அடுக்குமாடி வீடு கட்டியிருந்தால் சரியான தேதிக்கு வாடகை வந்திடுமோ
என்னவோ, இந்த பழைய சீமையோடு வீட்டுக்கு வாடகை கொடுக்கறதூனா
மூக்கால அழறாங்க. என்ன செய்ய? குடியிருப்பது எல்லாம் கூலி
வேலைக்குப் போகிறவர்கள். ஆறு மாச வாடகையை நமக்கு கொடுக்காமல்
இருப்பார்கள்.நாம கேக்கும் பொழுதெல்லாம் “அக்கா க்கா.. வரத்
திங்கள்கிழமை கொடுத்தறேங்க்கா கோவிச்சுக்காதீங்க்கா”. எனக்
கெஞ்சுவார்கள். ஆனால், இவர்களுக்கு கடன் கொடுக்கும் கந்துக்காரர் வரும்
வண்டிச் சத்தம் தெருமுனையில் கேக்கும் போதே, பணத்தை எடுத்துட்டு
வீட்டு வாசப்படிக்கு ஓடுவார்கள். நமக்கு மட்டும் வீட்டு வாடகையைத்
தரமாட்டார்கள். போனில் அழைத்தால் போனை எடுத்துக் கூட
பேசுவதில்லை. நாம என்னவோ அவர்களுக்கு கடன்பட்டவர்கள் போல்
இருக்கும். என்ன காலமோ மொத்தத்தில் இரக்க சுபாவம் இருக்கிறவர்களுக்கு
வாடகையை கூட சரியா வசூலிக்க முடியாதுனு எனக்கு புரிஞ்சு போச்சு.
இன்னிக்கு வாடகை வசூல் செய்ய நேராக வீட்டுக்கே போய்விடலாம்
வேண்டும் என்று கிளம்பிவிட்டேன்.
வீட்டுக்கு போனதும் முன் வாசல் கதவு எப்போது போல் திறந்திருந்தது.
“வசந்தி, வசந்தி” என நான் கூப்பிடுவது கேட்காத அளவுக்கு வீட்டினுள்
தொலைக்காட்சி சத்தம். இரண்டு வாசற்படி ஏறி, “ வசந்தி வசந்தி” என
மீண்டும் கூப்பிட்டதும் “யாருங்க” என உள்ளே இருந்து வெளியே வேகமாக
வந்தான் வசந்தியின் ஒன்பதாவது படிக்கும் மகன். என்னைப் பார்த்ததுமே
“என்னங்க்கா” குரலை மென்று விழுங்கினான். “உங்கம்மா எங்கடா?”
“வேலைக்குப் போயிருக்காங்க”. “பட்டறையில் தானே இருக்காங்க.போயி
கூட்டிட்டு வா” என்று நான் திண்ணையில் உட்கார்ந்து விட்டேன். வீட்டுக்கு
பின்புறம் இருக்கும் வீட்டில் தான் வசந்தி வீட்டு வேலை செய்கிறாள். அவள்
புருஷன் தறி ஓட்டுகிறான்.
வசந்தியின் மகன் அவள் அம்மாவைக் கூட்டி வரச் சென்றதும் அவள் மகள்
வெளியே வந்தாள். அவள் உதட்டோரம் கிழிந்து ரத்தம் வந்து காய்ந்து போயி,
உதடு வீக்கம் கண்டிருந்தது. எனக்கு பார்த்ததும் அதிர்ச்சி. “அட !இதென்ன
உதடு இப்படி கிழிஞ்சிருக்கு என்னாச்சு?” சற்று பதட்டமாக கேட்டேன்.
