Saturday, June 1, 2024

பையனோட அப்பா - சக்திவேல் விரு



"என்னங்க மொதலாளி சாயந்தர வேலை முசுவரமா நடக்குது போலருக்குதுங்க   " என்ற நகைச்சுவை ததும்பும் பேச்சுடன் ப்ரோக்கர் சம்பத்து சென்னியப்பனின்  கட்டுத்தரைக்குள் வந்துகொண்டிருந்தார்.

"என்னத்த பண்ணி என்ன பிரயோசனம் சம்பத்து நம்ம சரவணன்னுக்கு ஒரு தேவைய முடிச்சுற்றலாமுன்னா ஒரு சாதகம் கூட அமையுவுனாங்கிது " என்றார்  பெருமூச்சுடன் சென்னியப்பன்.

"ஒன்னும் கவலப்  படாதீங்க இப்பதான் அம்மாவை பாத்து பேசிப்போட்டு  வாரேனுங்க" என்று சம்பத்து பதிலுரைத்தார் .

"காப்பி தண்ணியோட எப்படியும் ஒரு ஐநூறாவது தேத்திட்டு தெம்பா வர்ற நடையிலேயே தெரியுது  உஞ்சமாசாரம் என்னன்னு " என்று  நக்கல் தொனியில் சென்னியப்பன் தொடர்ந்தார் . 

"என்னுங் முதலாளி ஐநூறெல்லாம் இன்னைக்கு விலைவாசிக்கு  பஸ்ஸு ஏறி இறங்கவே சரியா போயிருமுங்க நானும் வயிறு வளக்க வேண்டாமுங்களா " என்றார் சம்பத்து .  
   
"அந்தப்பேச்சு கெடக்கட்டும்,  இங்க பாரு நேத்து அந்த கொளத்தூர் கார பொண்னோட அப்பா பேசுனாரு அவரோட சொல்லுக்கு கட்டுப்பட்டு  சாதகம் கூட பாக்க வேண்டா  பொண்ணும் பையனும் பொதுவெடத்துல  பார்த்து நாலு வார்த்தை பேசி முடிவு பண்ணிக்கிட்டும்னு ஒரேயடியா நானுன்ச்  சொல்லி போட்டேனப்பா" என்று மாட்டுக்கு வெட்டிவைத்த பசுந்தீவனம் அள்ளி போட்ட  சென்னியப்பன்  நாயம் வளர்த்திக்கொண்டே தவிட்டு கூடையில் இருந்த தவிட்டை கொட்டி  மாட்டுக்கு தவிட்டு தாழியில் கையை விட்டு அளாசும்  வேலையில் மும்மரமானார் . தவிட்டு கூடையை கண்டவுடன் குந்தாணிக்கு பக்கத்தில் வந்த மாடு மாலைமசங்கும்   நேர சீக்கடி தொல்லையால்  தலையை தாழிக்குள் விடுவதும் வெளியில் எடுப்பதுமா தலையை ஆட்டி தவிடு கலந்த  தண்ணியை ப்ரு காபி டிவி விளம்பரத்தில் வரும் நடிகர் போல குடிக்க உறிஞ்சியது.

சம்பத்து சற்று  தள்ளி  நின்றுகொண்டு கருப்பு பேண்டும் வெள்ளை சட்டையுமா ஜம்முனு நெற்றியில் சிவப்பு பொட்டுடன் கை கக்கத்தில் இன்னும் பல நாட்பதுகளின் சாதக கட்டுகள் கிழே விழாதவாறு  வலது கையால் இடது  கை  மணிக்கட்டை  இருக்கி பிடித்துக்  கொண்டு நின்றார்.

"ஏனுங்க நம்பூட்டு அம்மா அந்த சாதகம் பொருத்தமில்லன்னு சொல்லிப்போட்டு  நம்ப தம்பி சாதகத்து நகல நெறையா  கத்தையா கொடுத்து உட்டு இருக்குறாங் நீங்க இப்படி சொன்னா எப்படிங்க  மொதலாளி ?"  என்றார் சம்பத்து.

"இங்க பாருப்பா பயனுக்கு போன ஆடியோட நாற்பதை தாண்டி வயசு கிழக்க  மேக்க ஓடுற ரயிலு வண்டிக் கணக்கா ஓடிட்டு இருக்கு

அவ சொல்லறானு இந்த கெரவத்தை தூக்கீட்டு திரிஞ்சா அயிம்பதையும் எட்டி புடிச்சுரும் அப்போ  மூட்டுவலி வந்தவனுக்கு கால்க்கட்டு போடரமாதிரி  ஆயிரும்" என்றார்  சென்னியப்பன் சலிப்புடன் .    

