Thursday, June 1, 2023

புகைப்படம் பாருங்கள், வசனம் எழுதுங்கள்! (Meme Creators)

 


அன்புமணி

மருதாயீ, எப்பவும் இப்படி அமைதியா இருக்காதே..இந்த வாட்டி மகள் லீவுக்கு வந்தால் ...முடியாது நான் டூர் போகணும்னு சொல்லு..சரியா..

 ஈரோடு கதிர்

 

ஷான் கருப்பசாமி

"ஜெனரேட்டிவ் ஏஐன்னு ஒண்ணு வந்திருக்காம். என்ன கேட்டாலும் பதில் சொல்லுதாம். எம் மருமவ மொனமொனன்னு பேசிட்டு என்ன திட்டம் போடறான்னு கேட்டு சொல்றயா?"

ஞானஜோதி

காலங்கெட்டு கெடக்குது.பொட்டாட்ட போய் சேந்துட்டா தேவுல.

காதர்

ஏ..ன் இன்னும் வீடு பூசாம கிடக்கு.
ம்ம்.. ஒட்டடை  அடுச்சலே வீடு இடுஞ்சு விழுந்துருமோனு பயம இருக்கு . அதான்

ஜெயலலிதா

1. இப்பென்னமோ வாட்ஸ் அப்பு , பேஸ்புக்குனு சொல்லி பெரும பீத்திக்கறாங்கோ. நாமெல்லாம் அப்பவே வாட்ஸ்அப்பா, பேசுபுக்கா  வாழ்ந்திருக்கோம்னு தெரியாம..

2. நானும் சொந்தமா ஏதாச்சும்  எழுதலாம்னு ரோசன செஞ்சு செஞ்சு பாக்கற ,கெரவத்த ஒன்னுமே நெனப்பு வரமாட்டீங்கு..

க்ருஷ்

"நம்ம பேசறத போட்டோ எடுக்கறான் பாரு எடுபட்ட பய.. தெரியாத மாதிரி போஸ் கொடுப்போம்"

மூர்த்தி

"ஏயா இன்னைக்கு குட்டை வேலைக்கு போகலையா"

"இன்னைக்கு அனாதைப் பணம் கொண்டு வறனு சொன்னாங்கொ..அதே இருந்துட்ட..நீ ஏம் போகுல?"

"காத்தாலே குட்டைக்கு போற அந்த குந்தாணி 'ஏ இன்னேரங் கழிச்சு வர்றீங்க பேர் எல்லா எழுதி முடிச்சாச்சு நாளைக்கு வாங்க'னு சொல்லிட்டா..நாளைக்கி எவளாச்சி லேட்டா வருட்டு பேசிக்கறேன்"

இளங்கோ குமாரசாமி

ஏ  பாவாயி...
நாம செய்யாத வேலையா...
பாக்காத பிரச்சனையா..
எதா இருந்தாலு இப்படி ரெண்டு பேரோட செத்த நேரம் மனசுட்டு பேசுனா செரியா போவுது...
இப்ப  என்னமோ டிப்ரசனு ங்கறாங்க.. உனக்கு தெரியுமா..

மலர் செல்வம்

"எம்பட ஊட்டுக்காரன்  டாஸ்மாக்ல  குடியா குடிச்சு  நேத்து போய்ட்டான் . பக்கத்து வீதில  கள்ளச் சாராயம் இருந்திருக்கு.  அந்தப் படுபாவிக்கு தெரிலயே "

கார்த்திக்

ரேஷன் அரிசில ரப்புரு அரிசி கலப்படம் பண்றாங்களாம்மா கந்தாயீ  … அதுல சோத்த ஆக்கி உருண்ட புடிச்சி கீழ அடுச்சா எகுறீட்டு வருதாமா … 

கெரகத்த என்னத்த திண்ணு என்னத்த வாழறது போடி வீராயீ

முத்தரசு

நேத்திக்கி ஏன் வேலைக்கு வரல?

எலக்சன் முடியற வர நான் வரமாட்டேன்.
மூணு வேல சாப்பாடு, அதுல மத்தியானம் பிரியாணி. அதோட கையில சொலையா இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டு வேற..

அப்படி போடு, நாளைக்கு போகும் போது இப்படியே வா..

மதியழகன்

எம்பட ஊட்டுக்காரன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னன் என்னதா பையன் புள்ளைன்னாலும் நம்ப கைல கொஞ்சம் புடிமானம் வேணும்னு அவுக அத கேக்கல இப்ப நா அலையறன்

வேனில்ராஜ்

கோபிய தினம் ஒரு திருக்குறள் அணியில் இருந்து மாற்றங்களாம்  , நேத்து ஆட்சி குழு மீட்டிங்கில் பேசிக்கிட்டாங்க .....
சொன்னா கேளு அவரவிட்ட இந்த வாசல்ல குறள் பதிவு செய்ய வைக்க ஆளே இல்ல , தப்பு பண்ற கோபாலு !!

கோபி

1. ( அச்சச்சோ இப்ப நான் யாருகிட்ட போயி சொல்லுவேன்....

சரி‌ நம்ம பாட்டீககிட்டயே ரெக்கமண்டு பண்ண சொல்லலாம் ).

 நான் எந்த தப்பும் பண்ணலைங்க பாட்டி.... பெரியவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ஆட்சிக்குழுவுல சொல்லி என்னை அந்த வேலையிலருந்து தூக்காம இருக்கறதுக்கு ரெக்கமண்டு பண்ணுங்க பாட்டிகளா........

2. அட என்ன ராக்காயி இந்தப் பய்யன் ஏதோ ரெக்கை, மண்டுன்னு என்னென்னவோ வாய்க்கு வந்ததை உளறீட்டு இருக்கான் ....
கையை தூக்கி கும்பிடு எல்லாம் போட்டுட்டு நிக்குறான்.... 

நமக்கு வேற ஒரு கெரகமும் புரியலை... சரி எதுக்கும் பாத்துக்கலாம் பாத்துக்கலாம் போன்னு சொல்லி வப்போம்... பாவம் நிம்மதியாவது போகுட்டும் அவன்....

சண்முக வடிவு

இதப்பாரு... நாம ரெண்டு பேரும் சண்ட போட்டுட்டு இருந்ததப் பாத்துட்டு, பக்கத்தூட்டுப் பார்வதி எளக்காரமாச் சிரிச்சுக்கிட்டுப் போறா. அவ ஊருக்கே தம்பட்டம் போட்டு எல்லாரையும் கூட்டியாந்துருவா.   எல்லாரும் வந்து வேடிக்க பாத்தா மானம் போயிரும். பொட்டாட்ட சிரிச்சாப்ல மூஞ்சிய வச்சுக்கிட்டு உக்காந்துக்குவோம். செரியா?

கௌசல்யா

என்ன ஆனாலூ இந்தக் கொத்து சாவி என்ற கைய உட்டு போக உடமாட்டேன்....

மகேஷ்வரி மதன்

யக்கா... பேராண்டி சில்லுனு ஒரு குச்சைசு வாங்கியாந்தான்... ருசிச்சு கிடந்துச்சு போ...

யசோதா பழனிச்சாமி

"ஆமா முனிமா இந்த வீடே முள்ளு மூடி எலந்தமரம் மொளச்சு போச்சு..பட்டணத்துக்கு பொழைக்கப் போனவங்க திரும்பி வருவாங்களா?

"அட நீ வேற ராமாயிக்கா இங்கேயும் செண்ட் பத்து லட்சம் போவும் செய்தி  போனா, காக்கா கூட்டமாட்டம்   சொத்து பங்குக்கு வருவாங்க பாரு.

ஆனந்தி ஆரூரன்

நீ சொல்லு செல்லாயி...அம்பது வருஷம் முன்னாடி இப்படியா அனல் காத்து வீசிச்சு.... ஈரோட்ல நேத்து 103 டிகிரி வெயிலாம்... அமைச்சர் சொல்ராரு குழந்தைகளும் நம்மல மாதிரி பெருசுகளும் வெய்யில்ல போவேணம்னு... நீர்ச்சத்து குறையாம பாத்துக்கனுமாம். என்னத்த சொல்லி என்ன செய்ய...
அதச்செய்றேன் இதச்செய்றேன்னு அம்புட்டு மரத்தயும் வெட்டி காங்கிரீட் காடாக்கினா, இப்படி இல்லாம வேறெப்படி இருக்குமாம்??

ப்ரதீபா


ராதா மனோகரன்

பொன்னாயக்கா தே இன்னார்த்திக்கு வாசல்ல உக்கோந்து வாச்சிமேன் வேல பாக்கிறியா?  

நேத்து என்ற மருமவ என்னமோ வாசலுக்குப் போனேன்னு சொல்லிக்கிட்டு ராத்திரி ஒம்போது மணிக்குத்தே ஆடீட்டு  ஊட்டுக்குள்ள வந்தா... அதே இன்னக்கி நானே வாசல்ல வந்து உக்காந்துக்கிட்ட பொழுது போனதுக்கப்பறமா   அப்புடி என்னதா  பண்றான்னு பாக்கலாம்ன்னு.....    

உன்ற மருமவளுமா?

மது கார்த்திக்

என்மாமியாரும்...உங்க மாமியாருமா??

ஶ்ரீ வீணா

ஒடம்புல தெம்பு இருக்க வரைக்கும் எந்த பையனூட்டுக்கும் போமாட்டேன். வேணா,அவங்க வரட்டும்.கடைசில  அத அப்பறம் பாத்துக்கலாம்.

சக்திவேல் விரு

பா 1 : வாசல்லாம் வாசலு ,அவ வாசல்லாம் இங்க உக்கார கூடாது பேசக்கூடாதுங்கறா  அந்த வேவரசி மவ 
பா 2 : இந்தூட்ட கட்ட அவகப்பனூட்டுல இருந்து கொண்டுவந்து நொட்டுனாளாம் உன் மறுமவ
பா 1 :என்புருசன் கட்டுன ஊட்டுல அவளுக்கு வந்த யவத்தாலத்த பாருங்கறே .
அந்த கிழவன்  போயி சேர்ந்ததுக்கப்பறம் உட்காந்து பேசக்கூட நா நாதியத்து போனேனே....

கோடீஸ்வரன்

இந்த அவச்சொல்லுக்கு ஆளாகிட கூடாதுன்னு தான் வாசலுக்கு வராமருந்தேன். என் பேருக்கு களங்கம் கற்பிக்கனும்னு ஒரு 12 பேர் கொண்ட குழு செயல்படுது. அதுல சிலர் மாமியார் கிட்ட திட்டுலாம் வாங்கிட்டு ஓவர்டைம் பாக்கறாங்க

பவானி 2 நொய்யல்  வழி  காலிங்கராயன் - 1 ......க்ருஷ்

 



பழனி முருகனுக்கான நடை பயணம், திருப்பதி ஏழுமலையானுக்கான நடை பயணம், வெள்ளியங்கிரி ஈசனுக்கான மலை ஏற்றம், சபரிமலை ஐயப்பனுக்கான மலை ஏறுதல் எனும் ஆன்மீக பயணங்கள் ஆகட்டும்,  இமயமலையின் சிகரத்தை நோக்கிய மலை ஏற்றம், அமைதிக்கான நடை பயணம்,  ஆல்ப்ஸ் முதல் அமேசான் வரை  வெளிநாடுகளிலும் மலையை நோக்கிய எத்தனையோ நடை பயணங்கள், மலை ஏற்றம்ங்கள் கேள்விப்பட்டு உள்ளோம்.  இன்று காஷ்மீர்  முதல் கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்யும் மக்களும் உள்ளார்கள். உலகம் முழுக்க கார் அல்லது பைக்கில் வலம் வருவோரும் உண்டு. கோவையில் இருந்து லண்டன் வரை பல நாடுகளின் வழியே தரை வழியே காரில் அடைந்த பெண்களையும் நாம் அறிவோம்.   

இதுபோல நடை பயணம் தொடங்கி விமானம் வரை பயணங்களை எப்போதும் மனிதர்கள் விரும்பிக்கொண்டே தான் உள்ளார்கள்.  அவரவர்க்கு கிடைத்த வாகனங்களில் அவர்வர் உலகை பயணம் செய்யும் மக்கள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் உள்ளார்கள்.  

இது காலிங்கராயன் கால்வாயில் செய்த பயணம் பற்றியது.  பைக்கில் வேறு யாரேனும் கால்வாயில் பயணித்து உள்ளார்களா என என்னளவில் தெரியவில்லை. இருக்கலாம்.  இதே  கால்வாயில் முன்னோர்கள் அந்த அந்த காலகட்டத்தில் இருந்தவாகனங்களை வைத்து பயணித்து இருக்கலாம். ஆங்கிலேயர்கள் இதே கால்வாயில் பயணித்து இந்த வாய்க்காலின் நிறை குறைகளை அலசி உள்ளார்கள். அவர்கள் குதிரைகளில் பயணித்து இருக்கலாம். 

