Monday, April 1, 2024

வேப்பமரப் பூக்கள் - யசோதா பழனிச்சாமி ஈரோடு



அன்று  காலையில் பறவைகள் குரலில் இனம் புரியாத ஏதோ ஒரு அச்சம் ஓங்கி ஒலிப்பதைக் கேட்க முடிந்தது. குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டு, அதிக சத்தத்துடன் பறவைகள் திசையற்று பறந்து கொண்டிருந்தன.

 

பறவைகளின் பயம் என் மனதில் ஒரு  விதமான அச்சத்தை கொடுக்கவே கைவேலையை ஒதுக்கி விட்டு சமையலறையை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். அங்கு மிகப் பெரிய ராட்சதனாய், யானையின் தும்பிக்கையை விட அதிக பலம் கொண்ட அந்த பொக்லைன் இயந்திரம், தன் நீண்ட நாக்கை  நீட்டி  தன் பசியாற்ற துடிப்பது போல் வேப்ப மரத்தின் அருகில் நின்று கொண்டு இருந்தது

அந்த வேப்பமரம் ஏதோ ஒரு பறவையின் எச்சத்திலிருந்து விழுந்த விதையாக இருக்கலாம். மழை நாளில் உயிர் துளிர்த்து, வறட்சி மிகு நாட்களில் உயிர் தாங்கி பல வருடங்களாக வளர்ந்து இன்று விருட்சமாக நின்று இருந்தது. அந்த வேப்பமரத்திற்கு யாரும்  தண்ணீர் விட்டு வளர்த்தாக தெரியவில்லை. விதையை விதைத்த பறவைகளுக்கு நன்றி கடனாக, தானாகவே வளர்ந்து தன் கிளைகளை பரப்பி பறவைகள் தன்மீது விளையாடி களித்து இளைப்பாற மடி கொடுக்கும் தாயாய் அந்த வேப்பமரம் எங்கள் தெருவில் நின்றிருந்தது.

 

எந்த வகையிலும்  அந்த மரத்தை வளர்தெடுக்காத மனிதர்கள், தங்கள் தேவைக்காக மரத்தை வேரோடு வீழ்த்தப்போகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட பறவைகளின் குரலில் பயத்தின் வெளிப்பாடு. அழுகுரலாய் என் காதுகளில் ஒலித்தது. எதுவும் செய்ய திறனியற்றவளாய் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

 

அந்த வேப்பமரத்திலிருந்த விழுந்து தெறித்த பழம் ஒன்று என் மீது விழுந்து மண்ணில் புரண்டது.  எனக்குள் நினைவுகளும் புரள ஆரம்பித்தது.பங்குனி, சித்திரையில்    வேப்பமரம் பூக்க ஆரம்பிக்கும். பால்ய வயதில் பள்ளி கோடை விடுமுறையில் எங்கள் பொழுது போக்கு வேப்பம்பழம் பொறுக்குவது முக்கியமான ஒன்றாக இருந்தது. அந்த பழங்களை எடுத்து மேல் தோலை பிதுக்கி விட்டு, ஊனோடு இருக்கும் வேப்பங்கொட்டையை வாயில் போட்டால், கொலகொலனு நாவில் ருசியை ஏற்றும். அந்த பழத்தை கொட்டை காண நன்றாக சப்பிவிட்டு கீழே எறியாமல்  சேர்த்து வைத்து வேப்பங்கொட்டை வாங்க வரும் வியாபரியிடம் சேர்த்துக் கொடுத்தால் படிக்கு ஒரு ரூபாய் தருவார் அந்த காசை வாங்கிக் கொள்வதில் கிடைக்கும் இன்பத்தை அனுபவித்து உணர வேண்டும். வேப்பம்பழத்தை அதிகம் சாப்பிட்டால் கண் வலி வரும் என்றும் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். வேப்பம் பழத்தை பொறுக்கும்  போது காலில் செருப்பில்லாமல் பொறுக்க இயலாது. காரணம் வேப்பம் பழம் காலில் மிதிபட்டு பதங்களில் வத வத  என இருக்கும்.

 

ஒரு நாள் நாங்கள் வேப்பம்பழத்தை பொறுக்க வந்து கொண்டிருந்த போதுதான்,  ஒரு அக்காவும், அண்ணாவும் நாங்கள் இருந்த வேப்பமரத்தடியில்,  புத்தகத்தை வைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.  அந்தக்கா அழகான பாவாடை, தாவணி அணிந்திருந்தார். அந்தண்ணா தொளதொளவென வெளுத்துப் போன பேண்ட் போட்டிருந்தார். நாங்கள் விளையாடுவதும் வேப்பம்பழம் பொறுக்குவதும் அவர்களுக்கு டிஸ்டப்பாகவே இருக்கவில்லை. அவர்கள் தங்களை மறந்து புத்தகத்தை விரித்து வைத்து,  படித்துக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் அந்தக்கா தலையில், இரண்டு கொட்டும் வைத்துக் கொண்டிருந்தார் அந்தண்ணா. தினமும் இது தொடர்ந்தது.

