Saturday, July 1, 2023

அனைவருக்குமான அரசியல்: மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவத்தை நோக்கி - க. கோடீஸ்வரன்

 




ஏப்ரல் 26 அன்று, நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்காக பெங்களூருவில் ஆம் ஆத்மி கட்சியினர் பரப்புரைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளி தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், அவர்களது சக்கர நாற்காலிகளுக்கு அனுமதி பெறவில்லை என்பதை காரணமாகக் கூறி தேர்தல் ஆணைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். சக்கர நாற்காலியும் ஒரு வாகனம் என்பதால் அதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது அதிகாரிகளின் வாதம்.

அதிகாரிகளின் இந்த தவறான நடவடிக்கை என்பது மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் மீதான பாகுபாடு/உரிமைமீறல் ஆகும். அரசியல் கட்சிகளில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளால், நேரடி அரசியல் செயல்பாடுகளில் பங்குபெறும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை மிக சொற்பம். இதன் காரணமாக மாற்றுத்திறனாளி தொண்டர்கள், வேட்பாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் பற்றிய ஒரு அறியாமை நீண்ட காலமாக அதிகாரிகள் அளவிலும் கட்சிகள் அளவிலும் நிலவி வருகிறது. 2016ல் கொண்டு வரப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் இது போன்ற மறுதலிப்புகளை பாரபட்சமான மனப்பாங்கு என வரையறுக்கிறது. 

ஒரு தனி நபர் அரசியல் தளத்தில் நுழைவதற்கான முதல் படிநிலையாக அரசியல் கட்சிகள் உள்ளன. அரசியலில் அதிகார மையத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பை இவை வழங்குகின்றன. சட்டசபைத் தேர்தலில், ஒரு கட்சியின் சார்பாக ஒருவர் போட்டியிடும் போதும் வெற்றி பெறும் போதும் அதிகாரத்தை நோக்கிய அந்த நகர்வு முழுமையடைகிறது. அந்த வகையில் ஒரு சமூகத்திற்கு பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் அரசியல் கட்சிகளுக்கு பிரதான பங்குள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் ஆக்கப்பூர்வமாகவும் முழுமையாகவும் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட எண்ணற்ற தடங்கல்கள் உள்ளன.  

முதலாவதாக, பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் தகவல்களை வழங்கவும் பெறவும் அரசியல் கட்சிகளின் இணையதளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பெரும்பாலான கட்சி இணையதளங்கள் உறுப்பினர்களுக்கென பிரத்யேகப் பகுதியை கொண்டுள்ளன. இவற்றின் மூலம் உறுப்பினராக சேரவும், நிதி வழங்கவும் முடியும். மேலும் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும், இணையவழி சந்திப்புகளிலும் உரையாடல்களிலும் பங்குபெறவும் இந்த தளங்கள் சந்தர்ப்பம் வழங்குகிறது. இதன் காரணமாக கட்சி இணையதளங்கள் வெறும் தகவல்களின் ஆதாரமாக மட்டுமல்லாமல், பன்முகத்தன்மை கொண்டதாக ஆகிவிட்டன. 

9 தேசியக் கட்சிகளுடைய இணையதளங்களின் அனைவரும் அணுகும்தன்மை ஒரு பொதுவான இணையதள சோதனைமுறையின் படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. புகைப்படங்களுக்கான எழுத்துவடிவ விளக்கங்கள்,  இணைப்புச்சுட்டிகளுக்கான விளக்கங்கள், காட்சியமைப்பை (contrast adjustment) சரி செய்தல் போன்ற அடிப்படை பயன்பாட்டு வசதிகளை கூட பெரும்பாலான தளங்கள் முழுமையாக கொண்டிருக்கவில்லை.

இரண்டாவதாக, தேர்தல் பரப்புரையின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தகைய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. கட்சிக் கூட்டங்களுக்கும் பரப்புரைகளுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை அடிப்படை தேவையாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறிப்பிடவில்லை.

மூன்றாவதாக, அரசியலில் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் பல மட்டங்களிலும் சந்திக்கும் இடர்பாடுகளை அடையாளம் காண முறையான ஆவணங்களோ ஆய்வுகளோ இல்லை. இத்தகைய தகவல்களின் பற்றாக்குறை சட்டப்பூர்வமாகவும் கொள்கைரீதியாகவும் அவர்களை புறக்கணிப்பதாகவே கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம் 2016- பகுதி 16ன் படி, தேர்தல் நடைமுறைகள் மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் வகையில் அமைவதை தலைமை தேர்தல் ஆணையமும் மாநிலத் தேர்தல் ஆணையமும் உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வரைவு தேசியக் கொள்கையில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் அதிகாரம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கு முற்றிலும் மாறாக, பிற நாடுகளின் ஜனநாயக அமைப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக இங்கிலாந்தின் சமத்துவ விதிகள் 2010 ன்படி அரசியல் கட்சிகள் நேடியாகவோ மறைமுகமாகவோ மாற்றுத்திறனாளி உறுப்பினர்களிடமும் வேட்பாளர்களுடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்கிறது.

