நான் வழக்கமாக செல்லும் சாலைகளின் ஓரத்தில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் போல் திடீரென புதியதாக இனிப்பு கடைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சாலைகளில் செல்வோரின் கவனத்தை ஈர்த்தது போல் என்னையும் திரும்பி பார்க்க வைத்தது.
எனக்கு அந்த கடைகளைப் பார்த்ததும் என்ன வியாபாரம் ஆகிவிடப் போகிறது. "ஒரே சாலையில் பதினாறு கடைகள் இருக்கே என்கிற ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பண்டிகையை வைத்து சம்பாதிக்க நினைக்கும் அவர்களின் நம்பிக்கை என்னை வியக்க வைத்தது. இவ்வளவு கடைகளிலும் வியாபாரம் நடக்கிறது என்றால் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தானே காரணமாக இருக்கும்..வீட்டில் பலகாரங்கள் செய்வதெல்லாம் மக்களின் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்புடையதாக இல்லையோ? யூடியூப் சேனல்கள் விதவிதமான பலகாரங்களை செய்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அதைப் பார்த்து பெரும்பாலும் ரசிப்பதோடு சரி. விலைக்கு வாங்கி விட்டால் வேலை முடிந்து விட்டது. இதில் யாரு உட்கார்ந்து பலகாரம் செய்யறதுனு அக்கம் பக்கம் பேசுவதும் காதில் விழுந்த நேரத்தில் என் பால்யத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை..
யூடியூப் சேனல் இல்லாத காலத்தில் தலைமுறை தலைமுறையாக காதால் கேட்பதையும், கண்ணால் பார்ப்பதையும் வைத்து பலகாரங்கள் செய்வார்கள். தீபாவளி நாளில் பெரும்பாலான வீடுகளில் முறுக்கு, லட்டு, அதிரசம், மைசூர் பாகும் தான் சுவைக்க கிடைக்கும்.
தீபாவளி பண்டிகைனாவே, பட்டாசு வெடிக்கிறோமோ இல்லையோ, முறுக்கு கடிக்காத தீபாவளி பண்டிகையாகவே இருக்காது.. அந்த நாளில் இருந்து இந்த நாள் வரைக்கும் வீட்டில் சுடும் முறுக்கு மட்டும் எத்தனை சாப்பிட்டாலும் சலிப்புத் தட்டுவதில்லை. அதில் அன்பையும் கலந்து செய்வதால் கூட இருக்கலாம்.
சுட்டு வைத்த முறுக்கு தீரும் வரை , வீட்டில் சோறு குறைவாக செய்தால் போதும். காரணம் எந்த நேரமும் முறுக்கும் கையுமாக இருப்பதால் சோறு செல்லாது. அதுவும் யாராவது ஒருவர் முறுக்கை சாப்பிட எடுத்துட்டு வந்தாலே உடனே நமக்கும் சாப்பிடத் தோன்றும்.
அன்றைய தீபாவளி நாளில் அம்மாயி வீட்டில் முறுக்கு செய்ய ஆட்டாங்கல்லில் அரிசியை போட்டு இருவர் சேர்ந்து ஆட்டி எடுப்பார்கள். அப்புறம் வரமிளகாயும், உப்பையும் அம்மியில் வைத்து வரக்வரக்கென அரைத்து எடுத்ததில் கை எரிச்சல் கண்டிருக்கும். அம்மாயி மாவு பிசையும் போது ' இந்த மொளவாய அரைச்சு கையெறிது' என பாட்டு பாடிட்டே கடலமாவை சலித்தெடுத்து, ஆட்டிய அரிசி மாவில் கொட்டி பிசைந்து எடுப்பார். அதன் பிறகு விறகடுப்பை பற்ற வைத்து விடுவார்கள். எங்களுக்கு பலகாரம் செய்யும் நாள் ஒரு திருவிழாவாகத் தெரியும்.