 

ஒரு நாள் அவர்கள் இருவரும் அங்கே வரவில்லை. " என்னாச்சு?  அந்தக்காவும், அண்ணாவும் இன்னைக்கு வரலையே" என எங்களுக்குள் கேள்வியை எழுப்பிக் கொண்டோம். அன்று முழுவதும் எனக்கு மிக நெருக்கமான ஏதோ ஒன்று தொலைந்து போனது போல் பரிதவிப்பாக  இருந்தது.

 

அடுத்த நாள் மதியம் நாங்கள் வழக்கம் போல் வேப்பம்பழம் பொறுக்கப் போன போது அந்த மரத்தைச் சுற்றிலும் மக்கள் கூட்டம். கசமுசவென பேச்சுச் சத்தம். "டேய் பார்த்து அறுத்துப் போடுங்க" என்றது ஒரு குரல். 'என் தலையில கல்லப் போட்டுட்டு படுபாவி இப்படி பண்ணிட்டு  போயிட்டியேடா என் ராசா நான்  இனிமே என்ன செய்வேன்?’ என ஒரு பெண் கத்தி அழுவது  அந்த பகுதி எங்கும்  எதிரொலித்தது. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. கூட்டத்துக்குள் போகும் போது,"யேய், சின்ன புள்ளைங்க எல்லாம் இங்கே வரக் கூடாது போங்க போங்க" என விரட்டிக் கொண்டிருந்தவர்களையும் மீறி நான் எட்டிப் பார்த்தேன்.  தினமும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த அந்த வெளுத்த பேண்ட் அண்ணா தான் அங்கே தலையை திருப்பி கை கால்களை பரப்பி தரையில்  குப்புறக் கிடந்தார்.

 

அந்தக் காட்சியை ஏன் பார்த்தேன் என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்தேன். ஊருக்குள் எல்லோரும் அந்தண்ணாவைப் பற்றியே பேச, எனக்கு அந்தண்ணா கூட இருந்த அந்தக்காவை நினைக்கத் தோன்றியது. விவரம் தெரியாத அந்த வயசில் அழுகையாக வந்தது.

 

அந்தக்காவை எப்படியாவது பார்க்கணும். ஆனால், அந்தக்கா எங்கே இருக்காங்கனு தெரியலை! மறுபடியும் அந்த மரத்தடிக்கே வந்த போது, "ஏப்பா பாடியை சீக்கிரமா எடுத்துட்டு வாங்க.. போலீஸ் கேஸ்ஸுனு போன இரண்டு மூணு நாள் அலையணும்" என ஒருத்தர் விரட்டிக் கொண்டிருந்தார். "யேப்பா இவனுக்கு என்னாச்சு? எதுக்கு இப்படி பண்ணிட்டு போயிட்டான்".

 

"அட அந்த பொல்லாப்பு நமக்கெதுக்கு? இவன் பண்ணையில் மாடு மேய்க்கறவனோடு மவன். அந்த புள்ள ஊருல பெரும் சொத்துக் காரங்க மவ. எப்படி இரண்டு பேருக்கும் ஒத்து வரும்? காதும் காதும் வச்சு அவியளே சரிசரிநமக்கெதுக்கு இந்த பெரிய எடத்து பொல்லாப்பு" என்று பேசியது காதுகளில் விழுந்தது.   எனக்கு அந்த வயதில்  அவர்கள் பேசியது எதுவும் புரிந்திருக்கவில்லை..

 

சில நாட்கள் கழித்து,  அந்த வேப்பமரத்தின் வழியாக  நான் சைக்கிளில் சென்ற  போது, அந்தக்கா வேறு ஒரு அண்ணாவோடு வேறொரு மரத்தின் கீழ் நின்று பேசிட்டு இருந்ததை பார்த்ததும் எனக்கு வெலவெலத்துப் போச்சு. அப்ப இந்த அண்ணாவும் அந்த வேப்பமரத்தடியில் தான் கிடப்பாங்களோ என நினைக்கும் போதே எனக்கு பயமாக இருந்தது. அந்த அண்ணாகிட்ட எப்படி சொல்லறது? என்ன ஆனாலும் சரி, அந்தண்ணாகிட்ட  பேசணும் எனக் காத்துகிட்டே இருந்தேன். அந்தக்கா அழுவறதும் இவங்க தொடைச்சு உடறதும் எனக்கு எதுவும் புரியலை. அவங்களுக்குத் தெரியாமல் அவங்க பேசறதை கேக்கற வயசில்லை ஆனாலும் சத்தமில்லாமல் நின்றேன்.

