பவானி கூடுதுறை
பவானியும் காவிரியும் கூடி, காவிரி பிரமாண்டம் எடுக்கும் கூடுதுறையில் காவிரியின் மீது மிக நீண்ட பாலம். அவ்வப்போது எனது நடை ஓட்டம் செல்லும் இடம். சில சமயம் பவானி சாலையில் இருந்து இந்த பாலம் வரையிலும் வலது புறம் காலிங்கராயனையும், இடது புறம் பவானியையும் ரசித்துக்கொண்டே அந்த பாலத்தை அடைவேன். அந்த பாலம் ஒரு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை. அந்த இடம் வரும்பொழுது 1 கிமீ முடிந்திருந்தது. கோவையில் இருந்து சேலம் செல்லும் பழைய சாலை. இதில் உள்ள பழைய பாலத்தில் தான் தமிழ்நாடு அரசின் கோபுர இலச்சினையும், இந்திய அரசின் அசோக ஸ்தூபி இலச்சினையும் இருபுறமும் வைத்து இருப்பார்கள். 1977ல் கட்டப்பட்டது. மத்திய, மாநில கூட்டு பங்களிப்பாக இருக்கலாம். அதனால் தான் அந்தந்த லோகோ இருக்கும். பாலத்தில் காவிரியைக் கடந்தால் அக்கரையில் நாமக்கல் மாவட்டம். அந்த பாலம் அக்கரையில் முடியும் இடத்தில், காவிரிக் கரையில் குமாரபாளையத்தின் புகழ் மிக்க SSM பள்ளி எண்ணெற்றோரை ஏற்றிவிட்டு அமைதியாக இருக்கும். அந்த பாலத்தில் நடுவில் இருந்து பவானி காவிரியுடன் கலக்கும் போது இடையே கூடுதுறை கோயில் ரம்யமாக காட்சி.
அந்த பழைய சாலையில் மேலே ஏறி, அதனைக் கடந்தோம். பழைய சாலைக்கு மாறாக, சேலத்திலிருந்து கோவை செல்லும் நெடுஞ்சாலையை பாலத்திற்கு அடியில் கடந்து செல்ல வேண்டும். காலிங்கராயன் இரு சாலையின் அடியில் வந்து கொண்டிருந்தார். புதிய பாலத்தில் அந்த இலச்சினைகள் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் சற்று தொலைவில் இருந்த HP பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு தீனீயை நிரப்பிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தது காலிங்கராயன் தடம்.
சற்று தூரம் சென்றதும் காலிங்கராயனுக்கும், காவிரிக்கும் இடையில் அழகிய பாக்கு தோப்பு வந்தது. தென்னை மரங்களுக்கு இடையே பாக்குமரங்களை வைத்து இருந்தார்கள். விசேஷங்களுக்கு தேவையான மா இலை, இளநீர், தென்னை ஓலை,தென்னம் பாலை ஆகியவவை கிடைக்கும் என இருந்தது.
சற்று தொலைவில் அருள்மிகு முனியப்பன் திருக்கோயில். பெரிய பெரிய கண்களை வைத்துக் கொண்டு கைகளில் அழகிய வாள், அல்லது சவுக்கு அல்லது கேடயத்தை வைத்துக்கொண்டு முனியப்பன் கம்பீரமாக வீற்று இருந்தார். அருகிலேயே பாம்பாட்டி சித்தர்களும், கன்னிமார் சுவாமியும் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று தொலைவு சென்றால் அருள்மிகு ஸ்ரீ தாழம்பூ கன்னிமார் திருக்கோயில். காலிங்கராயன் கால்வாய் மிகுதி நீர் ஒரு ஓடை போல காவிரிக்கு செல்லும் இடம். ஆரம்பித்த இடத்தில் இருந்து முதன்முதலாக அதிகப்படியான நீரை வெளியேற்றும் இடம். அந்தக் கரையில் தான் இந்த மிக அழகான அற்புதமான ஒரு கோவில். அதன்பிறகு காவிரி பார்க் எனும் ஒரு உணவகமும் உள்ளது. சற்று தொலைவு சென்றதும் தேசிய நெடுஞ்சாலை, ஈரோடு-பவானி சாலை, காலிங்கராயன் கால்வாய் மூன்றும் சந்திக்கிறது. அந்த இடம் பெரும்பாலும் லாரி டெம்போ இவற்றை கழுவுவதற்கான இடமாகவே உள்ளது.
