Monday, April 1, 2024

புரிதல் - ராதா மனோகரன்

 


        5 அடி 6 அங்குலத்தில் ஆஜானுபாகுவாக இருக்கும் அந்த ஆங்கில ஆசிரியை 13 வருடங்களாக இந்தத் துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். துறைக்கும், பள்ளியின் தேர்ச்சி விகிதத்திற்கும் பெரும் பங்கை அளிப்பவர். நடு இரவில் எழுப்பினாலும் என்ன என்றில்லாமல் வாட்? என்றுதான் கேட்பார். பள்ளி வளாகத்தில் கேட்கவே வேண்டாம், தவறிக்கூட தானும் தமிழில் பேச மாட்டார். அவர் மூச்சுக்காற்று விரவும் தொலைவு வரை யாரையும் தமிழில் பேச அனுமதிக்கவும் மாட்டார். இத்தனைக்கும் அவரொன்றும் நகரத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து வாழ்ந்தவரில்லை. கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான  ஒரு ஊரில் அரசுப் பள்ளியில் படித்து வந்தவர். தன் ஆசிரியப் பணி மீதுள்ள பற்று காரணமாகவே தன்னை உயர்த்திக் கொண்டவர். ஒரு சி.பி.எஸ்.சி பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியைக்கு உரிய, அதற்கு சற்று மேலான தகுதிகளும் அவருக்கு உண்டு. உடையில் நேர்த்தியும், நடையிலும் பேச்சிலும் ஒரு அவசரமும், பரபரப்பும் எப்போதும் இருக்கும். 

அன்று காலை தலைமை ஆசிரியை வரும் முன்பே அவரது காத்திருப்பு அறையில் காத்திருந்தார் அந்த ஆசிரியை. தலைமை ஆசிரியை உள்ளே நுழைந்தவுடன் வழக்கமான புன்னகையை உதிர்த்து விட்டு அவரது அறைக்குள் நுழைந்தார். 5 நிமிடத்தில் அவரிடமிருந்து அந்த ஆசிரியைக்கு அழைப்பு வந்தது.

அவரது முகம் இயல்பு நிலையில் இல்லாததைக் கவனித்தவாறே “எஸ், மிஸ். பிரபா, மே ஐ நோ த ரீசன் பார் யுவர் பிரசன்ஸ் ஹியர்? என்றார் தலைமை ஆசிரியை. 

கேட்டதுதான் தாமதம், வெயிலில் காய வைத்த தீபாவளிக் கம்பி மத்தாப்பு பற்ற வைத்தவுடன் ஒரு கண இடைவெளி விட்டுப் பொரிவது போல அவரும் ஒரு நொடி தாமதித்துப் பொரிய ஆரம்பித்தார்.  “மேம், புவன்  இனிமே என் கிளாசில் இருக்கக் கூடாது, அவனுக்கு இனிமே நான் கிளாஸ் எடுக்க மாட்டேன்,அவனால் நேற்று இரவு முழுக்க எனக்குத் தூக்கம் இல்லை...இத்தனை வருட அனுபவத்தில் ஒரு மாணவன் கூட என்னிடம் இப்படி நடந்து கொண்டதில்லை, என்னை இப்படி அவமதித்ததும் இல்லை. எனக்கு ரொம்ப மன அழுத்தமா இருக்கு ........ பேச்சுக்கு இடையில் மூச்சு விட்டாரா என்று கூடத் தெரியவில்லை.

தலைமை ஆசிரியை அவர் சிறு இடைவெளி விடும் வரை பொறுமையாகக் காத்திருந்து “வாட் ஹாப்பன்ட்? என்று கேட்டார்.

மத்தாப்பு மீண்டும் பொரியத் துவங்கியது. “நேற்று ஈவ்னிங் ரிவிசன் அப்போ நான் ஒரு வொர்க் குடுத்திருந்தேன்...எல்லோரும் எழுதிட்டு இருந்தாங்க. நான் ரவுண்ட்சில் இருந்தேன். நான் புவனோட டெஸ்க் கிட்ட போனதும் நோட்டுக்குள்ள ஒரு பேப்பரை மடித்து வைத்தான். பேப்பரைக் குடுன்னு வாங்கிப் பாத்தா கொடுத்த வேலைய செய்யாம ஏதோ கிறுக்கி வெச்சிருக்கான்”  அத்தனை கோவத்திலும் அந்த ஆசிரியையின் ஆங்கிலப் புலமை தலைமை ஆசிரியரை வியக்கச் செய்தது. 

“என்ன எழுதி இருந்தான் பேப்பர்ல?”  யோசனையுடன் கேட்டார் தலைமை ஆசிரியை.

