Thursday, March 6, 2025

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பார்த்தபடி பயணத்தைத் தொடங்கினேன். 

கோவில் திருவிழாவிற்குப் போக வேண்டும் என்றால் ஒரு வாரம் முன்பே வீட்டில் பலகாரம் செய்யத் தொடங்கி விடுவார்கள். புதுத்துணி, சொந்தபந்தம், கடைவீதி, கறிச்சோறு, கண்ணாமூச்சி விளையாட்டு, முறுக்குமீசை தாத்தாவின் மிட்டாய்கடை, மஞ்சள் நீராட்டு என்று நினைத்து நினைத்து ஊருக்குப் போகும் நாட்களுக்காகக் காத்துக்கிடந்தது இன்று முற்றிலும் மாறி விட்டது

போனோமா சாமியக் கும்பிட்டோமா வந்தோமா என்று கிளம்பி வரும் காலம் இது. போகும் வழி எல்லாம் அம்மாவுடன் பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டு  சென்றதில் பயணதூரம் சற்றும் தெரியவில்லை. காலை 5 மணிக்கு கிளம்பி கோவிலை அடைய சரியாக 9 மணிஆகிவிட்டது. நீரோடை ஒட்டிய கோவில், சுற்றி இருக்கும் கட்டிடங்களின் அமைப்புகள் மாறினாலும் அந்த ஊரின்அழகு சற்றும் குறையவில்லை. ஊர் முழுக்க மாவிலைத் தோரணம், வாசல் நிறைய வண்ணம் பூசிய கோலங்கள், ஆங்காங்கே மக்கள் கூட்டம், தேர்க்கடைகள் என இருந்தாலும் பழைய உயிரோட்டத்தை இழந்திருந்து. இந்தத் திருவிழா நாளிற்காகக் காத்துக்கிடந்த காலங்கள் மாறி இன்று திருவிழாக்கள் மக்களுக்காகக் காத்துக் கிடக்கின்றன. சாமி தரிசனம் பார்த்தாச்சு சரி பக்கத்துல இருக்க தன் தங்கச்சியைப்  பார்த்திட்டு போகலாம் என்று அம்மா சொல்ல சரி என்று நானும் அம்மாவும் கிளம்பினோம்

வயல்கள், அணைக்கட்டு, கரும்புத் தோட்டம் என்று மிகவும்அழகான ஊர். பல நாட்கள் கழித்து  சந்தித்த உற்சாகம் வீடு முழுவதும் நிரம்பி வழிந்தது. மதிய உணவை முடித்து விட்டு பேசிக்கொண்டு  இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை, பொழுது சாய்ந்து விட்டது. பழைய நினைவுகளைத் தன் தங்கையிடம் அசைபோட்டுக் கொண்டு இருந்த அம்மாவை வாங்க கிளம்பலாம் என்று சொல்ல மனம்  இல்லை .சரி ஒரு இரவுதானே தங்கி விட்டுப் போகலாமா என்று கேட்டதும்  அனைவரின் முகத்திலும் சந்தோஷம் பூத்துக் குலுங்கியது.

இரவு முழுவதும் அக்கா தங்கை இருவரும் பேசிக் கொண்டே இருந்தார்கள் . அடுத்த நாள் காலை வீட்டைச் சுற்றி இருக்கும் வயல்வெளிகளைப் பார்க்கக்  கிளம்பிவிட்டோம். அணையின் அழகை இரசித்துக் கொண்டு இளநீர் அருந்திவிட்டு, அங்கு மீன்பிடி சிறுவர்களிடம் பேசி சற்று பொழுதைக் கழித்தோம். பசி வயிற்றைக் கிள்ளவே வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.


சித்தி வீட்டின் எதிர் வீடு  அந்த ஊரிலேயே பெரிய வீடு. முன்னர் பார்த்ததை விட இம்முறை புதுநிறம் பூசி மெருகேறி இருந்தது. மூன்று கார் முன்வாசலிலும், ஒரு பழைய மாருதி வீட்டின் பின் புறத்திலும் நின்றது . அங்கு இங்கு என்று வேலையாட்கள் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்கள்வீட்டின் முதலாளி அம்மா வேலை ஆட்களை கவனிக்க மாடியில் நின்று கொண்டிருந்தாள். எங்களை பார்த்ததும் சிறு புன்னகை பூத்தாள். நாங்களும் பதிலுக்குப்  புன்னகைத்துவிட்டு கேட்டைத் திறந்து சித்தி வீட்டிற்குள்ளே நுழையவும், வாசலில் ஒரு வெள்ளை இன்னோவா வந்து நின்றதுஒரு கூடையில் 5 அடுக்கு டிபன் கேரியருடன் நடுத்தர வயது இளைஞர் ஒருவர் இறங்கி எதிர்வீட்டிற்குள் சென்றார். 10 நிமிடம் கழித்து அங்கிருந்து வெளியே வந்தவர், சித்தி வீட்டிற்குள் வந்தார். அவரை உட்கார சொல்லிவிட்டு என் சித்தி டீ கொண்டு வந்து கொடுத்தாள். ஒன்றும் புரியாமல் நின்ற என்னைப் பார்த்து ஒரு குறுஞ்சிரிப்பைத் தூவிவிட்டு மீண்டும் அந்த இளைஞர் பெரிய வீட்டிற்குள் சென்றுகூடையை எடுத்து வந்து காரில் ஏறி மறைந்து விட்டார்.

என்னதான் சங்கதி என்று தெரிந்து கொண்டே தீர வேண்டும் என என் சித்தியிடம் கேட்டேன். அந்தப் பெரிய வீட்டில் 95 வயது மிக்க ஒரு பாட்டி இருக்கிறார், அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். அதில் ஒரு மகள்வழிப் பேரன்தான் இங்கு வசிக்கிறார் . அதாவது அந்தப் பாட்டியின் கொள்ளுப்பேரன் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள். அந்தப் பாட்டியின் மற்ற  இரண்டு பெண் பிள்ளைகள்தான் அவருக்கு உணவு கொடுப்பதாகவும்அவர்கள் இருவரும் வேறு வேறு ஊர்களில் இருப்பதாகவும் மாதம் ஒருவர் தினமும் காரில் உணவு அனுப்புவதாகவும் சொன்னார்கள்

'தோட்டம் துறவு என்று 100 ஏக்கர் இருக்கும், பெரிய தலைக்கட்டு. அந்தக்  காலத்தில் சீதனமாக நகைபணம் என்று அளவில்லாமல் கொண்டு வந்தவள். மூன்று பெண் பிள்ளைகளை பெற்று எடுத்து நல்ல முறையில் பெரிய இடங்களுக்குக் கல்யாணம் செய்துவைத்தவள். இன்று எள்ளுப்பேரன் பேத்தி பார்த்தவள். இருந்தும் அவள் நிலைமை என்னமோ தினமும் சாப்பிடக்  காத்துக்கிடக்கும்  அவலநிலை. வைராக்கியம் அதிகம், ஒரு சொல்லைத் தாங்க மாட்டாங்க, ஊருக்கே சோறு போட்டவங்க இன்னிக்கு ஒரு வேலை சாப்பாடு பலமைல் தூரத்துல இருந்து வரவேண்டி இருக்கு. அவங்களுக்கே இந்த நிலைமைனா நாளைக்கு நமக்கு எல்லாம் எப்படியோ' என்று முனகிக் கொண்டே சித்தி வீட்டிற்குள் சென்றாள்.

ஒரு காலத்தில் மகாராணி, இன்று? முதுமை நமக்கு எத்தனை பரிசுகளை அள்ளித் தருமோ என்று யோசித்தபடியே நானும் அம்மாவும் ஊர் திரும்பினோம். நினைவுகளையும் பல கேள்விகளையும் சுமந்த ஒருபயணம்.


வீழ்வேன் என்று நினைத்தாயோ?

"அம்மா, அம்மா, ஐயோ!"  என்ற சிவசாமியின் சத்தம் கேட்டு தடாலெனக்  கண்விழித்தாள் ஜெயமணி. சட்டெனத் தெளிந்து மனசை அழுத்தும் வேதனையுடன் கணவரைப் பார்த்தாள். கதறிய சுவடே இல்லாமல் மீண்டும் தூங்கிவிட்ட கணவரைப் பார்த்து, "ஏங்க தண்ணி ஏதாச்சும் வேணுமா?" என்றாள். பதில் வராமல் போகவே, கையை ஊன்றி எழுந்து அமர்ந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு  மெல்ல நடந்து ட்யூப்லைட்டை உயிர்ப்பித்தாள்.   
 
