இவ்வளவு காலம் எதிர்பார்த்திருந்த அந்த ஒரு நாளுக்கு இடையில் இந்த ஒரு இரவு மட்டும் தான் இருக்கிறது. எல்லாம் சரியாக இருக்கக் கூடிய அந்த ஒரு நாள். ஒரு நாளின் அனைத்தும் எப்படி சரியாக இருக்கக் கூடும்? இருக்க முடியும்? சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டது தானே கனவுகள். சாத்தியங்களை ஏன் கனவு காண வேண்டும். அதில் ஒன்றும் ரசமிருக்க முடியாதே. அதனாலேயே மனம் அசாத்தியங்களை கனவு காண்கிறது. தர்க்க நியாயங்களை தாண்டி, கனவுகளை நேர்மறையாக நம்பவும் எத்தனிக்கிறது. சமயங்களில் கனவுகள் ஈடேறிவிடக் கூடிய சந்தர்ப்பங்கள் வாய்த்து விடும். எதிர்பாராத அந்த சூழலை, அதில் உள்ள ஒரு பெரும் உற்சாகம் தரும் சிக்கலை, தெளிவில்லாத ஒரு நிச்சயத்தோடு மனம் எதிர்நோக்கி இருக்கும். அத்தகைய ஒரு மனநிலையில் தான் அவன் இருக்கிறான்.
ஒரு வழியாக அந்த பொழுது விடிந்து விட்டது. பல நூறு முறை இந்த நாளை மனதளவில் வாழ்ந்து விட்டிருந்தபடியால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் எந்த தடுமாற்றமும் இல்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு சராசரி நாள்; ஒரேயொரு சராசரி நாள் மீதமிருக்கும் மொத்த ஆண்டுகளுக்கும். அதனால் அதில் என்னென்ன செய்ய வேண்டும் என பல முன் தீர்மானங்கள் இருந்தது. அந்த வரிசைக் கிரமத்தில் முதலில் இருந்தது சிறுநீர் குழாயில் (catheter) இருந்து விடுதலை பெறுவது. தூண்டிலில் மாட்டிய மீன் போல நாள் முழுவதுமான அவஸ்தையில் இருந்து முதலில் விடுவித்துக் கொண்டான். அடுத்ததாக மீண்டும் ஒரு முறை இந்த உலகை ஆறடி உயரத்தில் இருந்து பார்க்கிறான். நிதானமாக படுக்கையில் இருந்து எழுந்து மிக நீண்ட 10 ஆண்டு கால சோம்பலை முறித்தான். காலை நன்கு மடக்கி, நீட்டி, குதித்து, தோப்புக்கரணம் போட்டு மிக நீண்ட ஒரு சோம்பல் முறிப்பாக இருந்தது. ஒரு முறை மட்டுமாவது மீண்டும் இந்த விடுதலை உணர்வை அனுபவித்து விட வேண்டும் என்ற நீண்ட கால அவஸ்தையை தணித்துக் கொள்ள வாய்த்த இந்த அரிதான சந்தர்ப்பத்தில், அவன் முற்றிலும் எதிர்பார்க்காத வேறொரு உணர்வு மேலிட்டது- இதுவே தனக்கான, இத்தகையதொரு, கடைசி சந்தர்ப்பம் என்ற போதத்தோடு அதை அனுபவிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. எதுவாகினும் அனுபவித்து விடுவது என்ற முடிவுடன் சுதந்திரமாக, சுயமாக சிறுநீர் கழிக்க சென்றான். வரும் வழியில் இருந்த நிலைக் கண்ணாடியில் மெலிந்த நிலையில் இருக்கும் தன் முழுமையான தோற்றத்தை ஆழமாக நோக்கினான். இதுவரை இவ்வளவு ஒல்லியாக அவன் தன்னை பார்த்தத்தோ உணர்ந்ததோ இல்லை. சாவகாசமாக தன்னை ரசித்தான். உடனடியாக தன் விருப்பத்திற்குரிய மெரூன் நிற பேண்டையும், மஞ்சள் நிற ப்ரிண்ட் சர்ட்டையும் போட்டு தன் முழு உருவத்தையும் பார்த்து விட மனம் துடித்தது. இருந்தாலும் இந்த நாளில் எதையும் நிதானமாக செய்யவும், ஒரு ஆயுள் பரியந்த நினைவாக வார்த்தெடுப்பதும் வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருந்தான்.