சில இடங்களில் ஆற்றுக்கும் வாய்க்காலுக்குமான இடைவெளி என்பது மிகவும் குறுகிய அளவு. பரந்துபட்ட காவிரி ஆறு பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்தது. வாய்க்கால் மிகவும் உயரத்தில் இருந்தது. காவிரி ஆற்றுக்கு காலிங்கராயன் வாய்க்காலுக்கு பள்ளம் கிட்டத்தட்ட 50 அடி இருக்கும். அந்த கட்டுமானத்தை தான் நாங்கள் வியந்து கொண்டே சென்றோம். கதிர் அண்ணன் கூறுவார் "பவானி ஒரு காட்டாறு அதனைத் தடுத்து, அதன் குறுக்கே ஒரு கால்வாய் கட்ட வேண்டுமென்று எப்படி யோசித்திருப்பார்? தொழில்நுட்பங்கள் இல்லாத அன்றைய காலகட்டத்தில் எப்படி இதனை சாத்தியப்படுத்தினார்?” என்பது தான் மிகப்பெரிய சவாலான ஒன்று.
காவிரி ஆறும் மேட்டூர் அணை இல்லாததால் அதுவும் காட்டாறு போல ஓடிக் கொண்டிருக்கும். அதன் கரையில் தண்ணீர் வராத காலகட்டத்தில் கற்களை நிரப்பி எப்படி சாத்தியப்படுத்தினார்கள் என்பதுதான் பயணம் முழுவதும் எங்களுக்கு வியப்பை அளித்துக் கொண்டே இருந்தது.
தஞ்சாவூர் கோயில் மீதான ஒப்பீடு
தஞ்சாவூர் பெரிய கோயிலை விட இந்த வாய்க்கால் பேசப்பட வேண்டிய, வியப்புக்குரிய, தொன்மையான, இப்பவும் மக்களுக்கு பயன் அளிக்கும் ஒன்று என்று பேசிக்கொண்டே சென்றோம். உண்மை தான். தஞ்சாவூர் கோயில் சிற்பக்கலை வடிவத்தின் பிரம்மாண்டம் தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
நாம் தஞ்சாவூர் கோயிலின் மீது அந்த கோபுரத்தின் உச்சியில் 80 டன் எடை கொண்ட பெரிய கல்லை எப்படி வைத்திருப்பார்கள் என்று யோசித்தால் வியப்பாக இருக்கும். ஆனால் அதை விட காற்றாற்றில் 60 அடி பள்ளத்தில் கரை கட்டி வாய்க்கால் கொண்டு செல்வது என்பது பேரதிசயம்.
"எனக்கு தஞ்சாவூர் கோயிலில் மீதான பிம்பம் உடையார் படிச்சு முடிச்சதும் உடைஞ்சு போச்சுங்க. 7 வருஷம் கட்டும்போது காசு பத்தாதுன்னு சொல்லி துங்கபத்ராவைத் தாண்டி சாளுக்கியர்களை சூறையாடி கொள்ளை அடிச்சு கோயில் கட்டனுமா எனும் கேள்வி முளைத்தது.? “
"அந்த காலத்துல எல்லோரும் அப்படித்தானே இருந்துருக்காங்க.. "
இப்படியாக எங்களது ஒப்பீடு அன்று முழுவதும் தஞ்சை பெரிய கோயிலுக்கும் காலிங்கராயனுக்கும் இடையே அவ்வப்போது இருந்தது. பெரிய கோயில் கட்டியதற்குப் பிறகும் காலிங்கராயன் கால்வாய் கட்டுவதற்கு கிட்டத்தட்ட 200 வருடகால இடைவெளி இருந்தது.