2:15 என்று சுவர் கடிகாரத்தில் மணி பார்த்துவிட்டு சொம்பில் வைத்திருந்த தண்ணீரை முழுவதும் குடித்தாள். "எப்படியிருந்த மனுசன்?" என்று முணுமுணுத்துவிட்டு லைட்டை அணைத்துவிட்டு மீண்டும் கட்டிலுக்கு வந்து கையை ஊன்றி சாய்ந்து படுத்துக்கொண்டாள்.   
 
கண் மூடிய வினாடி மகள் மலர்க்கொடி பற்றிய பல நினைவுகள் ஜெயமணியைச் சுற்ற ஆரம்பித்தன. எவ்வளவோ முயற்சித்தும் தூங்க முடியாது போகவே, தன் கைப்பேசியைத் தேடி எடுத்து வாட்ஸப்பைத் திறந்தாள். ஆற்றவே முடியாத ஆதங்கத்தோடு  மலர்க்கொடியிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை 57வது முறையாகப் படித்தாள்.   
 
“அம்மா, இனி நான் பயந்து ஒளிந்து வாழப்போவதில்லை. எனக்கென ஒரு அடையாளத்தைத் தேடிப்போகிறேன். நிச்சயம் சீக்கிரமே திரும்பி வருவேன். நான் வரும்வரையில் என்னைத் தேடவேண்டாம்".  
                                                                                                                                                  
குறுஞ்செய்தியைப் படிக்கும் போதே, அந்த ஒரு நாள் தன் கணவன் மற்றும் மகளின் வாழ்வில் நடந்தேறி இருக்காமல் இருந்திருக்கலாம் என  ஜெயமணியின் மனது ஏங்கியது.   
 
18 வருடங்களுக்கு முன் தனக்குப் பெண் குழந்தை பிறந்ததை சிவசாமி திருவிழாக் கோலமாய் கொண்டாடியது அவள் மனதில் நிழலாடியது. பெண் குழந்தையை வீட்டின் பாரமாகவும், பீடையாகவும், தரித்திரமாகவும் கருதிக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில்  சிவசாமியின் இவ்வாறான கொண்டாட்டம், அவனைப் பைத்தியக்காரன் என்று ஊர் மக்களை எள்ளி நகையாட வைத்தது. சிவசாமியோ தன் மகளைச் சரித்திரம் படைக்க வைக்கப் போவதாகப் பெருமையாகக் கூறினார். சீராட்டி வளர்த்ததோடு, சாதனைப் பெண்ணாக உலா வர வேண்டிய மிடுக்கோடு வளர்த்தார் என்பதே தகும். சுற்றத்தின் எதிர்ப்புப் பார்வையை புறந்தள்ளி அத்துணை பாடுபட்டது இதற்காகத்தானா என்னும் கேள்வி எழுந்த போது அந்தக் குரூர நாளின் நிகழ்வும் ஜெயமணியின் மனக்கண்ணில் விரிந்தது. 
 
திகட்டத் திகட்டப் பாசத்தைக் கொட்டி வளர்த்த மகள். என் வீட்டு மஹாலக்ஷ்மி என்று சிவசாமி சொல்லிக் கொண்டே இருப்பார். மலர்க்கொடியும் அப்பாதான் தனது உலகம் என்று இருந்தவள். "பெண் பிள்ளைகள் பிறந்து விட்டால் காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கணும், இல்லைனா இப்படித்தான்" என்று  சொந்த பந்தங்கள் சொல்லிச் சொல்லி சிவசாமின் மனதையும் உடலையும் சோர்வடையச் செய்திருந்தனர். அவள் முடிவின் பின்னணி என்னவாக இருக்கும் என யோசிக்கத் தொடங்கினாள் ஜெயமணி. 
   
அன்றைய நாள் மழைச் சாரல் பரவிய மாலைப் பொழுது. வீட்டு வாசலில் குரல் உயர்ந்தது. "இவள் ஏன் இப்படிப் பேசுகிறாள்?", என்ற சிவசாமியின் சத்தம் அது.  இன்றுவரை ஜெயமணியின்  காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. 
  
"மலர்க்கொடியின்  நிலைமை என்ன? அவள் எங்கே போயிருப்பாள்?" இந்தக் கேள்விகளோடு ஜெயமணி மனது குழம்பியது. மெள்ள மெள்ள இருள் நீங்கிச் செங்கதிர்களால் அந்த அறையின் மூலைமுடுக்கு வரை சூரியன் ஆக்கிரமித்துக்  கொண்டிருந்தது. நேரம் போனதே தெரியாமல் ஜெயமணி யோசித்துக் கொண்டிருந்தாள். இப்படியே பல இரவுகள் தூக்கத்தை மறந்து மகளின் சிந்தனைகளோடு கழித்துவிட்டாள். 
 
ஊர் என்னமோ பேசட்டும் தங்கள் மகள் வீட்டைவிட்டு வெளியேற ஒரு முக்கியக் காரணம் இருக்கும் என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் ஜெயமணிக்கு யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.    கதவைத் திறந்தால், மலர்க்கொடியின் தாய்மாமன் சண்முகம் நின்று கொண்டிருந்தார். 
    
"வாடா தம்பி, என் நிலைமையைப் பார்த்தியா?", என்றாள் ஜெயமணி.  
   
"நிலைமை எல்லாம் இருக்கட்டும். புள்ள வீட்டை விட்டுப் போய் ரெண்டு நாள் ஆச்சு. புருஷனும் பொண்டாட்டியும் என்ன விளையாடுறீங்களா?. அவ அனுப்புன ஒரு மெசேஜ் தாண்டி, அவ எங்க இருக்கிறா?எங்க போனா? ஒண்ணுமே தெரியல. பொம்பளப் புள்ள விஷயம். விளையாட்டா இருக்காதீங்க", என்று கோவக் குரலில் சண்முகம் பேசினான். 
 
"என்னத் தேடாதீங்கன்னு  சொல்லிட்டுப் போன அவள எங்க தேடச் சொல்ற?"   
 
"அதுக்கு மூலையில உட்கார்ந்து அழுதுகிட்டு இருந்தா எல்லாம் சரியாப் போயிடுமா? முதல்ல கிளம்பி வாங்க. ஸ்டேஷனில் போய் கம்ப்ளைண்ட் கொடுக்கணும்"   
 
"கம்ப்ளைண்ட் அது இதுன்னு போனா புள்ளைய ஏதாவது தப்பா சொல்லுவாங்கடா"   
 
"அட! என்னக்கா நீ? காலம் கெட்டுக் கிடக்குது. இதுவே ரொம்ப லேட்டு"  
 
"ஐயோ! சண்முகா  என்னென்னமோ சொல்ற, எனக்குப் பயமா இருக்குடா" 
 
"பேசுறதுக்கு நேரம் இல்ல. மாமன கெளம்பி வரச் சொல்லு. ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வரலாம்"   
 
சிவசாமி இவங்க பேசிக்கிட்டு இருந்ததெல்லாம் கேட்டுட்டு இருந்தவர் போலக் கிளம்பி வெளியே வந்தார். சிவசாமியைப் பார்த்ததும் குரலைக் கொஞ்சம் தாழ்த்தி "அக்கா, மாமன என் கூட வரச் சொல்லு. ஸ்டேஷனுக்குப் போகணும்" என்றார் சண்முகம். 
 
"அவன வண்டி எடுக்கச் சொல்லு. போலாம்" என்று சற்று மிடுக்காகவே பதில் பேசினார் சிவசாமி. 
 
"ஏனுங்க நானு?" என்றாள் ஜெயமணி.  
 
"நான் என்ன புள்ளைக்குக் கல்யாணம் பேசப் போறேனா? எல்லாரும் போறதுக்கு? நீ இரு. நானும் அவனும் போயிட்டு வரோம்".  
 
போற வழியில சண்முகம் சிவசாமி கிட்டப் பேச்சு கொடுத்தார்.  "அவதான் இப்ப கல்யாணம் எதுவும் வேண்டாம்னு சொன்னாளே. அதையும் மீறி உங்களை யாரு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னது?  புள்ளைக்கு என்ன 18 வயசுதான ஆகுது" 
 
"18 வயசானா கல்யாணம் பண்ற வயசு"  
 
"உடனே புடிச்சுக் கல்யாணம் பண்ணனும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?  புள்ளைய தைரியமானவளா வளக்கறது மட்டும் முக்கியமில்ல, அவ உணர்வுகளையும் மதிக்கணும்."  
 
"இப்ப என்ன சொல்ல வர? எல்லாத்துக்கும் நான் தான் காரணம்கிறயா?" என்றார் சிவசாமி.  
 
 "அதுக்கு இல்லைங்க மாமா, அவ அப்படி என்ன ஆசைப்பட்டுட்டா?"  
 