காலிங்கராயன், எத்தனையோ இடங்களில் குறுக்கும், நெடுக்குமாக  சாலைகளின் வழி பாலத்தின் மீதேறி காலிங்கராயன் கடந்து வந்துள்ளேன்.  சாவடிப்பாளையம் அருகே பஞ்சலிங்கபுரத்தில் அதில் குதித்து  விளையாடியதாகட்டும்,  அதன் கரை வழியே மிதிவண்டிகளில், இரு சக்கர வாகனத்தில் சென்றதாகட்டும், அதில் விளைந்த மஞ்சள், நெல், வாழை என காளிங்கராயன் எனது ஊர்  வாழ்க்கை முழுவதும் விரவிக் கிடக்கிறார்.  ஆனால் அதன் வரலாறைப் பற்றி இதுவரை அறிந்து கொண்டது இல்லை.  அது எங்கு ஆரம்பிக்கும் எங்கு முடியும் என யோசித்தது இல்லை.   

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பவானி நகரை அடைய, லட்சுமி நகர் பைபாஸில் இருந்து காலிங்கராயன் பாளையம்  வழியாக பவானி வரும் வழி.   பவானி ஆற்றை கடக்கும் முன் 50 அடி இடைவெளியில் காலிங்கராயன் கால்வாய் கடந்து செல்லும்.  வேறு எதையோ யோசித்துக் கொண்டு பல முறை கடந்து இருப்போம்.   காலிங்கராயன் ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டரில் ஈரோடு-பவானி சாலை.   அந்த இடத்தில் இருந்து பார்வையில் படும் கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயத்தை பார்த்துக்கொண்டே காலிங்கராயன் வாய்க்காலை கடந்திருப்போம்.  ஆனால் அங்கு ததும்பத் ததும்ப ஓடுகின்ற காலிங்கராயன் வாய்க்கால் எந்த இடத்தில் நொய்யல் ஆற்றோடு சென்று சேர்க்கிறது என யோசித்தது  உண்டா?   

காலிங்கராயன் கால்வாய் பற்றி ஒரு சிறு குறிப்பு. கிட்டத்தட்ட 740 வருடங்கள் ஒரு பேரதிசயமாக, ஆச்சர்யமூட்டும் ஒன்றாக அப்போதைய கொங்கு மண்டலத்தில் தற்போதைய ஈரோடு மாவட்டத்தில் ஓடிக்கொண்டு உள்ளது.  காளிங்கராயன் தொடங்கி, முடியும் இடம் நேர் வழியாக சென்றால் 36 மைல்கள் மட்டுமே. அதனை வளைத்து நெளித்து 58.2(90.5 கிமீ) மைல், காவிரிக்கு இணையாக கொண்டு சென்று உள்ளார்.  

காலிங்கராயன் கால்வாய் என்பது மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று. காலிங்கராயன் அவர்கள் கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் படையில் தளபதியாக, அமைச்சரவையில் முதன்மை அமைச்சராக  இருந்தது வரலாறு.   

காலிங்கராயர் - Time Line 

  • 1240 - காலிங்கராயர் பிறந்த வருடம்
  • 1260 - கொங்கு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், இரண்டாம் சடையவர்மன்
  • வீரபாண்டியன் படையில் சேர்ந்தார்
  • 1271 - காலிங்கராயன் தடுப்பணை பணிகள்  ஆரம்பம்
  • 1283 - தை மாதம் 5-ந் தேதி காலிங்கராயன் தடுப்பணை திறப்பு

பயணத்துக்கு வருவோம்.  இதற்கான விதை எங்கு எப்படி போடப்பட்டது எனதெரியவில்லை.   அண்ணன் ஈரோடு கதிர் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுதில் தான் இது பற்றி யோசனை முளைத்திருக்க வேண்டும்.   அவர் எப்பொழுதும் காலிங்கராயனைப் பற்றி வியந்து கொண்டே இருப்பார்.  கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காலிங்கராயன் ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை, கரையில்  சென்று பார்க்க வேண்டும் என்று இருவருக்குமே ஆவல்.  ஆனால் ஒரு சில முறைகள் திட்டமிட்டும் பயணப்பட முடியவில்லை.   

அந்த சுபயோக சுப தினம் 11 செப்டம்பர் 2021 சனிக்கிழமை வாய்த்தது.  கோவிட் இரண்டாம் அலை வெகுவாக குறைந்து, கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்திக்கொண்டு இருந்த நேரம்.  அந்த வாரத்தின் ஆரம்பத்தில்,  அந்த சனிக்கிழமை போகலாமா என சும்மா பேசியிருந்தோம்.  முந்தைய நாள் வெள்ளி இரவு வரை நிச்சயமாகத் தெரியவில்லை. அதைப்பற்றி பேசவும் இல்லை. எதுவும் திட்டமிடவும் இல்லை.   வெள்ளி இரவு 9.30 க்கு மணிக்கு அடுத்த நாள் காலை நிச்சயமாக கிளம்பலாம் என முடிவெடுத்தோம்.  வெயில் காரணமாக சற்று சீக்கிரமாக கிளம்ப முடிவு செய்திருந்தோம்.  ஆறு மணிக்கு கிளம்பலாம் என முடிவெடுக்கிறோம்.   ஆனால் ...


..........தொடரும்............

















பெண்மை போற்றுதும் ....கோதை

 



"பூக்களிலே நானுமொரு பூவாகப் பிறப்பெடுத்தேன்" -  மேத்தாவைத் துணைக்கழைத்து , துயில் கலைக்கிறாள் ஒருத்தி.

"ஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா" -  கண்ணதாசன் வரிகள் கொண்டு கவனம் ஈர்க்கிறாள் இன்னொருத்தி.

"எழுதுகிறேன் ஒரு கடிதம்" -   வெண்ணிலா காந்தியின் சொற்களில் கண்ணீரால் நனைக்கிறாள் மற்றொருத்தி. 

"சந்திப் பிழை போன்ற சந்ததிப் பிழை நாங்கள்" -  நா காமராசரின் கவிதையில் மனம் கரைக்கிறாள் இன்னுமொருத்தி.

நாபிக் கொடி நறுக்கப்பட்டு, மார் சேர்ந்த கணமிருந்தே, மையிட்டுப் பொட்டிட்டு, வண்ணம் குலையாமல், வடிவம் தடிக்காமல் வளர்க்கப்பட்டு, " எங்கள் குலம் மங்காமல் எதிர் குலத்தார் ஏசாமல்" என்று தால் ஆட்டி, வீசி ஆட்டும் தூளிக் கயிற்றில் இறுக்கப்பட்ட கனவுகள் தளர்த்தப்படாமலே வளர்க்கப்படுகிறாள். மலரினும் மெல்லியள், குளிர் நிலவு, கோடை தென்றல் போன்ற உவமைகளாலும் உவமேயங்களாலும் கிறங்கடிக்கப்படுகிறாள். இந்த விதமான ஒப்புமைகள் வெற்றுத் தாள்களை நிரப்புவதற்காக கையாளப்பட்ட ஆயுதங்கள் என்பதை உணர அவள் முற்படவேயில்லை. எந்தவொரு ஒப்புமைகளும் கவிதாயினிகளால் கையாளப்படவில்லை என்பது வெள்ளிடை மலை ரகசியம்.

தந்தையின் தாயாகப் பார்க்கப்பட்டு, பாலும் தெளிதேனும், பாகும் பருப்புமாக ஊட்டி ஊட்டி வளர்க்க, சிறுமி செல்வியாகிறாள். பதின்மங்களின் தொடக்கத்தில், எதிர்பார்ப்பின் வாசலாகிறாள். இருபதுகளின் இறுதியில், அவளைத் தூக்கிச் செல்ல குதிரையில் வராத ராஜகுமாரனால் முதிர்ந்தவள் என்று முத்திரை குத்தப்படுகிறாள்.

கல்லின் அடியில் அகப்பட்ட புல்லாக, தொட்டாற் சுருங்கியாகவே வாழ்வைத் தொடரப் பழக்கப்படுகிறாள்.

தேங்கி நிற்கும் கனவுகளில் ஏங்கி நிற்கும் நிலையளித்த ராஜகுமாரன்களுக்கு, இரு மனம் ஒருமித்து "கலத்தலே" திருமணம் என்பதையும் மற்ற எவையாயினும் இழத்தலே என்பதையும் யார் சாற்றுவது?....

அன்னப் பட்சி, ஆவாரம்பூ, இருவாச்சி, ஈச்சம்பழம் என்று தாலாட்டி சீராட்டி வளர்க்கப்பட்டு, தகுந்ததோர் நேரம் பார்த்து, இணையின் கரங்களில் பிணைக்கப்பட்டு, துணை சேர்க்கப்படுகிறாள். " முதல்" என்பது எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரியதுதானே..‌‌.. திளைத்திருந்த பொழுதுகள், அவளுள் எதையும் விதைத்திருக்கவில்லை. 

வெட்கச் சிரிப்பில் விரிந்திருக்கும் பூக்களை, வீசும் புயல் காற்று புரட்டிப் போட, காய்ப்பதே இல்லையே.... எங்கிருந்து கனியாக?.... 

மலர்கின்ற பூக்கள் அனைத்தையும் வாசனைத் திரவியத்திற்குப் பயன்படுத்த முடிவதில்லை என்பதற்காக கூந்தலில் சூடாமலா இருக்கிறோம்?

உருண்டோடும் காலங்கள்  இருண்மையை வழங்கிவிட்டு வெளிச்சத்தை வேரறுக்கின்றன. 

"தாலிக்குப் பொன்னெடுத்த தட்டானும் தான் குருடோ" என்று வார்த்தைகளில் விளையாடி, போர்க்கால நடவடிக்கைகளாய் பெண்ணின் அடையாளங்களை அடையாளமே இல்லாமல் அழித்துவிட்டு, "ஐம்பொறி ஆட்சி கொள்" என தனித்து விடப்படும் அவளின் 'மனம்' அத்தனைக்கும் ஆசைப்பட, நடுவில் வந்து சேர்ந்த துணைக் காலால் துவண்டு போகிறது. அங்கே வழிந்தோடும் அவளின் ரணங்கள் கதறுவதைக் கேட்பதற்கு செவிகளில்லை.

அவள் இழந்தது எதுவாக இருந்தாலும் அது அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. சுற்றும் அவளின் விழிச்சுடர்களில் திரிகள் உள் இழுக்கப்படுகின்றன. நிரம்பி வழியும் அவளின் அறிவொளிக்கு அணை கட்டப்படுகிறது.

வண்ணங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை?....

வடிவாய் உருவாகி, நிறங்களால் நெய்யப்பட்ட அவளின் எல்லாவற்றிலும் வெண்மை சாயம் விருப்பமின்றி ஏற்றப்படுகிறது.

உடல் நிறைந்த அணுக்களும் அணுக்கமாக இல்லாத அவளின் பொழுதுகள் முறுக்கியபடியே முனகிக் கிடக்கின்றன. வெப்பம் தணிக்கும் விருந்தாகப் பார்க்கப்படும் பெண்மைக்குள்ளும் 'பசி' என்ற உணர்வு விரவிக் கிடக்கும் என்பதே ஏற்றுக் கொள்ள இயலா விடயமாகிப் போகிறது.

உள் மருகும் விஷயங்களைக் கக்கி விடாதபடி அவளின் கண்டங்கள் இறுக்கப்படுகின்றன. மூச்சுத் திணறி, விழி பிதுங்கி நிற்கும் அவளின் உடல் கீறிப் பிடித்தால், கொப்பளிக்கும் குருதி, உங்களுக்கும் எனக்கும் சூடாகவும்,  அவளுக்கு சில்லிட்டுமா கொட்டும்?

அவளுள்ளும், " தூதூவள எலை அரைச்சு தொண்டையிலதான் நனைச்சு மாமன் கூடப் பேச வேணும் நாள் கணக்கா" என்ற நிறைவேறாத ஆசை அவன் உயிர் நழுவிப் போன கணத்திலிருந்து கனன்று கொண்டேதான்....

மலருக்கு ஒப்புமை கூறி, மனதினைப் போர்த்தி வைத்து, சொல் என்ற முள் கொண்டு கொய்யப்படுகிறது அவள் முன் நின்று நடத்தும் சுபகாரியங்களில் அவளின் சிறுநகை....

அந்த இளநகை, சிறுநகை,  புன்னகை, குறுநகைகளையாவது அவளின் அணிகலன்களாய் அணியக் கொடுங்கள்.

உதிராத சிறகுகளோடு பறக்காதிருக்கப் பிரயத்தனப்படுகிறாள். நனைந்த அவளின் சிறகுகளில் கண்ணீரின் வாசம். மறையாத மணத்தோடும் காயாத ஈரத்தோடும் கனத்திருக்கும் இறகுகள் கருணையின்றிப் பிடுங்கப்பட, அரற்றாமல் நின்றிருக்கும் அவளுக்கு ஈரல்குலை சரியும் அளவு சமமான வலி சன்மானம்.

கூட்டமாகக் கொண்டாடி, களிப்பில் திளைத்திருக்கும் தன் அகவை ஒத்த கூட்டத்தில் தனித்திருக்கும் நிலைமை அவள் வேண்டிப் பெற்ற வரமல்லவே?.....

