Monday, January 1, 2024

வருவதும், வாங்கிக்கொள்வதும்.......ராதா மனோகரன்

 

  

வயிற்றுப்பிழைப்பையும், வாழ்வாதாரத்தையும் முன்னிலைப்படுத்தி ஒரு செயல் செய்யப்படும் பொழுது அங்கு பொழுது போக்கோ, உயிர்பயமோ, கவலையோ பிரதானப்படுத்தப்படுவதில்லை. முடியாதும் கூட என்பதே உண்மை. அவ்வாறு பிரதானப்படுத்தப்பட்டால் வெள்ளைத் துண்டும், தண்ணீர் பாட்டிலும் மட்டுமே வாங்கி வயிற்றுப் பசியை ஆற்றவேண்டி இருக்கும் என்ற கசப்பான உண்மை அவர்களுக்கும் தெரியும்.

புத்தாடை, பட்டாசு, பலகாரம், பட்டிமன்றம், படம், பாடல், விருந்து, ஏப்பம்,  உறக்கம் என நாடே தீபாவளிக் கொண்டாட்டத்தில் களித்திருக்க ராமன் ஆண்டாள் என்ன? ராவணன் ஆண்டாள் என்ன? என்று கடமையே கண்ணாயிரமாக உத்தரகாசியில் சுரங்கத் தொழிலாளர்கள் 41 பேர் குகைக்குள் ஒட்டிய வயிறுடனும், தூக்கக் கலக்கத்துடனும் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுகிறது. மறுபகுதியில் இருந்த இவர்கள் 41 பேரும் மாட்டிக் கொள்கிறார்கள்.

வேலைக்குக் கிளம்பி வருகையில் சோறாக்க அரிசி,பருப்பு இல்லையென மூக்கைச் சிந்திய மனைவியிடம் என்ன வாக்குறுதியும், ஈசல் புற்று போன்ற குடிசையை விட்டு தலை குனிந்து வெளியே வருகையில் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தேன்மிட்டாய் வாங்கிக் குடு என்று தேனை விடவும் இனிமையாகக் கொஞ்சிய புழுதி படர்ந்த மழலையிடம் என்ன சமாதானமும் சொல்லி விட்டு வந்தனரோ இனி 16 நாட்கள் வீடு திரும்பப் போவதில்லை என்று அறியாத அந்த குடும்பத்தின் ப்ரெட் வின்னர்ஸ்.  

சரிவு நிகழ்ந்த கணத்தில் வேண்டுமானால் நம்பிக்கை முழுவதும் அறுந்து போகாமல் இருந்திருக்கலாம், இரண்டு,நான்கு,எட்டு என நாட்கள் நகர்கையில் அந்த நெஞ்சம் எப்படியெல்லாம் பதறி இருக்கும். உழைத்து உழைத்து உரமேறியது உடல் மட்டுமாகத்தானே இருக்கும். உள்ளம் பூஞ்சைதானே. இருட்டில் கிடந்து இருட்டையே சுவாசித்துக் கொண்டிருக்கும் கூலித் தொழிலாளி ஒருவனின் எண்ண அலைகளில் வயதான அம்மா, சீக்காளி அப்பா, வாயாடிப் பொண்டாட்டி, துறுதுறு மகன், துடிப்பான மகள் இவர்களைத்தவிர வருவதற்கு ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. அந்த நினைவுகள் அவர்களை எப்படி எல்லாம் வாட்டி வதைத்திருக்கும்.

இடிசலில், இருட்டில் அவர்கள் உழல, வெளி(யில்)ச்சத்தில் மொத்தக் குடும்பமும் இடிந்து இருண்டு போய்க் கதறிக் கொண்டிருக்கும். பித்துப் பிடித்தது போல் அரற்றிக் கொண்டும், சாமியைக் கும்பிட்டுக் கொண்டும், சாமிக்கே சாபம் கொடுத்துக் கொண்டும், விலகிய மாராப்புச் சீலையை மேலிழுக்கத் திராணியின்றியும், பசிக்கு அழும் குழந்தையை சமாதானப்படுத்த மனமும் இன்றி இருந்திருப்பார்கள்.