"ஆசைப்பட்டுட்டா, அதை உடனே நடத்தி வச்சிரணுமா? " 
 
இவ்வாறு பேசிக்கொண்டே இருவரும் காவல் நிலையத்தை சென்றடைந்தனர்.  
 
காவல் நிலையத்திற்குள் சென்றபோது இன்ஸ்பெக்டர் தனக்கு எதிரில் வெள்ளையும் சொள்ளையுமாக அமர்ந்திருந்தவரிடம், "சார் நீங்க எத்தனை லோடு மண் வேணும்னாலும் ஓட்டுங்க. ஆனா எக்காரணத்தைக் கொண்டும் பகல்ல ஓட்ட வேண்டாம். எப்பவாவது கேஸ் வேணும்ங்கறதுக்காக மட்டும் வண்டியைப் பிடிப்போம். நீங்களும் தொழில் பண்ணனும், நாங்களும் வேலை செய்யனும்னா இதெல்லாம் பண்ணித்தான் ஆகனும். வேற வழியில்ல சார். நீங்க டென்ஷன் ஆகாம கிளம்புங்க. நான் பாத்துக்கிறேன்", என சமாதானம் செய்து கொண்டு இருந்தார்.  
 
சண்முகமும் சிவசாமியும் அவர் கிளம்பும் வரை காத்திருந்து விட்டு இன்ஸ்பெக்டரிடம் விசயத்தைச் சொன்னார்கள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர் ரைட்டரைக் கூப்பிட்டுப் புகார் எழுதி வாங்கிக்கச் சொன்னார்.  
 
"சார், வயசுப் பொண்ணு விசயம். கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் பண்ணினா சிக்கலாகிடும்" என்றார் சண்முகம்.  
 
"உங்க சூழ்நிலை புரியுது. ஆனா கம்ப்ளைண்ட் ரெஜிஸ்டர் பண்ணினாதான் ஃபர்தரா மூவ் பண்ண முடியும். பொண்ணு வீட்ட விட்டுப் போன உடனே வந்திருந்தா பரவாயில்லை. இப்போ மூணாவது நாள்ல வந்து இப்படி சொல்லறது உங்களுக்கே நல்லா இருக்கா?" என்றார் இன்ஸ்பெக்டர். ஒருவழியாகப் புகார் எழுதித் தந்துவிட்டு இருவரும் வீடு திரும்பினர்.   
 
ஜெயமணி தனியாக இருந்திருந்த சமயத்தில் அதிகமாக அழுதிருந்ததன் அடையாளமாக மூகம் வீங்கியிருந்தது. சமையல் பாத்திரங்கள் அப்படியே இருந்தன. மூவருக்கும் சேர்த்து டீ போட்டுக்கொண்டு வந்த சண்முகம், ஜெயமணியிடம், "அக்கா! மலர் ஃப்ரண்ட்ஸ்க்குப் ஃபோன் பண்ணி விசாரிச்சிங்களா?" என்றார்.  
 
"ரெண்டு மூணு பேர்கிட்ட மட்டும் கேட்டோம். நீங்க சொல்லித்தான் விசயமே  தெரியுதுன்னாங்க. அதுக்கப்புறம் சரி வேணாம், நாமே ஏன் கூப்பிட்டுத் தகவல் கொடுக்கணும்னு யாருக்கும் கூப்பிடல"  
 
"சரி மறுபடியும் ஃபோன் பண்ணுங்க. நான் பேசிப் பார்க்கறேன்"  
 
ஜெயமணி மலர்க்கொடியின் நண்பர்கள் ஒவ்வொருத்தரையாக அழைக்க சண்முகம் அவர்களிடம் பேசினார். ஆனால் உருப்படியான தகவல் ஏதுமில்லை.  ஏற்கனவே பேசியது போக, இன்னும் சிலருக்கும் அழைத்துப் பேசினார்கள். எல்லாருமே தங்களுக்குத் தெரியாது என்பதைத்தான் வெவ்வேறு வடிவில் சொன்னார்கள். கடைசியாகப் பேசிய பையனிடம், "தம்பி ஃப்ரண்ட்டைக் காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு யாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்களா?... அவங்க அப்பா அம்மா நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கப்பா" என சென்டிமென்டாகக் கூட பேசிப் பார்த்தார்.  
 
"உங்க சிட்சுவேஷன் புரியுது. மலர் எங்க போனான்னு எங்களுக்கு நிஜமாத் தெரியலை. ஆனா ஒரு விசயம் மட்டும் நல்லாத் தெரியும். கண்டிப்பா மலர் ஓடிப்போய் கல்யாணம் பண்ணறதுக்காகப் போகலை"  
 
சிவசாமி அந்தப் பையனின் வார்த்தைகளைக் கேட்டதும் சற்றே ஆறுதல் அடைந்தார். இருவருக்கும்  சமுதாயத்தின்  மிகப்பெரிய குற்றப் பார்வையில் இருந்து தப்பித்து விட்டதுபோல ஒரு உணர்வு.  
 
சண்முகம் சிவசாமியைப் பார்த்து, “மாமா, அவளுக்கு வேற ஏதாச்சும்  பிரச்சனை இருந்திருக்குமோ?... நாம கவனிக்காம போயிருப்போமோ?” என்றார் கவலையுடன். 
 
சிவசாமி பதில் சொல்லாமல் திரும்பி நடந்தார். அவரது மனதில் கேள்விகள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தன. தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த ஜெயமணி மூக்கை உறிஞ்சுவதும், முந்தானையில் துடைப்பதுமாக இருந்தாள்.
கைகளை விரித்துத் தானாக எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.  
 
ஜெயமணியின் கைப்பேசியில் ஒரு அழைப்பு வந்தது. அழைப்பாளரின் பெயர் தெரியவில்லை. அவள்  சந்தேகத்துடன் எடுக்க "வாட்ஸ் அப் கால் வாங்க" சொன்ன மறுநிமிடம் அழைப்பு  துண்டிக்கப்பட்டது.  குரலைக் கேட்டவுடன் ஜெயமணியின் இதயம் துடித்து எகிறியது.   பதட்டத்தில் நெட்வொர்க்கை ஆன் செய்யவும் முடியாமல் திணறி  ஒருவழியாக வாட்சப்பை ஆன் செய்தாள்.  
 
கண நேரத்தில் தன் மகள் உயிரோடிருக்கிறாள் என்ற நினைவு நிம்மதியைப் பரப்பிப் பின் பனி போல் விலகிச் சென்றது.   அதற்குள் இரண்டு மிஸ்ட் கால்கள் இருந்தன.  
 
"மலர்க்கொடி, நீ எங்க இருக்க? என்னவா இருந்தாலும் பேசிக்கலாம். நீ நேர்ல வந்துரு", மேலே பேச முடியாமல் தவித்தாள் ஜெயமணி. 
 
அப்பால் இருந்து வந்த குரல், "அம்மா, நான் பாதுகாப்பாக இருக்கேன், ஆனா, கொஞ்ச நாளைக்கு என்னைத் தேடாதீங்க" என்றது.  அவளது குரலில் ஒரு பதற்றம் இருந்தது. சிவசாமியும், சண்முகமும் ஜெயமணியின் எதிரில் நின்று கொண்டிருந்தார்கள். அவளின் கைகளும், குரலும் நடுங்கியது.  
 
"மலர், நீ எங்கே இருக்க? என்ன நடந்தது?" 
 
மலர்க்கொடியின் அடுத்தடுத்த வார்த்தைகள் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  
 
"அம்மா நான் ஒரு கொலையை நேர்ல பாத்துட்டேன். மிகப்பெரிய ஆபத்துல இருக்கேன். அதனால் என்னோட நம்பர் கொஞ்ச நாளைக்கு யூஸ் பண்ண முடியாது. "  
 
"அய்யோ! ஆண்டவா .." நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தாள் ஜெயமணி.  சிவசாமி அவளைத் தாங்கிப் பிடிக்க முடியாமல் தடுமாறினார்.  சண்முகம் ஃபோனை வாங்கி, "விளக்கமா சொல்லு மலரு. நீ ஊட்ட உட்டுப் போறதாத்தான மெசேஜ் போட்டிருந்த. இப்போ என்னென்னமோ சொல்றியே " அவருக்கும் குரல் உடைந்தது. 
 
"மாமா, அந்த மெசேஜ் வெளியில எல்லாரோட கவனத்தையும் திசை திருப்ப அனுப்பினது. நான் எதையும் விளக்கமா சொல்ற நிலமைல இல்ல இப்போ. அப்பா அம்மாவப் பத்திரமா பாத்துக்கோங்க . என்னப்பத்தி......"  
 