மாலை இழந்து நின்றாலும் மகாலட்சுமி மனம் மரணிக்கவில்லையே....

வயது என்பது எண் மட்டுமே. வட்டம் போட்டு வாழ வற்புறுத்த வேண்டாம்.

தோளில் சுமக்கும் குழந்தையின் முதுகு தடவியபடி அவள் நடக்க, 

"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" பாடல் காற்றில் தவழ்கிறது....

எல்லாம் நிறைந்த அவளை, ஏதுமற்றவளாக நிற்க வைத்து ஓட விடும் எதுவோ ஒன்று அவளைத் தோற்கடிப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கையில், அவள் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறாள்.

'நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே.....' என்ற பாடலை வாய் முணுமுணுக்க, பிறவி வேண்டாம் என்று அவள் நெஞ்சம் செய்யும் பூசனையின் ஒலி யாருக்காவது கேட்கிறதா?....

திருவாய் கருவாகி நங்கையாய் உருமாறும் திரிபு இயற்கை செய்த பிழை.

அவளா? அவனா?, மானா? யானையா?.... கடவுள் செய்த குற்றத்துக்கு அவர்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

வேயுறு தோளி பங்கனை, அர்த்த நாரி   ஈஸ்வரனை போற்றும் இதழ்கள் அவர்களை எள்ளி நகையாட வேண்டாமே.... 

மண்ணுக்கு மரம் மட்டுமல்ல, மக்களும் என்றும் பாரமில்லை.


இந்தக் காலத்துப் பசங்களே............... ஈரோடு கதிர்

 


மேலோட்டமான பார்வைக்கு மிகச் சாதாரணமாகத் தெரிகின்ற அனைத்துமே சாதாரணமானவை அல்ல. சற்று உற்று நோக்கினால் அதன் சிக்கலான அல்லது பிரமாண்டமான வடிவங்களும், கூறுகளும் தெரியும்.

இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் இதுவரைப் பார்த்த பிள்ளைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். எண்பதுகளில், தொன்னூறுகளில் பிள்ளைகளாக இருந்தவர்கள், தாம் பிள்ளைப் பருவத்தில் இருந்ததுபோன்றே, தாம் கையாளும் இந்தத் தலைமுறை பிள்ளைகளும் இருப்பார்கள் என்று நினைத்தால், அது மிகப் பெரிய பிழை என்பதை காலம் தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கின்றது. காலம் காலமாக நாம் பார்த்த பிள்ளைகள்தானே, புதிதாக கையாளுதல் என்ன இதில் இருக்கின்றது எனத் தோன்றலாம்.

ஆசிரியர்களுக்கான பயிலரங்குகளுக்கு அழைக்கப்படும்போது அவர்களின் மேம்பாட்டில் மட்டுமே கவனம் இருப்பதில்லை. மாறாக “தற்கால மாணவர்களைக் கையாள்வது” குறித்தே என் கவனம் கூடுதலாக இருக்கும். நான் சந்திக்கும் ஆசிரியர்களிடம், அவர்கள் கையாண்டு கொண்டிருக்கும் பிள்ளைகளின் தற்கால மனநிலை எவ்விதம் இருக்கும் என்பதை என் அறிதல், புரிதல் மற்றும் அனுபவத்தில் இருந்து பகிர்கின்றேன். ஒவ்வொரு பயிலரங்கு நிகழ்விலும் 60-70% கவனம் இதற்காக மட்டுமே கொடுக்கிறேன். அதற்குபிறகுதான் அவர்களின் பணித்திறன், உறவு முறைகள், இலக்குகள், மன-உடல் நலம் ஆகியவையெல்லாம்.

அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது என்பதற்கான ரத்தமும் சதையுமான சம்பவம் ஒன்றினைப் பகிர நினைக்கின்றேன். மிகுந்த அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உரியதுதான் என்றாலும், நாம் இது குறித்து விரிவாக தொடர்ச்சியாக உரையாடியே தீர வேண்டும்.

அன்று காலை, கடை ஒன்றின் முகப்பில் தொங்கவிடப்பட்டிருந்த நாளிதழ் தலைப்புச்செய்தியில் ”அம்மாவின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மகன்” எனும் செய்தி பார்வையில் பட்டது. இப்படியான தலைப்புச் செய்திக்கு கடைசியாக எப்போது அதிர்ச்சி அடைந்தேன் என்பதும்கூட நினைவில் இல்லை. அந்த வரியை வாசித்ததும், வழக்கம்போல் குடிகார மகனாக இருக்கலாம், குடும்பத்தில் ஒன்றாதவனாக இருக்கலாம், அம்மாவிடம் காசுகேட்டு தர மறுத்ததால் இப்படிக் கொலை செய்திருக்கலாம்’ என்று மட்டுமே மனதில் தோன்றியது. கூடவே, குடும்பத் தகராறு, சொத்துத் தகராறு உள்ளிட்ட பல சாத்தியங்களையும்கூட மனம் கணக்கிட்டு கடந்துபோனது. சில நிமிடங்களில் அதை மறந்தும் போனேன்.

சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு வாட்ஸப் பகிர்வாக வந்திருந்த செய்தி மிகுந்த பெரும் அதிர்ச்சியைத் தந்தது. இந்தத் தலைமுறை பிள்ளைகள் மூலம் எதுவெல்லாம் நடக்கும் ஆபத்து உண்டு என ஆசிரியர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்துகின்றேனோ அதுபோன்றதொரு செய்தி.அந்தத் தலைப்புச் செய்தி, நான் நினைத்துக் கடந்ததுபோல் இல்லை.


தாயின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகன். இறந்தது 36 வயது அரசு அலுவலர். கொலை செய்ததற்கான காரணமாக முதற்கட்ட விசாரணை அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட தகவல் ’பள்ளிக்கு செல்ல மறுத்த மகனை வற்புறுத்தியது’.

தூங்கிக் கொண்டிருந்த அம்மாவின் தலையில் பூத்தொட்டி, ஹாலோப்ளாக் கல் ஆகியவற்றைக் கொண்டு நள்ளிரவு நேரத்தில் தாக்கியிருக்கிறான். இதைப் பார்த்த ஆறாம் வகுப்பு படிக்கும் தங்கை சப்தமிட்டதால், வீட்டை விட்டு தப்பி சென்றிருக்கிறான். செல்லும் வழியில் அம்மாவின் செல்ஃபோனில் பாட்டு கேட்டவாறு அல்லது கேம் விளையாடியவாறு சென்றதை சிலர் பார்த்துள்ளனர்.

மிகச் சாதாரணமாகத் தெரியும் ஒரு செயலுக்கு, பதினான்கு வயதுப் பிள்ளை இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் சாத்தியம் கூடி வருவதை முதலில் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவன் குழந்தை, மாணவன், நம்ம வீட்டுப் பிள்ளை என்பதுள்ளிட்ட சமாதானங்களில் நம்மை ஏமாற்றிக்கொள்வதைவிட இந்தக் குழந்தைகளின் மன அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்கின்றது, எதனால் இப்படி இருக்கின்றார்கள், அவர்களை எதுவெல்லாம் இயக்குகின்றது உள்ளிட்ட அனைத்தையும் அலசுவதும், அறிய முற்படுவதுமே அவர்களைக் கையாள உதவும். அதைவிடுத்து காலம் காலமாக எல்லாரும் கையாண்ட முறைகளையே தொடர்ந்து செயல்படுத்தினால் மிக மோசமான விளைவுகளையே சந்திக்க நேரும்.

இந்தச் சம்பவத்தை ஒரு மரணத்தின் இழப்பாக மட்டுமே கடக்க முடியாது. மற்ற மூவரின் வாழ்வும் சிதையும் சாத்தியமுண்டு. கைது செய்யப்பட்ட மகன் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். விடுதலையாகும்போது சீர்திருத்தப்ப பள்ளி என்ன செய்து அனுப்பும் என்பது ஓரளவு தெரிந்ததுதானே? பனிரெண்டு வயது மகள் பார்க்கக்கூடாத, அனுபவிக்கூடாத அதிர்ச்சியையும், இழப்பையும் சந்தித்திருக்கிறாள். இந்த அதிர்ச்சி ஆழ்மனதில் அழுத்தமாய் பதியும். எப்போது எங்கனம் மீண்டு வருவாள்? சீராகப் போய்கொண்டிருந்த வாழ்வில், அந்தக் கணவன் மனைவியை இழந்ததோடு, மகன் சீர்திருத்தப்பள்ளியில், மகள் மீண்டு வரவேண்டும் எனும் நிலைகளை எதிர்கொண்டாக வேண்டும். இவை அத்தனைக்கும் பதினான்கு வயது பையன் பொறுப்பாகிறான்.

ஒன்று மட்டும் அழுத்தமாகச் சொல்கிறேன், இந்தத் தலைமுறைப் பிள்ளைகள் முற்றிலும் வேறானவர்கள். அதென்ன முற்றிலும் வேறானவர்கள்? அவர்கள் நம் பிள்ளைதானே? நம்மைப் போன்ற மனிதர்கள்தானே? ஆமாம், நம் பிள்ளைகள்தான், மனிதர்கள்தான். ஆனால் அவர்கள் பிறந்து வாழ்ந்து வரும் இந்தக் காலம் குறிப்பாக, அவர்களின் ‘தலைமுறைத் தன்மை’யை அறியாமல் கையாள்வது என்பது மனநிலை பிறழ்ந்தவன் கையில் இருக்கும் கத்தி போன்றதுதான்.

ஆண்டாண்டுகளாக மாணவர்களைக் கடந்து வரும் ஆசிரியர்களுக்கு, வழி வழியாய் கைக்கொண்டிருக்கும் வளர்ப்பு முறையில் இருக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் குறித்து புதிதாக என்ன உணர்த்திட இருக்கின்றது எனும் கேள்வி வருகின்றதா?


இப்போது மாணவர்களாக இருப்பவர்கள் எந்தத் தலைமுறையினர் என்பதில் தெளிவடைந்தால் மட்டுமே அவர்களைக் கையாளும் திறன் கைவரப்பெறும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு 1946 முதல் 1964 வரையான காலத்தில் பிறந்தவர்கள் பூமர் எனும் தலைமுறையினராகக் கருதப்படுகின்றனர். 1965 முதல் 1980வரை பிறந்தவர்கள் ஜென்–X (Gen-X), 1981 முதல் 1996 வரை பிறந்தவர்கள் மில்லேனியல்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர். 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென்–Z (Gen-Z), 2012ற்குப் பிறகு பிறந்தவர்கள் ஆல்பா ஜென் (Alpha Gen) தலைமுறையினராகக் கருதப்படுகின்றனர்.

இதில் உள்ள ஒவ்வொரு தலைமுறையினருக்கும், அவரவர் குழந்தைப் பருவம் மற்றும் பதின்பருவத்தில் கிடைத்தவைகள் மற்றும் பல்வேறு காரணிகளின் அடிப்படையிலான குணாதிசயங்கள், பழக்கங்கள், நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் உண்டு. இவைகளில் வேறுபாடு என்பது மிக நுண்ணிய அளவில் இருந்தாலும் குறிப்பிட்ட சில நிலைகளில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் தம் பிள்ளைகளின் தலைமுறை தன்மை என்னவென்பதை தெரிந்து கொண்டேயாகவேண்டும் என்பதை வலியுறுத்திச் சொல்கிறேன். நீங்கள் பிள்ளைகளாக இருந்த எழுபது மற்றும் எண்பதுகளின் தன்மையிலேயே அவர்கள் இருப்பார்கள் என நினைத்திருந்தால், நம்பியிருந்தால் அவர்களோடு மிகப் பெரிய முரணைச் சந்திப்பீர்கள். இதற்கு நிறைய உதாரணங்களை நாம் பார்த்திருப்போம். ஆயிரமாயிரம் அனுபவங்கள் இன்னும் வெளிவரவில்லை அல்லது வெளிப்படுத்தப்படவில்லை.

உதாரணத்திற்கு ஜென்–Zக்கு கிடைத்த முதல் விளையாட்டுப் பொருளே செல்ஃபோனாக இருக்கலாம். அவர்களைப் பெற்றெடுத்த தலைமுறை X அல்லது மில்லேனியலைச் சார்ந்த பெற்றோருக்கு அந்த செல்ஃபோன் என்கின்ற கருவி கிடைப்பதற்கு தேவைப்பட்ட உழைப்பும், காலமும் மிகப் பெரியதாக இருக்கலாம். இதுவொரு எளிய உதாரணம் மட்டுமே, இப்படி நிறைய வேறுபாடுகள் ஒவ்வொரு தலைமுறைக்கு இடையேயும் உண்டு.

