Sunday, October 1, 2023

மனங்கொத்திகள்.... யசோதா பழனிச்சாமி, ஈரோடு

 



கனகா காலையில் கண் விழித்தவுடன் தலைமாட்டில் இருந்த செல்போனை அழுத்தி மணியைப் பார்த்தாள். விடியற்காலை நாலு மணி.. 'அட, அதுக்குள்ள நாலாயிடுச்சா' என முனகியபடியே குளிருக்குப் போர்த்தியிருந்த போர்வையை உதறி தள்ளிவிட்டு அரக்க பரக்க எழுந்தாள். எழுந்ததும் பேஸ்ட்டை எடுத்து பிரஷில் வழிய தடவி வாயில் வைத்துக் கொண்டே அடுக்களைக்குள் புகுந்தாள். பாத்திரத்தை எடுத்து காபிக்கு தண்ணி ஊற்றி வைத்து விட்டு வாய்கொப்பளிக்கச் சென்றவள் முகம் கழுவி, காலைக் கடன் முடித்து வரும் போது தான், தண்ணிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்த நினைவே வந்தது. 'அச்சச்சோ' என ஓடினாள். நல்லவேளை பாத்திரம் அடிப்பிடிக்கலைனு நினைச்சுட்டே மீண்டும் தண்ணீர் ஊற்றி வைத்து காபித்தூள் இரண்டு ஸ்பூன் கொட்டி விட்டு அடுப்பை நிறுத்தினாள்.

'ஏய், என்ன செய்யற? இன்னுமா கிளம்பல.? காலையில நாலு மணிக்கு கிளம்பிடலானு நேத்து படுக்கறப்பவே சொல்லியிருந்தனல்ல, நீ என்னடானா இப்பத்தான் ஆடி அசைஞ்சு எந்திரிச்சு வர்ற. மணி நாலரை ஆயிடுச்சு தெரியுமா? அங்க சந்தையில உங்கப்பனா கடையை வச்சுட்டு உட்காந்து இருக்கான். போனதும் நாலு காயை எடுத்துப் போட்டு வாங்கிட்டு வரதுக்கு. ஒவ்வொருத்தருகிட்டேயும் ஒரு விலை விக்கும். எங்க கம்மியா இருக்குனு விலையைக் கேட்டு விசாரிச்சு, நல்லதா நாலு காய்களைப் பார்த்து வாங்கறதுக்குள்ள நாலு வரிசை கட்டி நிக்கறாங்க. நாம கடைசியில போனா நல்ல காய்களா எப்படி வாங்கறது?' என அவன் கத்திக் கொண்டு இருந்ததை அவள் காதில் ஏற்றுக் கொள்ளாமல், அவனுக்கு முன் சென்று காபி டம்ளரை நீட்டினாள். அவன் அவளை முறைத்துக் கொண்டே காபியை வாங்கி குடிக்க ஆரம்பித்தான். அந்த பனிக் குளிரின் வெடவெடப்பில் அவனுக்கு காபி தேவையாகவும் இருந்தது. ஆனால் அதை ஒத்துக் கொள்ள மனமில்லை.

கனகா ஒரு ஸ்வெட்டர் ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டு கிளம்பினாள். வயசுக்கு வந்த புள்ளைங்க இரண்டும், ஒன்னு மேல் ஒன்னு காலைப் போட்டுட்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. காலமிருக்கிற நிலையில அவர்களைத் தினமும் தனியாக விட்டுட்டு சந்தைக்குப் போக பயம் அதிகரித்ததால், லைன் வீடாக இருந்தால் பாதுகாப்பாக இருக்குமென்று தேடிப் பிடித்து இந்த வீட்டுக்குப் போன மாசம் தான் குடிவந்து சேர்ந்தார்கள். இப்பெல்லாம் குறைவான வாடகைக்கு வீடும் கிடையாது. வீட்டு வாடகை, கடை வாடகைனு, மாசம் பத்தாயிரம் போயிடுது. இதுல வியாபரத்துக்கும் பணம் வேணும். பணப் பற்றாக்குறையை சமாளிக்க கந்துக்கு வாங்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. 

'ஏய், என்னடி இன்னும் யோசனை வண்டியில ஏறுடி', அவனின் சத்தம் காதையடைக்க, இரண்டு மூணு சாக்குப் பையை எடுத்து அவசரமாக அள்ளிப் போட்டு, வண்டியில் ஏறி பின் சீட்டில் குருவிக் குஞ்சாட்டாம் குறுக்கி உட்கார்ந்து கொண்டாள். 