“ஒண்ணுமில்லங்க்கா” என மறைத்தாள். “ஆமா நீ இன்னைக்கு பள்ளிக்கூடம்
போகலையா?” என நான் வினவிக் கொண்டிருந்த நேரத்தில், மூச்சு வாங்க
வீட்டுக்குள்ளே வந்தாள் வசந்தி, “நல்லாக் கேளுங்க்கா நானும் படிச்சு படிச்சு
சொல்லறேன் பள்ளிக்கூடம் போகமாட்டேனு அடம் பிடிக்கிறா. அதனால்,
காலையில் எனக்கு கோவம் வந்து நான் அடிச்ச அடியில் உதடு கிழிஞ்சு
வீங்கிக் கிடக்குதுங்க்கா.இதோ இங்கே மரமாட்டம் நிக்கறானே இவனும்
பள்ளிக்கூடம் போவமாட்டேங்கறான் நான் என்னத்த பண்ணறதுங்க்கா? நாயா
பாடுபட்டு கிடக்கிறோம். இவனாவது படிச்சு வேலைக்குப் போயிட்டா
பரவாயில்லைனு பார்த்தா இவனும் பள்ளிக்கூடம் போக மாட்டேன்
சொல்லறான். எனக்கு மட்டும் படிப்பு இருந்திருந்தா நான் இப்படி வூடுவூடா
வேலை செஞ்சு பொழைப்பு நடத்துவேனா” என புலம்பித் தீர்த்தாள்.
“ஏப்பா, உங்கம்மா வூட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியாம இருக்கா,
இதுல உங்கள படிக்க வைக்கிறதுக்கு வேற சிரமப்படறா? நீங்க ஏன்
பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு செல்லறீங்க?”
“நல்லா கேளுங்க்கா”.
பதினான்கு வயது பையன் வாயே திறக்கவில்லை. “உங்கிட்ட தான் கேக்கறேன் ஏப்ப ஸ்கூலுக்கு போக மாட்டேங்கிற..சாரோ, டீச்சரோ ஏதாவது சொல்லறாங்களா?”
இல்லை எனத் தலையாட்டினான். “அப்புறம் உனக்கு என்னதான் பிரச்சினை?”..
அவன் எதுவும் பேசாமல் நின்றான். “டேய் அந்தக்கா கேக்றாங்களே
வாயத்தொறந்து சொல்லித் தொலையேண்டா” என்றாள். “எனக்கு படிப்பு
வரலைங்க்கா”.
“சரி டியூசன் படிக்கிறீயா? சேர்த்துவுடறேன்” என்றேன்.
“எனக்கு சுத்தமா கணக்கே வரமாட்டேங்குதுங்க்கா” என்று சொல்லியபடியே
தலையை கவிழ்ந்தான்.
“அட கணக்கு தானே வரல வீட்டுக்கு வா அக்கா சொல்லிக் கொடுப்பாங்க”
என்றதும் “இல்லைங்க்கா நான் பள்ளிக்கூடம் போகலைங்க்கா..”
“அட அவிய எத்தனை நல்லது சொல்லறாங்க நீ திரும்ப திரும்ப பள்ளிக்கூடம்
போவலைனே சொல்லற. நானும் உங்கப்பனும் தான் படிக்காம போயி கூலி
வேல செய்யறோம். நீயாவது நாலெழுத்து படிச்சு எப்படியாவது ஒரு பெரிய
வேலைக்கு போயிட்டா எங்க கஷ்டம் விடிஞ்சுடுனு பார்த்த நீ இப்படியே
பேசறீயே” என கத்தினாள். நான் வசந்தியை அமைதிப்படுத்தி விட்டு,
அவனிடம்
“ஏப்பா, எதுக்கு ஸ்கூலுக்கு போகமாட்டேன் சொல்லற?” என மீண்டும்
முதலிலிருந்து வந்தேன். அவள் அம்மா வாய் திறந்தாள். “அக்கா இவனை
விட பெரிய பசங்க எல்லாம் இவனை மிரட்டறாங்களாம். அந்த பசங்க
ஸ்கூல்ல சிகரெட் பிடிச்சிருக்காங்க, அப்புறம் என்னவோ போதை மருந்தை
போட்டுட்டு இருந்தாங்களாம். இதையெல்லாம் இவன் பார்த்துட்டு சாருகிட்ட
போயி சொல்லிட்டான். ஸ்கூல் சாரு அந்தப் பசங்களை எல்லாம் கூப்பிட்டு
மிரட்டி இருக்காங்க. உடனே அடுத்த நாளு அஞ்சாறு பசங்க இவனை வந்து
கண்டபடி பேசி மிரட்டி, அடிச்சுட்டு போயிருக்காங்க. அதிலிருந்து சுத்தமா
பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்லறானுங்க” என்றாள்.