சண்முகத்திடம் இருந்து ஃபோனைப் பிடுங்கினார் சிவசாமி. "தங்கமே,  அப்பாவ இப்படித் தவிக்க உட்டுட்டு எங்க தாயி போன? "  
 
ஃபோனில் உரைத்த சிவசாமியின் குரலில் திடமான மலர்க்கொடி கொஞ்சம் உடைந்து போனாள்.  அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. மீண்டும் முயன்றபோது அணைத்து  வைக்கப்பட்டிருந்தது.  
 
கல்கத்தாவில் டயமண்ட் ஹார்பர் ரோடு, பல வங்கிகளோடு வியாபார நிறுவனங்கள் நிறைந்த அடர்த்தியான பகுதி. நவம்பர் மாத குளிர், காலைப் பொழுது, மணி பதினொன்றை நெருங்கப் பெரிய முள்ளுக்காகக் காத்திருந்தது அந்த அறையில் இருந்த கடிகாரம். 
 
பிபிசி வேர்ல்ட் அலுவலக வரவேற்பறை. மலரைத் தவிர எல்லோரும் சரியாகத்தான் இருந்தார்கள். ஆவி பறக்க டீ வைக்கப்பட்டிருந்தது. மலரால் இன்னும் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை. 
 
நேற்று இரவு கொல்கத்தா வந்து சேர்ந்ததும், தனது இன்ஸ்டாகிராம் நண்பி இஷா லஹிரியுடன் இரவு கேஎப்சி-க்கு அருகில் பார்க்கிங் கிடைக்காததால், சற்றுத் தள்ளி நிறுத்தியிருந்த காரில் இருவரும் நேரில் பார்த்த ஈர்ப்பில் பலவற்றையும் குறுகிய நேரத்தில் கொட்டியபடி இருந்தார்கள். இஷாவின் அண்ணன் கேஎப்சி சென்று எல்லோருக்கும் சேர்த்து சாப்பிட வாங்கச் சென்ற நேரம்.  
 
அப்போது மூன்று நான்குபேர் துரத்த ஒருவர் ஓடியபடியே தஞ்சம் தேடி குப்பை தொட்டிக்குப் பின்னால் ஒளிய, பின்னால் வந்தவர்கள் நடுரோட்டுக்கு இழுத்து வந்து அவரை நீண்ட கத்திகளால் சரமாரியாக வெட்ட, காருக்குள் இருந்த இஷா வீடியோ எடுத்துக்கொண்டு, கேஷுவலாக மலரைப் பார்க்கையில், இவள் இரண்டு கைகளையும் வாய்க்குள் அழுத்துமளவுக்கு அமுக்கியும் சத்தம் வர, இஷா அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, “பி கூல், திஸ் ஈஸ் காமன் ஹியர்...இட்ஸ் பிட்வீன் லோகல் ரூலிங் பார்ட்டி அண்ட் நேஷனல் பார்ட்டி”, என்றாள்.  
 
"வெட்டப்பட்டவன் உயிருடன் இருக்கிறானா?" என்ற கேள்வியே தேவையில்லை. மலருக்குப் புதிது, நம் தேசத்துக்கு பழகியது. பத்து நிமிடமிருக்கும். இன்னொரு கூட்டம் ஓடிவந்து பெரும் கூச்சலுடன் அவனைத் தூக்கிப் பார்த்துவிட்டு இன்னும் பெரும் கூச்சலிட்டுப் பின் அவனைத் தூக்கிச் சென்றார்கள். இஷாவின் அண்ணன், “மிங்கிள் பக்கட் கூட சோலோ பக்கட் என போன்லெஸ் ஸ்ட்ரிப்ஸ், ஹாட் விங்க்ஸ், கோக் பாட்டிலுடன் காருக்குள் நுழைந்தான்.  
 
சற்றுத் தள்ளி நடந்தது அவனுக்குத் தெரியாமலில்லை. பழக்கப்பட்டிருந்தான். மலரின் நிலை கண்டு காரை பாக்களி பீச் அருகே சென்று நிறுத்தினர். எவ்வளவோ சொல்லியும் கேட்காததால், மலரை விட்டு விட்டு அவர்கள் மட்டும் சாப்பிட்டார்கள். மலர் அப்போது அம்மாவைத் தொடர்பு கொண்டாள். பின் தன் நிலையறிந்து வாட்சப்பில் வரவைத்து, தான் ஒரு கொலையைப் பார்த்ததாக சொல்லித் தொடர்பைத் துண்டித்தாள். ஒரு விதமாக அவளுக்குக் கொஞ்சம் திருப்தி ஏற்பட்டது.  
 
பிபிசியின் துணை மேலாளர் விக்டர் பானர்ஜி வரவேற்பறைக்கு வந்து, “ஹாய் ஆல்”, என்று சொல்லி மலரின் முன்னால் இருந்த டீயைக் காண்பித்து, “ப்ளீஸ் டேக் இட். இட் ஹேஸ் அல்மோஸ்ட் கம் டு த ரூம் டெம்ப்ரேச்சர்”, எனப் பேச ஆரம்பிக்கையில் செல்ஃபோன் அழைக்க, “எக்ஸ்கியூஸ் மீ”, என்று சொல்லித் தன்னறைக்குச் சென்றார்.   
 
“டீ ஆறிடும் குடிச்சிட்டுப் பேசு”, என்று சொன்ன தன் அப்பாவுடன் தான் கொண்ட தர்க்கம் அப்போது மலருக்கு நினைவுக்கு வந்தது. கொஞ்சமாக கண்களில் நீர் கோர்த்தது.  பல விஷயங்களை அவரோடு விவாதித்ததுண்டு. ஆனால், இரண்டு விஷயங்களில் அவரின் எதிர்பார்ப்புக்கு எதிராக இருந்தாள். ஒன்று தனது கனவான ஒரு பெரிய மீடியாவில் ரிப்போர்டர், (பலபேரை அவளின் மானசீக ரோல் மாடலாக அவள் நினைவில் புதைத்து வைத்திருக்கிறாள்). படிக்க நினைத்தது யூஜி மாஸ் கம்யூனிகேஷன். ஆனால், படித்துக் கொண்டிருப்பது, முதலாமாண்டு யூஜி மேத்ஸ். காரணம் அவளது மாமா, அம்மா, அப்பாவும்கூட. 
 
தைரியமான பொண்ணாக வளர்ந்தவள். தினசரி செய்திகளில் வரும்  இளம் பெண்கள் பாலியல் வன்முறை மற்றும் மணிப்பூரில் நடந்துகொண்டிருப்பது என்பதெல்லாம் அவளை ஒரு புரட்சிப்பெண்ணாக மாறவேண்டும் என்பதற்குக் காரணமாக இருந்தது. அவளும் அதில் உறுதியாக இருந்தாள். “இந்தச் சமுதாயத்தில் யார்தான் இதையெல்லாம் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவார்கள்?”  என்ற அவளின் கேள்விக்கு, சிவசாமி,  “இதெல்லாம் பாதுகாப்பில்லாதது. வேண்டுமானால் ஒரு பத்திரிக்கை ஆஃபீசில் காலையில் சென்று மாலையில் வீடு  திரும்பும் வகையில் பல வேலைகள் உண்டு. அது மாதிரி ஏதாவது ஒன்றைச் செய். இப்பவே பெண் கேட்டு எனக்கு நிறைய அழைப்புகள் வருகின்றன” என்றார். 
 
“எங்களுக்கு இருப்பது நீ ஒரே மகள். நீயும் இப்படி அதையும் இதையும் சொல்லிப் பிரச்சினையான வழியில் செல்வது நல்லதல்ல”, என்று பலவகையிலும் சொல்லிப் பார்த்துவிட்டார்.  
 
மலர் அப்பாவோடு பல முறை விவாதம் செய்வாள். ஒன்று, தனக்குப்  புரியவேண்டும். இன்னொன்று, தான் தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற வேண்டும். ஆனால், இங்கு இருந்தால், நிச்சயம் நடக்காது என்று சொல்லி இண்ஸ்டாவில் அறிமுகமான, இவளைப் போல சமுதாயத்தைப் பார்த்துக் கேள்விகள் கேட்கும் இஷாவுடன் பழக்கமானது.  
 
கடைசியாக இவள் அப்பாவிடம் பேசியது, “நான் இங்கு கல்யாணம் செய்து, வீட்டு வேலை செய்துகொண்டு, அம்மா மாதிரி அடிமை வாழ்க்கை வாழ விரும்பவில்லை” என்பதே. அப்போது டீ டம்ளருடன் உள்ளே வந்த அம்மா இருவரையும் பார்த்துவிட்டு எப்போதும் போல (அவள் இவர்கள் விவாதங்களில் எப்போதும் தலையிட்டதில்லை) சமையலறைக்குச் சென்றுவிட்டாள்.  
 