 

"விசாகம் நீ தைரியமா இரு. நான் இருக்கேன் கவலப்படாதே!"

 

"நான் அவங்கோட பேசிட்டு இருந்தேனு தான் அவனை கொன்னு போட்டாங்க. இப்ப உங்கோட பேசறது தெரிஞ்சா உன்னையும்.."

 

"என்னை ஒண்ணும் பண்ண முடியாது. நான் போலீஸ்காரர் பையன்." என்றான் அந்தண்ணன்.

 

"நீங்க போலீஸ்காரங்களா இருந்தாலும் இந்த ஊருல  அதெல்லாம் மதிக்கவே மாட்டாங்க.நான் எப்படியாவது  கல்லூரியில் சேர்ந்து படிச்சே ஆகணும். அதுக்கு இந்த கணக்கு தான் பெரும் பிரச்சினையா இருக்குப்பா. எங்க தோட்டத்தில வேலை செய்யும் சென்னியோட பையன்  எங்கூடத் தான் படிச்சான். அவனுக்கு கணக்கு நல்லா வரும். எங்க வீட்டுல சேர்ந்து படிக்க விட மாட்டாங்கனு ஊருக்கு வெளியே இருக்கிற அதோ அந்த மரத்தடியில்  தான் இரண்டு பேரும்  சேர்ந்து  படிச்சோம். அவன் எனக்கு கணக்கை அவ்வளவு நல்லாச் சொல்லித் தருவான். நாங்க சேர்ந்து படிக்கிறதைப் பார்த்தவங்க எங்களை தப்பா புரிஞ்சுட்டு, எங்கப்பாவிடம் போயி தப்பாக சொல்லிட்டாங்க‌. எங்கப்பாவும் என்ன ஏதுனு விசாரிக்காம அவன் உசிர எடுத்துட்டாங்க. இந்த கணக்கு பாடம் எனக்கு வரலைங்கிறத எங்க வீட்டாரிடம் சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க. நான் பெயிலு ஆயிட்டா காலேஜ் போகவே முடியாது. ப்ளீஸ் எப்படியாவது எனக்கு நீயாவது வந்து கணக்கு சொல்லிக் கொடுக்கறீயா?” என அந்தக்கா அழுதார்.

 

"அடக் கடவுளே இதைத் தான்   பேசறாங்களா"என்று எனக்குள் ஒரே சிரிப்பு.  அந்த இடத்தை விட்டு ஓடி வந்தேன். கொஞ்ச நாள் கழிச்சு அந்தக்கா அந்த போலீஸ்காரர் பையனோடு, சேர்ந்து சுத்தறதா ஊருக்குள்ளே பேச்சு வர ஆரம்பித்த போது எனக்கு அந்தண்ணாவை நினைச்சு மறுபடியும் பயமாக தான் இருந்தது. ஒரு நாள் விடியல் காலை நானும் அப்பாவும் தோட்டத்திற்கு போய்க் கொணீடிருந்தோம்ஊ"ஏப்பா உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம வாத்தியார் இருக்கிறார்ல்ல அவரு பையன் நம்ம பெரிய ஊட்டுக்காரர் பொண்ணை கூட்டிகிட்டு போயிட்டானாம்" என்று பக்கத்து வீட்டு பெரியசாமி மாமா அப்பாவிடம் சொன்னார்.

 

எனக்கு குழப்பமே தீரல..'பெரிய ஊட்டுக்காரர் பொண்ணு போலீஸ்காரர் பையனிடம் தானே கணக்கு கேட்டுட்டு இருந்தாங்க. அதென்ன வாத்தியார் பையனோடு போயிடுச்சுனு பேசறாங்களே!"

இதெல்லாம்  புரியாமலே என் பால்யம் ஓடிடுச்சு. நானும் பள்ளி படிப்பை முடித்து டவுன் காலேஜில் படிக்க ஆரம்பித்து இருந்தேன். அங்கே தான் மறுபடியும் ஒரு ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது.

 

எங்க ஊர் வேப்பமரத்தடியில் பார்த்த அக்கா,  இப்போது என் கண் முன்னே எனக்கு கணக்கு பாடம் எடுக்க வந்திருந்தார். எனக்கு மிகுந்த அதிர்ச்சி. அவர் தன் பெயர் விசாகம் என்று தன்னை அறிமுகப்படுத்திய போது,  அந்தக்கா தான் என்று  என் மனசுக்குள் உறுதியானது.  அவருக்கு என்னை தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், நான் அவர் முகத்தை மறக்கவில்லை.