அவனிடம் “ஏப்பா அதெல்லாம் ஒன்னும் பெரிசா பிரச்சினை வராது நீ அமைதியா போயிட்டு எதையும் கண்டுக்காம பாடத்தை மட்டும் படிச்சிட்டு வா. அவங்க உனக்கு தொந்தரவு தந்தா ஸ்கூல்ல சாரிடம் சொல்லு, இல்ல வீட்டுல வந்து அம்மாகிட்ட சொல்லு. வேற யாராவது பெரியவர்களை கூட்டிட்டு போய் கூட கேக்கலாம்” என்று சமாதானப்படுத்தியதில் என் தொண்டையின் ஈரம் தான் காய்ந்தது. அவன் மனசில் படிக்க வேண்டும் என்ற ஈரம் ஒரு துளி கூட சுரக்கவேயில்லை. அவன் பள்ளிக்கூடம் போறேன் என்று வாயே
திறக்கவில்லை.
“ஏனுங்க்கா, எப்படி அமுக்கினி குரங்காட்டம் நிக்கறான் பாருங்க.!”
என்றாள்.அவனிடம் எந்த வித ரியாக்ஷனும் இல்லை. “சொல்லுடா
நாளையிலிருந்து பள்ளிக்கூடம் போறேன் சொல்லுடா” என்றாள் அவள்
அம்மா. “இல்லம்மா நான் போகமாட்டேன். எனக்குப் பிடிக்கலை என்று
பிடிவதமாக நின்றிருந்தான். அவன் இருக்கும் நிலையில் எத்தனை
சொன்னாலும் இவன் படிக்க மாட்டான் எனத் தோன்றியது. “அக்கா ஸ்கூல்
எச்.எம் கூட இவங்கிட்ட பேசிட்டாரு. அடப் படிக்க வேண்டாம் நீ தினமும்
ஸ்கூலுக்கு வந்துட்டு போ அதுக்குப்பிறகு பார்த்துக்கலானு சொல்லிப்
பார்த்துட்டாருங்கா” அவங்ககிட்டேயேயும் ஸ்கூலுங்கு வரலைனு
சொல்லாறானுங்கா”என்றாள் வசந்தி.
“சரிப்பா, படிக்கல அப்புறம் என்ன தான் செய்யறதா இருக்கே?”
“நான் வேலைக்குப் போறேங்க்கா”. “உனக்கு என்ன வேலை
தெரியும்?”..”அக்கா அவன ஏதாவது கடகண்ணியில சேர்த்து ஊட்டுடலானு
போயி நானும் நாலு பக்கம் கேட்டேனுங்க. நான் கேட்ட இடத்தில் குழந்தை
தொழிலாளர் வரிசையில இருக்கான்ந. அவனுக்கு வேலை கொடுக்க
முடியாது. நீ கேக்கறேனு பரிதாபப்பட்டு உன் பையனை நாங்க வேலைக்கு
வச்சப்பிறகு, எங்களுக்கு வேண்டாதவங்க யாராவது எங்க மேல புகார்
கொடுத்தால் எங்கள ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போயிடுவாங்க. எங்களுக்கு
எதுக்கு தேவையில்லாத வேலை. முதல்ல நீங்க அவனைப் பள்ளிக்கூடம்
அனுப்பற வழியைப் பாருங்கனு என்னைத் தாட்டியுடறாங்க்கா. இத்தாச்
சோட்டுப் பையனை வூட்டுல வச்சுட்டு இருந்தா, இவன் பொழுதுக்கும் இந்தா
டி.வியைப் பார்த்துட்டு படுத்திருக்கிறான். அவன் வூட்டுல டி.வி.யைப்
பார்த்துட்டே படுத்திருக்கிறதப் பார்த்துட்டு, இப்ப இதா இந்தக் கழுதையும்
பள்ளிக்கூடம் போகலைனு அடிவாங்கிட்டு வூட்டுல படுத்திருக்கு” என்று
வசந்தி அரற்றிக் கொண்டிருந்தாள்.
“ஏப்பா உன்னைய வேற ஸ்கூல்ல சேர்த்தி விட்டா படிக்கப் போறீயா?”
