Monday, April 1, 2024

அந்த 15 நிமிடம் - அதீதி



      க்கத்துல ஒக்காந்து இருக்குறவங்க முகம் கூட தெரியாத அந்த கும்மிருட்டுல திடீர்னு ஒரு மஞ்சள் நிற வெளிச்சம் . அந்த வெளிச்சம் வந்ததும் அங்கேயும்  இங்கேயும் ஆளுங்க எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சாங்க. பன்னீருக்கோ அப்பத்தான் வயித்துல புளியை கரைக்க ஆரம்பிச்சது. மனைவி செண்பகா வெளிச்சம் வந்ததும் பன்னீர் முகத்தை பார்த்துட்டு ஏதோ புரிஞ்ச மாதிரி தலையாட்டிகிட்டு தம் புள்ளையையும் பையனையும் "வாங்க வெளிய போலாம்" அப்படின்னு கூட்டிட்டு போறா உடனே பன்னீரும் பிள்ளைகள் முகத்தை பார்த்திராம அவசர அவசரமா வெளியே போயிட்டான்.  செண்பகா  பசங்க கிட்ட "இதோ பாருங்கடா, ஒன்னுக்கு ரெண்டுக்கு வந்தா இப்பயே போய்க்கணும். படம் போட்டதுக்கு அப்புறம் தொந்தரவு பண்ணிங்க, வெளுத்துருவேன்" அப்படின்னு செல்லமா அதட்டிக்கிட்டே கூட்டிட்டு போனா. பிள்ளைக அதுக கடமையை முடிச்சதுக்கு அப்புறமும் அவர்களை உள்ள கூட்டிட்டு வராம ரொம்ப நேரம் 'அங்க பாரேன் மயில் நிக்குது, இங்க பாரேன் குயில் கூவுது'ன்னு ஏதோ ஒன்னு  காட்டி கதை பேசிக்கிட்டே ரொம்ப நேரம் அங்கேயே நின்னா. திரும்ப நேரம் ஆயிடுச்சுன்றதை புரிஞ்சுகிட்டு "சரி வாங்க உள்ள போவோம்" என கூட்டிட்டு வந்தா. அவ கூட்டிட்டு  வரும்போது கண்ணுக்கு ஒன்னும் புலப்படல. அந்த கும்மிருட்டுல எப்படியோ தட்டு தடுமாறி அவங்க உட்கார்ந்து இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்துட்டாங்க. ஒரு குழந்தை "எங்கம்மா அப்பாவை இன்னும் காணோம். தீனி வாங்கிட்டு வருவாரா மாட்டாரா? எனக்கு ஐஸ் கிரீம் வேணும்" இன்னொரு குழந்தை "எனக்கும் ஐஸ் கிரீம்"னு அவங்க லிஸ்ட் போட ஆரம்பிச்சுட்டாங்க. விளம்பரம் முடிஞ்சு படமும் போட ஆரம்பிச்சுட்டாங்க. 'அம்மா..அப்பா ஏம்மா இன்னும் வரல'னு கேட்டுட்டு இருந்தவங்க படம் பாக்குற மும்மரத்துல பன்னீரையே மறந்துட்டாங்க அந்த நேரம் பன்னீரு கைல ஒரே ஒரு பாப்கான் டப்பாவோட உள்ள வந்து ஒக்காந்தாப்புல. செண்பகாவும் பன்னீரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சுக்கிட்டாங்க. "அப்பா.. தீனி எங்கப்பா?" பையன் கேட்க ஆரம்பிச்சுட்டான்.

பாப்கான் டப்பாவை இடையில் வச்சதும் படத்த பாத்துக்கிட்டே ஆளுக்கு ஒன்னா எடுத்து சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. எந்த கேள்வியும் கேட்கல பன்னீரும் செண்பகமும் ஒருத்தர் ஒருத்தர் எதையோ சாதிச்ச மாதிரி பார்த்து சிரிச்சுக்கிட்டாங்க. ஒரு வழியா படம் முடிஞ்சுது வர வழியிலேயே பிள்ளைகள் கண் அசைந்து தூங்க ஆரம்பிச்சிருச்சு. 'எந்திரிங்கடா' அப்படின்னு சொல்லிட்டு ரோட்டு கடையில புருஷனும் பொண்டாட்டியும் ஆளுக்கு ரெண்டு இட்லி வாங்கிக்கிட்டாங்க. பிள்ளைகள் இஷ்டத்துக்கு தோசை ஆம்லெட் எல்லாம் வாங்கிக்கிச்சுங்க  செண்பகா பன்னீரை பார்த்து "என்னங்க பணியாரம் ஒரு செட்டு" அப்படின்னு கேட்க, "வாங்கிக்க" அப்படின்னு ரொம்ப தைரியமா சிரிச்சுக்கிட்டே பையில் இருக்கிற காசை பார்த்துட்டு சந்தோசமா சொன்னான்.
நிம்மதியா வீடு வந்து சேர்ந்தாங்க.

- அதீதி

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...