அறைக் கதவை திறக்கும் போதே அவன் மகனும் மகளும் வெளியே நின்றிருந்தனர். மகனை சிறு வயதில் அவன் தோளில் சுமந்து ஓடியாடி விளையாடி இருந்த போதிலும், அவனுக்கு அது எதுவும் நினைவில்லை. மகளுக்கு அந்த அனுபவமும் இல்லை. அதனால் குழந்தைகள் இருவரும் தங்கள் அப்பாவை முதன் முதலாக எழுந்து நடப்பதை பார்க்கிறார்கள். மகள் ஓடிவந்து கால்களை கட்டிக் கொள்கிறாள்; மகன் மெதுவாக வந்து அருகில் நின்று கொள்கிறான். அப்பா அம்மா மனைவி அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மகனை பற்றிக் கொண்டு மகளை தூக்கிக் கொண்டு, மெதுவாக வாசலுக்கு சென்று செய்தித்தாளை எடுத்து வந்து சோபாவில் அமர்கிறான். காலைக் கடனுக்கு முன்பாக தன் வழக்கம் போல், சிறிது தண்ணீர் அருந்துகிறான்.
10 ஆண்டுகளாக, காலை எழுந்தவுடன், வெதுப்பான நீரை இனிமா கேன் மூலம் உள் செலுத்தி, பாதி மலம் கழித்து, பகலில் மீதி மலம் வெளியேறி விடக் கூடிய ஆபத்தை தவிர்க்கும் பொருட்டு, உதவியாளர் தன் கை விரலை வைத்து எடுக்கும் அவஸ்தையும் வலியும் இன்றி, இன்று உற்சாகமாக தன் போக்கில் காலைக் கடன்களை முடிக்க, தன் வழக்கமான நரசூஸ் காபியையும் இந்து செய்தித்தாளையும் எடுத்துக் கொண்டு, கழிவறை சென்றான். வழக்கமாக அவன் கழிவறைக்கு காபியுடன் செல்லும் போது வசை பாடும் அவன் மனைவியும் அம்மாவும் இந்த முறை எதும் பேசவில்லை. இது எதையும் கவனிக்காத வகையில், அவன் மனம் முழுவதும், பூரணமான அந்த விடுதலை உணர்வு ஒரு பேரமைதியை ஏற்படுத்தி இருந்தது. அவன் வாழ்வின் மிக நீண்ட, அமைதியான, ஆசுவாசமான காலைக் கடன் அனுபவம் அது.
ஒரு முழுமையான குளியல் அனுபவத்தை பெறும் ஆசையுடன் தன் ஆஸ்தான தேங்காய்ப்பூ துண்டை எடுத்துக் கொண்டு, மீண்டும் குளியலறை சென்றான். தன் உடலை முழுமையாக தொட்டுணர்ந்தான். அந்த வெந்நீரின் கதகதப்பு உடல் முழுவதும் பரவிப் பாய்வதை ஸ்பரிசித்து அனுபவித்தான். வழக்கமாக மனதில் கட்டுப்பாடுன்றி அலையும் ,உணர்வுகளோ, சிந்தனைகளோ, எதுவுமின்றி ஒரு பூஜ்ய நிலையில் மனம் வெற்றிடத்தின் அம்மணமான அமைதியை சூடி இருந்தது. அது மிகவும் தேவையாக இருந்தது. குளித்து முடித்து துவட்டிக் கொண்டு, தான் முன்பே எடுத்து வைத்திருந்த மெரூன் பேண்டும், மஞ்சள் ப்ரிண்ட் சர்ட்டும் போட்டுக் கொண்டு, தனக்கு மிகவும் பிடித்த அர்மானி வாட்சை கட்டிக் கொண்டு சில நிமிடம் கண்ணாடி முன் நின்றான்.
நிதானமாகவும் அழுத்தமாகவும் நடந்து வந்து, உணவு மேசையை தவிர்த்து விட்டு, சமையலறை தரையில் சம்மணமிட்டு அமர்ந்தான். யாரும் எதுவும் பேசவில்லை. தேவையும் இருக்கவில்லை. எல்லாம் அனிச்சையாக நடந்தது. ஒரு தட்டில் உப்பும் பச்சை மிளகாயும் சின்ன வெங்காயமும் போட்டு,வேகவைத்து, சமைக்கப்பட்ட ஆட்டிறைச்சி ஒரு புறமும், கொழுப்பு ஒரு புறமும் சாப்பாடு ஒரு புறமும் போட்டு அவன் முன்னால் வைக்கப்பட்டது. மெதுவாக வெங்காயம் மிளகாய்களை ஒதுக்கி இறைச்சியை மட்டும் உண்ணத் துவங்கினான். அது தான் அவன் வழக்கம். முழுமையாகவும் எழும்பில் துளி சதையும் மிச்சம் வைக்காமலும் சிறிய எழும்பாக இருந்தால் எழும்பையும் மிச்சம் வைக்காமலும் சாப்பிட்டு விடுவான். பிறகு அந்த இறைச்சியுடன் இருந்த வெங்காயம் கறிவேப்பிலை மற்றும் மசாலாவை சாப்பாட்டுடன் வெங்காயம் சேதாரம் ஆகாதவாறு பிசைந்து சாப்பிட்டான். பிறகு குழம்பு, குழம்புடன் தயிர் என தனக்கே உரிய முறையில் சாப்பிட்டான். பொதுவாக சமையலுக்கு மட்டுமல்ல சாப்பிடவும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பக்குவம் உள்ளது. தனக்கான உணவை ஊட்டிவிட சாப்பிடுவது என்பது உணவகத்தில் சாப்பிடுவது போல அவ்வப்போதுக்கான தற்காலிக மகிழ்ச்சி. தனக்கான உணவை தானே சாப்பிடுவதென்பது வீட்டு சமையல் போல. அது பழைய சோறாக இருந்தாலும் ருசிக்கும்; லயிக்கும். அவனும் லயித்திருந்தான். மதிய உணவிற்கு ஐயப்ப விலாஸ் போக முடியாது எனத் தெரிந்து விட்டது. அங்கேயே ஒரு பக்கமாக நகர்ந்து சுவரில் சாய்ந்து காலை நீட்டி உட்கார்ந்து கொண்டான். மிகவும் நிறைவாக உணர்ந்தான்.
