Thursday, June 1, 2023

வெள்ளியங்கிரி மலையின் படிக்கட்டுகளில்.......மூர்த்தி

 


2015 முதல் 2017 வரை தொடர்ந்து மூன்று முறை வெள்ளியங்கிரி சென்று வந்தோம். ஒவ்வொரு முறையும் ஏழாவதுமலை ஏறும்போது இனி வெள்ளியங்கிரி வரவே கூடாது என தோன்றும். ஆனால் அடுத்தடுத்து இரண்டு வருடங்கள் சென்று வந்தோம். மூன்றாவது முறையாக 2017'ல் சென்று வந்தபோது இனி போதும் சதுரகிரி போன்று வேறு இடங்களுக்கு போகலாம் என முடிவு செய்தோம். அதன்பிறகு வெள்ளியங்கிரி போகவில்லை. வேறு இடங்களுக்கும் திட்டமிடவில்லை. இந்த ஆண்டு சுரேந்தர் அழைத்து வெள்ளியங்கிரி போகலாமா என்றார். ஆண்மீக பயணம் என்பதை விட நட்பு பயணம் என்பதால் போகலாம் என முடிவு செய்து சென்ற ஒரு வெள்ளிக்கிழமையை பயண நாளாக உறுதி செய்தோம்.

இரண்டு பேரூம் அவரவர் தரப்பில் இன்னும் யாரேனும் வருவதாக இருந்தால் இணைந்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் நண்பர்களிடன் விசயத்தை சொன்னோம். சில நண்பர்கள் வருவேன் ஆனா வரமாட்டேன் எனச்சொல்ல ஒரு வித குழப்பத்துடனே இருந்தோம். இறுதியாக சுரேந்தர் குழுவினர் முத்தையா நாள் கிளம்பிச் சென்றனர். சில காரணங்களால் நானும் பூபாலன் அண்ணாவும் அடுத்த நாள் தான் கிளம்ப முடிந்தது.

அடுத்த நாள் மாலை 6 மணிக்கு மலை ஏற ஆரம்பிக்கலாம் என்றிருந்த திட்டம் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு நண்பகல் 12 மணிக்கு கிளம்பினோம்‌. மாலை நான்கு மணிக்கு பூண்டியை அடைந்தோம். அடிவார பகுதியில் அதிகமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் மேற்கொண்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வில்லை. ஒன்னரை கி.மீ முன்பு பார்க்கிங் பகுதி இருந்தது. காரை நிறுத்தி லாக் செய்து விட்டு ஆட்டோ/பேருந்து வந்தால் ஏறிக்கொள்ளலாம் என காத்திருந்தோம்.

டாடா ஏஸ் ஒன்று வந்தது. அதை நிறுத்தி ஏறிக்கொண்டோம். ஈஷாவிற்கு சொந்தமான வண்டி அது. அந்த வண்டியில் சிறிது தூரம் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து அடிவாரத்தை அடைந்தோம்.

மலை ஏறுவதற்கு முன்பு பிளாஸ்டிக் மற்றும் புகை/போதை பொருட்கள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக நடைபெறும் வழக்கமான சோதனைக்கு  பின் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இருபது ரூபாய் வாங்கிக்கொண்டு ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்தார்கள்‌. திரும்ப வரும்போது ஸ்டிக்கரை கொடுத்தால் 20 ரூபாயை வாங்கிக்கொள்ளலாம்.

படிக்கட்டு துவங்கும் இடத்தில் மூங்கில் குச்சிகள் கிடந்தன. மலை ஏறியவர்கள் இறங்கும்போது வீசிய குச்சிகளாக இருக்கலாம். புதிய குச்சிகளும் இருந்தன. ஆளுக்கொரு குச்சியை எடுத்துக்கொண்டு ஏற துவங்கியபோது மணி 4.15. படிக்கட்டுகளை கொண்ட முதல் மலையில் ஏற துவங்கிய சிறிது நேரத்திலேயே வியர்த்து கொட்டியது. பாதி தூரம் சென்றதும் 'முதல் மலை முடிய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?' என எதிரில் வருபவர்களை கேட்க துவங்கி விட்டோம். ஒவ்வொரு மலையிலும் ஏறுபவர்களும் சரி இறங்குபவர்களும் சரி எதிரில் வருபவர்களிடம் 'இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு' கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள். இன்னும் கொஞ்சம் தூரம் தான் என்று சொன்னால் கொஞ்சம் தெம்பாக செல்லலாம். அதனாலேயே சிலர் அதிக தூரம் இருந்தாலும் 'இன்னும் பத்து நிமிஷம் தான் போங்க' என்பார். இந்த பதிலை எங்களுக்கும் சிலர் சொன்னார்கள். அதை நாங்களும் சிலருக்கு சொல்லி திருப்தி அடைந்தோம்(!?).

