Thursday, February 1, 2024

நிலா பிள்ளையார் நான் - கோதை

 

மார்கழி மாசம் கடைசி நாள். கோயில்ல பூசைன்னு ஊருக்குப் போயிருந்தேன். சாமி கும்பிட்டு முடிச்சுட்டு, எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்ட்டுட்டு இருந்தோம். அப்ப அண்ணன்,
"தைப்பூசம் வருது. நிலாப்புள்ளைக்கு சோறு மாத்தலாமா? இப்பத்த புள்ளைங்க பசங்களுக்கு அப்படின்னா என்னன்னே தெரியல" அப்படின்னு சொன்னான்(ர்). 

'அப்டியா? சரி, செஞ்சுட்டாப் போச்சு' ன்னு சொன்னேன்.  பொறந்ததுலருந்து ஒரு அஞ்சு வருஷந்தான் கிராமத்து வாழ்க்க. அதுக்கப்புறம் நகரம். ஆனாலும், ஒட்டும் ஒறவும் கிராமம்தான். இத எதுக்கு சொல்றேன்னா, இந்த நிலாப்புள்ளையாருக்கு சோறு மாத்தறது பத்தி எனக்குத் தெரியாதுங்கறத தெரிவிக்கத்தான்.

சோறு உள்ள போகவும் சொகமா தூக்கம் வந்துருச்சு. ஊருக்குக் கெளம்பி வந்துட்டேன். பத்து நாளு கழிச்சு, வாட்ஸ்அப்ல, 

'This week நிலாச்சோறு project...... what plan?'

ஒரு மெஸேஜ் வந்துது. நானும் உடனே ஊருக்குக் கெளம்பிப் போயி, எங்க சித்திகிட்ட , 'சித்தி சித்தி, தைப்பூசம் வருது. நிலாப்புள்ளைக்கு சோறு மாத்தலாமா?'ன்னு கேட்டேன். சித்தி, 'அதெல்லாம் செஞ்சு முப்பது நாப்பது வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்பெல்லாம் ஆரு பண்றா?' ன்னு சொல்ல, நானு, நாம செய்யலான்னு சொல்ல, சித்தி பாட்டெல்லாம் மறந்து போச்சுங்க, இப்புடியே சொல்லாடிட்டிருந்தோம். 

இது வேலைக்காகாதுன்னு முடிவு பண்ணி, பக்கத்துல இருந்த அக்காவையும், பக்கத்து வூட்ல இருந்த தங்கச்சியையும் கூட்டு சேத்திக்கிட்டு, கும்மியடிச்சா பாட்டு நெனவுக்கு வந்துரும்னு சொல்லி, கூடிக் கும்மியடிக்க, பாட்டு, தேஞ்சு போன கிராமபோன் ரெக்கார்டாட்டம் ரெண்டு வரி வருது. நாலு வரிக்குத் தேஞ்சு போகுது. என்ன பண்ணலான்னு யோசிச்சா..... யோசிச்சா...... யூடியூப் ஞாபகம் வருது. அட்ரா சக்கைன்னானான்னுட்டு, இன்னைக்கு ராத்திரியே நிலாப்புள்ளைக்கு சோறு மாத்தலாம், வர முடியறவங்க வாங்கன்னு மெஸேஜ் போட்டுட்டு, கையோட உங்களுக்குப் புடிச்ச, விருப்பமிருந்தா,  நேரமிருந்தா ....இத்யாதி இத்யாதி வார்த்தைகளப் போட்டு சோறு கொண்டு வரலாம்னும் மெஸேஜியாச்சு. ( 'சாமி முக்கியமா? சோறு முக்கியமா?' ன்னு நீங்க கேக்கறது புரியுது. என்ன இருந்தாலும் பசிக்கும்ல)

3 மணிக்கு சொல்லி, 7 மணிக்கு மக்கள்லாம் ஆஜர். (தமிழா? ஹிந்தியா?ங்கறதத் தாண்டி விழா புனிதமானது)

கோயில் வளாகத்துல சாணிப் புள்ளையார , கோலத்துக்கு நடுவுல குந்த வச்சாச்சு. (சத்தியமா இது தமிழ் வார்த்ததாங்க. நம்புங்க) பழம், நாட்டுச்சக்கர வச்சு பூசையும் போட்டாச்சு. கும்மியடிக்கலாம் வாங்கன்னு கூப்ட்டு, வட்டமா நின்னும் ஆச்சு. பாட்டுப் பாடுங்க சித்தின்னா, என்ன பாட்டுப் பாடறதுன்னு கேக்கறாங்க. (மை மைண்ட் வாய்ஸ் : என்ன சின்னப் புள்ளத்தனமா‌ இருக்கு. அய்யோ அய்யோ)

