Monday, April 1, 2024

வழிப்போக்கர்கள் வரட்டும் போகட்டும் - Dr.K.தமிழ்செல்வன்

 


      நான்கு சக்கர வாகனம் (கார்) ஒன்றில் பயணம் செய்துகொண்டிருந்த நமது தம்பதியினர் காருக்குள் அவர்களுடைய பையனும் ஒரு வயதான மூதாட்டியும் உடன் இருந்தனர்.முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு நான்கு சக்கர வாகனம் தன் பாதையை விட்டு சற்றே வலது பக்கமாக ஏறி பாதையின் குறுக்கே வர மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தில் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு பயணம் செய்த ஒரு நபர் வாகனத்தை சற்றே கட்டுப்பாடு இழந்த நிலையில் தாறுமாறாக   குறுக்கே வர, நமது தம்பதியினர் சென்று கொண்டிருந்த காரை ஓட்டிக்கொண்டு வந்த கணவருக்கு கோபத்தை உண்டாக்கியது.


சற்று காரை வேகமாக ஓட்டிச் சென்று அந்த இருசக்கர வாகனத்தை முந்தி தன்னுடைய வாகனத்தை குறுக்கே இட்டு காரின் கண்ணாடியை இறக்கி  'இப்படித்தான் வண்டி ஓட்டுவியா?' என்று வசை பாட அந்த இருசக்கர வாகன 'ஓட்டி நான் அப்படித்தான் ஓட்டுவேன்.உன்னோட விருப்பத்துக்கெல்லாம் என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ எல்லாம் யார் என்னை வந்து கேள்வி கேட்க' என்றெல்லாம் பதில் பேச, நான்கு சக்கர வாகன ஓட்டிக்கு இந்த பதில் கோவத்தை அதிகமாக்கியது.

சில தகாத வார்த்தைகளையும் இருவரும் மாறி மாறி பிரயோகப்படுத்திக் கொண்டு காரை விட்டு இறங்க எத்தனிக்க காருக்குள் இருக்கும் மனைவி 'வேண்டாம்.நாம் செல்ல வேண்டிய வேலை இருக்கிறது அல்லவா செல்லலாம்' என்று கணவனை மீண்டும் சமாதானப்படுத்தி காருக்குள்ளேயே இருக்க வைத்தார். இரு சக்கர வாகன ஓட்டி தன் பங்கிற்கு சீறிக்கொண்டு வர பின்புறம் இருந்த அவரது மனைவி அவரை தோளில் பிடித்து 'வேண்டாம்.நீங்கள் அமைதியாக இருங்கள், என்று சொல்வதும் இப்படியாக சில நிமிடங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கையில் பின்னால் வந்த சில வாகனங்கள் இதில் இடை மறிக்கப்பட்டு நின்று கொண்டிருப்பதும் மாறி மாறி ஒலிபெருக்கியை இயக்குவதுமாக இருந்தது.

வசைகளுடன் தொடர் ஒலிப்பெருக்கி ஓசைகளும் நாராசமாக வாகனத்தை எடுத்துக்கொண்டு லேசாக நகர்வதும் அதன் பிறகும் கூட சில குறிப்பிட்ட நிமிடங்கள் அந்த இடம் அமைதி இழந்ததே காணப்பட்டது போல ஒரு உணர்வு. 

சில மணி நேரங்கள் வரை கூட அந்த காருக்குள்ளே பயணம் செய்த பயணிகள் இடையேயும் சரி அந்த சக்கர வாகனத்தில் பயணம் செய்த பயணிகள் இடையேயும் சரி, ஒரு சிறு புன்முறுவல் கூட இல்லை. ஒரு சிறு மகிழ்ச்சியில்லை. ஒட்டுமொத்த நிம்மதியும் இழக்க வேண்டி இருந்தது.

நமது தம்பதியினர் இது போன்ற ஒன்றுமில்லாத சண்டைகளை ஒன்றாக சேர்த்து கட்டிவைத்து பெரும் சுமையாக்கி விவாகரத்து வரை பயணிக்க தயாராக இருந்து தற்போது முடிவை மாற்றிக்கொண்டு மகிழ்வானதொரு குடும்பமாக மாறியுள்ளனர்.இதற்கு கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் பக்கமாக நேரம் மற்றும் கிளினிக்கில் நாங்கள் அனைவருமே படாத பாடு பட்டு இப்போது தான் சற்றே பெரு மூச்சு விட்டிருக்கிறோம்.

கிளினிக்கில் வந்து ஒன்றாக அமர்ந்த நமது தம்பதியினர் வழக்கம் போல இது ஒரு பெரிய பிரச்சனை  போல சொல்லிக்கொண்டிருக்கையில்.....
கேட்டுக்கொண்டேயிருந்த எனக்கு எங்களுக்கிடையில் கிடைத்த தேநீர் இடைவெளி (அதாங்க லெமன் டீ போன்ற ஒரு பாணம்)......'இது கிளினிக்கா? இல்லை குட்டி குடும்ப நல நீதிமன்றமா?' என எங்களை என்றோ இவர்கள் உறவினரே கேலி செய்ததும், 'இங்கு நாங்கள் இதுவரை யாரையும் பிரிந்து போக விட்டதில்லையே' என்ற பதிலுக்கு பின் சில நாட்கள் கழித்து 'இவர்கள் வாழ்வில் நீங்கள் நிகழ்த்தியது பெரிய விஷயம் டாக்டர்' என்று அவரே அழைத்து  ஆமோதித்ததும்  நினைவில் வர, அதோடு கூட வந்த நினைவலைகள் அளித்த பதில்கள் உரையாடல்கள்...அவர்களோடு வாசிக்கும் உங்களுக்குமாக...

