ஊரின் கோயில் திருவிழாவுக்காக கணவனின் வரவுக்காக காத்திருந்த அன்னத்திடம் அவளின் மகன் மணி ,"அம்மா அப்பா எப்பமா வருவாரு" என்றான்.
அன்னமோ "அப்பா நேத்தே வரேன்னு போன்ல சொன்னாரு ஆனா இன்னும் வரல போன் போட்ட சுட்ச் ஆப்னு வருது என்னானு தெரியலையேப்பா இன்னைக்கு ராவுக்குள்ள வந்துருவாருபா" என்றாள்.
"மா நேத்தைக்கும் இதே தான் சொன்ன, இன்னைக்கும் இதே சொல்ற. காசு குடுமா... நோட்டு பேனால்லாம் வாங்கனும். எதுக்கு காசு கேட்டாலும் அப்பா வரட்டுங்கற, கோயில் கடையில் பேனா, பேக், செருப்பு கடையெல்லாம் போட்டிருக்காங்க ஊர்ல பசங்க எல்லாம் வாங்கராங்கமா நானும் வாங்கனும்மா. காசு குடுமா" என்றான்.
"மணி எங்கிட்ட காசு இல்லப்பா. அப்பா ஊர்ல இருந்து வந்து தந்தாதன் காசு, இல்லாட்டி நீ அண்ணன்ட்ட போயி சித்தி காசு கேட்டுச்சுனு கேளு கொடுத்தா போயி எல்லாம் வாங்கிக்க" என்றாள்.
சரி என்றவாரு மணி சைக்கிளை எடுத்துக் கொண்டு அண்ணன் ராஜா வேலை செய்யும் டூவீலர் மெக்கானிக் ஷாப்புக்கு சென்றான். அங்கே சென்று அம்மா சொன்னதாக "அப்பா ஊர்ல இருந்து வர்ல. கோயில் கடைல இதெல்லாம் வாங்கனும் காசு வேணும் என்று கூற, ராஜாவும் ஓனரிடம் சென்று 700 ரூபாய் சம்பளத்தை முன்னதாக வேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டு வந்து மணியிடம் கொடுத்து விட்டு "மணி நீ ஐனூறு எடுத்துக்கோ சித்திட்ட இரநூர கொழம்பு செலவுக்கு கொடுத்துடு, அப்பா வர வரைக்கும் சித்திக்கு செலவுக்கு இருக்கட்டும்.
அப்புறம் நான் ராவுக்கு வீட்டுக்கு வரமாட்டேன். ஓனர் ஒரு வண்டியோட இன்ஜின் பிரிக்கனும்ருக்கார் அதனால் இங்கேயே படுத்துட்டு விடியகாலதான் வீட்டுக்கு வருவேனு சித்திட்ட சொல்லிரு, எனக்கு காலைல சமச்சா போதும்னு மறக்காம சொல்லிரு. இல்லாட்டி காலைல வீட்டுக்கு வந்தவுடனே இராவுல எனக்கு சாப்பிட செஞ்சதெல்லாம் வீணா போச்சுனு சித்தி வாய்க்கு வந்ததெல்லாம் திட்டும். சரியா மறக்காம சொல்லிரு மணி" என்றான்.
சரி என்று சொல்லி விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த மணி அம்மாவிடம் 200 ரூபாயைக் கொடுத்து விட்டு ஐநூறை எடுத்துக்கொண்டு "மா! அண்ணா, ராவுக்கு வரதாமா இன்ஜின் பிரிக்கர வேலை இருக்காம். காலைல தான் வருமாம். ராவுக்கு சாப்பிட செய்ய வேண்டாமாம்னு சொல்லுச்சுமா" என்று கூறிவிட்டு குளித்து ரெடியாகி விட்டு கோயில் கடைகளை சுற்றிப் பார்த்து விட்டு தனக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கிளம்பினான்.
அன்னமும் கையில் காசு வந்தவுடன் மலர்ந்த முகத்தோடு அண்ணாச்சி கடைக்கு சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்க சென்றாள். அங்கே அன்னத்தின் அக்காவை எதிரில் சந்தித்தாள் "ஏய் அன்னம், காலையில் ஒன்னும் சமைக்கல. கைல காசு இல்லன. இப்ப கடைக்கு வந்திருக்கிர. மணியோட அப்பா வந்துட்டாரா" என்றாள்.
அதற்கு அன்னம் "இல்லை" என்றவுடன் "அப்புறம் ஏது காசு" என்று கேட்க ராஜா கொடுத்தான் என்று சொன்னாள். "ஓ அவரோட மொத பொண்டாட்டியோட மகன் கொடுத்தானா?" என்றாள்.
