சொற்கள் மிகவும் மகத்தானவை. ஒரு சொல் போதும் வாழ. ஒரு சொல் போதும் வீழ. ஆதலால் சொற்களை நாம் கவனமாகக் கையாள வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
மிகப்பெரிய வன்முறைகள் நிகழும் இடம் யாதென கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்லுவார்கள். சாதி, சமயம், மதங்கள் , ஏழை, பணக்காரன், ஆண், பெண் போன்ற பேதங்களின் அடிப்படையில் பல வன்முறைகள் நடப்பதைத் தினந்தோறும் காண்கிறோம். இவை எல்லாவற்றையும் விட வலி மிகுந்த வன்முறை என்பது வகுப்பறை வன்முறை தான்.
குழந்தைகள் மீது மிகப்பெரிய ஆதிக்கத்தினைச் செலுத்துபவர்கள் ஆசிரியர்கள். குழந்தமையைக் குழி தோண்டிப் புதைப்பவர்களும் ஆசிரியர்கள் தான். நிராகரிப்பு ,அலட்சியம், நக்கல், நையாண்டி ஏளனப்பார்வை போன்றவற்றை சர்வசாதாரணமாக வகுப்பறைகளில் நிகழ்த்துபவர்கள்.
ஒரு குழந்தை ஆசிரியர் அடிப்பதைக் கூட மறந்து விடும். வார்த்தையால் அடித்ததை வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை. பிராய்லர் கோழிகளை வளர்ப்பதைப் போல் குழந்தைகளையும் வளர்க்க விளைகின்றனர்.
குழந்தைகள் செய்யும் எல்லா தவறுகளுக்கும் தண்டனைகள் கட்டாயம் உண்டு விசாரணைகள் தான் இல்லை. விசாரணை செய்தாலும் பதில் என்னவோ கேள்வி கேட்பவர்கள் உடையதாகவே ஆகிவிடுகிறது.
உதாரணமாக உரிய நேரத்தில் வகுப்பிற்கு வரவில்லை என்றாலும் வீட்டுப்பாடம் எழுதி வரவில்லை என்றாலும் பக்கத்தில் பேசி சிரித்து விட்டாலும் கூட வகுப்பிற்கு வெளியே மாணவர்களை நிற்க வைக்கும் ஒரு பொதுவான விதி இருக்கிறது.
பொதுவாக மாணவர்கள் என்றாலே தவறுகள் மட்டுமே செய்யக்கூடியவர்கள் என்ற பொது புத்தி பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு இருப்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். உதவாக்கரை, திருந்தமாட்ட, உருப்படமாட்ட, முட்டாள் முட்டாள், மக்கு, இடியட் ,ஸ்டுப்பிட் போன்ற அர்ச்சனை வார்த்தைகளின் பட்டியலை அடுக்கலாம். வார்த்தைகளை மிக கவனமாகக் கையாள வேண்டிய இடம் வகுப்பறைகள் தான். சில வார்த்தைகள் குழந்தைகளின் மனங்களைக் மிகக் கடுமையாகக் காயப்படுத்தும் என்பதைக் கூட உணராமல் தினம் தினம் வதைக்கின்றனர்.
குழந்தைகளின் மனங்களை உற்சாகப்படுத்தி உயிரூட்டுபவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள். ஆஹா, அருமை, சிறப்பு, அற்புதம்,நன்று போன்ற வார்த்தைகளில் தான் எத்தனை ஜீவன் இருக்கின்றன.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று"
என்ற வள்ளுவனின் இந்த குறளை ஒவ்வொரு ஆசிரியரும் மந்திரத்தைப் போல் உச்சரிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும் ஆசிரியர்களே உன்னதமானவர்கள்.இவர்களே குழந்தைகளின் அற்புதமான உலகத்தினை மேலும் மேலும் அழகாகும் தேவதைகள்.
நாம் எதிர்பார்ப்பதெல்லாம் எல்லா குழந்தைகளும் டாக்டராகவோ என்ஜினியராகவோ வேண்டியதில்லை. மகிழ்ச்சிகரமான, ஆரோக்கியமான உயர்ந்த நற்சிந்தனைகளோடு நல்ல மனிதர்களாக நாளை வாழ வேண்டும் என்பதே.கவலைப்படதே நான் இருக்கிறேன் என்ற ஆறுதல் சொல் ஒன்று போதும் மனித மனங்கள் வாழ. ஆனால் பல ஆசிரியர்கள் தொடர்ந்து குழந்தைகளின் தன்னம்பிக்கையை மழுங்கடிக்கும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டுள்ளனர்.
எத்தனையோ பொருளாதார நெருக்கடிகளைச் கடந்து தமது குழந்தைகள் நன்றாக படித்து முன்னேறிவிட மாட்டார்களா என்ற பல பெற்றோர்களின் கனவுகளை ஒரு சொல்லால் கலைத்து விடுகின்றனர். குழந்தைகள் பெற்றோரிடத்தில் தலைவலி, வயிற்று வலி, சளி என்று ஏதாவது காரணத்தைக் காட்டிப் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதையே பெரும்பாலான குழந்தைகள் செய்கின்றனர். இன்றைக்காவது ஆசிரியர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கம் தான் அதிகம். பள்ளிக்குச் செல்வதைக் காட்டிலும் தனக்கு காய்ச்சலோ, தலைவலியோ, வயிற்று வலியோ போன்ற வியாதிகளே வந்தாலும் கூடப் பரவாயில்லை என்ற நிலைக்கு ஆளாகிறார்கள்.
ஆசிரியர்களுக்கு அன்பைப் போல மிகப்பெரிய ஆயுதம் வேறொன்றுமில்லை. எப்பேர்பட்ட குழந்தைகளையும் வசப்படுத்திவிடும் பேராற்றல் கொண்டது. சிறு புன்னகையோடு அன்பில் நனைந்த வார்த்தைகளால் மட்டுமே மாணவ சமூகத்தை மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல முடியும். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது காட்டும் பேரன்பு தான் அவர்களை மிகப்பெரிய உச்சங்களைத் தொடவைக்கும்.
ஆதலால் அன்பு செய்வீர்.

No comments:
Post a Comment