காரணம் அம்மா, பெரியம்மா, சின்னம்மாயி,பெரியம்மாயினு ஒரு பட்டாளமே சேர்ந்து இரண்டு பேர் முறுக்கும் பிழிய, இரண்டு பேர் எடுக்க என விறகடுப்பருகே உட்கார்ந்து இருப்பார்கள். ஊரு நாயமும் சலிக்காமல் பேசப்படும். உள்ளே போனால் விறகு எரிந்து புகையாக வரும். பெரிய இரும்பு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு மாவை பிழிந்து விடுவார்கள். "கடலையெண்ணெய்" என்பதால் பொங்கி வந்து அடுப்பில் விழும். நெருப்பு அணைந்து அடுப்பு புகைய ஆரம்பித்து விடும். பொங்கி வராமல் இருக்க புளியை போடுவதும்,அதன் பிறகும் பொங்கி வந்தால் வாழைப்பழத்தோலையும் போடுவார்கள். இறுதியாக 'கண்ணு பட்டிருந்தால் கூட இப்படி பொங்கிப் போகும்' எனச் சொல்லிட்டு வரமிளகாய் சுற்றிப் போடுவார்கள். என்ன மாயமோ, மந்திரமோ எண்ணெய் பொங்குவது நின்று போகும்.
அதற்குள் சில முறுக்குகள் வீணாகி போயிருக்கும். முறுக்கு ஒன்றும் இப்போது மாதிரி ரொம்ப மொறு மொறுனு இருக்காது. பல்லு உடையாமல் கடிக்கிற அளவுக்கு இருக்கும்.அதுவே அப்போது தேவாமிர்தம். சில நேரங்களில் முறுக்கில் புகை வாசமும் கூட சேர்ந்து வரும். முறுக்கு சுடுவது என்றால் ஒரு நாளே ஒதுக்க வேண்டும். அதுக்காகவெல்லாம் அம்மாயி, ஒரு நாளும் சலித்துக் கொண்டதே இல்லை.
ஐப்பசி அடைமழை காலம். மழை ஈரத்தன்மைக்கு முறுக்கு நவுத்துப் போய்விடும் என்று, முறுக்கை எல்லாம் எடுத்து ஒரு மலக்காகிதப் பையில் போட்டு, நூல் போட்டு கட்டி பாத்திரத்தில் வைத்து நன்றாக மூடி வைத்து விடுவார் அம்மாயி.
முறுக்கு சுட்டு முடிப்பதற்குள் நாங்கள் பலதடவை எட்டி எட்டிப் பார்த்ததில், நாங்களே முறுக்கு சுட்டு எடுத்தது போல் முறுக்கு சுட்ட எண்ணெய் வாசனை எங்கள் மீதும் ஒட்டிக் கொள்ளும்.
இன்றைக்கு முறுக்கு சுடுவது மிகவும் எளிதானதாக மாறி இருக்கிறது. ஆனால் முறுக்கு சுடுவதற்கு நேரம் இருப்பது இல்லை பல பேருக்கு.
முறுக்கு சுடுவதற்கு அரிசி ஊறப்போட்டு வீட்டுக் கிரைண்டரில் நைஸாக போட்டு எடுக்க இரண்டு மூணு மணி நேரம் ஆகும். அது பெரிய வேலையாக தெரியும்.
இப்போது மாவு அரைக்கும் பெரிய இயந்திரங்கள் வந்து விட்டதால் அரிசியை ஊறவைத்து கடைக்கு எடுத்து சென்றால் பத்து நிமிடத்தில் அரைத்து கொடுத்து விடுகிறார்கள்.
