். இங்க வந்து தொந்தரவு பண்ண கூடாது' என சொல்லி அனுப்பினார். நிறைய தொந்தரவுகளை அவர் எதிர் கொண்டு இருக்கலாம். பூஜை எப்போது என கேட்டதிற்கு '6 - 7 மணிக்குள்' என்றார்.
ஒரு பாறையின் ஓரமாக அமர்ந்து கொண்டோம். குளிர் பிண்ணி எடுத்தது. சிறிது நேரம் அமர்ந்த படியே தூங்க முயற்சி செய்தும் பெரிதாக பலனளிக்க வில்லை. ஒரு துண்டை இறுக போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தேன். ஷான் அண்ணா அந்த இடத்தை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தார். குளிர் தாங்காமல் நானும் சிறிது நேரம் அங்குமிங்கும் நடந்தேன். குளிரில் கைகள் லேசாக மறுத்து போனது. எங்கோ ஓரிடத்தில் வானம்பாடி பறவையொன்று வித விதமாக ஒலியெலிப்புக்கொண்டு இருந்தது. மேக கூட்டங்கள் புயல்களாய் வீசிக்கொண்டிருந்தன. ரம்மியமான காட்சி.
முதல் மலையில் சந்தித்த சுபலேகா அவரது அண்ணனுடன் வந்து சேர்ந்தார். நேராக சாமி கும்பிட்டு விட்டு நாங்கள் இருந்த பாறையின் ஓரத்தில் வந்து படுத்துக் கொண்டார்கள். 6.15 மணிக்கு பூஜையை பார்க்க சென்றிருந்த போது அலங்காரம் செய்துகொண்டு இருந்தார்கள். சிறிது சிறிதாக கூட்டம் சேர்ந்துகொண்டு இருந்தது. ஈஷா டீ சர்ட் அணிந்திருந்த ஒருவர் அடிக்கடி சங்கு ஊதினார். லிங்கத்தின் அருகில் வைத்து மொபைலில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதற்கென்றே உதவியாளர் ஒருவரை வைத்திருந்தார். சென்னையில் இருந்து வந்திருந்தார்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. அதுவரை நாங்கள் அங்கே தான் நின்று கொண்டிருந்தோம். சுற்றி இருந்தவர்கள் சூரிய தரிசனம் கிடைக்குமா என எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஈசனை தரிசிக்க சூரியன் எத்தனை முறை முயன்றாலும் மேக கூட்டங்கள் தடுத்துக்கொண்டே இருந்தன. ஒரு வழியாக அலங்காரம் முடியும் தருவாயில் சற்றே மங்கலாக எட்டி பார்த்தார் சூரியனார்.
இப்போது சுதாகர் பற்றி பார்ப்போம். பன்ரூட்டியை சார்ந்த சுதாகர் அரசு கலை கல்லூரியில் பணியாற்றுகிறார். தீவிர சிவன் பக்தர் என்பதற்கு அடையாளமாக இடது கையின் தோள்பட்டைக்கு கீழே உடுக்கையுடன் இருக்கும் வேல் படத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். ஐந்தாவது வருடமாக மலை ஏறுகிறார். முதல் மலை ஏற ஆரம்பித்தவுடன் வரும் பாலத்தில் சோர்வாக அமர்ந்திருந்த ஒருவரிடம் தண்ணீர் வேண்டுமா என கேட்டுக்கொண்டு இருந்தார்.
இப்போது சிவனுக்கு அலங்காரம் நடைபெறும்போது வந்து சேர்ந்த சுதாகர் பின்னால் ஓரமாக நின்றுகொண்டு, ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த பாடலை பாட ஆரம்பித்தார். ஒரு மணி நேரமாக ஒரே இடத்தில் கால்கடுக்க நின்றுகொண்டிருந்தவர்களுக்கு அவரது பாடல் இதமாக இருந்தது. ஏதோ பெயருக்கு பாடுவதாக இல்லாமல் தத்ரூபமாக பாடினார். அவரது குரல் அந்த பாடலுக்கு இன்னும் மெருகூட்டியது.
அலங்காரம் முடிந்ததும் அனைவரும் தரிசனம் செய்து விட்டு போகலாம் என்றார்கள். பூஜை எல்லாம் இல்லை. நான் வேறு ஷான் அண்ணாவிடம் 'பூஜை நடக்கும்போது பறை இசை போல் இசைக்கப்படும். பார்க்க நன்றாக இருக்கும்' என சொல்லி வைத்திருந்தேன். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மட்டும் பூஜை நடக்கும் போல. இரண்டரை மணி நேரம் காத்திருந்தவர்களுக்கு நெற்றியில் பட்டையை பட்டு நடுவே நாமத்தை போட்டு அனுப்பி வைத்தார்கள்.
கோவிலை விட்டு தள்ளி வந்ததும் வெட்ட வெளியாய் தெரிந்த மலைகளை, வெடிகுண்டு வீசினால் எழும் புகையை போல் மேகக் கூட்டங்கள் வேகமாக வந்து மூடிக்கொண்டன. ஏழாவது மலையை விட்டு இறங்கும் வரை மேகக் கூட்டங்களுக்கு நடுவே நடப்பது போன்றே இருந்தது. இந்த ரம்மியமான காட்சிகளை பார்த்ததும் 'கயிலாயத்தில் இருப்பது போன்றே உள்ளது' என்றார் ஷான் அண்ணா.