“தெரியல மேம், இங்கிலீஷ் பீரியட்ல தமிழ்ல எழுத என்ன இருக்கு? பேப்பர்ல பாதிக்கு மேல தமிழ், லவ் லெட்டர்ன்னு நினைக்கிறேன், ... டென்சன் இறங்காமலே பேசிக் கொண்டிருந்தார்.

“அந்தப் பேப்பர் எங்க? தலைமை ஆசிரியை. 

“கிழிச்சு டஸ்ட்பின்ல போட்டுட்டேன்......  மேம், இப்போ அதில்ல பிரச்சினை... நெறைய தடி மாடுங்க ஹையர் கிளாஸ் வந்துட்டா செய்யறது தான் .... பிரச்சினை என்னன்னா செய்யறதையும் செஞ்சுட்டு தெனாவெட்டா நிக்கிறான் கிளாஸ்ல,  ஒரு ஸாரி கேட்ருந்தா கூட விட்ருப்பேன், பேப்பரை குடுன்னா  தைரியமாக் குடுக்கிறான், கிழிச்சுப் போட்ட பின்னாடியும் ரிக்ரெட் பண்ணவே இல்ல, பிரின்சிபல் கிட்ட போலாம்ன்னா திமிரா ஓகேங்கறான்...என்ன திமிரான்னு கேட்டா நான் தப்புப் பண்ணலை தாராளமா பிரின்சிபல் கிட்ட போலாம் அப்படின்னு சொல்றான்”

இந்த உச்சகட்ட ஆத்திரத்தில் தான் அவரின் பேச்சு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு திசை திரும்பியது.

முப்பது நொடிகள் ரெஸ்ட் எடுத்துத் தொடர்ந்தார் “ இவன் இப்படிப் பேசினா மத்தவங்க எப்படி என்ன மதிப்பாங்க? உங்க கிட்ட அனுப்புவேன்னு சொன்னாலும் திமிரா நின்னா நாங்க எப்படி பசங்களைக் கண்ட்ரோல் பண்றது? சோ அப்செட்டிங் மேம்...”

“டோன்ட் பி அப்செட் மிஸ்.பிரபா,  பாத்துக்கலாம்.... புவன் பொதுவா அப்படி செய்ய மாட்டன்நல்ல ஸ்டூடண்ட் தான்....என்னன்னு தெரியலையே .....சரி புவனை வந்து என்ன பாக்க சொல்லுங்க..... யூ கோ அஹெட் வித் யுவர் ரிவிசன்.....” புவன் பல வருடங்களாக விடுதியில் தங்கிப் படிப்பதால் அவனைப் பற்றித் தலைமை ஆசிரியைக்கு நன்றாகவே தெரியும்.

“மேம், சாரி டு சே திஸ், யூ ப்ளீஸ் பி ஸ்ட்ரிக்ட் வித் ஹிம், அண்ட் ஷிப்ட் ஹிம் டு சி செக்ஷன் “ சிவந்த முகம் மாறாமல் கிளம்பினார் பிரபா. 

“மே ஐ கெட் இன் மேம்?”  மெதுவாகத் திறந்த கதவின் இடைவெளியில்  புவன் தலை மட்டும் தெரிந்தது

“யெஸ், கெட் இன் ...”

புவனுடன்  காவல்காரர்களாக இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும்  வந்திருந்தனர்

“என்ன நடந்ததுன்னு கேள்விப்பட்டேன், நீ என்ன சொல்ற புவன்?” 

கேட்ட தலைமை ஆசிரியையிடம் அவன் ஒரு வேண்டுகோள் வைத்தான்  “மேம், ஒரே ஒரு சான்ஸ் குடுங்க .... இங்லிஷ் மேம் கிழிச்ச பிட் பேப்பர்ஸ ஒட்டித் தரேன் நீங்க படிச்சிட்டு என்ன சொல்றீங்களோ அதை  நான் கேக்கறேன்”  மிகவும் பணிவான ஆனால் தீர்க்கமான உடல் மொழி 

“ பிட் பேப்பர்ஸ் எங்க .....”  

“டஸ்ட்பின்ல  இருந்து கலக்ட் பண்ணி ஒரு கவர்ல போட்டு  என்னோட பேக்ல வெச்சிருக்கேன் மேம்”

தலைமை ஆசிரியை உடற்கல்வி ஆசிரியர்களிடம்  அவனது பேக்கில் இருந்து அந்தக் கவரை எடுத்து வரச் சொன்னார்.

கட்டளைக்குக் காத்திருந்த ராணுவ வீரர்களின் நேர்த்தியோடு இருவரும் நகர்ந்தனர்.

திரும்ப வந்து அந்தக் கவரைக் கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பும் எதையோ கண்டுபிடித்துவிட்ட தோரணையும் இருந்தது. 