ஊருக்கு போறது, சினிமாவுக்கு போறது என எந்த சுற்றலும் கிடையாது. இந்த சந்தைக்கு போறது தான் பிக்னிக். வாரச்சந்தைக்கு போய் கடைபரப்பி விக்கறது தான் பிக்னிக் ஸ்பாட் என அவள் வாழ்க்கை ஒரு வட்டத்துக்குளேயே சுழன்றது. ஏழையாக பொறந்தாலும் சில பேர் தங்கள் வாழ்க்கையை கடன உடன வாங்கியாவது கொண்டாடித் தீர்க்கிறாங்க. அதுக்கெல்லாம் நமக்கெங்க கொடுப்பினை இருக்கு! தொழில் அமையறதைப் பொருத்து தான் வாழ்க்கையும் அமையும். ஒரு நாளைக்கு காலைல ஆறு மணி வரைக்கும் தூங்கி எந்திரிக்கக் கூட கொடுப்பனை இல்ல. ஆனாலும், சொந்தமா ஒரு தொழிலை உருட்டிட்டி ஓடறதில ஒரு நிறைவு அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

சந்தையில் கொண்டு போய் வண்டியை நிறுத்தி இறங்கியதும், இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் பையை எடுத்துட்டு ஓட்டமாக சென்று ஒவ்வொரு காய்கறிகளை தேடி, விலை விசாரித்து வாங்கி, அள்ளிப் போட்டு பையை நிரப்பிக் கொண்டு இருந்தார்கள். பெண்கள் கூட்டம் குறைவா இருக்கிற இடத்தில் கனகாவை கூப்பிட்டு, நிற்க வைத்தான்.

காய்களை வாங்கி வந்து ஒரு பக்கமாக குவித்து எடுத்து வைத்தார்கள். அந்த காய்களை கடைக்கு எடுத்துச் செல்ல, ஒரு வேனை வாடகைக்கு பேசி வைத்திருக்கிறான். அந்த வேன் அங்கிருந்த காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்து, கடைக்கு முன்னால் இறக்கிப் போடும்.

'ஏய்..கனகா இன்னுமா வாங்கற சீக்கிரமா வந்து தொலைடி வேனுக்காரன் சத்தம் போடறான்' என்ற அவன் குரலைக் கேட்டதும் கனகா வேகமாக காய் மூட்டைகளை எடுத்து வந்தாள். வரும் போதே 'ஏங்க, இந்த வெங்காய மூட்டையை மட்டும் மண்டியிலிருந்து எடுத்துப் போட்டு, சாயங்காலத் சந்தை கூடற இடத்துல கொண்டு போயி இறக்கச் சொல்லிடுங்க. இல்லைனா சாயங்காலம் ஒருக்கா வாடகை கொடுக்கணும்.' என அவள் சொல்லும் ஆலோசனையை அவன் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. 

காய்கறிகளை வேனில் ஏற்றி விட்ட கையோட, கடையைத் திறக்க வேகமா கிளம்பினார்கள். கொஞ்சம் நேரமாயிடுச்சுனாலும் காய் வாங்க வரவங்க பக்கத்துக் கடைக்கு வாங்கப் போயிடுவாங்க. தெருவுக்கு ஒன்னா இருந்த காய்கறி கடை, இந்த கொரனாவுக்கு பிறகு தெருவுக்கு நாலஞ்சா, பெருகிடுச்சு. அதனால போட்டியும் அதிகமா இருக்கு. 

'ஏங்க வாங்க ஒரு காபியை குடிச்சுட்டு போலாம்" என கனகா கூப்பிட்டாள்.

"ஏய் மணி என்னாச்சு? ஆறரை தெரியுமா? டீ காபிக்கெல்லாம் நிக்க நேரமில்லை. வா, வந்து வண்டியில ஏறு" என நின்றவனை முறைத்தபடியே ஏறினாள். சிறிது தூரம் சென்றதும் அங்கே ஒரு கடையில் நிறுத்தி பீடியை வாங்கி பற்ற வைத்துக் கொண்டு கிளம்பினான்.

கனகாவுக்கு பீடி நாற்றமும், எரிச்சலும் ஒரு சேர எழுந்தது. 'ச்சே என்ன மனுசன். அவனுக்கு வேணுனா வண்டியை நிறுத்தி பீடி வாங்கி குடிக்கலாம் நேரமாகாது. ஆனா நமக்கு ஒரு காபி குடிக்க நேரமாச்சுங்கறான். மீறிக் கேட்டா, காலங்கார்த்தால ரெண்டு பேருக்கும் சண்டை வரும். கடையைத் திறக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னால சண்ட போடணுமா' என யோசித்த கனகா அந்த வயிற்றெரிச்சலையே, காபியா நினைச்சு விழுங்கிக் கொண்டாள்.

