அந்த உணவகத்தின் வாயிலில் மிகுந்த ஆவலோடு காத்திருந்தான் தீரஜ். அவனைத் தேடி மனிஷா வரப்போகிறாள் என்ற நினைப்பே தித்தித்தது. இன்று அவளுடன் செல்ஃபி எடுத்து, தன் நண்பர்கள் குழுவிற்கு அனுப்ப வேண்டும். மதியம் அவளுடன் மகாராஜா மல்டிபிளக்ஸில் நூன் ஷோ பார்க்க ஏற்கனவே டிக்கெட் ரிசர்வ் செய்தாயிற்று.
‘’எஸ் தீரஜ், நானும் உன்னை நேசிக்கிறேன்’’ என்ற அவளுடைய வாட்ஸ்அப் மெசேஜ், நேற்றிரவு முழுக்க அவனை தூக்கம் தொலைக்க வைத்தது.
‘’டேய் நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இல்லடா அவ! நீ வாங்கித் தர்ற ஐ ஃபோனுக்கும், விதவிதமான கிஃப்டுக்கும் மயங்கற ஆளாத் தெரியல. நீயும் ஆறு மாசமா அவ பின்னாடி சுத்துற.... ஏதாவது கண்டுக்கிட்டாளா? விட்டுத் தொலைடா’’ என திலக்கும் சச்சினும் சொன்னபோது கோபத்தில் வெடித்தான்.
‘’நிறுத்துங்கடா! பெரிய இவளா அவ? கொஞ்சம் அழகும், புத்திசாலித்தனமும் இருந்தா அவளுக்கு திமிர் வந்துடுமா? நான் யாரு, என் பேக்கிரவுண்ட் என்னன்னு அவளுக்கு தெரியாது இல்ல? அவ ஓ.கே சொல்ற வரைக்கும் விடமாட்டேன்’’ தீரஜ்ஜின் அடாவடியான குணம் தெரிந்து நண்பர்கள் அமைதியாயினர்.
கெமிக்கல் எஞ்சினியரிங்கின் இறுதியாண்டில் இருந்த போது தான் தீரஜ்ஜின் கவனத்தை ஈர்த்தாள் அவள். முதல் மூன்றாண்டுகள் மனிஷாவின் மேல் தீரஜ்ஜூக்கு பெரிதாக ஈர்ப்பில்லை. இவனிடம் மட்டுமல்ல, எந்தப் பையனிடமும் ஏன் பெண்களிடம் கூட அவள் சிரித்துப் பேசி அரட்டையடித்துப் பார்த்ததில்லை யாரும். அவள் கவனம் முழுக்க படிப்பு, படிப்பு. இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. வெட்டி விடப்பட்ட கிராப் தலையுடன் துளி மேக்கப்பின்றி அறிவுக்களை சொட்டும் முகத்துடன் கம்பீரமான அவள் தோற்றமே அசர வைத்தது. அவள் தந்தை குஜராத்தில் ஒரு பிசினஸ்மேன் என்றும், அவள் இங்கே தன் தம்பியுடன் பாட்டி வீட்டில் தங்கிப் படிக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கல்லூரியில் நடந்த கல்ச்சுரல்சின் போது மேடையேறி பொருள் புரியாத குஜராத்திப் பாடலொன்றை அவள் பாடியபோது தான் அசரடிக்கும் அவளது அழகில் ஈர்க்கப்பட்டான். ‘இத்தனை நாள் இவளை எப்படி கவனிக்காமல் விட்டோம்’ என்று ஆச்சர்யப்பட்டான்
அடுத்த நாளே கூடைப்பந்து மைதானத்தில் அவளைச் சந்தித்து தான் அவளை விரும்புவதாகக் கூறியபோது ஏளனச் சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு நகர்ந்தாள். பிறிதொரு நாள் மாலையில் கேண்டீனை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவளை வழிமறித்து, மீண்டும் தன் காதலை சொன்னபோது ‘ஏய் ஜாக்கிரதை! லீவ் மை வே’ என கத்திக்கொண்டே கடந்து சென்றாள்.