 

அவரிடம் பேச சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வேகமாக அவர் முன் சென்றேன். "மேம் நீங்க புலியூர்ல தானே இருந்தீங்க"?

அவர் என்னை திடுக்கிட்டு பார்த்தார். " ஆமாம்" என்று தலையசைத்தார்.

 

"மேம் நான் உங்கிட்ட ஒன்னு கேட்பேன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?" என் பீடிகை அவரின் முகத் தோற்றத்தை  சிறிது மாற்றியது.

 

"கேளும்மா" என்றார்.

 

அவரிடம் சொல்லி விட்டேனே தவிர எனக்கு அவரிடம் கேட்க பெரும் தயக்கம் தொண்டைக்குழி விட்டு வார்த்தைகள் வெளியே வரவே தடுமாறியது.

 

"என்னம்மா கேக்கணும்? ஏதாவது கணக்கு சம்பந்தமா.."

 

"இல்லைஇல்லை.. வேகமாக தலையாட்டினேன்.

 

"மேம்…. நீங்க அந்த வாத்தியார் மகனைத் தான் திருமணம் செய்து கொண்டீர்களா?" ஒரு வழியாக வாயிலிருந்த வார்த்தை வந்து விழுந்தது.

கேள்வியைக் கேட்டு விட்டு அவரின் பார்வையை சந்திக்க இயலாமல்  தலையைக் குனிந்து கொண்டேன். அவர் கடகடவென சிரித்தார்.

 

"எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையேமா"…

 

"அப்ப ஊருல..நீங்க..அந்த வாத்தியார் பையனை" மென்று முழுங்கினேன்

 

"எல்லாம் புரளி தான். எனக்கு படிக்கணும் டீச்சராகணும் வெறி. எங்க வீட்டுல படிக்க வைக்க விருப்பமில்லை. எனக்கு கல்யாணம் செய்யணும் முடிவு செஞ்சுட்டாங்க. எங்க ஸ்கூல் வாத்தியாரிடம்  போய் அழுதேன்.  படிப்பின் மீது எனக்கிருந்த ஆர்வத்தை புரிந்து கொண்ட சார், என்னைக் கூட்டிட்டுப் போய் டவுன் ஸ்கூலில் சேர்த்து விட்டார். அவருக்கும் மாற்றல் கிடைச்சு அவரும் டவுனுக்கு வந்துட்டார். அப்புறம் எங்க அப்பா, அம்மாவை வரச் சொல்லி சமாதனம் பேசி கல்லூரி வரை படிக்க வச்சாங்க. நானும் இப்போ டீச்சராயிட்டேன். ஆனால், எனக்காக காரணமே இல்லாம, ஒரு உயிரை எடுத்த அப்பாவின் செயலை என்னால் மன்னிக்கவோ, மறக்கவோ முடியல. நான் திருமணமே செய்யாம இருக்கிறது தான் அவருக்கு நான் கொடுக்கற தண்டனைனு  தோணுச்சு. அதனால கல்யாணமே செய்துக்கலை". நான் பேசாமல் இருப்பதை பார்த்து அவரே தொடர்ந்தார்.  "வாழ்க்கையில நாம எப்பவும் ஒருவருக்கு இடைஞ்சலாக இருக்க கூடாது. நம்மால்  ஒருவருக்கு இடையூறு வந்தால் நிவர்த்தி செய்வதற்கான காரணத்தை அறிந்து சரி செய்துட்டோம்னா நாம நிம்மதியா இருக்கலாம். இதோ இந்த மரத்தை யாரோ வைத்தார்கள் இப்போ நாம நிழலாக பயன்படுத்தறோம். என்னையும் இந்த மரமாக தான் நினைச்சுக்கிறேன்ப்பா.

 

"காயத்ரி, காயத்ரி" என் கணவரின்  குரல் என்னை நினைவில் இருந்து மீட்டுவந்தது. அசைவற்று  கிடக்கும் அந்த வேப்ப மரம் தான் வந்த காரணத்தை முடித்து கொள்ள, மனிதர்களால் அதற்கு  விதிக்கப்பட்டிருக்கு என்று என்னை சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர, வேறு  எதுவும் செய்ய இயலாது கண்களில் நீர் வழிய வேப்பமரத்தை பார்த்துக் கொண்டே நின்றேன்.

 

- யசோதா பழனிச்சாமி ஈரோடு.

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...