“இல்லைங்க்கா எனக்கு படிக்கவே புடிக்கல.” “இப்ப தெரியாதுப்பா நாளைக்கு
நீ வளர்ந்த பிறகு ஒரு தொழில் செய்ய கடன் வாங்கப் போனால் கூட,
படிச்சிருந்தா அதுக்கு ஒரு மதிப்பு இருக்குப்பா. உங்கம்மா இப்படி வேலை
செஞ்சுட்டு கிடக்கிறா நீயும் இது போல அலைய வேண்டாம்னு தானே
படிக்கச் சொல்லறா”..அவனுக்குச் சொல்லும் எந்த அறிவுரையும் செவிக்குள்
கூட நுழையாது என்பது புரிந்தது.
“சரி வசந்தி நீ போய் ஸ்கூல்ல சொல்லி டி.சி.யை வாங்கி வச்சுக்க. ஒரு
காலத்தில படிக்க ஆசைப்பட்டா அந்த டி.சி வேணும்..ஆமா உங்க பிரச்சினையில் நான் வாடகை கேக்க வந்ததையே மறந்துட்டேன்” என்றதும்
மீண்டும் அதே பல்லவி “அக்கா ஓனருகிட்டே கேட்டிருக்கேன் இன்னும்
இரண்டு நாளு பொறுங்க்கா. எப்படியாவது ஒரு இரண்டு மாசத்து
வாடகையாவது கொண்டு வந்துடறேனுங்க்கா.” என்று அவ பொய்
பல்லவியை பாட ஆரம்பித்தாள். அப்போது தான் திரும்பவும் அந்த
பையனைக் கவனித்தேன். அவன் அவ அம்மாவிடமிருந்த போனை பிடிங்கி
கேம் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் அம்மா சொல்வதையோ நான்
சொல்வதையோ எதையும் காதில் நுழைத்துக் கொண்டதாக தெரியவில்லை.
அவன் உலகத்தில் அவன் இருந்தான். “ அக்கா இப்ப கவர்மென்ட்
பள்ளிக்கூடத்தில பசங்களுக்கு இந்த போதை மருந்து எப்படியோ
கிடைக்குதுங்க்கா. சில பசங்க அதைப் போட்டுடறாங்க்கா எனக்கும் இப்ப
ஸ்கூலுக்கு விடவே பயமாத்தான் இருக்குங்க்கா” என்று அவள் கூறியதும்
நான் நேரில் பார்த்த காட்சி கண்முன்னே ஓடியது.
வீட்டுக்கு அருகில் உள்ள பார்க்கில் அன்று நான் நடைபயிற்சி செய்து
கொண்டிருந்தேன். அங்கே பதினைந்து, பதினாறு வயதிருக்கும் இருக்கும்
பதின்பருவ சிறுவர்கள் ஓய்வெடுக்கப் போட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்து
கொண்டு தாங்கள் கொண்டு வந்த அலைபேசியை வைத்து கொண்டு
விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு அலைபேசி
இருந்தது. அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும். நல்ல
விஷயங்கள் ஏரளாமாக இருந்தாலும் அவர்களை ஈர்ப்பது வன்முறை
தூண்டும் காட்சிகளும், பாலியல் உணர்வைத் தூண்டும் படங்களும் தானே!
அவர்கள் வீட்டில் பார்க்காமல் வீட்டில் இருந்து வெளியே வந்து
பார்க்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு சந்தேகம் என் மனசுக்குள் விழுவதை
தவிர்க்க இயலாமல் போனது. அது மட்டுமல்ல அந்த சிறுவர்கள் வெளியே
சென்று சிகரெட் பிடிப்பதைப் பார்த்ததும் என் அடிவயிறு சில்லிட்டுப்
போனது.இந்த வயதில் இருக்கும் என் குழந்தைகள் உறவினர்கள் குழந்தைகள்
எல்லாம் கண்முன்னே வந்து செல்ல நான் நடுங்கிப் போய் வீடு வந்து
சேர்ந்தேன். படித்த பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை
சரியாக கண்காணிக்க முடிவதில்லை. இதில் படிக்காதவர்கள் என்ன
செய்வார்கள்? இதனால், பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகளை
வைத்திருக்கும் பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகள் ஒரு ஒழுங்கு
முறைக்கு வரும் வரையில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தானே
இருக்க வேண்டும். இதைத் தடுப்பதற்கு என்னதான் வழிமுறைகள்
ஆன்லைன் வகுப்புகள் இன்று சர்வசாதாரணமான ஒன்றாக மாறி விட்டது.