அம்மாயி முறுக்கு சுட்ட காலத்தில் கடலை மாவு சேர்த்து செய்த முறுக்கு இப்போது ருசிப்பதில்லை. பொட்டுக்கடலை மாவு, உளுந்து மாவு, வெண்ணெய் சேர்த்து பிசைந்து முறுக்கு சுடுவதால் இன்று மொறு மொறுனு வர ஆரம்பித்து விட்டது. அப்படி வரலைனா முறுக்கு தீரும் வரை வீட்டில் இருப்பவர்கள் முறுக்கு தின்பதுடன் நம்மையும் வாயில் பேசி அரைத்து எடுத்து விடுவார்கள். இன்றும் முறுக்கு சுடும் போது, சில நேரங்களில், 'கோவித்துக் கொண்டு முறுக்கி போகும் சில மாப்பிள்ளைகள் போல் முறுக்கு முறுக்கிட்டு' தனித் தனியாக, பிரிந்து போய் விடுவதும் உண்டு.
முறுக்கு சுட்டால் அது எப்படி வருமோ என்ற பயத்திலேயே சிலர் முறுக்கு சுடுவதற்கு எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்? என சுடுவதில்லை. கண்முன்னே விரிந்து கிடக்கும் கடைகளில் விதவிதமாக அழகாக அடுக்கி வைத்திருக்கும் பதார்த்தங்கள் என்னைப் பார், வாங்கி சுவைத்துப் பார் என நாவில் எச்சில் ஊற வைக்கும் அளவில் மனசைக் குழப்பி விடுவதால் கடையில் வாங்கி கொள்வதே சிறந்ததாக மாறி விட்டது.
எல்லா நாட்களிலும் எல்லா பலகாரங்களும் தங்குதடையின்றி இப்போது கடைகளில் கிடைத்து விடுவதால் பண்டிகைகள் சுவாரசியம் குறைந்து போனதாக தெரிகிறது.
கொரானா வந்த காலத்திலும் கூட எதற்கு தட்டுப்பாடு வந்ததோ வரலையோ, சாலையோரங்களில் உணவு கடை வைத்து நடத்துவோரின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து இருந்தது.
இனிப்புக்கடைகள் வழக்கத்தை விட இப்போதெல்லாம் அதிகமாகவே பெருகி இருக்கிறது. மக்கள் சர்க்கரை, பிரஸர்,கொலஸ்டிரால் இருக்கிறது என்று மருத்துவப் பரிசோதனையில் வந்த ரிசல்ட்டை வைத்து, மாத்திரை எடுத்துக் கொண்டாலும், இந்த நாக்கு மட்டும் ருசியை விடாது அடம் பிடித்து, தீபாவளி பலகாரங்களை ஒரு பிடி பிடித்து விடுகிறது.
வீட்டுக்கு வரும் நாளிதழ்களில் இந்த வருடம் அதிகமாக வந்த விளம்பரங்கள் தீபாவளி இனிப்பு குறித்தான விளம்பரங்களே! பல தொழில்கள் இன்று நலிவடைந்து போனாலும் முன்பை விட அதிக அளவில் திறக்கப்படுவது உணவு பொருட்கள் சார்ந்த கடைகளே!
தீபாவளிக்கு இந்த வருடம் போனஸ் வருமா வராதா என்ற நிலையில் கூட நம்பிக்கை இழக்காமல் பண்டிகையை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொடுக்கும் போனஸை வாங்கி கொண்டு துணிக்கடைக்கும்,பட்டாசுக் கடைக்கும், பலகாரக்கடைக்கும் அலைமோதிக் கொண்டு, பொருட்களை வாங்கும் சாமானிய மக்களால்தான் இன்றும் பண்டிகைகள் உயிர்ப்புடன் இருக்கிறது.

அருமை..அப்படியே தீபாவளி கொண்டாட்டத்தை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
ReplyDeleteசுவையான முறுக்கு நினைவுகள்...
ReplyDeleteஹை முறுக்கு❤️
ReplyDeleteவீட்டில் முறுக்கு இன்றைக்கும் பெறும் இடத்தை பற்றிய அருமையான பதிவு அம்மா
ReplyDelete