"ம்.. ராஜா கொடுத்தது என்று வெடுக்கென்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.
"ஏய் நான் என்னாடி சொல்லிட்டேன் இப்படி வெடுக்குனு சொல்லிட்டு போற"
உடனே அன்னம் "பின்ன எப்ப பாரு ராஜா பத்தி பேசுனா அவன் மொத தாரத்து பையன்னே... பேசர, இல்ல, நான் தெரியாமத்தான் கேட்கறேன். எப்ப பாரு ராஜா பத்தி பேச்சு வந்தாவே அவன் மொத தாரத்து பையன்னு பேசரயே, உன் மனசுக்குள்ள அவன கேவலமா பேசனும்ற எண்ணமா இல்ல நான் இரண்டாம் தாரம்னு கேவலபடுத்தலாம்கிறது உன் எண்ணமா சொல்லு" என்றாள்.
"யேய் அன்னம் நான் இப்ப என்ன கேட்டுட்டேன். இப்படி கோபப்படுற. உண்மையத்தானே கேட்டேன்"
"எது உண்மை நான் ரெண்டா தாரங்கறதா, இல்ல ராஜாவுக்கு சித்திங்கறதா".
"அடியேய் நான் எந்த எண்ணதலையும் கேட்குல. கஷ்டத்துல இருக்கரையே, நாலு வார்த்த பேசினா மன பாரம் கொறையுமேனு தான் கேட்டேன், கேட்டது தப்புதான் வுடூ. கஞ்சிக்கு காசு இல்லனாலும் கவுரவம் கொரையுதா பாரு"
"கஞ்சிக்கே காசு இல்லனாலும் யாரோட வீட்டுலயும் வந்து நிக்கல, கா.வயித்தோட இருந்தாலும் கவுரதயோட இருக்கேன். மொத தாரத்து பையனா இருந்தாலும் நானும் அவன்ட்ட அப்படி நடந்துக்குல .அவனும் அப்படியில்ல. கூப்புடறது தான் சித்தினு தவிர மனசுக்குள்ள அம்மாவாதான் நினைக்கறான். புரியுதா" என்று படபடவென்று பேசிவிட்டு நகர்ந்தாள்.
இரவு பதினோரு மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அன்னம் கணவனைக் கண்டவுடன் மனநிம்மதியடைந்து புன்னகைத்தாள்.. தூங்கிக் கொண்டிருந்த மணி எழுந்து "அப்பா" என்று அழைத்தபடி வந்து அணைத்துக் கொண்டான். சிறிது நேரம் கடந்தவுடன் அன்னம் வீட்டின் சூழ்நிலையையும் போன் சுட்ச் ஆப் ஆகி இரவு வரை வராததால் பயந்ததையும் கூற, கணவன் தான் வேலை செய்யும் விதத்தையும் வருமானத்தையும் போன் சுட்ச் ஆனதையும் பயணத்தையும் சொல்லிக் கொண்டிருக்க, மணியோ தந்தை ஊரில் இருந்து கொண்டு வந்த பேக்கில் இருந்து அவர் வாங்கி வந்த ஒவ்வொரு பொருளாக எடுத்தான்.. ஷூ, பெல்ட், ஸ்பேரே, வாட்ச், ஹெட் போன்,என பல பொருட்களையும்,. பலகாரத்தையும் எடுத்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.
கணவனோ "அன்னம், ராஜா எங்கே என்று கேட்க,
"ம்...அவனுக்கு நைட் வேல இருக்குனு ஓனர் இருக்க சொல்லிட்டராம்" என்று அன்னம் சொல்ல
"நைட் வேலையா? இந்த வயசுலயா? அன்னம் அவனுக்கு பதினேழு வயசுதான் ஆகுது படிச்சிட்டுருந்தா பனிரென்டாவது தான் படிச்சிட்டிருப்பான். இந்த வயசுல போயி நைட் வேலையா" என்றான்.
"ம்.. நானா நைட் வேல பாருன்னு சொன்னேன்., படிக்க வேண்டானு சொன்னேன், அவந்தானே படிக்கப் புடிக்கலைன்னான். மெக்கானிக் ஷாப்புக்கு போனா நான் என்ன செய்ய.." என்று சொல்லி விட்டு ,"தா உட்லயே இப்படி பேசுனா வெளியல நான் தான் சித்தி கொடும பன்ற மாதிரி நினைக்கறாங்க .என்ன பன்றது, எல்லாம் என் தலையெழுத்து" என்றாள்.