டீ ஆறிக் கொண்டிருந்தது.  
 
அடையாளத்தைத் தேடி என்று  கடிதம் எழுதி வைத்து விட்டு கொல்கத்தா வரை வந்தாயிற்று.  
 
ஒரு நல்ல பத்திரிக்கையாளராக வர வேண்டும், நமக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதியுடன் இங்கே பிபிசி அலுவலகத்தில். நடு ரோட்டில் கொலையைப் பார்த்த பிறகு ஒரு விதத் திகில் அவளுக்குள்ளே துளிர் விட்டு எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. 
 
ஒரு  வலைப்பதிவு தளத்தில் படித்த  கவிதை ஏனோ இப்போது நினைவில் வந்தது. 
 
 "காற்றின் தேடல்"
 
எது என் அடையாளம் 
அடிமனதில் ஓர் குழப்பம் 
சுழன்றேன் சூறாவளியானேன் 
கடல் கடந்து கரை சேர்ந்தேன் 
புயலானேன் 
தவழ்ந்தேன் தென்றலானேன் 
உள்ளிழுக்கும் மூச்சில் உயிர்க்காற்றானேன் 
ஊட்டிப் பனியில் ஊதைக்காற்றானேன் 
பூவை வருடி பூங்காற்றானேன் 
'பூங்காற்று புதிதானது' 
பாடினான் கவியின் அரசன் 
ஐம்பூதமதில் அங்கமாகி 
ஆதி முதல் அலையும் நான் 
புதிதானது எப்போது 
புரியவில்லை எனக்கு 
'காற்றுக்கென்ன வேலி' 
விளம்பினான் அந்தச் சிந்தனைச்சிற்பி. 
தென்மேற்கு வடகிழக்கு என 
போகும் திசை அறிந்த 
எனக்கெதற்கு வேலி 
வேலியில்லா அண்டமதில் 
அடையாளம் தேடி அலைகிறேன் 
வெவ்வேறு பெயரில்  
 
"மகள் என்ற அடையாளத்தை இழந்தாயா?" 
இல்லை, 
"நண்பர்களுக்குத் தோழி என்ற அடையாளத்தை இழந்தாயா?" 
"நீ பிறந்து வளர்ந்த மண்ணின் அடையாளத்தை இழந்தாயா?" 
"கல்வி கற்ற பள்ளி, மற்றும் உற்றார் உறவினர் வீடுகளில் 
ஓடி ஆடிய நினைவுகள் ஆகியவற்றின் அடையாளத்தை இழந்தாயா?" 
"எதை இழந்தாய்?" 
காற்று என்னைப் பார்த்து கேட்பது போல் இருந்தது.  
 
'பூங்காற்று புதிதானது 
புது வாழ்வு சதிராடுது'   
 
என் வாழ்வு இப்ப சதிராட்டமாதான் மாறிட்டிருக்கு என எண்ணினாள்.  
 
'காற்றுக்கென்ன வேலி... 
கடலுக்கென்ன மூடி.. 
கங்கைவெள்ளம் சங்குக்குள்ளே.. 
அடங்கி விடாது 
மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது'  
 
எவ்வளவு அழகான வரிகள்.  
 
'மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது?' 
 
'கவியரசு கண்ணதாசன் எனக்காகவே இதை எழுதினாரோ?' என நினைத்தாள்.  
 
கதவு திறக்கும் சத்தம் கேட்டு மலர் திடுக்கிட்டவளாய் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டு ஆறிப் போன டீயை மடக் மடக்கெனக் குடித்தாள்.   
 
"வுட் யூ லைக் டு ஹாவ் அனதர் கப் ஆப் ஹாட் டீ?", என்றபடியே விக்டர் பானர்ஜி அறைக்குள் நுழைந்தார்.  
 
“நோ சார்.  தேங்க்யூ” , என்றாள்.  
 
சிறிது நேரம் விக்டர் அவளிடம் பத்திரிகைத் துறையில் அவளது ஆர்வம் குறித்து சில கேள்விகளைக் கேட்டார். அவளது தொழில்நுட்ப அறிவு குறித்த சில விடயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  
 
“சரி மலர்க்கொடி. உங்களுக்கு இந்தத் துறையில் அனுபவம் இல்லாததால் முதலில் ஒரு சின்ன அசைன்மெண்ட்  கொடுக்கப்படும். அதை நீங்கள் முடிக்கும் விதத்தைப் பொறுத்து உங்களுக்கு இங்கு பகுதி நேர வேலை கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும். சரியா?”, என்றார்.  
 
மிகுந்த மகிழ்வுடன், “சரிங்க சார்” என்றாள்.  
 
“சரி. நீங்கள் கொஞ்ச நேரம் காத்திருங்கள். உங்களுக்கான அசைன்மெண்ட் கொடுக்கப்படும்”, என்று சொல்லிவிட்டு மீண்டும் வெளியே சென்று விட்டார் விக்டர்.  தான் தேடி வந்த அடையாளத்தில் ஒரு பகுதி வெகு விரைவில் நிறைவேற உள்ளதை எண்ணி மகிழ்ந்தவள் மனதில் அடையாளத்தை நோக்கி அவளை நகர்த்திய அந்தக் குரூர நாள் நினைவிற்கு வந்தது..  
 
அன்று அவளது பிறந்தநாள். 18 வயது முடிந்து மேஜரான நாள். அதைக் கொண்டாடுகிற விதத்தில் அவளுடைய அப்பா அவளுக்குப் பிடித்த ஒரு ஜுவல் செட் வாங்கித் தருவதற்காக  நகைக்கடைக்கு அழைத்துச் சென்றிருந்தார். கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கு நவீன வைர நகை செட் வாங்கிக்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில்  வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்கள்.  
 
எதிர்பாராத நேரத்தில் இரண்டு பைக்குகளில் புள்ளிங்கோ பாணியில் இருந்த நான்கு இளைஞர்கள் அவர்களை வழி மறித்து, அவர்களிடமிருந்து நகைகள் அடங்கிய பையைப் பறிக்க முயன்றனர். நால்வரும் கண்டிப்பாகக் கடையிலிருந்தே அவர்களைப் பின் தொடர்ந்திருக்க வேண்டும். அதிலிருந்த ஒருவனின் பார்வை மகளின் மீது வெறிகொண்ட ஓநாய் போல் படர்வதைப் பார்த்து மனம் பதறிப் போன சிவசாமி பையைப் பறிக்க விடாமல் இழுத்த மகளின் கையைத் தடுத்து நிறுத்தி அவர்களிடம் பையை ஒப்படைத்தார்.   
 
இருந்தும் அவள் மீது வெறி கொண்ட பார்வையை ஓட்டியவன் அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான். அப்போது திடீரென எங்கிருந்தோ சைரன் சத்தம் கேட்டது. அவனைப் பிடித்திழுத்த  இன்னொருவன் அவனை எச்சரிக்க நால்வரும் வெகு வேகமாக பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்தனர்.  
 
இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது சிவசாமிக்கு. செய்தித்தாள்களில் படித்த பாலியல் வன்முறை எல்லாம் படம் போல் மனதில் ஓடி நடுக்கத்தைக் கொடுத்தது. வீட்டிற்கு வந்த பின்பும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெகு நேரம் இருந்தார். விஷயம் முழுவதும் அறிந்த பின் ஜெயமணியும் அதிர்ந்து போனாள்தான்.  
 
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்துதான் ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். அவளுக்கு ஒரு திருமணத்தை செய்து வைத்து விட வேண்டும் என்று மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதன் காரணமும் அதுவே. இது தொடர்பாக அவளுக்கும் அவருக்கும் இடையே நிறைய வாக்குவாதங்கள் நடைபெற்றன. கொள்ளையடித்தவர்களைப் பற்றி ஒரு புகார் கூட போலீஸில் கொடுக்கவில்லை என்பதுதான் அவளுக்கும் அவருக்கும் இடையே நடந்த உச்சபட்சமான வாக்குவாதம். அதைத் தொடர்ந்தே, அடையாளத்தைத் தேடி எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டுக் கிளம்பினாள் அவள்.   
 