அந்த உற்சாகத்துடனே ஒரே மூச்சாக ஐந்தாவது மலையை அடைந்தோம். ஆளுக்கு இரண்டு தேங்காய் பன் சாப்பிட்டு காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்பினோம். மேலே இருந்த கடைகள் காலி செய்யப்பட்டு இருந்தன. மூன்றாவது மலை வரை மட்டுமே கடைகள் இருந்தன. கூட்டம் குறைவாக இருந்ததால் இம்முறை 'இன்னும் எவ்வளவு தூரம் போகனும்?' என கேட்பவர்கள் குறைவாகவே இருந்தனர். மலை ஏறும் போது முதல் மலை ஏறிய 10'வது நிமிடத்திலேயே திருச்சி அருகே உள்ள கீரனூரிலிருந்து வந்திருந்த கார்த்தி கேட்டார். அடுத்த அரை மணி நேரம் கழித்து ஒருவர் 'கால் நின்னுக்க சொல்லுது..மனசு போகலாம்னு சொல்லுது' என தன் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டு இருந்தார். நான் சும்மா இருக்காமல் ' இன்னும் அரை மணி நேரம் தான்..கீழே இறங்கிடலாம்' என்றேன். 'இப்போ எதுக்கு சொன்னீங்க..நானே இன்னும் முப்பது படிதான் இருக்குனு ஒரு தைரியத்துல வந்துட்டு இருக்கேன்' என்றார். திரும்பி பார்க்காமல் சென்று விட்டேன்.
ஏழாவது மலை ஏறும்போது 'பார்த்து போங்க தங்கம்' என்று சொன்ன அம்மா திரும்பி வரும்போது காலை 11 மணியளவில் முதல் மலை முடியும் வெள்ளை விநாயகர் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார். முதல் மலை இறங்கும்போது சேலத்திலிருந்து வந்திருந்த ஒரு இளைஞர் நடக்காமல் ஓட்டமாக எங்களை கடந்து ஓடினார். எதிரே மலை ஏறிக்கொண்டு இருந்தவர் அவரை திரும்பி பார்த்து 'ஓடாதீங்க' என்றார். ஓடி வந்த சேலத்துக்காரர் 'நடந்து போனா கால் வலிக்கும். ஓடினா சீக்கிரம் இறங்கிடலாம்' என்றார். 'அதெல்லாம் தப்பு..கொஞ்சம் கால் பிசக்கினால் விழுந்து அடி பட்டிடும்' என அக்கறையாக சொல்லியபடி சென்றார்.
கால் மணி நேர நடைக்கு பிறகு இடையில் இருந்த பாலத்தில் அமர்ந்திருந்தார் அந்த சேலத்து நண்பர். எங்களை பார்த்ததும் சாக்லேட் இருக்கா என கேட்டார். ஓடி வந்ததில் களப்படைந்துள்ளார். நாங்கள் எடுத்துச் சென்ற சிறிய அளவிலான ஆரஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் அப்படியே இருந்தது. அதை எடுத்து கொடுத்ததிற்கு ஒரு மிட்டாய் மட்டும் எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். நான்கைந்து கடலை மிட்டாய்களும் இருந்தது. அதில் ஒன்றை கொடுத்துவிட்டு கிளம்பினோம். இந்த சமயத்தில் உடும்பு ஒன்று அங்கிருந்த மரத்திலிருந்து இறங்கி மீண்டும் மரத்தில் ஏற ஆரம்பிக்க நாங்கள் கீழே இறங்க ஆரம்பித்தோம். இப்போது சேலத்து நண்பர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து நடக்க ஆரம்பித்தார். அவ்வப்போது பின்னால் திரும்பி பார்த்து அவர் வருவதை உறுதி செய்து கொண்டே வந்தோம். முடியும் தருவாயில் அவரை காணவில்லை. எப்படியும் மெதுவாக வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் நண்பகல் 11.45 மணியளவில் பயணத்தை நிறைவு செய்தோம்.
உண்மையிலயே இம்முறை நிறைவான பயணம் தான். தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் ஊட்டம் அளிக்கும் உணவு பொருட்களை எடுத்துக்கொண்டோம். சீரான இடைவெளியில் தேவையான அளவிற்கு மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்டோம். கூட்டம் அதிகம் இல்லாததால் நெரிசல் இல்லாத மலை ஏற்றமாக அமைந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு பெய்திருந்த மழை காரணமாக பசுமை படர்ந்து வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. எங்களுக்கு தேவைப்படவில்லை என்றாலும் தண்ணீர் பிடிக்கு இடங்கள் அதிகமாகவே இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஏழாவது மலையில் கண்ட மேக கூட்டங்களும், மேக சாரல்களும் புதிய அனுபவத்தை கொடுத்தது. இந்த பயணத்தை இனிமையான பயணமாக மாற்றிய ஷான் அண்ணாவிற்கு நன்றி.
- மூர்த்தி, ஈரோடு

No comments:
Post a Comment