மனிதனின் வாழ்க்கை எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையின் மூலம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி எதிர்பார்ப்புகள் இருக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப சிறிய எதிர்பார்ப்புகள், பெரிய எதிர்பார்ப்புகள் என்று வகைப்படும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நம்பிக்கையை நிறைவேற்ற நாம் எடுத்து வைக்கும் முதல் படி "தன்னம்பிக்கை" ஆகும்.
எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் மகிழ்ச்சி அதிகரிக்கும் ; தன்னம்பிக்கை பிறக்கும். அதே சமயம் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதமோ அல்லது எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலோ தான் எதிர்மறை எண்ணங்களும், கோபமும் தோன்றும். மேலும் அது அழுகையின் வெளிப்பாடாகும். அதே சமயம் எதையும் எதிர்பார்க்காமல் சாதகமான ஒன்று நடந்தால், அச்செயல் ஆச்சிரியத்துடன் நம்மை வியப்பூட்டும்.
"காலம் அறிந்து செயல்பட வேண்டும்"
எது முட்டாள்தனம்?
ஒரு பனை மரத்தின் கீழ் நின்று கொண்டு பனை மரத்தில் நம்மால் தேங்காயை பார்க்க முடியாது. நம்முடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்பதற்காக பனைமரத்தை குறை கூற முடியாது. மேலும் குறை கூறினால் அது முட்டாள்தனமாகும்.
அந்தந்த மரத்திற்கு ஏற்ப நம் எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
எதிர்பார்ப்புகளை அடைவதற்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் வேண்டும். எதிர்பார்ப்புகளை திட்டவட்டமாக தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என்றால் உலகத்தை மாற்ற முயற்சிப்பதை விட, நம்மையும் நம் எதிர்பார்ப்புகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் :-
பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது ஒவ்வொரு பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு.
அக்குழந்தை வளர்ந்து பெரியவர்களாகி நம்மை காப்பாற்றும் என்பது பெற்றவர்களின் நம்பிக்கை. பிறந்த குழந்தை வளரும் வரை பெற்றோரை எதிர்பார்த்து நம்பியிருக்கிறது. பெற்றோர்கள் தம் வயதான பருவத்தில் குழந்தைகளை நம்பி எதிர்பார்த்து வாழ்கின்றனர்.
கல்வி கற்றலின் போது மாணவர்கள் ஆசிரியர்களை எதிர்பார்த்து கல்வியை கற்கின்றனர். எல்லாச் செயலுக்கும் வழிகாட்டியாக இருப்பது நம்பிக்கைதான்.
"நாம் எதுவாக ஆக வேண்டும் என்று
தினம் தினம் எண்ணுகிறோமோ
அதுவாகவே ஆகிறோம்"
ஒரு நாணயத்தின் இரு பக்கமாக எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் விளங்குகின்றன.
ஏமாற்றத்தைக் கையாள்வோம்:-
எல்லா நேரங்களிலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில்லை. நாம் எதிர்பார்த்தபடி எதிர்பார்ப்புகள் நடக்காத போது மாற்று வழியில் நமது இலக்கினை மாற்றிக் கொள்ளும் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறாமல் இருக்க வேண்டுமெனில், நிறைவேறா எண்ணத்தை மடைமாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். மன உறுதியோடு நம்பிக்கையை இழக்காமல் செயல்பட வேண்டும்.
சில எதிர்பார்ப்புகள்:-
1). நன்றாக தேர்வு எழுதிய மாணவன், தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணி எதிர்பார்த்திருப்பார்.
2). மானாவாரிப் பயிரை பயிரிட்ட விவசாயி மழை வேண்டி எதிர்பார்த்திருப்பார்.
3). உறுதியாக வெற்றி பெற முடியும் என்று களம் இறங்கிய விளையாட்டு வீரர், கடுமையான பயிற்சிக்குப் பின்னர் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருப்பார்.
எதிர்பார்ப்புகள் நிலையில்லாதது தான் ஆனால் "நம்பிக்கை" என்பது வெற்றியின் முதல்படி.
நாம் உலகத்திடம் கொண்டிருக்கும் அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நம்மீது செலுத்த வேண்டும். அவ்வெதிர்பார்ப்புகளை நாம் நம் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகாட்டியாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பிறப்பு முதல் இறப்பு வரை எதிர்ப்பார்ப்புகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. எதிர்பார்ப்புகளை வரையறுத்துக் கொள்ளுங்கள். பயன்படாத பணம் எப்படி தன் மதிப்பை இழக்கிறதோ, அதுபோலத்தான் பயன்படாத திறமையும் குன்றிவிடுகின்றது.
பயன்படுத்தப்படாத நேரமும் மடிந்து விடுகின்றது; பயன்படாத திறமையும் குன்றி விடுகின்றது; உங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஆற்றல்களும் மறைந்து விடுகின்றது.
ஆற்றல்களை இன்றும் நம்பிக்கையோடு வெளிப்படுத்த வேண்டும். வாருங்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வோம். நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்.
-பேபி அபர்ணா குணசேகரன்


No comments:
Post a Comment