அதன் பின் அவன் வாட்ஸ்அப்பில் ‘’மனிஷா, எனக்கு உன் மேல் இருப்பது வெறும் க்ரஷ் இல்லை. டீப் லவ். ப்ளீஸ், என்னைப் புரிஞ்சுக்கோ.’’ என தினமும் தொடர்ந்து மெசேஜ் அனுப்பினான். நான்காவது நாள் வகுப்பில் மதிய உணவு இடைவேளையில் அவனிடம் வந்து, ‘’டேய் லூசு! இத்தோட நிறுத்திக்க. நாளைக்கு உன்கிட்ட இருந்து இது மாதிரி மெசேஜ் வந்தது, பிரின்ஸ்பால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன். முதல்ல உன் அரியர்சைக் கிளியர் பண்ணி டிகிரி வாங்கற வழியைப் பாரு’’ என அவள் உறுமி விட்டுச் செல்ல, அவனது நண்பர்கள் கூட்டம் ஸ்தம்பித்தது.
இடையில் என்ன நடந்ததோ, எது அவள் மனதை மாற்றியதோ தெரியவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பிறகு நேற்றிரவு அவளிடம் இருந்து வந்த வாட்ஸ்அப் செய்தி தானும் அவனை விரும்புவதாக அறிவிக்க, இறக்கையின்றி பறக்கத் தோன்றியது அவனுக்கு.
வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் அவன் பார்வை பதிய, அதிலிருந்து இறங்கினாள் மனிஷா. அவள் கையைப் பிடித்தபடி கூடவே ஒரு பதிமூன்று வயதுச் சிறுவன். அப்படியே அவள் சாயலில்.
முகம் முழுக்க புன்சிரிப்புடன் அவனருகில் வந்து, ‘’ஹாய் தீரஜ், திஸ் இஸ் மை பிரதர் ரோஹித். பையாவுக்கு ஹலோ சொல்லு ரோஹித்’’ அவன் வாயை ஒருவாறு கோணிக் கொண்டே ‘ஹலோ’ என்றான்.
‘’இது என்ன தேவையில்லாத இடைஞ்சல்?’’ என்று மனதில் நினைத்தபடி அவர்களை தான் ரிசர்வ் செய்திருந்த டேபிளுக்கு அழைத்து சென்றான்.
நாற்காலியில் சக்கென அமர்ந்தான் சிறுவன் ‘’தீதி, எனக்கு சிக்கன் பால்ஸ், நூடுல்ஸ், அப்புறம் ஐஸ்கிரீமும் வாங்கித் தரணும் தெரியுமா’’ பற்களை முழுசும் காட்டியபடி சிரித்த ரோஹித்தை வெறுப்பாய் பார்த்தான் தீரஜ்.
‘ஷ்யூர் ரோ’ அவன் தலையை செல்லமாக கலைத்தபடி ‘’தீரஜ், இவனுக்கு என் கிட்ட ரொம்ப அட்டாச்மென்ட். அப்பா அம்மாவைக் கூட தேடமாட்டான். ஆனா என்னை விட்டுட்டு ஒரு நாள் கூட இருக்க மாட்டான். நான் வெளியில எங்க கிளம்பினாலும் இவன் இல்லாமல் வரவே மாட்டேன்.’’ என்றாள் மனிஷா.
‘’ ஏன் ஒரு மாதிரி வித்தியாசமா பிஹேவ் பண்ணுறான்?’’
அவன் புறம் குனிந்து ரகசியக்குரலில் ‘’அவனுக்குக் கொஞ்சம் மெண்டல் டிஸ்ஆர்டர் ப்ராப்ளம் இருக்கு. ட்ரீட்மென்ட்ல தான் இருக்கான்.’’
ஆர்டர் செய்த உணவுகள் வர, முள்கரண்டியால் நூடுல்சை அள்ளியள்ளி வேகமாக சாப்பிட்டவனிடம், ‘மெதுவா பொறுமையா சாப்பிடு ரோ’ என்றாள். சிறுவன் தலையாட்டியபடி டேபிள் மீதிருந்த சாஸ் பாட்டிலை எடுத்த வேகத்தில் மூடி திறந்து, அருகிலிருந்த தீரஜின் வெள்ளை டி-ஷர்ட்டில் கொட்டி சிவப்பு நிறத்தில் கோலமிட்டது. எரிச்சலுடன் அவனை முறைத்தபடி டிஷ்யூ பேப்பரால் அதைத் துடைக்க முயல, சிவப்பு வண்ணம் மேலும் சட்டையில் பரவிற்று. பற்களை கடித்து கோபத்தை அடக்கினான்.