" மொதலாளி அம்மா வேற புள்ளையும் பயனும் ஒரே வயசா இருக்குது அங்கதா  இடிக்குதுனு முட்டுக்கட்டைய போடறாங்களே என்னத்த செய்யறது சொல்லுங்க" என்றார் சம்பத்து கொஞ்சம் தாழ்ந்த குரலில் .   

"இங்க பாரு சம்பத்து என்  ஊட்டுக்கார அம்மாவுக்கு பொறந்த  சாதகமே எழுதி வைக்கிலயாமா குத்துமதிப்பா அவங்க அப்பாரு சொன்ன பவானி ஆத்துல 72ல  வந்த வெள்ள  கணக்க வெச்சு பாத்தா என்னைவிட ஒரு வயசு மூத்தவளாத்  தானிருக்கும் , கட்டியுமாச்சு புள்ளையும் பெத்தாச்சு  நாப்பத்திமூணு வருஷமுமாச்சு இப்போ என்ன கொறச்சலா போச்சுங்கறேன் " என்று எதோ ஒரு  உலக சாதனை செய்த தொனியில் பேசினார்.

"இப்ப உன்னத்தா மலைபோல நம்பி இருக்கிறன் 
ஒரு பதனஞ்சு நா கழிச்சு வா வாங்கீட்டு போன இந்த சாதககட்டு நகல அப்படியே ஒன்னு குறையாம  தூக்கிட்டு  வந்து 
நாஞ்சொல்லறமாதிரி சொல்லி அவகிட்டயே  திருப்பி குடுத்துரு "  என்று சொல்லி மேலும் 

"நாப்பது வயசுக்கு  உள்ளாரா , டைவர்ஸு ஆனது  , நாட்பதுக்கு மேல வயசான புள்ளைக அப்பங்க யாருமே  பையனுக்கு நாற்பதுக்கு மேலன்னா தம்பி சாதகத்த   கையில கூட  தொட மாட்டேன்னுட்டாங்க  இனியும் இருக்கறத உட்டுட்டு பறக்கறத புடிக்க திரிஞ்சா தம்பி சரவணன் கலியாணத்தை மறந்தற வேண்டியதுதான்னு  சொல்லி போட்டு போயிரு" என்று கெஞ்சும் தொனியில் பேசிக்கொண்டே இடுப்பு வேட்டி மடிப்பில் இருந்து எடுத்து கசங்கிய நாலு ஐநூறு ரூவா நோட்டுகளை சம்பத்து கையில் திணித்தார் .

மேலும் "இத மட்டுஞ் செஞ்சுட்டீனா மிச்சத்த நான் பாத்துக்கறேன், இன்னோனையும்  இப்பவே சொல்லீறனப்பா  உனக்கு  கல்யாண பத்திரிகையை வைக்கும்போது ஆருக்கும் தெரியாதமாரி  உம்பட புள்ளை பள்ளிக்கூட செலவை கவனிக்கறமாதிரியும் ஏற்பாடு பண்ணீடறேன் தைரியமா போ  " என்றார்.

"மொதலாளி  டான்னுன்னு பாஞ்சுநா கழிச்சு பாக்கலாமுங்க, அப்போ நா வரேங்க " கும்பிடுடன் சம்பத்து ஒன்றரை பார்லாங்கு தூரத்தில் ஊருக்கு வெளியில் இருக்கும்  பஸ் ஸ்டாப்பிங்கை நோக்கி நடக்கலானார்.  

இந்த கல்யாணம் எப்படியும் நடந்தே தீர வேண்டும் என்ற அந்த தகப்பனின்  வைராக்கியதில்  சம்பத்துக்கும் பங்கு வந்து சேர்ந்தது போல மனதில் எதோ ஒரு ஓரத்தில் பாரம் சுமந்து 7 மணி பாஸ்ஸை பிடிக்க வெடுக்கான நடையில் வண்டித்தட வழியாக நடந்துசென்ற சம்பத்தை  சென்னியப்பன் ஒருவித ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே  நின்றார். 

-சக்திவேல் விரு 

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...