உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை எவ்வளவு தொலைவு இருக்கும் என நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? கடற்கரையை முழுவதும் கடந்தது உண்டா? அல்லது கடந்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் தோன்றியதுண்டா?
எனக்கு ஒவ்வொரு முறை மெரினா செல்லும்போதெல்லாம் இடது புறம் என்ன இருக்கும்? வலதுபுறம் எவ்வளவு தொலைவு செல்லும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஒரு ஓரமாக எட்டி பார்க்கும். ஆனால் கால சூழல் அதற்கு ஒத்து வராமல் போகும்.
கடந்த ஜூலை மாதத்தில் உள்ளத்தனைய உடல் குழுமம் நடத்திய 21 நாட்கள் உடற்பயிற்சி சவாலில் இணைந்திருந்தேன். கூடவே பக்கத்து வீட்டு தம்பி சதீஷையும் கோர்த்து விட்டிருந்தேன். 21 நாட்கள் சவாலின் 15 மற்றும் 16'வது நாட்களின் எங்களுடைய காலைப்பொழுது சென்னையில் உதயமானது. ஜூலை 22 அன்று காலை 4.30 மணிக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸிலிருந்து இறங்கி லோக்கல் ட்ரெயின் மூலமாக சேப்பாக்கத்தை அடைந்தோம். அங்கிருந்து நடை ஆரம்பமானது.
அரை மணி நேர நடைக்கு பிறகு மெரினா கடற்கரையின் இடது புறத்தை அடைந்தோம். கூவம் நதி கடலில் சேரும் பகுதியில் பாறைகள் அடுக்கப்பட்ட இடத்தில் ஸ்ட்ராவா செயலியை ஆன் செய்து உடற்பயிற்சி சவாலின் 15'வது நாளை ஆரம்பித்தோம். ஆரம்பித்த இடத்திலிருந்து சிறிது தொலைவு வரை நண்டுகள் நடமாடும் பகுதியாக இருந்தது. நடமாடும் பகுதி என்பதை விட நண்டுகள் வசிப்பிட பகுதி எனலாம். சிறிய நண்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுக்கும் மறுக்காக ஓடிக்கொண்டிருந்தன. நண்டுகளின் பிள்ளைகள் சற்று வளர்ந்ததும் தனி குடித்தனம் சென்று விடுகின்றன போல. சிறு நண்டுகள் சிறு வலைகளிலும் பெரிய நண்டுகள் பெரிய வலைகளிலும் இருந்தன. சிறு நண்டுகள் வலையிலிருந்து சற்று தள்ளி நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தன. மனிதர்களை பார்த்தால் குடுகுடுவென வலைக்குள் வந்து புகுந்துகொண்டன. வலைக்குள் இருந்துகொண்டு தலையை மட்டும் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெரிய நண்டுகள் நம்மை பார்த்ததும் உள்ளே சென்று ஒளிந்துகொண்டன. இவற்றையெல்லாம் பார்க்கும் போது நண்டுகள் பற்றி தேடி தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்படுகிறது.
அப்படியே மக்கள் நடமாடும் பகுதிக்கு வந்தோம். சிறிதளவு கூட்டம் இருந்தது. ட்ராக்டர் ஒன்று மணலை சுத்தம் செய்துகொண்டிருந்தது. செப்பல்களை கையில் எடுத்துக்கொண்டு நடந்தாலும் மணலில் நடக்க சிரமமாக இருந்ததால் கடல் அலைகள் வந்து போகும் பகுதியில் நடந்தோம். மணல் இறுகி இருந்ததால் இயல்பாக நடக்க முடிந்தது. கபடி விளையாடும் இளைஞர்கள், ஸ்டன்ட் செய்யும் சிறுவர்கள் என கேண்டிட் போட்டோகிராஃபி எடுப்பதற்குரிய காட்சிகள் நிறைய இருந்தன. லைட் ஹவுஸ் பகுதியை தாண்டி சென்ற போது ஸ்கிரிப்ட் பேப்பர்களோடு இயக்குனர், உதவி இயக்குனர்களும், ட்ரைபேட், கேமிராவுடன் கேமரா மேனும் லொக்கேஷன் தேடிக் கொண்டிருந்தனர். திரும்பி வரும்போது சிறுவயது பையன்களை ஒவ்வொருவராக சிலம்பம் சுற்ற வைத்து டெலி லென்ஸ் வைத்து மிரர்லஸ் கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். விசாரித்ததில் பள்ளி விளம்பரம் என்றனர்.