இந்த கால இடைவெளி மட்டுமே இத்தனைக்கும் காரணம் அல்ல. சமகாலம் அவர்களுக்கு என்னவெல்லாம் கொடுக்கின்றது என்பது மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

எல்லாமே எளிமைப்பட்டுவிட்ட இந்தக் காலத்தில், எதற்கும் பெரிதாக முனைப்புக் காட்டாமல், எல்லாமும் எளிதாக தன் கைக்கு வர வேண்டும் எனும் மனநிலை படைத்தவர்களாகத்தான் அவர்கள் இருக்கின்றார்கள். அப்படி எதிர்பார்த்தது கிடைக்காதபோது உடனுக்குடன் எதிர்வினையாற்றத் தயங்குவதில்லை அவர்கள். காரணம் அச்சம் குறைந்ததொரு தலைமுறை இது. எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்குவேன் எனும் அசாத்திய தைரியம் கொண்டவர்கள். அசாத்தியம் என்கிற இடத்தில் அசட்டுத்தனம் என்றும் நிரப்பிக்கொள்ளலாம்.

இன்னொன்று அவர்கள் முன் துருத்திக் காட்டப்படும் உதாரணங்கள் அனைத்துமே அவர்களை ஏதோ ஒருவகையில் சிதைக்கக் கூடியவைகளாகவே இருக்கின்றன.

அவர்கள் இணையத்தில் விளையாடும் விளையாட்டுகள் தொடங்கி அவர்களை ஈர்க்கும் ஆளுமைகள் வரை கூடுதல் வெறி கொண்டவைகளாக இருப்பதை நாம் அனைவருமே அறிந்திருக்கின்றோமா? அவர்களின் கொண்டாட்டங்கள்கூட ஆக்ரோஷமாக இருப்பதை எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம். உதாரணத்திற்கு பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கேட் வெட்டுவதாக ஒருகாலத்தில் இருந்தது, பின்னர் திரில்லான சூழல்களில் கேக் வெட்டுவதாக இருந்தது. அதன்பிறகு வெட்டிய கேக்கை சாப்பிடாமல், பிறந்தநாள் கொண்டாடுபவனின் முகத்தில் பூசுவதாக மாறியது. இப்பொழுதெல்லாம் மாணவர்களின் விடுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது பிறந்தநாள் கொண்டாடுபவனை தாறுமாறாக குத்துவதாக மாறியிருப்பதை எல்லாரும் அறிந்திருக்கின்றோமா?

சமீபத்தில் நான் கலந்து கொண்ட மாணவர்களுக்கான நிகழ்வுகளில் சோதனை அடிப்படையில் தொடர்ந்து ஒரு கேள்வியை எழுப்புகிறேன். 2022ல் வெளியான படங்களில் எது வெற்றிப்படம் என்கிறேன். மிகப் பெரும்பான்மையானோர் ’விக்ரம்’ எனச் சொல்கிறார்கள். படத்தில் எந்தப் பாத்திரம் அல்லது எந்த நடிகரை அதிகம் பிடித்தது எனும் கேள்விக்கு கமல், விஜய்சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட அனைவரையும் கடந்து ஒருமித்த குரலில் ‘ரோலக்ஸ் – சூர்யா’ எனச் சொல்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் சூர்யா ரசிகர்கள் மட்டுமே அல்ல. ரோலக்ஸ் பாத்திரம் அத்தனை ஈர்த்திருக்கின்றது. கூடவே சிலர் ”லைஃப் டைம் செட்டில்மெண்ட்!” என்ற வசனத்தையும் உச்சரிக்கின்றனர். இதே விக்ரம் படத்தில் வழக்கமாக வில்லன் பாத்திரம் ஏற்கும் ஒரு நடிகர் ரோலக்ஸ் பாத்திரத்தில் அந்தக் காட்சியில் வந்திருந்திந்தால் இத்தனை ஈர்த்திருக்க மாட்டார். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தொடர்ச்சியில் ரோலக்ஸ் பாத்திரத்தில் சூர்யா முழுப்படமும் நடிக்கவிருக்கும் சாத்தியம் இருக்கின்றது. அது இன்னும் எந்தெந்த விதங்களில் ஈர்க்கப்போகின்றதெனத் தெரியவில்லை.

இன்னொரு கேள்வியாக சூர்யா நடித்த பாத்திரங்களில் எது மிகவும் பிடிக்கும் என்றால் ரோலக்ஸ்தான் பதிலாக வருகின்றது, ’நெடுமாறன் ராஜாங்கம்’ வரவில்லை என்பது பெரும் வருத்தத்திற்குரியதாக எனக்குத் தோன்றுகிறது. ஒருகாலத்தில் அம்மாக்களின் கனவு நாயகனாக இருந்த நடிகர் அர்விந்த சாமி, குறிப்பாக ஜென்-Z தலைமுறைப் பிள்ளைகளிடம் வரும் ‘சித்தார்த் அபிமன்யு’வாக ஊடுருவி அவர்களின் சமூக வலைதள முகப்புப் படமாக அமர்ந்திருக்கின்றார் என்பதெல்லாம் ஏனோதானோவென்று கடந்து போகக்கூடிய ஒன்றல்ல.

முந்தைய தலைமுறையினர் ரசித்த திரைப்படங்களில் வில்லன் பாத்திரம் ஏந்திய எத்தனை பேர் இப்படி ஈர்த்திருக்கிறார்கள் என்றால் ஏறத்தாழ இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்று வியாபார நிமித்தமாக எதிர்மறைப் பாத்திரங்களை மிக ஈர்ப்புடையாதாக வடிவமைக்கின்றனர். தொடர்ந்து அவற்றை ரசிக்கும் ஒருவன், எளிதாக உள்வாங்கி எல்லாமும் இயல்பானதென்று (normalization) கருதும் மனநிலை எளிதில் வாய்த்துவிடுகின்றது.

போக்குவரத்து நெரிசல் உள்ள நம் நெடுஞ்சாலையில் பைக்கில் 240 கி.மீ வேகம் சென்ற இளைஞனை 38 லட்சம் பேர் யூடியூபில் தொடர்கின்றனர். அவர்களில் இந்த இரண்டு தலைமுறையைச் சார்ந்தவர்கள் எப்படியும் 90% பேர் இருக்கலாம் என்பது முந்தைய தலைமுறையினரில் எத்தனை பேருக்குத் தெரியும்?. பப்ஜி எனும் விளையாட்டை விளையாடுவதோடு ஆபாசமாக, வக்கிரமாப் பேசியதாக கைது செய்யப்பட்டவரை பல லட்சம் பேர் ரசித்து பின் தொடர்ந்தார்கள் என்பதை அறிந்திருக்கிறோமா?

இப்படி பட்டியலிடும்போது, அவசரமான கேள்வியொன்று, இவர்களை எப்படிச் சரி செய்வது?

சரி செய்வதைப் பற்றி யோசிக்கும் முன், உண்மையில் அவர்களை எந்த வகையான சிக்கல்கள் வந்து சூழ்ந்திருக்கின்றன, அவை எங்கிருந்து வருகின்றன, அவற்றைத் தடுப்பது அல்லது அவர்களைத் தற்காப்பது எவ்விதம் என்பது குறித்து தெரிந்தாக வேண்டும். அதைத் தெரியாமல் சரி செய்ய முடியாது. காரணம் பிள்ளைகள் ஒரு அலைவரிசையிலும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மற்றொரு அலைவரிசையிலும் இருக்கும்போது இணைந்து பயணிப்பது எதிர்பார்க்க நியாயம் எதுவும் இல்லையே!

முந்தைய தலைமுறைகளைவிட இந்த இரண்டு தலைமுறைப் பிள்ளைகள் எதார்த்தமானவர்கள், கூடுதல் நேர்மையுடையவர்கள் மற்றும் அறிவார்ந்தவர்கள் என்பதுள்ளிட்ட பலங்களைக் கொண்டிருப்பவர்கள். அனுபவமின்மை, அவசரம், எளிய வெற்றி, மிக குறுகிய வட்டம், குறைந்த அனுதாபம், அவசர முடிவு என்பதுள்ளிட்ட பலவீனங்களைக் கொண்டவர்கள். நமக்கு அறிமுகமில்லாததொர் உலகில் அவர்கள் வசித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களின் உலகம் எத்தகையது என்பதை எப்படியாவது முயன்று கற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அவர்களோடு இணைந்து பயணித்து தேவையானவற்றை சரி செய்ய உதவிட வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் பயிலரங்கு மற்றும் உரை நிகழ்வு எதுவாக இருந்தாலும் அவை பெரும்பாலும் பிள்ளைகளை மட்டுமே இலக்காக வைத்து ஏற்பாடு செய்யப்படுகின்றன. கல்விக்கூடங்களில் மாணவர்களுக்கு நடத்தாமல் வேறு யாருக்கு நடத்தவேண்டும் எனும் கேள்வி எழலாம்.

’பிள்ளைகளை மட்டுமே மனதில் வைத்து நிகழ்ச்சிகளைத் திட்டமிடுகிறோம். அந்தப் பிள்ளைகள் இத்தகைய தன்மையில் இருக்கின்றார்கள் என்பதை அவர்களைக் கையாளும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு எப்போது உணர்த்தப்போகின்றோம்?’

திருவிழா பிம்பங்கள் .....யசோதா பழனிச்சாமி


 ஆடி மாசம் பொறந்தாச்சு...

ஆடிப் பட்டம் தேடி விதைக்கணும்கற பழமொழியை எல்லாம் தூக்கித் தூரப் போட்டு விட்டு, பண்டிகை நாளுக்கு தயாராகியது சாலையோரத்து நிலங்கள்.

எப்ப பார்த்தாலும் சோளம் அல்லது கடலை போடுவார்களா? நெல்லு நடவு செய்வர்களா?மாடு கொண்டு உழவு ஓட்டுவார்களா? ட்ராக்டர் கொண்டு உழவு ஓட்டுவார்களா?

இயற்கை முறையில் பூச்சி மருந்தை அடித்து என்னை மூச்சு விட வைப்பார்களா? செயற்கை உரத்தைப் போட்டு வெள்ளாமையை அதிகரிச்சு நோயைத் தேடி என்னையும் மலடாக்கி விடுவார்களா?" உஷ் அப்பாடா, இந்த தொல்லை எல்லாம் இல்லாம பதினைந்து நாளைக்கு நிலங்களை வாடகைக்கு விடப் போவதால் வெள்ளாமையில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டு மக்களின் மகிழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டாட ஆயத்தமாகி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.

வருடம் தோறும் ஆடி மாதத்தில் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையை முன்னிட்டு 

நிலங்களின் உரிமையாளர்கள் கடைகள் நடத்துவதற்கு நிலத்துக்கு வாடகை பேசி விடும் போதே கடை போட வருபவர்களின் முகத்தில் தெரியும் நம்பிக்கையை கண்டு நிலம் ஆச்சரியப்பட்டது.

குருநாதசாமி கோவில் திருவிழா தேர் கடைகளில் சமான் வாங்க வேண்டியே நிறைய பேர் கோவிலுக்கு வருவார்கள். அப்போது எல்லாம் ஊருக்குள் அதிகமாக கடைகள் கிடையாது. இப்ப வீதிக்கு ஒரு பேன்சி ஸ்டோர். முக்குக்கு ஒரு பாத்திரக்கடை. அதுக்கு மேல வீட்டை விட்டு எதுக்குப் போறீங்க! இந்தாங்க மொபைல் போனில ஆர்டர் போடுங்க. வீட்டு வாசலுக்கே உங்களுக்கு தேவையான பொருள்கள் வீடு தேடி வந்திடும் என ஆன்லைன் வியாபாரம் களை கட்டுகிறது.

ஆனாலும், குருநாதசாமி கோவில் தேரில் எப்போதும் போலவே வந்து கடை போடுகிறார்கள்.என்ன லாபம் கிடைக்குமோ?.. வருஷம் பூரா என்னைப் புரட்டிப் போட்டு விவசாய செய்யறவனுக்கே சில நேரத்தில என்னாள படியளக்க முடியல..

வந்து பத்து நாளு கடை போடற இவர்களுக்கு என்னத்த கொடுக்கப் போறேன். அப்போது ஒரு கடையில் இருந்து "கொள்ளேகால் பர்பி" வாசனை நிலத்தின் மூக்கைச் சுரண்டியது.

'அட ,இங்க பார்டா எப்படி விதம்விதமா அடுக்கி வச்சு இருக்கிறாங்க? வெள்ளைக் கலர்ல இருப்பது அஸ்கா சர்க்கரை பர்பியாம்! பழுப்புக் கலர்ல நாட்டுச் சர்க்கரை பர்பியாம். இந்த பக்கத்தில் இத தேங்காப்பர்பினு சொல்லுவாங்க! எங்கிட்ட இருக்கிற தென்னை மரத்தில தேங்காய் விற்பனை இல்லாம வீணாகிப் போயிடுங்கிற நேரத்தில என்னுடைய எசமான் ஊட்டுல படக்குனு உடைச்சு, தேங்காயத் துருவி, தேங்காய் பர்பி போட்டு புள்ளைகளுக்கு கொடுப்பாங்க. அப்புறம் சிவப்பு, மஞ்சள், பச்சைனு கலர் கலரா அல்வா எல்லாம் அடுக்கி வச்சு இருப்பதை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். நமக்கே எச்சில் ஊறும் போது குழந்தைகளுக்கு ஊறாத என்ன?