அப்படியானால் குழந்தைகளுடனான உறவை பெற்றோர்கள் பலப்படுத்த
வேண்டும்.அவர்களுடைய நண்பர்கள் குறித்தும் அவசியம் அறிந்திருக்க
வேண்டும்.தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து
கண்காணித்தல் அவசியமாகிறது..என்று நான் யோசித்து கொண்டிருந்த
நேரத்தில், “அக்கா, எம்பையனுக்கு எங்காவது வேலை தருவாங்கலானா
கேட்டுச் சொல்லுங்க்கா” என்று மறுபடியும் வசந்தி என்னிடமே கேட்டாள்.
நான் என்ன பதில் சொல்வது? படிக்கவே மாட்டேன் என்று நிற்கும்
குழந்தைகளை குழந்தை தொழிலாளர்கள் வரிசையில் சேர்ப்பதா? அல்லது
படிக்க விருப்பமில்லாத மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில்
ஏதாவது தொழில் கல்வியைக் கற்றுக் கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையை
மேம்படுத்திக் கொள்வார்களா?என்று யோசித்தபடியே வாடகையை
வாசூலிக்காமல் அவர்கள் வீட்டுப் பிரச்சினையை என் மண்டையில் ஏற்றிக்
கொண்டு வந்து என் வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டுக்கு வந்தும் அங்கே நடந்த சம்பவங்களை மனசு அசைபோட்டது.
போதை வஸ்துக்கும் அலைபேசிக்கு அடிமையாக மாறிக் கொண்டிருக்கும்
இந்த தலைமுறை தானே நாளைய தூண்கள்.இந்த தூண்களின் அஸ்திவாரம்
சரியாக இல்லாமல் போனால் எப்படி கூரையைத் தாங்கி நிற்கும்? என
யோசிக்கும் போது, நேற்று எதிர் வீட்டுப் பெண் சொல்லியது நினைவுக்கு
வந்தது. ‘அக்கா, காலையில் எழுந்து அவசர அவசரமாக வீட்டு வேலை
செய்யறப்ப தொந்தரவு செய்யறான். அதனால் அவருக்கு ஆபீஸ் கிளம்ப
நேரமாயிடுதுனு அவரு சத்தம் போடறார். சரி நீங்க பிள்ளையை பார்த்துகிட்ட
நான் வீட்டு வேலையை சீக்கிரம் முடிக்க முடியும். சொல்றதை காதில
போடறதேயில்ல.அவரும் செல்போனை எடுத்து வச்சுக் உட்கார்ந்துகிறார்.
என்னால் இவனை சமாளிக்க முடியல. அதனால், அவனுக்கு ஒரு பொம்மை
சேனலை போட்டு, போனைக் கையில் கொடுத்துட்டால், அவனும் போனை
பார்த்துட்டு அமைதியா உட்கார்ந்துக்கிறான். நானும் நிம்மதியா வீட்டு
வேலையை செஞ்சு முடிக்கிறேன்’ என்றாள். விவரம் அறியாத குழந்தைகள்
கையில் போனைக் கொடுப்பது பெற்றோர்கள் மீது தவறா? இல்லை இந்த
காலத்தில் செல்போன் ஆறாவது விரலாகிடுச்சு அது இல்லாமல் ஒன்றும்
செய்ய முடியாது என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டுமா? என்ற
கவலையில் நான் தோய்ந்து கொண்டே, தொலைக்காட்சியை ஆன் செய்த
பொழுது, செய்தி சேனலில் பணிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கில
பொதுத் தேர்வு எழுதுவதற்கு 12696 பேர் வரவில்லை என்ற செய்தியை
வாசித்துக் கொண்டு இருந்தார்கள். நான் எப்போதோ படித்த கற்கை நன்றே
கற்கை நன்றே பிச்சைப்புகினும் கற்கை நன்றே என்ற செய்யுள் வரிகள் என்
மனதில் ஓட ஆரம்பித்திருந்தது.
- யசோதா பழனிச்சாமி, ஈரோடு.

No comments:
Post a Comment