எத்தனை தான் இந்த ஆளுக்கு நிகரா வேலை செஞ்சாலும், ஒரு நாள் கூட தன் உணர்வுக்கு மதிப்பு அளிக்காத புருஷனைக் காணும் போதெல்லாம் கனகாவுக்கு வயிற்றெரிச்சல் தான் அதிகமாகும். தொலைக்காட்சி நாடகத்தில் வரும் கணவன்கள் எல்லாம் அவங்க பொண்டாட்டிகளை கொஞ்சறதையும், அவங்க தேவை அறிஞ்சு வேலை செஞ்சு கொடுக்கறதையும் பார்க்கும் போது தன் மன ஓட்டத்தை அதனுள் பொருத்தி இப்படி ஒரு புருஷன் இருந்திருக்கலாம் என ஆதங்கப்படுவதைத் தவிர அவளுக்கு வேறு ஏதும் செய்யத் தெரியவில்லை.

கடையில் கொண்டு வந்து வண்டியை நிறுத்தியதும் தன் மன ஓட்டத்தை நிறுத்தி விட்டு, கடையைப் பரப்ப ஆரம்பித்தாள்.

அவளுடைய புருஷன், இன்னும் ஒரு நடை இருக்கு நான் போயி எடுத்துட்டு வந்துடறேன்' என வேகமாகக் கிளம்பினான். "அது தான் வேன்காரங்கிட்ட எல்லாத்தையும் எடுத்துப் போட்டாச்சே. இன்னும் அங்கே என்ன இருக்கு" என்றாள்.

"வெங்காய மூட்டை மண்டியில கிடக்குதே அதாரு உங்கப்பானா எடுத்தாருவான். ஒழுங்கா கடையை எடுத்து வை வந்துடறேன்." எனக் கிளம்பினான். 'அந்த வெங்காயத்துக்கு அவ்வளவு ஒன்றும் அவசரம் கிடையாது. அது சாயங்கால சந்தைக்கு தான் வேணும். அதை அப்பவே வேனில எடுத்துப் போடச் சொல்லியும் அவன் எடுத்துப் போடல. இப்ப கனகா ஒருத்தியும், சாமானத்தை எடுத்து வச்சு வியாபாரத்தையும் கவனிக்கணும். ஒரு நொடி கவனத்த சிதற விட்டால், காசு வாங்கறதில கவனம் சிதறிப் போயிடும். இதுல வயிறு வேற எனக்கு திங்க ஏதாவது கொடுனு கத்திட்டே இருந்தது. காலையில நாலு மணிக்கு குடிச்ச காபி, கொஞ்சமாவது இந்தாளுக்கு என்னட மேல ஒரு கரிசனம் இருக்கா' என உள்ளுக்குள் குமறினாள்.

கடையில் வியாபரத்தை கவனித்துக் கொண்டிருந்ததில் அனைத்தும் மறந்து போனாள். வெங்காய மூட்டையை ஏற்றிட்டு வந்து நிறுத்தியவனிடம், 'மூட்டையை இறக்கிட்டு, ஒரு காபி வாங்கிட்டு வா' என கனகா சொன்னதும், 'உனக்கென்னடி வந்ததும் வராததுமா காபிக்குத் தான் அவசரமா' என அவன் கத்தியதை கேட்டவளின் கண்களில் கண்ணீர் திரண்டது. அவள் எதுவும் பேசாமல் வெற்றுப் பார்வையில் நின்றிருந்தாள்.  

சற்று நேரம் கழித்து மெதுவாக காபி வந்து சேர்ந்த போது, அவளுக்கு பசியே மறந்து போயிருந்தது. கோபத்தில் அவள் காலைச் சுற்றிக் கத்திக் கொண்டிருந்த பூனைக் குட்டிக்கு காபியை எடுத்து ஊற்றினாள். அதைப் பார்த்ததும் அவள் புருஷன் 'அடி கேணச் சிறுக்கி' என கோபமாக கையோங்கி கொண்டு அடிக்கச் சென்றான்.

அப்போது, அங்கே கந்துக்காரர் பைக்கில் வந்து கொண்டிருந்ததைக் கவனித்தான். உடனே கையை இறக்கி விட்டு குலைய ஆரம்பித்தான். "யேய், கனகு கந்துக்காரர் வறாரு. கடை வாடகை கொடுக்கப் பணம் பத்தாது, அதனால், அவருகிட்ட சொல்லி, இன்னும் கொஞ்சம் பணத்தைக் கேட்டு வாங்கு" என அவளிடம் வழிந்து கொண்டிருந்தவனை புழுவைப் போல் அற்பமாகப் பார்த்தாள். அவளின் பார்வையில் தெரிந்த வீச்சத்தை தாங்கயிலாது அவன் தலை குனிந்தான்.

அவள் வளர்க்கும் பூனை, கனகாவை உரசியபடி அந்த காபியைக் குடிக்காமலே கடந்தது.



No comments:

Post a Comment

நினைவுகளுக்கும்‌ நிறம் உண்டு - தாரணி தேவி

காலத்தின் பரிணாம வளர்ச்சியினால் எத்தனை மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டே காரின் ஓட்டத்தில் சாலை ஓரம் சலித்துக் கொண்டு நிற்கும் மரங்களைப் பா...