கணவனோ "அன்னம் நான் உன்ன ஒன்னும் சொல்லல அவன நினைச்சு சொன்னேன். நீ அதை ஒன்னும் பெரிசு பண்ணிக்காத" என்று சமாதானப்படுத்தினான். மணி எப்படி படிக்கிறான், திருவிழா எப்படி இருக்கிறது என்று மற்ற விஷயங்களைப் பேசியவாறு எல்லோரும் உறங்கிவிட்டனர்.
அதிகாலை ராஜா வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவைப் பார்த்து சந்தோஷமாக சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்க, அன்னம் வந்து அதட்டலுடன் "ராஜா போயி மொதல்ல குளிச்சிட்டு வா" என்றாள்.. காலைக் கடமைகளை முடித்து குளித்துவிட்டு தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போது காபி டம்ளருடன் வந்த அன்னம் "இந்தா, காபியைக் குடி" என்று ராஜாவிடம் கூறிவிட்டு கணவனைப் பார்த்து "ஏங்க, கடைக்குப் போய் கறி எடுத்துட்டு வாங்க" என்றாள்.. கணவனும் ராஜாவிடம் பேசுவதை விட்டு எழுந்து செல்ல சிறிது நேரத்தில் ராஜாவை சாப்பிட அழைத்தாள்.. ராஜாவும் சாப்பிட அமர்ந்தான். அவனுக்குப் பிடித்த பூரி.
ஆசையுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, "ராஜா நீ இன்னைக்கு கடைக்குப் போகாதே. லீவு போடு" என்றாள்..
"ஏன் சித்தி" என்றான் "இன்னைக்கு காலையில கோயிலுக்கு போயிட்டு வீட்ல சில வேல இருக்கு அதை முடிச்சுட்டு சாயாங்காலம் கோயில் கடைவீதி போகணும்" என்றாள்.
சரியென்று கூறிவிட்டு பூரியை சாப்பிட்டு விட்டு உறங்கினான்.. சிறிது நேரத்தில் அன்னம் ராஜாவை எழுப்பி, "இந்தா ராஜா இந்த டிரசைப் போட்டுட்டு இந்த வாட்ச் கட்டிட்டு இந்த செண்ட்டை அடுச்சுட்டு வா. கோயிலுக்குப் போகனும்" என்றாள்.
சிறிது நேரத்தில் தயாராகி கோயிலுக்குக் குடும்பமாக சென்று கொண்டிருக்கையில் "அண்ணே வாட்ச அம்மா உனக்கு குடுத்துடுச்சா. நான் கேட்டேன், இல்லேனுச்சுணா" என்றான். ராஜா "தம்பி வாட்ச் உனக்கு வேணும்னா அப்பப்போ எடுத்து கட்டிக்கோ" என்றான்.
கோயிலில் அர்ச்சனையில் ராஜாவின் தாயின் பெயரை சொன்னாள்.. மதிய உணவின் போது ராஜாவுக்கு பிடித்த ஈரலை தனியாக எடுத்து வைத்து பரிமாறினாள்.
மாலையில் கோயில் மற்றும் கடைவீதியைச் சுத்திப் பார்க்க ராஜாவையும், மணியையும் அனுப்பி விட்டு கணவனை அழைத்துக்கொண்டு அன்னம் அந்த ஊரில் உள்ள டுடோரியல் காலேஜுக்கு சென்றாள்.
இரவு வீட்டுக்கு வந்தவுடன், "ராஜா நீ இனி வேலைக்குப் போக வேண்டாம். அப்பா ஓனர்ட்ட பேசிக்குவாரு. அங்க டேபிள் மேல அப்ளிகேஷன் இருக்கு. அதை பில் பண்ணு, அடுத்த வாரத்திலிருந்து படிக்கப் போகலாம். வீட்டுக்குத் தேவையான வருமானம் அப்பா கொடுப்பாரு. அது பத்தலனா நான் பூக்கட்டி சம்பாரிச்சுக்கறேன்" என்றாள். சித்தியின் பேச்சில் ஒரு தாயின் மிரட்டல் இருந்தது.. எனவே ராஜாவும் அன்னம் சொன்னதை மறுக்காமல் செய்தான்.
இரவு படுக்கையில் கணவன் அன்னத்தைப் பார்த்து "அன்னம் நீ பிரித்துப் பார்ப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ எதைப் பிரிக்கனுமோ அதைப் பிரிக்கறாய்" என்று முகம் மலரக் கூறினான்.

No comments:
Post a Comment