Friday, March 22, 2024

தண்ணீர் கிராமம் - நா. கார்த்திக்

 

     ரோட்டில் வில்லரசம்பட்டி கருவிற்பாறைவலசு ஏரி அருகே இருக்கும் ஒரு அழகிய கிராமம் அது. அந்த கிராமத்தின்  நுழைவுவாயில் இருபுறமும் பசுமை நிறைந்த வேலியை போல் மரம், கொடி என அமையப்பெற்றிருக்கும். நுழைவுவாயிலின் வழித்தடம் முழுவதும் தண்ணீர் சென்றுகொண்டு இருக்கும். அந்த கிராமத்தில்  உள்ள அனைத்து வீதிகளும் சேறும் சகதியும் நிறைந்திருக்கும். ஊரின் அருகே ஒரு பெரிய ஏரி அமைந்துள்ளதால் ஊரின் மேலே உள்ள வயல்காடுகளின் வடிகால் தண்ணீர் அந்த ஊரின் வழியாகத்தான் சென்று ஏரியில் கலக்கும் . 


அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் வசதி அப்போது கிடையாது. ஊற்று கிணறுபோல் தோண்டி வைத்திருப்பார்கள் வாலியை கொண்டு தண்ணீர் இறைத்துதான் பயன்படுத்துவார்கள். ஒன்று அல்லது இரண்டு அடி கீழே தோண்டினாலே போதும் தண்ணீர் கிடைக்கும். கரண்ட், அடிப் பைப் எல்லாம் பலவருடம் கழித்தான் கொஞ்சம் கொஞ்சமாக வசதி வர தொடங்கியது அந்த ஊர் மக்களுக்கு.


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அருகே உள்ள ஏரியில் துணி துவைப்பது, குளிப்பது, சிறுவர்கள் நீச்சல் பழகுவதும், ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டுவது, தூண்டில் போட்டும் துணியைக்கொண்டும்  மீன்பிடிப்பது என அந்த குளம் தந்த மகிழ்ச்சிகள் ஏராளம். குளத்தின் அருகே உள்ள வயல்காடுகளுக்கு பம்புசெட் வைத்து தண்ணீரை எடுத்து பயன்படுத்துவார்கள். குளத்தை சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களும் மிக பசுமையாக இருக்கும். வெயில் காலங்களில் ஏரியில் தண்ணீர் வற்றும் போது மீன்கள் எக்கச்சக்கமாக கிடைக்கும் அப்போது ஊர் முழுவதும் மீன் குழம்பு வாசம் வீசும், தண்ணீர் வற்றிய பிறகு பெரிய பாறைகள் தென்படும், அதில் ஒருபாறை ஆமையின் வடிவில் இருக்கும், அதற்க்கு சிறுவர்கள் ஆமைப்பாறை என பெயர் வைத்தார்கள். அந்த நேரங்களில் ஏரி எங்களுக்கு கிரிக்கெட் பிச்சாக மாறும். அக்கரைக்கு சென்று பனம்பழம் அத்தி பழங்களை எடுத்துவருவோம்.  


ஏரிக்கு மிக அருகே உள்ள சில வீடுகளில் மழை அதிகம் உள்ள மாதங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிடும். அந்த நேரங்களில் ஆமை, நண்டு எல்லாம் வீடு அருகே (உள்ளேயும்) நிறைய பார்க்கலாம் கொஞ்சம் மேடான பகுதியில் உள்ள வீடுகளில் தார்பாயை வீட்டுக்குள் விரித்து அதற்குமேல் பாய் போட்டுத்தான் படுக்கவேண்டும் அந்தளவுக்கு எபோதும் ஈரம் இருந்துகொண்டு இருக்கும். 


சிறுவர்கள் நீச்சல் பழகும் வரை பெரிய அண்ணன்கள் சொல்வதையெல்லாம் செய்வார்கள். அதில் அவர்கள் கடைக்கு செல்ல சொல்வார்கள், ஆடுமாடு வைத்திருப்பவர்கள் அதற்க்கு இலைதழைகளை உடைத்து தர சொல்வார்கள், விளையாடும்போது அவர்களுக்கு முன்னுரிமை என கண்டிசன்ஸ்களுக்கு கட்டுப்பட்டு  இருப்பார்கள். பழகிய பிறகு அவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் சிறுவர்களின் அட்டகாசம் இருக்கும். 


பள்ளி சென்று வீடுதிரும்பும்போது, தலைப்பிரட்டையை மீன் என நினைத்து பிடித்து வருவது, நண்டு பிடித்து விளையாடுவது என்று வீடு வருவதற்குள் உடைகள் எல்லாம்  நனைந்துதான் வருவோம்.


அந்த ஊர் முழுவதும் தண்ணீரும், சேறும் சகதியுமாக இருப்பதால் கால் விரல்களில் சேற்று புண்களால் நிறையபேர் அவதிப்படுவார்கள். இரவு நேரங்களில் பாம்பு பூச்சி தொல்லைகள் அதிகம் இருக்கும். 


வாடகை வீட்டில் சொகுசாக இருந்துவிட்டு வந்து இந்த ஊரில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மனை கிடைத்ததால் அதை வாங்கி கூரை வீடு அமைத்து அங்கு வாழ பழக்கப்படுவதற்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது ஆனால் அப்போது  இருந்த சூழ்நிலைக்கு வாழ பழகிக்கொண்டார்கள். அதுவும் நன்றாகத்தான் இருந்தது. 


அது ஒரு பசுமைநிறைந்த காலம்.


நா. கார்த்திக்



No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...