மெதுவாக ஏதோ சொல்ல வந்த ஒரு ஆசிரியரிடம் பார்வையால் கிளம்ப  சொல்லி புவனிடம் அந்தக் கவரைக் கொடுத்தார் தலைமை ஆசிரியை.

துண்டுக் காகிதங்களை அவன் மிகுந்த சிரத்தையுடன் ஜிக் ஜாக் பஸில் போல சிரமப்பட்டு அடுக்கிக் கொண்டிருந்தான். 

தலைமை ஆசிரியை அவன் அடுக்கட்டும் என விட்டு விட்டு  ரவுண்ட்ஸ் சென்ற பொழுதுதான் தெரிந்தது பாதி பள்ளிக்குள் அது ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது. நல்ல விசயங்கள் காதுகளை அடைய எடுத்துக் கொள்ளும் கால அளவில் பத்தில் ஒரு பங்கு கூட இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் எடுத்துக் கொள்வதில்லை.  சில சமயங்களில் அதைப் பரப்புவதில் மாணவர்களுக்கு மேல் ஆர்வம் காட்டுபவர்கள் சில  ஆசிரியர்கள்தான் என வேதனையோடு நினைத்துக் கொண்டே  திரும்பி அறையை நோக்கி நடந்தார். 

அறைக்குள் வரும்போது அந்த ஒட்டுப் போட்ட காகிதம் ஓரளவு படிப்பதற்கு தயாராக இருந்தது. 

அதை வாங்கி சிரமப்பட்டு படிக்க ஆரம்பித்தார்.

“இதை நீ மிஸ். பிரபாவிடம் சொல்லி இருக்கலாமே ? இது  இவ்வளவு  தூரம் வளர்ந்திருக்காமல் அங்கேயே முடிந்திருக்குமே புவன்” ஆச்சர்யத்துடன் கேட்ட அவருக்கு புவனிடமிருந்து  வந்த பதில் ” மேம், காது குடுத்திருந்தா சொல்லி இருப்பேனே .....   “ if you were a car designer.....“ write an essay in about 750 words... இதுதான் மேம் குடுத்த அசைன்மென்ட்.... எழுத ஆரம்பிச்ச உடனே சுவாரசியத்தில் என்னை அறியாம நான் தமிழும் கலந்து எழுதிட்டேன். ஏன்னா ரேஸ் கார் டிசைன் பண்றது  என்னோட கனவு.  தமிழும் கலந்து  எழுதினது தப்புதான், பட் அது அவுட் ஆப் இண்டரஸ்ட், அதுக்கு கண்டிப்பா நான் சாரி கேட்ருப்பேன்....அதுக்கு வாய்ப்பே இல்லை அங்க... மேம் கேட்டவுடனே பேப்பர் குடுத்திட்டேன், அப்பவாவது படிச்சு பார்த்திருக்கலாம்... கையில் வாங்கின அடுத்த செகண்ட் கிழிச்சு போட்டுட்டாங்க.... என்னன்னு சொல்ல நான் எவ்வளவோ ட்ரை பண்ணேன் கேட்ருக்கலாம்.... ரெண்டுமே பண்ணாம ரொம்பத் திட்டினாங்க ....அமைதியாத்தான் இருந்தேன் .... உன்னையெல்லாம்  பிரின்சிபல் ரூமுக்கு கூட்டிட்டு போனாதான் சரி வரும்ன்னு சொன்னாங்க, நீங்க கண்டிப்ப்பா  என்னன்னு கேப்பீங்கன்னு தெரியும் ... சரி போலாம்ன்னு சொன்னேன் ... அதுக்கும் கத்தினாங்க அவங்களை நான் அவமானப் படுத்திட்டேன்னு, உண்மையில் அவமானப் பட்டது நான்தான் மேம்” மிகவும் தெளிவாக பொறுமையுடன் தான் தவறில்லை என்பதை நிமிர்ந்து நின்று கூறி முடித்தான்.  

I’m fortunate enough to get an opportunity  to design  you as I wish and  to my interest. I enjoy every single bit of you after getting it done.  எனக்குப் பிடிச்சமாதிரி, நீயும் நானும்  என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் பொறாமைப் படறமாதிரி ஊர் சுத்தலாம். 

I LOVE YOU MORE THAN ANYBODY …… dark nightla தனிமையில் பிடிச்ச பாட்டுக் கேட்டுக் கிட்டே நீயும் நானும் முழு ராத்திரி யாருமே கண்ட்ரோல் பண்ண முடியாத வேகத்துல ஜாலியா சுத்தலாம்...ஏ.சி. இல்லாம  சில்லுன்னு வர்ற காத்துல இருட்டை ரசிச்சிட்டே போலாம். 