முதல் மலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் கோவையை சேர்ந்த கௌதம் அறிமுகம் ஆனார். கௌதமுக்கு இது இரண்டாவது முறை அதுவும் இந்த வருடத்திலேயே. முதல் முறை வரும்போது அவரது அப்பாவுடன் வந்துள்ளார். இரண்டாவது முறையாக உறவினர் பெண் மற்றும் கௌதமின் அத்தை மகள்களை கூட்டிக்கொண்டு வந்துள்ளார்.'அண்ணா மெதுவா போங்க நானும் உங்க  கூடவே வந்திடறேன்' என்றவாறு அவ்வப்போது என்னுடைய மூங்கிலை வாங்கி ஊன்றிக்கொண்டு வந்தார். கௌதம் உடன் வந்தவர்கள் பின்னால் வந்துகொண்டிருக்க, முன்னால் சென்று அவர்கள் வரும்வரை நன்றாக ஓய்வெடுக்கலாம் என்பது தான் கௌதமின் திட்டம்.

முதல் மலையின் எல்லையான வெள்ளை பிள்ளையார் கோவிலை அடைந்ததும் கௌதம் நேராக அங்கு முன்னால் இருந்த கடைக்குச் சென்றார்.முன்னைவிட இப்போது ஆங்காங்கே கடைகள் அதிகமாக இருந்தன. ஒரு கடையில் லெமன் சோடா விலையை கேட்டபோது தலையோடு வயிறும் சேர்ந்து சுற்றியது. ஆனாலும் உடலுக்கு தேவை என்பதால் 100 ரூபாய் கொடுத்து வாங்கி குடித்தோம். திரும்பி பார்த்த போது கௌதம் இன்னும் அதே கடையில் தான் நின்று கொண்டிருந்தார். சத்தமாக கௌதமை அழைத்து நாங்கள் முன்னால் செல்வதாக கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தோம். மேலே செல்ல செல்ல உஷ்ணம் குறைந்து இதமான காற்று உடலை வருடியது. இரண்டாவது மலையை கடக்கும்போது உடல் வார்ம் அப் ஆகி மலை ஏற‌ ஏதுவாக இருந்தது. நான்காவது மலை ஏறும்போது வெளிச்சம் விலகி இருள் கவிழ துவங்கியது. எடுத்துச் சென்றிருந்த சிறிய டார்ச் உதவியுடன் பயணத்தை தொடர்ந்தோம்.

ஏழாவது மலையை முடித்து கோவிலை அடைந்த போது இரவு 9.00மணி ஆகி இருந்தது. கூட்டமே இல்லாமல் இருந்ததால் விரைவாக தரிசனம் முடிந்தது. மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை வைத்து சிவ லிங்கத்தை அழகாக காட்சிப் படுத்தியிருந்தார்கள். மலை ஏறியவர்கள் வரிசையாக தரிசனம் முடித்தால்  திருநீறு வைப்பார்கள். அவர்கள் திருநீறு பூசி விடும்போது ஜில் என இருக்கும். எனக்கெல்லாம் அந்த ஜில்லில் தான் மலை ஏறிய முழு திருப்தி கிடைக்கிறது.

சிறிது நேர ஓய்விற்கு பிறகு 9.30 மணியளவில் மலை இறங்க துவங்கினோம். ஏழாவது மலை செங்குத்தாக இருக்கும் என்பதால் ஏறும்போதும் இறங்கும்போது சிரமமாக தான் இருக்கும். ஏறும்போது பாறைகள் உள்ள பகுதி வழியாக ஏறலாம். இறங்கும்போது மண் பாதையாக இருப்பதால்   கால்களுக்கு பிரேக் போடுவது சற்று சவாலாகத்தான் இருக்கும். இதற்கு முன்பு போன போதெல்லாம் 'தெய்வமே..புயல் வேகத்துல போயிட்டு இருக்கேன்..குறுக்க ஏதும் மண்ணு லாரி வராம பாத்துக்கணும் சாமி' என வடிவேலு சொல்வதைப் போல் வெள்ளியங்கிரி ஆண்டவரை வேண்டிக்கொண்டு ஒரே மூச்சில் கிட்டத்தட்ட ஏழாவது மலையில் பாதி மலையை கடந்து விடுவோம். இம்முறை பூபாலன் அண்ணா வந்ததால் கையில் இருந்த குச்சியால் பிரேக் போட்டு பிரேக் போட்டு நிதானமாகவே இறங்கினோம்.

இறங்கும்போது நிச்சயம் கௌதமை சந்திப்போம் என உள்ளூர ஒரு எண்ணம் ஓடிக் கொண்டிருந்ததால் மலை ஏறுபவர்களில் சிறுவர்கள் இருந்தால் அதில் கௌதம் முகம் தெரிகிறதா என உற்றுப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஐந்தாவது மலையில் கௌதம் அவர் உறவினர்களோடு நின்றுகொண்டிருந்தார்.  'கெளதம்' என்றவாறே அருகில் சென்றேன். இருளில் சரியாக தெரியாததால் சில வினாடிகள் தாமதத்திற்கு பின் அடையாளம் கண்டுகொண்டு 'அண்ணா அதுக்குள்ள போயிட்டு வந்துட்டிங்களா' என்றார். அந்த இடத்தில் இருந்த இன்னொரு பாதையில் போகச் சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வந்தோம்.