அந்த பர்பி கடையயைப் பார்த்து, கையைக் காட்டி நல்ல சொக்காய் அணிந்த புள்ளை ஒன்னு, "அம்மா அல்வா வேணும்" என கையை காட்டுது.

"டேய் கண்ணா! இதெல்லாம் மூடி வைக்காம திறந்தே வச்சு விக்றாங்க. டஸ்ட் படிந்து இருக்கு இதெல்லாம் திங்க கூடாது. வேறு நல்ல கடையில வாங்கிக்கலாம்" எனச் சொல்லி கையைப் பிடித்து இழுக்க, அந்த புள்ளை ஏக்கத்தோடு பார்த்துட்டு போவதை பார்க்க பாவமாக இருந்தது.

என்னை உழுது சோளக்கருது விதை பயிரிடுவாங்க வெள்ளாமை எடுப்பாங்க. ஆனா எனக்கு ஒரு நாள் கூட உப்பு போட்டு வேகவச்ச கருது தரமாட்டாங்க. இந்த நிலத்தை வாடகைக்கு எடுத்தவங்களுக்கும் எனக்கும் என்ன பந்தம்..உப்பு போட்டு கருத வேகவச்சு,வேகவச்சு தார்பாயை விரிச்சு நிலத்தில் கொட்டுவாங்க பாருங்க. அட,! அட அந்த மணமும் சுவையும் என்னை மயங்க வைக்கும். நிறைய பேர் வாங்கி தின்னுட்டு சோளக்கருது தொலியை உரித்து உரித்து கீழே போட்டுட்டு போவாங்க. அப்ப நடக்கிற பாதை பூராவும் தொலியாக் கிடக்கும் ‌.

இந்த வருஷம் திருவிழாவில   ஒரு நல்லதுநடந்துச்சு. அதிகமா மழைக்காகிதப் பைகளைப் போட்டு என் குரல் வளையை நெறிக்காமல் விட்டது  என்னை சந்தோஷப்பட வச்சுது. என்ன குடிக்கிற தண்ணீர் பாட்டில்களைக் கீழே போட்டுப் போட்டு நிலம் முழுக்க புண்ணு புடித்து போனது போலக் கிடந்தது. திருவிழானா இது கூட இல்லாமல் இருக்குமா என்ன?

இந்த ராட்டினத்தூரி போடறவங்க பாடு தான் திண்டாட்டம். காட்டுக்காரங்க இடம் கொடுக்கறதால தூரி ஆட அவங்களுக்கு இலவச பாஸ் கொடுக்கணும்னு வாங்கிறாங்க! அப்புறம் பெரிய வி.ஐ.பி.இவங்களுக்கும் இலவச பாஸ்.  இலவசமா நிறைய  டிக்கெட் தர வேண்டி இருப்பதால் அவங்க வருமானம் ரொம்பக் குறைஞ்சு போவுது. திரும்பின பக்கம் எல்லாம் மக்கள் தலை அதுக்குத் தகுந்தளவு நிறைய தூரிகள்.

அங்கங்கு சும்மா உயர உயரமா கலர் கலர் லைட்டுகள் போட்டுட்டு கரண்ட்ல சுத்தற தூரி,வாத்து மாதிரி தூரி, அது மேல கீழே போவுது..பிரேக் டான்ஸாம்,பாட்டப் போட்டு டக்டக்னு டான்ஸ் மாதிரியே அங்கே இங்கே சந்துக்குள் மற்றும் பொந்துக்குள்ள போற மாதிரி பாக்கிறவாங்களே நடுங்குவது தெரியுது! விளையாடறவங்க முகத்தில் அட! அட அப்படி ஒரு பயம் கலந்த மகிழ்ச்சி..

விவசாயம் செய்யறவங்க கூட இந்த திருவிழா நாள்ல மழை வரக்கூடாதுனு வேண்டுவாங்க. இந்த மழை வந்துடுச்சுனா நிலத்தில தண்ணி நிக்க ஆரம்பிச்சிடும் சேறும்,சகதியுமா போயிடும். என்னை மிதிக்கிறது மட்டும் இல்லை மேலு ,காலு என எல்லாம் சேத்தைப் பூசிக்குவாங்க. சிலர் வழுக்கி கீழே கூட விழுந்துட்டு என்னை கண்டபடி பேசிட்டு போவாங்க!

என்ன செய்யறது? எந்த ஊருல இருந்தோ இங்கு வந்து பொழைப்பு நடத்த வர எல்லா மக்களுடைய வாழ்க்கையிலும் மழை வந்தால் வருமானம் இல்லாமல் போயிடும். அதனால், மழையை திருவிழா நாட்களில் யாரும் விரும்பறதே இல்லை.

எந்த ஊருலையும் இல்லாத குதிரைகள்,தினுசு தினுசா காளைகள், நாட்டு மாடுகள், ஆடு, நாய் என எல்லாம் வந்து கூடுவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். "வெளி மாநிலத்தில இருந்தெல்லாம் வரும் வகை வகையான குதிரை,மாடுகளை எல்லாம் பார்த்து வாங்கிட்டு போக, வேறு மாவட்டத்திலிருந்தும் மக்கள் வந்து குவிவாங்க... 

சாட்டைக் கடையில் விதவிதமான சாட்டைகள்‌. மாடு,குதிரைக்கு கட்டும் அழகு மணிகள் விக்கும். எங்க தான் மக்கள் இருக்காங்களோ? எறும்பு மாதிரி சாரை சாரையா ஊர்ந்துட்டே போவாங்க. அதிலும் அடி தடி,தள்ளு முள்ளு நடக்கும் ‌.போலீஸ்காரங்களே ஓஞ்சு போயிடுவாங்க.

கோவிலுக்குப் போகும் கூட்டத்தை விட வேடிக்கை பார்க்க வரும் கூட்டமே அதிகமா இருக்கும்...

தினுதினுசா மக்கள் வந்தாலும், இப்போது கடைகளில் வாங்கும் கூட்டம் குறைஞ்சு போச்சுனு புலம்பற மக்களப் பார்த்தா பாவமாத் தான் இருக்கு. ஆனாலும் அவங்க இப்படி திருவிழா, திருவிழாவா கொண்டு போய் கடை போடுவதையே விரும்புறாங்க."அதோ ஒரு அம்மாவிடம் கடைக்கார பொண்ணு பேசுவது எனக்கு கேட்குது..".

"இந்த பொம்மை என்ன விலை?"

"அக்கா,காலையில் நூறு ரூபாய்க்கு கொடுத்தேன். நாளைக்கு வேறு ஊருக்கு கடையை போடப் போறோம் என்பது ரூபாய் கொடுங்கக்கா".

"ஏம்மா இப்படி ஒரேடியா விலை சொன்ன எப்படி?குறைச்சு சொல்லும்மா."

"அக்கா கட்டாதுங்க! நாப்பதாயிரம் வாடகை கொடுத்து இருக்கோம்.அதுக்கே போதாது. எப்படிங்க வயித்து பொழைப்பு நடத்தறது."

இரண்டு பேரும் பேரம் பேச பேச எனக்கு பாவமா தான் இருக்கு...

"வெள்ளாமைல லாபம் வருதோ இல்லையோ நிலத்தை உழுவாம அப்படியே போட முடியுமா? ஆண்டவன் என்ன படியளக்கிறானோ அளக்கட்டும் என என் உரிமையாளர் யாரிடமோ பேசியது நினைவுக்கு வந்தது . திருவிழாவிற்குத் தான் எத்தனை முகங்கள்!!

மனித வாழ்க்கையும் போராட்டங்கள் நிரம்பியது தான். இந்த மாதிரியான திருவிழாக்கள் தான் என்னைப் போலவே அவர்களையும் உற்சாகப்படுத்தி  அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்று நினைத்தவாறு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது நிலம்!



இது நியாயமா? ------ ராதா மனோகரன்

 



சென்ற வாரம் திருப்பூரில் பிரபலமான பள்ளிகளில் ஒன்றின் செயளாலரைச் சந்திக்கவும், அவருடன் பயணம் செய்யவும் நேர்ந்தது. பள்ளி நடத்துபவரும் நானும் சந்தித்ததால் இயல்பாகவே பேச்சு குழந்தைகளை மையப்படுத்தி இருந்தது. இன்றைய குழந்தைகளின் கலாச்சாரப் பார்வை பற்றியும் பேச்சு வந்தது. அவர் "How do we save our culture from this younger generation? They are causing cultural disaster " என்றார் அலுப்புடன். 

கலாச்சாரச் சீரழிவுக்குக் குழந்தைகள் காரணம் என்பதை எந்த விதத்திலும், எந்த இடத்திலும், எவ்வளவு உதாரணங்களை முன் வைத்துக் கூறினாலும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

இரண்டு வாரங்களுக்கு முன் ஜவுளி நகரத்தில் நடந்த ஓரு "பெரிய குடும்பம்" ஒன்றின் பிறந்தநாள் விழா பற்றிப் பேசியே ஆக வேண்டும்.  அந்த மாதிரியான நிகழ்வுகளை பார்க்கும் பொழுதும் கேள்விப்படும் பொழுதும்  அதிர்ச்சி அடைவதில்லை. ஆத்திரம் தான் வருகிறது. ஆனால் முடமாகிப் போகும்  ஆத்திரம் அது.

ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாள் விழா   3 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஆடம்பரமாக நடைபெற்றது.  குழந்தைகளுக்குத்  தனி விளையாட்டுகளும், பெண்களுக்கான பொழுதுபோக்கு ஏற்பாடுகளும், ஆண்களுக்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட ஏற்றுமதி, இறக்குமதி சரக்கு பாட்டில்களும் விமர்சையாக இருந்தன.

விழாவுக்கு வந்த குழந்தைகள் சுமார் இரண்டு வயது முதல் 16 வயது வரை.

விளையாட்டு ஏற்பாடுகளால் குறுகிய காலத்திற்கு மேல் குழந்தைகளை ஈர்க்க முடியவில்லை. அம்மா அப்பாவிடம் ஓடிப் போய் அவர்கள் உரச உடனே மொபைல் போன்கள் கை மாறின. பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கென ஒதுக்குப் புறமாக இடம் தேடி அமர்ந்து அந்த கை அகல சிறைச் சாலைக்குள் கைதியாகிக் கொண்டிருந்தனர். 

பெரும்பாலான ஆண்கள் சோஷியல் ட்ரிங்கிங்  எனப்படும் சமூகக் குடித்தலில்  ஈடுபட்டிருக்க, பெண்களில் சிலர் நகைக்கடை துணிக்கடை மாடல்களாக உலா வர, சிலர் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் கத்தி கும்மாளமிட்டு ஊர்க்கதை பேசிக் கொண்டிருக்க, சில பெண்கள் மட்டும் மிகவும் அழுத்தத்துடன் இறுக்கமாக   இருக்க,   நான் என் தோழியிடம் " என்னதான் social drinking ன்னு சொன்னாலும் தன் கணவர்,வளரும் குழந்தைகள் முன் குடிப்பதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை" என்று கூறினேன். அவர் கலகலவென சிரித்து விட்டு "so sad you are an 80's kid" என்று கூறி தங்களால் குடிக்க முடியவில்லையே என்பதுதான் ஆத்திரப்பட்ட பெண்களின் ஆதங்கம் என்றார்.

அதில் உள்ள மெய் ,பொய் பற்றிய ஆராய்ச்சியோ, social drinking சரியா? தவறா? என்ற வாதமோ... ஏன் ஆண் குடிக்கலாம்? பெண் குடிக்கக் கூடாதா? என்ற பெண்ணியமோ பற்றி இங்கு நான் பேசவில்லை.

எனது கேள்வி எல்லாம் குழந்தையை ஆசீர்வதிக்க அழைக்கப்படும் பர்த்டே பார்ட்டியில் பாட்டில் அவசியமா? அவசியமெனில் அதை பார்த்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு நாம் உணர்த்த விரும்பும் கலாச்சாரம் எது? கூட்டமாக சேர்ந்தாலும் குழந்தைகள் தனித்தனியாக  விளையாட வேண்டும்... பெண்கள் குதூகலிக்க வேண்டும்.... ஆண்கள் குடிக்க வேண்டும் என்பதா? 

இது போன்ற முன்மாதிரிகளைப் பார்க்கும் போது, குழந்தைப் பருவம் உடைந்து வாலிபப் பருவத்துக்குள் நுழையும் போது  கூட்டமாக சேர்ந்தால் குடிக்க முற்படுவதோ, குடிப்பதற்காக கூட்டம் சேர முற்படுவதோ இயல்பாக நடக்கும் தானே?

உடனே  இளைஞர்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக கதறுகிறோம் . நாம் சீரழிக்காத கலாச்சாரத்தையா நமது தலைமுறைகள் சீரழித்துக் கொண்டிருக்கிறது?