லைட் ஹவுஸ் கடந்த பிறகு மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் வந்தது. ஏராளமான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கரைக்கு வரும் படகுகளை ட்ரேக்டர் வண்டியில் கட்டி இழுத்துக்கொண்டிருந்தனர். இந்த பகுதிக்கு பின்புறமாக சாலை ஓரங்களில் வரிசையாக மீன்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதிர்ப்புறம் இருந்த பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வண்ண ஓவியங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.
அடுத்ததாக சிறிது தூரத்திற்கு மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ஆனால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. இதற்கு அடுத்து ஒன்றிரண்டு படகுகள் நின்றுகொண்டிருந்தன. கிட்டத்தட்ட கடற்கரையின் எல்லையை நெருங்கியிருந்தோம். அருகிலேயே குடியிருப்பு பகுதி இருந்தது. அங்கு வசிக்கும் மக்களுக்கு கடற்கரை தான் இரவில் உறங்குவதற்கான இடம். சிலர் அப்போது தான் எழுந்து பாய்,போர்வை போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றனர். இன்னும் சிலர் குப்புற திரும்பி படுத்துக்கொண்டு இருந்தனர். இரண்டு துப்புறவு பணியாளர்கள் குப்பைகளை கூட்டிக்கொண்டு இருந்தனர். அந்த குடியிருப்பு பகுதியை கடக்கும்போது கடற்கரையும் முடிவுக்கு வருகிறது. இந்த இடத்தில் அடையாறு ஆறு வங்க கடலில் வந்து சங்கமிங்கும் கழிமுகம் பகுதி. அடையாற்றில் போதிய நீர் வரத்து இல்லாததால் கடலின் மிக அருகில் தன்னை சிறியதாக சுருக்கிக் கொண்டு முடிவடைகிறது அடையாறு.
மெரினாவின் எல்லை எதுவென சரியாக தெரியவில்லை. மெரினாவின் மொத்த நீளம் 13 கி.மீ, உலாவும் சாலை 6 கி.மீ என விக்கிபீடியா சொல்கிறது. கூவம் ஆறு கடலில் சேரும் இடத்தில் துவங்கி அடையாறு கழிமுகம் வரை பயணம் செய்த தூரம் 6 கி.மீ. இது தான் விக்கி குறிப்பிட்ட உலாவும் இடம் என நினைக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் வங்க கடலின் எல்லைகளில் இன்னும் அதிகம் பயணம் செய்து பார்க்க வேண்டும். எப்படியோ ஒரு ஆர்வத்தில் 6 கி.மீ நடந்து வந்துவிட்டோம். திரும்பி வரும்போது இதோ வந்தாச்சு என கூறிக்கொண்டே ஒருவழியாக திருக்வல்லிக்கேணி ரயில் நிலையத்தை அடைந்தோம். இன்று பெரிதும் எதிர்பார்த்திருந்த இன்னொரு விசயம், சூரிய உதயம்.இதற்கு முன்பு கன்னியாகுமரி சென்ற போது சூரிய உதயம் காண காத்துக்கொண்டிருந்த போது மேக மூட்டம் காரணமாக காண முடியவில்லை. இன்றும் அதே தான் தான் நடந்தது. 15 கி.மீ நடத்தும் சூரிய தரிசனம் கிடைக்கவில்லை.
வியக்க வைக்கும் மெரினாவில் கவலைப்பட வைக்கும் இன்னொன்றும் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடம் தவிர மற்ற பகுதிகளை அங்குள்ளவர்கள் கடற்கரையை கழிப்பிட பகுதியாக மாற்றி வைத்துள்ளனர். கரையின் மேல் பகுதியில் மட்டுமல்லாது அலைகள் வந்து போகும் இடத்திலும் காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்தார்கள். அலைகள் அவற்றை சுத்தும் செய்துகொண்டிருந்தன. கடற்கரையின் வடக்கு பகுதி முதல் தென் பகுதி வரை இதே நிலை தான். எவ்வளவு தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இந்த கழிப்பிட வசதிக்கு இன்னும் அதிகம் மெனக்கெட வேண்டும் என்பதை அங்காங்கே தென்படும் காட்சிகள் அறிவுறுத்திக்கொண்டே உள்ளன.

No comments:
Post a Comment