உண்மையில் அவள் ‘லாபதா லேடிஸ்’ என்ற இந்திப் படத்தில் வருவது போல தனது கல்கத்தா தோழி இஷா மூலம் நாட்டின் தலை சிறந்த கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பதற்கு விண்ணப்பித்து வைத்திருந்தாள். அதற்கான நேர்முகத் தேர்விற்குத்தான் கிளம்பி வந்ததும் கூட. படிப்பு என்று சொன்னால் கண்டிப்பாக எல்லா இடத்திலும் தேடி, தன்னைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று தோன்றியதால் அவர்களை திசை திருப்பவே மொட்டையாக அடையாளத்தைத் தேடி என எழுதி வைத்து விட்டு வந்திருந்தாள். அதைத்தான் வாட்ஸ் அப் காலிலும் தாய் மாமாவிடம் பேசும்போது குறிப்பிட்டிருந்தாள். ஆனால் உண்மையிலேயே இப்படி ஒரு கொலைக்கு நேரடி சாட்சியாக இருப்பாள் என்று நினைத்தும் பார்க்கவில்லை. 
 
இப்படியாக குறுகிய காலத்தில் மளமளவென நடந்து விட்ட நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை அசை போட்டபடி அமர்ந்திருந்த அவளை, “மிஸ் மலர்க்கொடி”, என்ற குரல் நிகழ்காலத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.  
 
“திஸ் இஸ் யுவர் அசைன்மெண்ட்”, என ஒரு ஃபைல் அவளிடம் தரப்பட்டது. ஆர்வமுடன் ஃபைலைத் திறந்தாள் அவள்.   
 
ஃபைலைத் திறந்த மலர்க்கொடி பீதியில் சற்றே உறைந்து போனாள். அவளின் துணிச்சலில் சற்று நடுக்கம் ஏற்பட்டது.  
 
அந்த ஃபைலின் உள்ளே இருந்த நான்கு முகங்களும் இவளைத் தொலைத்துக் கட்ட வந்தவை போல் காட்சியளித்தன. அதிலும் அந்த ஒருமுகம்... அதன் கண்கள்... வெறி கொண்ட ஓநாயின் அந்தப் பார்வை... 
 
சட்டென்று ஃபைலை மூடியவள் இருக்கையின் பின்பக்கத்தில் தலையைச் சாய்த்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். அவளின் நினைவுகள் பின்னோக்கி ஓடின.   
 
கொல்கத்தா வந்து சேர்ந்து தோழி இஷா லஹிரியை சந்தித்து மகிழ்ந்திருந்த நேரத்தில், ஓடிவந்து குப்பைத் தொட்டிக்குப் பின்னால் ஒளிந்த ஒருவரை, கும்பலாகச் சேர்ந்து இழுத்து வெட்டி வீழ்த்திய சம்பவத்தின்போது, தனது கண்கள் சந்தித்த அந்தக் கண்கள், அப்பாவோடு நகைக் கடைக்குச் சென்று திரும்பிய போது, வெறியோடு தன்னை ஆக்ரமித்த அதே கண்கள் என்பதை உணர்ந்தாள்.   
 
திரும்பித் திரும்பி தன்னைப் பார்த்தபடியே சென்ற அந்தக் கண்களை அவளால் மறக்கவே முடியவில்லை. இரவு நேரத்தில் கூட திடுக்கிட்டு விழித்து எழுந்து விடும் அளவுக்கு அவளுக்குள் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது அந்தப் பார்வை.  
 
"ஃபைலைத் திறந்து பார்த்தீர்களா மிஸ். மலர்க்கொடி?", என்றபடியே அவளுக்கு எதிரில் வந்து அமர்ந்த விக்டர் பானர்ஜியின் விழிகள் அவள் விழிகளைத் துளைத்தெடுத்தன. 
 
"ம்ம்ம்..." என்றாள் மலர்க்கொடி அவர் பார்வையின் அர்த்தம் புரியாமல்.  
 
அதே நேரம் கொல்கத்தாவின் மற்றொரு பகுதியில் மலர்க்கொடியின் புகைப்படத்தை மேசை மேல் விரித்து வைத்து விரல்களால் தடவிக் கொண்டிருந்தான் மலர்க்கொடியின் இத்தனை துயரத்துக்கும் காரணமானவன்.  
 
மலர்க்கொடியின் புகைப்படத்தைப் பார்த்தவன் “ இவ ஏண்டா திரும்பத் திரும்ப நம்ம லைன்ல க்ராஸ் ஆகறா?“  
 
“நகைய அடிச்ச அன்னிக்கே இவ மிஸ் ஆய்ட்டா. இன்னிக்கு இங்கயும் நம்மள பார்த்துட்டா. இவளையும்  நம்ம எக்ஸ்போர்ட் லிஸ்ட்ல சேர்த்திடலாமா?”, என்று கோபத்தோடு நகைத்தவன் கைப்பேசியை எடுத்தான்.   
 
ஃபைலைப் பார்த்தவுடன் ஆரம்பத்தில் அதிர்ந்தவள், பின்னர் புன்னகையை உதிர்த்தாள்.  “சார்,  தேங்ஸ் ஃபார் கிவிங் திஸ் ப்ராஜக்ட்.”  
 
விக்டர் பானர்ஜி குழப்பமானார்.  மலர்க்கொடி விவரிக்க ஆரம்பித்தாள்.   
 
ஊரில் வைர நகையைப் பறிக்கும் பொழுது அவளின் உயிர் ஒருநொடி  போய் வந்தது.  அந்த நிகழ்வின் அதிர்வில் இருந்து வர அவளுக்கு சில வாரங்கள் ஆனது.  அதன் பின் அவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து வைக்க ஆரம்பித்திருந்தாள்.
தேடலில் கிடைத்த நிறைய திடுக்கிடும் தகவல்கள் அவளை நிம்மதியாகத் தூங்க விடவில்லை.  இந்தக் கும்பலின் நெட்வொர்க் கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுக்க விரவிக் கிடந்ததை, இவளின் இன்ஸ்டா நண்பி இஷாவின் மூலம் தெரிந்து கொண்டாள். வீட்டில் இதைப் பற்றிக் கூறினால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்தவள். படிப்பதற்குக் கொல்கத்தாவை தேர்ந்தெடுக்க இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.     
 
லேப்டாப்பில் சேகரித்து வைத்திருந்த அனைத்து விவரங்களையும் விக்டர் பானர்ஜியிடம் தக்க ஆதாரங்களுடன் விளக்கினாள். கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் நாவல் எழுதும் அளவிற்கு ஏற்கனவே தகவல்கள் அவளிடம் இருந்ததை விக்டர் உணர்ந்தார். அதே நேரம் விக்டர் பானர்ஜியின் மொபைல் சிணுங்கியது.   
 
மலர் தனக்கான வாய்ப்பைப் பொறுப்பாகக் கையாள முடிவுசெய்தாள். அவனை நினைக்கும்போதெல்லாம் பார்வை மீண்டும் உடலைக் கீறியது. ஏற்கனவே சேகரித்த தகவல்களோடு, மீண்டும் தேடலானாள். மெள்ள  வங்கத்தின் மண்வாசம் பூணுகிறாள். நடை உடை பாவனைகள் எல்லாமும் அவளையும் அறியாமல் மாறுகிறது.   காதுகளும் கண்களும் கூர்மையாகின. சிந்தனை முழுவதும் அம்மூவருமே. அம்மா,அப்பா, வீடு, சோறு எல்லாமும் இவர்களுக்குப் பின் என ஆனது.   
 
'எதைத்தேடுகிறோமோ, அலைவரிசை அங்கே இட்டுச் செல்லும்தானே?' இரவு உணவுக்குப் பின் வீடு திரும்புகையில் தெருவோரக் கடை ஒன்றில் சிகரட்டோடு அவன் சாயலால்  பார்வை திரும்பியது. அவன்தானோ என்ற சந்தேகம் வந்தது. 
 
மறக்க முடியா முகம் என்றாலும், மாற்றம் இருக்குமே. வேகம் குறைத்து உற்று நோக்கினாள். அவனேதான். தீப்பொறி பற்றியது. உடலில் நடுக்கமும், உணர்வில் கோபமும் ஒருசேர வந்தது. தோழியை அழைத்தாள். பழக்கப்பட்ட அலைபேசி அந்நியமாகத் தெரிந்தது. மலரைத் தாண்டிச் சென்ற வாகனத்தை அவன் குறுக்கிட்டு ஏறிக் கொண்டான். பதற்றம் தொற்றிக் கொள்ள அவள் வேகமாய் ஓடினாள்.  
 
தருணம் கைநழுவுவது புரியும் முன்னரே, வாகனம் மறைந்துவிட்டது. வண்டி எண்ணும் பிடிபடவில்லை. இயலாமையில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.   
 
இனி இப்படியாகத் தவற விட்டு விடக்கூடாது என்று திட்டமிட்டு மீண்டும் பல்வேறு தரவுகளைச் சேகரித்தாள். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, சார்ந்த குற்றவாளிகளை, விக்டர் பானர்ஜியை, சாதியத் தலைவர்களைச் சந்தித்து எங்கே இருப்பான் என யூகித்தாள். அடுத்தமுறை பார்க்கும் போது என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினாள். ஒரு வரைவுத் திட்டத்தையே தயார் செய்தாள்.   
 