பிறந்தநாள் கொண்டாடிய குழந்தையின் தாய் எனக்கு  நன்கு அறிமுகமானவர். ஒரு முறை அவருடன் டின்னர் சாப்பிடும் சூழ்நிலையில் அவருடைய நடவடிக்கைகள் என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவர் ஆர்டர் செய்த ஒரு டிஷ் இவர் எதிர்பார்த்த சுவையுடன் வரவில்லை என்று அங்கு பரிமாறியவர் முதல் முதலாளி வரை எகிறிக் குதித்து எக்கி எக்கி சண்டை போட்டு பில் தொகை ரூபாய் 800  கொடுக்க மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வீட்டில் உணவு சுவை சற்று மாறினால் தட்டை எடுத்து வீசலாம், கத்தி சண்டை போட்டு ரண களம் ஆக்கலாம், உண்ண மறுக்கலாம் என்ற  கலாச்சார மாடல்கள் தலைமுறைக்கு எங்கிருந்து கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்கிறோமா?

Every single action of a child is modeled by somebody for the child to imbibe.

எது சரி? எது தவறு? என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கும் இன்றைய குழந்தைகளை ஒற்றை விரல் நீட்டி குற்றம் சொல்வதற்கு முன் நம்மை பார்த்திருக்கும் நான்கு விரல்களும் என்ன சொல்கிறது என்று கேட்போம்.

என்ன மாதிரியான  சமுதாயத்தில் அவர்களை நாம் நீந்த வைத்திருக்கிறோம்?

நாம் வளர்ந்த காலம் தோட்டத்தில் சென்று ரோஜா பறிப்பது போன்றது. ரோஜா செடியில் இருக்கக்கூடிய முட்கள் மட்டுமே விரல்களைக் குத்தும் ,ஆழமாக ஏறாது .குத்திய விரலை வாயில்  வைத்து சூப்பினால் வலியை ஆற்றி விட முடியும். ஆனால் இன்றைய குழந்தைகள் அடர்ந்த ஆபத்து நிறைந்த முற்புதர் காடுகளுக்குள் சென்று ரோஜா பறிக்க வேண்டிய பரிதாபத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவு கொள்வோம்.

கலாச்சார சீரழிவுகளில் ஒன்றாக porn videos addiction பேசப்படுகிறது.

வீடியோ எடுத்துப் போடுபவர்கள் குழந்தைகளா? அதை வியாபாரம் ஆக்கும் சோசியல் மீடியா  வலைதளங்களின்  உரிமையாளர்கள் குழந்தைகளா? 

அவர்களின் பாழ்பட்ட சூழலைப்  புரிந்து கொள்பவர்களாகவும் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டிகளாகவும் இருப்பதை விடுத்து சந்தனத்தை சாக்கடைக்குள் வீசிவிட்டு நாறுகிறது என்று கூப்பாடு போடுகிறோம்.

குழந்தைகளை மனசாட்சி இல்லாமல்  குறை கூறும் எவரும் என்னைப் பொறுத்தவரை குற்றவாளியே.

மனித குலம் மழலையர் குலத்திற்கு ஏற்படுத்தும் கடலளவு கலாச்சார சீரழிவில் ஒரு துளி மட்டுமே இது.  குழந்தைகளைக் கை காட்டும் குற்றவாளிகள் நின்று நிதானமாக யோசிக்கட்டும்.... இது நியாயமா என்று!


ஜீபூம்பா ....மலர் செல்வம்

 


பெருந்தொற்று,  பல தொழில்களின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தது. பலவற்றை அடியோடு அழித்தது. பழையன கழிதல் இருந்தால் புதியன புகுதல் இருக்கத் தானே செய்யும்?

கொரோனா முடிந்த பிறகும் கூட்டம் கூட வாய்ப்புள்ள  பொது இடக்களுக்குப் போகத் தயங்கிய மனநிலையை ஆதாரமாக வைத்து பெருநகரங்களில்  பிறந்ததே  மளிகை காய்கறி பால் போன்ற அத்திவாசியப் பொருட்களை குறுகிய நேரத்தில்  தனது கடையிலிருந்து வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும்  ஹோம் டெலிவரி செயலிகள்.

இல்லத்தரசிகள் என்ன தான் முன்கூட்டித் திட்டமிட்டு பார்த்துப் பார்த்து சாமான்களை வாங்கி வைத்தாலும்  அடுப்பைப் பற்ற வைத்த பிறகு  எதாவது ஒன்று இல்லை எனத் தேடுவதும் கவலைப் படுவதும் அதையொட்டிய திட்ட மாறுதல்களும்  அதனால் உண்டாகும் மன அழுத்தங்களும் அன்றாட வாடிக்கை தான்.

டன்ஸோ,ஸ்விக்கி, இன்ஸ்டாமார்ட், ப்ளிங்கிட், போன்ற செயலிகள் சென்னையில் பிரபலமானவை.பால், காய்கறி,பழங்கள் மளிகை என  அவசியத் தேவைகளில் ஆரம்பித்து இன்று பெரிய சூப்பர் மார்க்கெட்டே உள்ளே உள்ளது.

அவசரம் என்றால் நைட்டியை விட்டு  சல்வாருக்கு மாறி தலையை கையில் வாரி ஒரு ரப்பர் பேண்டுக்குள் அடக்கியபடி அரக்க பரக்க பக்கத்து மளிகைக் கடைக்கு ஓடுவதும் ரொம்ப அவசரம் என்றால் நைட்டிமேல் துப்பட்டாவை போட்டு ஒரு புதிய ஃபேஷனை உருவாக்குகிறோம் என்ற பிரக்ஞையின்றி  அள்ளி முடிந்த கொண்டையுடன் அண்ணாச்சி கடைக்கு ஓடுவதும் அல்லது  ஓட்டுவதும் பல வீடுகளில் காணக் கிடைக்கும் காட்சி தான்.

இன்று நிலைமை சற்று மாறிவருகிறது. காலை எழுந்ததும் பல்தேய்த்து விட்டு கையில் மொபைலுடன் அமர்ந்து  சமையலுக்கு வேண்டியதை  ஆன்லைனில் ஆர்டர் செய்து விட்டு சமையலறைக்குள் சென்று ஒரு  காஃபி போடுவதற்குள்  அழைப்பு மணி அடுத்து விடுகிறது. பொருட்களைச் சுமந்து கொண்டு  ஒரு ஆணோ பெண்ணோ புன்னகையுடன் குட்மானிங் சொல்வது அவ்வளவு ரிலாக்ஸ்டாக உணரமுடிகிறது.

அதுவும் என்னைப் போன்ற ஃபயர்எஞ்ஜின் நபர்களுக்கு  திடீர் விருந்தாளிகளின் வருகையின் போது இதன் மகத்துவம் நன்றாகவே புரியும்.

கிட்டத்தட்ட 24 மணி நேரமும் டெலிவரி. அழைப்பு மணி அழுத்த வேண்டாம் என்றால் வீட்டுக்கு வெளியே பையை விட்டுச் செல்லும் வசதியைத் தேர்வு செய்யலாம்.

ஒவ்வோர் நகர்வும் ஆன்லைனில் அப்டேட் ஆகி விடுகிறது. பணம் செலுத்துவதும் எளிதாக உள்ளது.

இப்படிப் பல வசதிகள். ஆனாலும் இருக்க இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்குவது போலத்தான் இதுவும் என்று அவ்வப்போது தோன்றுவதும் உண்டு.

இலவச டெலிவரி என்று ஆரம்பிக்கும். பிறகு 10₹ என்று மாறும். பிறகு மெல்ல 200ரூபாய்க்குக் குறைவாக ஆர்டர் போட்டால் 45₹ டெலிவரிக்கு என்று அச்சுறுத்தும். வெங்காயம் மட்டும் வாங்கலாம் என்று உள்ளே நுழைவோம். அட! சுண்டைக்காய் கால்பணம்.  சுமைகூலி முக்கால் பணம் தர மனம் வருமா?

உள்ளே தேடி   வேண்டுவது வேண்டாமை எவ்லாம்  கூடையில்போட்டு பில் தொகை 200ஐத் தாண்டி நானூறில் நிற்கும். சில  பொருட்கள் இரண்டு மூன்று என்று கொத்தாகத் தான் வாங்க முடியும்.அவசரத்திற்கு வேண்டுமே? நமது பலவீனம் அங்கு பகடைக்காய்.

அவ்வப்போது தரமற்ற பொருட்கள் தலைகாட்டுவதும் உண்டு.

செயலியில் அதற்கான பிரிவில் போய் கம்ப்ளெய்ண்ட் தந்தால்  ரோபாட் chatbot தான் நம்முடன் உரையாடும். புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக தீர்வு கிடைக்கிறது. 

Replace/Refund- .ஏதேனும் ஒரு ரூபத்தில்.

யோசித்துப் பார்த்தால் விசித்திரமாகத் தோன்றும். காலமாற்றத்தில் எத்தனை அடிப்படை விஷயங்கள் உருமாற்றம் பெறுகின்றன என்று!!

ஊரில் உள்ள மளிகைக்கடைக்காரர் நமக்கு உறவினர் போல மாறியிருப்பார். நம் குடும்ப  நல்லது கெட்டதில் அவரும் பங்கெடுப்பார். கிராமம் நகரம் வித்தியாசம் இல்லை. சென்னை ராயப்பேட்டையில் நாங்கள் குடியிருந்த போது  எங்கள் தெருவிலிருந்த மல்லிகா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அவ்வளவு உரிமையாக பழகுவார்.

சற்றே மாறி சூப்பர் மார்க்கெட் வந்தது. பிராண்ட் முக்கியமாக மாறியது . உரிமையாளர் பற்றித் தெரியாமலும் இருக்கும் நிலை வந்தது.

ஆனால் காய்கறியைத் தொட்டு புரட்டி எடுத்து பூதக்கண்ணாடி வைத்து அதன் முன்ஜென்மம் வரை ஆராய்ச்சி செய்து வாங்கும் பழக்கம் மறைந்து வருவது தான் மாயம்!!

இன்று  வாடிக்கையாளர் சேவை எண் கூட வைக்காத ஒரு ஆன்லைன் கடையில் "படம் பார் .கூடையில் சேர். ஜிபே செய்" என்று உட்கார்ந்த இடத்தில் வாங்கிக் குவிக்கிறோம்!!  விந்தையாகத் தான் இருக்கிறது,! 

ஆன்லைனில் ஸ்விக்கியின் உணவு வசதியை பயன்படுத்தாதவர்கள் கூட  இந்த மளிகை ஷாப்பிங் வசதியைப் பயன்படுத்துகிறார்கள்.

இதன் நீட்சியாக இன்னொரு உபயோகமான சேவைத் தொழிலும் அமோகமாக வளர்ந்து வருகிறது.

ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு பொருட்களைக் கொண்டு சேர்க்கும் இனஸ்டண்ட் கூரியர் தொழில் தான் அது.

டாக்குமெண்ட்ஸ் அனுப்புவது  எளிது என்று விளம்பரப்படுத்தப் பட்ட தொழில்.
ஆனால்  இன்று அதன் பரிமாணமே வேறு!டெய்லர் கடையில் துணி பிக்அப் செய்ய வேண்டுமா?ஜூனி/டன்சோ தான் ஞாபகம் வருகிறது.

சாவியை கொடுத்தனுப்ப வேண்டுமா? அம்மா என் வீட்டுக்கு விருந்தாளி என்று மகள் போன் போன்செய்தால் அம்மாக்கள் சமைத்து முடித்து புக் செய்தால் பத்து நிமிடத்தில் எடுத்துச் சென்று உடனடி டெலிவரி. கிலோ மீட்டருக்கு 15-20 ரூபாய் ஒரு பிரச்னையாக இருப்பதில்லை .

வாட்ஸப்பில் பார்த்து  ஜி பேயில்  வாங்கி ஜூனியில் உடனடியாக பொருள் வீடு வந்து சேர்வது தான் இன்றைய ஷாப்பிங். போக்குவரத்து நெரிசலுக்கும் சுட்டெரிக்கும் வெயிலுக்கும் இது போன்ற செயலிகள் பெரிய வரம்.பெட்ரோலையோ ஓலாவையோ கணக்கிட்டால் இதற்கான செலவு குறைவுதான் என்பதால் இன்று வீடுதோறும் டன்சோ விளக்கம் தான். கொரானாவால் விளைந்த ஒரு மாற்றம்என்று சொல்லலாம்.

பெருநகரங்களைத் தாண்டி சிறுநகரங்களில் இச்சேவைகள் விரிவுபடுத்தப் படவேண்டும். இது மிகச் சிறந்த  வளர்ச்சி வாய்ப்புள்ள ஒரு தொழில்.

கார்ப்பரேட்கள் தான் முயற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. கண்ணம்மாக்களும் கார்த்திக்களும்  முயற்சி செய்யலாம்.

சமீபகாலங்களில் நான் சென்னையிலிருந்து ஊருக்கு வந்தால் அதிகம் மிஸ் செய்வது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்/ப்ளிங்கிட்/ ஜீனி/டன்சோ போன்ற சேவகர்களைத்தான்!

எல்லா நன்மையிலும் ஒரு தீமை உண்டு! எல்லாத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்பது இந்த அலாவுதீன் விளக்குகளுக்கு மிகப் பொருத்தம்!!