2018ல் மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறும் வகையில் கட்சிகளையும் உள்ளடக்கிய தேர்தல் செயல் திட்டத்தை முன்வைத்தது. அதன்படி மிக விரிவாக ஐந்து பரிந்துரைகளை முன்மொழிந்தது- மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் 

- அரசியலமைப்பையும் தேர்தல் அறிக்கைகளையும் உருவாக்குதல்
-  இணையதளங்களை ஏற்ற வகையில் வடிவமைத்தல்
- அனைத்து தேர்தல் பரப்புரை மற்றும் ஆலோசனைக் கூட்டங்களிலும் தக்க வசதிகள் செய்தல்
- வாக்குப் பதிவு மைய முகவர்கள் அளவில் பிரதிநிதித்துவம் அளித்தல்
- மாற்றுத்திறனாளிகளுடைய பங்களிப்பின் அவசியத்தை முகவர்கள் அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

இந்த பரிந்துரைகளை கட்சிகள் நடைமுறைப்படுத்துவதற்கான எந்த உறுதியும் இல்லை. இணையவழி தேர்தல் பரப்புரைகளும் இந்த பரிந்துரைகளை முற்றிலும் புறந்தள்ளியே வருகிறது. காணொளிகளுக்கோ புகைப்படங்களுக்கோ எந்த எழுத்துவடிவ விளக்கங்களோ, சைகைவழி விளக்கங்களோ சேர்க்ப்படுவதில்லை. 

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் முன்னெடுப்புகளும் வாக்குப்பதிவு மற்றும் அது சார்ந்த ஏற்பாடுகள் என்ற வரையறைக்குள்ளேயே நின்றுவிடுகிறது. வாக்குப்பதிவிற்கு முந்தைய தேர்தல் செயல்பாடுகளில் இருக்கும் இத்தகைய புறக்கணிப்புகள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

மாற்றுக்கட்சியினர் மீது விமர்சனத்தை முன்வைக்கும் போது, மாற்றுத்திறனாளிகளை நேரடியாக மறைமுகமாகவோ தரக்குறைவாக குறிப்பிட்டும் ஒப்பிட்டும் அரசியல்வாதிகள் பேசுவது இயல்பாக நிகழ்ந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகள்  நடத்தை விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளால் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் இருந்து தப்பி விடுகிறது. கண்ணியமான தேர்தல் செயல்பாடுகளையும் பரப்புரைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் இது போன்ற நிகழ்வுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. எடுத்துக்காட்டாக நடத்தை விதிமுறை எண் 84, பெண்களின் மரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எதிரான எந்தவிதமான செயல்களையோ, பேச்சுக்களையோ தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. ஆனால் அவை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. 

சமீபத்தில், பிரதமர் சக்கர நாற்காலியில் உள்ள மாற்றுத்திறனாளி தொண்டருடன் மனதை நெகிழச் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். பிரதமரின் இந்த அங்கீகாரம் நேரடி அரசியலில் ஆர்வம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு கோரிக்கைக்கு மேலும் வலுசேர்க்கிறது. பெங்களூரு தேர்தல் அதிகாரிகளின் வாதப்படி சக்கரநாற்காலி ஒரு வாகனமாக கருதப்பட்டுருந்தால், இந்த புகைப்படத்திற்கான அனுமதி கிடைத்திருக்காது. 

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்சியின் அனைத்து மட்டங்களிலும் பங்குபெறும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் அரசியல் கட்சிகள் சமத்துவத்திற்கான கலங்கரை விளக்கமாக செயல்பட முடியும். கட்சி அலுவலகங்களிலும், பரப்புரைகளின் போதும் தக்க கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வது, பொதுக்கூட்டங்களிலும் பரப்புரைகளிலும் பங்கேற்க தகுந்த போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது, மாற்றுத் திறனாளி தொண்டர்களுக்கு தகுந்த வழிகாட்டுதலையும் நிதி ஆதரவையும் வழங்குவது போன்ற உபாயங்களை கட்சிகள் கடைபிடிக்கலாம். ஐரோப்பிய மனித உரிமைகள் ஆய்வறிக்கை இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கடைபிடிக்க கூடிய பல வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அதிலிருக்கும் சில அம்சங்களை தேர்ந்தெடுத்து, தேர்தல் சமயத்தில் மட்டுமல்லாது, அனைத்து சமயங்களிலும் கட்சிகள் பின்பற்றுவதை உறுதி செய்யலாம்.

இந்த ஆண்டு பல மாநிலத் தேர்தல்களும், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய சிறுபான்மையினரை இந்திய தேர்தல் ஆணையமும் கட்சிகளும் இந்த முறை கைவிடாது என நம்புகிறேன்.

                      
எழுதியவர்- ஷஷான்க் பாண்டே (Shashank Pandey)

No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...