பாட்டுப் பிரச்ன ஒரு பக்கம்னா, கும்மி அடிக்கறப்ப வலது பக்கத்துலருந்து எடது பக்கம் சுத்தறதா, இல்ல எடது பக்கத்துலருந்து வலது பக்கம் சுத்தறதான்னு பஞ்சாயத்து ஒரு பக்கம். பல்லு வெளக்கறப்ப சோத்தாங்கைப் பக்கத்துலருந்துதான ஒரட்டாங்கைப் பக்கம் வெளக்குவோம், கோயிலச் சுத்தனாலும் அப்படித்தான சுத்துவோம் அப்டின்னா அதுதாஞ் சரின்னு ஒரு க்ரூப்பு. 

அதெப்புடி? ஊடு வலிக்கும்போது (சரி.... சரி....  'ழி' தாஞ் சரி. ஒத்துக்கறேன். ஆனாப் பாருங்க இது பேச்சு வழக்கு.)
ஒரட்டாங்கைப் பக்கத்துலருந்துதான சோத்தாங்கைப் பக்கம் வலிக்கறோம், கெடிகாரம் முள்ளு அப்படித்தான சுத்துது. அப்டின்னா அதுதாஞ் செரின்னு இன்னொரு க்ரூப்பு. (கொசுத்தொல்ல தாங்க முடிலடா சாமி)

ஒரு தடவ இப்டிக்கா இன்னோரு தடவ அப்டிக்கான்னு முடிவு பண்ணி, சுத்த ஆரம்பிச்சா, கும்மியடிக்கறதுக்கு, கைய மொதல்ல உள்ள தட்றதா? இல்ல வெளிய தட்றதா?, ஒரு தட்டா? இல்ல  ரெண்டு தட்டா?, உள்ளங்கை ரெண்டும் ஒண்ணு சேர தட்டறதா? இல்ல குறுக்க வெச்சுத் தட்டறதா? அப்டின்னு ஒரு ஊராட்சி ( பஞ்சாயத்து பிற மொழிச் சொல்லாமாங். அதான். ஹிஹிஹி).

அதுக்கும் ஒரு தீர்வு கண்டுபுடுச்சு, சுத்த ஆரம்பிச்சாஆஆ..... 

'நிறுத்துங்க நிறுத்துங்க'ன்னு ஒரு.... இல்லல்ல..... ரெண்டு மூணு குரலு. மறுபடியுமா?.... வேணாம்... அழுதுருவேன் மொமெண்ட். 

சேதி என்னன்னா, வேக வேகமா சுத்தக் கூடாதாம். மெதுவா சுத்தணுமாம். அடச்சே....

'சொல்லிட்டாருய்யா கவர்னர்ர்ர்ரு' ன்னுட்டு  சுத்த ஆரம்பிச்சா, ஒரு அவர்ல (பத்து வருஷ காலம் சென்னை வாசம். காத்தடிக்கும்ல.) கெடிகார முள்ளு ரெண்டும் பத்துக்குப் பக்கத்துல நின்னுக்கிட்டு பரிகாசஞ் செய்யுது. 'இது அன்னத்துல கை வைக்கிற நேரம். யார் கன்னத்திலயும் கை வைக்க மாட்டேன்'னு வடிவேலு டயலாக்க சத்தமா சொல்லிட்டு,

"ஊரான் ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டாராம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி
கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்" னு

நாலு சுத்து, ரெண்டு தட்டுன்னு தட்டிட்டு, கொண்டு போன சோத்தத் தின்னுட்டு,

'அவரவர் ஊட்டுக்கு
அவரக்கா சோத்துக்கு' ன்னு பாடிக்கிட்டே போய்ச் சேந்துட்டோம்.

நாளைக்கு என்ன பாட்டுப் பாடறதுங்கற யோசனைல
ராத்திரி முழுசும் தூக்கமே வருல.

மக்கா நாளு, பச்ச மாத்தறது. ( நெறமில்லைங்கோ. பச்சரிசி மாவு இடிச்சு, வெல்லப் பாகு வெச்சு உருண்ட புடிக்கறது) மொத நாளு நாங்க ( வெறும் பதனஞ்சு பேரு) போட்ட ஆட்டத்துல ஊரு அதுந்து போய்,  மக்கா நாளு பொண்டு பொடுசெல்லாம் கோயிலுக்கு வந்துட்டாங்க. 