பேராசிரியர்கள் நல்லாசிரியர்கள் அல்லவா?!........வி.அன்புமணி



மனம் நிறைந்த வேதனையுடன்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். ஆசிரியர்என்றாலே துவக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி மற்றும் உயர்நிலைக்கல்வி வரை மாணவர்களுடன் பயணிப்பவர்கள் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அப்படியிருக்க அதில் பாரபட்சமாக ஒரு சாராருக்கு மட்டுமே நல்லாசிரியர் விருது வழங்கப்படும் வழக்கம் தவறானது என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த வழக்கத்தைப் பின்பற்றி சில தனியார் நிறுவனங்கள் கூட பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே ஆசிரியர் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கின்றன. 

காலஞ்சென்ற நம் முன்னாள் முதல் துணைக்குடியரசுத் தலைவரும், தத்துவயியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், 17 சர்வதேசப் பல்கலைக்கழகங்களால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவருமான  மாண்புமிகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளே அவர்தம் விருப்பப்படி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. நகைமுரணான விடயம் என்னவென்றால் எவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றனவோ, அவர் ஒரு காலத்திலும் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்ததில்லை. பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில்தான் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அப்படியிருக்க இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த அல்லது செய்து வரும் எந்த அரசும் இந்த விடயத்தை நினைவில் கொள்ளவில்லை. மத்திய அரசின் பாணியை ஏறக்குறைய கடைபிடிக்கும் மாநில அரசுகளும் இதுகாறும் இதனைக் கூர்ந்து நோக்கியதில்லை என்பது மேலும் வருத்தத்திற்குரிய விடயம்.

ஆசிரியர் பணி என்பது ஒரு சாதாரண விடயமல்ல. ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் பதினொன்றாம் வகுப்புக்கு செல்ல தயார்படுத்திக் கொள்கிறான் ; ஒரு 12-ம் வகுப்பு மாணவன் தன்னை கல்லூரிக்குள் நுழைவதற்கு ஆயத்தப்படுத்திக் கொள்கிறார். இது இப்படியாக இருக்க உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக்கல்வி பள்ளிகளில் பணிபுரியக் கூடிய ஆசிரியர்கள் அவர்களுக்கு அந்தந்த பாடங்களை அர்ப்பணிப்பு உணர்வோடு போதித்து, அடிப்படை ஞானத்தையும், ஒழுங்கையும் கடைபிடிக்கக் கற்றுக் கொடுக்கின்றனர் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. 

ஆனால் ஒரு மாணவன் கல்லூரிக்குள் நுழைந்தவுடன் அது தொழில்நுட்பக் கல்லூரியாகவோ, பொறியியல் கல்லூரியாகவோ, மருத்துவக் கல்லூரியாகவோ அல்லது கலை அறிவியல் கல்லூரியாகவோ இருக்கலாம். இங்கிருந்துதான் அந்த மாணவனின் வாழ்க்கைக்கான பயணம் ஆரம்பமாகிறது. அவனை வெளி உலக வாழ்க்கைக்கு தயார்படுத்துவது உயர் கல்வியின் நோக்கம். இதற்குப் பிறகு  மேற்படிப்புக்காக, வேலைக்காக அல்லது தொழிலுக்காக என வெளியுலகை நோக்கிய அவனது பயணம் தொடங்குகிறது. இதுவரை ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மொத்தம் 12 வருடங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு ஆகிய இரு வருடங்களில் மட்டுமே  பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவன் கல்லூரியில் வருடந்தோறும் இருமுறை பொதுத்தேர்வு எழுத வேண்டி வரும். அடுத்ததாக பள்ளிக்கூடங்களில் குழந்தைக்கு உணவை ஊட்டுவது போல சொல்லிக்கொடுத்த கட்டமைப்பிலிருந்து அவனை மீட்டெடுத்து தானாக கற்கக்கூடிய ஒரு கட்டமைப்பிற்குள் அவனை தகவமைக்க வேண்டிய பணியுடன் தொடங்குகிறது கல்லூரிப் பேராசிரியரின் பணி.

பள்ளிக்காலம் முழுவதும் பெற்றோர், ஆசிரியர்களின் வலியுறுத்தலின் பெயரில் ஒரு கட்டாயத்திற்கு உட்பட்டு கல்வியைக் கற்காமல், மனப்பாடம் செய்து எழுதி, அறிவைப் பெருக்காமல் மதிப்பெண்களை மட்டும் எடுத்து வந்துள்ள மாணாக்கர்களுக்கு, முதலில் கல்வி என்றால் அறிவைப் பெறுவது என்ற புரிதலை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகிவிட்டது. இதன் நடுவே பள்ளிப்படிப்பு வரை கல்வி நிலையம் குறித்த ஒரு இறுக்கத்திற்கும், கட்டாயத்திற்கும் ஆளான மாணவன் கல்லூரியில் சிறகடித்துப் பறக்க விரும்புகிறான். எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்க விரும்புவதில்லை. கல்லூரி காலகட்டத்தில் பெற்றோர்களும் அவ்வளவு கண்டிப்பாக இருப்பதில்லை. உடை, உணவு, நண்பர்கள் என பல விடயங்களிலும் அவன் புதிய சூழல்களை எதிர்கொள்கிறான். நல்லது, கெட்டது பிரித்துப் பார்க்கக்கூடிய இடத்தில் இருப்பதில்லை. பதின்ம வயதின் இறுதிக்கட்டத்தில் தன்னை ஒரு கதாநாயகன் அல்லது கதாநாயகியாக நினைத்துக்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கின்றனர்.

10- 20 சதவிகிதம் பேர், மெல்ல மெல்ல சிற்சில தீய பழக்கங்களுக்கும் ஆளாகிறார்கள். ஒரு தாயின் அன்போடும் கனிவோடும், தந்தையின் கண்டிப்போடும் அரவணைப்போடும், நண்பனைப் போன்ற சினேகத்தோடும் ஒரு பேராசிரியர் அவனை அணுக வேண்டியுள்ளது. அவனது ஆழ்மனப் பிரச்சினைகளை, சிக்கல்களை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு அவனுக்குத் தேவையான ஆலோசனைகளை சொல்லி அவனை நெறிப்படுத்தி தேவைப்பட்டால் மனநல ஆலோசனைக்கும் வழி வகுக்கிறார். மேலும், அவனுக்குள் இருக்கக்கூடிய திறமைகளை மீட்டெடுத்து, அவனை சுய தேடலுக்கு உட்படுத்தி, அவனை ஒரு நல்ல குடிமகனாக நாட்டுக்கு தர வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு பேராசிரியர்களிடம் உள்ளது. 

கல்லூரிப் பாடங்கள் மட்டும் நடத்துவதோடு அல்லாமல்  மாணவர்தம் பண்புநலன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விதமான போட்டிகளில் பங்குபெற அவர்களை ஊக்குவிப்பது, ஆயத்தப்படுத்துவது அதற்குத் தேவையான உதவிகளை வழங்குவது, தோல்வியுறும் போது தட்டிக் கொடுப்பது, வெற்றி பெறும்போது அடுத்த நிலைக்கு தயார்படுத்துவது என அவனை உலக வாழ்க்கைக்கு, புற வாழ்க்கைக்கு தயார்படுத்தும் முதன்மையான பணியை செய்து வருபவர்கள் பேராசிரியர்கள்.

ஒவ்வொரு வருடமும் 10 - 14 பாடங்கள் வரை ஒரு மாணவன் தேர்வு எழுத வேண்டி வருகிறது. அதற்குமுன் சிறிய அளவில் அவனுக்கான தேர்வுகள் நடத்தப்படும். அதற்கான தயார்படுத்துவதிலிருந்து, ஒரு பேராசிரியரின் விரிவுரையில் இருந்து எவ்வாறு குறிப்பு எடுக்க வேண்டும், அந்தக் குறிப்புகளை எவ்வாறு விரிவாக எழுத வேண்டும், இது தவிர பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட விடயங்களை மற்ற பார்வை நூல்களிலிருந்து எவ்விதம் அவன் படிக்க வேண்டும், எந்த அளவுக்கு நூலகத்தை அவன் பயன்படுத்த வேண்டும், அதற்கு அவனுக்கு மொழி எந்தளவு உறுதுணையாக உள்ளது,  நேர மேலாண்மை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என இன்ன பிற பல விஷயங்களை அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் மாபெரும் கடமை பேராசிரியருக்குள்ளது. 

கற்றுக் கொடுத்ததோடு நிற்காமல் தான் கற்றவற்றை அடுத்தவர் முன் பகிர கருத்தரங்கு, கலந்துரையாடல் போன்றவை வகுப்பறையில் வடிவமைக்கப்படுகின்றன. ஒரு மாணவன் 40 - 60 பேர் உள்ள தனது வகுப்பறையில் அனைவர் முன்னிலும் தனது கருத்தைப் பகிரத்  தொடங்கிவிட்டால் பிறகு என்றும் அவனுக்கு எந்த மேடையிலும் பயம் என்பது இருக்காது. அதற்கான முன்னெடுப்பு தான் இவை அனைத்தும். அதைப்போல் அனுதினமும் கல்லூரியின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளிலிருந்து வரும் சுற்றறிக்கைகள், பிற கல்லூரிகளிலிருந்து வரும் போட்டி மற்றும் கருத்தரங்கு சார்ந்த அழைப்பிதழ்களை அறிந்து கொண்டு அவற்றில் பங்கேற்பதன் மூலம் அவன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள, வார்த்தெடுத்துக்கொள்ள, வளர்த்துக் கொள்ள அவை ஒரு வாய்ப்பாக அமையும். எனவே அவற்றைத் தொடர்ந்து உற்றுநோக்கி தனக்கேற்ற ஒரு வாய்ப்பு வரும் போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் அவனை வலியுறுத்துகிறார்கள். அதன்மூலம் அவனது திறமையை அறிவை வெளிக்கொண்டுவர விசாலப்படுத்திக் கொள்ள அவனுக்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இவ்விதமாய், சிற்பி ஒரு சிலையை செதுக்குவது போல, பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குள் காலெடுத்து வைக்கும் மாணவனை மெதுமெதுவாக  மாற்றி, நெறிப்படுத்தி, இறுதியாண்டு முடிப்பதற்குள் அவனை ஒரு சிறந்த குடிமகனாக நாட்டுக்குக் கொடுப்பதில் பேராசிரியர்களின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட பேராசிரியர்கள், நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதில் இருந்து புறக்கணிக்கப்படுகிறார்கள்.

கலைத்துறையில் கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். நாட்டின் உயர்ந்த விருதுகள் பத்மஸ்ரீ , பத்மபூஷண், பத்மவிபூஷண் மூலம் பலதுறைப் பெருமக்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். அறிவியல் துறை மூலம் விஞ்ஞானிகள் கௌரவிக்கப்படுகிறார்கள். விளையாட்டுத் துறையில் கூட துரோணாச்சாரியார் விருது வழங்கப்படுகிறது. ஆனால்  இவர்கள் அனைவரையும் உருவாக்கக்கூடிய ஏணிகளாக இருக்கக்கூடிய கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எப்படி இதுபோன்ற விருதுகளில் இருந்து முழுமையாக  புறம் தள்ளப்படுகிறார்கள் என்பது புரியவில்லை.

ஒரு நாட்டின் முதுகெலும்பு விவசாயமும், கல்வியும், மருத்துவமும். அப்படியிருக்க மூன்றில் ஒன்றான கல்வித்துறையில், உயர்கல்வியை கற்றுத்தரும் பேராசிரியர்களை ஒதுக்குவது சரியான அணுகுமுறை அல்ல. வரும் ஆண்டுகளில் ஆசிரியர் தினத்தில், அரசின் பார்வை மாறி, உயர்கல்வித் துறைக்கென நல்லாசிரியர் விருது வழங்கப்பட வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வெள்ளியங்கிரி மலையின் படிக்கட்டுகளில்.......மூர்த்தி

 


2015 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று முறை வெள்ளியங்கிரி சென்று வந்தோம். ஒவ்வொரு முறையும் ஏழாவதுமலை ஏறும்போது இனி வெள்ளியங்கிரி வரவே கூடாது என தோன்றும். ஆனால் அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் சென்று வந்தோம். மூன்றாவது முறையாக 2017'ல் சென்று வந்தபோது இனி போதும் சதுரகிரி போன்று வேறு இடங்களுக்கு போகலாம் என முடிவு செய்தோம். அதன்பிறகு வெள்ளியங்கிரி போகவில்லை. வேறு இடங்களுக்கும் திட்டமிடவில்லை. இந்த ஆண்டு சுரேந்தர் அழைத்து வெள்ளியங்கிரி போகலாமா என்றார். ஆண்மீக பயணம் என்பதை விட நட்பு பயணம் என்பதால் போகலாம் என முடிவு செய்து சென்ற ஒரு வெள்ளிக்கிழமையை பயண நாளாக உறுதி செய்தோம்.