பசியென வயிறு கதறிய போதெல்லாம், அய்யோ அவர்கள் அங்கு சோறின்றிக் கிடக்க இங்கே நான் வயிறு நனைப்பதா என்ற குற்ற உணர்வு ஆட்கொண்டிருக்கலாம். நாட்கள் நகர நகர நம்பிக்கையும், துக்கமும் அவர்களை விட்டு நகர ஆரம்பித்திருக்கலாம்.

இந்த முறை உயிர் தப்பினால் போதும் இனி இந்த வேலையே வேண்டாம் எனவும், இந்த வேலை இல்லையெனில் வேறு என்ன வேலை எனவும் பல முடிவில்லா கேள்விகளும், குழப்பங்களும் சூழ்ந்து வதை செய்யும் இது ஒற்றை நிகழ்வா? இது போன்று எத்தனை எத்தனை நிகழ்வுகள்? வகைகள் வேறாக இருக்கலாம், வதை ஒன்று தான்.

நிரந்தர வேலை இல்லை, நியாயமான கூலி கிடைக்காது. உயிருக்கு உத்திரவாதமும் இல்லை என்பது தெரிந்துமே காலம் வருமா? காலன் வருவானா? என்று தினம் தினம் குகை என்னும் நெருப்பில் தவமிருப்பவர்கள் சுரங்கத் தொழிலாளர்கள்.

அமெரிக்காவின் உட்டாக் நாட்டில் அமைந்துள்ளது நட்டிபட்டி குகை. குகை என்றால் இருட்டு வழியில் தலையில் ஹெட் லைட் எனப்படும் டார்ச் கட்டிக் கொண்டு சௌகர்யமாக ஒருவர் பின்னால் ஒருவர் நடக்க, ஆங்காங்கே தலையைக் குனிந்தும், உடலை சுருக்கியும் வளைந்து வளைந்து செல்லும் குகை அல்ல அது. ஒரு ஆள் நீளவாக்கில் கைகளிரண்டையும் நெஞ்சோடு அணைத்து குப்புறப் படுத்துக் கொண்டு பல்லி ஊர்வது போல ஊர்ந்து செல்லக் கூடிய அளவே உயரமும், அகலமும் கொண்ட குகை. 1960 ஆம் ஆண்டில் டேல் க்ரீன் என்பவரால் இந்தக்குகை கண்டறியப்பட்டது. 2004 ஆம்  ஆண்டுவரை சராசரியாக ஆண்டு ஒன்றிற்கு 5000 பேர் இந்தக் குகைக்குள் ஊர்ந்து உள் சென்று  வெளி வந்ததாக தரவுகள் கூறுகின்றன.

2004 ஆம் ஆண்டு உள்ளே மாட்டிக் கொண்ட  இரண்டு இளைஞர்களை மீட்புப்பணியினர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றி உள்ளனர். குகைக்குள் இருக்கும் பாதுகாப்பு பற்றி ஐயம் மற்றும் அதிருப்தி ஏற்பட்டதால் அந்த ஆண்டே நட்டிபட்டி குகை மூடப்பட்டது.

பல சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் மீண்டும் 2009 மே மாதம்  நட்டிபட்டி குகை திறக்கப்பட்டது.

சிறு வயது முதலே கேவ் டைவிங் எனப்படும் குகைப் பயணத்தில்  பேரார்வம் மிக்கவர்களாக இருந்தனர் அமெரிக்காவைச் சேர்ந்த 26 வயது  ஜான் எட்வார்ட் ஜோன்சும் , அவரது 23 வயது தம்பி ஜோஷும். எட்வார்டின் மனைவி எமிலி. அவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்றும் இருந்தது.

விடுமுறையை களிப்போடு கொண்டாட விரும்பிய  ஜோன்ஸ் 24.11.2009 அன்று எமிலி, ஜோஷ் மற்றும் சில நண்பர்கள் உட்பட ஒன்பது பேருடன்  இரவு எட்டு மணியளவில்  நட்டிபட்டி குகை இருக்கும் இடத்தை அடைந்தார்.

அந்தக் குறுகிய குகைக்குள் குப்புறப் படுத்து ஊற ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை எந்த விதமான சிரமமும் இல்லாமல்தான் இருந்தது அவர்களுக்கு. சுமார் 150 அடி ஆழம் வரை சென்று விட்டனர். முன்னால் ஜோன்சும் பின்னால் ஜோஷும்,நண்பர்களும் வரிசையில் சென்று கொண்டிருந்தனர்.

