ஒரு வேலையாக பெங்களூர் செல்ல நேர்ந்தது. பெங்களூர் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதிகப்பட்சமாக ஓசூர் வரை சென்று வந்துள்ளேன். இம்முறை அவசரமாக கிளம்பிச் சென்று வர வேண்டிய சூழலாக அமைந்தது.
ஒரு மாதத்திற்கு முன் சக்லேஷ்புராவில் பார்த்து ஆச்சரியப்பட்ட கர்நாடகா இம்முறை பெங்களூருவில் கொஞ்சம் சங்கடப்பட வைத்தது.பொதுவாக ஒரு ஊருக்குச் சென்றால் அடுத்த 2,3 மாதங்களிலோ அல்லது அந்த வருடத்திற்குள்ளோ மீண்டும் அதே பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். பலமுறை இது நடந்துள்ளது.
2018'ம் வருடத்தில், ஜனவரி மாதம் திருமண நிகழ்விற்காக தென் தமிழகம் (நாகர்கோவில்) சென்றோம். மீண்டும் அதே வருடம் அக்டோபரில் தஞ்சாவூர், நவம்பரில் நாகப்பட்டினம், டிசம்பரில் தூத்துக்குடி என அடுத்தடுத்த மாதங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது. பெரும்பாலான வெளியூர் பயணங்கள் இப்படி அமைவதுண்டு. இந்த பயணத்தில் கூட இரண்டு நாட்களுக்கு முன் சந்தித்த மனிதரை மீண்டும் பார்க முடிந்தது. பெங்களூர் செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு, ஒரு கோவில் கும்பாபிஷேக ஒளிப்பதிவிற்காக சென்றிருந்த போது பெங்களூரை சேர்ந்த ஐயர் ஒருவர் வந்திருந்தார். அதே ஐயர் மீண்டும் சேலம் பேருந்து நிலையத்தில் எங்களை கடந்து சென்றார். பேண்ட் சர்ட் அணிந்திருந்ததால் அவரை சட்டென அடையாளம் காண முடியவில்லை. எங்கோ பார்த்தது போல உள்ளதே என யோசித்து நினைவிற்கு கொண்டு வருவதற்குள் ஐயர் சென்று விட்டார். ஒருவேளை அவர் திரும்பி வந்தால் பேச்சுக் கொடுக்கலாம் என இருந்தேன். ஆனால் வரவில்லை.
கர்நாடக பயணத்திற்கு வருவோம்.
சேலத்திருத்திலிருந்து காலை 10.30 மணிக்கு 1-1 பேருந்து ஏறினோம். பெங்களூர் செல்லும்போது மதியம் 2.30 மணி ஆகிவிட்டது.
மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது மூன்று பார்வை மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்த ஒருவருடன் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். அருகில் சென்ற போது தான் கவனிக்க முடிந்தது, ஒரு பார்வை மாற்று திறனரின் கண் அருகில் கன்னத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. அவர் பலமாக தாக்கப்படிருக்க வேண்டும். சுற்றிலும் பத்து பேர் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் மீது தவறே இருந்தாலும் தாக்கப்பட்டது தவறான செயல்.
ஒரு கடை முகவரியை தேடிக்கொண்டு சென்ற போது Triveni திரையரங்கின் இடதுபுறத்தில் மூன்று பெண்கள் அவர்களுக்குள் சத்தமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் மூவருக்குள் எதாவது தகராறா அல்லது அங்கிருந்தவர்கள் உடன் எதாவது தகராறா என தெரியவில்லை. இங்கும் பத்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் திரும்பி வரும்போது அதே திரையரங்கின் வலது புறத்தில் அந்த மூன்று பெண்களும் நடைபாதையில் அமர்ந்துகொண்டு இருந்தார்கள். அவர்களின் முகம் இறுக்கத்துடன் இருந்தது. சண்டை சமாதானம் ஆகி இருக்கலாம் அல்லது சண்டை ஓய்ந்திருக்கலாம். இப்போதும் அதே பத்து பேரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
இந்த இரண்டு சம்பவங்களிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பத்து பேரில் ஒருவர் கூட அவர்களை தடுத்து நிறுத்தவோ சமாதானம் செய்யவோ முயற்சி செய்யவில்லை. இது போன்ற சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக இருக்கலாம். அந்த சூழல் புரிந்ததால் அவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கலாமோ என்னவோ. சூழல் புரியாததால் நான் புலம்பிக்கொண்டுள்ளேன்.