இரண்டு பேரூம் அவரவர் தரப்பில் இன்னும் யாரேனும் வருவதாக இருந்தால் இணைந்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் நண்பர்களிடன் விசயத்தை சொன்னோம். சில நண்பர்கள் வருவேன் ஆனா வரமாட்டேன் எனச்சொல்ல ஒரு வித குழப்பத்துடனே இருந்தோம். இறுதியாக சுரேந்தர் குழுவினர் முத்தையா நாள் கிளம்பிச் சென்றனர். சில காரணங்களால் நானும் பூபாலன் அண்ணாவும் அடுத்த நாள் தான் கிளம்ப முடிந்தது.

அடுத்த நாள் மாலை 6 மணிக்கு மலை ஏற ஆரம்பிக்கலாம் என்றிருந்த திட்டம் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு நண்பகல் 12 மணிக்கு கிளம்பினோம்‌. மாலை நான்கு மணிக்கு பூண்டியை அடைந்தோம். அடிவார பகுதியில் அதிகமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் மேற்கொண்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வில்லை. ஒன்னரை கி.மீ முன்பு பார்க்கிங் பகுதி இருந்தது. காரை நிறுத்தி லாக் செய்து விட்டு ஆட்டோ/பேருந்து வந்தால் ஏறிக்கொள்ளலாம் என காத்திருந்தோம்.

டாடா ஏஸ் ஒன்று வந்தது. அதை நிறுத்தி ஏறிக்கொண்டோம். ஈஷாவிற்கு சொந்தமான வண்டி அது. அந்த வண்டியில் சிறிது தூரம் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து அடிவாரத்தை அடைந்தோம்.

மலை ஏறுவதற்கு முன்பு பிளாஸ்டிக் மற்றும் புகை/போதை பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக நடைபெறும் வழக்கமான சோதனைக்கு  பின் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இருபது ரூபாய் வாங்கிக்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்தார்கள்‌. திரும்ப வரும்போது ஸ்டிக்கரை கொடுத்தால் 20 ரூபாயை வாங்கிக்கொள்ளலாம்.

படிக்கட்டு துவங்கும் இடத்தில் மூங்கில் குச்சிகள் கிடந்தன. மலை ஏறியவர்கள் இறங்கும்போது வீசிய குச்சிகளாக இருக்கலாம். புதிய குச்சிகளும் இருந்தன. ஆளுக்கொரு குச்சியை எடுத்துக்கொண்டு ஏற துவங்கியபோது மணி 4.15. படிக்கட்டுகளை கொண்ட முதல் மலையில் ஏற துவங்கிய சிறிது நேரத்திலேயே வியர்த்து கொட்டியது. பாதி தூரம் சென்றதும் 'முதல் மலை முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?' என எதிரில் வருபவர்களை கேட்க துவங்கி விட்டோம். ஒவ்வொரு மலையிலும் ஏறுபவர்களும் சரி இறங்குபவர்களும் சரி எதிரில் வருபவர்களிடம் 'இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு' கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள். இன்னும் கொஞ்சம் தூரம் தான் என்று சொன்னால் கொஞ்சம் தெம்பாக செல்லலாம். அதனாலேயே சிலர் அதிக தூரம் இருந்தாலும் 'இன்னும் பத்து நிமிஷம் தான் போங்க' என்பார். இந்த பதிலை எங்களுக்கும் சிலர் சொன்னார்கள். அதை நாங்களும் சிலருக்கு சொல்லி திருப்தி அடைந்தோம்(!?).

முதல் மலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் கோவையை சேர்ந்த கௌதம் அறிமுகம் ஆனார். கௌதமுக்கு இது இரண்டாவது முறை அதுவும் இந்த வருடத்திலேயே. முதல் முறை வரும்போது அவரது அப்பாவுடன் வந்துள்ளார். இரண்டாவது முறையாக உறவினர் பெண் மற்றும் கௌதமின் அத்தை மகள்களை கூட்டிக்கொண்டு வந்துள்ளார்.'அண்ணா மெதுவா போங்க நானும் உங்க  கூடவே வந்திடறேன்' என்றவாறு அவ்வப்போது என்னுடைய மூங்கிலை வாங்கி ஊன்றிக்கொண்டு வந்தார். கௌதம் உடன் வந்தவர்கள் பின்னால் வந்துகொண்டிருக்க, முன்னால் சென்று அவர்கள் வரும்வரை நன்றாக ஓய்வெடுக்கலாம் என்பது தான் கௌதமின் திட்டம்.

முதல் மலையின் எல்லையான வெள்ளை பிள்ளையார் கோவிலை அடைந்ததும் கௌதம் நேராக அங்கு முன்னால் இருந்த கடைக்குச் சென்றார்.முன்னைவிட இப்போது ஆங்காங்கே கடைகள் அதிகமாக இருந்தன. ஒரு கடையில் லெமன் சோடா விலையை கேட்டபோது தலையோடு வயிறும் சேர்ந்து சுற்றியது. ஆனாலும் உடலுக்கு தேவை என்பதால் 100 ரூபாய் கொடுத்து வாங்கி குடித்தோம். திரும்பி பார்த்த போது கௌதம் இன்னும் அதே கடையில் தான் நின்று கொண்டிருந்தார். சத்தமாக கௌதமை அழைத்து நாங்கள் முன்னால் செல்வதாக கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். மேலே செல்ல செல்ல உஷ்ணம் குறைந்து இதமான காற்று உடலை வருடியது. இரண்டாவது மலையை கடக்கும்போது உடல் வார்ம் அப் ஆகி மலை ஏற‌ ஏதுவாக இருந்தது. நான்காவது மலை ஏறும்போது வெளிச்சம் விலகி இருள் கவிழ துவங்கியது. எடுத்துச் சென்றிருந்த சிறிய டார்ச் உதவியுடன் பயணத்தை தொடர்ந்தோம்.

ஏழாவது மலையை முடித்து கோவிலை அடைந்த போது இரவு 9.00மணி ஆகி இருந்தது. கூட்டமே இல்லாமல் இருந்ததால் விரைவாக தரிசனம் முடிந்தது. மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை வைத்து சிவ லிங்கத்தை அழகாக காட்சிப் படுத்தியிருந்தார்கள். மலை ஏறியவர்கள் வரிசையாக தரிசனம் முடித்தால்  திருநீறு வைப்பார்கள். அவர்கள் திருநீறு பூசி விடும்போது ஜில் என இருக்கும். எனக்கெல்லாம் அந்த ஜில்லில் தான் மலை ஏறிய முழு திருப்தி கிடைக்கிறது.

சிறிது நேர ஓய்விற்கு பிறகு 9.30 மணியளவில் மலை இறங்க துவங்கினோம். ஏழாவது மலை செங்குத்தாக இருக்கும் என்பதால் ஏறும்போதும் இறங்கும்போது சிரமமாக தான் இருக்கும். ஏறும்போது பாறைகள் உள்ள பகுதி வழியாக ஏறலாம். இறங்கும்போது மண் பாதையாக இருப்பதால்   கால்களுக்கு பிரேக் போடுவது சற்று சவாலாகத்தான் இருக்கும். இதற்கு முன்பு போன போதெல்லாம் 'தெய்வமே..புயல் வேகத்துல போயிட்டு இருக்கேன்..குறுக்க ஏதும் மண்ணு லாரி வராம பாத்துக்கணும் சாமி' என வடிவேலு சொல்வதைப் போல் வெள்ளியங்கிரி ஆண்டவரை வேண்டிக்கொண்டு ஒரே மூச்சில் கிட்டத்தட்ட ஏழாவது மலையில் பாதி மலையை கடந்து விடுவோம். இம்முறை பூபாலன் அண்ணா வந்ததால் கையில் இருந்த குச்சியால் பிரேக் போட்டு பிரேக் போட்டு நிதானமாகவே இறங்கினோம்.

இறங்கும்போது நிச்சயம் கௌதமை சந்திப்போம் என உள்ளூர ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்ததால் மலை ஏறுபவர்களில் சிறுவர்கள் இருந்தால் அதில் கௌதம் முகம் தெரிகிறதா என உற்றுப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஐந்தாவது மலையில் கௌதம் அவர் உறவினர்களோடு நின்றுகொண்டிருந்தார்.  'கெளதம்' என்றவாறே அருகில் சென்றேன். இருளில் சரியாக தெரியாததால் சில வினாடிகள் தாமதத்திற்கு பின் அடையாளம் கண்டுகொண்டு 'அண்ணா அதுக்குள்ள போயிட்டு வந்துட்டிங்களா' என்றார். அந்த இடத்தில் இருந்த இன்னொரு பாதையில் போகச் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்தோம்.

வழியில் ஒரு கடையில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற உணவுகள் இருந்தது. சாப்பிட்டு போகலாம் என கடைக்கு சென்று ஆர்டர் குடுக்க தயாராக நின்றிருந்தோம். ஏற்கனவே சாப்பிட்டு விட்டு பில் குடுக்க வந்த ஒருவர் 'என்ன அரிசி நல்லாவே வேகலை?' என கேட்டார். 'நல்லே வேளையாக வந்து காப்பாத்துனிங்க' என மனதிற்குள் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினோம். மலை ஏறும்போது ஒரு கடையில் கம்பங்கூழ் குடித்தோம். நன்றாக இருந்தது. இப்போது இறங்கும்போது அதே கடையில் குடிக்கலாமென தேடிக்கொண்டு வந்து குடித்தோம். கிளம்புவதற்கு முன் நான் காலையில் வீட்டில் சாப்பிட்டதோடு சரி. பூபாலன் அண்ணாவும் கிளம்பும் முன் 11 மணிக்கு சாப்பிட்டது தான். இடையில் டீ சாப்பிட்ட பின் பசியில்லை என்பதால் சாப்பிடவில்லை. ஆனால் முதல் மலை ஏற ஏற பசி ஆரம்பித்து விட்டது. 'அவசரப்பட்டு சாப்பிடாம வந்துட்டமோ' என்றெல்லாம் தோன்றியது. ஒரு லெமன் சோடா, ஒரு வெள்ளரி, ஒரு கம்பங்கூழ், ஒரு பஜ்ஜி, ஒரு சுக்கு காஃபி இது தான் மலை ஏறும்போது எடுத்துக்கொண்ட உணவு. இறங்கும்போது ஒரு கம்பங்கூழ் மட்டுமே. இவற்றை அவ்வப்போது சரியான இடைவெளியில் எடுத்துக்கொண்டதால் உடல் ஒத்துழைத்தது. அதிலும் அந்த கம்பங்கூழ் தான் அதிக எனர்ஜி கொடுத்தது.

இறங்கும்போது கீழ வர வர கூட்டம் அதிகமாகியது. அதிலும் 11 மணி முதல் 12 மணி வரை இடையிலான நேரத்தில் ஏறியவர்கள் தான் அதிகம். இறங்குபவர்களுக்கு வழி இல்லாத அளவிற்கு கூட்டமாக இருந்தது.   இந்த நேரத்தில் மலை ஏற ஆரம்பித்தால் காலை 5,6 மணிக்கு எல்லாம் சூரிய உதயம் பார்க்கலாம். அதனால் தான் அவ்வளவு கூட்டம். அதன் பின் கூட்டம் குறைந்திருந்தது. எதிரே ஏறிக்கொண்டு வந்த ஒரு குழுவில் இருந்தவர்கள் அவ்வப்போது உடன் வந்தவர்களின் பெயர்களை சத்தமாக கூப்பிட்டு அவர்கள் வந்து கொண்டிருப்பதை உறுதிசெய்து கொண்டார்கள். சென்னையில் இருந்து வந்திருந்த ஒரு குழுவினர் கழுத்தில் விசில் மாட்டியிருந்தனர். அவ்வப்போது விசில் ஊதி தங்கள் குழுவினரை அடையாளம் கண்டுகொண்டனர்.

கடைசி மலை இறங்கும்போது மட்டும் எப்போது அடிவாரம் வரும் என இருந்தது. ஒரு வழியாக அதிகாலை 3.30'க்கு அடிவாரத்தை அடைந்தோம்.காலை ஏழு மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்து விட்டோம். இதற்குமுன் வெள்ளியங்கிரி ஏறிவிட்டு இறங்கும்போது எப்போது போய் காலை நீட்டி படுக்கலாம் என்று தான் இருக்கும். ஆனால் இம்முறை அப்படி இல்லை. இதற்கு காரணம் பூபாலன் அண்ணாவின் திட்டமிடல் தான். போகும்போது எலக்ட்ரால் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதை எடுத்துச்சென்றிருந்த வாட்டர் பாட்டில்களில் கலக்கி வைத்துக் கொண்டோம். சாப்பாடு சாப்பிட வில்லை என்றாலும் லெமன் சோடா, வெள்ளரி, கம்பங்கூழ் போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்தது. வழக்கமாக நாங்கள் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அடுத்து கீழே இறங்கும்போது வெய்யில் வந்து விடும். ஆனால் இம்முறை பயண நேரத்திற்கான அண்ணாவின் திட்டமிடலால் வெய்யில் பாதிப்பு இல்லை. வெள்ளியங்கிரி பயணத்தால் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் நல்ல பயிற்சியாக அமைந்தது.


ஆசிரியர் குழு

மலர் செல்வம்

ஈரோடு கதிர்

ஷான் கருப்பசாமி

ஆரூரன் விசு

அன்புமணி 

க்ருஷ்

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...