வழியில் ஒரு கடையில் தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் போன்ற உணவுகள் இருந்தது. சாப்பிட்டு போகலாம் என கடைக்கு சென்று ஆர்டர் குடுக்க தயாராக நின்றிருந்தோம். ஏற்கனவே சாப்பிட்டு விட்டு பில் குடுக்க வந்த ஒருவர் 'என்ன அரிசி நல்லாவே வேகலை?' என கேட்டார். 'நல்லே வேளையாக வந்து காப்பாத்துனிங்க' என மனதிற்குள் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு கிளம்பினோம். மலை ஏறும்போது ஒரு கடையில் கம்பங்கூழ் குடித்தோம். நன்றாக இருந்தது. இப்போது இறங்கும்போது அதே கடையில் குடிக்கலாமென தேடிக்கொண்டு வந்து குடித்தோம். கிளம்புவதற்கு முன் நான் காலையில் வீட்டில் சாப்பிட்டதோடு சரி. பூபாலன் அண்ணாவும் கிளம்பும் முன் 11 மணிக்கு சாப்பிட்டது தான். இடையில் டீ சாப்பிட்ட பின் பசியில்லை என்பதால் சாப்பிடவில்லை. ஆனால் முதல் மலை ஏற ஏற பசி ஆரம்பித்து விட்டது. 'அவசரப்பட்டு சாப்பிடாம வந்துட்டமோ' என்றெல்லாம் தோன்றியது. ஒரு லெமன் சோடா, ஒரு வெள்ளரி, ஒரு கம்பங்கூழ், ஒரு பஜ்ஜி, ஒரு சுக்கு காஃபி இது தான் மலை ஏறும்போது எடுத்துக்கொண்ட உணவு. இறங்கும்போது ஒரு கம்பங்கூழ் மட்டுமே. இவற்றை அவ்வப்போது சரியான இடைவெளியில் எடுத்துக்கொண்டதால் உடல் ஒத்துழைத்தது. அதிலும் அந்த கம்பங்கூழ் தான் அதிக எனர்ஜி கொடுத்தது.

இறங்கும்போது கீழ வர வர கூட்டம் அதிகமாகியது. அதிலும் 11 மணி முதல் 12 மணி வரை இடையிலான நேரத்தில் ஏறியவர்கள் தான் அதிகம். இறங்குபவர்களுக்கு வழி இல்லாத அளவிற்கு கூட்டமாக இருந்தது.   இந்த நேரத்தில் மலை ஏற ஆரம்பித்தால் காலை 5,6 மணிக்கு எல்லாம் சூரிய உதயம் பார்க்கலாம். அதனால் தான் அவ்வளவு கூட்டம். அதன் பின் கூட்டம் குறைந்திருந்தது. எதிரே ஏறிக்கொண்டு வந்த ஒரு குழுவில் இருந்தவர்கள் அவ்வப்போது உடன் வந்தவர்களின் பெயர்களை சத்தமாக கூப்பிட்டு அவர்கள் வந்து கொண்டிருப்பதை உறுதிசெய்து கொண்டார்கள். சென்னையில் இருந்து வந்திருந்த ஒரு குழுவினர் கழுத்தில் விசில் மாட்டியிருந்தனர். அவ்வப்போது விசில் ஊதி தங்கள் குழுவினரை அடையாளம் கண்டுகொண்டனர்.

கடைசி மலை இறங்கும்போது மட்டும் எப்போது அடிவாரம் வரும் என இருந்தது. ஒரு வழியாக அதிகாலை 3.30'க்கு அடிவாரத்தை அடைந்தோம்.காலை ஏழு மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்து விட்டோம். இதற்குமுன் வெள்ளியங்கிரி ஏறிவிட்டு இறங்கும்போது எப்போது போய் காலை நீட்டி படுக்கலாம் என்று தான் இருக்கும். ஆனால் இம்முறை அப்படி இல்லை. இதற்கு காரணம் பூபாலன் அண்ணாவின் திட்டமிடல் தான். போகும்போது எலக்ட்ரால் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதை எடுத்துச்சென்றிருந்த வாட்டர் பாட்டில்களில் கலக்கி வைத்துக் கொண்டோம். சாப்பாடு சாப்பிட வில்லை என்றாலும் லெமன் சோடா, வெள்ளரி, கம்பங்கூழ் போன்றவை உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்தது. வழக்கமாக நாங்கள் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அடுத்து கீழே இறங்கும்போது வெய்யில் வந்து விடும். ஆனால் இம்முறை பயண நேரத்திற்கான அண்ணாவின் திட்டமிடலால் வெய்யில் பாதிப்பு இல்லை. வெள்ளியங்கிரி பயணத்தால் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் நல்ல பயிற்சியாக அமைந்தது.

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...