அன்னைக்கு போட்டம் பாருங்க ஆட்டம் எல்லாரும். பாரதியார் பாடன மாதிரி 'தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்' னு. செம்ம்ம்ம ( இந்த வார்த்தையக் கண்டு புடிச்சவங்களுக்கு ஒரு 'ஓஹோ'). அதுக்குக் காரணம் கீழ இருக்குற ரெண்டு பாட்டுந்தாங்க.

கும்மிப் பாட்டு - 1
-------------------------------

செவப்புக்கல்லு செவப்புக்கல்லு 
மூக்குத்தியாம்

செகம் சுத்தப் போறவளே நீ பெறுவியாம்

ஏலே ஏலே மல மேலே 
அந்த ஆத்தா பார்வையும் நம் மேலே

பச்சக்கல்லு பச்சக்கல்லு மூக்குத்தியாம்

பார் சுத்தப் போறவளே நீ பெறுவியாம்

ஏலே ஏலே மல மேலே
அந்த ஆத்தா அருளும் நம் மேலே

நீலக்கல்லு நீலக்கல்லு மூக்குத்தியாம்

ஞாலம் சுத்தப் போறவளே நீ பெறுவியாம்

ஏலே ஏலே மல மேலே
அந்த ஆத்தா ஆசியும் நம் மேலே

வெள்ளக்கல்லு வெள்ளக்கல்லு மூக்குத்தியாம்
வையம் சுத்தப் போறவளே நீ பெறுவியாம்

ஏலே ஏலே மல மேலே
அந்த ஆத்தா கனிவும் நம் மேலே

ஊதாக்கல்லு ஊதாக்கல்லு மூக்குத்தியாம்
உலகம் சுத்தப் போறவளே நீ பெறுவியாம்

ஏலே ஏலே மல மேலே
அந்த ஆத்தா கருணையும் நம் மேலே.....


கும்மிப் பாட்டு - 2
-------------------------------

புள்ளையார் புள்ளையார் 
-----------------------------------------------

புள்ளையார் புள்ளையார்
எங்கிருப்பார் புள்ளையார்

பாவடி மைதானத்தில்
காத்திருப்பார் புள்ளையார்

புள்ளையார் ஊட்டுக்கு
கூர போட்டு வெக்கோணும்

பனையோல போட்டாலும் 
பத்தாதும்பார் புள்ளையார்

தென்னங்கீத்து மேஞ்சாலும் 
கூடாதும்பார் புள்ளையார்

கையோடு வேஞ்சாலும்
தாளாதும்பார் புள்ளையார்

சீமையோடு போட்டாலும்
சுடுதும்பார் புள்ளையார்

கற்கோயில் கட்டச்சொல்லி கேக்கறாரு புள்ளையார்

கட்டிவெச்ச கோயிலுல
காத்திருக்கார் புள்ளையார்

மல்லிப்பூ கொண்டு வந்து
மால கட்டிப் போடுவோம்

அருகம்புல் எடுத்து வந்து
அலங்காரம் செஞ்சுருவோம்

புள்ளையார் புள்ளையார்
எங்கிருப்பார் புள்ளையார்

அத்தி மரத்தடியில்
அசந்திருப்பார் புள்ளையார்

அங்கேயும் காணலியே
எங்கேயும் காணலியே

புள்ளையார் புள்ளையார்
எங்கிருப்பார் புள்ளையார்

ஆலமரக் கெளையினிலே
ஆடிடுவார் புள்ளையார்

அங்கேயும் காணலியே
எங்கேயும் காணலியே

புள்ளையார் புள்ளையார்
எங்கிருப்பார் புள்ளையார்

பொட்டுச்சாமி கோயிலிலே
பொட்டாட்டம் அமர்ந்திருப்பார்

அங்கேயும் காணலியே
எங்கேயும் காணலியே

புள்ளையார் புள்ளையார்
எங்கிருப்பார் புள்ளையார்

தாயப்போல பொண்ணு தேடி
ஊருக்குள்ள போயிருப்பார்

அங்கேயும் காணலியே
எங்கேயும் காணலியே

புள்ளையார் புள்ளையார்
எங்கிருப்பார் புள்ளையார்

எட்டி வந்து பாருங்க
வட்டத்துல புள்ளையார்

புடிச்சு வெச்ச சாணத்தில
சிரிச்சபடி புள்ளையார்

புள்ளையார் புள்ளையார்
இங்கிருக்கார் புள்ளையார்

வெள்ளெருக்கு மால சாத்தி கும்புடுவோம் புள்ளையார்

நம்மோட மனசுக்குள்ள
நெறஞ்சிருக்கார் புள்ளையார் ......


பாட்டு ரெண்டும் நல்லாருக்குல்ல?