சிக்கன் பால் ஒன்றை எடுத்து வாயிலிட்ட ரோகித் சூடு தாங்காமல் துப்ப, அது மிகச்சரியாக தீரஜின் கன்னத்தில் பட்டுத்தெறித்து கீழே விழுந்தது.
‘’ஓ வெரி சாரி தீரஜ்! அவன் வேணும்னு செய்யல. தெரிஞ்சதே அவ்வளவுதான். ரோஹித், சூடா இருக்கில்ல, ஆறட்டும் வெயிட் பண்ணு’’ என அவள் சொல்லிக்கொண்டிருக்க, தீரஜ் எழுந்தான்.
வாஷ்பேஷின் கண்ணாடியில் பார்த்த போது, முகத்திலிருந்த மசாலாக்கறையும், சட்டையின் சாஸ் கோலமும், தன்னை ஒரு கோமாளியைப் போல இருப்பதாக உணர்த்தியது. ‘’ப்ளடி! காஸ்ட்லி டீ ஷர்ட்டை பாழடிச்சிட்டானே’’ எரிச்சலுடன் குளிர்ந்த நீரால் முகம் கழுவி னான். கண்ணுக்கடியில் லேசாக தோலுரிந்து காந்தியது. ‘’ ராஸ்கல்’’ பல்லைக் கடித்து கோபத்தை அடக்க முயன்றான்.
முகத்தை கர்சீப்பால் ஒற்றியபடி இருக்கையில் அமர்ந்தவனை, ‘’ஆர் யூ ஆல்ரைட் டியர்?’’ என்ற மனிஷாவின் கேள்விக்கு மையமாக தலையசைத்தான். வயிறு பசித்தாலும், சாப்பிடும் மனநிலை விடைபெற்றுப் போயிருக்க, பேரரையழைத்து ஒரு மாதுளைஜூஸ் கொண்டுவரச் சொன்னான்.
தட்டில் பாதியும் டேபிள் மேல் பாதியும் இறைத்தபடி கிடந்த நூடுல்ஸ் துணுக்குகளும், ரோஹித் கோணலாக சிரித்தபடி ‘சவுக்கு சவுக்’கென சிக்கனைக் கடித்துத் தின்ற விதமும் முகம் சுளிக்க வைத்தது. எச்சில் வழியும் வாயுடன் ஒரு சிக்கன் பாலை எடுத்து அக்காவிற்கு ஊட்ட, அவளும் அதை ரசித்து தின்ற அழகும் குமட்டியது. ‘உனக்கு’ என ரோஹித் தீரஜ்ஜிடம் ஒன்றை நீட்ட, ‘ஓ, நோ’ என்றபடி அவசரமாக பின்னுக்கு நகர்ந்து கொண்டான்.
கசாட்டா ஐஸ்கிரீமை வேட்டையாடிக் கொண்டிருந்த ரோஹித், தீரஜ்ஜின் கையிலிருந்த ஜூஸ் டம்ளரை வெடுக்கெனப் பிடுங்க அதிர்ந்தான்.
‘’டேய் டேய்’’ என தீரஜ் பதற, அவனோ ‘களக்’ களக்’ என்ற ஓசையுடன் குடிக்கலானான். வெறும் கிளாசை அவன் மேசை மேல் வைக்க, வாயிலிருந்து ஜூஸ் ஒழுகியது.
’’கூல் கூல்! நீ வேற ஜூஸ் வாங்கிக்கோ’’ என்ற மனிஷாவை எரிப்பது போல பார்த்தான்.
‘’ஓ.கே! அடுத்து தியேட்டர் தானே தீரஜ்? ரோஹித்துக்கு ஒரு எக்ஸ்ட்ரா டிக்கெட் போட்ரு’’
‘’ என்னது, இந்தப் பிசாசைக் கூட்டிக்கிட்டு சினிமாவா?’’ சட்டென்று எழுந்தான்.
