காலை 5:30 க்கு அலாரம் வைத்திருந்தேன். அடிக்கவில்லை. எப்படியோ ஒரு 6 மணி வாக்கில் எழுந்து மொபைலைப் பார்த்தேன். ஒரு சிறிய சிகப்பு புள்ளியைச் சுற்றி இரு குட்டி கருப்புப்புள்ளி வட்டப் பாதையில் சூரியனை பூமி சுற்றுவது போல சுற்றிக் கொண்டு இருந்தது. சமீபத்தில் வாங்கிய போன். வாங்கியதில் இருந்து இதுபோல நான் பார்த்தது இல்லை. ஏதோ ஒரு அப்டேட் ஓடிக்கொண்டிருக்கலாம் என யோசனை. தயாராகிவிட்டு மீண்டும் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டேன். 6.30 க்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் அது வட்டப்பாதையில் இருந்து விலகாமல் சுற்றிக்கொண்டே இருந்தது.
மொபைல் இல்லாமல் எப்படி இந்த பயணத்தைத் துவங்குவது? புகைப்படம் எடுப்பது? வீடியோ எடுப்பது? பல கேள்விகள் ரீ-ஸ்டார்ட் பட்டனை பலதுறை அழுத்தி் அழுத்திப் பார்த்தேன். ஆனால் அப்பவும் எந்தவித அசைவும் இன்றி சுற்றிக் கொண்டு இருந்த வேலையைத் தொடர்ந்தது.
என்ன ஆயிற்று? அப்டேட் தான் ஓடுகிறதா? இல்லை அதிகமாக சார்ஜ் ஆகிவிட்டதா? இல்லை நேற்று கீழே கதை போட்டோமா? என்று பலவித யோசனை. வேறு ஒரு கைபேசி தயார் செய்து கொண்டு கிளம்ப முடிவு செய்தேன். ‘ரெண்டு’ திரைப்படத்தில் வடிவேலுவும், மாதவனும் அடமானம் வைக்க ஒரு தெல்பத்ரி சிங் ஆட்டோ போல எனக்கு மகளதிகாரத்தின் போன். ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்கு ஒரு பழைய போன் வைத்திருந்தாள். அன்று அவளுக்கு வகுப்பு இல்லை என்பதை நானாக உறுதி(!) செய்துகொண்டு அதனை ‘சூட்’ செய்ய முடிவெடுத்தேன். ஆனால் அதற்கும் சார்ஜ் இல்லை. 'ரைட்டு. சனி சார்ஜ்ல வருது...' என்ற மைன்ட் வாய்ஸ்யோடு அரை மணி நேரம் அதை சார்ஜ் போடலாம்..அப்புறம் எப்படின்னு பார்க்கலாம்' என்று முடிவெடுத்தேன்.
‘சரி அண்ணனிடம் இந்த கலவர நிலவரத்தை சொல்லிடலாம்' என்றால் அவரின் தொலைபேசி எண்ணும் எனது மொபைலில் தான் இருந்தது. 'ரைட்ரா இன்னிக்கு வெச்சு செய்யுமாட்ட இருக்கு' என்ற மைன்ட்வாய்ஸோடு வேறு எதில் இருக்கும் என மடிக்கணினியை உயிர்ப்பித்தேன். ஒரு வழியாக ஈமெயிலில் புகுந்து, அங்கு தேடி, இங்கு தேடி, அவரின் வலைப்பூ பக்கத்தில் இருந்த தொலைபேசி எண்ணை எடுத்தேன். மனைவியின் போனில் இருந்து அழைத்தேன். ‘காலங்காத்தால யார் இது..புது நம்பராக இருக்கே?’ என அண்ணன் யோசித்துக் கொண்டே எடுத்திருக்க வேண்டும். “இந்த மாதிரி இந்த மாதிரி as I am suffering from கலவரங்கள்.. ஒரு அரை மணிநேரம் கழித்து கிளம்பலாம்" என தெரிவித்தேன். எப்படியும் இன்று கால்வாய் கரையையாவது மிதித்தே தீருவோம் என அண்ணன் சரி என்றார்.
மீண்டும் 15 நிமிடங்கள் வராத பஸ்ஸுக்கு காத்திருக்கும் பயணி போல ஓடியது. அலைபேசியில் சிறிய சிகப்பு புள்ளியைச் சுற்றி இருந்த கருப்புப் புள்ளி தனது வட்டப் பாதையை நிறுத்தியது. போன் உயிர்பெற்றது, கூடவே நானும். அப்டேட் தான் அந்த அதிகாலை நேரத்தில் ஓடிக்கொண்டு இருந்திருக்கும் போல. 'அதுக்கு ஒரு நேரங்காலம் வேண்டாமாடா…ஸ்க்ரீன்ல சின்னதாக இந்தமாதிரி இந்தமாதிரி அப்டேட் ஓடுது… போய் டீ சாப்ட்டு வா.. இல்ல டிபனே சாப்பிட்டு வா.. இவ்வளவு நேரமாகும்ன்னு போட்டுருக்கலாமேடா'. இன்றைய காலகட்டத்தில் ஒரு அலைபேசி இல்லாமல் போனால் தனித்து இயங்குவது என்பது தான் எவ்வளவு சிரமம். ஒரு மணிநேரம் தாமதம்.
மொபைல் சரி ஆகும் நேரத்தில் பயணத்திற்கு ஒரேயொரு தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். நம்மூர் வெயில் வேறு. பாட்டிலை எதில் வைத்துக்கொள்வது என்ற கேள்வி எழுந்தது. என்னிடம் இருந்தது அனைத்தும் பெரிய பெரிய பைகள். மீண்டும் எங்க வீட்டு தெல்பத்ரி சிங் சிக்கினாள். சிறிய இலகுவான ட்ரெக்கிங் பேக்-பேக்(backbag) ஒன்று அவசரத்திற்கு கிடைத்தது. யாரோ பிறந்த நாளுக்கு ரிட்டர்ன் கிப்ட்டாக கிடைத்திருக்கும். எப்படியும் சண்டை வரும். 'சரி இப்பதான் மொபைல் எடுக்கல இல்ல, பை தானே.. சாயங்காலம் வந்ததும் சமாளித்துக் கொள்ளலாம்' என்று அதனை லவட்டிக்கொண்டேன்.
அண்ணணனுக்கு உடனே போன் அடித்துவிட்டு ஒருவழியாக வண்டியைக் கிளப்பினேன். ஆனால் அப்போது எனக்குத் தெரியவில்லை பையை எடுத்ததற்கு மட்டும் தெல்பத்ரி சிங்கிடம் கடும் சண்டை நடக்கும் என…
Time Line of காலிங்கராயன் வாய்க்கால்
12 வருட கட்டுமானம்
36 மைல்கள்- காளிங்கராயன் தொடங்கி முடியும் இடம் நேர் வழியாக
56.2 மைல் (90.5 கிமீ) - காளிங்கராயன் வாய்க்கால்
739 வருடங்கள்
544 அடி கடல் மட்டத்திலிருந்து : தொடக்கம்
412 அடி கடல் மட்டத்திலிருந்து : முடிவு
1840 மதகுகள்
15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி
தொடரும்.......

No comments:
Post a Comment