தொடர் தேடுதல் சோர்வைத் தந்த சில வாரங்களுக்குப் பிறகு, அந்திவேளைப் பொழுதில், அவனை ஹௌரா பாலம் அருகில் கூட்டாளிகளோடு பார்த்தாள். வரைவுத் திட்டத்தைச் செயல்படுத்தினாள். ஸ்பை காமிரா மூலம் காணொளி எடுத்தாள்.  நொடிப்பொழுதில் தகவலைக் காவல்துறை அதிகாரிக்கு அனுப்பினாள். அவள் விரல்கள் கூட தானாகத் திட்டத்தின்படி இயங்கியது. விக்டர் பானர்ஜி மற்றும் தோழி இஷா விரைந்து வந்தனர். அவன் நடவடிக்கைகளை உற்று கவனிக்கலானாள். சில நிமிடங்களிலேயே அவன் சுற்றி வளைக்கப்பட்டான்.   
 
சுதாகரிக்கும் முன்னர், அவனும் அவன் கூட்டாளிகளும் முட்டி போட வைக்கப்பட்டனர். நேர் பார்வை இவர்களுக்குள். அவன் முன் சென்று நேருக்கு நேர் நின்றாள். அவளின் கூரிய பார்வை அவன் மேல் படர்ந்தது. தன் வழியில் மீண்டும் அவள் இப்படியொரு தருணத்தில் வருவதை ஏற்க முடியாமல் குமைந்து போனான். பார்வையைத் திருப்பி நாலடி நடந்து மீண்டும் வந்த அவள், அதிகாரியை ஒரு பார்வை பார்த்து கண்களால் ஒப்புதல் வாங்கி, கூரிய பார்வையில், தெளிவான உச்சரிப்பில், “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?”, என்று சொல்லி நகர்ந்தாள். அவள் பார்வையால் அவன் உடலெங்கும் கூசியது. மலருக்கு அம்மா, அப்பா, ஊரு, சோறு என எல்லாம் இப்போது தேவையாக இருந்தது. 
    
இந்தத் சங்கிலித் தொடர் சிறுகதையை எழுதியவர்கள்…. 
   
பிரதீபா,  மைதிலி,  தாரணி தேவி, லோகேஸ்வரி, மூர்த்தி, ராதா மனோகரன், முத்தரசு, சச்சிதானந்தன், அன்புமணி, கோதை, கிருஷ் & மகேஸ்வரி மதன். 
 


****முற்றும் ****

இந்தச் சிறுகதை ஈரோடு வாசல் - படைப்புக்குழுமத்தின் பயிற்சியாக சங்கிலித் தொடராக எழுதப்பட்டது. எழுதியவர்கள்:
பிரதீபா, மைதிலி, தாரணி தேவி, லோகேஸ்வரி, மூர்த்தி, ராதா மனோகரன், முத்தரசு, சச்சிதானந்தன், அன்புமணி, கோதை, கிருஷ் & மகேஸ்வரி மதன்.

Sunday, March 2, 2025

அந்த வெகுமதிக்கு இன்னொரு பெயருண்டு - ஈரோடு கதிர்

தமக்கு ஒவ்வாத, தம்மை சற்றும் முன்னகரவிடாமல் இழுத்துப்பிடிக்கும் எந்த ஒன்றிலுமிருந்து விடுபடுவது மிகத் தேவையான ஒன்று. ஆனால் அப்படிப் பிடித்து வைத்திருக்கும் ஏதோவொன்றிலிருந்து விடுபடாமல் சுமப்பவர்கள், அதே இடத்தில் தேங்கியிருப்பவர்கள் நிறையப் பேர் உண்டு. காரணம் தாம் நம்பிய, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தவொன்றிலிருந்தும் விடுபடுதல் அத்தனை எளிதல்ல. 

"கிட்டாதாயின் வெட்டென மற" எனும் ஔவையின் வாக்கு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எத்தனையோ இடங்களில் எளிதில் விடுபட உதவிய மந்திரம் அது. சொல்வதற்கு எதுவும் எளிதுதான். ஆனால் நிகழ்த்துவதென்பது அத்தனை எளிதல்ல என்பது திருவள்ளுவர் கூறியதை வைத்துப் பார்த்தால் இரண்டாயிரமாண்டு அனுபவம் நமக்கு. 

தொழில், வேலை, பணம், பதவி, புகழ், உறவு உள்ளிட்ட பலவற்றில் ஏதோவொரு தருணத்தில் விடுபட வேண்டிய, கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்போது மிகச் சரியான, அந்தச் சூழலுக்கு உகந்த முடிவெடுக்க முடியாமல் தடுமாறியதால் ஏற்பட்ட விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும்.

ஏதோவொரு தருணத்தில் எல்லாமும் நமக்கு இணக்கமாக, நமக்கென்றே வாய்த்ததாக இருப்பவை, இன்னொரு தருணத்தில் ஒட்டுமொத்தமாக எதிர்நிலை எடுத்திருக்கும். இணக்கமாக இருந்ததன் கதகதப்பை அனுபவித்ததுபோல், எதிர்நிலைக்குச் சென்றதின் வெம்மையை அத்தனை எளிதில் எதிர்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலுவதில்லை. அதற்கு மிகப் பெரிய திடமும், பக்குவமும், நிதானமும், புரிதலும் தேவைப்படுகின்றது. அந்த இடத்தில்தான் பெரும்பாலும் தடுமாறி, உருமாற நேரிடுகின்றது.

சில தொழில்களை மிகப் பெரும் நம்பிக்கையுடன் ஆரம்பித்திருப்பார்கள். ஆரம்பித்தபோது நன்றாக இருந்திருக்கும். காலவோட்டத்தில் பெரிய காரணங்கள் ஏதுமின்றி, சில தொழில்கள் தம் வேகத்தை, திறனை இழந்துவிடும். தொடங்கியவரின் திறமைக் குறைவு, உழைப்புக் குறைபாடு அதற்குக் காரணமாக இருக்க வேண்டியதில்லை. அந்தத் தொய்வு காலத்தின் விளைவு. ஆனால், விரும்பி ஆரம்பித்த அந்தத் தொழில் மீது ஏற்பட்டிருந்த பிணைப்பு, மாற்றி யோசிக்கவோ, சற்று விலகி நின்று பார்க்கவோ அனுமதிக்காது. அதன் காரணமாக விடுபடவோ, வெளியேறவோ தெரியாமல் தொடர்ந்து அதற்குள்ளாகவே உழன்று கொண்டிருக்க வேண்டி வந்துவிடும்.

எதன் ஒன்றிலும் உழல ஆரம்பித்துவிட்டால் நூற்கண்டின் ஒரு முனையை எடுத்துக்கொண்டு மிகக்குறுகிய வட்டத்திற்குள் குறுக்கும் மறுக்கும் ஓடுகின்றோம் என்று பொருள். அவிழ்க்க முடியா சிக்கல் விழுவதைத் தவிர வேறென்ன நிகழும்?. சிக்கல்கள் மிகும்பொழுது, சிக்கல்களால் ஏனையவை முடங்கும்பொழுது, தாறுமாறாக அறுத்தெறிவது தவிர வேறென்ன வழி?

ஏதோவொரு காலத்தில் வேலை கிடைத்திருக்கும், கடையை ஆரம்பித்திருப்பார்கள். ஓர் எல்லையைத் தாண்டி வளரவோ, விரிவடையவோ வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தாலும், அதனை ஒப்புக்கொள்ள ஏராளமான தடைகள் உண்டு. ’ஏன் வேலையை விட்டுட்டே? ஏன் கடையை மூடிட்டே?’ எனும் கேள்விகள் வெகுவாகத் தாக்கும் சாத்தியமுண்டு. அந்தத் தாக்குதல் குறித்த அச்சமே பெரும் மனத்தடையை ஏற்படுத்தும். அதே சமயம், அதுவரை செய்த வேலை அல்லது வியாபாரம் மிகவும் பழகிப்போன, வசதியான ஒன்றாக மனதிற்குள் படிந்து போயிருக்கலாம். குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வளர்ச்சியில்லாத நிலையில், அதிலேயே தொடர்வதா அல்லது வேறொன்றிற்கு மாறுவதா என முடிவெடுக்க முடியாமல், நிலைமையைக் கடினமாக்கிக்கொள்வோர் மிகக் கணிசமாக உண்டு. 