 'மாப்ள அவுருதான். ஆனா, போட்ருக்கற துணி என்னுது' ங்கற மாதிரி, இந்த ரெண்டு பாட்டும் நாந்தாங்க எழுதனேன். பெரியவங்க பாடனதுல இருந்து ஒண்ணு ரெண்டு..... செரி, மூணு நாலு வார்த்தைங்கள மட்டும் சுட்டுக் கிட்டேன். ( எல்லாக் கலையும் சொல்லிக் குடுத்து வர்றதுதானங்க).

அடி தூள்னு அடிச்சுக் களச்சுப் போய் உக்காந்தா, 'சோதிக்காதீங்க என்னைய'ன்னு சோத்துக் குண்டால்லாம் சோகத்துல சொணங்குது. 

தக்காளிச்சோறு, எலுமிச்சம்பழச் சோறு, புளிச்சோறு, தயிர்ச்சோறு, கோதுமரவ உப்புமா, குஸ்கா, உருள மசாலா, பருப்பு வடன்னு வரிச கட்டி நின்னு, 'வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்' அப்டின்னு வசனமெல்லாம் பேச ஆரம்பிச்சப்பறம்,  'லொஜக் மொஜக் பஜக்' தான். குண்டாஸ் காலி. ( சாமிக்கு வெறும் பச்ச மாவு.)

'உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு' ன்னு டயலாக் பேசிக்கிட்டே, ஊட்டுக்கு உடு ஜூட்தான்.

அடுத்த நாளு ரசஞ்சோறு. மொத நாளு
சாமி பச்சமாவாத் தின்னு தின்னு வயிறு உப்பசமாப் போச்சாமா. அதனால, சீரகம், வெள்ளாங்காப் பூண்டு, பெருங்காயம்லாம் போட்டு ரசம் வெச்சுப் படைச்சா, சாமிக்கு வயிறு செரியாயிருமாமா. யார் சொன்னாங்கன்னெல்லாம் கேக்கக் கூடாது. ஏன்னா, நான் கேக்குல. 

மறுபடியும் பஞ்சாயத்து, ஊராட்சி எல்லாம் முடிச்சு, ஆடி முடிக்கற ஓரத்துல, பொடுசுங்கல்லாம் நாங்க ஒரு பாட்டுப் பாடறோம்னு சொல்ல, சரி பாடுங்கன்னா, பாடனாங்க பாருங்க ஒரு பாட்டு. ஜெனரேஷன் ஆல்ஃபா, Z Y X ன்னு என்னென்னமோ சொல்றாங்க. அதையெல்லாந் தாண்டி, அவங்க சிறப்பாத்தான் சிந்திக்கறாங்க. அவங்க பாடன பாட்டு:

"மணப்பாற மாடுகட்டி
மாயவரம் ஏருபூட்டி
வயக்காட்ட உழுதுபோடு
செல்லக்கண்ணு"

அரும அரும. ஆடிப் பாடி முடிச்சுட்டு சாமியக் கொண்டு போய், கோயில்ல வெக்கறதா, தண்ணீல உடறதாங்கறதுக்கு ஒரு பெரிய பேச்சுவார்த்தைய நடத்தி, கடைசில கோயில்ல வெக்கறதுன்னு முடிவாச்சு. சாமிய எடுத்துட்டுப் போகும் போது, 'உக்கே உக்கே' ன்னு சொல்லிட்டே போகணுமாமா. ஏன்னு கேக்கக் கூடாது. நான் கேட்டேன். தெரிலன்னுட்டாங்க. (பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது மொமெண்ட்.)




இந்த நிகழ்ச்சியோட உச்சக்கட்ட மகிழ்ச்சி, கடைசிக் கும்மியடிக்கு பொடுசுங்க பாடன, 

"உருளக் கிழங்கு செல்லக்குட்டி
எங்க போச்சு
கத்தரிக்காய் கூடையில
தூங்கப் போச்சு
கத்தரிக்காய் எட்டி உதைக்க
அழுதிருச்சு
அம்மா வந்து கொஞ்சினதும்
சிரிச்சிருச்சு....ஹஹ்ஹஹ்ஹா......"

இதுலதாங்க இருந்துச்சு. ரொம்ப ரொம்ப நெறவா, மகிழ்ச்சியா இருந்துச்சு. கன்னி முயற்சி. 'ஆத்தா நான் பாஸாயிட்டேன்'னு ஸ்ரீதேவி மாதிரியே  கத்திக்கிட்டோம். அடுத்த வருஷத்துக் களிப்புக்குக் காத்திருக்கறோம்.


No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...