Oh God ! I haven’t started my design yet… If I were a car designer எல்லாம் இல்லை  I am I design an advanced race car and that’s my burning desire . என்னோட ரேஸ் கார்ல எல்லாமே ஆட்டோ மூவ் ... ஜெர்மனியோட டெக்னாலஜி, டெஸ்லாவோட advancement .........” 

கட்டுரை   நீண்டு சென்றது. 

ஆம், உண்மையில் அந்தக் கட்டுரை அவனது முழு ஆர்வத்தையும் தோய்த்து எழுதியதாக இருந்தது. பத்து வருடங்களுக்குப் பின் டெக்னாலஜி எப்படி இருக்கும் என்பதை திடுக்கிடும் அளவுக்கு கணித்து எழுதி இருந்தான். அவனது கார் வடிவமைக்கப்பட்டால் அது ஒரு வியக்கத்தக்க செயல்பாடாக இருக்கும். அதை அவன் கட்டுரையாக நினைக்காமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பாக எண்ணி ஆசையை, தாகத்தை கொட்டித் தீர்ததிருந்தான். 

கிழிந்த துண்டுகளில் ஆங்காங்கே love, தனிமை, நீயும் நானும், சுத்தலாம்   போன்ற சில  வார்த்தைகளை மட்டும்  வைத்து துண்டுக்காகிதம் எடுக்கப் போன உடற்கல்வி ஆசிரியர்கள் அவன் லவ் லெட்டர் எழுதி இருப்பதாக வழி எங்கும் தங்கள் பங்குக்கு செய்தி சொல்லி வந்திருக்கிறார்கள். அதனால் தான் அந்தக் குறுஞ்சிரிப்பும், தோரணையும் என்பது தலைமை ஆசிரியைக்குப் பின்னர்தான் புரிந்தது.


பெற்றோரை விட்டுப் பிரிந்து விடுதியில் இருக்கும் குழந்தை யாரிடம் தன் பக்க நியாயத்தை சொல்வது என்று தெரியாமல் ஒரு இரவு முழுவதும் தவித்திருக்காதா? தேவை இல்லாத பார்வைகளும், விமர்சனங்களும்.... யாருக்கு உண்மையில் மன அழுத்தம்?

திறமையும், அனுபவமும் உள்ள ஆளுமையாக வலம் வரும் அந்த ஆசிரியை ஒரு நிமிடம் காது கொடுத்துக் கேட்டிருக்கலாம்.... துண்டுக் காகிதங்களை வைத்து தன்னுடைய கற்பனையை இணைத்து கதை பரப்புவதை அந்த உடற்கல்வி ஆசிரியர்கள் தவிர்த்திருக்கலாம்....

பல இடங்களில் இரண்டாவது பெற்றோராக, சிறந்த வழி காட்டியாக இருந்து அரவணைக்கும் ஆசிரியர்களில் சிலர் சற்று பொறுமை இழப்பதன் காரணமாக மாணவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விடும் நிலை  வருத்தத்தைக் கொடுக்கிறது.  

ஒரு ஆசிரியர் தன் பதவிக் காலத்தில் ஆயிரம் மாணவர்களைப் பார்ப்பதால் இதை எளிதாகக் கடந்து விடக்கூடும். அந்தக் குழந்தைக்கு அது ஆறாத அவமானம், ரணம், வெறுப்பு, கோபம், இயலாமை எதுவாக வேண்டுமானாலும் மாறலாம். 

ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும், மற்றவர்களும் கூட பல சமயங்களில் இளைஞர்களுக்கு காதும், தோளும் கொடுக்கத் தவறி விடுகின்றோம்.

மூத்தவர்கள் என்பதற்காக எப்போதுமே நாம் சரியானவர்களாகவே இருக்க முடியாது. இளைஞர்கள் என்பதாலேயே அவர்களை எப்போதும்  குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்க்க வேண்டியதில்லை.   

அவர்கள் நடக்கும் வழியாக இருக்க வேண்டிய நாம் அவர்களுக்கு வலியாக இருக்கலாமா

- ராதா மனோகரன்

                              

1 comment:

  1. சிறப்பான பதிவு மா.. பிரச்சினை என்று வரும் போது மாணவர் சொல்லும் செய்தியை காது கொடுத்து கேட்டிருக்க வேண்டிய ஆசிரியர் பிரபா, பொறுமை இழந்து போனதும், புவன் பொறுமையாக இருந்த செயலும் ஆச்சிரியப்படுத்தியது.. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கறுப்பு நிறத்தில் ஒரு பூனை - யசோதா பழனிச்சாமி

  கொ டைக்கானல் செல்லும் பாதையில் பொலினோ கார் விரைந்து சென்று கொண்டிருந்தது. காரினுள் ‘வழிநெடுக காட்டுமல்லி யாரும் அதைப்பார்க்கலையே’ பாடல் இச...