தொழில், வேலை, வியாபாரம் ஆகியவையாவது வாழ்க்கையோடு மிகுந்த தொடர்புடையதெனச் சொல்லலாம். நம்மைச் சுற்றிலும் பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. தொழில்சார் அமைப்புகளும் உண்டு, சேவை அமைப்புகளும் உண்டு. வெளிநாடுகளிலிருந்து கிளை பரப்பிய சில சேவை அமைப்புகள், சங்கங்கள் நம் மக்களிடையே பிரபலமாக இருக்கின்றன. அதன் வெவ்வேறு நிலைகளின் தலைமைப் பொறுப்புக்கு வருகின்றவர்களை உற்றுக் கவனித்துப் பாருங்கள். சிலர் தம் திறன் என்ன, தம்  இடம் எதுவெனத் தெளிவாக இருப்பார்கள். பலருக்கு அதுவரையிலும் குறிப்பாக தம் குடும்பம் மற்றும் சுற்றத்தில் கிடைக்காததொரு பதவி மற்றும் அங்கீகாரத்தை இம்மாதிரியான அமைப்புகள் எளிதில் வழங்கிவிடும். அதுவொரு போதையாகத் தழுவிப் பிணைந்துகொள்ளும். தொடர்ந்து அதீதமாக ஈடுபடுவது, அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொள்வது, விழாக்களைப் பெரும் பொருட்செலவில் ஏற்று நடத்துவது என தன் பிடிக்குள் மெல்ல மெல்ல அந்த அமைப்புகள் மனிதர்களை கபளீகரம் செய்யும். இதற்காகப் பல லட்சங்களை இன்னும் சொல்லப்போனால் கோடிக்கணக்கான ரூபாய் வரை விரயம் செய்தவர்களைக்கூட அறிவேன். அதன் காரணமாக தொழில், குடும்பம் மற்றும் உறவுகள் ஆகியவற்றின் மீது குறைந்தபட்ச கவனம்கூட செலுத்தமுடியாமல் முடங்கி, மிகக் கணிசமான இழப்பினை சந்தித்தவர்கள் உண்டு.

குடும்ப உறவுகள் குறிப்பாக திருமண உறவுகளில் விழும் முடிச்சுகள் அத்தனை எளிதில் அவிழ்க்கப்பட முடிவதில்லை. தமக்குத் துளியும் பொருந்தாத, ஒருபோதும் நிம்மதியை உணர்ந்திடாத இருவர், ஒரே அறைக்குள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இங்குண்டு. அதிலிருந்து விடுபடவேண்டிய நினைப்பே இல்லாதவர்கள் பலர் உண்டு.

மிகத் தன்மையான குடும்பம் அது. ஒரே மகளுக்குத் தேடித்தேடி மாப்பிள்ளை பார்த்து வெகுசிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர். ஆரம்பத்தில் பிள்ளைகளின் வாழ்வு அழகியதாகவே தோன்றியது. சில மாதங்கள் கழிந்து, கற்பனை செய்திட முடியாத மாதிரியான சிக்கல்கள் முளைக்கத் தொடங்கின. ஒருகட்டத்தில் பிள்ளைகளின் உறவு தொடராமல் இருப்பதுதான் நல்லது எனும் முடிவுக்கு எல்லோருமே வருகின்றனர். பெரிய அளவிலான பாதிப்புகள் பெண் பக்கம்தான் விளைந்தன. எனினும் பெண்ணின் அப்பா மிகத் தெளிவாக, நிதானமாக, தேவையான, தங்களுக்கு உகந்த முடிவினை தைரியமாக எடுக்க முனைந்தார்.

உறவுகளாய் இணையும்போது இருக்கும் பிரியம், பரவசம், அன்பு உள்ளிட்ட எதுவுமே பிரியும்போது இருக்காது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனாலும் சம்பந்தி வீட்டாரிடம் ஆச்சரியப்படும் வகையில் மிக நிதானமான உரையாடலைத் தொடர்ந்து தக்க வைத்திருந்தார். ’எப்படியும் பிரிவுதான் இருவருக்கும் நல்லது, கீறல்கள் காயங்கள் எதுவுமின்றி பிரிந்துவிடுவோம். யார் குறித்தும், குற்றம் சொல்வதோ, புகாரோ வேண்டாம். பிரிகின்ற இருவருமே அடுத்ததொரு வாழ்க்கைக்குள் செல்ல வேண்டும். அதனை மனதில் வைத்து எதுவும் சங்கடமின்றி இயல்பாக விலகிட வழி வகுப்போம்’ என்பதை மிகத் தெளிவாகவும், திடமாகவும் சொல்லிவிட்டார். 

பிரிவும் அவ்விதமே நிகழ்ந்தது. இவருக்கு இருந்த நிதானமும், பக்குவமும், தெளிவும் எதிர்தரப்பிற்கு இல்லை. அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாதுதானே!? ஆங்காங்கே அவர்கள் சொன்னதாக ஏதேதோ காதுகளுக்கு வந்தன. மூன்றாம் மனிதர்கள் கூறிய எதையும் அவர் பொருட்படுத்தவில்லை. அடர் மௌனம் காத்தார்.  மகளை இதிலிருந்து மீட்டெடுத்து, அவள் மனச் சமநிலை அடைந்ததும், இன்னொரு சரியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்துவிட வேண்டுமென்று தீர்க்கமாக இருந்தார். கீறல்கள் இன்றி மகள் விடுபட்டாள். 

அவர்களின் நெருக்கடியான காலகட்டத்திலும் பேச நினைத்திருந்தேன். சூழலும் வாய்ப்பும் அமையவேயில்லை. அத்தனையும் எனக்கு மிக மேலோட்டமாக அவ்வப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மகளின் வாழ்க்கை முறிந்த வலி, வேதனை, பதட்டம் ஆகியவற்றிலிருந்து மீண்டு, மகளின் புதிய வாழ்க்கை குறித்து ஒருவித நிம்மதியோடு இருந்தவர்களிடம், ஆற அமர அமர்ந்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அவர்களாகவே கடந்து வந்த அந்தக் கொடூரமான காலத்தைப் பேச ஆரம்பித்தனர். நானாக எதுவும் கேட்கவில்லை. அவர்களுக்கு வெளிப்படுத்தத் தோன்றியிருக்கலாம். தங்கள் மனதைக் கீறி எல்லாவற்றையும் கொட்ட ஆரம்பித்தனர். இதுவரை மூடப்பட்டிருந்த புண் திறக்கப்பட்ட வீச்சம் அவர்களின் பேச்சில் இருந்தது. சீழ் வெளியேறியதை உணர்ந்தேன். நிதானமும், தெளிவும், திடமும், நம்பிக்கையும் எத்தனை முக்கியம் என்பதை இன்னொருமுறை உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடந்து வந்த விதம் மிகுந்த மனநிறைவினைத் தந்தது.

விடுபட வேண்டியவற்றிலிருந்து விடுதலையாகாமல் இருப்பதற்கு தலைவிதியோ, சாபமோ காரணமில்லை. முடிவெடுப்பதில் இருக்கும் போதாமையே மிகப் பெரிய காரணம். முடிவெடுத்தலில் நிகழும் மிகப் பெரிய முரண், தனித்து முடிவு எடுக்க வேண்டியபோது, பலரையும் அதற்குள் திணித்துக்கொண்டு குழம்புவது, துணைபுரிகின்றவர்களோடு தீர்க்க வேண்டியதை தனித்து நின்று போராடிக் களைப்படைவது. முடிவெடுத்தல் மிகப் பெரியதொரு கலை. அதனைக் கற்றுக்கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்வது மற்றும் தேவையெனின் துணை சேர்த்து செயல்படுவது மிக முக்கியம்.

கடந்து வந்துவிட்டவர்களைத் தள்ளி நின்று பார்க்கும்போது, திரைப்படத்தில் ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு மாறிவிடுவதுபோல் கருதி விடுகிறோம். ஆனால் அவர்கள் கடந்து வந்த காலம் என்பது வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாட்கள், மணிகள், நிமிடங்கள், நொடிப்பொழுதுகள் என அதீதமான நீளம் கொண்டவை. ஆனால் ஒட்டுமொத்த வாழ்வில் அதுவொரு பகுதியே. 

கடக்கவே முடியாது என அஞ்சியதை, கடக்க முடியுமா எனத் தயங்கியதை ஏதோவொரு வகையில் கடக்கும்போது, வாழ்வு உடனடியாக வெகுமதி அளித்துவிடுகின்றது. அந்த வெகுமதி நமக்கு நாமே பெருமைகொள்வதோ, மற்றவர்கள் நம்மைக் கண்டு வியப்பதோ அல்ல. அந்த வெகுமதிக்கு நிம்மதியென்று ஒரு பெயருண்டு.

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...