காவிரியின் நீரேற்றும் நிலையம்
எங்களது வண்டியை முதலில் ஒரு இடத்தில் நிறுத்தினோம். ஈரோடு -பவானி தண்ணீர் எடுக்கும் நிலையம். வாய்க்காலின் கரையில் இருந்து ஆற்றின் பக்கம் சற்று உள்நோக்கி பள்ளத்தில் இருந்தது. மிக அழகான இடம். வழியில் மதுபிரியர்களின் பாட்டில்கள். இவர்களுக்கு மட்டும் அழகான லொகெசன் கிடைத்துவிடும்.
மீனவர்கள் மூன்று பேர் அங்கு ஏதோ சரி செய்து கொண்டு இருந்தார்கள். அவர்களின் கையில் குச்சியினால் ஆன பெட்டி போல இருந்தது. ‘இதுல எப்படிண்ணே லைட் எரியும்?’ என்று கவுண்டமணியிடம், பெட்ரோமாக்ஸ் மேண்டிலை உடைக்கும் செந்தில் போல "இதுல எப்படிண்ணே மீன் சிக்கும்?" என்று கேட்டேன். "சிக்கும்…" என்ற உரக்கமான ஒற்றைப் பதிலோடு அவர் வேலையைத் தொடர்ந்தார். அவர் சற்று டெரர்ராக இருந்ததால், அத்தோடு முடித்துக்கொண்டு கிளம்பினேன்.
கோழிக்கூண்டு போன்ற பெட்டி. ஒரு பக்கத்தில், மீன்கள் தள்ளினால் இருபுறமும் திறக்கும் கதவு போன்ற அமைப்பு. கிட்டத்தட்ட ஒரு கடவு போல. தள்ளிக்கொண்டு மீன்கள் உள்ளே செல்லும். ஆனால் மீன்கள் உள்ளே சென்றுவிட்டால் கதவுகள் அதுவாகவே மூடிக்கொள்ளும். உள்ளிருந்து வெளியேற முடியாது. அங்கங்கு நீரில் மீன்களைப் பிடிப்பதற்காக இந்தப் பெட்டிகள் ஆகாயத் தாமரைக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இது போல மீன் பிடிக்கும் அமைப்பு எனக்குப் புதிதாக இருந்தது.
நீரேற்று நிலையம் அருகே சென்றோம். காவிரியின் மீதே நிற்பது போன்று இருந்தது. கரையின் ஓரங்களில் ஆகாயத் தாமரைகள் படர்ந்திருந்தது. நடுவே சென்று எவ்வளவு அழகான இடம் என்று வியந்து பயந்து கொண்டே சில பல புகைப்படங்களை கிளிக்கிவிட்டு, அந்த இடத்திலிருந்து மேலே ஏறி வண்டியை முறுக்கினோம்.
சற்று தொலைவு வந்ததும் திருப்பூருக்கு குடிநீர் எடுக்கும் இடம். காவிரியை அழகாக காண்பிக்கும் இடம். காலிங்கராயனை ஒட்டியே காவிரி இருக்கும். அகண்ட காவிரி. தென்னை மரங்களோடு மிகவும் ரம்யமாக இருந்தது. அந்த இடம் கதிர் அண்ணாவின் நடைபயிலும் இடம் என்பதால், நிறைய தகவல்களைக் கூறிக்கொண்டே வந்தார்.
அப்படியே வண்டியில் வர வர ஆற்றுக்கும், வாய்க்காலுக்கு இடையில் சிறு வேளாண் வயல். அந்த இடத்தில் தற்பொழுது தான் நட்டுவைத்த நாற்றுகள் ப்ளோராசன்ட் பச்சை நிறத்தில் அழகாக இருந்தது.
தொடர்வோம்…

No comments:
Post a Comment