    இதையெல்லாம் தவிர்க்க அவரவர் வாகனத்தை அவரவர் நிதானமாக ஓட்டுவதும் சரியாக ஓட்டாதவர்களை நாம் குறுக்கிட்டு மறித்து அவர்களை பேசி அவர்களை திருத்து முயற்சி செய்வதை விட்டுவிட்டு நாம் செல்ல வேண்டிய பாதை, நமது பயணம்,நமது குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுதல் இதையெல்லாம் குறிப்பிட்டு செய்தாலே போதும். நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் அடுத்தவர் வாழ்க்கையும் கூட சேர்ந்து இதில் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இதை விடுத்து நாம் அவர்களுக்கு அறிவுரை சொல்வதோ அவர்களை திருத்துவதோ அல்லது அவர்களுடன் வாதாடுவதோ என்று நம்மை மீண்டும் மீண்டும் மனச்சுமைக்கு மற்றும் வெறுப்புக்கு உள்ளாக்கி அவர்களையும் மனச்சுமைக்கு உள்ளாகிறோம். இதை தவிர இதில் வேறு பலன் எதுவும் இல்லை.அவர்களும் ஒருபோதும் தான்  தவறு செய்து விட்டதாக நினைக்கப் போவதில்லை.நாமும் நம்மை நாமே அவர்களை  மாற்றிவிட்டதாக நினைத்து பெருமை கொள்ள போவதில்லைை. நாமும் வெறுப்படைந்து அவர்களையும் வெறுப்படையை வைத்து நமது குடும்பத்திலும் நிம்மதி இழந்து, அவர்களது குடும்பத்திலும் நிம்மதி இழந்து இந்த பயணத்தை தொடர போகிறோம்.

பள்ளியில் பல நாட்கள் படித்த நண்பன் முகம் ஞாபகம் இல்லை. மறந்து விட்டோம். கல்லூரியில் படித்த தோழி நினைவில்லை. அடையாளம் தெரியவில்லை.மறந்துவிட்டோம். அவர்களுக்கு கூட செய்யாத நன்மையை அறிவுரையை இந்த வழிப்போக்கர்களுக்கு உடனடியாக வழங்கி நன்மையை செய்து நல்ல பேரை நாம் வாங்கி நல்ல வழியை அவர்களுக்கு வழங்கி விடப்போகிறோமா என்ன?

நம்முடன் வாழ்க்கையில் பயணித்த, பயணிக்க போகும் உறவுகளை, நபர்களை மாற்றத்தை நோக்கி அழைத்து செல்ல அறிவுரைகளை கூறி அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்குவதற்காக திட்டங்களை வகுத்து செயல்படுவோமேயானால் அது நன்று.அன்றி யாரோ ஒரு வழிப்போக்கரின் வாழ்வில் நமது கோபத்தை கொட்டி தீர்ப்பதற்கென முற்படும்போது நாம் எதிர்மறையானவற்றை மட்டுமே வழங்கி நாமும் அனுபவிக்கிறோம்.

வழிப்போக்கர்கள் வழிப்போக்கர்கள் தான்.அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். நாம் நம்முடைய பயணத்தை இனிமையாக தொடர வேண்டி இனியாவது வழிப்பயணத்தில் குறுக்கே வருபவர்களை நாமும் குறுக்கிட்டு சென்று திட்டி, நமது நிம்மதியும் இழந்து நமது வீட்டில் குடும்ப சூழ்நிலையை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றுவதை நிறுத்துவோம்.இது போன்ற சூழ்நிலைகளில் புன்னகையுடன் ஒரு சிறு தலையசைவை மட்டும் தெரியப்படுத்துவோம்.

மாறாக சரியாக சாத்தப்படாத கார் கதவுகள், இரு சக்கர வாகனங்களில் சக்கரத்தில் சிக்க வாய்ப்புள்ள புடவைகள் அல்லது முந்தானைகள் மற்றும் தூங்கிய குழந்தைகள் இவற்றை பற்றி ஓட்டநருக்கு தெரியப்படுத்தி இப்போது நேர்மறையான செயல்களைச் செய்வோம்.நேர்மறையான  எண்ணங்களை பெறுவோம்.இனி வருங்காலங்களில் நம் மீது நாமே பெருமை கொள்வோம்.

அப்போதும் கூட வழிப்போக்கர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.அவர்கள்  வழிப்போக்கர்கள் வரட்டும் போகட்டும்.அவர்களுக்கு தங்குவதற்கான சத்திரம் நாம் நிம்மதியாக வாழும் நமது இல்லறமோ, இல்லமோ அல்லது நமது உள்ளமோ அல்ல.அவரவர்கள் அவரவர்கள் வழிகளில் போகட்டும். 

No comments:

Post a Comment

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...