ஒருமுறை கர்நாடகம்(சக்லேஷ்புரா) சென்று வந்ததுமே அடுத்த முறை செல்லும்போது மொழி பற்றிய தயக்கம் விலகியிருந்தது. நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் தமிழில் தான் பேசினோம். அவர்கள் புரிந்துகொண்டு தமிழ் அல்லது கன்னடத்தில் பதில் அளித்தார்கள். மதியும் ஒரு சிறிய ஹோட்டலில் சாப்பிட சென்றபோது என்ன சாப்பிடுவது என்ற குழப்பத்துடன் பேசிக்கொண்டிந்தோம். ஒரு எக் ஃப்ரைட் ரைஸின் விலையை விட அசைவ உணவின் விலை குறைவாக இருந்தது. அங்கு சாப்பிட வந்த ஒருவர் 'நான்-வெஜ் சாப்பிடுங்க நல்லா இருக்கும்' என்றார். ஆனால் சுவை மேல் எங்களுக்கு இருந்த சந்தேகத்தினால் எக் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்திருந்ததால் அதையே சாப்பிட்டோம். சமீபத்தில் தான் பென்னா தோசை பற்றி கேபிள் சங்கர் எழுதியிருந்தார். அடுத்த முறை சென்றால் பென்னா தோசை சாப்பிட்டு பார்க்க வேண்டும்.
நாங்கள் வேலையை முடித்து விட்டு கிளம்பும்போது மெஜஸ்டிக் பகுதியில் உள்ள போத்திஸ் கடை அருகில் இருந்து பேருந்து நிலையம் வந்து பேருந்தில் ஏற கால் மணி நேரம் ஆகியது. அங்கிருந்து சாட்டிலைட் பேருந்து நிலையம் வரை பேருந்தில் செல்ல ஒரு மணி நேரம் எடுத்துக்கொண்டது. போத்திஸிலிருந்து நேராக காசிபாளையம் பேருந்து நிறுத்தம் வந்திருந்தால் கால்மணிநேரத்திலயே சேலம் பஸ் ஏறி இருக்கலாம். சாட்டிலைட் பேருந்து நிலையத்தில் சேலம் பஸ் ஏறியதும் நடத்துனரிடம் எத்தனை மணிக்கு சேலம் போகும் என கேட்டதிற்கு இரவு 11 மணிக்கு போய்டும் என்றார். ஆனால் நள்ளிரவு 12 மணிக்கு தான் சேலத்தை அடைந்தது.
இடையில் கிருஷ்ணகிரி அருகே ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள். பிரபல நிறவனத்தின் பெயரில் இருந்த அந்த மோட்டலில் விலையை பார்த்தால் எல்லாம் டபுளாக இருந்தது. ஒருவருக்கு இரண்டு சப்பாத்தியும் ஒருவருக்கு இரண்டு பரோட்டோவும் டோக்கன் வாங்கி சாப்பிட்டோம். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எக் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து இருவரும் பகிர்ந்து கொண்டோம். விலை அதிகம் தான். அந்த இடத்திற்கு அந்த விலை நியாயமாக படவில்லை. ஃப்ரைட் ரைஸ் பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே எங்களது பேருந்தை ஸ்டார்ட் செய்தார் ஓட்டுனர். நாங்கள் கை காட்ட அங்கிருந்த
போக்குவரத்து உதவியாளர் ஓட்டுனரிடம் தகவல் தெரிவித்தார். சாப்பிட்டு முடிக்கும் வரை எங்களுக்காக பேருந்து பொறுமையாக காத்திருக்குமா என உறுதியாக நம்பமுடியவில்லை. காத்திருக்க வைப்பதும் சரியாகப் படவில்லை. கர்நாடக பேருந்தாக இருந்திருந்தால் தைரியமாக சாப்பிட்டிருப்போம். சென்ற முறை சக்லேஷ்புராவிலிருந்து வரும்போது இரவு பதினோரு மணிக்கு மோட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது இருவர் மட்டும் இன்னும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை ஸ்டார்ட் செய்தபோது சாப்பிட்டு இருப்பவர்களை பார்த்துவிட்டு மீண்டும் ஆஃப் செய்து விட்டார். எல்லா நேரமும் எல்லாவற்றையும் ஒரே மாதிரி எதிர்பார்க்க முடியாதல்லவா? இன்னொரு நாள் பெங்களூரை ஆற அமர்ந்து ரசிக்க வேண்டும்.

No comments:
Post a Comment