சற்று நேர ஓய்வுக்கு பிறகு ஒரு பில்டர் காபியை குடித்து விட்டு வரலாம் எனக் கிளம்பினான். அவன் வண்டி இனி பயன்படாது என முன்பே விற்று விட்டபடியால், தந்தையின் வண்டியை எடுத்துக் கொண்டான். மிகவும் பிடித்த, அவன் ரசித்து வாங்கிய தங்க நிற ரேபான் ஏவியேட்டர் கண்ணாடியை அணிந்து கொண்டு கிளம்பினான். முகத்தில் காற்றும் வெயிலும் பட்டுப்படர, நிமிர்ந்து அமர்ந்து மெதுவாக ஒவ்வொரு நிமிடமாக வண்டியை செலுத்தினான். காற்றோடு அவன் முடி மட்டுமல்ல, அவனுமே பறந்தான்.
இந்த நாளின் ஒவ்வொன்றின் சுவடையும் மனதில் ஆழமாக இறுத்திக் கொண்டான். ஒவ்வொரு நிமிடமாக வாழ்ந்தான்.
திரும்பி வந்ததும் சற்று நேரம் ஓய்வெடுக்கலாம் எனப் படுக்கையில் விழுந்தான். பராமரிப்பாளர் எழுப்பினார் விடிந்து விட்டதென்று. அடடா வராது வந்த நாளை தூங்கி கழித்து விட்டதற்காக மிகவும் தன்னை நொந்து அங்கலாய்த்துக் கொண்டான். எதுவும் புரியாமல் பார்த்தார் பராமரிப்பாளர். பிறகு தான் தன் உடலில் சிறுநீர் குழாய் அப்படியே இருப்பதை கவனித்தான். படுக்கையில் இருந்து எழ முயன்றான். முடியவில்லை. கைகளும் கால்களும் வழக்கம் போல் ஒத்துழைக்கவில்லை. பரபரப்பும் படபடப்பும் கூட தன் பிசியோதெரப்பிஸ்ட்டை அழைத்து விபரத்தை கூறினான். “சார் நீங்கள் 10 வருடங்களாக எந்த அசைவும் இன்றி இருந்ததால், உங்கள் தசைகள் அனைத்தும் பலவீனமடைந்து கிட்டத்தட்ட செயலற்ற தன்மையை அடைந்து விட்டிருக்கும். மீண்டும் தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் தான் உங்களால் தனிச்சையாக செயல்பட முடியும். அது பல மாதங்களோ வருடமோ பிடிக்கும் பயிற்சி. அதனால், அப்படியே அந்த ஒரு நாள் வந்தாலும், நீங்கள் சொல்வதோ, நினைப்பதோ, எதிர்பார்ப்பதோ சாத்தியமில்லா முயற்சி. உங்கள் நிலை புரிகிறது. ஆனால் இது தான் உண்மை” என்றார்.
அவனது அமைதியை தொடர்ந்து, மேலும் பேசினார், “எதிர்மறை என்பது போலி. ஏனெனில் அதுவொரு மாற்று அனுபவம்; வேறொரு உண்மை. அதன் மூலம் மட்டுமே உண்மையின் பூரணத்துவத்தை அடையாளம் காண முடியும். அவநம்பிக்கையை போல. மனிதர்களை முற்றிலும் நம்பாமல், முற்றிலும் விலகாமல் இருப்பதால், அமைதியை அடைவதைப் போல. உங்களுடைய இந்த உடல் உங்களுடையதல்ல என்பதும் உண்மை. ஆனால் அது தான் உங்களை சுமக்கிறது என்பதும் உண்மை. நீங்கள் தான் அதை சுமக்கிறீர்கள் என்பதும் உண்மை. இந்த உண்மையில் தான் உங்களுக்கான அமைதி உள்ளது.”
ஒரு நாள் வராமலே போய் விட்டிருந்தாலோ, ஒரு நாள் சீக்கிரமே வந்து விட்டாலோ தேவலாம் என நினைத்தான்.
.png)
No comments:
Post a Comment