‘’ அப்படிலாம் சொல்லாதே தீரஜ்! எனக்கு என் தம்பி மேல உயிரு. இவனை விட்டுட்டு நான் எங்கியும் வரதா இல்லை. இன்ஃபேக்ட் வாழ்நாள் முழுக்க இவனை என் கூடத் தான் வெச்சுக்குவேன். உனக்கு சம்மதம் தானே? உன்னோட டீப் லவ்வை நான் இப்பதான் புரிஞ்சிக்கிட்டேன். ஹெள லவ்லி யூ ஆர்! என் தம்பியோட குறும்புகளை எவ்வளவு பொறுமையா சகிச்சுக்கிட்டே. இவனாலயே என்கிட்ட ப்ரபோஸ் பண்ணவங்கள்லாம் சீக்கிரமே ப்ரேக்கப் சொல்லிட்டாங்க. நீ கிரேட்! ரோகித், பையாவுக்கு ஹாண்ட் ஷேக் கொடு’’ ஆர்வமாக நீண்ட ரோஹித்தின் கைகளை அருவருப்புடன் விலக்கினான்.
‘’ஹெல் வித் யுவர் ப்ரோ. இந்த பைத்தியத்தைக் கட்டிக்கிட்டு நீயே அழு. எனக்கென்ன தலையெழுத்து? ஒரு மணிநேரம் கூட இவனை சகிச்சிக்க முடியலை. இனிமே லவ்வு கிவ்வுனு என் பின்னாடி வந்துராத. தொலைச்சிடுவேன்’’ ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து விட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறினான்.
வாய்விட்டு சிரிக்கத் தொடங்கிய மனிஷாவுடன் ரோஹித்தும் சேர்ந்து கொண்டான். ‘வெல்டன் ரோ! சூப்பரா ஆக்ட் பண்ணின. அதே சமயம் சாரிடா! உனக்கு மெண்டல் டிஸ்ஆர்டர்னு சொல்ல வச்சுட்டானே அந்தப் படுபாவி’’
‘’ அப்படி ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்ததால தானே தெறிச்சு ஓடுறான். இனி உன் பக்கம் திரும்பிக் கூட பாக்க மாட்டான்’’
‘’இவன் ஒரு முரட்டு, முட்டாள் பீஸ்! போன வருஷம் ஒரு ஜுனியர் பொண்ணு இவன் லவ்வை ஏத்துக்கலை. இவன் அவளோட ஃபோட்டோவை அசிங்கமா மார்ஃபிங் பண்ணி எங்க கிளாஸ் வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டு விட்டான். அந்தப் பொண்ணு அதுக்கப்புறம் காலேஜுக்கே வர்றதில்லை. ஆனா இவனோட அப்பா ஊர்ல பெரும்புள்ளி. அதோட காலேஜ் சேர்மனுக்கு நெருங்கின சொந்தம்ங்கிறதுனால இவன் மேல எந்த ஆக்சனும் எடுக்கலை.
‘’இவனுக்கு காதல்ங்கிறது ஒரு டைம் பாஸ். சும்மா தன் பிரெண்ட்ஸ்கிட்ட கெத்துக் காமிக்கணும்னு ஆறு மாசத்துக்கு ஒரு பொண்ணை மாத்துவான். என்னையும் அவன் லவ் டார்ச்சர் பண்ணினப்ப, அவன் பேரெண்ட்ஸ் கிட்ட சொல்லலாமான்னு முதல்ல யோசிச்சேன். ஆனா அவங்க பேச்சையும் அவன் கேக்க மாட்டான். நான் நோ சொன்னா, இவன் என்னையும் அசிங்கப்படுத்துவான். இல்லைனா மூஞ்சில ஆசிட் ஊத்துவான். அதான் செமையா ப்ளான் பண்ணி, அவனை இங்க வரவழைச்சேன். ஆனா ஒரே நாள்ல இப்படித் தெறிச்சு ஓடுவான்னு நினைக்கவேயில்லை. இவன மாதிரி ஆளுகளை இப்படித் தான் புத்திசாலித்தனமா டீல் பண்ணனும்.’’ என்றபடி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மனிஷா.

No comments:
Post a Comment