வழியில் பர்த் கேனல் என்னும் மிகச்சிறிய துளை வழியாக உள்ளே சென்று மறுபுறம் வெளியே வர முடிவு செய்கின்றனர் ஜோன்ஸ், ஜோஷ் மற்றும் சில நண்பர்கள். துளை மிகவும் சிறியதென்பதால் அனுபவம் மிகுந்தவர்கள் மட்டுமே உள்ளே சென்று வெளியே வரமுடியும்.

இருட்டில் சுரங்க வழித்தட வரைபடத்தில் கவனம் தப்பியதால் பர்த் கேனல் என நினைத்து முன்னால் இருந்த வேறொரு துவாரத்தில் நுழைந்து விடுகிறார் ஜோன்ஸ். உள்ளே சிறிது தூரம் சென்ற பின்னர்தான் தெரிகிறது அது பர்த் கேனல் இல்லை என்று. சற்று நேரத்தில் ஜோன்சுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கு வழியே இல்லை என்றும் புரிகிறது. எப்படியாவது திரும்ப இடம் கிடைக்குமா என்று இருந்த இடத்தில் இருந்து சற்று முன்னேறிச் செல்கிறார். அதுதான் அவர் செய்த தவறும் கூட.

அவருக்கு முன்னால் செங்குத்தான பள்ளம் ஒன்று தெரிகிறது. அந்தப் பள்ளத்தில் வழுக்கி விழுந்து தலைகீழாக சிக்கிக் கொள்கிறார் ஜோன்ஸ். கைகளிரண்டும் நெஞ்சோடு கட்டப் பட்டிருந்ததால் நகரவும் முடியவில்லை. ஜோன்ஸ் சிக்கிக் கொண்டதை பின்னால் வந்த அவரது சகோதரர் ஜோஷ் உணர்ந்த நொடியில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் அண்ணனின் கால்களைப் பிடித்து இழுத்துப் பார்கிறார்.  முடியாத நிலையில் மேலே சென்று மீட்புப் பணியினரைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைக்கிறார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த சூசை பல தொடர் சிரமங்களுக்கு இடையிலும்  குகைக்குள் பயணப்பட்டு ஜோன்ஸ் இருந்த இடத்தை அடைகிறார்.

“ ஹாய் ஜான்,

“ஹாய் சூசை, தேங்க்ஸ் பார் கம்மிங், ஐ ரியல்லி ரியல்லி வான்ட் டு கெட் அவுட் ஆப் ஹியர் எப்படியாவது தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்று நம்பிக்கையோடும், பிரார்த்தனையோடும் பேசியிருக்கிறார் ஜோன்ஸ்.

ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உதவிக்கு வந்தும் புல்லிங் சிஸ்டம் மூலம்  எவ்வளவு முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

கடைசியாக மனைவி எமிலியிடம் எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடுங்கள் என்று பரிதாபமாகக் கூறி இருக்கிறார். இதை விடக் கொடுமையான சூழலை எந்த ஒரு கணவனும் மனைவியும் சந்தித்திருக்கவே முடியாது. 

இருபத்தி எட்டு மணிநேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு ஜோன்ஸ் தன மூச்சை நிறுத்திக் கொண்டார். ஒரு உயிரை காவு வாங்கிய பின்னர்  அந்தக்குகை நிரந்தரமாக தன வாயிலை மூடிக் கொண்டது.                       

ஒருவனுக்கு பிழைப்பு இன்னொருவனுக்கு பொழுது போக்கு......      எடுக்கப்படும் தவறான முடிவுகளால் தானாக வாங்கிக் கொள்ளும் ஒரு கூட்டம், வேறு வழியேயின்றி வருவதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இன்னொரு கூட்டம்...... வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.

 

     

1 comment:

  1. மனதை கனக்க வைத்த பதிவு.சுரங்கத்துக்குள் மாட்டிக் கொண்டவர்களின், குடும்பத்தாரின் நிலையை கண்முன்னே நிறுத்தி விட்டது உங்கள் எழுத்து.

    ReplyDelete

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...